குருதிப்புனல்

குருதிப்புனல்

தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்றான குருதிப்புனலை எழுதியவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இ. பா. வின் இந்நாவல் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக இ. பா. வின் நாவல்கள் அரசியலை சார்ந்தே இருக்கும். நாவலாசிரியர்களை பொறுத்தவரை இவரை போல அரசியலை அலசியவர்கள் யாருமில்லை என்பது என்னுடைய கருத்து.

இதில் இ. பா. வின் முன்னுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'குருதி' என்றால் இரத்தம் என்று நமக்குப் பொதுப்படயாகத் தெரியும். வெஞ்சினத்தை நிறைவேற்றும்போது சிந்தப்படும் இரத்தமென்று எத்தனை பேருக்கு தெரியும்? பரசுராமன் தன் வெஞ்சினத்தை நிறைவேற்ற, இருபத்தொரு தலைமுறை க்ஷத்திரியர்களின் இரத்தத்தில் வேள்வி செய்கின்றான். 'குருதிப்புனல் அதனிற் புக மூழ்கித் தனி குடைவான்' என்பது கம்பர் வாக்கு. இந்நாவல் மலையாளத்தில் வந்த போது, மலையாளத்தில், 'குருதி' என்ற சொல் இன்றும் 'sacrificial Blood' என்ற பொருளில்தான் வழங்குகிறது என்று அறிந்தேன். இந்த நாவலின் கடைசியில் பரசுராமன் வருவதற்கு இதுதான் காரணம்".

இவருடைய பிற நாவல்களான ஆகாயத்தாமரை, தந்திர பூமி, சத்திய சோதனை, கிருஷ்ணா கிருஷ்ணா, வேதபுரத்து வியாபாரிகள் மற்றும் ஹெலிகாப்ட்டர்கள் கீழே இறங்கி விட்டன ஆகியவற்றை ஏற்கனவே படித்திருக்கிறேன். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அதிர்வுகளை மனதிற்குள் ஏற்ப்படுத்தியிருகின்றன.

ராமகிருஷ்ணன் சொல்லுவது போல "குளத்தில் எறியப்படும் ஒவ்வொரு கல்லும் தனக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்துகிறது. அவை ஒன்றை போல இன்னொன்று இருப்பதில்லை. பிறகு அமைதியாக தண்ணீருக்கடியில் சென்று உறங்குகின்றது" அதைபோல இவரது ஒவ்வொரு கதைகளும் மனதில் ஒவ்வொரு விதமான அதிர்வுகளை உண்டாக்குகின்றது. அவை ஒன்றை போல இன்னொன்று இருப்பதில்லை.

இதில் நான் முதலில் குருதிப்புனல்- ஐ குறிப்பிடக் காரணம், நான் மிகவும் விரும்பும் கம்யூனிச சிந்தனைகளை என்னுள் மீண்டும் தூண்டி விட்டதை தவிர வேறு எதுவும் இல்லை அல்லது தெரியவில்லை. அன்பே சிவம் என்ற படத்தில் கமலும் மாதவனும் சில விசயங்களை பற்றி வாதிடும் காட்சி இந்நாவலில் சிவா-வும் கோபால் -லும் பேசிக்கொள்ளும் உரையாடல்களை நியாபகப்படுத்தியது. பதிப்பாசிரியரின் கருத்தின் படி "இ. பா. வின் குருதிப்புனல் ஒரு சமகால சரித்திரத்தின் அடிப்படையில் புனையப்பட்டதென்றாலும், மனித குலத்தின் எந்த காலத்திற்குமான ஆதாரப் பிரச்சனைகள் சார்ந்து இது வைக்கும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை" என்பது இநாவலை படித்தபின் அனைவருக்கும் புரியும்.

நமக்காக மட்டுமின்றி நம்மை சுற்றி இருப்பபவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் எண்ணம் அனைவருக்கும் பிறப்பிலேயே வந்து விடுவது கிடையாது, சிலருக்கு படித்ததனால் வந்திருக்கலாம், சிலருக்கு சிலர் அநியாய அகிரமங்களை கண்டு வந்திருக்கலாம். அந்த ஒரு நொடி யாருக்கு எங்கே இருக்கிறது, தெரியவில்லை ஆனால் இந்த கதையை (வெறும் கதை என்று சொல்லி விட முடியாது, ஏனெனில் இதில் உண்மை சம்பவமும் ஒளிந்து கிடக்கிறது) படித்த பின் யாருக்கும் அத்தகைய மாற்றம் உண்டானால், இ.பா இதை விரும்புகிறாரோ இல்லையோ நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

மற்றவர்களுக்காக நாம் வாழும் அந்த வாழ்க்கை நிறைய பேருக்கு கிடைப்பதில்லை. இதுவும் ஒரு வகை சுதந்திரம் தான், கிடக்கும் வரை காத்திருக்காமல் தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.