அப்பா என்கிற மனிதன்


          குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைப்பாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன். பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேணுமென்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.

சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாபாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது. எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது. கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதோடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.

மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை. மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.


அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.

மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.

          எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.

       எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?

       சிறுவயது முதலே தாயுடன் ஏற்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாய்க்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது. ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனைமரமாய் நின்று போகிறது.

       என்னுடைய சிறுவயதில், சர்க்கஸ் பார்ப்பதற்காக, சைக்கிளில் அம்மா, அக்கா மற்றும் என்னையும் உட்காரவைத்துக்கொண்டு பனிரெண்டு கிலோமீட்டர் மிதித்துக்கொண்டு வந்த என் அப்பாவை எனக்கு அப்படியே நியாபகம் இருக்கிறது. கால்வலிக்கிறது என்று இடையே சைக்கிளை நிறுத்தினால், சீக்கிரம் போகணுமென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் என்னையும் சமாளித்துக்கொண்டு சைக்கிளை ஓட்டியபடி வருவார்.

      இன்றோ ஏதோஒரு மதிய வேளைகளில் எங்காவது சென்றுவிட்டு திரும்பும்போது "பஸ் ஸ்டாப்புல நிக்குறேன்,கொஞ்சம் வீட்டுல கொண்டுபோய் விட்டுறியாடா,தம்பி?" என்று கேட்க்கும் அப்பாவிற்கு "ஏதாவது ஆட்டோபிடித்து போயிடுங்கலேம்ப்பா, கொஞ்சம் வேலையா இருக்கேன்" என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.என் அப்பாவின் அந்த கால்வலிக்கு, இன்று என்ன செய்தால் சரிப்படும்? என்ன செய்து அவர் கால்வலியை போக்குவது. ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

       நான் இந்த பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது, நண்பர் ரங்கனிடமிருந்து வந்த மின்னஞ்சலில் ஒரு விடியோ என் பதிவிற்கு பொருத்தமாக, அவருடைய அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன்.
         தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்.

கண்ணாடி பார்க்கும் வரையில்


கண்ணாடி பார்க்கும் வரையிலும்
(நவீன மலையாள சிறுகதைகள்)
மொழிபெயர்ப்பும் தொகுப்பும்: உதய சங்கர்
வம்சி பதிப்பகம், விலை: ரூ.60.00இந்த புத்தகத்தின் அறிமுக உரையாக குறிஞ்சிவேலன் அவர்கள், மலையாள சிறுகதை வளர்ச்சி, ஓர் தூரப் பார்வை - என்கிற பெயரில்ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நல்ல கட்டுரை. மலையாள சிறுகதைகள் படிக்க விரும்புவோர், அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை. இதில் அவர் மலையாள சிறுகதை உலகை ஐந்து பாகங்களாக, ஐந்து காலகட்டங்களாக பிரித்திருக்கிறார். மேலும் அந்தந்த காலகட்டங்களுக்கு பொருத்தும் ஆசிரியர்களையும், அவர்களின் எழுத்தின் போக்கையும் மிக சுருக்கமாக மற்றும் எளிதில் விளங்கும் படியாகவும் எழுதியிருக்கிறார்.

"இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதிமூன்று கதைகளின் மூலம் மலையாள சிறுகதை உலகையே நம் முன் சிறப்பாகத் தொகுத்து தந்துள்ளார், உதயசங்கர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரான அவர், இத்தொகுப்பின் மூலம் தம் கொள்கையை விட்டுகொடுக்காமல் மலையாள சிறுகதை வரலாற்றிலுள்ள தலைமுறை இடைவெளிகளையும் திறம்பட ஒருங்கினைத்து, வாசகர்களை மிரட்டாத மொழியாக்கத் தன்மையையும் அளித்துள்ளதால் அழமான சிறந்த சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை".

- குறிஞ்சிவேலன் -
பத்து வருடங்களுக்கு மேலாக புத்தகங்கள் வாசித்து வந்தாலும், வெகு சமீபமாகத்தான் நல்ல புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் தேடி படித்து வருகிறேன். புத்தக வாசிப்பில் நானாக தேடி தேடி சிலபல புத்தகங்களை வாசித்ததுண்டு. பிறகு எஸ்.ராவின் கதாவிலாசம் மூலம் பல நல்ல எழுத்தாளர்களை வாசிக்க முடிந்தது. மேலும் என்னுடைய புத்தக வாசிப்பில் நண்பர் கிருஷ்ணபிரபுவின் பங்கு நிறையவே இருக்கிறது. இவரது அறிமுகங்கள் என்றைக்குமே ஏமாற்றியதில்லை. இவரது அண்மைய பதிவுகளில் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் எழுத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருந்தார். அவற்றை படித்ததிலிருந்து பஷீர் மற்றும் இன்னபிற மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

இந்த தேடலின்போது, எந்த புத்தகம் வாங்குவது என்ற குழப்பம் இருந்தது, தோழர்.ராஜாமணி அவர்கள் பரிந்துரைத்ததன் பெயரில் சிலபுத்தகங்களை வாங்க நேர்ந்தது. இதில் வைக்கம் முகமதுபஷிர்அவர்களின் "மதிலுகள்" நகுலனின் "வாக்குமூலம்" மற்றும் .... உதய சங்கர் அவர்கள்தொகுத்த "கண்ணாடி பார்க்கும் வரையில்" தகளி சுந்தரம்பிள்ளை அவர்களின் "தோட்டியின்மகன்" நான்கு புத்தகங்களை வாங்கினேன். நேரம் கருதி முதலில் படித்த புத்தகம்தான் "கண்ணாடி பார்க்கும் வரையிலும்".

வைக்கம் முகமது பஷீர் அவர்களின் "கொசுவை கொள்ளலாமோ", "ஒரு மனிதன்", "மரங்கள்",தகழி சுந்தரம் பிள்ளை அவர்களின் "பட்டாலத்துக்காரன்", ஜான் அப்ரகாம் அவர்களின் "ஒரு காத்திருப்பு", "ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி", ஸக்கரியா அவர்களின் "இரண்டு நாடகக்கதைகள்", "கண்ணாடி பார்க்கும் வரையில்", கிரேஸி அவர்களின் "பாஞ்சாலி", "ஒரு ஜனரஞ்சகக் கதையின் மரபு", "தேவி மகாத்மியம்", டி. பத்மநாபன் அவர்களின் "உயிரின் வழி"மற்றும் என்.எஸ். மாதவன் அவர்களின் "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." இந்த ஐந்து எழுத்தாளர்களின் பதிமூன்று கதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

இதில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள், “ஒரு மனிதன்”,
"ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி" "கண்ணாடி பார்க்கும் வரையில்", "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." . இந்த நான்கு கதைகளும் படித்தவுடனே சட்ட்டென்று விளங்கி விட்டன. மற்ற கதைகளை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறேன்.

கதைகளை பற்றி எதுவும் சொல்லவில்லை அவசியம் படியுங்கள். இந்த புத்தகம் மலையாள சிறுகதை வாசிக்கதுவங்கும் என்னை போன்ற எவர்க்கும் ஒரு நல்ல அறிமுகம்.

Akon - எகோன்

வெகு சமீபத்தில் அறிமுகப்பட்டு நான் மிகவும் ரசிக்கும் இன்னுமொரு இசை வடிவம்தான் ஹிப்-ஹாப். இன்றைய தமிழ் திரைப்படங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இசை வடிவம்தான் ராப் மற்றும் ஹிப்-ஹாப். ராப் என்பது சரியான இசைகோர்ப்புடன் பாடல் வரிகளை வசனங்களைப் போல படிப்பதுதான். காதலன் படத்தில் ஏ.ஆர். ரகுமான் "பேட்டை ராப்" என்ற பாடலில் செய்திருப்பாரே அதுதான். இப்பொழுது தமிழிலேயே நிறைய ராப் பாடகர்கள் வந்துவிட்டனர். "யோகி பி", "நட்சத்ரா" இப்பொழுது "கவிதை குண்டர்" என பல ராப் பாடகர்கள் நல்லமுறையில் பாடிவருகின்றனர். ஹிப்-ஹாப் என்பது அமெரிக்க ஆப்பிரிக்க இசையின் கலவை வடிவம்தான். இதில் ஒரு நல்ல மெலடியும் இருக்கும், அதே சமயம் வெஸ்டர்ன் மியூசிக் என்று சொல்லக்கூடிய அமெரிக்க இசையும் கலந்திருக்கும். வெகு இனிமையான பேளட் டிரம்ஸும், இன்னபிற வெஸ்டர்ன் சங்கதிகளும் சரிவர இணைந்த ஒரு வடிவம்தான் ஹிப்-ஹாப்.

இன்றைய தேதியில் அனேகம் பேரால் ரசிக்கபடுகிற ஒரு ஹிப்-ஹாப் பாடகர்தான் எகோன்।அகோன் என்று அறியப்படுகிற இவரது இயற்பெயர் அலியவுன் பதரா அகோன் தியாம். முஸ்லிம். மதத்தைசேர்ந்த அமெரிக்க கறுப்பினத்தவர். எகோனுக்கு அவரது குரல் ஒரு வரபிரசாதம், அப்படி ஒரு பெக்குலியர் வாய்ஸ் அவருக்கு. அகோன் என்ற பெயரில் பாடல்களை பாடி வருகிறார். இதுவரை மூன்று ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். 2004 லில் “டிரபில்” (
Trouble ) 2006ல் ”கன்விக்டட்” ( Konvicted ) மற்றும் 2008ல் “பிரீடம்” ( Freedom ). முன்றுமே அருமையான பல பாடல்களைக் கொண்டது, மேலும் நல்ல ஹிட் ஆல்பங்கள்.

”வாய்ஸ் மிக்ஸிங்” எனப்படுகிற ஒரு முறையை இவரது இசையில் அதிகம் பார்க்க முடியும். இதற்க்காகவே இவர் சில விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.மேலும் இரண்டு முறை கிராமி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவரது அனேகப் பாடல்கள் தமிழ் திரையிசைக்கு பொருத்தமானதாக இருக்கும். இவரது பாதிப்பை “ஹாரிஸ் ஜெயராஜ்” மற்றும் “யுவன்” பாடல்களில் அதிகம் உணரமுடியும். மேலும் நமது பெரும்பாலான பாடல்கள் “வாய்ஸ் மிக்ஸிங்” முறையைக்கூட இவரது ஸ்டைலிலேயே பின்பற்றியிருக்கின்றன. தமிழில் நல்லமுறையில் வாய்ஸ் மிக்ஸிங் செய்த பாடல்கள், சட்டென்று நினைவிற்கு வரவில்லை. அதனால் அதை இங்கே குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


பாடுவது தவிர இவருக்கு சொந்தமாக ஆப்ரிக்காவில் ஒரு வைர சுரங்கம் ஒன்று இருக்கிறது. இதில் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை அவரது தொண்டு நிருவனமான ”கான்பிடன்ஸ் பவுண்டேசன்” மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார்.


இசைதுறைக்கு வருவதற்க்கு முன்பு இவர் போதை மருந்துகளை விற்றுவந்ததாகவும், இவருக்கு மூன்று மனைவிகள் என்றும் நிறைய வதந்திகள் உண்டு. மெலும் இவரது பாடல் வரிகள் வன்மையாகவும் காட்சியமைப்புகள் ஆபாசமாகவும் இருப்பதாக இவர் மீது குற்றசாட்டு உண்டு. அதை தொடந்த இவரது சமீபத்திய பேட்டியில் “ நான் இதற்குமுன் என்னுடைய பாடல்வரிகளில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை, தற்சமயம் என்னை பல குழந்தைகளும் பார்க்கின்றனர், நான் அவர்களையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. எனவே இனி என் பாடல் வரிகளிலும், காட்சியமைப்பிலும் அவசியம் கவனமாக இருப்பேன்” என்கிறார்.


ஆக இவற்றை தாராளமாக ஒதுக்கிவைத்துவிடலாம், இவரது இசைக்காக. நல்ல இசை எங்கிருந்தாலும் அதை ரசிப்போம்.இவரது பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில பாடல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். சொடுக்கிகளை சொடுக்கி பாருங்கள், கேளுங்கள்.


ஒரு கொசுறுத் தகவல், நம்ம ஏ.ஆர்.ரஹுமானுக்கும் இவருக்கும் நல்ல நட்புவட்டம் இருக்கிறது. இவரது சமீபத்திய ஹிட்டான யூ சோ பியூட்டிஃபுல் பாடலில் நட்பிற்க்காக தலையை காட்டியிருக்கிறார், நம்ம ஏ.ஆர்.ரஹுமான். சரியாக பாடலின் 2.30 நிமிடத்தில் சின்னதாய் ஒரு கெஸ்ட் அப்பியரென்ஸ்.
Beautiful (பியூட்டிபுல்)
http://www.youtube.com/watch?v=8dq9g7soIDo&feature=fvst

Smack that (ஸ்மேக் தட்)
http://www.youtube.com/watch?v=cZHx6-skK7kDon't Matter (டோண்ட் மேட்டர்) http://www.youtube.com/watch?v=HiBcQeIax4g&feature=channel


Right now (ரைட் நவ்) http://www.youtube.com/watch?v=b-Qr9t_lDUE


இதுபோக எகோனின் மற்ற அனைத்து பாடல்களையும் பார்க்க அவரது தளத்திற்க்கு செல்லவும்।
http://www.akononline.com/

பிரையன் ஆடம்ஸ் ஒரு அறிமுகம்


பிரையன் ஆடம்ஸ், என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சம் தொண்டை கட்டினாற்போல இருக்கும் அவரது குரல்தான். மிக விஷேசமான குரல் அவருடையது. ஏழு கட்டையை விட்டு எட்டாவது கட்டையில் பாடுவதைபோல உச்சஸ்தாயில் பாடுவது இவரின் சிறப்பம்சம். ஆடம்ஸ் ஒரு தலை சிறந்த ரக் இசைப்பாடகர், Stirng Guitar மற்றும் Electrical Guitar வாசிப்பதில் கைதேர்ந்தவர்.

என்னுடைய கல்லூரி காலங்களில் MTV- யில் அடிக்கடி இவரது பாடல்களை ஒளிபரப்புவார்கள். அவ்வப்போது அதை பார்த்தாலும் அதற்கு முன் பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் அவ்வளவாக அறிமுகமில்லை, அதிகம் கேட்டதுமில்லை. ஆனாலும் அவரது வசீகரிக்கும் குரல் சேனலை மாற்ற அனுமதித்ததேயில்லை. "யார்ட இது? இப்படி தொண்டை கிழிய கத்தி பாடுறதுன்னு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.அதுவும் கிடாரையும் வாசித்துக்கொண்டு அவ்வப்போது நடனமும் ஆடியபடி ஏழாவது கட்டையில் பட்டும் பாடியபடி இருந்த மேடை கச்சேரிகளை பார்த்தேன். (என்னுடைய நண்பனுக்கு ராக் இசையே பிடிக்காது, அவன் Aero Smith என்கிற பாடகரின் பாடல்களை கேட்டுவிட்டு இது என்னடா பாட்டு, என்று சண்டைக்கே வந்து விட்டான்) . ஏரோ ஸ்மித் பாடுவதும் ராக்தான், ஆனால் எனக்கும் அது பிடித்தமானதாய் இருந்ததில்லை.

பிறகு பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்த பின்னர்தான் அவரது குரலிலும் பாடலிலும் இருந்த மெலடியை அனுபவிக்க முடிந்தது. அன்று முதல் அவரது பாடல்களை விரும்பி கேட்க்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து நான் ரசித்த, முதல் ராக் இசைபாடகர் பிரையன் ஆடம்ஸ். இவருடைய பாடல்களை கேட்ட பின்னர்தான் இவரது முந்தைய தலைமுறை பாடர்கர்களின் பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.

"அடியே கொள்ளுதே" பாடலின் முடிவில் சூர்யா வெறும் கையில் கிடாரை வாசிப்பது போல செய்துகொண்டு ஒரு காலை தூக்குவாரே , அது பிரையன் ஆடம்ஸின் ஸ்டைல். அவரது பெரும்பாலான பாடல்களின் முடிவில் இசை முடியும் பொழுது ஒரு காலை மட்டும் இசைக்கு ஏற்றவாறு காலை அசைப்பது அவரது ஸ்டைல்.

பிரையன் ஆடம்ஸ், உலகம் முழுவதும் பலபல சேவை அமைப்புக்களுக்கும்,குழந்தைகளுக்கும்,இளம்வயதினருக்கும் அவர்களுக்கான உயர்படிப்புகளுக்கும், வேலைவாயப்புக்களுக்கும், பெருமளவிக்கு தன்னாலான உதவிகளை "தி பிரையன் ஆடம்ஸ் பவுண்டேசன்" என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் செய்து வருகிறார். மேலும் இயற்கை பேரழிவுகள், போர் போன்ற அழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று கலைநிகச்சிகள் நடத்தி அதன் வருமானத்தை அந்த நாட்டின் வளரச்சிக்காக செலவிடுவார். அனேகமாக பல வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் கலைநிகழ்ச்சி நடத்திய முதல் ஒரே மேற்கத்திய இசைகலைஞர் இவராகத்தான் இருப்பார். அங்கு நடந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கே நிகழ்ச்சிநடத்தினார்.

இசை தவிர பிரையன் ஆடம்ஸின் மற்றொரு திறமை புகைப்படம் எடுத்தல். புகைப்படம் எடுப்பது என்பது இவரது பொழுதுபோக்கு, இதில் நல்ல அனுபவமும் தேர்ந்த அறிவும் இவருக்கு உண்டு. 2008-ல் ஜெர்மனியை சேர்ந்த லீட் என்கிற அச்சுகலை நிறுவனம் இவரது புகைப்படக்கலையை பாராட்டி "லீட் அவார்ட்" என்ற விருதை கொடுத்தது.

இவரது பெரும்பாலான பாடல்கள், ஒரிவித மென்சோகம் கொண்டதாக இருக்கும். "ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் ஆறு பாடல்களுமே பிரையன் ஆடம்ஸ் இயற்றி பாடியதுதான். அதற்காகவே அந்த படத்தை தேடி தேடி பார்த்தேன். படமும் அருமை. இந்த படத்தின் இறுதியில் வரும் (End Tiltle) "Here I Am" என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்.

அந்த படத்தில் வரும் பாடல்களுக்கான வீடியோ சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

"Here I am"

http://www.youtube.com/watch?v=R2U9GA-1QX4&feature=related

"This is where I belong"

http://www.youtube.com/watch?v=vaYrEqsmMqg&feature=related

"I will always return"

http://www.youtube.com/watch?v=FB8QeHILXJQ&feature=related

"You can't take me"

http://www.youtube.com/watch?v=hxeIWBECZpU&feature=related

"Get off my back"

http://www.youtube.com/watch?v=G6MmbDhjXLM&feature=related

"Sound the Bulge"

http://www.youtube.com/watch?v=BKh8cTzN8Lc

இதுபோக ஆடம்ஸின் எனது விருப்பப் பாடல்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

சம்மர் 69 (Summer 69)
அனேகமாக நான் முதலில் மிகவும் விரும்பி கேட்ட ராக் இசைப்பாடல் இதுவாகத்தானிருக்கும். எலக்ட்ரிகல் கிடாரும் மெட்டல் ட்ரம்ஸுமாக அதிர அதிர ஒரு ராக் பாடல்.
http://www.youtube.com/watch?v=9f06QZCVUHg&feature=channel

தயவு செய்து என்னை மன்னித்து விடு. (Please Forgive Me)
இந்த பாடலும் ஈகிள்சின் "ஹோட்டல் கலிபோர்னியாவும்" என்னுடைய சோனி ஆடியோ பிளேயரில் "All Time Favorites" என்ற பிரிவில் முதலில் இருக்கும்பாடல்கள்.
http://www.youtube.com/watch?v=9EHAo6rEuas&feature=channel


எல்லாமே காதலுக்காகத்தான் (All for Love)
இந்த பாடல் பிரையன் ஆடம்ஸ், ரோட் ஸ்டுவர்ட் மற்றும் என்னுடைய மிகவிருப்பதிர்ககுறிய மற்றொரு ராகிசை பாடகர் ஸ்டிங், இவர்கள் மூவரும் இணைந்து பாடியது. இந்த பாடல் ஆடம்ஸ் மட்டுமே தனித்து பாடிய பதிப்பும் கிடைக்கிறது, இருந்தும் இந்த பதிப்பை இங்கே குறிப்பிடக்காரணம் இந்த பாடலின் ஆரம்பத்தில் ஸ்டிங், ஆடம்ஸ் போல உச்சஸ்தாயில் பாட முயன்றிருப்பார். ஆனால் அவரால் அவ்வாறு பாட முடியாது, அதன்பின் அதே வரிகளை ஆடம்ஸ் வெகு சுலபமாக பாடியிருப்பார். அவசியம்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=n-AB7RJpOjY&feature=channel

நான் இங்கேதான் இருக்கிறேன் (HERE I AM)

இந்த பாடலும் ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் பாடல்தான் ஆனால் இது ஆடம்ஸ் நடித்து அவரது விடியோ ஆல்பத்திற்காக வெளியிட்ட பிரத்தியேக விடியோ இணைந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=G6xr6VKg7sEஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன


ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.60.00

உயர பறக்கும் எதுவானாலும் இறங்கத்தான் செய்யும், ஹெலிகாப்ட்டரானாலும் சரி, காதாலாக இருந்தாலும் சரி. இது ஒரு காதல் கதையா? என்றால் இல்லை. ஆனால் இதில் ஒரு காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த முகமூடியும் இல்லாமல், மிக இயல்பாய் ஒரு பட்டாம்பூச்சியை போல சுற்றி சுற்றி வருகிறது. சிறைப்படுத்த முயலும் கைகளைப் பார்த்தது அது ஏளனமாக சிரிக்கிறது.

முற்றிலும் புதியதொரு அனுபவத்தை புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார், இ.பா. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இதுவரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும் ஜெத்வேகத்த்தில் பறக்கும்அழுத்தமான படைப்பு - தி.ஜானகிராமன்.


"என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்....... அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல் துடிப்பை மீண்டும் நடைமுறைப் படுத்தி வாழ முடியுமா என்பதுதான் என் பரிசோதனை..... கடந்துபோன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கிறான்"

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள், நாவலிலிருந்து சிலவரிகள் என்று நாவலின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக எந்த நாவலையும் படித்து முடிக்க இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளும் நான் இந்த வரிகளில் என்ன விஷேசம் இருந்துவிடப் போகிறது என்ற ஆர்வத்திலேயே நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

திருமணமாகி இருபத்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் திலகம், ஒரு சின்ன ஆபரேசன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றாலும் ஆப்பரேசனுக்கு பயந்து பிள்ளை பெறுவதையே தவிர்த்து நிற்கும் பயந்த சுபாவம் கொண்டவள். வெகுளி. தனக்கு குழந்தை இல்லாதகாரணத்தால், எங்கே கணவன் தன்னிடம் சுவாரஸ்யம் இழந்துவிடுவானோ என்கிற தாழ்வுமனப்பான்மையோடு வாழும் திலகம்.


அவளின்
வயது நாற்ப்பதுகளில்
இருக்கும் கணவனாக அமிர்தம். ஒரு ரசனையற்ற மனைவிக்கு கணவனாயிருப்பதை மிகப்பெரிய தியாகமாக நினைப்பவன், கூடவே தன்னை அந்த தியாகியாகவும் நினைப்பவன். தன வாழ்வில் தற்ச்செயலாக சந்த்தித்த, (ஒருவேளை அவனுக்கு குழந்தை பிறந்திருந்தால், அவன் மகள் வயதுள்ள) பானு என்கிற பெண்ணின்
ஒவ்வொரு செயல்களிலும் தன் பழைய காதலை நினைவுகொள்கிறான். நாற்ப்பதுகளில் நாய் குணம் என்ற மனைவியின் சொல்லுக்கு பொருளாக, அமிர்தம்.


பானு, எலலா துறைகளிலும் தேர்ந்த ஞானம் கொண்டவளாய், இ.பாவின் கதைகளில் வரும் இண்டலேக்ட்சுவல் கதாபாத்திரம். இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இவள் போன்ற பெண்களை பாலச்சந்தரின் படங்களில் அதிகம் பார்க்க முடியும். எத்தகைய சூழ்நிலைகளையும் வெகு புத்திசாலித்தனத்துடனும் யதார்த்தம் குறையாமலும் நேர்கொள்ளும் பக்குவம் மிக்க ஒரு கதாபாத்திரம், பானு.


அமிர்தத்தின் கடந்த கால காதலை நினைவுபடுத்தும்படியாக வருகிற பானுவால் நினைவு கூறப்படுகிற முன்னாள் காதலியாக வரும் நித்யா, இவர்களை சுற்றியே பயணிக்கிற கதை.

இந்த நாலு பிரதான கதாப்பாத்திரங்கள் மூலம் வெகு வேகமான ஒரு நாவல்.


மனைவியை ஒன்றும் தெரியாதவளாக பார்க்கும் அமிர்தம், தன்னுடைய ரசனைக்கு ஒத்துபோககூடிய பானுவிடம் தன்னுடைய இழந்த இளமையை வாழ்ந்து பார்க்க விரும்புகிறான். மனைவியின் கோவத்தை அலட்சியப்படுத்தும் அவன் கோவம் பானுவால் அலட்சியப்படுத்தப் படுகிறது. பானுவிடம் ஒவ்வொரு சுழலிலும் அவமானப்படும்போதும் எதுவும் செய்ய இயலாதவனாய் நிற்க்கிறான். தனக்கு நிகரானவள் தனக்கு மனைவியாக இருக்க முடியாது என்கிற ஆண்வர்கத்தின் சாட்சியாக கடைசியில் திலகத்திடமே வந்து சேர்கிற பொழுது திலகமும் அவனை விட்டு விலகியிருக்கிறாள்.

நாவலில் ஒரு சில சுவாரஸ்யமான வரிகள்.
"நீங்க விருப்பபடுற மாதிரி நான் நடந்துக்குறேன், ஆனா அந்த பொண்ணோட அம்மா சொன்ன மாதிரி விரசமா நடந்துக்காதிங்க"

"விரசமா?"

"ஆமாம், நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவளுக்கு இந்நேரம் பதினாறு, பதினேழு வயதிருக்காதா?

"என்னை கிழவனா காட்டுறதுல உனக்கு ஏன் இவ்வளவு அசுர திருப்தி"

"அப்ப, நீங்க இளமையா இருப்பதை காட்டத்தான் இப்படி செய்கிறீர்களா?"

மனைவியின் இந்த கேள்வியால் நிலைகுலைந்து போகிறான், அமிர்தம். இந்த நிலையிலும் கூட இவளாகத்தான் பேசுகிறாளா? இல்லை யாரேனும் சொல்லி கொடுத்திருப்பார்களா? என்று மனதிற்குள் யோசிக்கிறான்.


நாவலின் கடைசியில் டெலிபோன் ஒலிக்கிறது. அது யாராக இருக்கும்? பானுவா? திலகமா? அல்லது பிரம்மையா? அது நமக்கு தெரியவேண்டியதில்லை. இந்த சந்தேகம்தான் சரியான விடை. நாவலின் இடையே வருகிற செய்தியைபோல எது தைரியம்? எது கோழைத்தனம்? என்கிற கேள்விக்கு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பதிலை தந்து கொண்டிருக்கும் என்பதுதான் சரி.