ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன


ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.60.00

உயர பறக்கும் எதுவானாலும் இறங்கத்தான் செய்யும், ஹெலிகாப்ட்டரானாலும் சரி, காதாலாக இருந்தாலும் சரி. இது ஒரு காதல் கதையா? என்றால் இல்லை. ஆனால் இதில் ஒரு காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த முகமூடியும் இல்லாமல், மிக இயல்பாய் ஒரு பட்டாம்பூச்சியை போல சுற்றி சுற்றி வருகிறது. சிறைப்படுத்த முயலும் கைகளைப் பார்த்தது அது ஏளனமாக சிரிக்கிறது.

முற்றிலும் புதியதொரு அனுபவத்தை புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார், இ.பா. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இதுவரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும் ஜெத்வேகத்த்தில் பறக்கும்அழுத்தமான படைப்பு - தி.ஜானகிராமன்.


"என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்....... அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல் துடிப்பை மீண்டும் நடைமுறைப் படுத்தி வாழ முடியுமா என்பதுதான் என் பரிசோதனை..... கடந்துபோன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கிறான்"

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள், நாவலிலிருந்து சிலவரிகள் என்று நாவலின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக எந்த நாவலையும் படித்து முடிக்க இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளும் நான் இந்த வரிகளில் என்ன விஷேசம் இருந்துவிடப் போகிறது என்ற ஆர்வத்திலேயே நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

திருமணமாகி இருபத்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் திலகம், ஒரு சின்ன ஆபரேசன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றாலும் ஆப்பரேசனுக்கு பயந்து பிள்ளை பெறுவதையே தவிர்த்து நிற்கும் பயந்த சுபாவம் கொண்டவள். வெகுளி. தனக்கு குழந்தை இல்லாதகாரணத்தால், எங்கே கணவன் தன்னிடம் சுவாரஸ்யம் இழந்துவிடுவானோ என்கிற தாழ்வுமனப்பான்மையோடு வாழும் திலகம்.


அவளின்
வயது நாற்ப்பதுகளில்
இருக்கும் கணவனாக அமிர்தம். ஒரு ரசனையற்ற மனைவிக்கு கணவனாயிருப்பதை மிகப்பெரிய தியாகமாக நினைப்பவன், கூடவே தன்னை அந்த தியாகியாகவும் நினைப்பவன். தன வாழ்வில் தற்ச்செயலாக சந்த்தித்த, (ஒருவேளை அவனுக்கு குழந்தை பிறந்திருந்தால், அவன் மகள் வயதுள்ள) பானு என்கிற பெண்ணின்
ஒவ்வொரு செயல்களிலும் தன் பழைய காதலை நினைவுகொள்கிறான். நாற்ப்பதுகளில் நாய் குணம் என்ற மனைவியின் சொல்லுக்கு பொருளாக, அமிர்தம்.


பானு, எலலா துறைகளிலும் தேர்ந்த ஞானம் கொண்டவளாய், இ.பாவின் கதைகளில் வரும் இண்டலேக்ட்சுவல் கதாபாத்திரம். இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இவள் போன்ற பெண்களை பாலச்சந்தரின் படங்களில் அதிகம் பார்க்க முடியும். எத்தகைய சூழ்நிலைகளையும் வெகு புத்திசாலித்தனத்துடனும் யதார்த்தம் குறையாமலும் நேர்கொள்ளும் பக்குவம் மிக்க ஒரு கதாபாத்திரம், பானு.


அமிர்தத்தின் கடந்த கால காதலை நினைவுபடுத்தும்படியாக வருகிற பானுவால் நினைவு கூறப்படுகிற முன்னாள் காதலியாக வரும் நித்யா, இவர்களை சுற்றியே பயணிக்கிற கதை.

இந்த நாலு பிரதான கதாப்பாத்திரங்கள் மூலம் வெகு வேகமான ஒரு நாவல்.


மனைவியை ஒன்றும் தெரியாதவளாக பார்க்கும் அமிர்தம், தன்னுடைய ரசனைக்கு ஒத்துபோககூடிய பானுவிடம் தன்னுடைய இழந்த இளமையை வாழ்ந்து பார்க்க விரும்புகிறான். மனைவியின் கோவத்தை அலட்சியப்படுத்தும் அவன் கோவம் பானுவால் அலட்சியப்படுத்தப் படுகிறது. பானுவிடம் ஒவ்வொரு சுழலிலும் அவமானப்படும்போதும் எதுவும் செய்ய இயலாதவனாய் நிற்க்கிறான். தனக்கு நிகரானவள் தனக்கு மனைவியாக இருக்க முடியாது என்கிற ஆண்வர்கத்தின் சாட்சியாக கடைசியில் திலகத்திடமே வந்து சேர்கிற பொழுது திலகமும் அவனை விட்டு விலகியிருக்கிறாள்.

நாவலில் ஒரு சில சுவாரஸ்யமான வரிகள்.
"நீங்க விருப்பபடுற மாதிரி நான் நடந்துக்குறேன், ஆனா அந்த பொண்ணோட அம்மா சொன்ன மாதிரி விரசமா நடந்துக்காதிங்க"

"விரசமா?"

"ஆமாம், நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவளுக்கு இந்நேரம் பதினாறு, பதினேழு வயதிருக்காதா?

"என்னை கிழவனா காட்டுறதுல உனக்கு ஏன் இவ்வளவு அசுர திருப்தி"

"அப்ப, நீங்க இளமையா இருப்பதை காட்டத்தான் இப்படி செய்கிறீர்களா?"

மனைவியின் இந்த கேள்வியால் நிலைகுலைந்து போகிறான், அமிர்தம். இந்த நிலையிலும் கூட இவளாகத்தான் பேசுகிறாளா? இல்லை யாரேனும் சொல்லி கொடுத்திருப்பார்களா? என்று மனதிற்குள் யோசிக்கிறான்.


நாவலின் கடைசியில் டெலிபோன் ஒலிக்கிறது. அது யாராக இருக்கும்? பானுவா? திலகமா? அல்லது பிரம்மையா? அது நமக்கு தெரியவேண்டியதில்லை. இந்த சந்தேகம்தான் சரியான விடை. நாவலின் இடையே வருகிற செய்தியைபோல எது தைரியம்? எது கோழைத்தனம்? என்கிற கேள்விக்கு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பதிலை தந்து கொண்டிருக்கும் என்பதுதான் சரி.
4 கருத்துரைகள்:

வண்ணத்துபூச்சியார் said...

பகிர்விற்கு நன்றி முரளி.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சூர்யா, தொடர்ந்து ஊக்கம் கொடுப்பதற்க்கும், வாசிப்பதற்க்கும். :-)

கிர்பால் said...

நண்பா,
இ.பா. வின் சிறுகதைகளை விகடனில் மட்டுமே படித்திருக்கிறேன். முதல் முறையாக் இந்த புத்தகத்தை வாசிக்கலாமா?

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா கிர்பால், அவசியம் படிக்கலாம், ஆனால் இதற்க்கு முன்பு குருதிபுனல், ஏசுவின் தோழர்கள், வாசிக்கவும்.


குருதிபுனலுக்கான என்னுடைய புத்தக அறிமுகம். http://eniyoruvithiseivom.blogspot.com/2008/05/blog-post_23.html


ஏசுவின் தோழர்களுக்கான நண்பர் கிருஷ்ணபிரபுவின் புத்தக அறிமுகம்
http://online-tamil-books.blogspot.com/2009/06/yesuvin-thozhargal-indra-parthasarathy.html

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.