கார்த்திகை -மார்கழி

எனக்கு தெரிந்து தமிழ் மாதங்களில் மிகவும் அழகான மாதங்கள், கார்த்திகை - மார்கழி. பொதுவாக இந்த அழகு அதுவாகவே அமைந்து விடுகின்றது.
கார்த்திகை மாதம், முன்பனிக்காலம். நான்தான் குளிர், அடுத்த மாதம் கொஞ்சம் அதிகமாக வருவேன் என்று சொல்வதற்காகவே வரும் மாதம், கார்த்திகை. பெரிதாக இல்லையென்றாலும் கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் இருக்கும். இந்த மாதங்களில் அனேகமாக சபரிமலைக்கு ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதத்திலிறுப்பேன். முன்போல் இல்லையென்றாலும் என்னால் முடிந்த மட்டும் கட்டுப்பாடுகளில் இருப்பேன். (நான் புகைக்காமல் இருப்பதே பெரிய விரதம்தான் ). இரு வேளைகளிலும்குளித்து கோவிலுக்கு சென்று உண்மையாக எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் மனதார வேண்டிக்கொள்ளும்போது, நிச்சயமாக மாதம் மட்டுமல்ல நமது மனது அழகு பெரும். பெரும்பாலும் இந்த காலத்தில் பொழுதுபோக்கு விசயங்களில் கூட ஈடுபடுவது இல்லை. அநேக நேரம் அலுவலகத்திலேயே செலவிடுவேன். வேறு எந்த நாட்களிலும் இந்த அளவு உண்மையாக இருப்பேனா என்பது எனக்கே ஆச்சர்யம்தான். ஆனால் ஒவ்வொரு முறை விரதத்திளிருக்கும்போதும், இப்படியே எப்போதும் இருந்துவிட கூடாதா என்று நினைப்பதுண்டு. ஆனால் எப்பொழுதும் அது நடப்பதேயில்லை.


என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய சிறுவயதில், என்னுடைய பாட்டியை பார்த்தால் யாருக்கும் சாமி கும்பிடவேண்டும் என்று எண்ணம் வரும். அந்த அளவிற்கு வீடே பக்தி மயமாகத்தானிருக்கும். ஆனால் பாட்டி இறந்த பிறகு அவர்களின் நினைவினை போல கடவுள் பக்தி என்பது என்னளவில் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக அது இல்லாமலே போய்விடுமோ என்ற சிந்தனையை குறித்த மாதம் . கார்த்திகை. என்னை பொறுத்தவரை என்னுடைய குழந்தைகளை நான் சிறுவயது முதலாக கோவிலையும் சிலைகளையும் காட்டித்தான் வளர்க்க வேண்டும் என்பதை வருடம் தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் மாதம்.


மார்கழி, என்றதும் எனக்கு இரண்டு விஷயங்கள் உடனே நியாபகத்திற்கு உடனே நியாபகத்திற்கு வரும். ஒன்று, எனது பள்ளி தமிழாசிரியர் கதிர்வேலு அய்யா மற்றும் அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய ( அல்லது புறநானூறு அல்லது வேறு ) செய்யுள். செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. நீங்கள் அனைவரும் எனது கண்ணுக்குள் அல்ல கைக்குள் இருக்கவேண்டும் என்று அழகான காரணத்துடன், இவர் வகுப்பெடுக்கும்போது அனைவரையும் அவரது காலடியில் சுற்றி அமர்ந்துகொள்ளசெய்வார். அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இத சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான்.


மற்றொன்று , எங்கள் காலனி பிள்ளையார் கோவிலும், சாரதா அக்காவும். ஒவ்வொருவருக்கும் பிராத்தனை செய்ய, கோவிலுக்கு செல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு. எனக்கும் எனது நண்பர்களுக்கும் சிறுவயதில் கோவிலுக்கு செல்ல இரண்டே காரணங்கள்தான். பொங்கல் விநியோகம் செய்யவும் சாரதா அக்காவை பார்க்கவும் தான். பத்தாவது படித்து கொண்டுடிருக்கிறேன், மார்கழி மாதம், அந்த குளிரிலும் எழுந்து குளித்து விட்டு ஆறு மணிக்கெல்லாம் எங்கள் காலனி விநாயகர் கோவிலுக்கு சென்று விடுவேன். நண்பர்களும். சாரதா அக்கா எங்களுக்கு முன்பே வந்து ஈர தலையுடன் உட்கார்ந்திருப்பார்கள். என்ன பிடிக்கும் என்று தெரியாது, ஆனால் அவர்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய அக்கா என்னை இவன்தான் என் தம்பி, என்று என்னை அறிமுகம் செய்யும்போது, பெரும்பாலும் என்னுடைய பிராத்தனை சாரதா அக்கா என்னை தம்பி அக்காவிற்கு திருமணம் அக்காவிற்கு என்பதாகதான் இருக்கும். பூஜை முடிந்த பின்னர் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது எங்களின் பொறுப்பு. பல நேரங்களில் எங்களுக்கு கடைசியாக எதுவும் கிடைக்காத போதும், இந்த பொறுப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சாரதா அக்கா, என்னை காதலிக்கிறாள் என்று சொல்லப்பட்ட எந்நாளும் நம்பப்பட்ட ரோஷினி உட்பட நமக்கு பிடித்தவர்கள், மனம் நிறைய (எங்களின் கைவண்ணம்) சாப்பிடும்போது நமக்கு எதுவும் கிடைக்காத போதும், சந்தோசமாகதானிருக்கும். ஆனால் சாராதா அக்காவிற்கு திருமணம் என்று கேள்விப்பட்டபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

எரியும் பனிக்காடு - RED TEA

உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்.
-வில்லியம் ஜேம்ஸ்தோழர் சிந்தன் தான் முதலில் இந்த புத்தகத்தை பற்றி எனக்கு அறிமுகம் கொடுத்தார். இந்த புத்தகம் அவரது புத்தகக் கடையிலேயே இருந்ததாகவும் தற்சமயம் கைவசம் இருப்பு இல்லை, வெகு விரைவில் அந்த புத்தகத்தை எனக்கு வாங்கி கொடுப்பதாகவும் சொன்னார். ஒரு வாரத்திற்கு மேல் எனக்கு பொறுமையில்லை, மற்றும் சிந்தனை தொந்தரவு செய்யவும் மனமில்லை. அப்பொழுதுதான்,எஸ்.ராமகிருஷ்னானின் வலைப்பதிவில் இந்தபுத்தகத்தின் அறிமுகம் மற்றும் பதிப்பாளரின் விபரம் பதிவிடப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணனிடம், ஒரு நாவலை எப்படி படிப்பது என்று கேட்டால் அதற்க்கு ஒரு நாவலின் அளவில் இலக்கணங்கள் கொடுப்பார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்பதுபோல. ஒருமுறை இலக்கணங்களின் படி வாசித்து பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் படிக்கும்போது அந்த கதையில் வரும் பாத்திரங்களாகவே மாறிப் படிக்கும் சுபாவம் ஓட்டிக்கொண்டே வருகிறது. இது எனக்கு ஒருவகையில் பிடித்திருக்கவும் செய்கிறது.


ஒவ்வொரு முறையும் நல்ல புத்தகத்தின் அறிமுகம் இவரின் மூலமாகவே
"நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்" இதற்க்கு மேல் எனக்கு எந்த சிபாரிசும் தேவைப்படவில்லை. இந்த புத்தகத்தை எனக்கு வாங்கி கொடுத்த நண்பன் சந்திர சேகருக்கு, நன்றி. விடியல் பதிப்பகம் என்ற பின்னர் முகவரி தேடுவது அவ்வளவு கடினமாக இல்லை. கோவையிலுள்ள நண்பன் மூலமாக புத்தகம் வாங்கி விட்டேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை மீண்டும் மீண்டும் படிக்க செய்கிறது. நிறைய படிக்கறேன், கற்று கொள்வதற்காக.


இது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பத எந்த இடத்திலும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாதபடி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். திரு. முருகவேல் அவர்கள். இந்த நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ஒவ்வொரு அதித்யாயத்தின் முன்னமும் குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள் மற்றும் தேர்ந்த எழுத்தாளர்களின் வரிகளை மேற்க்கொளாக சுட்டி காட்டி அனேகமாக ஒவ்வொரு மேற்க்கோள்களும் அந்த அதித்யாயத்தின் கருவை உட்கொண்டிருப்பது போல அமைத்திருப்பதும்தான். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள " உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்." இந்த வரிகள் கூட நாவலின் மொத்த கருவையும் சுமந்துகொண்டுள்ள ஒரு மேற்கோள்தான். ஒரு நாவலை படித்து முடிக்கும்போது அந்த நாவல் ஏதேனும் ஒரு உந்துதலை உருவாக்கி இருக்க வேண்டும். அதுதான் அந்த நாவலின் மற்றும் ஆசிரியரின் உண்மையான வெற்றி. அப்படி ஒரு நாவல்தான் இந்த எரியும் பனிக்காடு.


கருப்பன் என்ற ஒரு சாதாரண கூலியின் வாழ்க்கையின் வழியாக தேயிலை தோட்ட தொழிலாளிகளின் இருட்டான பக்கங்களை தொட்டிருக்கிறார், ஆசிரியர். எட்டணா இருந்தால் ஒரு வாரத்திற்கு தேவையான ராகி, உப்பு, மிளகாய் மற்றும் வெள்ளம் வாங்கிவிட முடியும் என்ற காலத்தில் நடக்கிறது கருப்பனின் கதை. உள்ளூரில் பிழைப்புக்கு வேறு வழியில்லாததால், குமரிமலை தேயிலை தோட்ட மேஸ்தரி சங்கரபண்டியனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி , எஸ்டேட்டில் நடக்கும் எந்த விபரீதமும் தெரியாமல் தனது மனைவியுடன் குமரிமலை எஸ்டேட்டிற்கு பயணிக்கின்றனர் இன்னும் முப்பது கூலித் தொழிலாளிகளும் குடும்பத்துடன்.


பெற்ற பிள்ளைகளை போல பார்த்துக்கொள்வதாக சொன்ன கண்காணி, பிறகு மலையில் அப்பாவி கூளித்தொளிலாளிகளை அடித்து துன்புறுத்துவதும், அவர்களை எந்த காரணத்திலும் திரும்ப அனுப்பிவிடக்கூடாது என்பதிலும், தப்பிக்க முயல்பவர்களை அடித்தே கொள்வதுமாக, எஸ்டேட் என்பது திரும்ப வர இயலாத ஒரு சிறைசாலை என்பதையும் கருப்பனும் அவனது மனைவி வள்ளியும் உணர்கின்றனர். இங்கே நடப்பவற்றை பொறுத்து கொண்டால் மட்டுமே இங்கு என்பதை இருவரும் உணருகின்றனர் ஆனாலும் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன. அங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்ற நிலையில அவர்களும் மற்றவர்களை போலவே அடிமை வாழ்வை நடத்த துவங்கி விடுகின்றனர்.


இதுபோக மலேரியா காய்ச்சல், குளிர் காய்ச்சல், அட்டைபூச்சிக்கடி, மழை, பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள், வெள்ளைகார துறைகளின் அடக்கு முறை, கடனுக்கு பொருள் கொடுக்கும் காளிசெட்டியார் என 1925-ல் உள்ள குமரிமலை எஸ்டேட் என்ற பெயரில் தேயிலை தோட்டங்களில் நடந்த கொடுமைகள் கண்முன்னே விரிகிறது. இந்த துயரங்களை சிறிது குறைக்கும் விதமாக அப்ரகாம் என்கிற மருத்துவரின் அறிமுகம் அந்த தோட்டத்திற்கும் தொழிலாளர்களுக்கும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. எப்படியாவது ஒருமுறை இந்த புத்தகத்தை படித்து விடுங்கள்.


இந்த புத்தகத்தின் ஆசிரியர் பி.எச். டேனியல் அவர்களின் முன்னுரை, இந்நூலை நான் எழுதியதற்கு காரணம், தென்னிந்தியாவில் தேயிலை தோட்டத்தொழிலை நிறுவுவதற்கு தொழிலாளிகளும் எழுத்து பணியாளர்க்களுமாகிய நமது நாட்டு மக்கள் புரிந்த தியாகங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும், நினைவுகூரப்பட வேண்டும். மேலும் உங்களின் அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதிற்கு இதம் தரும் ஒரு கோப்பை தேநீரை உறிஞ்சும்போது, அதற்காக அந்த நாளில் உங்களுடயதைவிட எளிய ஆனால் உங்களுடயதைபோன்ற அமைதி நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன, அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்.


ஊட்டி, கொடைக்கானல் என இன்று சுற்றுலா தளமாக அறியப்பட்டு வரும் இவ்விடங்களில் எல்லாம் இதுபோன்று கொடுமைகளை கண்டுதான் வந்திருக்கும். ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுசென்றவை என நாம் நினைத்திருக்கும் இந்த தேயிலை தோட்டங்கள், சாலைகள், குறிப்பாக மலை சாலைகள், பாலங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் இவையனைத்தும் கிட்டதட்ட அடிமைகளை போலவே நடத்தப்படும் இவர்களை போன்றவர்களின் மூலமாகவே உருவாக்கப்பட்டிருகின்றன என்பது சத்தியம். அந்த நாட்களில் ஆங்கிலேயர்களை விட நாம் நம்மாலேதான் அதிகம் கொடுமைபடித்தப் பட்டிருக்கிறோம். அவர்களுக்கு தேவை குறைந்த செலவில் கூலிகள், ஆனால் நம்மவர்களோ அவர்களுக்கு கிடைக்கும் அந்த சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றனர். ஜாலியன் வாலாபாக்கில்கூட சுடு என்றது ஆங்கில ஆதிக்கம், ஆனால் கையில் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டவர்கள்?


இதை இன்னொருமுறை இதை படியுங்கள் "உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்" இனி எப்பொழுது மலைபிரதேசங்களுக்கு செல்லும்போதும், தேநீர் அருந்தும் போதும் எரியும் பணிக்காடும் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்ற இந்தவரிகளும் நியாபகம் வரத்தான் செய்யும்.

சே குவேரா

சே குவேரா, ௨00௩ ஆம் ஆண்டுகளுக்கு முன்பு நான் சற்றும் அறிந்திடாத பெயர். உண்மையில் அதற்கு முன்பாக சே பற்றி படித்ததில்லை. சில கம்யுனிச அமைப்புகள் அவரது படத்தை போராட்டங்களின் பொது பயன்படுத்தியதை கவனித்திருக்கிறேன். அவரது கண்களும் அவரது வசீகரமான முகமும்தான் என்னை முதலில் ஈர்த்தது. யாரோ ரஷ்ய சிந்தனையாளர் என்றுதான் நினைத்திருந்தேன்.

பிறகு, ௨00௪-, ஆண்டின் பிற்பகுதியில் சே பற்றி அதிகம் பேசப்படுவதை அறிந்தேன். சரி அவரின் புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று சில புத்தக கண்காட்சிகளில் தேட அரம்பித்தசமயம். சே பற்றி ஒரு திரைப்படம வந்திருக்கிறது, என்றும் அது அவரது இளமைக்கால அனுபவங்களை விவரிப்பதாகவும் சொன்னார்கள். மோட்டார் சைக்கிள் டைரீஸ்.

அவ்வளவு எளிதாக கிடைக்காத காரணத்தினால் சே-வின் மீது அதிக ஆர்வம ஏற்ப்பட்டது , எப்படியும் படித்தோ அல்லது பார்த்தோ விட வேண்டும் என்று எனக்குள்ளாகவே நினைத்துகொள்வேன். அப்பொழுதுதான், திலகவதி அவர்கள் எழுதிய "சே குவேரா" அம்ருதா பதிப்பகத்தின் புத்தகம் கிடைத்தது. எனக்கு ஒரு பழக்கம் எந்த புத்தகம் படிக்கும் போதும் அதன் கடைசி பக்கத்தை முதலில் படித்து விடுவேன். அப்படியாக இந்த புத்தகத்தின் கடைசி பக்கங்களில் சே-வின் கடைசி நிமிடங்களை படம்பிடித்து காட்டியிருந்தார்கள்.


அது முதல் சே பற்றி எனக்கு இருந்த அனைத்து எண்ணங்களும் மாறியது.
சே குவேரா என்பது பெயர்ச்சொல் அல்ல, விளிச்சொல்லும்ல்ல. அது ஒரு மந்திரம். சோர்ந்த மனதில் ஆற்றலை பாய்ச்சி தளர்ந்த நரம்புகளில் உயிரை ஊட்டும் மந்திரம் சே குவேரா. அது புரட்சியின் மறுபெயர்.


வறுமையும் ஏற்றத் தாழ்வுகளும் நீங்க, ஒரு புதிய பொற்காலத்தை பூமியில் தோற்றுவிப்பதற்காக போராடும்துணிச்சலை உலகமெங்கும் உள்ள புரட்சியாளர்களின் மனதில் விதைக்கும் தாரக மந்திரம். பிணியும் சுரண்டலும் அற்ற உலகைத் தோற்றுவிக்க களத்தில் புகும் வீரர்களின் கவசமும் கேடயமும்தான், சே குவேரா. அதிகார வெறிக்கும், ஆதிக்க சக்திக்களும், அடக்குமுறைக்கும் கொடுங்கோன்மைக்கும் எதிராக என்றேண்டும் ஒலிக்கும் சாவுமணி, சே குவேரா. மரணத்தைs வென்றவர் சே குவேரா.


மானுடபிராவகத்தில் மிக அரிதாக தோண்டுகிற மாமனிதர்களில் ஒருவர் சே குவேரா. அவரை நினைக்கும்போதெல்லாம், இப்படியும்கூட ஒரு மனிதன் வாழ இயலுமா? இவையெல்லாம் ஒரு எதார்த்த வாழ்க்கையில் முடியுமா என்கிற கேள்வியை ஒவ்வொருவரின் மனதிலும் எழும்.


ஆக ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் சே குவேரா ஒரு முன்மாதிரி.

நன்றி, திலகவதி- அம்ருதா பதிப்பகம்.


இதுதான் நான் சே பற்றி படித்த முதல் வரிகள், அன்று முதல் சே குவேராவை எனக்குள் ஒரு மறக்கமுடியாத நினைவுகளாக பதியவைத்துகொண்டேன். இன்று வரை சே பற்றி எந்த புத்தகம் வந்தாலும் அல்லது திரைப்படம் வந்தாலும் அதை வாங்கிவிடுவேன். சே, தன்னை படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிய சிந்தனைகளையும் உத்வேகத்தையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். சே பற்றி படிக்கும் போதெல்லாம் அல்லது படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? என்ற கேள்வி நிச்சயம் எழும்.


எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தன்னை யாரென்று அறியாத மக்களுக்காக தனது உயிரையே விடத் துணியும் இந்த மனது யாருக்கு வரும். க்யுபாவிர்க்கு விடுதலை பெற்றுதந்த பின்னர்கூட மீண்டும் அடுத்த கொரில்லா யுத்தத்திற்காக பொலிவிய காடுகளில் அழைத்தார், அப்போது ஒரு நிருபர் " நீங்கள் க்யுபாவின் விடுதலைக்காக போராடினீர்கள், இப்பொழுது அதை பெற்றும் விட்டீர்கள் பிறகு ஏனிந்த போராட்டம்? நீங்கள் உண்மையில் யார்? உங்களின் தேவை என்ன? நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்? என்று கேட்டார். அதற்க்கு சே, "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைகபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"
என்றார்.


"உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் குமுறி கொந்தளிக்க முடிந்தால், நாம் தோழர்களே! "


"உலகின் எந்தப் பகுதியில் அநியாயம் இழைக்கப்பட்டாலும் அதை மனப்பூர்வமாக உணரக்கூடியவர்களாக இருங்கள். அதுதான் புரட்சியாளனின் தன்மைகளிலே அழகியது"


"பலர் என்னை ஒரு வீரசாகச செயல்களில் நாட்டமுடையவன் எனக்கூறலாம். நான் அத்தகயவந்தான், ஆனால், சற்றே வேறுபட்டவன். நான் கொண்டிருக்கிற நம்பிக்கைகளுக்காக உயிரை தருபவர்களில் நானும் ஒருவன்"


இதுதான் சே குவேரா. சே குவேராவின் குணம், எங்கு அநீதி நடந்தாலும் தட்டி கேட்கும் அவருடைய சுபாவம். "எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும், இல்லையேல் அந்த அநியாயத்தை நாமே செய்தவர்கள் ஆகிறோம்" என்று சொன்னார் விவேகானந்தர். உண்மையிலேயே அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய ஒரு மாமனிதர்தான் சே குவேரா.


எங்கோ பிறந்து சே தங்களின் நாட்டு விடுதலைக்காக போராடிய சே-விற்கு நன்றிகடனாக க்யுபா மக்கள் இன்னமும் தங்களின் பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு பதிலாக செவிற்கு தங்களது நன்றியை தெரிவித்துகொண்டிருக்கிறார்கள்.

குருதிப்புனல்

குருதிப்புனல்

தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றான குருதிப்புனலை எழுதியவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இ. பா. வின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக இ. பா. வின் நாவல்கள் அரசியலை சார்ந்தே இருக்கும். நாவலாசிரியர்களை பொறுத்தவரை இவரை போல அரசியலை அலசியவர்கள் யாருமில்லை என்பது என்னுடைய கருத்து.

இதில் இ. பா. வின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'குருதி' என்றால் இரத்தம் என்று நமக்குப் பொதுப்படயாகத் தெரியும். வெஞ்சினத்தை நிறைவேற்றும்போது சிந்தப்படும் இரத்தமென்று எத்தனை பேருக்கு தெரியும்? பரசுராமன் தன் வெஞ்சினத்தை நிறைவேற்ற, இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரியர்களின் இரத்தத்தில் வேள்வி செய்கின்றான். 'குருதிப்புனல் அதனிற் புக மூழ்கித் தனி குடைவான்' என்பது கம்பர் வாக்கு. இந்நாவல் மலையாளத்தில் வந்த போது, மலையாளத்தில், 'குருதி' என்ற சொல் இன்றும் 'sacrificial Blood' என்ற பொருளில்தான் வழங்குகிறது என்று அறிந்தேன். இந்த நாவலின் கடைசியில் பரசுராமன் வருவதற்கு இதுதான் காரணம்".

இவருடைய பிற நாவல்களான ஆகாயத்தாமரை, தந்திர பூமி, சத்திய சோதனை, கிருஷ்ணா கிருஷ்ணா, வேதபுரத்து வியாபாரிகள் மற்றும் ஹெலிகாப்ட்டர்கள் கீழே இறங்கி விட்டன ஆகியவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அதிர்வுகளை மனதிற்குள் ஏற்ப்படுத்தியிருகின்றன.

ராமகிருஷ்ணன் சொல்லுவது போல "குளத்தில் எறியப்படும் ஒவ்வொரு கல்லும் தனக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்துகிறது. அவை ஒன்றை போல இன்னொன்று இருப்பதில்லை. பிறகு அமைதியாக தண்ணீருக்கடியில் சென்று உறங்குகின்றது" அதைபோல இவரது ஒவ்வொரு கதைகளும் மனதில் ஒவ்வொரு விதமான அதிர்வுகளை உண்டாக்குகின்றது. அவை ஒன்றை போல இன்னொன்று இருப்பதில்லை.

இதில் நான் முதலில் குருதிப்புனல்- ஐ குறிப்பிடக் காரணம், நான் மிகவும் விரும்பும் கம்யூனிச சிந்தனைகளை என்னுள் மீண்டும் தூண்டி விட்டதை தவிர வேறு எதுவும் இல்லை அல்லது தெரியவில்லை. அன்பே சிவம் என்ற படத்தில் கமலும் மாதவனும் சில விசயங்களை பற்றி வாதிடும் காட்சி இந்நாவலில் சிவா-வும் கோபால் -லும் பேசிக்கொள்ளும் உரையாடல்களை நியாபகப்படுத்தியது. பதிப்பாசிரியரின் கருத்தின் படி "இ. பா. வின் குருதிப்புனல் ஒரு சமகால சரித்திரத்தின் அடிப்படையில் புனையப்பட்டதென்றாலும், மனித குலத்தின் எந்த காலத்திற்குமான ஆதாரப் பிரச்சனைகள் சார்ந்து இது வைக்கும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை" என்பது இநாவலை படித்தபின் அனைவருக்கும் புரியும்.

நமக்காக மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பபவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் அனைவருக்கும் பிறப்பிலேயே வந்து விடுவது கிடையாது, சிலருக்கு படித்ததனால் வந்திருக்கலாம், சிலருக்கு சிலர் அநியாய அகிரமங்களை கண்டு வந்திருக்கலாம். அந்த ஒரு நொடி யாருக்கு எங்கே இருக்கிறது, தெரியவில்லை ஆனால் இந்த கதையை (வெறும் கதை என்று சொல்லி விட முடியாது, ஏனெனில் இதில் உண்மை சம்பவமும் ஒளிந்து கிடக்கிறது) படித்த பின் யாருக்கும் அத்தகைய மாற்றம் உண்டானால், இ.பா இதை விரும்புகிறாரோ இல்லையோ நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மற்றவர்களுக்காக நாம் வாழும் அந்த வாழ்க்கை நிறைய பேருக்கு கிடைப்பதில்லை. இதுவும் ஒரு வகை சுதந்திரம் தான், கிடக்கும் வரை காத்திருக்காமல் தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


தயவு செய்து என்னை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். (Please try to understand me)

Understanding - புரிந்துகொள்ளுதல்.


என்னுடைய பார்வையில் இந்த உலகத்திலேயே மிகவும் சிரமமான காரியம் புரியவைத்தலும் புரிந்துகொள்ளுதளும்தான். நம்முள் ஏற்ப்படும் பலபல பிரச்சனைகளுக்கு தவறான புரிதலே காரணம். இது இடத்தையும் சூழ்நிலையையும் பொறுத்து வேறுபடுகிறது. ஒரு கணவன் மனைவியிடையே ஏற்ப்படும் தவறான புரிதல் குடும்பத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்கிறது. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்ப்படும் தவறான புரிதல் ஒரு தலைமுறையையே பாதிக்கிறது. நண்பர்களுக்கிடையே ஏற்ப்படும் தவறான புரிதல் வீண் போட்டியையும் பொறாமையையும் ஏற்படுத்துகிறது.

மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும் சரியான முறையில் புரிந்து கொள்வதே வெற்றிகரமான மனித உறவுகளை வளர்த்துக் கொள்ளுதலில் முதன்மையான திறமையாகும். ஒரு குறிப்பிட்ட சூழலில் உங்கள் நண்பன் அல்லது காதலி, அம்மா, அப்பா இப்படி யாராவது ஒருவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் அல்லது எப்படி நடந்து கொள்வார் என்று உங்களுக்கு தெரிந்திருந்தால் மட்டுமே நீங்கள் அவரை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒரு விசயத்தை படிக்கும்போதும் கேட்க்கும் போதும் புரிந்து கொள் கிறோம்.
ஒருவரை அவரோடு பழகும்போது புரிந்து கொள்கிறோம்.
இதில் தவறான புரிதல் எப்பொழுது ஏற்ப்படுகிறது, நம்முடைய பழக்க வழக்கம் அவரோடு ஒத்துப் போகாதபோது அவருக்கும் நமக்குமான தவறான புரிதல் ஏற்ப்படுகிறது. இதுவரை நாம் நம்மை புரிந்து கொள்ள அல்லது மற்றவரை புரிந்து கொள்ள என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம் அல்லது நம்மை நாமே புரிந்து கொள்ள என்ன முயற்சி எடுத்திருக்கிறோம்.

நாம் ஒருவருடன் பழகும்போது கடைபிடிக்க வேண்டிய ஒரு சில பழக்கங்கள். கேளுங்கள் - பிறகு பேசுங்கள், பழகுங்கள் - உரிமையோடு பழகுங்கள், பாராட்டுங்கள் - நேர்மையாக பாராட்டுங்கள், மன்னியுங்கள் - மன்னிப்பு கேளுங்கள், விமரசியுங்கள் - தோழமையுடன் விமர்சியுங்கள்.

கேளுங்கள் - பிறகு பேசுங்கள்
"பேசுவதற்கு முன்பு கேளுங்கள்" என்று ஒரு கருத்து உண்டு. ஒருவரை அலட்சியப்படுத்துவதற்கு சுலபமான வழி அவர் பேசும் போது அவரை கவனிக்காதிருத்தல். ஆகவே ஒருவர் பேசும் போது தயவுசெய்து அவரை கவனியுங்கள். ஓஹோ, நாம் பேசுவதை இவர் கவனிக்கிறார் என்று உங்கள் மேல் ஒரு மரியாதை வரும் அவருக்கு.

பழகுங்கள் - உரிமையோடு பழகுங்கள்
உதாரணத்திற்கு உங்களின் நண்பரின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருக்கிறீர்கள், உங்களுடைய உணவு நேரம் வரும் வரை சும்மா இருக்காமல் அவருக்கு உதவியாக சில சில உதவிகளை செய்யலாம். தண்ணீர் எடுத்து கொடுப்பது மற்றவர்களை உபசரிப்பது இப்படி. இது நீங்கள் அவர் மீது எடுத்துக்கொண்ட உரிமையை அவருக்கு புரிய வைக்கும்.

பாராட்டுங்கள் - நேர்மையாக பாராட்டுங்கள்
உங்களுக்கு தெரியாத அல்லது முடியாத விசயங்களை மற்றவர்கள் செய்யும் போது அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். சராசரியான மனிதர்கள் இது போன்ற நேரங்களில் மற்றவர்களின் மீது பொறாமையே கொள்வர். நாம் அந்த சராசரியை தாண்டி நிற்க முயற்சி செய்வோம்.

மன்னியுங்கள் - மன்னிப்பு கேளுங்கள்
விருமாண்டி என்ற படத்தில் கமல் பேசும் ஒரு வசனம் " மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் மனுஷன், மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்" என்று. இதுல நாம் மனுசனா? இல்லை பெரிய மனுசனா? உங்களை அறிந்து நீங்கள் செய்தது தவறு என்று தெரிந்த பின்பு "இந்த தவறு என்னுடையதுதான்" என்று நீங்களே முன்வது ஒப்புக் கொள்ள வேண்டும். தவறு உங்களுடையது என்றால் உரக்கச்சொல்லுங்கள் "சாரிப்பா, தப்பு என்மேல்தான்" "சாரி, நான்தான் மிஸ்டேக் பண்ணிட்டேன்" என்று.

விமரசியுங்கள் - தோழமையுடன் விமர்சியுங்கள்
உங்கள் நண்பர் ஒரு தவறை செய்யும் போது, அல்லது அவருடைய ஒரு முடிவு தவறான விளைவினை தந்திருந்தாலோ, அவருடன் தோழமையுடன் சொல்லுங்கள், "உன்னால் இதை கண்டிப்பாக செய்திருக்க முடியும், இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்திருந்தால் இதை விட இன்னும் better-ஆ செய்திருப்பாய். ஒண்ணும் அவசரமில்ல, இன்னும் முயற்சி செய்" என்று இன்னும் எவ்வளவு இனிமையாக சொல்ல முடியோமோ சொல்லுங்கள். இந்த நேரத்தில் அவரது தேவை உங்களது தோழமையும் ஆதரவும்தான்.

அவிழ்க்க முடியாத ஒரு புதிர் உண்டென்றால் அது மனித மனம்தான். சில நேரங்களில் அது வினா எழுப்பியவனுக்கே அதற்கான விடை மறந்து போவது போல தன்னையே அறிந்து கொள்ளமுடியாத நிலை ஏற்படுத்துவதும் மனம்தான். பொதுவாக நாம் நமது தவறுகளிலிருந்து, அவற்றை புரிந்து கொண்டு அந்த தவறுகளிலிருந்து மீண்டு விட முயற்சி செய்ய வேண்டும். ஒரு சம்பவம் சொல்ல்கிறேன்,
ஒருமுறை என்னுடைய நண்பன் அவனது சிறுவயதில் நடந்த சம்பவத்தைப் பற்றி சொன்னான். ஒருமுறை அவனுடைய அம்மா சமைத்துக்கொண்டிருந்த போது கியாஸ் குக்கரின் வெயிட் வெடித்து சிதறியதை பார்த்ததிலிருந்து குக்கரை பார்க்கும்போதெல்லாம் அது வெடிக்கும் என்று பயந்ததகவும், பின்னொருநாள் குக்கரில் கியாஸ் வெளியேறும் நேரம் அவனது அண்ணன் வெயிட்டை போட சொல்லியிருக்கிறார், அப்போது நான் மாட்டேன் என்ற இவன் அவனுடைய அண்ணன் நான் போடட்டுமா? என்றதற்கு சரி என்றிருக்கிறான். அப்போது அண்ணன், அப்போ எனக்கு எதாவது ஆனால் பரவாயில்லையா? என்று சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து இது போன்ற விசயங்களில் எனக்கு பயம் இருந்தாலோ அல்லது இது கண்டிப்பாக முடியாது என்று என்னால் யூகிக்க முடிந்த விசயங்களை நான் மற்றவர்களை செய்ய அனுமதிப்பதே கிடையாது என்றான். இதுவும் ஒரு வகையான புரிதல்தானே. எத்துணை பேர் இப்படி தன்னுடைய தவறை முன்வந்து ஒப்புக்கொண்டு பின் அதிலிருந்து விடுபடவும் முயற்சி செய்வார்கள். ஆனால் அனைவரும் இதையே கடைபிடிக்க வேண்டும்.


INTRO


அன்பே சிவம்.