ராமநாதன் சாரும் ஜாதிக்காயும்

கல்லாறு. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு அடிக்கடி செல்வதுண்டு. காதலர்களுக்கு அல்லது காதலர்களாக கருதப்படுபவர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்த சமயம் அதுவும் எங்களுக்கு கூப்பிடு தூரத்தில் கல்லாறு என்பதால் அனேகமாக ஒவ்வொரு ஞாயிறுகளிலும் எங்களின் மொத்த நண்பர் குழாமும் அங்கே சென்று விடுவது வழக்கம்.

வழக்கம்போல இல்லாமல் ஒருமுறை வார நாட்களிலேயே சென்றிருந்தோம். காரணம் நண்பன் கார்த்திக். நான், கார்த்தியும் அவனது அந்நாள் காதலியாகிய சுமதியும், சுமதியின் இரு தோழிகளும் அவர்களின் காதலர்களும் என மொத்தம் ஏழு பேர். நான் மட்டும் ஏன் தனியே? என்றால் அதற்க்கு என்னிடம் பதில் உண்டு. "எனக்கு காதலிகள் கிடையாது. " ஆனால் காதலர்களாக செல்லும்போது நீ என்ன கரடி மாதிரி என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஒருவேளை கார்த்திக்கிடம் இருந்திருக்கலாம், இருக்கலாம்.

ஆனால் அனைவரும் ஜோடி ஜோடியாக செல்லும்போது நான் மட்டும் தனியாகவேணும் அங்கே செல்ல காரன் என்னிடம் நிறைய உண்டு. கல்லாறு. மற்றவர்களுக்கு எப்படி என்பது தெரியாது எனக்கு மிகவும் பிடித்த இடம். எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு பழக்கம் அசையும் பொருட்க்களை அசையாமல் பார்த்துகொண்டே இருப்பேன். அதிலும் குறிப்பாக ஓடும் நீரை பார்த்துகொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் கல்லாற்றில் கணுக்கால் நனையுமளவிற்கு குளு குளுவென ஓடிக்கொண்டிருக்கும் தெளிவான நீர். கண்படும் தூரம்வரை மொழுமொழுவென கூழாங்கற்கள். பருத்த மரங்களின் வேர்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும். ஏதாவது ஒருவேரில் உட்கார்ந்துகொண்டு தண்ணீரில் காலை நனைத்தபடி அமர்ந்து எதாவது புத்தகம் படித்து கொண்டிருப்பது என்பது எனது அந்த கால பொழுதுபோக்கு. பொன்னியின் செல்வனின் ஆரம்ப அதித்யாயங்களை அங்கேதான் படித்திருக்கிறேன்.

நண்பனாகட்டும் அவர்களோடு வந்தவர்களாகட்டும் அல்லது இன்னபிற காதலர்கலாகட்டும், காதலர்களாக கருதப்படுபவர்களும் சரி, தத்தம் தேவைக்கேற்ப பாறைகளை தேர்ந்தெடுத்து காதலிக்க தொடங்கிவிட்டனர். ரசிப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும் புத்தகத்தோடே அவ்விடங்கள் பழக்கப்பட்டு போனதாலும் அந்த சமயம் புத்தகம் ஏதும் கையில் இல்லாததால் என்னால் நேரத்தை போக்குவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது. நானும் என்னால முடிந்தவரை நேரத்தை செலவு செய்ய நினைத்தேன், ஆனால் முடியவில்லை. தோட்டத்தையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். அப்போது புதிதாக நிறைய ஆட்கள் தென்பட ஆரம்பித்தனர், குழந்தைகளுடன் ஒரு சுற்றுலா போல வந்திருந்தார்கள். அவர்களில் ஒரு குடும்பத்தினரிடம் நானாக சென்று பேசிகொண்டிருந்தேன். அவர்கள் மேட்டுபாளயத்திளிருந்து வந்திருப்பதாக சொன்னார்கள். அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகனும் கையில் ஓரிரு வயதில் குழந்தையும் இருந்தது.

பக்கத்திலேயே இருப்பதால் அடிக்கடி இங்கே வந்துவிடுவோம் என்றும் ஊரிலிருந்து சொந்தக்காரர்கள் வந்திருப்பதால் அப்படியே ஒரு சின்ன டூர் மாதிரி கிளம்பி இங்க வந்தாச்சு என்று சொன்னார். அவர் மிகவும் அமைதியாக பேசினார் அவரது குரல் மிகவும் மென்மயானதாக இருந்தது. அவர்களோடு பேசிகொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஒரு கிளாசை கட்டடித்து விட்டு ஊர் சுற்றிகொண்டிருந்த என்னிடம், எந்த வித்தியாசமும் இன்றி மிகவும் அன்யோன்யமாக பழகினார்கள் அவரும் சரி அவரது குடும்பத்தினரும் சரிரொம்ப நேரம் அவர்களோடு பேசிகொண்டிருந்தேன். ரொம்ப நேரம் என்பது அவர்கள் பேசிக்கொண்டே சாப்பாட்டு பொட்டலங்களை திறக்கும்போதுதான் உணர்ந்தேன். சரி நீங்க சாப்பிடுங்க நான் அப்படியே நண்பர்களை பார்த்துவிட்டு வந்து விடுகிறேன் என்று கிழம்பினேன். அவர்களின் கட்டாயத்தின் முன்பு என்னுடைய எந்த காரணமும் எடுபடாது என்று தெரிந்ததால் நானும் உட்கார்ந்து விட்டேன்.
அவர்களின் அறிமுகத்தில்தான் இன்னமும் எங்கள் வீட்டு எலுமிச்சை சாதத்தில் இஞ்சியும் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினியும் பழக்கப்பட்டிருக்கிறது. நன்றி "ராமநாதன் சார்." சாப்பிட்ட பிறகு அவர்களின் மகனோடு கிரிக்கெட் விளையாடிகொண்டிருந்தேன். பந்து இல்லாததால் அங்கே இருந்த ஒரு காயை எடுத்து பந்தாக மாற்றி விளையாடிகொன்டிருந்தோம்.

ஒரு நியாபகமாக இருக்கட்டுமே என்று அதை வீட்டிக்கு எடுத்துவந்தேன். அம்மா சொன்னபிறகுதான் தெரியும் அது ஜாதிக்காய் என்று. நேற்று அன்னுடைய அறையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அதை பார்த்தபோது இதை அவசியம் எழுதவேண்டும் என்று நினைத்துகொண்டேன். ராமநாதன் சார், என்றாவது ஒருநாள் இதை நீங்களும் உங்களுடைய மனைவியும் படித்து, என்னை நியாபகப்படுத்தி கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். நான்.


பேர் சொல்லக்கூடாது என்கிற வசம்பு

காலை ஐந்தரை மணியிருக்கும். அந்த நேரத்திலேயே வீட்டில் அந்நியமான குரல் கேட்க்க சிணுங்கி கொண்டிருந்த அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கூடத்திற்கு வந்தேன். பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்துள்ள ஜோடி குழந்தையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்பா அவர்களோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். சிறிய புன்னகையுடன் அவர்களை கடந்து அடுப்படிக்கு வந்தேன். என்னம்மா? என்னவாம் இந்நேரத்துல? என்றேன். கொழந்தைக்கு முடியலையாம்?சரி சரி என்றவாறு சென்று விட்டேன்.


எப்படித்தான் அம்மாவால் இப்படி எல்லோரிடமும் இவ்வளவு அன்னியோன்யமாக பழக முடிகிறது என்று எப்போதும் நான் நினைப்பேன். இவர்கள் கூட கொடிவந்த ஓரிரு வாரங்களிலேயே அம்மாவிற்கு மிகவும் நெருக்கமானவர்களாய் ஆகி விட்டிருந்தார்கள்.


"பாருங்க ஆண்ட்டி! தோள் மேல போட்டுகிட்ட பேசாம இருக்கான். கைல எடுத்துட்டா ஒரே அழுகை, ராத்திரி பூரா தோளிலேயே போட்டுக்கிட்டு கிடந்தோம்"

தொட்டியில போட்டு பார்த்தியாம்மா?

"பர்த்தேன்ம்மா, அப்பாவும் அழுததே இருக்கான்"

அம்மா, ஜிம்முக்கு கிழம்பிகொண்டிருந்த எனக்கு வேகவைத்த உருழகிழங்கை புரட்டியவாறே "குப்புற படுக்க வச்சு பார்த்தியாம்மா?"

"இல்லையே ஆண்ட்டி!"

"இந்தாடா தோல இன்னும் சரியா உறிக்கல பார்த்தது சாப்பிடு "

சரிம்மா, ஏதோ குழந்தைக்கு உடம்பு முடியலன்னு வந்திருக்காங்க அவங்கல பாருங்க முதல்ல என்றேன். ஏதோ மிகப்பெரிய உதவியை செய்து விட்டது போல என்னை பார்த்து சிநேகமாய் சிரித்தார்கள் இருவரும். அவர்கள் கடனுக்கு சிரித்ததை பார்த்தபோது நான் எதுவும் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியது.


குழந்தைய இங்க குடும்மா, என்று சொல்லி அம்மா குழந்தையாய் வாங்கிகொண்டார்கள். தன்னுடைய கையிலேயே அவனை குப்புற படுக்க வைத்து கொண்டு, உதட்டை முன்னோக்கி குவித்து நாக்கை வெளியே நீட்டி மேலுதட்டில் பரப்பியவாறு "ப்லு ப்லு ப்லு ப்லு "என்று ஏதோ ஒரு வினோதமான ஒலியை எழுப்பினார்கள். எனக்கே இது ரொம்பவும் புதிதாக இருந்தது. அம்மா நீங்க இப்படியெல்லாம் கூட சவுண்ட் மிக்சிங் பண்ணுவிங்களா? பூக்குட்டி தோத்தார் போங்க. என்று சிரித்த என்னை அவர்கள் சட்டை செய்ததாக தெரியவில்லை. குழந்தை இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தது.


ஏண்டி குட்டிம்மா! என்னாச்சு? என்னடி செல்லம்! ஏன் அழுகிற? என்று குழந்தையிடம் கேள்வியை கேட்டு "வயிறு வலிக்குதா?" என்ற கேள்வியையே பதிலாக சொல்லிகொண்டிருந்தார்கள்

"எதோ வயத்து பிரச்சனை போல, புள்ளைக்கு வயத்த அமுக்குனாப்பல இருந்தா சுகமா இருக்கும் போல இருக்கு பாரேன்."

ஆமா நேத்து என்ன சாப்ட்ட?

பூரி மசால்

சரிதான், தாய்ப்பால் கொடுக்கும்போது இந்த மாதிரி வாயு பொருட்களை கொறச்சிக்கம்மா, சரியா? கொஞ்சம் ஜாதிக்காய், கடுக்காய், சித்திரத்தை கூட பேர் சொல்லாதது எல்லாத்தையும் நல்லெண்ணெய் வெளக்குல சுட்டு, அரைச்சு ரெண்டு சொட்டு குடும்மா, சரியா போயிடும், இல்லா நாடு மருந்து கடையில ஓரமருந்துன்னு கேட்ட குடுப்பாங்க. வாங்கி குடுங்க

சரிம்மா, குடுத்து பாக்குறோம், இல்லனா சாயந்திரமா டாக்டர்கிட்ட கூட்டிட்டு போயி காமிக்கிறோம். வரோம்மா ரொம்ப தேங்க்ஸ், வரேன் ஆண்ட்டி.

அநேகமா வாயு பிரச்சனயாதான் இருக்கும், அவங்க போனதுக்கு அப்புறமா அம்மாவா பேசிகிட்டே உள்ளே போனாங்க.


நான் அம்மாவிடம் "அம்மா ஏதோ கடுக்காயோட பேர் சொல்லாததுன்னு சொன்னிங்களே, அது என்னம்மா?

"அதாண்டா வசம்பு"

"பேர் சொல்லக்கூடாது சொன்னிங்க இப்ப சொல்லிடிங்க?"

"குழந்தைக முன்னாடி சொல்லக்கூடாது"

"ஏன்?"

"ஏன்னா, "குழந்தைக முன்னாடி வசம்புன்னு சொல்லக்கூடாதுடா"

"அதான் ஏன்?"

"ஏன்னா, ............""உங்க பாட்டி அப்படிதான் சொல்லி கொடுத்திருக்காங்க"

"ஏம்மா, இதே கேள்விய நான் குழந்தையா இருக்கும்போது கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பீங்க?"

"ம்ம்.. போடா, போ போயி வேலைய பாரு"


தேவதச்சன் கவிதைகள்

சிறுமி கூவுகிறாள்.
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.
சிறுவன் கத்தினான்.
இல்லை. நில்லா என்கூட வருகிறது
இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.
வீட்டிக்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டி பார்க்கிறாள்.
நிலா இருக்கிறதா?
இருக்கிறதே
அவள் சின்ன அலையை போல சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி
எல்லோர் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லைஆசிரியர் -தேவதச்சன்
புத்தகம் - யாருமற்ற நிழல்
உயிர்மை பதிப்பகம்
விலை ரூபாய் நாற்ப்பது.

ஆசிர்வாதம்

ஒரு முறை என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுடைய தேர்விற்காக எட்டிமடை சென்றிருந்தேன். அவன் உள்ளே தேர்வெழுதி கொண்டிருந்தான். கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் பதின்ம மைல்களில் உள்ளது அந்த பொறியியல் கல்லூரி. அவன் வர மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் அங்கே உள்ள காடுகளின் பக்கம் இறங்கி நடக்க தொடங்கினேன்.
அங்கே ஒரு ஹோட்டல் கடை நடத்தி வரும் ஒரு ஐம்பத்து வயது மதிக்கத்தக்க பெரியவரை சந்தித்தேன். ராணுவத்தில் பணிபுரிந்து தற்சமயம் ஓய்வு பெற்று இங்கே விவசாயம் செய்துவருவதாகவும், இது தன்னுடைய மருமகனுடைய கடை என்றும் சொன்னார். வேறு யார் நான் இந்த துறையில் இருக்கிறேன் என்று சொன்னாலும் உடனே என்னவாக இருக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்கும் எனக்கு ஏனோ நீங்கள் ராணுவத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்க தோன்றவில்லை.அவர் சுருட்டு பிடித்துகொண்டே என்னிடம் பேசி கொண்டிருந்தார். அவர் என்னிடம் பேசும்போது மிகவும் உரிமை எடுத்துகொண்டார் அல்லது எனக்கு அப்படி தோன்றியது. பேச்சினூடே என்னை அதிகம் புகைபிடிக்க வேண்டாமென்று சொன்னார். அப்போது சாலையில் ஏதோ விபத்து நடந்தது போல சப்தம் கேட்கவே இருவரும் விரைவாக அங்கு விரைந்தோம், அங்கே ஒரு சிறுவன் மீது கார் மோதி கேழே விழுந்திருந்தான். சிறிய காயம்தான், இவர் தனக்கு தெரிந்த பையன்தான் என்று என்னிடம் சொல்லிவிட்டு கார் ஒட்டிவந்தவரை கொஞ்சமாய் திட்டிவிட்டு சிறுவனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு டீ கடைக்கு வந்தார்.காயம் சிறிதாக இருந்தாலும் பையன் விந்தி விந்தி நடப்பதை பார்த்து விட்டு அவனதுஅம்மா கண்ணை கசக்கியபடியே வந்துகொண்டிருந்தார். அவனுக்கு அங்கே சிறிய முதலுதவிகளை செய்து கொண்டே என்னிடம் தொடர்ந்தார். " பாவம் தம்பி இவன், அப்பா போனதுக்கு அப்புறம் இப்படி வீடு வீடா பொய் பால் ஊத்தி பொழைக்கிறான். இவன் போக இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்குது, இவனுக்கு கீழ" என்றார். அதை ஆமோதிப்பது போல அவனது அம்மாவும் ஒருமாதிரியாக தலையை ஆட்டினார். அவனுக்கு ஒரு டீயும் பண்ணும் வாங்கி கொடுத்தார். பிறகு அதற்க்கு பணம் கொடுக்க போகும்போது, நான் கொடுக்கிறேன் என்று நான் தடுத்தேன். அவர் இவன் எனக்கு தெரிந்த பையன் நானே செய்கிறேன் என்று சொன்னார். இப்பொழுது இவனை உங்களுக்கு தெரிந்தவரை எனக்கும்தெரியும் எனவே நானே கொடுக்கிறேன் என்று முண்டியடித்து பணம் கொடுத்து விட்டு அப்படியே அந்த சிறுவனின் பயில் ஒரு நூறு ரூபாய் தாளை திணித்து விட்டு வந்தேன்.யாரோ புள்ளைக்கு இவ்வளோ செய்யிறயே, இந்த புண்ணியம் ஒனக்கு நிச்சயம் சேரும், தம்பீ! என்று அவர் சொன்னபோது அவர குரல் தளுதளுத்தது. அவனது அம்மாவும் கண் கலங்கியிருந்தார். எந்த அளவிற்கு அந்த சிறுவனை பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் இந்த சிறு உதவிக்கு அவர் கண்கலங்குகிறார் என்றால் அவர்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும்,"இவனை உங்களுக்கு தெரிந்தவரை எனக்கும்தெரியும்" என்று பெரியவரிடம் சற்றுமுன் நான் சொன்னது எவ்வளவு பெரிய அபத்தம் என்று அப்போது உணர்ந்தேன்.

கட்டிபிடி வைத்தியம்

இங்க்லீஷ் காரன் நமக்கு கற்று கொடுத்த சில பல நல்ல விசயங்களில் நான் உண்மையிலேயே நல்ல விஷயம் என்று நினைப்பதில் ஒன்று நன்றி சொல்வது (THANKS GIVING). நான் சில பல இடங்களில் இந்த நன்றி சொல்லுதல் என்பதை உபயோகப்படுத்தி இருக்கிறேன், இருப்பேன். அதன் பலனை கூட அநேக முறை அனுபவித்தது உண்டு. சும்மா நாளை காலை அம்மா அல்லது மனைவி காபி கொடுக்கும்போது தேங்க்யூ என்று சொல்லிபாருங்கள். வேண்டாம் சொல்லுங்கள், அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் ஆராயத்தேவயில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல் சொல்லிகொள்வதில்தானே இந்த நன்றிகளின் அர்த்தமே இருக்கிறது. பல நேரங்களில் நல்ல காபி கிடைக்கும்போது அதை பாராட்ட தவறிவிடுகிறோம். காபியில் சர்க்கரை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்துவிட்டால் அதை ஒரு குறையாக சொல்வதைவிட நல்ல காபி கிடைக்கும்போது அதை பாராட்டி பாருங்கள்.

வசூல்ராஜா படத்தில் கமல் ஒரு மருத்துவமனையை சுத்தம் செய்யும் தொழிலாளியை கட்டிபிடித்து "நீ செய்யும் வேலைக்கு தனியாக நேரம் ஒதுக்கி உன்னை யாரும் பாராட்ட மாட்டார்கள். நேரம் கிடைக்கும்போது நாமதான் இப்படி" என்று சொல்லி அவரை கட்டிபிடித்து பாராட்டுவார். அதை தொடர்ந்து அந்த தொழிலாளியின் மனமாறுதலையும் காட்டியிருப்பார்கள். அருமை. படத்தில் பார்த்த காட்சி அப்படியே நடந்தாக வேண்டுமெண்டு எந்த அவசியமுமில்லை. ஆனால் அத்தகைய சிறிய பாராட்டுகளை நாம் பரிமாறிகொண்டேதான் இருக்க வேண்டும். அதற்கான அவசியம் நிச்சயம் உண்டு. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்லுவார். "உன்னால் செய்ய முடியாததை செய்கிற எவரும் உன்னைவிட ஒருவகையில் உயர்ந்தர்வர்தான். ஆக உன்னால் முடிந்தவரை அவருக்குரிய மரியாதையை கொடு, முடிந்தால் அவர்களை பாராட்டி பேசு.இதனால் உனக்கு என்ன லாபம் என்பதைவிட உனக்கு என்ன கேடு வந்துவிடபோகிறது" என்று. அவர் எனக்கு சொல்லி கொடுத்த எல்லா விசயங்களும் மிகவும் சரியானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் என்னுடைய ஒவ்வொரு வயதிலும் நான் தான் அதன் கருத்தைஒவ்வொருமாதிரியாக மாதிரியாக புரிந்திருக்கிறேன்.ஏற்க்கனவே ஒருமுறை புத்தகத்தில் படித்தலிருந்து பழகும் யாரிடமும் அவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பதையே தொடர்ந்து வருகிறேன். முன்பே இதை பற்றி எழுதியிருக்கிறேன், முதலில் பெயரை சொல்லி அதன் பிறகு அவர்களின் உறவுகளையோ (முரளி அண்ணா, சேகர் மாமா) அல்லது நம்மை விட பொருளாதாரத்தில் குறைந்த, நமக்கு சேவகம் செய்கிறவர்களை உரிமையுடன் பெயர்சொல்லி அழைக்கும்போது அவர்களுக்கு அதில் ஓரி சிறிய சந்தோசம் கிடைக்கும். சம்பளம் கொடுப்பது என்பது எல்லோரும் செய்யக்கூடியதுதான், அதை கொடுக்கும்போது ஒரு சிறிய புன்னகையுடன் கொடுப்பதைபோல நம்மால் முடிந்தவரை மற்றவர்களிடம் சிறிய சிறிய சந்தோசங்களை பரிமாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை. இந்த வினாடியின் ஒற்றை சிரிப்புதான் உன்னை அடுத்த வினாடிக்கு ஆயத்தமாக்குகிறது. நான் இந்த பதிவை எழுதுவதற்கு கூட அதுபோன்ற சில காரணம்தான். ஒன்று நேற்று எங்களால் பணம் கொடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நண்பனை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன் அங்கே அந்த மருத்துவர் எங்களை மிகவும் பாராட்டினார். உண்மையிலேயே மிகவும் நல்ல விசயத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள், நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக அமைதியாக வாழ எனது வாழ்த்துகள் என்று சொன்னார். முதுகு தண்டு சில்லென்று ஆகி ஒரு நிமிடம் பறப்பதை போல உணர்ந்தேன். சரி நானும் இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்க இன்னொரு காரணம் கிடைத்து விட்டது. நான் அந்த அளவிற்கு சந்தோசப்பட்டேன், அவரின் அந்த ஓரிரு வார்த்தைக்காக.


இன்னொன்று நேற்று என்னுடைய பதிவை படித்து விட்டு (அனேகமாக அனைத்து பதிவையும் ) உடனே தொலைபேசியில் அழைத்து என்னை பாராட்டிய நண்பர் செல்வம். நான் இவ்வாறு ஒரு பதிவு எழுத தொடங்கியிருக்கிறேன், அதை படித்து விட்டு உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள் உங்களுடைய விமர்சங்கள் என்னை தொடர்ந்து எழுத செய்யும் உற்சாகத்தை கொடுக்கும் என்று என்னுடைய பல நண்பர்களுக்கு தெரிவித்திருந்தேன். இதுவரை அவர்கள் ஒரு பதிவையாவது படித்திருபார்களா என்பது சந்தேகம்தான். அப்படியிருக்க எதேட்ச்யாக எனது பதிவை படித்து உடனே கருத்தும் கொடுத்த நண்பர் செல்வத்திற்கு நன்றி. கட்டி அணைப்போம் சக மனிதர்களை, பாராட்டுவோம் அவர்களின் நற்செயலுக்காக, மன்னிப்போம் அவர்களின் தவறுகளை, நன்றி சொல்வோம் அவர்களின் உதவிக்காக. ஒவ்வொரு நொடிக்காகவும் வாழ பழகுங்கள், எனென்றால் வாழ்க்கை அவ்வளவு அழகானது.