சுஃபி இசை ஒரு அறிமுகம்

ஏற்க்கனவே ரொம்ப நாளாக எழுத வேண்டுமென்று நினைத்த பதிவு, கடைசியாக ரூப் குமார் ரதோட் பற்றிய பதிவிலேயே எழுத நினைத்து பதிவுன் நீளம் கருதி தனிப்பதிவாக எழுதுகிறேன்.
எல்லா மதத்திலும், இசை - ஒரு வழிபாட்டின் கருவியாகவே இருந்து வருகிறது. கூட்டு வழிபாட்டிற்கு இசையை பயன்படுத்துவது, அனேகமாக எல்லா மதங்களிலும் எல்லா காலகட்டங்களிலும் இருந்துவந்திருக்கிறது. கடவுளை வாழ்த்தவும் வணங்கவும், நமதுமுன்னோர்கள் இசையையே பயன்படுத்தியிருக்கின்றனர். தென்னிந்தியாவில், (தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில்) கர்நாடக , இசை பரவலாகஎல்லாராலும் பின்பற்றப்படுவதைபோல, சுஃபி இசையானது பாகிஸ்தான், துருக்கி, உஸ்பெகிஸ்தான், என பொதுவாக எல்லா முஸ்லீம் நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


சுஃபி - பொதுவாக இது முஸ்லிம்களின் இசை. இன்றைக்கும் மசூதிகளில் திரு குரானை ஓதும் முறைகூட ஒருவகையில் சுஃபி இசையின் ஒரு வடிவம்தான் என்று பட்டிருக்கிறேன். (தவறு என்றால் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.)சுபி இசை பெரும்பாலும் கவாலி (Qawwali) இசை என்றே அதிகம் அறியப்படுகிறது. சுபியின் மற்றுமொரு வடிவம்தான் கவாலி இசை.முதலில் மெல்லிய ஹார்மோனியமும் அதனை தொடர்ந்து மிருதுவான தபேலா அல்லது டோலக், பிறகு உச்சஸ்தாயில் ஆலாப், அதன்பின் தேவைப்பட்டால் கவிதை அல்லது பாடல். இதுதான் சுஃபி இசையின் வடிவம். பெரும்பாலும் ஹார்மோனியமும் தபேலாவுமே இதன் இசைக்கருவிகளாக செயல்படுகிறது.இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின்னர் இந்திய பாரம்பரிய இசையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டு இன்றைக்கு இந்தியாவின் தொன்மையான இசையாக அறியப்பட்டு வரும் "ஹிந்துஸ்தானி" இசை கிடைத்தது. அனேகமாக, அது வரையில் இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த மெலடி என்று அறியப்படுகிற தனியிசை மருகி ஹார்மோனி அல்லது ஆர்கெஸ்ட்ரா என்று அறியப்படுகிற கூட்டிசையோடு இணைந்து "ஹிந்துஸ்தானி இசை"யாக உருமாறியது. இந்த "ஹிந்துஸ்தானி" இசையை பாடும் ஹிந்துக்கள் "பண்டிட்"என்றும் முஸ்லிம்கள் "உஸ்தாத்" என்றும் அழைக்கபடுவதாய் படித்திருக்கிறேன். இந்த கலவைக்கு முந்திய் இசைவடிவம்தான் சுஃபி.முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்பொழுது, இந்தியாவில் பாகிஸ்தானி முஸ்லீம் இசைக்கலைஞர்களின் இசை பெரிதும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்க்கு "நுஸ்ரத் பதே அலி கான்", உஸ்தாத் சுல்தான் கான்" மற்றும் இளைய தலைமுறை இசைகலைஞரான "அதிப் அஸ்லாம்" என நிறைய உதாரணம் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு ஒற்றுமை, சுஃபி இசை. மற்றும் எந்த கலப்படமும் இல்லாமல், நல்ல இசையை கொடுத்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.ஆனால் சுஃபி, கசல், க்கவ்வாளி என பல இசை வடிவங்கள் துருக்கி மற்றும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதியானவையே. அதலால் இந்தியாவில் கிடைக்கும் இந்த இசைவடிவங்கள் சிற்ச்சில கலப்புக்களை கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. இசைக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் கிடையாது. ஆகவே சுஃபி இசை, இசையை விரும்பும் நம் எல்லோருக்கும் பொதுவானது.


பொதுவாக மனிதனுக்கு இசையின் தேவை அவனது தனிமையை அகற்றுவதற்காக தேவைப்படலாம், மென்சோகத்தை வெளிப்படுத்த தேவைப்படலாம், அதீத பகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது இறைவனை அடைவதை இருக்கலாம். ஆக இசை, மனிதனுக்கு இந்த மூன்றையும் கொடுப்பதியிருக்க வேண்டியது அவசியம். சுஃபி இசையை பொறுத்தமட்டிலும், அதன் சிறப்பு என்னவென்றால் அது தனக்குள்ளேயே ஒரு தனிமையை கொண்டிருக்கும், மெல்லிய சோகம் ஒளிந்திருக்கும், ஒரு சாதுவின் மகிழ்ச்சியை பெற்றிருக்கும் இந்த மூன்றுமே சரிவர இணையபெற்றதுதான் சுஃபி இசை.


நமது இந்திய இசையமைப்பாளர்களில் தற்சமயம் சுஃபி இசையை கையாள்வது, ஏ.ஆர்.ரகுமான். அவரது "ரோஜா", "பம்பாய்", தற்பொழுது "குரு", "ஜோதா அக்பர்", "தில்லி 6" என்று பல படங்களில் சுஃபி இசையை லாவகமாக கையாண்டிருப்பார்.அவருடைய சமீபத்திய ஆல்பங்களில் அதிகமாக சுபி, கவாலி இசையையே உபயோகப்படுத்தியிருப்பார்.


(என்னை பொறுத்தவரை தற்பொழுது, இன்றைய தேதியில் இசையமைத்திருக்க வேண்டிய முக்காலா போன்ற பாடல்களை பத்து வருடங்களுக்கு முன்பே இசையமைத்த ரகுமானின் இசைதேடல் தற்சமயம் சுபி இசை சார்ந்ததாக இருக்கிறது. இது அவருடைய விரிந்த தேடலை குருக்குவதாய் உணர்கிறேன். இந்தியன் , காதலன் மற்றும் அவரின் முந்தய படங்களில் ஐந்து பாடல்கள் ஐந்து விதமாக இருக்கும். இந்தியன் போன்ற ஒரு அல்பத்தை ரகுமானால் இப்பொழுதும் கொடுக்க முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)


ஆக இதயங்களை இணைக்கும் இசையை ரசிப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளில் மனதை கிறங்கடிக்கும் சுபி இசையை கேளுங்கள், பாருங்கள்.கீழ்கண்ட சுட்டிகளை சொடுக்கி வீடியோவை பார்க்கத்தவரியவர்கள் நல்ல இசையை காணத்தவறியவர்கள் ஆவீர்கள்.
நமது சின்னகுயில் சித்ராவும், உஸ்தாத் சுல்தான் கான் இருவரும் இணைந்து பாடிய "பியா பசந்தீ ரே என்ற பாடல்
http://www.youtube.com/watch?v=ZpRnItjT4noஹிந்தியில் சமீபத்திய வெளியான சூபி பாடல் ஆல்பங்களில் ஒன்றான TERI JUSTAJOO என்ற ஆல்பத்தில் "சாவரே" என்ற பாடல்
http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


ஹிந்தியில் அன்வர் என்ற படத்தில் "மோலா மேரி மோலா" என்ற பாடல் http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


ஜோதா அக்பர் படத்திலிருந்து க்வாஜா மேரே க்வாஜா பாடல் http://www.youtube.com/watch?v=0smj7l-nlaA&feature=related


பம்பாய் படத்திலிருந்து கண்ணாளனே பாடல்
http://www.youtube.com/watch?v=q8dac0QRn8k


வெறும் சுஃபி இசை மாத்திரம்
http://www.youtube.com/watch?v=z10JD59W1w4


குரு படத்திலிருந்து தேரே பினா பாடல்
http://www.youtube.com/watch?v=BhB92yZ-jLo


--------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவில் எனக்கு தெரிந்தவற்றையே எழுதியிருக்கிறேன்.
இதில் தவறான செய்திகள் எதுவும் இருந்தால்,
தயவு செய்து தவறாக நினைக்காமல் திருத்தி தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------------------------------------

வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது


இது நான் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை "வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது, சின்ன சின்ன சந்தோசங்களின் தோரணம்தான் வாழ்க்கை. இந்த வினாடியின் ஒற்றை சிரிப்புதான் உன்னை அடுத்த வினாடிக்கு ஆயத்தமாக்குகிறது."

ஏற்க்கனவே இது என்னுடைய கட்டிபிடி வைத்தியம் என்ற பதிவில் எழுதியதுதான். இப்பொழுது, என்னுடைய எழுத்தையும் படித்து, அதற்கென "ரசிக்கக்கூடிய பதிவுதான்" என்று விருது கொடுத்திருக்கும்
நண்பர் ஜெகனுக்காக ( http://jaganathank.blogspot.com/2009/07/blog-post_20.html ) இதை மறுபடியும் எழுதுவதை சந்தோசமாக உணருகிறேன்.

ஏனென்றால் நான் சுமார் ஒன்னரை வருடங்களாக பதிவெழுதி வருகிறேன். முதலில் எனக்கு இதன் வீரியம் தெரியாமல் நானும் எதோ எழுதுவேன், போஸ்ட் செய்வேன். நானே அதை படித்துகொள்வேன். நண்பர்களிடம் கூட இதைப்பற்றி அதிகம் சொன்னதில்லை. ஒருமுறை நண்பர் செல்வம் (கடலையூர்) என்னுடைய மின்னஞ்சல் கிடைக்கபெற்று அதில் கையெழுத்து பகுதியில் குறிப்பிட்டிருந்த அன்னுடைய பதிவ்னை படித்துவிட்டு, "முரளி உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது, ஏன் அதிகம் வெளிப்படுத்தாமல் இருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் தமிழ்மணத்தில் இணையக்கூடாது?" என்று சொன்னார்.(எனக்கு கிடைத்த முதல் பாராட்டு அதுதான்).

உண்மையில் எனக்கு வலைப்பதிவின் அடிப்படை எதுவும் தெரியாது.அதுவே காரணம். செல்வத்தின் அறிமுகம் மூலமாக தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பதிவுதிரட்டிகளில் பதிந்துகொண்டேன். முதல் காரணம் விளம்பரம்தான். இதை சொல்லவதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் பிறகு இதன் மூலமாக ஒரு நல்ல நடப்பு வட்டம் கிடைக்கபெற்றேன். ஒத்த சிந்தனைகளுடன், ஒரே அலைவரிசையுடன் நண்பர்களை தேடிக்கொண்டிருக்க முடியாது. தேடவும் கூடாது. ஆனால இங்கே எல்லாம் அதுவாக கிடைக்கபெற்றேன்.

இதுவரையில் நான் எழுதுவதையும் படித்து, என்னை தொடர்ந்து என்னுடன் வந்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும், இனி என்னை தொடரப்போகிறவர்களுக்கும், என்னுடன் வரபோகிரவர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.இதையே ஒரு தொடர் பதிவாக, எழுதசெய்த "செந்தழழ் ரவி" அவர்களுக்கும் எனது நன்றிகள். உண்மையிலேயே இது நல்ல விஷயம். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த சந்தோசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில்தானே, உண்மையான சந்தோசம் இருக்கிறது.இதோ இவர்கள்தான் அவர்கள்.

கிருஷ்ணபிரபு: http://online-tamil-books.blogspot.com/
புத்தகப்பிரியர், இவரது பதிவில் நல்ல புத்தகங்களுக்கு அறிமுகமும், சிலசமயங்களில் விமர்சனமும் செய்து வருகிறார். வெறும் புத்தக அறிமுகம் மட்டுமின்றி அதன் விலை, எந்த பதிப்பகம், ஆசிரியர் பற்றிய குறிப்புகள் என அந்த புத்தகம் சார்ந்த விசயங்ககளையும் எழுதுவது இவரது தனித்தன்மை. பதிவுலகத்திற்கு வந்த பிறகு இவருடைய பரிந்துரையின் பேரில்தான் புத்தகங்கள் படிக்கிறேன். எல்லோருக்கும் பிடித்துபோகக்கூடிய புத்தகங்களையே அறிமுகம் செய்வது இவரது பலம். கிருஷ்ணா மறுக்காமல் வாங்கிகொள்ளுங்கள், உங்கள் நண்பனின் இந்தவிருதை.


அன்புடன் அருணா : http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
அருணா மேடம், இவங்களிடம் பெரிய அறிமுகம் இல்லை. என்றாலும் எங்கு நல்ல பதிவைப் பார்த்தாலும் ஓடிவந்து பூங்கொத்து கொடுத்து பாராட்டும், அழகிற்காகவே இவர்களுக்கு இந்த விருது. தேடிச்சோறு நிதம் தின்று ... எனத்தொடங்கும் இந்த பாடலை என்னுடைய எல்லா நாட்குறிப்புகளிலும் முதல் பக்கத்தில் எழுதிவைதிருப்பேன். மேடத்தோட பதிவிலும் இதைத்தான் முதலில் நான் பார்த்தேன், என்பது கூடுதல் விஷேசம். டீச்சர் இந்தாங்க என்னோட விருதும், பூங்கொத்தும்.


வண்ணத்துபூச்சியார் : http://butterflysurya.blogspot.com/
புத்தகத்திற்கு கிருஷ்ணா என்றால் உலக சினிமாவிற்கு, சூர்யாதான். இவருடைய விமர்சனங்களுக்கு பிறகு நான் பார்த்த நல்ல படங்கள் எத்தனையோ சொல்லலாம். குறிப்பாக White Ballon விமர்சனத்தை படித்தபின் அந்த படத்தை எப்படியாவது பார்த்தே தீரவேண்டுமென்று அலைந்திருக்கிறேன். (இன்னும் பார்க்கவில்லை, சூர்யா DVD ஏற்ப்பாடு பண்ணுங்க). எப்படி இவ்வளவு பொறுமையுடனும், நேர்த்தியாகவும் ஒரு திரைப்படத்தை பார்க்கமுடிகிறது என்று நான் பலமுறை பொறாமையோடு படித்தவர்தான் வண்ணத்துபூச்சியார். சூர்யா, நண்பனின் இந்த விருதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும்.


சிந்தனிடமிருந்து , http://www.sindhan.info/
சிந்தன், கம்யூனிச சிந்தனைவாதி. அரசியல் ஆர்வம் கொண்டவர். இத்துனை இளம் வயதில் இவ்வளவு கொள்கைகளுடனும் குறிக்கோளுடனும் எழுதிவருகிறார். பத்திரிகை துறையில் இருப்பதால் அதிகம் எழுதமுடிவதில்லை என்று நினைக்கிறேன். இவருடைய இன்னொரு தனித்தன்மை புகைப்படம் எடுத்தல், அதைக்கூட இன்னொரு பதிவாக தொடரலாம் என்பது என் விருப்பம். தம்பி நிறைய எழுத வேண்டும், நிறைய பயனுள்ள அரசியல் பதிவுகளை எழுதவேண்டும் என்கிற கட்டளையுடன் இந்த விருதை கொடுக்கிறேன்.

சக்கரை http://www.sakkarai.com/
சுரேஷ், மச்சான். ஒருமுறைதான் பேசியிருக்கிறேன். பேசிய முதல் நாளே நன்கு அறிமுகம் ஆனதுபோல மிகுந்த நட்புடன் பேசியது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். எனக்கு இவருடைய POSITIVE ATTITUDE மிகவும் பிடிக்கும். பேச்சிலும் சரி எழுத்திலும் சரி. இவருடைய எழுத்தில் நக்கலும் நையாண்டியும் அதிகம் இருந்தாலும், ஒருவித சமுதாயபொறுப்புணர்வு இழையோடும் எழுத்துக்கள். நண்பா, இந்தாபிடி என்னோட விருதை.


அப்புறம் ஸ்பெசலா கார்க்கி : www.karkibava.com
கார்க்கி : இதை நான் இவருக்கு கொடுக்க காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் நானே சொல்லேறேன். கார்க்கியின் நன்கைச்சுவை உணர்வு. எதையுமே சீரியஸா யோசிக்கவே மாட்டானா இந்த மனுசன்னு குழம்படிக்கிற எழுத்துக்கள், இவருடையது. தப்பா சொல்லல, இப்படியே இருங்க சகா. அப்புறம் குறிப்பாக இவரின் "புட்டிகதைகளுக்கு" நான் அடிமை. சகா Have it, My Small Gift.
இன்னும் நிறைய பேர்,
இருக்கிறார்கள் எனக்கு பிடித்த பதிவர்கள் வரிசையில். பெரும்பாலான பதிவர்களுக்கு ஏற்க்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் ஒருவழியாக, நானும் எனக்கு பிடித்த பதிவுகளுக்கு விருதுகளை கொடுத்துவிட்டேன்.


நண்பர்களே, எனக்கு விருதுகொடுக்கும் அளவிற்கு எந்த பெருமையும் இல்லாவிட்டாலும். என்னுடைய சந்தோசங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த விருதையும் உங்களோடு பகிர்ந்துகொண்டிருக்கிறேன். சிலருக்கு இது உந்துசக்தியாக இருக்கலாம், சிலருக்கு வாழ்த்தாக இருக்கலாம் அல்லது சிலருக்கு கௌரவமாக இருக்கலாம். எது எப்படியோ?


தொடரந்து எழுதுங்கள்,
நிச்சயம் உங்களுடைய பதிவு
"ரசனைக்குரிய பதிவு" .


இது உங்கள் நண்பன் உங்களுக்காக கொடுத்த விருது.
மறக்காம இந்த படத்தை வெட்டி உங்க பதிவுல ஒட்டிகொள்ளுங்கள்.ஒரு தேவதை பார்க்கும் நேரமிது

வாமணன் படத்தில் வரும் பாடல், "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது". இன்றைய தேதியில் அனேகமாக நிறைய பேரின் ஐபாட் பாடல் மற்றும் அதிகம் முனுமுனுக்கும்பாடல் இதுவாகத்தான் இருக்கும். "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ" பாடலுக்கு பிறகு யுவனிடமிருந்து வெளிவந்த மிக அருமையான மெலடி இந்த பாடல். நிறைய பதிவர்கல்கூட இந்த பாடலின் நிறைகுறைகளை எழுதியவண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் படித்தேன் (மன்னிக்கவும் யாருடைய பதிவென்று மறந்துவிட்டேன்) இன்னும் இதை ஹரிஹரனே பாடியிருந்தால் நமக்கு இன்னொரு "வெண்மேகம் பெண்ணாக உருவானதோ" கிடைத்திருக்கும் என்று.

என்னை பொறுத்தமட்டிலும் இந்த பாடல் அதன் உச்சபச்ச நிலையில்தானினுக்கிறது. அருமையான மெலடி டியூன். மிகச்சரியான இசை சேர்ப்பு. இதுபோக இன்னமும் குரல் மூலமாக இந்த பாடலை மேருகேற்றிவிட முடியாது என்று நினைக்கிறேன். மேலும் இந்த பாடலை பாடிய ரூப் குமார் ரதோட் மிகவும் அனுபவித்து பாடியிருப்பார். சில வருடங்களாக அவரது பாடல்கள் சிலவற்றை கேட்டுக்கொண்டுதான் வருகிறேன். ஒவ்வொரு பாடல்களிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் இருக்கின்றன அவரது பாடல்கள். அனேகமாக அவரது பாடல்கள் நல்ல மெலடியாகத்தான் இருந்திருக்கிறது. இவரது மனைவிகூட ஒரு பாடகிதான், சோனாலி ரத்தோட். அவர்களை பற்றி அதிகம் தெரியவில்லை. இவர்கள் இருவரும் இணைந்து நிறைய பாடல்கள் ஆல்பங்கள் செய்திருக்கிறார்கள். ஹிந்தியில் சமீபத்திய வெளியான சூபி பாடல் ஆல்பங்களில் ஒன்றான TERI JUSTAJOO என்ற ஆல்பத்தில் இவர் பாடிய "சாவரே" என்ற பாடல் அவசியம் கேட்டுபாருங்கள். அதற்கான வீடியோ சுட்டியை இங்கே இணைத்துள்ளேன். http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU


மேலும் ஹிந்தியில் அன்வர் என்ற படத்தில் இவர்பாடிய "மோலா மேரி மோலா" என்ற பாடல் வடக்கே ஏக பிரசித்தம், அந்த பாடலுக்கான சுட்டி இங்கே, http://www.youtube.com/watch?v=7KxdpDpOQKU

இந்த இரண்டு பாடல்களும் சூபி இசை வகையை சேர்ந்தது. நமக்கு கர்நாடக சங்கீதம் போல பாகிஸ்தானின் முஸ்லிம்களின் இசைவடிவம் சூபி. என்று நண்பர் சிவா அடிக்கடி சொல்லுவார். விரைவில் சூபி இசை குறித்து ஒரு பதிவெழுத இருக்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தேகம்: இந்த பாடல்தான் இவருக்கு தமிழில் அறிமுகப்பாடலா? இதுகுறித்து எனக்கும் எண் நண்பனுக்கும் நிறைய வாக்குவாதம் நடந்துவிட்டது. அவன் விக்கிபீடியாவின் உதவியுடன், ரத்தோட் ஏற்க்கனவே மின்னலே படத்தில் "வெண்மதி வெண்மதியே நில்லு" என்ற பாடலை பாடியிருக்கிறார் என்கிறான். நான் அந்த தகவலை பார்த்தபின்னும் அந்த பாடலை ஹரிஹரன்தான் பாடியிருக்கிறார் என்று உறுதியோடு சொல்லிகொண்டிருக்கிறேன். விபரம் தெரிந்தவர்கள் விளக்கம் கொடுங்கள் .

மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்

மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்


சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது.....

இசை எப்படி நாடு, மொழி, இனம் அப்பாற்ப்பட்ட விசயமாகஇருக்கிறதோ அதுபோலவே இருந்தார் மைக்கேலும். இயேசு கிருஸ்த்துவைவிட நாங்கள பிரபலமானவர்கள் என்று பீட்டில்ஸ் இசைக்குழு தம்பட்டம்அடித்துகொன்டார்கள் என்று படித்திருக்கிறேன். ஆனால் மைக்கேல்கிட்டத்தட்ட அப்படித்தான். இன்னமும் நான் முடி வெட்டிக்கொள்ள செல்லும்சலூனில் இவரது போஸ்டர் ஓட்டபட்டிருக்கும். யார் இவர் என்று கேட்டால்இவர்தான்னா மைக்கேல் ஜாக்சன், இவரு உடம்ப பார்ட் பார்ட்டாஆட்டுவாராம்" என்று சொல்லுவான். இவருடைய பாட்டு பார்த்திருகிறாயா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் தெரியும். இங்குமட்டுமல்ல உலகெங்கிலும் இப்படி நிறைய அறிமுகத்திகுட்பட்டவர்தான்மைக்கேல் ஜாக்சன்.
அனேகமாக அமேரிக்காவில் கறுப்பின மக்களில் முதன்முதலின் புகழ்பெற்ற இசைகலைஞர் மைகேல்தான். முதலில் பாடல்களை மட்டுமே எழுதி பாடிவந்த இவர் தனது நடனத்திறமையால் பாப் இசை பாடல்களில் விடியோவையும் இணைத்து அதில் வெற்றியும் பெற்றார். கிட்டத்தட்ட இவரது எல்லா விடியோ ஆல்பங்களும் ஒரு சிறிய கதையைக் கொண்டிருக்கும். ஆரம்பம், கதை மற்றும் கிளைமாக்ஸ் என ஒரு மினி சினிமாவைப் போலவே இருக்கும். பாடல் ஆரம்பிக்கும் முன்னதாக குறைந்தது ஒரு ஐந்து நிமிடங்களாவது காட்சிகள் இருக்கும், பாடல்களில் ஜாக்சனின் நடிப்புத் திறமையையும் பார்க்க முடிகிறது. அவரது திறமைதான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சேர்த்தது. மைக்கில் ஜோர்டான், ஸ்பீல்பெர்க், மடோனா, கிரிஸ் டக்கர் என பலபல முக்கியஸ்தர்களும் அவரது அல்பங்களில் நடித்திருப்பது அவருடனான நடப்பில் காரணமாக மட்டுமல்ல என்பது அந்த விடியோக்களை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.


1980
களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் மிகவும் புகழ் பெற்ற பாடகரானார். அவரது ஆல்பங்களை பல முன்னணி டி.வி. நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பு செய்து வந்தது. மைகேலின் வசீகரமான குரல், தேர்ந்த நடனம், அருமையான காட்ச்சியமைப்பு, கேமெரா மற்றும் அதை மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் இவையனைத்தும் அவரது ஒவ்வொரு படைப்புக்களையும் விற்ப்பனை சாதனையாகியது. இது ஜாக்சனின் அர்பணிப்பு இல்லாமல் நடந்துவிடவில்லை. அவரது இத்தனை சாதனைகளும் aவெறும் நாற்ப்பதுகுட்பட்ட பாடல்களில் கிடைத்திருக்கிறது என்பதன் மூலம் அவர் ஒவ்வொரு பாடலுக்கும் எடுத்துக்கொள்ளும் தனிப்பட்ட கவனம் பிடிபடும்.


டோ டாப், ரோபோ மூவ் மற்றும் மூன் வாக், இவை அனைத்தும் மைக்கேல்ஜாக்சனின் நடன கண்டுபிடிப்புகள். அதிலும் இவர்
அறிமுகப்படுத்திய மூன்வாக் நடனம் உலக பிரச்சி பெற்றது. இவரின் இசையை, நடனத்தை, காட்சியமைப்பை எத்தனையோ நாடுகள் பிரதிபலித்தது. அதுவும் இந்தியாவில் என்பதுக்கு பிறகு வந்த எத்தனையோ திரைப்பாடள்களில் மைகேலின் தாக்கம் தெரியும்.

பாடகர், நடனக்காரர் என்பதுபோக மைகேல் ஜாக்சனின் பொதுசேவை அவரை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து சென்றது. அவரது பெரும்பாலான பாடல்கள் எயிட்ஸ் விழிப்புணர்வு, அணுஆயுத சோதனை எதிர்ப்பு, பசிப்பிணி எதிர்ப்பு, வன்முறை எதிர்ப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், குளோபல் வார்மிங் போன்ற சமுதாய அக்கறைமிக்க வரிகளியே கொண்டிருக்கும்.

இவரது இசையில், பாடல்களில் என்னை ரொம்பவும் பாதித்த சிலபாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்த மண்ணின் பாடல் Earth Song, இன்றிரவு நாம் எல்லோரும் சேர்ந்து அழுவோம் Cry, உண்மையில், அவர்களுக்கு நம்மை பற்றி எந்த கவலயும் இல்லை. They Don't really care about us,கருப்போ! வெள்ளையோ! Black or White மற்றும் பீட் இட் (இதை எப்படி தமிழாக்கம் செய்வது என்று தெரியவில்லை. சிறுவயதில் அர்த்தம் புரியாமலேயே beat it, beat it என்று கத்திகொண்டிருப்பேன். இன்னமும் அதே பீட்இட் ) , BEAT IT

இசையில் எவ்வளவோ சாதனைகள் செய்தும், புகழின் உச்சியில் இருந்த மைக்கேலின் தனிப்பட்ட வாழக்கை அவ்வளவு சந்தோசமாக இருந்துவிடவில்லை. அவரைபற்றிய எத்தனையோ கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் என்னை பொறுத்தவரை MJ மனதளவிலும் ஒரு மிகசிறந்த மனிதர். இசை இருக்கும் வரை அவருடைய பாடல்கள் அவரை நிருபித்துகொண்டே இருக்கும்.


http://myplay.com/video-player/michael-jackson

MJ வின் எந்த பாடல்களை பார்க்க விரும்பினாலும் மேலே குறிப்பிட்டுள்ள வலைதளத்தில் பார்க்க முடியும்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதி செல்கிறது.....


எது எப்படியோ உலக இன்னும் ஒரு உன்னதமான கலைஞனைஇழந்துவிட்டது. இவரது மறைவு என்னை போன்ற ரசிகர்களுக்கு மிகப்பெரியஇழப்பு. பிரமிளின் இந்த கவிதை வரிகளை மைக்கேலின் ரசிகனாக அவருக்கு சமர்பிக்கிறேன்.

மைக்கேல் ஜாக்சனின் மறைவு, என்னை போன்ற ஏராளமான இசை ரசிகர்களுக்கு பெரிய இழப்பு. என்னால் முடிந்த ஒரு சிறிய செய்திகளோடு அவரைப்பற்றி ஒரு பதிவிட இருந்தேன். நண்பர் கார்க்கி உட்ப்பட ஏற்க்கனவே பல பதிவர்கள் மைக்கேல் பற்றி நிறைய எழுதிவிட்ட பின்னும் என்னால் முடிந்த ஒரு பதிவாக ”மைக்கேல் ஜாக்சன் - கிங் ஆப் பாப்” என்கிற பதிவை எழுதியிருந்தேன். அந்த பதிவிலேயே எழுத நினைத்து எழுதாமல் விட்ட மொழிபெயர்ப்பு பாடல் இது. அவருடைய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த "Earth Song" என்ற பாடலின் தமிழ் மொழிபெயற்ப்புதான் இந்த பதிவு.


முந்தய பதிவிலேயே எழுத நினைத்து, சரியான வார்த்தைகள் கிடைக்காததாலும், எனக்கு மொழி பெயர்ப்பு பழக்கமில்லை என்பதாலும் ஏற்ப்பட்ட தாமதத்தால் நண்பர் சிந்தனிடம் கொடுத்து இந்த பாடலை மொழிபெயர்க்க சொல்லியிருக்கிறேன். இதற்கிடையில் என் முயற்ச்சியில் சிறிது முன்னேற்றம் இருப்பதை உணர்ந்து இரண்டாவது பதிவாக இதை பதிந்திருக்கிறேன். என்னிடம் கேட்டுவிட்டு நீங்களே பதிவாக போட்டுவிட்டீர்களே? என்று சகா.சிந்தன் கோவித்துகொள்ளாமல் இருக்கவேண்டும்.இனி மைக்கேலின் மீதிருந்த பார்வையை மாற்றிய அந்த பாடலின் வரிகள்.

இதுவரை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவந்த
சூரியன் அஸ்த்தமித்தே போனது? மழைக்கு என்ன ஆனது? 

இதுவரை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துவந்த இவற்றிற்கு என்ன ஆனது?

நீ நானென்று போட்டிபோட்டு சீர் செய்த உழுநிலம் எங்கே?
அதை யோசிக்க முடிகிறதா?

மனிதா! உன் கண்ணில் படாமலேயே போனதா?
இதுவரை நாம் சிந்திய ரத்தங்கள்.
 
மனிதா! உன் காதில் விழாமலேயே போனதா?
இந்த பூமியின் அழுகையும் விசும்பலும்.
 

உன் குழந்தையின் 
எதிர்காலத்திற்க்கென சேர்த்து வைத்த
அமைதி எங்கே? என்ன ஆனது?
நாம் இந்த பூமியை என்ன செய்தோம்?
செய்து கொண்டிருக்கிறோம்.
 

உனது எனதென்று கனவுகண்டுகொண்டிருந்த பூஞ்சோலை எங்கே?
அதை யோசிக்க முடிகிறதா?

மனிதா! உன் கண்ணில் படாமலேயே போனதா?
நம் குழந்தைகள் கொல்லப்படுவது. 

மனிதா! உன் காதில் விழாமலேயே போனதா?
இந்த பூமியின் அழுகையும் விசும்பலும்.
 

முன்பு, நான் கனவு காண்பேன், நட்சத்திரங்கலூடே பிரயானப்பட்டிருப்பேன்.
 
இன்று, எங்கிருக்கிறேன் என அறியாதவாறு அத்துவான காட்டிலிருப்பதாய் உணர்கிறேன்.
கடந்தகாலம் திரும்புமா? 
கடல்கள் சுத்தமாகுமா?
 
சொர்கங்கள் கிழே விழுந்து நொறுங்குகிறது.
 
நம்மால் சுவாசிக்கக்கூட முடிவதில்லை.


ரத்தம் கசியும் பூமியின் வழியை நாம் இதுவரை உணர வில்லை. 
விலைமதிப்பற்ற இயற்க்கையை நாம் அழிவின் பாதையில் செலுத்துகிறோம்.

மிருகங்கள்
 உலாவிய சாம்ராஜியத்தை புழுதிக்குள் இருத்தினோம். 
தந்தங்களை அறுத்து யானைகளை நம்பிக்கை இழக்க செய்தோம்.
 
கடலையும் கெடுத்து திமிங்கிலங்களை கதறச் செய்தோம்.
 
மரங்களை அழித்து, காடுகளை எரித்தோம்.
 
புனித பூமியை சண்டையிட்டு பிளந்தோம்.

தனிமனிதனின் சுதந்திரத்தை பறித்தோம். 
பச்சிழம் குழந்தைகளைக்கூட கொன்று குவித்தோம்.
 
மனிதா! அவற்றின் ஓலம் உன் காதில் விழவில்லையா?

இத்தனை அழிவுகளையும் நாம் ஏன் செய்கிறோம்?
 
யாரவது எனக்கு சொல்லுங்கள்.

குழந்தைகளுக்காக,
கவலை தோய்ந்த அவற்றின் பெற்றோர்களுக்காக,
 
மனிதர்களுக்காக,
அவர்களின் சந்தோசமான நாட்களுக்காக - என்று
யாரவது எனக்கு சொல்லுங்கள். 
இத்தனை அழிவுகளையும் நாம் ஏன் செய்கிறோம்?

இந்த பாடலின் வீடியோவை பார்க்க இங்கே 
க்ளிக்கவும் .
http://www.youtube.com/watch?v=pYSoZPuPmNw&feature=related


நண்பர்களே! இது வெரும் முயற்ச்சிதான். தவறுகள் இருந்தால் மன்னித்தது போக திருத்திக்கொடுங்கள்.என்னுடைய பதின்ம வயதுகளில் பள்ளியில் ஆண்டுவிழாவில் ஆடுவதற்க்கென எனக்கு என் சித்தப்பா வாங்கிகொடுத்த மைக்கேலின் ஆடியோ கேசட் மற்றும் Boney M ஆடியோ கேசட் இன்னமும் இருக்கிறது, என்னிடம். மைக்கேலின் பாடல்களை எனக்கு அறிமுகம் செய்ததும் அவர்தான். நான் என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வேன். அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு, அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு .......................
கிலுகிலுப்பை -II ( கதிர்வேலு ஐயா )

பள்ளி பருவத்தை கடந்த அனைவரின் நினைவிலும் மறக்கமுடியாத ஆசிரியர் ஒருவர் இருப்பார். அது அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறுபடலாம், ஆனால் நிச்சயம் அப்படி ஒருவர் இருப்பார்.

எனக்கு அப்படி ஒரு சில ஆசிரியர்கள் இல்லை, நிறைய இருக்கின்றனர். அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று என்னுடைய அம்மாவும் ஒரு ஆசிரியர்தான். என்னுடைய ஆரம்பகால கல்வி பெரும்பாலும், அம்மாவின் பள்ளியிலேயே கிடைத்தது. "வேணி டீச்சர் பையன்" என்பதுதான் அப்போது என் பெயர். எனவே என்னுடைய அனேகமதிய உணவுகள் அம்மாவுடன் சேர்ந்து ஆசிரியர்களுடனே இருக்கும்.

மதியம் எனக்கு ஊட்டிவிட்ட அதே டீச்சர் எனக்கு பாடம் நடத்துவதும் வீட்டுபாடம் கொடுப்பதுமாக இருப்பார். தவறுதான் என்றாலும், மற்ற மாணவர்களை காட்டிலும் என்னிடம் அன்பாக இருக்கும் எல்லா ஆசிரியர்களையும் எனக்கு பிடித்து போனது. இன்னொன்று (சின்ன வயதில் ) நான் நன்றாக படிப்பேன் என்பதால் எல்லா ஆசிரியர்களுக்கும் பொதுவாக செல்ல பிள்ளையாகவே இருப்பேன்.

இதைவிட பெரிய காரணம் ஒன்று உண்டு. வீட்டில் எப்போதும் அம்மா அவர்களின் வகுப்பில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப்பற்றி எங்களிடம் பேசுவார்கள். அதில் அவர்களின் வகுப்பில் படிக்கும் பல மாணவர்களின் பெயர்களை சொல்லி, "அவன் இப்படி செஞ்சான்", இந்த புள்ள இப்படி பண்ணினா" என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு அம்மா நம்மை பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்களே என்று இருக்கும். என் பெயரை சொல்லவதை விட, என்னை பற்றி பேசுவதைவிட அவர்களின் மாணவர்களைப் பற்றியே பெருமையாக பேசுவது சலிப்பாக இருக்கும். அதனால் என்னுடைய கவனம் மற்ற ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதிலேயே இருந்தது. வகுப்பில் போர்டிற்கு கரிபூசுவது முதல் வாத்தியார் சைக்கிளை துடைத்து வைப்பது வரை எல்லா வேலைகளையும் முன்ன்னின்று செய்து வந்தேன்.

அம்மாவின் பள்ளியை விட்டு பிரிந்து புதிய பள்ளியில் சேர்ந்தபொழுதுதான் உணர்ந்தேன் இதற்குமுன் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் என்மேல் வைத்திருந்த நன்மதிப்பிற்கும், அன்பிற்கும், என் அம்மாதான் காரணம் என்பதையும்,ஒரு ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை என்பதையும்.

என்னுடைய நாலாம் வகுப்பிலிருந்து, ஆசிரியர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
தென்னை மரம் என்பதற்கு தொன்னை மரம் என்று எழுதியதற்காக கையை திருப்பிவைத்து விரல்முட்டியில் ஸ்கேலால் அடிக்கும் "மேரி டீச்சர்",
கட்டியிருக்கும் புடவைக்கு பொருத்தமாக வளையல், வாட்ச், செருப்பு, தலையில் உள்ள கிளிப் என்று எல்லாவற்றையும் பொருத்தமாக அணிந்துவரும் "மாலா டீச்சர்", தொட்டதுக்கெல்லாம் அடிக்கும் "காயத்ரி டீச்சர்", அப்பாவோடு ரயிலில் பயணிக்கும் "கண்ணையன் வாத்தியார்", அம்மா போட்டுகொடுக்கும் கிராபையும் கணக்கையும் வைத்து பாடம் நடத்தும் "வேங்கடரத்தினம் வாத்தியார்", "எங்க போச்சு" என்பதை "எங்க போய்ஷ்சு " என்று இன்றைய அஜீத் மாதிரி அன்னைக்கே பேசும் "நஞ்சையன் மாஸ்டர்", ரொம்ப பிரண்ட்லியா பழகும் "விஜியலட்சுமி டீச்சர்", "ருக்மணி டீச்சர்", என்னோட நண்பனின் காதலி வீட்டில் குடியிருந்த காரணத்திற்காகவே டியூசன் போன "கச்சீஷ்வரன் மாஸ்டர்", எல்லோரையும் வரிசையா ஒவ்வொரு பாராவா படிக்கசொல்லிவிட்டு புத்தகத்தை வைத்தது முகத்தை மறைத்தவாறே தூங்கும் "சண்முகம் வாத்தியார்",
நல்ல விஷயம் எதை செய்தாலும் அனைத்து மாணவர்களையும் கைதட்ட சொல்லி எல்லோர் முன்னிலையிலும் பாராட்டும், அங்கில வகுப்பெடுக்கும் தர்மலிங்கம் சார், இப்படி என்னுடைய பள்ளி பருவத்தில் எத்தனையோ ஆசிரியர்களை கவர்ந்தும், கடந்தும் வந்திருக்கிறேன்.


ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் தமிழ் சொல்லிகொடுத்த கதிர்வேலு ஐயாவை போல ஒருவரை இதுவரையில் நான் பார்க்கவில்லை, அவர் என்ன சொல்லிகொடுத்தார் என்பது இரண்டாவது விஷயம், எப்படி சொல்லிகொடுத்தார் என்பது முக்கியம். ஐயாவின் வகுப்பு என்றால் எனக்கு தெரிந்து ஒருவரும் மிஸ்பண்ணியதேஇல்லை. பள்ளி பொழுதில் என்னுடைய அநேக நேரம் பள்ளியின் வெளியே உள்ள மெஸ்ஸிலேயே இருக்கும். அட்டனென்ஸ் எடுக்கும்போது நாங்கள் இல்லை என்றாலே, எங்களை தேடி மெஸ்ஸிர்க்கே ஆள் அனுப்புமளவிற்கு, நாங்கள் பிரசித்தம். அப்படி இருந்த நாங்கள் ஐயாவின் ஒரு வகுப்பையும் விட்டது கிடையாது.அவர் வகுப்பெடுக்கும் அழகே தனி. அவரது வகுப்புகளில் எந்த ஒரு மாணவரும் பெஞ்சில் உட்க்காரக் கூடாது, அனைவரும் போர்டின் மத்தியில் அனைவருக்கும் மையமாக அமர்திருக்கும் ஐயாவை சுற்றி அரைவட்ட வடிவாக கீழே உட்க்காரவேண்டும். அதற்க்கு கூட "நான் பாடம் சொல்லும்போது நீங்க எல்லோரும் என் கண் பார்வைக்குள் அல்ல, என் கைக்குள் இருக்க வேண்டும்" என்று அழகாக ஒரு காரணமும் சொல்லுவார். அப்போதெல்லாம் அவரின் அருகில், அவரது காலுக்கடியில் அமர இடம் பிடிப்பதென்பது எல்லோரிடத்திலும் ஒரு போட்டியாகவே இருக்கும். பாடம் நடத்தும்போது தன காலுக்கடியில் அமர்திருக்கும் மாணவர்களின் தலையில் அவ்வப்போது கைகளை வைப்பதும், தட்டிகொடுப்பதுமாக இருப்பார். அவர் என் தலையில் கை வைக்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்வேன். நான் மட்டுமல்ல அனேகமாக அனைவரும். நான் சொல்வது எங்களின் பால்ய வகுப்புகள் பற்றி இல்லை, எனது பதினோராவது மற்றும் பனிரெண்டாவது வகுப்பினை பற்றியது. அப்போது ஒரு சில மாணவர்களுக்கு மீசை முளைக்கத் தொடங்கியிருந்தது, அந்த வயதிலும் அனைத்து மாணவர்களையும் ஒரு குழந்தையைப் போல, அவரது தொடுதலுக்காக ஏங்க வைக்க அவருக்குத் தெரிந்திருந்தது.


ஏற்க்கனவே என்னுடைய கார்த்திகை - மார்கழி என்ற பதிவில் கதிர்வேலு ஐயாவை பற்றி எழுதியிருப்பேன். அதை மறுபடியும் இங்கே குறிப்பிடுகிறேன். "அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய ( அல்லது புறநானூறு அல்லது வேறு ) செய்யுள். செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இதை சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா? என்பது சந்தேகம்தான்.


அவர் சொல்லிகொடுத்த பின் அந்த பாடம் மற்றும் அதன் விளக்கத்தை நாம் மறுபடியும் புத்தகத்தைஎடுத்துதான் படிக்கவேண்டும் என்பதில்லை. அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால் "பசுமரத்தாணி போல்" எங்களுக்குள் பதிந்துபோயிருக்கும்.

எந்த ஒரு மாணவரையும் "போடா, வாடா" என்றோ ஒருமையிலோகூட அழைத்திருக்க மாட்டார். நன்றாக படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்கிற பேதம் அவரிடம் இல்லை. எல்லோரிடமும் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்.

எந்த ஒரு ஆசிரியர் வகுப்பெடுக்கும்போதும், மாணவர்கள் சிரித்தால் தண்டனை கிடைக்கும். ஆனால் ஐயா வகுப்பெடுக்க ஆரம்பித்தால் வகுப்பறையே ஏதோ விகடகவி மன்றமாக மாறிபோயிருக்கும். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து எங்கள் வகுப்பை பார்வையிட்டு போவார். அந்த அளவிற்கு அனைவரும் மகிழ்ச்சியாக, நிறைவான சந்தோசத்துடன் படித்துகொண்டிருப்போம், தமிழோடு ஐயாவையும். அவர் எங்களுக்கு படிப்பு சொல்லிதரவில்லை, எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிகொடுத்தார். தமிழ் சொல்லிதரவில்லை, தமிழை எப்படி அனுபவிக்க வேண்டுமென்று சொல்லி கொடுத்தார்.


பதினோராவது மற்றும் பனிரெண்டாவது வகுப்புகளுக்கு எங்களுக்கு கணிதத்திற்கு ஆசிரியர் கிடையாது. சில சமயம் வேறு ஏதாவது ஒரு ஆசிரியர் வந்து ஏனோ தானோவென ஏதாவது நடத்திசெல்வர். சில சமயம் எங்கள் பள்ளியின் வெளியே அமைந்துள்ள டுடோரியல் பள்ளியின் ஆசிரியர் வந்து பாடம் நடத்துவார். வேருத்துபோகும் எங்களுக்கு, எங்களின் எல்லா வகுப்புகளும் தமிழ் வகுப்புகளாகவே இருந்துவிடக் கூடாதா? என்று ஏங்கிய காலம் அது.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பயின்ற என் நண்பனும் , என் பள்ளியின் முன்னாள் ஆசிரியரின் மகனுமான சண்முகராஜனை சந்தித்து பேசிகொண்டிருந்தபோது, ஐயாவை பற்றிய பேச்சு எழுந்தது, ஐயா இப்போது உயிருடன் இல்லை என்று சொன்னான்.
இதை எழுதும்போது என் கண்களில் உருண்ட கண்ணீர் துளிகளை மற்றும் இதை படித்த, படிக்கிற, படிக்க போகும் என் பள்ளி நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த பதிவை படித்தபின் ஏற்ப்படும் சின்ன சந்தோசத்தையும், நியாபகங்களையும் எங்கள் தமிழ் ஐயா கதிர்வேலுவிற்கு காணிக்கையாக்குகிறேன்.