ஆசிர்வாதம்

ஒரு முறை என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுடைய தேர்விற்காக எட்டிமடை சென்றிருந்தேன். அவன் உள்ளே தேர்வெழுதி கொண்டிருந்தான். கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் பதின்ம மைல்களில் உள்ளது அந்த பொறியியல் கல்லூரி. அவன் வர மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் அங்கே உள்ள காடுகளின் பக்கம் இறங்கி நடக்க தொடங்கினேன்.
அங்கே ஒரு ஹோட்டல் கடை நடத்தி வரும் ஒரு ஐம்பத்து வயது மதிக்கத்தக்க பெரியவரை சந்தித்தேன். ராணுவத்தில் பணிபுரிந்து தற்சமயம் ஓய்வு பெற்று இங்கே விவசாயம் செய்துவருவதாகவும், இது தன்னுடைய மருமகனுடைய கடை என்றும் சொன்னார். வேறு யார் நான் இந்த துறையில் இருக்கிறேன் என்று சொன்னாலும் உடனே என்னவாக இருக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்கும் எனக்கு ஏனோ நீங்கள் ராணுவத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்க தோன்றவில்லை.அவர் சுருட்டு பிடித்துகொண்டே என்னிடம் பேசி கொண்டிருந்தார். அவர் என்னிடம் பேசும்போது மிகவும் உரிமை எடுத்துகொண்டார் அல்லது எனக்கு அப்படி தோன்றியது. பேச்சினூடே என்னை அதிகம் புகைபிடிக்க வேண்டாமென்று சொன்னார். அப்போது சாலையில் ஏதோ விபத்து நடந்தது போல சப்தம் கேட்கவே இருவரும் விரைவாக அங்கு விரைந்தோம், அங்கே ஒரு சிறுவன் மீது கார் மோதி கேழே விழுந்திருந்தான். சிறிய காயம்தான், இவர் தனக்கு தெரிந்த பையன்தான் என்று என்னிடம் சொல்லிவிட்டு கார் ஒட்டிவந்தவரை கொஞ்சமாய் திட்டிவிட்டு சிறுவனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு டீ கடைக்கு வந்தார்.காயம் சிறிதாக இருந்தாலும் பையன் விந்தி விந்தி நடப்பதை பார்த்து விட்டு அவனதுஅம்மா கண்ணை கசக்கியபடியே வந்துகொண்டிருந்தார். அவனுக்கு அங்கே சிறிய முதலுதவிகளை செய்து கொண்டே என்னிடம் தொடர்ந்தார். " பாவம் தம்பி இவன், அப்பா போனதுக்கு அப்புறம் இப்படி வீடு வீடா பொய் பால் ஊத்தி பொழைக்கிறான். இவன் போக இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்குது, இவனுக்கு கீழ" என்றார். அதை ஆமோதிப்பது போல அவனது அம்மாவும் ஒருமாதிரியாக தலையை ஆட்டினார். அவனுக்கு ஒரு டீயும் பண்ணும் வாங்கி கொடுத்தார். பிறகு அதற்க்கு பணம் கொடுக்க போகும்போது, நான் கொடுக்கிறேன் என்று நான் தடுத்தேன். அவர் இவன் எனக்கு தெரிந்த பையன் நானே செய்கிறேன் என்று சொன்னார். இப்பொழுது இவனை உங்களுக்கு தெரிந்தவரை எனக்கும்தெரியும் எனவே நானே கொடுக்கிறேன் என்று முண்டியடித்து பணம் கொடுத்து விட்டு அப்படியே அந்த சிறுவனின் பயில் ஒரு நூறு ரூபாய் தாளை திணித்து விட்டு வந்தேன்.யாரோ புள்ளைக்கு இவ்வளோ செய்யிறயே, இந்த புண்ணியம் ஒனக்கு நிச்சயம் சேரும், தம்பீ! என்று அவர் சொன்னபோது அவர குரல் தளுதளுத்தது. அவனது அம்மாவும் கண் கலங்கியிருந்தார். எந்த அளவிற்கு அந்த சிறுவனை பற்றி அவர் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் இந்த சிறு உதவிக்கு அவர் கண்கலங்குகிறார் என்றால் அவர்களின் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும்,"இவனை உங்களுக்கு தெரிந்தவரை எனக்கும்தெரியும்" என்று பெரியவரிடம் சற்றுமுன் நான் சொன்னது எவ்வளவு பெரிய அபத்தம் என்று அப்போது உணர்ந்தேன்.

2 கருத்துரைகள்:

Karthikeyan G said...

நெகிழ்ச்சியான தருணங்கள்!! எழுத்திலும் உள்ளபடியே வந்துள்ளது.

Murali said...

நன்றி கார்த்திகேயன், தொடர்ந்து படியுங்கள் மற்றும் பின்னுட்டம் இடுங்கள்,
உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.