ஒரு கல், ஒரு குளம், ஒரு தண்ணீர் வளையம்

மன அழுத்தம் அல்லது மன உளைச்சல் காரணமாக மனபிறழ்வு ஏற்பட்டிருந்த கல்லூரி நண்பனை கேரளாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தோம் இப்பொழுது அவனுக்கு அதிகபட்ச்ச சிகிட்ச்சை கொடுக்கப்பட்டு 90 சதவிகிதம் குணமடைந்து இருக்கிறான். இன்னும் அவனை ஒரு சில மாதங்கள் வெளியுலக நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படுத்தி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தால் முழுவதும் குணமடைந்து விடுவான் என்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று அவனை திரும்ப அழைத்து வர திட்டமிட்டிருந்தோம் .

அவனை அழைத்து வரவேண்டி நண்பர்களுடன் கேரளாவிலுள்ள ஸ்கேர்ட் ஹார்ட் ஹாஸ்பிட்டல் சென்றிருந்தோம். அவனை ஒரு சுற்றுலா செல்வதாக சொல்லி அங்கே அழைத்துச் சென்று விட்டுவிட்டு வரும்போது இருந்த இறுக்கம் குறைந்திருந்தது. காரணம், அவன் இப்பொழுது குணமடைந்துவிட்டான் என்பதே.

எனவே அவனை திரும்ப அழைத்து வருகிற இந்த நேரத்திலாவது உண்மையாகவே அவனை எங்காவது அழைத்து செல்ல விரும்பினோம். ஆகவே இந்த முறை எல்லோரும் ஒருவித சந்தோசத்துடனே இருந்தோம். அவனை பார்ப்பதற்காக அவன் தங்கியிருந்த வார்டிற்கு சென்றோம். கடந்த ஐந்து ஆறு வருடங்களாக சரிவர சாப்பிடாத காரணத்தால் இளைத்திருந்த தேகம் இப்பொழுது சற்று எடை கூடி பொலிவுடன் இருந்தான் முன்பை விட நல்ல தெளிவு, அவன் பேச்சிலும் சரி, முகத்திலும் சரி. எல்லோருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தான்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது இடையிடையே ஒருவர் கதவை திறப்பதும் எட்டி பார்ப்பதுமாக இருந்தார். அவர் அப்படி வந்துபோவது அங்களுக்கு இடையூறாக இருந்ததால் எழுந்து கதவை தாழிட முயன்றபோது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்து விட்டார். நல்ல ஆஜானுபாகுவான 26 -28 வயது மதிக்கத்தக்க இளைஞன், பேனா கொடுக்க முடியுமா? என்று கேட்டார். நான் என் பேனாவை கொடுத்ததும் தனது கையில் கொண்டுவந்திருந்த ஒரு சிறிய காகிதத்தில் ஒரு போன் நம்பரை அவசர அவசரமாக எழுதி திணித்தார். இது என்னுடைய மாமாவின் போன் நம்பர், என்னை இங்கே கொண்டுவந்து விட்டு ஏழு மாதங்கள் ஆகிறது இதுவரையில் என்னை யாரும் வந்து பார்க்கவும் இல்லை, கூட்டிபோகவும் இல்லை. நீங்கள் வெளியே போனபின் இவரிடம் பேசி என்னை கூட்டிபோக சொல்லுங்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன், எனக்கு ஒன்றுமில்லை என்று கெஞ்சினார்.


நீங்கள் தமிழ்நாடுதானே, எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் Please, DO it for Me என்று சொல்லிவிட்டு கதவை சாத்திவிட்டு சென்று விட்டார். மலையாளியான அவர் நாங்கள் தமிழர்கள் என்று புரிந்து கொண்டு அவருக்கு தெரிந்த தமிழில் இத்தனையும் சொல்லிட்டு போனார்.

அவர் சென்ற பிறகுதான் எங்களால் யோசிக்கவே முடிந்தது.
"பாவண்டா, கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டானுக போல"
"சே கண்டிப்பா இந்த ஆளு முழுவதும் குணமடைந்து விட்டான்"
"பாரு நாம தமிழ்ன்னவுடனே புரிஞ்சிகிட்டு எனக்கு தமிழ் பிடிக்குன்னு சொல்றான் கண்டிப்பா இவ்வளோ குயிக்கா யோசிக்கிறதா பார்த்த, சரியாயிட்டான்னு தோனுது"
"கண்டிப்பா போன பண்ணணும்" என்று சொல்லிகொண்டோம்.


கொண்டா இப்பவே பண்ணலாம்ன்னு சொல்லி போனை வாங்கி அந்த நம்பரை தொடர்புகொண்டோம். நீங்கள் ஹாரூன்தானே என்று கேட்டு முடிக்கவில்லை, மீண்டும் கதவு திறந்து கொண்டது மாமாவா? என்று கேட்டபடியே என் போனை வாங்கி பேச ஆரம்பித்து விட்டார். முழுக்க மலையாளம். குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே பேசினார், அவர் நடையிலிருந்தே அவருடைய பதற்றத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

"எனக்கு வேற யாரையும் தெரியலை, மாமா"
"விட்டு போயி ஏழு மாசமாச்சு மாமா"
"நான் நல்லா இருக்கேன் மாமா"
"ப்ளீஸ் என்னை வந்து கூட்டிட்டு போங்க மாமா"
இதை சொல்லும்போது அவர் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தார். வேறு யாருடைய உதவியும் தேவையாயில்லை எனக்கு அவர் பேசிய மலையாளம் எனக்கு புரிந்தது . அதுவரையில் உட்க்கார்ந்து அவரையே பார்த்துகொண்டிருந்த என்னால் அதற்க்கு மேல் உட்க்கார முடியவில்லை. எழுந்து அவரது இரு தோள்களையும் அதரவாக பற்றிக்கொண்டேன். என்னதான் அவர்மீது பரிவு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டேதான் இருந்தது.

வேறு டாக்டர்கள் யாரவது பார்த்தால் வம்பாகி போய் விடும் என்பதால் அவரிடமிருந்து மனமில்லாமல் போனை கிட்டத்தட்ட பிடுங்கவேண்டிய நிலைமை. போனை அவரிடமிருந்து வாங்கி அவரின் மாமாவிடம் பேசினோம்,
அவர் "எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது"
"அவன் கொஞ்சம் மனநிலை சரியில்லாமல் இருந்தான்"
"ஆனால் இங்க கொண்டுவது சேர்த்தியது பற்றி எனக்கு தெரியாது"
"அந்த ஹாஸ்பிட்டல் எப்படி?"
நல்லா கவனிச்சிப்பாங்களா?"
"இந்த ஹாஸ்பிட்டல் எங்க இருக்கு" என்று வரிசையாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

ஒன்னும் கவலைப்படாதீங்க, நாங்க கூட எங்களோட நண்பனை இங்கே சேர்த்து இப்போது குணமடைந்து அவனை அழைத்துசெல்லவே இங்கே வந்திருக்கிறோம். அதனால் நீங்க கவலைப்பட ஒன்றுமில்லை. முடிந்தவரை இவரை சீக்கிரம் அழைத்துசெல்ல முயற்சி செய்யுங்கள். என்று போனை வைத்தோம்.

நாங்கள் அவருக்கு அதரவாக பேசுகிறோம் என்பத புரிந்துகொண்டவராய் மிகுந்த நன்றியுணர்ச்சியுடன் கைககளை கட்டிக்கொண்டு நாங்கள் பேசுவதையே கவனித்துகொண்டிருந்த அவர் நான் போனை வைத்ததும் "ரொம்ப நன்றி ஸார்" என்று என் கைகளை பற்றி முத்தம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.

முதலில் எங்களது நண்பனை விட்டுசென்றபோது இருந்த இறுக்கம் இப்போதும் நிலவியது. அவர் சென்ற பிறகும் கூட எங்களால் சிறிது நேரத்திற்கு எதுவுமே பேசமுடியவில்லை. அவர் போன திசையையே பர்த்துகொண்டிருந்தோம். மௌனம் கலைந்தபின் நண்பனை ஏறிட்டு பார்க்கவே ஒரு வித குற்றஉணர்ச்சி தடுத்தது.

இவன் கூட நாம் விட்டு விட்டு சென்ற பிறகு இப்படித்தானே நினைத்திருப்பான், புலம்பியிருப்பான் என்று.

எல்லாம் முடிந்து ஐந்து மணிநேர பிரயாணத்திற்கு பிறகு திருப்பூர் வந்து சேர்ந்த பிறகு நண்பர்களிடம் இது பற்றி பேசிகொண்டிருந்தபோது மது சொன்னான் "கேரளாவில் இது சகஜம்டா, சொத்துக்காக, பழிவங்குவதர்க்காக எப்படி எத்தனையோ காரணங்கள் உண்டு, அப்பா அம்மா செத்துபோயிருப்பாங்க, சொத்துக்காக சொந்தகாரன்களே இப்படி பைத்தியம் அது இதுன்னு சொல்லி சேர்த்துவிட்டு போயிடுவாங்க, இதுபோல நிறைய விஷயம் இருக்கு டா, விடு" என்றான்.

சாதாரணமாய் விடுவதற்கு அவ்வளவு எளிதானதாய் இல்லை அவனது நினைவுகளும், அழுகையும். இன்னமும் கேட்கிறது அவனது அழுகையினூடே பேசிய "எனக்கு ஆரையும் அறிஞ்சிட்டில்லா மாமா, சீக்கிரம் வன்னு கூட்டிபோ மாமா" . அவன் செய்துவிட்டு போன ஈரம் இன்னமும் காயாமல் என் கைகளில்.

குளத்தில் எறிகிற கல் பலநூறு வளையங்களை ஏற்படுத்தினாலும் ஒரு வளையத்தை போல இன்னொன்று இருப்பதில்லை. சின்ன விசயம்தான், எப்படியும் ஒருசில நாட்களில் இதையும் மறக்கத்தான் போகிறேன். இருந்தாலும் இந்த கல் ஏற்ப்படுத்திய அதிர்வுகளில் இன்னமும் கலங்கித்தான் போயிருக்கிறது என் குளம்.

4 கருத்துரைகள்:

Sindhan R said...

எழுத்து நடை அருமையாக இருக்கிறது ...

நண்பகலுக்குள் இப்பை ஒரு ஒற்றுமை கிடைப்பது அபூர்வம் .. மன நிலை பாதிக்கப்பட்ட பிறகும் உங்களின் நண்பர் மீது நீங்கள் காட்டியுள்ள பாசம் நெகிழ வைக்கிறது.

விரைவில நலமாக வாழ்த்துக்கள் ..!

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சிந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
// நண்பர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமை கிடைப்பது அபூர்வம் //
நண்பர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமை இல்லாதிருப்பதே அபூர்வம். நாங்கள் இப்படி இருப்பதில் எந்த ஆச்சர்யங்களுமில்லை. இந்த இடத்தில் யாரை பொருத்திக் கொண்டாலும் விடை இதுதான்.

☼ வெயிலான் said...

கேரளா போய்ட்டு வந்து பதிவும் போட்டாச்சா? இதை ஒரு புனைவாக மாற்றியிருக்கலாமே.

நல்லதொரு செயலை, நண்பர்கள் செய்திருக்கிறீர்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் & நன்றி வெயிலான், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். இதை அனுபவம் என்ற பிரிவிற்குள் எழுதவே ஆசைபட்டேன். புனைவு? ம்ம் அடுத்தமுறை முயற்சி செய்கிறேன்.
அதுசரி நண்பா! திருப்பூர் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட எந்த தகவலும் எனக்கு வரவில்லையே, ஏன்? இதை நான் வன்மையாக கண்ணடிக்கிறேன் மன்னிக்கவும் கண்டிக்கிறேன்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.