கிலுகிலுப்பை -II ( கதிர்வேலு ஐயா )

பள்ளி பருவத்தை கடந்த அனைவரின் நினைவிலும் மறக்கமுடியாத ஆசிரியர் ஒருவர் இருப்பார். அது அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறுபடலாம், ஆனால் நிச்சயம் அப்படி ஒருவர் இருப்பார்.

எனக்கு அப்படி ஒரு சில ஆசிரியர்கள் இல்லை, நிறைய இருக்கின்றனர். அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று என்னுடைய அம்மாவும் ஒரு ஆசிரியர்தான். என்னுடைய ஆரம்பகால கல்வி பெரும்பாலும், அம்மாவின் பள்ளியிலேயே கிடைத்தது. "வேணி டீச்சர் பையன்" என்பதுதான் அப்போது என் பெயர். எனவே என்னுடைய அனேகமதிய உணவுகள் அம்மாவுடன் சேர்ந்து ஆசிரியர்களுடனே இருக்கும்.

மதியம் எனக்கு ஊட்டிவிட்ட அதே டீச்சர் எனக்கு பாடம் நடத்துவதும் வீட்டுபாடம் கொடுப்பதுமாக இருப்பார். தவறுதான் என்றாலும், மற்ற மாணவர்களை காட்டிலும் என்னிடம் அன்பாக இருக்கும் எல்லா ஆசிரியர்களையும் எனக்கு பிடித்து போனது. இன்னொன்று (சின்ன வயதில் ) நான் நன்றாக படிப்பேன் என்பதால் எல்லா ஆசிரியர்களுக்கும் பொதுவாக செல்ல பிள்ளையாகவே இருப்பேன்.

இதைவிட பெரிய காரணம் ஒன்று உண்டு. வீட்டில் எப்போதும் அம்மா அவர்களின் வகுப்பில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப்பற்றி எங்களிடம் பேசுவார்கள். அதில் அவர்களின் வகுப்பில் படிக்கும் பல மாணவர்களின் பெயர்களை சொல்லி, "அவன் இப்படி செஞ்சான்", இந்த புள்ள இப்படி பண்ணினா" என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு அம்மா நம்மை பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்களே என்று இருக்கும். என் பெயரை சொல்லவதை விட, என்னை பற்றி பேசுவதைவிட அவர்களின் மாணவர்களைப் பற்றியே பெருமையாக பேசுவது சலிப்பாக இருக்கும். அதனால் என்னுடைய கவனம் மற்ற ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதிலேயே இருந்தது. வகுப்பில் போர்டிற்கு கரிபூசுவது முதல் வாத்தியார் சைக்கிளை துடைத்து வைப்பது வரை எல்லா வேலைகளையும் முன்ன்னின்று செய்து வந்தேன்.

அம்மாவின் பள்ளியை விட்டு பிரிந்து புதிய பள்ளியில் சேர்ந்தபொழுதுதான் உணர்ந்தேன் இதற்குமுன் படித்த பள்ளியில் ஆசிரியர்கள் என்மேல் வைத்திருந்த நன்மதிப்பிற்கும், அன்பிற்கும், என் அம்மாதான் காரணம் என்பதையும்,ஒரு ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்குவதென்பது அவ்வளவு சாதாரண காரியமில்லை என்பதையும்.

என்னுடைய நாலாம் வகுப்பிலிருந்து, ஆசிரியர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.
தென்னை மரம் என்பதற்கு தொன்னை மரம் என்று எழுதியதற்காக கையை திருப்பிவைத்து விரல்முட்டியில் ஸ்கேலால் அடிக்கும் "மேரி டீச்சர்",
கட்டியிருக்கும் புடவைக்கு பொருத்தமாக வளையல், வாட்ச், செருப்பு, தலையில் உள்ள கிளிப் என்று எல்லாவற்றையும் பொருத்தமாக அணிந்துவரும் "மாலா டீச்சர்", தொட்டதுக்கெல்லாம் அடிக்கும் "காயத்ரி டீச்சர்", அப்பாவோடு ரயிலில் பயணிக்கும் "கண்ணையன் வாத்தியார்", அம்மா போட்டுகொடுக்கும் கிராபையும் கணக்கையும் வைத்து பாடம் நடத்தும் "வேங்கடரத்தினம் வாத்தியார்", "எங்க போச்சு" என்பதை "எங்க போய்ஷ்சு " என்று இன்றைய அஜீத் மாதிரி அன்னைக்கே பேசும் "நஞ்சையன் மாஸ்டர்", ரொம்ப பிரண்ட்லியா பழகும் "விஜியலட்சுமி டீச்சர்", "ருக்மணி டீச்சர்", என்னோட நண்பனின் காதலி வீட்டில் குடியிருந்த காரணத்திற்காகவே டியூசன் போன "கச்சீஷ்வரன் மாஸ்டர்", எல்லோரையும் வரிசையா ஒவ்வொரு பாராவா படிக்கசொல்லிவிட்டு புத்தகத்தை வைத்தது முகத்தை மறைத்தவாறே தூங்கும் "சண்முகம் வாத்தியார்",
நல்ல விஷயம் எதை செய்தாலும் அனைத்து மாணவர்களையும் கைதட்ட சொல்லி எல்லோர் முன்னிலையிலும் பாராட்டும், அங்கில வகுப்பெடுக்கும் தர்மலிங்கம் சார், இப்படி என்னுடைய பள்ளி பருவத்தில் எத்தனையோ ஆசிரியர்களை கவர்ந்தும், கடந்தும் வந்திருக்கிறேன்.


ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் தமிழ் சொல்லிகொடுத்த கதிர்வேலு ஐயாவை போல ஒருவரை இதுவரையில் நான் பார்க்கவில்லை, அவர் என்ன சொல்லிகொடுத்தார் என்பது இரண்டாவது விஷயம், எப்படி சொல்லிகொடுத்தார் என்பது முக்கியம். ஐயாவின் வகுப்பு என்றால் எனக்கு தெரிந்து ஒருவரும் மிஸ்பண்ணியதேஇல்லை. பள்ளி பொழுதில் என்னுடைய அநேக நேரம் பள்ளியின் வெளியே உள்ள மெஸ்ஸிலேயே இருக்கும். அட்டனென்ஸ் எடுக்கும்போது நாங்கள் இல்லை என்றாலே, எங்களை தேடி மெஸ்ஸிர்க்கே ஆள் அனுப்புமளவிற்கு, நாங்கள் பிரசித்தம். அப்படி இருந்த நாங்கள் ஐயாவின் ஒரு வகுப்பையும் விட்டது கிடையாது.அவர் வகுப்பெடுக்கும் அழகே தனி. அவரது வகுப்புகளில் எந்த ஒரு மாணவரும் பெஞ்சில் உட்க்காரக் கூடாது, அனைவரும் போர்டின் மத்தியில் அனைவருக்கும் மையமாக அமர்திருக்கும் ஐயாவை சுற்றி அரைவட்ட வடிவாக கீழே உட்க்காரவேண்டும். அதற்க்கு கூட "நான் பாடம் சொல்லும்போது நீங்க எல்லோரும் என் கண் பார்வைக்குள் அல்ல, என் கைக்குள் இருக்க வேண்டும்" என்று அழகாக ஒரு காரணமும் சொல்லுவார். அப்போதெல்லாம் அவரின் அருகில், அவரது காலுக்கடியில் அமர இடம் பிடிப்பதென்பது எல்லோரிடத்திலும் ஒரு போட்டியாகவே இருக்கும். பாடம் நடத்தும்போது தன காலுக்கடியில் அமர்திருக்கும் மாணவர்களின் தலையில் அவ்வப்போது கைகளை வைப்பதும், தட்டிகொடுப்பதுமாக இருப்பார். அவர் என் தலையில் கை வைக்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்வேன். நான் மட்டுமல்ல அனேகமாக அனைவரும். நான் சொல்வது எங்களின் பால்ய வகுப்புகள் பற்றி இல்லை, எனது பதினோராவது மற்றும் பனிரெண்டாவது வகுப்பினை பற்றியது. அப்போது ஒரு சில மாணவர்களுக்கு மீசை முளைக்கத் தொடங்கியிருந்தது, அந்த வயதிலும் அனைத்து மாணவர்களையும் ஒரு குழந்தையைப் போல, அவரது தொடுதலுக்காக ஏங்க வைக்க அவருக்குத் தெரிந்திருந்தது.


ஏற்க்கனவே என்னுடைய கார்த்திகை - மார்கழி என்ற பதிவில் கதிர்வேலு ஐயாவை பற்றி எழுதியிருப்பேன். அதை மறுபடியும் இங்கே குறிப்பிடுகிறேன். "அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய ( அல்லது புறநானூறு அல்லது வேறு ) செய்யுள். செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இதை சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா? என்பது சந்தேகம்தான்.


அவர் சொல்லிகொடுத்த பின் அந்த பாடம் மற்றும் அதன் விளக்கத்தை நாம் மறுபடியும் புத்தகத்தைஎடுத்துதான் படிக்கவேண்டும் என்பதில்லை. அவருடைய வார்த்தைகளிலேயே சொன்னால் "பசுமரத்தாணி போல்" எங்களுக்குள் பதிந்துபோயிருக்கும்.

எந்த ஒரு மாணவரையும் "போடா, வாடா" என்றோ ஒருமையிலோகூட அழைத்திருக்க மாட்டார். நன்றாக படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்கிற பேதம் அவரிடம் இல்லை. எல்லோரிடமும் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வார்.

எந்த ஒரு ஆசிரியர் வகுப்பெடுக்கும்போதும், மாணவர்கள் சிரித்தால் தண்டனை கிடைக்கும். ஆனால் ஐயா வகுப்பெடுக்க ஆரம்பித்தால் வகுப்பறையே ஏதோ விகடகவி மன்றமாக மாறிபோயிருக்கும். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து எங்கள் வகுப்பை பார்வையிட்டு போவார். அந்த அளவிற்கு அனைவரும் மகிழ்ச்சியாக, நிறைவான சந்தோசத்துடன் படித்துகொண்டிருப்போம், தமிழோடு ஐயாவையும். அவர் எங்களுக்கு படிப்பு சொல்லிதரவில்லை, எப்படி படிக்க வேண்டும் என்று சொல்லிகொடுத்தார். தமிழ் சொல்லிதரவில்லை, தமிழை எப்படி அனுபவிக்க வேண்டுமென்று சொல்லி கொடுத்தார்.


பதினோராவது மற்றும் பனிரெண்டாவது வகுப்புகளுக்கு எங்களுக்கு கணிதத்திற்கு ஆசிரியர் கிடையாது. சில சமயம் வேறு ஏதாவது ஒரு ஆசிரியர் வந்து ஏனோ தானோவென ஏதாவது நடத்திசெல்வர். சில சமயம் எங்கள் பள்ளியின் வெளியே அமைந்துள்ள டுடோரியல் பள்ளியின் ஆசிரியர் வந்து பாடம் நடத்துவார். வேருத்துபோகும் எங்களுக்கு, எங்களின் எல்லா வகுப்புகளும் தமிழ் வகுப்புகளாகவே இருந்துவிடக் கூடாதா? என்று ஏங்கிய காலம் அது.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பயின்ற என் நண்பனும் , என் பள்ளியின் முன்னாள் ஆசிரியரின் மகனுமான சண்முகராஜனை சந்தித்து பேசிகொண்டிருந்தபோது, ஐயாவை பற்றிய பேச்சு எழுந்தது, ஐயா இப்போது உயிருடன் இல்லை என்று சொன்னான்.
இதை எழுதும்போது என் கண்களில் உருண்ட கண்ணீர் துளிகளை மற்றும் இதை படித்த, படிக்கிற, படிக்க போகும் என் பள்ளி நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் இந்த பதிவை படித்தபின் ஏற்ப்படும் சின்ன சந்தோசத்தையும், நியாபகங்களையும் எங்கள் தமிழ் ஐயா கதிர்வேலுவிற்கு காணிக்கையாக்குகிறேன்.

16 கருத்துரைகள்:

$anjaiGandh! said...

எனக்கும் நெறய பேர் இருக்காங்க.. முக்கியமா தமிழய்யா ஜவஹர்.. :)

மங்களூர் சிவா said...

/

எந்த ஒரு மாணவரையும் "போடா, வாடா" என்றோ ஒருமையிலோகூட அழைத்திருக்க மாட்டார்.
/

இப்படி எல்லாம் வாத்தியார் இருந்திருக்காங்களா???

எங்க வாத்தியும் இருந்தாரே :((((((((
எப்பவுமே மூங்கில் பெரம்போட சர்க்கஸ்காரனுங்க மாதிரி :((((

கோபிநாத் said...

\\. அவரது வகுப்புகளில் எந்த ஒரு மாணவரும் பெஞ்சில் உட்க்காரக் கூடாது, அனைவரும் போர்டின் மத்தியில் அனைவருக்கும் மையமாக அமர்திருக்கும் ஐயாவை சுற்றி அரைவட்ட வடிவாக கீழே உட்க்காரவேண்டும். அதற்க்கு கூட "நான் பாடம் சொல்லும்போது நீங்க எல்லோரும் என் கண் பார்வைக்குள் அல்ல, என் கைக்குள் இருக்க வேண்டும்\\

ஆகா..கொடுத்துவச்சவுங்க நீங்க ;)

நல்ல பகிர்வு தல ;)

cheena (சீனா) said...

இடுகை நன்று நன்று. அசைபோட்டு மலரும் நினைவுகளை இடுகையாக்கிய விதம் அருமை. தமிழாசிரியரை பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். எனது தமிழ் ஆசிரியர் பெயர் அலங்காரம் - தமிழ் எனைல் அவரிடம் கற்க வேண்டும்.

ம்ம்ம்ம்ம்ம்ம்

ஜெகநாதன் said...

அருமை! இப்படி பட்ட சில ஆசிரியர்கள்​பொருட்டு​மொத்த ஆசிரியர்களுக்கு அரசு எத்தனை ​வேண்டுமானாலும் ஊதியம் வாரிக் ​கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. நான் படித்தது அரிக்காரன்வலசு என்ற குக்கிராமத்து அரசு நடுநிலைப்பள்ளியில். தலைமையாசிரியராக இருந்தவர் புலவர். நாகு. ஆறுமுகம். அப்போது அந்தப் பள்ளியில் படிப்பதற்காக அருகிலுள்ள ​நகரங்களிலிருந்து, ​மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, இந்த அரசு பள்ளியில் வந்து படிப்பார்கள் மாணவர்கள்! Totto-chan, the Little Girl at the Window என்ற புத்தகம், எழுதியவர் Tetsuko Kuroyanagi. இதை நான் தமிழில் படித்தேன் (டோட்டா சான்) . இது ரு ஜப்பானிய பள்ளியைப் பற்றிய நாவல். ஆர்வமிருந்தால் ​சொல்லுங்கள், புத்தகம் பற்றிய விவரங்கள் குறித்து அனுப்புகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

சஞ்சய் காந்தி : நன்றி சஞ்சய், தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும். பொதுவாக எல்லா தமிழாசிரியர்களும் இப்படிதான் போல ....

மங்களூர் சிவா: நன்றி தல, ///எங்க வாத்தியும் இருந்தாரே :((((((((
எப்பவுமே மூங்கில் பெரம்போட சர்க்கஸ்காரனுங்க மாதிரி :((((////

:-)

பரிசல்காரன் said...

வாவ்!

அற்புதமான ஞாபகங்களைக் கிளறிய பதிவு முரளி!

Keep Going!

முரளிகுமார் பத்மநாபன் said...

கோபி: நண்பா, நன்றி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள்

சீனா: //தமிழாசிரியரை பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும். எனது தமிழ் ஆசிரியர் பெயர் அலங்காரம் - தமிழ் எனைல் அவரிடம் கற்க வேண்டும்//
இந்த நியாபகக்கிளறல் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன். நன்றி சீனா அவர்களே, தொடர்ந்து படியுங்கள்

ஜெகன் நாதன் : //அருமை! இப்படி பட்ட சில ஆசிரியர்கள்​பொருட்டு​மொத்த ஆசிரியர்களுக்கு அரசு எத்தனை ​வேண்டுமானாலும் ஊதியம் வாரிக் ​கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. //
நன்றி ஜெகன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள். நிச்சயம் அனுப்புங்கள்
//நான் படித்தது அரிக்காரன்வலசு என்ற குக்கிராமத்து அரசு நடுநிலைப்பள்ளியில். தலைமையாசிரியராக இருந்தவர் புலவர். நாகு. ஆறுமுகம். அப்போது அந்தப் பள்ளியில் படிப்பதற்காக அருகிலுள்ள ​நகரங்களிலிருந்து, ​மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, இந்த அரசு பள்ளியில் வந்து படிப்பார்கள் மாணவர்கள்! //
அருமை. கிலுகிலுப்பையின் மூலமாக படிப்பவர்களின் பால்யத்தை அசைபோட வைப்பதே நோக்கம்

//Totto-chan, the Little Girl at the Window என்ற புத்தகம், எழுதியவர் Tetsuko Kuroyanagi. இதை நான் தமிழில் படித்தேன் (டோட்டா சான்) . இது ரு ஜப்பானிய பள்ளியைப் பற்றிய நாவல். ஆர்வமிருந்தால் ​சொல்லுங்கள், புத்தகம் பற்றிய விவரங்கள் குறித்து அனுப்புகிறேன்//

நிச்சயம் அனுப்புங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

வாவ்! அற்புதமான ஞாபகங்களைக் கிளறிய பதிவு முரளி!
Keep Going!
பரிசல் ரொம்ப நன்றி, முடிந்தால் தொடர்ந்து படியுங்கள் :-)

ஜெகநாதன் said...

அன்பு முரளி,
//நிச்சயம் அனுப்புங்கள்//
தங்கள் ஆர்வம் எனக்கு ஊக்கமூட்டுகிறது. அதன் விளைவு........ உங்களுக்கு மறு​மொழியிடலாம் என்று புத்தகத்தை எடுத்து எழுத ஆரம்பித்தேன்....... அப்புறம் அதன் அளவைப் பார்த்துவிட்டு என் வலைப்பக்கத்தில் ஒரு இடுகையாகப் போட்டு விட்டேன் :-) தயவுசெய்து தாங்கள் என் வலைபதிவுக்கு வந்து அந்த இடுகையாகிவிட்ட பின்னூட்டத்தை படித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.
தங்கள் வலைமனை நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும் - நீங்கள் விரும்பினால்.

கோவி.கண்ணன் said...

மிக மிக அருமையான அனுபவங்கள்.

ஆசிரியர் பசங்களுகே உள்ள சங்கடங்கள் நிறைய அனுபவித்து இருக்கிங்க. மற்ற பசங்களுடன் நெருங்கிப் பழக அது ஒரு தடைதான். அப்புறம் சரியாகி இருக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா ஜெகன் படிச்சிட்டேன் , பின்னோட்டமும் போட்டுட்டேன். என்னுடைய மின்னஞ்சல் murli03@gmail.com, உங்களின் அலைபேசி என்னை மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும். உங்களிடம் எனக்கொரு உதவி ஆகவேண்டியிருக்கிறது. நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கோவி.கண்ணன், தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுங்கள். நன்றி

ஜெகநாதன் said...

முரளி, ​மெயில் போட்டாச்சு!

Babu K said...

அன்புள்ள முரளி,

என் பால்ய நினைவுகளைத் தூண்டிவிட்டது உங்களது "கிலு கிலுப்பை" பதிவு. உங்களைப் போல் நானும் "கதிர்வேல்" ஐயாவின் மாணவன். அவர் கல்வி பயிற்றுவிக்கும் முறையைவிட வாழ்க்கையைப் பற்றி அவர் கற்றுவித்ததும் அதிகம். எவ்வளவு குறுப்பு செய்தாலும் அவர் திட்டும் அதிக பட்ச கோப வார்த்தை "ஏப்பா .யேய்...." சக மனிதர்களை நடத்தும்விதம் அலாதி.... ஆம் அவர் யாரையும் டா... போட்டு அழைத்ததில்லை. "தம்பி" என்றே அழைத்து அனைவரையும் தம் வசப்படுத்தியவர் அவர். இந்த உலகத்தில் மனித உருவில் அவர் இல்லையென்றாலும், உங்களைப் போல் என்னைப் போல் பல்வேறு இதயங்களில் அவர் இன்றும் வாழ்கிறார். "முக்காலை ஊன்றி மூவிரண்டைக் கடக்கையிலே, ஐந்து தலை நாகம் அருந்தக் கடித்தால் என் செய்வேன்?" பதில் "பத்து ரதப் புத்திரனின் மித்ருவின் சத்ருவின் பத்தினியின் காலை வாங்கித தேய் " மற்றும் "யான் நோக்குங்கால் நிலகோக்கு, நோக்காகால் தான் நோக்கி மெல்ல நகும்" போன்றவை இன்றும் (16 வருடங்கள் நிறைவு) நினைவுக்கு வருகிறது.

தர்மலிங்கம் சார்: எனக்கு ஆங்கிலத்தில் சற்றே ஈடுபாடு வர இவர்தான் முழுக் காரணம். இவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.

சண்முகம் சார்: என்னை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். நவம்பர் 4, 1992 கொல்லிடன் ஆறு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே ஆற்றில் குளிக்கும்பொழுது அடித்துச் செல்லப் பட்ட நான் அவரால் தான் இன்று உயிரோடிருக்கிறென். அனேகமாக அந்த கதையை சண்முகம் சார் சொல்லி கேட்டுரிப்பீர்கள் என நம்புகிறேன்.

ருக்மணி டீச்சர்: இவரை எனக்கு பிடித்ததோ அல்லது அவருக்கு என்னைப் பிடித்ததோ இவரிடன் 9ம் வகுப்பு 2 வருடமும், 10ம் வகுப்பில் அறிவியல் பாடமும் படித்தேன். "மெழுகு" என்பதை "மொளகா" என்பது போல் இவர் உச்சரிப்பதை எம் நண்பர்களோடு சேர்ந்து கிண்டல் செய்தது இன்றும் நினைவில் உள்ளது.

நம் இருவருக்கும் பல ஒற்றுமைகள்: நஞ்சப்பா பள்ளி, வேக்கேஷனல் குரூப், நஞ்சப்பா பாலிடெக்னிக், டிட்டா மற்றும் ஈ.பி.காலனி என நீள்கிறது. நீங்கள் மலையாளியாக இருந்தால் அதுவும் இந்த பட்டியலில் சேரும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி, பாபு சார், //நம் இருவருக்கும் பல ஒற்றுமைகள்: நஞ்சப்பா பள்ளி, வேக்கேஷனல் குரூப், நஞ்சப்பா பாலிடெக்னிக், டிட்டா மற்றும் ஈ.பி.காலனி என நீள்கிறது. நீங்கள் மலையாளியாக இருந்தால் அதுவும் இந்த பட்டியலில் சேரும்.//
மன்னிக்கவும் நான் மலையாளி அல்ல.:-)
உங்க பின்னூட்டமே என் பதிவை விட நீளமாக இருகிறது. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், தொடர்ந்து படியுஙகள்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.