காலை ராகம்

மூன்று வருடங்களுக்கு முன்பு எதேட்சசயாக சேனலை திருப்பிகொண்டிருந்தபோது ஸ்டார் மூவீஸ் சேனலில் ஷபானா ஆஷ்மி மைக்கை பிடித்துக்கொண்டு "தாயே யசோதா" என்று பாடிக்கொண்டு இருந்தார். என்னையும் அறியாமல் எனது விரல்கள் ரிமொட்டிலிருந்து விலகிக்கொண்டன. ஓரிரு நிமிடங்களில் பாடலும் முடிந்தது படமும் முடிந்தது. மகாகனபதி என்று ஒரு பெண்குரல் ஒலிக்கஎழுத்துக்கள் மேல் நோக்கி நகரத்தொடங்கின. அருமையான இசையமைப்பு மற்றும் குரல் இன்னும் கேட்க்கவேண்டும் என்பதுபோல.


அது நான் உலகத்திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்த ஒரு சமயம். என்னுடைய நண்பர்கள் பலரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன் ஆனால் ஒருவரிடமும் ஓரு வழியாக தெளிவான தகவலே இல்லை. Torrent, Rapidshare இப்படி எந்த தல அறிமுகமும் இல்லாத சமயமாதலால் என்னால் அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கொஞ்சம் சினிமா இசை அறிவு உள்ளவர்களிடம் பேசும்போது தாயே யசோதா படலை பாடிக்காட்டி கேட்டதும் உண்டு. ஒரு வழியாக நண்பன் பெரி மூலமாக அது Morning Raaga என்கிற திரைப்படம் என்பதை அறிந்தேன். திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த ஆவல் அது கிடைக்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது, அனால் எப்பொழுது எந்த கேசட் கடைக்கு சென்றாலும் ஆடியோ கேசட் கிடைக்குமா என்று தேடிப்பார்ப்பது உண்டு. கடைசியாய் அருண் மூலமாக எனக்கு கிடைத்தது. அருமை.
கர்நாடக சங்கீதம் கேட்ப்பவர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கும், கர்நாடக இசையையும் மேற்க்கத்திய இசையையும் கலந்து "Fusion" இசையாக கொடுத்திருப்பார்கள் இசையமைப்பாளர்கள் மனிசர்மாவும்,


அமித்தும். பாடல்கள் கைக்கு கிடைத்த பலமாதங்களுக்கு என்னுடைய அலுவலகத்தை திறந்தவுடன் "காலைராகம்" தான். அதன் பிறகு அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை.

நேற்று என் நண்பருக்காக "On the Water Front" என்ற திரைப்படத்தை தேடிக்கொண்டிருந்தபோது தற்ச்செயலாக இந்த படத்தை பார்த்தேன். உடனே தரவிறக்கம் செய்து நேற்றுத்தான் முழுமையாக பார்த்தேன். நல்ல படமும் கூட. ராஜீவ் மேனனின் கேமரா அந்தகால ஆசியன் பெயின்ட், ஓல்ட் சிந்தால் விளம்பரங்களை நியாபகப்படுத்தின. சிவந்த மண்ணும் பச்சை பயிர்களும் நீல வானமும் அவரது கேமராவின் மூலமாக இன்னும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

அதிலும் top angle ஷாட்டில் காண்பிக்கும்அந்த வீடு அப்படியே எங்களது பூர்வீக வீட்டை நியாபகப்படுத்தியது. சுற்றிலும் ஓடுகள் வேயப்பட்ட சதுரவடிவ கூரையின் நடுவில் முத்தம், முத்தத்தின் நடுவே ஒரு துளசிமாடம் அதை ஒட்டிய ஒரு வேப்பமரம். சிறுவயதில் என்னுடைய இருகைகளாலும் கட்டி பிடிக்க முடியாதபடி பருத்திருக்கும் மரத்தூண்கள், மடக்கு கைகளோடு கூடிய நாற்காலிகள், பூஜை அறையின் முன்பாக நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் தம்புரா என எனது பால்ய நியாபகங்கள் அனைத்தையும் பசுமையாய் நினைவுகூர செய்த Morning Raaga.
பெருசா கதையெல்லாம் எதிர்பார்த்து போக வேண்டாம் அல்லது பார்க்க வேண்டாம். குளுமையான காட்சியமைப்பு இனிமையான இசை இப்படி மற்ற எந்த விசயமும் உங்களை ஏமாற்றாது, அவசியம் பாருங்கள் அல்லது கேளுங்கள்.


மற்ற சில டெக்னிக்கல சமாச்சாரங்கள்:

எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன் இயக்கம் - மகேஷ் தட்டாணி இசை - மணி சர்மா, "மாதே" மற்றும் "தாயே யசோதா" என இரண்டு பாடல்களையும் சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார்.

ஐயோ ராமா!

சென்ற வாரம் நண்பன் சக்திவேலிடமிருந்து ஒரு போன், "நண்பா உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்"
எனக்கு ஒன்னும் புரியவில்லை இருந்தாலும் "இதுக்கு என்னடா போன் பண்ணி அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு வாடான்னு சொன்னேன்"
"இல்லடா நீ சனிகிழமை பிருந்தாவன் பாருக்கு வந்திடு அங்க பேசிக்கலாம்"
"சரிடா எதுக்கும் நீ வரதுக்கு முன்னால எனக்கு ஒரு போன் பண்ணிடு. மறந்தாலும் மறந்திடுவேன்."
சக்தி, என்னுடைய பள்ளிபருவ நண்பன். ரொம்பவே மென்மையான மனம் கொண்டவன். அதிர்ந்து பேசக்கூட தெரியாதவன். அப்பொழுது எங்களோடு படித்தவர்களில் அவன்தான் நாள் நிறமாகவும் அழகாகவும் இருப்பான். சனிக்கிழமை அவன் கூப்பிடாமலே சரியாக சென்று விட்டேன். அழகா ஓராம சீட்ட புடிச்சு உட்காதிருந்தான்.
"மச்சான், மனசு சரியில்லை டா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு சொல்லிட்டு என்கிட்டே கேட்காமலேயே ரெண்டு பீர் ஆர்டர் பண்ணிட்ட்டு கேட்டான், "நீ சாப்டுவதான? "
"இல்லடா சக்தி இப்போ இல்லை. நீ சாப்பிடு"
இதுதான் நான் பண்ண தப்பு, எதோ பிரச்சனையில இருக்கான், பாவம், எதோ அவன் என்கிட்டே பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்குன்னு எதோ பேசிகிட்டு இருக்கான், அவன தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு அப்படீனு நினச்சு விட்டுட்டேன். ஆனா உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம், நாம தண்ணி போடாம தண்ணியடிச்சவன் பேசுறத கேட்க்குறதுதான்னு அன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன்.
வேற என்ன காதல் பிரச்சனைதான். அவ சரியில்ல, இப்படி சொன்னா, அப்படி சொன்னா, அப்படீன்னு ஒரே மாதிரி குறையா சொல்லிகிட்டு இருந்தான். அவனுக்கும் சரி அந்த பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் நிச்சயம் பிடித்திருந்ததாகவும், இனி ஒருபோதும் தன்னால் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு முன்னேற முடியாது என்று அவள் நினைப்பதாகவும் அதனால் இதுவரை என்னை காதலிக்கவே இல்லை என்று மறுப்பதாகவும் சொன்னான்.
"அதுசரி நீ நினைப்பது கிடக்கட்டும் அவள் உன்னிடம் எப்பொழுதாவது அப்படி சொன்னாளா"
"இல்லை"
" உண்மையில் உன்னை விரும்பியிருந்தால் அவள் இதை உன்னிடம்தான் முதலில் சொல்லியிருப்பாள். கவலைப்படாதே, அதெப்படிடா பழகும்போது இந்த குறைகள்ள ஒன்னு கூடவா உனக்கு தெரியாம போச்சு"
"மனசு விட்டு பழகும்போது, நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட இருக்கிற குறை நமக்கு தெரியறது இல்லை"
"சரி, இப்போ என்ன ஆச்சு? உங்க நெருக்கத்துக்கு?"
"அவதான ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டலேடா"
"ஏன்? என்னவாம் திடீர்ன்னு"
"எனக்கென்ன தெரியும், போன் பண்ணி தரேன் நீயே கேளுன்னு சொல்லி உடனே அந்த பெண்ணுக்கு போன் பண்ணிட்டான். இது என்னடா வம்பா போச்சுன்னு நான் சிங்கிளா பீல் பண்ணி முடிக்கிறதுக்குள்ள போன என் கைல குடுத்துட்டான்.
சரி, இரு நான் பேசிட்டு வரேன்னு சொல்லி, போன எடுத்துட்டு வெளியில வந்தேன்.
"என்ன சுபா பிரச்சனை உங்களுக்குள்ள?"
"ஒ, இன்னைக்கு நீங்களோ? பாவம்ன்னா நீங்க. அந்த லூசுக்கு இதே வேலையா போச்சு, நான் பண்ண வேண்டியதஎல்லாம் அவன் பண்ணிக்கிட்டு இருக்கான் னா, ஆ ஊன்னா கோவிச்சிகிறான், எதுவும் சொல்ல கூடாது, அப்படி சொன்னா, இந்த பொண்ணுகளே இப்பிடித்தான்னு சினிமா வசனமெல்லாம் பேசுறான், எப்படின்னா இதெயெல்லாம் சமாளிக்கிறீங்க? உண்மையிலேயே நீங்க கிரேட் னா"
"அட பாவிகளா! உங்க பஞ்சாயத்துக்கு என்ன ஊருகாயாக்கி விளையாடறீங்களா?""என்னமோ பண்ணுங்க, நல்ல இருந்தா சரி" சொல்லி போனை வச்சிட்டு உள்ளே போனேன்.
இன்னும் ரெண்டு பீரை ஆர்டர் பண்ணிவைத்துவிட்டு, ரெண்டு பீரையும் காலி பண்ணிட்டு நல்ல புள்ளமாதிரி உக்காந்திருந்தான்.
"பேசினியா? "
"பேசிட்டேன்"
"என்ன சொன்னா?"
".... ... ..."
" என்னடா சொன்னா?"
"ம்ம்ம் ...."
"ஏண்டா சக்தி இது உனக்கே நியாமா? சனிக்கிழமையும் அதுவுமா, இருக்கிற ஆயிரத்தெட்டு வேலைய உட்டுட்டு என்னமோ நீ கூப்பிட்டியேன்னு வந்தா, நீஎன்னடான்ன ஊத்திகித்த உளறிக்கிட்டு இருக்க, அவ என்னடானா போன்னா, போயி வேல ஏதாவது இருந்தா பாருங்கன்ரா"
"என்ன பார்த்தா எப்படிடா இருக்கு"
"அப்படியா சொன்னா"
ஒருவழியா எல்லா கருமத்தையும் குடிச்சிட்டு கிட்டத்தட்ட அவனை தூக்கிகிட்டு வராத குறையா வெளிய வந்திட்டு இருந்தேன். நல்ல நேரமா பார்த்து என்னுடைய கஸ்டமர் ஒருவர் அங்கே வர " என்ன சார் இந்நேரத்திலயேவான்னு கேட்டார். சக்திய மனசுல திட்டிகிட்டே அவரை பார்த்தது ஹி ன்னு அசிங்கமா ஒரு சிரிப்பு சிரிச்சிகிட்டு வெளிய வரேன்.

சொன்ன நம்ப மாட்டிங்க, பக்கத்துல ஒரு பையனோட மொபைல வந்த ரிங் டோன் "ஐயோ ராமா, இந்தமாதிரி கழிசட பசங்களோட என்ன ஏன் கூட்டு சேர வைக்குற"
என்னால அடக்க முடியாம சிரிச்சிட்டேன்.