கார்த்திகை -மார்கழி

எனக்கு தெரிந்து தமிழ் மாதங்களில் மிகவும் அழகான மாதங்கள், கார்த்திகை - மார்கழி. பொதுவாக இந்த அழகு அதுவாகவே அமைந்து விடுகின்றது.
கார்த்திகை மாதம், முன்பனிக்காலம். நான்தான் குளிர், அடுத்த மாதம் கொஞ்சம் அதிகமாக வருவேன் என்று சொல்வதற்காகவே வரும் மாதம், கார்த்திகை. பெரிதாக இல்லையென்றாலும் கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் இருக்கும். இந்த மாதங்களில் அனேகமாக சபரிமலைக்கு ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதத்திலிறுப்பேன். முன்போல் இல்லையென்றாலும் என்னால் முடிந்த மட்டும் கட்டுப்பாடுகளில் இருப்பேன். (நான் புகைக்காமல் இருப்பதே பெரிய விரதம்தான் ). இரு வேளைகளிலும்குளித்து கோவிலுக்கு சென்று உண்மையாக எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் மனதார வேண்டிக்கொள்ளும்போது, நிச்சயமாக மாதம் மட்டுமல்ல நமது மனது அழகு பெரும். பெரும்பாலும் இந்த காலத்தில் பொழுதுபோக்கு விசயங்களில் கூட ஈடுபடுவது இல்லை. அநேக நேரம் அலுவலகத்திலேயே செலவிடுவேன். வேறு எந்த நாட்களிலும் இந்த அளவு உண்மையாக இருப்பேனா என்பது எனக்கே ஆச்சர்யம்தான். ஆனால் ஒவ்வொரு முறை விரதத்திளிருக்கும்போதும், இப்படியே எப்போதும் இருந்துவிட கூடாதா என்று நினைப்பதுண்டு. ஆனால் எப்பொழுதும் அது நடப்பதேயில்லை.


என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய சிறுவயதில், என்னுடைய பாட்டியை பார்த்தால் யாருக்கும் சாமி கும்பிடவேண்டும் என்று எண்ணம் வரும். அந்த அளவிற்கு வீடே பக்தி மயமாகத்தானிருக்கும். ஆனால் பாட்டி இறந்த பிறகு அவர்களின் நினைவினை போல கடவுள் பக்தி என்பது என்னளவில் குறைந்து கொண்டே வந்தது. கடைசியாக அது இல்லாமலே போய்விடுமோ என்ற சிந்தனையை குறித்த மாதம் . கார்த்திகை. என்னை பொறுத்தவரை என்னுடைய குழந்தைகளை நான் சிறுவயது முதலாக கோவிலையும் சிலைகளையும் காட்டித்தான் வளர்க்க வேண்டும் என்பதை வருடம் தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் மாதம்.


மார்கழி, என்றதும் எனக்கு இரண்டு விஷயங்கள் உடனே நியாபகத்திற்கு உடனே நியாபகத்திற்கு வரும். ஒன்று, எனது பள்ளி தமிழாசிரியர் கதிர்வேலு அய்யா மற்றும் அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய ( அல்லது புறநானூறு அல்லது வேறு ) செய்யுள். செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. நீங்கள் அனைவரும் எனது கண்ணுக்குள் அல்ல கைக்குள் இருக்கவேண்டும் என்று அழகான காரணத்துடன், இவர் வகுப்பெடுக்கும்போது அனைவரையும் அவரது காலடியில் சுற்றி அமர்ந்துகொள்ளசெய்வார். அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இத சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான்.


மற்றொன்று , எங்கள் காலனி பிள்ளையார் கோவிலும், சாரதா அக்காவும். ஒவ்வொருவருக்கும் பிராத்தனை செய்ய, கோவிலுக்கு செல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு. எனக்கும் எனது நண்பர்களுக்கும் சிறுவயதில் கோவிலுக்கு செல்ல இரண்டே காரணங்கள்தான். பொங்கல் விநியோகம் செய்யவும் சாரதா அக்காவை பார்க்கவும் தான். பத்தாவது படித்து கொண்டுடிருக்கிறேன், மார்கழி மாதம், அந்த குளிரிலும் எழுந்து குளித்து விட்டு ஆறு மணிக்கெல்லாம் எங்கள் காலனி விநாயகர் கோவிலுக்கு சென்று விடுவேன். நண்பர்களும். சாரதா அக்கா எங்களுக்கு முன்பே வந்து ஈர தலையுடன் உட்கார்ந்திருப்பார்கள். என்ன பிடிக்கும் என்று தெரியாது, ஆனால் அவர்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய அக்கா என்னை இவன்தான் என் தம்பி, என்று என்னை அறிமுகம் செய்யும்போது, பெரும்பாலும் என்னுடைய பிராத்தனை சாரதா அக்கா என்னை தம்பி அக்காவிற்கு திருமணம் அக்காவிற்கு என்பதாகதான் இருக்கும். பூஜை முடிந்த பின்னர் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது எங்களின் பொறுப்பு. பல நேரங்களில் எங்களுக்கு கடைசியாக எதுவும் கிடைக்காத போதும், இந்த பொறுப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சாரதா அக்கா, என்னை காதலிக்கிறாள் என்று சொல்லப்பட்ட எந்நாளும் நம்பப்பட்ட ரோஷினி உட்பட நமக்கு பிடித்தவர்கள், மனம் நிறைய (எங்களின் கைவண்ணம்) சாப்பிடும்போது நமக்கு எதுவும் கிடைக்காத போதும், சந்தோசமாகதானிருக்கும். ஆனால் சாராதா அக்காவிற்கு திருமணம் என்று கேள்விப்பட்டபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.