பூனைகள் இல்லாத வீடு


பூனைகளை இல்லாத வீடு
ஆசிரியர் - சந்திரா
உயிர்மை பதிப்பகம்.
விலை - ரூ.60/-


அனேகமாக இது ஆசிரியரின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் உள்ள கதைகள் காலச்சுவடு, அணங்கு, அம்ருதா, அவள் விகடன், ஆனந்த விகடன் மற்றும் சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் முன்னமே வெளிவந்ததவை. அவற்றை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வரிசைப்படுத்தலோடு உயிர்மை பதிப்பகம் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. புளியம்பூ, திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள், பூனைகள் இல்லாத வீடு, கிழவி நாச்சி, அத்துவானகாட்டு எருமைகளும் அசிஸ்டன்ட் டைரக்டரும், பூச்சி, தோழர்கள் கடத்தல்காரர்கள் ஆன கதை மற்றும் ராஜா, ராணி, ஜோக்கர் ஆகிய பதினோரு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு.ஆசிரியர் சந்திரா, 1
977 ஆம் ஆண்டு, தேனீ மாவட்டம் கூடலூரில் பிறந்தவர். 1999 திலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை ஆறாம் திணை, குமுதம், அவள்விகடன் ஆகிய இதழ்களில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார், தற்ப்போது இயக்குனர் அமீர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.


இவருடைய
கதைகள் பெரும்பாலும் கிராமத்தையும் கிராமத்து சிறார்களையும் அவர்கள் சுற்றியலைந்த கிராம வீதிகளியே பின்தொடர்கிறது. ஆசிரியர் அவரது அணிந்துரையில் கூட இது கற்ப்பனைக் கதைகள் அல்ல பெரும்பாலும் சிறுவயதில் கேட்ட பார்த்த மனிதர்களின் கதை என்று குறிப்பிடுகிறார். மனிதர்களின் வாசனைகள், காட்ச்சிகள், உரையாடல்கள் என விரியும் இக்கதைகள் துல்லியமான புறவுலகச் சித்தரிப்புகள் கொண்டவை.இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் அருமை. இதில் என்னை மிகவும் கவர்ந்த சில கதைகளை பற்றி ஒரு சிறிய பகிர்வுடன் எழுதியிருக்கிறேன்.

புளியம்பூ - எவ்வளவு பேசினாலும், சொன்னாலும், கேட்டாலும், படித்தாலும், எழுதினாலும் அழுக்காது அப்பா வாசனை, இந்த கதையில் வரும் அப்பாவின் சுவாசத்தில் புளியம்பூ வாசனை. இதுதான் தான் எழுதிய முதல் கதை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். முதல் கதை என்று நம்ப முடியாத அளவிற்கு அருமையான எழுத்துநடை.

திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள் - ஏழாவது முடித்து எட்டாவது செல்லும் சிறுமியின் பார்வையில் சொல்லப்பட்ட கதை. எப்போது படித்தாலும் அழகிய வாசிப்பனுபவத்தை கொடுப்பது பள்ளிபருவம் பற்றிய கதைகள். அப்படிப்பட்ட கதையை படிக்கும்போது நாம் வேகமாக கடந்துவந்துவிட்ட அந்த வாழ்வின் அழகான பக்கங்களை நிதானமாக திரும்ப படித்த அனுபவத்தை கொடுப்பது எழுத்தாளர்களின் வெற்றி. இதில் சந்திரா வெற்றி பெற்றிருக்கிறார்.

பூச்சி - உயர உயர பறந்தாலும் ஊர்குருவி பருந்தாகாது, ஆனால் பருந்தின் உயரத்தை இலக்கை அடைந்திருக்க வேண்டிய ஒரு குருவியின் அவலமான கதை. பசங்க படத்தில் வருகிற "கைதட்டல்" என்கிற அழகான ஒருவிசயம் நினைவில் வருகிறது. எத்துனை பேர் எத்தனை இடங்களில் மனமுவந்து கைதட்டியிருக்கிறோம், கைதட்டுவது என்பது வெறும் இரு கைகளிலிருந்து வெளிவரும் ஓசை மட்டுமல்ல, இருகை கொடுத்து ஒருவரை மேலே ஏற்றிவிடுவது, நான் உன்னை கவனித்டுகொண்டுதான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு புரியவைப்பது. அப்படிப்பட்ட ஒரு கவனிப்பற்ற பாராட்டுக்கு ஏங்கி மனமுடைந்த பூச்சி என்கிற சிறுவனின் கதை. நான் சுமார் 12 வருடங்களாக பார்த்து வரும் போரிவிர்க்கும் கிழவி நினைவில் வந்து போனார்கள்.

பூனைகள் இல்லாத வீடு - ஒரு சிறுவன் இளைஞனாகும் வரை வெவ்வேறு காலகட்டங்களில் நகரும் கதை. ரெண்டு அக்கா, அண்ணன், நன்றாக வாழ்ந்து கேட்ட குடும்பத்தில் வேலைக்கு போகாவிட்டாலும் நல்ல அப்பா, அன்பின் வடிவமாய் அம்மா, என இக்கதையின் பாத்திரங்கள் எல்லாமே மிகவும் பாசிட்டிவான கதாபத்திரங்கள். எல்லாமே நல்லா நடந்தாலும் ஒரு மெல்லிய சோகம் கதை முழுவதும் விரவியிருக்கிறது. ஆண்பிள்ளைக்கும் அம்மாவிற்கும் இடையிலான அதிகம் சொல்லப்படாத அன்பு இந்த கதை முழுவது இழையோடுகிறது.

இன்னும் இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளும் பால்ய நினைவுகளையும் அதில் நாம் சந்தித்த சின்ன சின்ன சந்தோசகளையும் சோகங்களையும் நம் இதயத்தில் இதமாக மீட்டி விடுகின்றன. நன்றி சந்திரா.

ஒரு கல், ஒரு குளம், ஒரு தண்ணீர் வளையம்

மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் காரணமாக மனபிறழ்வு ஏற்பட்டிருந்த கல்லூரி நண்பனை கேரளாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தோம் இப்பொழுது அவனுக்கு அதிகபட்ச்ச சிகிட்ச்சை கொடுக்கப்பட்டு 90 சதவிகிதம் குணமடைந்து இருக்கிறான். இன்னும் அவனை ஒரு சில மாதங்கள் வெளியுலக நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படுத்தி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தால் முழுவதும் குணமடைந்து விடுவான் என்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று அவனை திரும்ப அழைத்து வர திட்டமிட்டிருந்தோம் .

அவனை அழைத்து வரவேண்டி நண்பர்களுடன் கேரளாவிலுள்ள ஸ்கேர்ட் ஹார்ட் ஹாஸ்பிட்டல் சென்றிருந்தோம். அவனை ஒரு சுற்றுலா செல்வதாக சொல்லி அங்கே அழைத்துச் சென்று விட்டுவிட்டு வரும்போது இருந்த இறுக்கம் குறைந்திருந்தது. காரணம், அவன் இப்பொழுது குணமடைந்துவிட்டான் என்பதே.

எனவே அவனை திரும்ப அழைத்து வருகிற இந்த நேரத்திலாவது உண்மையாகவே அவனை எங்காவது அழைத்து செல்ல விரும்பினோம். ஆகவே இந்த முறை எல்லோரும் ஒருவித சந்தோசத்துடனே இருந்தோம். அவனை பார்ப்பதற்காக அவன் தங்கியிருந்த வார்டிற்கு சென்றோம். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக சரிவர சாப்பிடாத காரணத்தால் இளைத்திருந்த தேகம் இப்பொழுது சற்று எடை கூடி பொலிவுடன் இருந்தான் முன்பை விட நல்ல தெளிவு, அவன் பேச்சிலும் சரி, முகத்திலும் சரி. எல்லோருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது இடையிடையே ஒருவர் கதவை திறப்பதும் எட்டி பார்ப்பதுமாக இருந்தார். அவர் அப்படி வந்துபோவது அங்களுக்கு இடையூறாக இருந்ததால் எழுந்து கதவை தாழிட முயன்றபோது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து விட்டார். நல்ல ஆஜானுபாகுவான 26 -28 வயது மதிக்கத்தக்க இளைஞன், பேனா கொடுக்க முடியுமா? என்று கேட்டார். நான் என் பேனாவை கொடுத்ததும் தனது கையில் கொண்டுவந்திருந்த ஒரு சிறிய காகிதத்தில் ஒரு போன் நம்பரை அவசர அவசரமாக எழுதி திணித்தார். இது என்னுடைய மாமாவின் போன் நம்பர், என்னை இங்கே கொண்டுவந்து விட்டு ஏழு மாதங்கள் ஆகிறது இதுவரையில் என்னை யாரும் வந்து பார்க்கவும் இல்லை, கூட்டிபோகவும் இல்லை. நீங்கள் வெளியே போனபின் இவரிடம் பேசி என்னை கூட்டிபோக சொல்லுங்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன், எனக்கு ஒன்றுமில்லை என்று கெஞ்சினார்.


நீங்கள் தமிழ்நாடுதானே, எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் Please, DO it for Me என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு சென்று விட்டார். மலையாளியான அவர் நாங்கள் தமிழர்கள் என்று புரிந்து கொண்டு அவருக்கு தெரிந்த தமிழில் இத்தனையும் சொல்லிட்டு போனார்.

அவர் சென்ற பிறகுதான் எங்களால் யோசிக்கவே முடிந்தது.
"பாவண்டா, கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டானுக போல"
"சே கண்டிப்பா இந்த ஆளு முழுவதும் குணமடைந்து விட்டான்"
"பாரு நாம தமிழ்ன்னவுடனே புரிஞ்சிகிட்டு எனக்கு தமிழ் பிடிக்குன்னு சொல்றான் கண்டிப்பா இவ்வளோ குயிக்கா யோசிக்கிறதா பார்த்த, சரியாயிட்டான்னு தோனுது"
"கண்டிப்பா போன பண்ணணும்" என்று சொல்லிகொண்டோம்.


கொண்டா இப்பவே பண்ணலாம்ன்னு சொல்லி போனை வாங்கி அந்த நம்பரை தொடர்புகொண்டோம். நீங்கள் ஹாரூன்தானே என்று கேட்டு முடிக்கவில்லை, மீண்டும் கதவு திறந்து கொண்டது மாமாவா? என்று கேட்டபடியே என் போனை வாங்கி பேச ஆரம்பித்து விட்டார். முழுக்க மலையாளம். குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே பேசினார், அவர் நடையிலிருந்தே அவருடைய பதற்றத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

"எனக்கு வேற யாரையும் தெரியலை, மாமா"
"விட்டு போயி ஏழு மாசமாச்சு மாமா"
"நான் நல்லா இருக்கேன் மாமா"
"ப்ளீஸ் என்னை வந்து கூட்டிட்டு போங்க மாமா"
இதை சொல்லும்போது அவர் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தார். வேறு யாருடைய உதவியும் தேவையாயில்லை எனக்கு அவர் பேசிய மலையாளம் எனக்கு புரிந்தது . அதுவரையில் உட்க்கார்ந்து அவரையே பார்த்துகொண்டிருந்த என்னால் அதற்க்கு மேல் உட்க்கார முடியவில்லை. எழுந்து அவரது இரு தோள்களையும் அதரவாக பற்றிக்கொண்டேன். என்னதான் அவர்மீது பரிவு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டேதான் இருந்தது.

வேறு டாக்டர்கள் யாரவது பார்த்தால் வம்பாகி போய் விடும் என்பதால் அவரிடமிருந்து மனமில்லாமல் போனை கிட்டத்தட்ட பிடுங்கவேண்டிய நிலைமை. போனை அவரிடமிருந்து வாங்கி அவரின் மாமாவிடம் பேசினோம்,
அவர் "எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது"
"அவன் கொஞ்சம் மனநிலை சரியில்லாமல் இருந்தான்"
"ஆனால் இங்க கொண்டுவது சேர்த்தியது பற்றி எனக்கு தெரியாது"
"அந்த ஹாஸ்பிட்டல் எப்படி?"
நல்லா கவனிச்சிப்பாங்களா?"
"இந்த ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு" என்று வரிசையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

ஒன்னும் கவலைப்படாதீங்க, நாங்க கூட எங்களோட நண்பனை இங்கே சேர்த்து இப்போது குணமடைந்து அவனை அழைத்துசெல்லவே இங்கே வந்திருக்கிறோம். அதனால் நீங்க கவலைப்பட ஒன்றுமில்லை. முடிந்தவரை இவரை சீக்கிரம் அழைத்துசெல்ல முயற்சி செய்யுங்கள். என்று போனை வைத்தோம்.

நாங்கள் அவருக்கு அதரவாக பேசுகிறோம் என்பத புரிந்துகொண்டவராய் மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் கைககளை கட்டிக்கொண்டு நாங்கள் பேசுவதையே கவனித்துகொண்டிருந்த அவர் நான் போனை வைத்ததும் "ரொம்ப நன்றி ஸார்" என்று என் கைகளை பற்றி முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

முதலில் எங்களது நண்பனை விட்டுசென்றபோது இருந்த இறுக்கம் இப்போதும் நிலவியது. அவர் சென்ற பிறகும் கூட எங்களால் சிறிது நேரத்திற்கு எதுவுமே பேசமுடியவில்லை. அவர் போன திசையையே பர்த்துகொண்டிருந்தோம். மௌனம் கலைந்தபின் நண்பனை ஏறிட்டு பார்க்கவே ஒரு வித குற்றஉணர்ச்சி தடுத்தது.

இவன் கூட நாம் விட்டு விட்டு சென்ற பிறகு இப்படித்தானே நினைத்திருப்பான், புலம்பியிருப்பான் என்று.

எல்லாம் முடிந்து ஐந்து மணிநேர பிரயாணத்திற்கு பிறகு திருப்பூர் வந்து சேர்ந்த பிறகு நண்பர்களிடம் இது பற்றி பேசிகொண்டிருந்தபோது மது சொன்னான் "கேரளாவில் இது சகஜம்டா, சொத்துக்காக, பழிவங்குவதர்க்காக எப்படி எத்தனையோ காரணங்கள் உண்டு, அப்பா அம்மா செத்துபோயிருப்பாங்க, சொத்துக்காக சொந்தகாரன்களே இப்படி பைத்தியம் அது இதுன்னு சொல்லி சேர்த்துவிட்டு போயிடுவாங்க, இதுபோல நிறைய விஷயம் இருக்கு டா, விடு" என்றான்.

சாதாரணமாய் விடுவதற்கு அவ்வளவு எளிதானதாய் இல்லை அவனது நினைவுகளும், அழுகையும். இன்னமும் கேட்கிறது அவனது அழுகையினூடே பேசிய "எனக்கு ஆரையும் அறிஞ்சிட்டில்லா மாமா, சீக்கிரம் வன்னு கூட்டிபோ மாமா" . அவன் செய்துவிட்டு போன ஈரம் இன்னமும் காயாமல் என் கைகளில்.

குளத்தில் எறிகிற கல் பலநூறு வளையங்களை ஏற்படுத்தினாலும் ஒரு வளையத்தை போல இன்னொன்று இருப்பதில்லை. சின்ன விசயம்தான், எப்படியும் ஒருசில நாட்களில் இதையும் மறக்கத்தான் போகிறேன். இருந்தாலும் இந்த கல் ஏற்ப்படுத்திய அதிர்வுகளில் இன்னமும் கலங்கித்தான் போயிருக்கிறது என் குளம்.

குளிர் 100 டிகிரி

வெள்ளிகிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் எப்படியும் ஏதாவதொரு படத்தை பார்த்தே ஆவனும்ன்கிறது எங்களை பொறுத்தமட்டிலும் எழுதப்படாத விதி. இதுவரை கேபிள் சங்கரே பார்த்திடாத அல்லது கேபிளாரிடமிருந்தே விமர்சனம் வராத "ஆடாத ஆட்டமெல்லாம்" போன்ற காவியங்களெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம். விதி என்ன செய்யிறது, எங்களுக்கு பொழுதுபோக்குன்னா சினிமாவைத்தவிர வேற ஒன்னும் தெரியாது, இதுவும் முழுக்க முழுக்க எங்க தப்பு இல்ல. ஊரு அப்புடி.

அப்படி எப்பொழுதும்போல போஸ்டரை பார்த்து சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட இன்னொரு திரைக்காவியம் தான் இந்த குளிர், இந்த குளிரின் அனுபவம்.

முதலில் படத்தின் பிளஸ் பாயின்ட்
குளிர் 100 டிகிரி, அருமையான கேமரா, ஒளிப்பதிவு. ஒரு சில கோணங்களும் ஒளிப்பதிவும் கண்ணைவிட்டு அகல மறுக்கிறது. கேமிரா யாரென்று தெரியவில்லை ஆனாலும் சுற்றி போட்டுக்கொள்ளுங்கள். கண்பட போகிறது.

இனி மைனஸ் பாயின்ட்
அனேகமாக ஒளிப்பதிவைத்தவிட அனைத்தும்

இனி கதை
காதல் திருமணம் செய்துகொண்டு மனக்சப்பில் பிரிந்து வாழும் I.A.S. படிக்கும் தாயுடன் வாழும் ஹீரோ. ஒரு ஒரு பதினோராவது படிக்கும்பையன், தன்னுடைய ஆசிரியர் தப்பு செய்தாலே அவரை கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு நல்லவன்!.அவனுக்கு ஒரு ரௌடி தந்தை, இவரிடமிருந்துதான் தனக்கு இந்த கொலைக்குகூட முயலும் தைரியம் வந்ததாக சுய அறிமுகத்தோடு Hero Introduction. ஹீரோவின் முகத்தை போரடிக்காமல் பார்க்க முடிகிறது மற்றபடி நடிக்கவும் முயற்சி செய்கிறார்.
அதனால் தன கணவன் பார்வையிலிருந்து மகனை விலகியிருக்க செய்ய மகனை ஒரு மலைபிரதேச கான்வென்ட் பள்ளியில் சேர்த்து விடுகிறார்.


அங்கே ஒரு அழகான ஆங்கிலேயர் காலத்து கட்டிடம், பள்ளிக்கூடம். சீனியர்கள் ஸ்டுடண்ட் கவுன்சில் என்கிற பேரில் செய்கிற ராகிங், அதை பிடிக்காத ஹீரோ, துணைக்கு அப்பாவியாய் வந்து செத்து போகும் ஒரு குண்டு நண்பன், எதற்கு என்று தெரியாமலேயே உலாவும் ஒரு பிரின்சிபால், அவரது அப்பாவி மனைவி. இப்படி ஒரு பத்து பேரை வைத்துக்கொண்டு கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.


ஹீரோ ஹீரோயின் சேர்ந்திருக்கும் காட்சியை பார்க்கும்பொழுது படத்தில் வரும் குண்டுப்பையன் சொல்லுவான் "எப்படிடா நீ...... அவளோட.... நான் வேணா நல்ல நாட்டுக்கட்டையை பார்த்து இன்ட்ரோ குடுக்குறேன், அவளோட உன்னை சேர்ந்து பார்த்தா உவ்வே எனக்கு வாமிட்டா வருது" என்று. படம் பார்க்கும் நமக்கும் அதே கதிதான். எல்லா தமிழ் படங்களிலும் ஹீரோயினை கிட்டத்தட்ட "லூசு" மாதிரியே சித்தரித்திருப்பார்கள். இந்த படத்திலும் இது விதிவிலக்கல்ல, ஆனால் என்ன வித்தியாசம் என்றால் இதில் படம் முழுக்க அவளை அனைவரும் "லூசு" என்றே சொல்கிறார்கள். இறுதியாய் அந்த பெண்ணே "லூசுதான்" என்று இயக்குனரும் certificate கொடுக்கிறார்.


அதே போல பாடல்கள் என்கிற பெயரில் ஒரே சப்த்தம். இரைச்சல். "போபோ" சசி -. ஹிப் ஹாப் இசையில் தேர்ந்தவர் போலும் அதற்காவே எல்லா பாடல்களின் இடையிலும் முரட்டு குரலில் தொனதொனவென ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த பாடலும் ஒரு வரியைத்தவிர மனதில் பதியவில்லை.

மூன்று சீனியர் மாணவர்களை அவர்களின் கொட்டத்தை அடக்க ஹீரோவை அசிஸ்டன்ட் ஸ்கூல் லீடராக தேர்தலில் வெற்றிபெற செய்த்த குண்டுப்பையன் பப்லுவை கொலை செய்கிறார்கள், அந்த மூவரும். அதை தற்செயலாக தெரிந்து கொண்ட ஹீரோ அவர்களை மூவரையும் கொலை செய்கிறான். நண்பனை கொன்ற மூவரையும் ஆதாரம் இல்லாமல் தீர்த்துகட்டிவிட்டு வெற்றியோடு வீடு திரும்பும் ஹீரோவிற்கு அதிர்ச்சியாய் அவனது அம்மா இறந்த செய்தி காத்திருக்கிறது. அவ்வளவுதான் படமும் முடிந்தது.


இதனால் இயக்குனர் சொல்ல வருகிற கதை என்னவென்றால், தன்னுடைய தாய் ஆக்சிடெண்டில் இறந்து போக வேண்டுமென்றால் மகன் மூன்று கொலை செய்ய வேண்டும்.அல்லது, தந்தையின் ஆத்திரத்தை ரத்தத்திலேயே கொண்ட மகன் திருந்த வேண்டுமென்றால் I.A.S படிக்கும் தாய் செத்தே ஆக வேண்டும்.
அல்லது, ஒரு வேலை இப்படி இருக்கலாமோ? இல்லை ஒரு வேலை அப்படி இருக்கலாமோ?

வேற என்ன பண்றது இல்லாத கதையை எங்க போயி தேடுறது.
குளிர் மொத்தத்தில் மொக்கை வெயில்