எரியும் பனிக்காடு - RED TEA

உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்.
-வில்லியம் ஜேம்ஸ்தோழர் சிந்தன் தான் முதலில் இந்த புத்தகத்தை பற்றி எனக்கு அறிமுகம் கொடுத்தார். இந்த புத்தகம் அவரது புத்தகக் கடையிலேயே இருந்ததாகவும் தற்சமயம் கைவசம் இருப்பு இல்லை, வெகு விரைவில் அந்த புத்தகத்தை எனக்கு வாங்கி கொடுப்பதாகவும் சொன்னார். ஒரு வாரத்திற்கு மேல் எனக்கு பொறுமையில்லை, மற்றும் சிந்தனை தொந்தரவு செய்யவும் மனமில்லை. அப்பொழுதுதான்,எஸ்.ராமகிருஷ்னானின் வலைப்பதிவில் இந்தபுத்தகத்தின் அறிமுகம் மற்றும் பதிப்பாளரின் விபரம் பதிவிடப்பட்டிருந்தது. ராமகிருஷ்ணனிடம், ஒரு நாவலை எப்படி படிப்பது என்று கேட்டால் அதற்க்கு ஒரு நாவலின் அளவில் இலக்கணங்கள் கொடுப்பார். இதிகாசங்களை வாசிப்பது எப்படி என்பதுபோல. ஒருமுறை இலக்கணங்களின் படி வாசித்து பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் படிக்கும்போது அந்த கதையில் வரும் பாத்திரங்களாகவே மாறிப் படிக்கும் சுபாவம் ஓட்டிக்கொண்டே வருகிறது. இது எனக்கு ஒருவகையில் பிடித்திருக்கவும் செய்கிறது.


ஒவ்வொரு முறையும் நல்ல புத்தகத்தின் அறிமுகம் இவரின் மூலமாகவே
"நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் அழகாகப் பதிவு செய்திருக்கிறது. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்று இதைச் சிபாரிசு செய்கிறேன்" இதற்க்கு மேல் எனக்கு எந்த சிபாரிசும் தேவைப்படவில்லை. இந்த புத்தகத்தை எனக்கு வாங்கி கொடுத்த நண்பன் சந்திர சேகருக்கு, நன்றி. விடியல் பதிப்பகம் என்ற பின்னர் முகவரி தேடுவது அவ்வளவு கடினமாக இல்லை. கோவையிலுள்ள நண்பன் மூலமாக புத்தகம் வாங்கி விட்டேன். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே என்னை மீண்டும் மீண்டும் படிக்க செய்கிறது. நிறைய படிக்கறேன், கற்று கொள்வதற்காக.


இது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பத எந்த இடத்திலும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாதபடி நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். திரு. முருகவேல் அவர்கள். இந்த நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், ஒவ்வொரு அதித்யாயத்தின் முன்னமும் குறிப்பிட்டுள்ள மேற்கோள்கள் மற்றும் தேர்ந்த எழுத்தாளர்களின் வரிகளை மேற்க்கொளாக சுட்டி காட்டி அனேகமாக ஒவ்வொரு மேற்க்கோள்களும் அந்த அதித்யாயத்தின் கருவை உட்கொண்டிருப்பது போல அமைத்திருப்பதும்தான். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள " உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்." இந்த வரிகள் கூட நாவலின் மொத்த கருவையும் சுமந்துகொண்டுள்ள ஒரு மேற்கோள்தான். ஒரு நாவலை படித்து முடிக்கும்போது அந்த நாவல் ஏதேனும் ஒரு உந்துதலை உருவாக்கி இருக்க வேண்டும். அதுதான் அந்த நாவலின் மற்றும் ஆசிரியரின் உண்மையான வெற்றி. அப்படி ஒரு நாவல்தான் இந்த எரியும் பனிக்காடு.


கருப்பன் என்ற ஒரு சாதாரண கூலியின் வாழ்க்கையின் வழியாக தேயிலை தோட்ட தொழிலாளிகளின் இருட்டான பக்கங்களை தொட்டிருக்கிறார், ஆசிரியர். எட்டணா இருந்தால் ஒரு வாரத்திற்கு தேவையான ராகி, உப்பு, மிளகாய் மற்றும் வெள்ளம் வாங்கிவிட முடியும் என்ற காலத்தில் நடக்கிறது கருப்பனின் கதை. உள்ளூரில் பிழைப்புக்கு வேறு வழியில்லாததால், குமரிமலை தேயிலை தோட்ட மேஸ்தரி சங்கரபண்டியனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி , எஸ்டேட்டில் நடக்கும் எந்த விபரீதமும் தெரியாமல் தனது மனைவியுடன் குமரிமலை எஸ்டேட்டிற்கு பயணிக்கின்றனர் இன்னும் முப்பது கூலித் தொழிலாளிகளும் குடும்பத்துடன்.


பெற்ற பிள்ளைகளை போல பார்த்துக்கொள்வதாக சொன்ன கண்காணி, பிறகு மலையில் அப்பாவி கூளித்தொளிலாளிகளை அடித்து துன்புறுத்துவதும், அவர்களை எந்த காரணத்திலும் திரும்ப அனுப்பிவிடக்கூடாது என்பதிலும், தப்பிக்க முயல்பவர்களை அடித்தே கொள்வதுமாக, எஸ்டேட் என்பது திரும்ப வர இயலாத ஒரு சிறைசாலை என்பதையும் கருப்பனும் அவனது மனைவி வள்ளியும் உணர்கின்றனர். இங்கே நடப்பவற்றை பொறுத்து கொண்டால் மட்டுமே இங்கு என்பதை இருவரும் உணருகின்றனர் ஆனாலும் கிராமத்து மனிதர்களான கருப்பனுக்கும் வள்ளிக்கும் இந்த அவமானங்கள் மிகுந்த வலியை உருவாக்கின்றன. அங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்ற நிலையில அவர்களும் மற்றவர்களை போலவே அடிமை வாழ்வை நடத்த துவங்கி விடுகின்றனர்.


இதுபோக மலேரியா காய்ச்சல், குளிர் காய்ச்சல், அட்டைபூச்சிக்கடி, மழை, பெண்கள்மீதான பாலியல் வன்முறைகள், வெள்ளைகார துறைகளின் அடக்கு முறை, கடனுக்கு பொருள் கொடுக்கும் காளிசெட்டியார் என 1925-ல் உள்ள குமரிமலை எஸ்டேட் என்ற பெயரில் தேயிலை தோட்டங்களில் நடந்த கொடுமைகள் கண்முன்னே விரிகிறது. இந்த துயரங்களை சிறிது குறைக்கும் விதமாக அப்ரகாம் என்கிற மருத்துவரின் அறிமுகம் அந்த தோட்டத்திற்கும் தொழிலாளர்களுக்கும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. எப்படியாவது ஒருமுறை இந்த புத்தகத்தை படித்து விடுங்கள்.


இந்த புத்தகத்தின் ஆசிரியர் பி.எச். டேனியல் அவர்களின் முன்னுரை, இந்நூலை நான் எழுதியதற்கு காரணம், தென்னிந்தியாவில் தேயிலை தோட்டத்தொழிலை நிறுவுவதற்கு தொழிலாளிகளும் எழுத்து பணியாளர்க்களுமாகிய நமது நாட்டு மக்கள் புரிந்த தியாகங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும், நினைவுகூரப்பட வேண்டும். மேலும் உங்களின் அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதிற்கு இதம் தரும் ஒரு கோப்பை தேநீரை உறிஞ்சும்போது, அதற்காக அந்த நாளில் உங்களுடயதைவிட எளிய ஆனால் உங்களுடயதைபோன்ற அமைதி நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன, அழித்து நாசமாக்கப்பட்டன என்பதை நினைவு கூறுங்கள்.


ஊட்டி, கொடைக்கானல் என இன்று சுற்றுலா தளமாக அறியப்பட்டு வரும் இவ்விடங்களில் எல்லாம் இதுபோன்று கொடுமைகளை கண்டுதான் வந்திருக்கும். ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுசென்றவை என நாம் நினைத்திருக்கும் இந்த தேயிலை தோட்டங்கள், சாலைகள், குறிப்பாக மலை சாலைகள், பாலங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் இவையனைத்தும் கிட்டதட்ட அடிமைகளை போலவே நடத்தப்படும் இவர்களை போன்றவர்களின் மூலமாகவே உருவாக்கப்பட்டிருகின்றன என்பது சத்தியம். அந்த நாட்களில் ஆங்கிலேயர்களை விட நாம் நம்மாலேதான் அதிகம் கொடுமைபடித்தப் பட்டிருக்கிறோம். அவர்களுக்கு தேவை குறைந்த செலவில் கூலிகள், ஆனால் நம்மவர்களோ அவர்களுக்கு கிடைக்கும் அந்த சொற்ப வருமானத்தையும் பிடுங்கிக்கொண்டு அவர்களை கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றனர். ஜாலியன் வாலாபாக்கில்கூட சுடு என்றது ஆங்கில ஆதிக்கம், ஆனால் கையில் துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டவர்கள்?


இதை இன்னொருமுறை இதை படியுங்கள் "உயிரியல் ரீதியாகப் பார்த்தால் விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்த மிருகம், மனிதன்தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தையே வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன்தான்" இனி எப்பொழுது மலைபிரதேசங்களுக்கு செல்லும்போதும், தேநீர் அருந்தும் போதும் எரியும் பணிக்காடும் நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னாலும் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது என்ற இந்தவரிகளும் நியாபகம் வரத்தான் செய்யும்.