ஒரு மனம் இருவேறு அதிர்வுகள்

இது என் அனுபவம், என்னை பாதித்த எனக்கு முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் பற்றியது.

திருப்பூரின் வெகுமுக்கியமான சாலையும் அதிக சனநடமாட்டமும்கொண்ட அவினாசி சாலையின் ஓரமாக இருக்கும் ஒரே காரணத்தினால், தினமும் வாடிக்கையாளர்களைக் காட்டிலும் பிச்சைகாரர்களின் வருகை அதிகமாகவே இருக்கும், என் அலுவலகம். ஆரம்பகாலங்களில் தினமும் 25 பைசா 50 பைசா என்று எதையாவது கொடுத்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் வெறுத்தே போய்விட்டது.

சாமிவேடமிட்டுகொண்டு, குழந்தைகளை தூக்கிக்கொண்டு, ஊருக்கு செல்லவேண்டிய பேருந்துக்கு பணம் வேண்டுமென்று, பாட்டுபாடிக்கொண்டு, சாட்டையிலடித்துக் கொண்டு, வேடிக்கைகாட்டிக்கொண்டு, காசு கொடுக்கவில்லையெனில் உனக்கும் என்னை மாதிரியே புள்ளை பிறக்குமென்று சாபம் கொடுக்கும் அரவாணிகள் . அப்பப்பா இவர்களுல்தான் எத்தனை ரகம். பிறகு இவ்வாறு முடிவு செய்துகொண்டேன். வயதானவர்கள், உடலூனமுற்றவர்கள் இவர்களுக்கு மட்டுமே உதவிசெய்வது என்று.
ஆக பிச்சை அல்லது காசுவேண்டுமென்று வரும் யாராக இருந்தாலும் பத்துரூபாய் தருகிறேன், அலுவலகத்தின் முகப்புகண்ணாடியை துடைத்துவிட்டு வாங்கிக்கொள் அல்லது என் வண்டியை துடைத்துவிட்டு வாங்கிகொள் என்று சொல்ல ஆரம்பித்தேன். அனேகமாய் ஆறு வருடங்களிருக்கும், இதுவரை ஒரு சிறுவனைத்தவிர யாரும் ஒரு சின்ன வேலைதானே செய்துவிட்டு வாங்கிக்கொள்வோமென்று நினைத்ததுகூட கிடையாது. அந்த சிறுவன் பெயர், பழனி. இரண்டு வருடங்களிருக்கும் ஏதோ ஒரு டீக்கடையின் முன்பு நின்று நண்பனோடு பேசிகொண்டிருந்தபோது வந்தான். அவனுக்கு எட்டிலிருந்து பத்து வயதிற்க்குள் இருக்கும். காலைப்பிடித்துக் கொண்டு கேட்டான் “அண்ணா, காசு கொடுங்கண்ணா, ரொம்ப பசிக்குது” என்று.

ஒருவேளை உணவிற்க்காக கையேந்தி நிற்ப்பவனின் நிலைமை, தட்டை நீட்டியபொழுதெல்லாம் உணவுகிடைக்கும் நமக்கு தெரிய சாத்தியமில்லை என்ற எஸ்.ராவின் வரிகள், நினைவில் ஓடியது. என் மனதிலிருந்த அந்த சின்ன இரக்க உணர்வையும் தாண்டி அவனிடம் சொன்னேன் “இந்தா இது என்னோட வண்டி. டேங்க் பேக்ல துணியிருக்கு, எடுத்து வண்டியை சுத்தமா துடை. நானே உனக்கு நல்ல சாப்பாடா வாங்கித்தரேன்”. எந்த யோசனையும் மறுப்புமில்லாமல் உடனடியாக துணியை எடுத்து வண்டியை துடைக்க ஆரம்பித்துவிட்டான். நாங்கள் தொடர்ந்து பேசிகொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, ஏதோ அவனுக்கு தெரிந்தமாதிரியாக துடைத்திருந்தான். எனக்கு வண்டியும் சுத்தமாகத்தான் தெரிந்தது.

எங்கே காசு கொடுக்காமல் விரட்டிவிடுவேனோ என்கிற பயம் அவன் கண்களில் இருந்தது. இது நான் என் நேர்மையை அவனிடம் நிருபிக்கும் நேரம். அவனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த சாப்பாட்டுகடைக்கு சென்று சாப்பிட வைத்து, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். “ஒரு ரூபாயை கையில திணிச்சிருந்தா அவன்பாட்டுக்கு போயிருப்பான், இப்போ ஐம்பது அறுபதை சாப்ட்டானா?” என்ற நண்பனின் கேள்வியை நான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
இன்றுவரை அந்த சிறுவனை நான் மறுபடியும் பார்க்கவே முடியவில்லை, நல்லதுதான். அவன் கடைசியாக பிச்சையெடுத்தது அன்றே கடைசியாக இருக்க வேண்டுமென்றுதான் நான் இன்றுவரை ஆசைபடுகிறேன்.

--------------------------------------------------------

என் அலுவலக வாசலில் எப்போதும் ஒரு பிச்சைகாரர் இரவு நேரங்களில் படுத்திருப்பார். காலை நான் அலுவலகத்திற்கு வந்து கதவை திறக்கும்போது அவரும் தன் மூட்டைமுடிச்சுக்களோடு அடுத்தவேளைக்கான உணவுத் தேடலிற்காககிளம்பிவிடுவார். அதன் பிறகு இரவு வேளைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். சில மத்திய நேரங்களில் என் அலுவலகத்தின் முன் உள்ள நிழலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட ஆறு மாதங்களாக அவரை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். எங்கெங்கோ போய் பிச்சையெடுத்து வந்தாலும் இதுவரை என்னிடம் காசு என்று கேட்டதேயில்லை. இரவுமுழுவதும் படுத்துக்கொள்ள அலுவலக படிக்கட்டுக்களை விட்டுக்கொடுத்ததே போதுமென்று அவர் நினைத்திருக்கலாம்.
இரண்டுவாரங்களுக்கு முன்பு நல்ல மழை, வேலைபளுவேதுமில்லாததால் வண்டியை எடுத்துக்கொண்டு நானும் நண்பனும் மழையில் நனைவதென்று முடிவுசெய்து கிளம்பினோம். ஒரு பத்துகிலோமீட்டர் சுற்றிவிட்டு தொப்பலாக நனைந்துவிட்டு திரும்பினோம். எங்கள் அலுவலக கட்டிடத்தின் மாடிக்கு செல்லும் வழியில் சூடான இரண்டு “பிளாக் டீ”யுடன் வந்து நின்றோம். அங்கே அவரும் முழுக்க நனைந்து வெடவெடத்து நின்று கொண்டிருந்தார். நான் மழையில் நனைந்ததை சொன்னது, என் மழையனுபவத்திற்க்காக அல்ல, இருவரின் நனைதலுக்குமிடையேயான வித்தியாசத்திற்க்காக.

”ஏன்யா, மழை வருதுன்னு தெரியுதுல்ல, எங்கயாவது ஓரமா நிக்க வேண்டியதுதானே?” என்றேன்.

“ நாலுபேரு நிக்கிற இடத்துல நம்மல எங்க நிக்க உடுறாங்க”

“சரி, எந்த ஊரு நீங்க?”

“அந்தியுருங்க”

“உங்களுக்கு வீடு ஏது இல்லையா? பையன், பொண்ணு இப்படி யாரவது இருக்காங்களா?”

“வீடெல்லாம் இல்லிங்க ரெண்டுபேர் படுக்குற அளவில ஒரு குடிசை இருந்தது, அதையும் வித்துதான் புள்ள கல்யாணம் செஞ்சு வச்சேன்” என்றவர் மீண்டும் அவராகவே தொடர்ந்தார் “ஊட்டுகாரியும் போனதுகப்புறம், அப்படியே வந்துட்டேன், என்ன கிடைக்குதோ, சாப்டுகிட்டு, எங்க இடம் கிடைக்குதோ அங்க படுத்துக்குவேன். உசுரு போனா, கவுர்மெண்ட் ஆளுக தூக்கி போடப்போறாங்க” என்றார்.

எனக்கு அதுக்கு மேல் எது பேசத்தோணலை. அவருக்கு பத்துரூபாயோடு, ஒரு டீயும் பீடிக்கட்டும் வாங்கிகொடுத்துவிட்டு வந்து விட்டேன். அதன் பிறகு என்னை பார்க்கும்போதெல்லாம் “சின்னையா” என்று கூப்பிடுகிறார். யாரு பெரியய்யா என்றோ நான் ஏன் சின்னையா என்றோ அவரிடம் இதுவரை கேட்கவில்லை. போன வாரம் என்னிடம் கேட்டார் “ஒரு ஐந்து ரூபாய் கொடுங்க, சின்னையா. நான் ஊருக்கு போறேன், இங்க எங்கேயும் படுக்க முடியலை, தினமும் மழைபெய்யுது” என்றார்.

நான் பத்து ரூபாயாக கொடுத்தேன். என்னிடம் ஐந்து ரூபாய் இருக்குங்க, அதுபோதும் என்றுசொல்லி ஐந்து ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நேற்றுதான் அவரை பார்த்தேன். அவரோடு கூடவே ஒரு ஆறு வயது மதிக்கதக்க சிறுவன். பேரனாம். ஆயுத பூஜை காரணமாக அவன்கையில் ஏராளமான பொறி, சுண்டல் தட்டுகள். அவர் ஒவ்வொரு கடையாகப் போய் பேரனுக்கு பொறி, சுண்டல், கேசரி என்று வாங்கிகொண்டுவந்து கொண்டிருந்தார்.அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் அச்சிறுவன் மகளின் மகனென்றும், அச்சிறுவனை அந்த பெண் இவரோடு கட்டாயமாக அனுப்பிவைத்திருந்ததும் தெரிந்தது.

அவரிடம் இரு பத்து ரூபாயைக் கொடுத்து, ஏன்யா நீ இங்க கஸ்டபடுறது பத்தாதா? இந்தபையனை ஏன் கூட்டிகிட்டு வந்த? மொதோ வேலையா பையனை கொண்டுபோய் விட்டுட்டு வந்திடு என்றேன்.

பிறகு என் நண்பனிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நண்பன் என்னிடம் “ஏண்டா அந்த குடுசையில இந்தாளுக்கு ஒரு சின்ன இடம் இல்லாமலா போகும்” என்றான்.

“வீட்டுக்குள்ள வேண்டாம், வெளிய படுக்கவச்சுகூடவா சோறுபோட முடியாது. என்ன ஜென்மங்களோ” என்றேன் நான்.

”என்ன மனுசங்கடா அவங்க? பெத்த அப்பனை கூட வச்சு சோறு போட துப்பில்லை, மகனை அப்பங்கூட டூர் அனுப்பி வச்சிருக்குதுங்க, ஒருவேளை
அடுத்த குழந்தைக்கான ஆயத்தவேலைகள், இன்று அங்கே நடக்கும்” என்றான் இதைக்கேட்டுகொண்டிருந்த இன்னொரு நண்பன்.எது எப்படியோ மகள் வீட்டிலிருக்கும்போது அவர் இறந்துபோய்விட வேண்டும், அவர் சொன்னதுபோல கவுர்மெண்ட் ஆளுக தூக்கிபோடும் நிலை வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

ஆதிஃப் அஸ்லாம் - ரசனைக்குரிய பாடகன்


அத்திஃப் அஸ்லாம், இருபத்தி ஆறே வயதான பாகிஸ்தானி பாப் இசைபாடகர். பாகிஸ்தான் தவிர இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட பாடகர், இந்தியா மட்டுமில்லாமல் ஆசியாவின் தெற்கு பகுதி முழுவதும் பிரபலமான பாடகர். இன்றைய தேதியில் இளைஞர்கள், இளைஞிகளிடம் அதிகம் அறியப்பட்ட இளம்பாடகர், அத்திஃப்.


தனது நாட்டின் பாரம்பரிய இசையை இன்றைய மேற்கத்திய ராக் இசையின் கலப்போடு, ஒரு அழகான இசையை கொடுத்துவரும் ஒரு இளம்வயது பாடகன், Atif Aslaam என்றாலே நியாபகம் வருவது உச்சஸ்தாயில் வரும் அவரது ஹ்ம்மிங்ஸ்தான். இந்த பதிவில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் குறிப்பிட்ட பாடல்களை கேளுங்கள், Atif-ன் ரசிகராக மாறிவிடுவீர்கள் என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்துமில்லை.


கல்லூரி காலங்களிலேயே தனக்கு இணக்கமான நண்பர்களோடு சேர்ந்து தனியாக ஒரு குழு அமைத்து நிறைய பாடல்களை இசையமைத்து பாடிவந்தனர். அதிலும் குறிப்பாக இவர்களின் கல்லூரி காலங்களில் ஜுனூன் குழுவினர் மற்றும் ஸ்ட்ரிங்ஸ் இவர்களின் பாடல்களில் ஈர்க்கப்பட்டு இவர்களது பாடல்களை அதிகம் பாடிவந்தனர். பிறகு “ஜல்(JAL)" என்ற பெயரில் குழு அமைத்து ஒரு ஆல்பம் வெளியிட்டனர், பிறகு அதில் ஏற்ப்பட்ட சில முரண்பட்ட கருத்துக்களால் குழுவிலிருந்து வெளியேறி தனியாக சோலோ ஆல்பங்களை வெளியிட ஆரம்பித்தார்.


இப்படி சோலோவாக வெளியிட்ட முதல் ஆல்பமான “ஜல் பாரி (JAL PARI)" குறைந்த காலத்தில் அதிகம் விற்பனையான ஆல்பங்களில் ஒன்று. அதில் ஒரு குறிப்பிடதக்க பாடல்தான் Aadat (ஆதத்), எனக்கு தெரிந்து அதிக ரீமிக்ஸ் மற்றும் அதிகவெர்சனில் வெளிவந்த பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும்.


இதுவரை இவர் பாடி வெளிவந்த ஆல்பங்கள் மூன்று,

1. ஜல் பாரி - JAL PARI
2. தூரி - DOORIE
3. மேரி கஹானி - MERI KAHANI
4. ப்யாஸ் - PYAAS (இந்த ஆல்பம் இன்னும் வெளிவரவில்லை, அனேகமாக 2010-இல்). இந்த ஆல்பங்களில் குறிப்பிடத்தக்க சில பாடல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன்.


O Lamhey இந்த பாடல் ஜல் (JAL) என்ற குழுவாக இருந்தபோது வெளிவந்த பாடல். Doorie , Hum Kis Galli, O re Piya, Ehsaas


இதுதவிர இந்தி திரைப்படங்களில் ஒருசில பாடல்கள் பாடியிருக்கிறார், அனேகமாக அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள், கீழே கொடுத்துள்ள சுட்டிகளில் பாருங்கள்.

பஸ் ஏக் பல் என்கிற படத்தில் வரும் பாடல் Tere Bin, இந்த படத்தில்தான் ஆல்பங்கள் தவிர்த்து Atif Aslaam முதன்முறையாக பாடல் காட்சிகளில் தோன்றினார். இளம்வயது இசை ரசிகர்களிடம் இதற்க்காகவே, அவரை பார்ப்பதற்க்காகவே இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதிக கவனம் பெற்றது. படத்தின் பல காட்சிகள் அரங்கு நிறைந்து கிடந்ததாக என் நண்பன் சொல்ல கேட்டிருக்கிறேன்.

கிஸ்மத் கனெக்‌ஷன் என்ற படத்தில் வரும் பாடல் Bakhuda Tumhe. நல்ல மெலடி பாடல் இது, அவசியம் கேட்டுபாருங்கள், கூடவே அழகான வித்யாபாலன்.

ரேஸ் என்ற படத்தில் வரும் பாடல் Pehli Nazar Mein. உச்சஸ்தாயில் பாடுவது என்பது தன்னை பொருத்தவரை வெகுசுலபமென்று மறுபடியும் வெளிக்காட்டிய பாடல்.

கல்யுக் என்கிற படத்தில் வருகிற பாடல் zuda hoke bhi. இந்த பாடல் அவரது முதல் பாடலான ஆதத்தின் தழுவல்தான்.


கேளுங்க, கேட்டுவிட்டு எப்படி இருந்தது என்று அவசியம் சொல்லுங்கள். ஏதாவது பாடல்கள் விடிபட்டிருந்தாலும் அவசியம் தெரியப்படுத்துங்கள். :-)

என் வரலாறு (யாரு என் வரலாறு கூறுவது)


32 கேள்விகள் என்று ஒரு தொடர்பதிவு பதிவுலகத்தையே சுற்றி வந்த பொழுது யாராவது என்னை இந்த தொடர்பதிவிற்கு கூப்பிட மாட்டார்களா? என்று நினைத்திருக்கிறேன். ஏனெனில் அந்த கேள்விகள் அவ்வளவு சுவாரஸ்யமானது.சிலர் இதுபோன்ற தொடர்பதிவை வெறுப்பதாக எழுதியதை படித்திருக்கிறேன். அது அவரவர் விருப்பம். என்னை பொருத்தவரை நமக்கு விருப்பமானவற்றை எப்போதுமே எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆக அவ்வப்போது இதுபோல நண்பர்களின் விருப்பத்தின் பேரில் எழுதுவது ஒரு சுவாரஸ்யமான விசயம். அதாவது தொடர்பதிவு ஒரு சுவாரஸ்யம், சினிமாவிற்கு பாடல்கள் போல. ஒருவேளை சிலபாடல்கள் சுவாரஸ்யமில்லாமனும் போகலாம். அது விதிவிலக்கு.


இந்நிலையில் ஒரே நாளில் ரங்கா மற்றும் பரிசல்காரன் இருவரிடமிருந்தும் தொடர்பதிவு அழைப்பு வந்திருக்கிறது. ரங்காவின் அழைப்புக்கு கனவுகளும், கற்பனைகளுக்குமே தேவைப்பட்டதால் உடனே எழுதிவிட்டேன். பரிசலின் அழைப்பு நான் எழுதவந்த கதையை (உண்மையை) எழுதவேண்டியிருப்பதால், கொஞ்சம் நேரம் எடுத்து எழுதியிருக்கிறேன். வரலாறு முக்கியம் அல்லவா?


எனக்கு சின்ன வயதிலிருந்தே, ஒரு தாழ்வுமன்ப்பான்மை உண்டு. பெரிய சோடாபுட்டி கண்ணாடி, காதுவரை சுருள்சுருளாக முடி, காய்ந்த கொத்தவரங்காய் போல உடல், குதிரை மாதிரி நீளமுகம் இப்படி. (இதெல்லாமே சின்ன வயதில் என்னை மற்றவர்கள் வர்ணித்தது) இந்த வர்ணனைகளுக்கு நான் எப்படி காரணமாக முடியும். இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி நினைப்பேன். நண்பர்கள்கூட என்னை விலக்கி தனிமைப்படுத்திய காலம் அது. அவர்களிடமிருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்ள நிறைய படிக்க ஆரம்பித்தேன். இந்த தனிமையும், தாழ்வுமனப்பன்மையும்தான் என்னை அதிகம் படிக்கவும், உலகத்திரைப்படங்களை தேடித்தேடி பார்க்கவும் வைத்தது. பதிவெழுத வந்ததுகூட அப்படி ஒரு நிகழ்வுதான்.

அதிகம் பார்த்ததை, படித்ததை எங்கேயாவது கொட்ட வேண்டுமென்ற ஆசைக்கு தீணி போடும் விதமாக கிடைத்ததுதான் இந்த பதிவு. வலைப்பதிவு என்றால் என்னெவென்று முழுமையாகத் தெரியாமலேயே நானும் எழுதத்தொடங்கிவிட்டேன். என்ன எழுதுவது என்று தெரியாமலே. படிப்பது என்றால் சரி, எதை வேண்டுமானாலும் படித்துவிடுவேன். ஆனால் எழுத்து, மற்றவர்கள் ரசித்து படிக்குமளவிற்கு இல்லாவிட்டாலும், பார்க்குமளவிற்க்காகவாவது இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.


எனவே முதல் பதிவை சினிமாவிலிருந்து ஆரம்பித்தேன். அந்த பதிவை எழுதி முடித்தபோது, குறிப்பாக அதற்க்கான முதல் பின்னூட்டம் கிடைக்கும்வரை, என்னுடைய பதிவை உலகின் எதோ ஒரு மூலையிருக்கும் ஒருவரால் கூட படிக்கமுடியும் என்று தெரியாது. Dr. என்ற பெயரில் எனக்கு வந்த முதல் பின்னூட்டமே நான் எழுதியதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத கேள்வியாக இருந்தது, அவரது பின்னூட்டதிற்குப் பிறகே என்னுடைய பதிவை உலகின் எதோ ஒரு மூலையிருக்கும் ஒருவரால் கூட படிக்கமுடியும் என்பது தெரிந்தது. அதன் பிறகு வலைப்பதிவை பற்றி மெதுவாக ஆராயத்தொடங்கினேன். அப்பொழுதுதான் அதுஒரு பிரம்மாண்டமான ஆலமரமாக தன் கிளைகளையும் விழுதுகளையும் பரப்பிகொண்டிருப்பது புலப்பட்டது.


அங்கே கதை, கட்டுரை, சினிமா, இலக்கியம், கவிதை, மொக்கை என பலரும் தொகுதிவாரியாக பிரித்துக்கொண்டு கலந்துகட்டி அடித்துக்கொண்டிருப்பதை பார்த்தேன். இனி கொஞசம் கவனமாக எழுத வேண்டுமென்று எனக்கு தோண்றியது. ஆக எனெக்கென்று தனியாக ஒரு விசயத்தை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் எல்லா துறைகளிலும் எனக்கு பிடித்த, ரசித்த, தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இன்றுவரை நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.


நண்பர் செல்வம் மூலமாக தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பிளாக் அக்ரகெட்டர்ஸ் பற்றி தெரிந்துகொண்டு என்னையும் இணைத்துக்கொண்டேன்.
இன்னைக்கு நான் என்ன எழுதினாலும் ஒரு நாலு பேராவது படிக்கிறாங்க, கருத்து சொல்றாங்க, 30 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க. எனவே என் எழுத்தில் முன்பைவிட சற்று கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறேன். இதெல்லாம் போக எழுதுவதால் என்ன ஆதாயம் என்று என் நண்பர்கள் கேட்ப்பார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் பதில்.


நான் முன்பைவிட அதிக தன்னம்பிக்கயுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன், என்னுடைய எண்ண ஓட்டங்களை ஒத்த நண்பர்களை, தேடாமலே கிடைக்கப்பெற்றேன், அவன் ஒரு Blogger-டா என்று நண்பர்கள் சொல்லும்போது, கிடைக்கும் பெருமை, என்னுடைய ஒருசிறுகதை உள்ளூர் சிற்றிதழில் வந்தபொழுது கிடைத்த அம்மவின் சந்தோசம் இதெல்லாமே எனக்கு எழுதக் கிடைத்தது.

தொடர்ந்து படித்து, ஃபாலோபண்ணி, பின்னூட்டமிட்டு நிறைகுறைகளை சொல்லிவரும் அனைத்து நண்பர்களுக்கும், இந்த பதிவின் மூலமால நன்றி சொல்கிறேன்.இது நான் எழுத வந்த வரலாறு. நிறைய போரடித்தாலும் இதுதான் நிதர்சனம்.
இதைத்தொடர நான் அழைக்கும் நான்கு பேர்.

வா... வா... என் தேவதையே!

தேவதைகள்.
வெகு அரிதாக தென்பட்டு
வெகு சில நிமிடங்களில்
காணாமலும் கரைந்தும்
போய்விடுவார்கள்.


என்ற கவிதையை பொய்யாக்கி (கவிதைன்னாலே பொய்தானே) ஒரு தேவதையை என் வீட்டிற்க்கே அனுப்பி பத்துவரம் கொடுக்க பணித்த நண்பன் ரங்காவிற்கு எனது நன்றிகள். நண்பா, எப்படியும் நீ அனுப்பிய தேவதை ஓரிரு வருடங்கள் என்னோடு இருக்க நேரிடும், எனது வரங்களை அருள. ஆக கொசுறாக ஒரு வரம் சேர்த்துகொள்கிறேன்.

கொசுறு வரம் : நீ என்னோடு இருந்து வேண்டும் வரம்தரும்வரை நான் அழைத்த நாலுபேரின் வரம் கேட்க்க ஒரு நாலு தேவதைகள் வேண்டும்.

இனி என் பத்துவரம் :
1. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், யுவன், ஹாரிஸ் ...... இப்படி இன்னும் நிறைய எனக்கு பிடித்த இசையமப்பாளர்கள் இசையமைக்கும்போது அதிலும் பாடல்கள், பின்னணி இசை என்று தனித்தனியாக இசையமைக்கும்போது கூடவே இருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

2. பாரதியாரோடு ஒரு பத்துவருஷமாவது வாழ்ந்துபார்க்க வேண்டும்.

3. என் வாழ்வில் நான் ஆசைப்பட்ட எத்தனையோ விசயங்களை கொஞ்சம், கொஞ்சமாக செய்துகொண்டுதானிருக்கிறேன். நான் ஆசைப்பட்டு கிடைக்காமல் போன என் காதல் கைபெற வேண்டும். (குறிப்பாக என்னை காதலிக்கிறாயா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலேயே போய்விட்ட அவள், பிடிக்கவில்லை என்றாவது ஒரு பதில் சொல்ல வேண்டும்)

4. ”வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவேஎன்று தொடங்கும் கவிஞர். வைரமுத்துவின் வார்த்தைகள், அத்தனையும் அப்படியே நிறைவேற வேண்டும்.

5. தனிமை கெட்டுவிடாமல் உலகம் சுற்றும் தேசாந்திரிகளான எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பெளலோ கோயல்ஹோ, இவர்கள் இருவரின் தனிமையை பாதிக்காத வண்ணம் இலக்கின்றி இவர்களின் கூட பயணிக்க வேண்டும்.

6. என்னுடைய ஆறாவது வயதில் என் ஆத்ம நண்பனாயிருந்த சசிக்குமார், உயிரோடு வேண்டும், நீ இழந்த உயிரை நான் மீட்டு தந்திருக்கிறேன், இனி எஞ்சிய நாளில் என் கூடவே வாடா என்று அவனிடம் சொல்லவேண்டும்.

7. நான் அதிகம் படிக்கவில்லை, சம்பாதிப்பதில்லை என்று வருத்தப்படும் அப்பா மனம் நிறைய படிக்க, சம்பாதிக்கவேண்டும்.

8. அப்பாவை சைக்கிளில் உட்காரவைத்து காத தூரம் ஓட்டவேண்டும். அம்மாவுக்கு கால்வலி காணாமப்போய்விட வேண்டும்.

9. இல்லைன்னு கேட்டுவரவங்களுக்கு இல்லைன்னு சொல்லாத அளவு, மக்காத செல்வமும், மனதும் வேண்டும்.

10. நல்லது நினைக்கிற யாரா இருந்தாலும் அவங்க வாழ் நாள் முழுவதும் கூடவே இருந்து கேட்கும் வரம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

இனி என் தேவதை இவர்களைப் போய்சேர்வாள்,

ஒன்று : என்னை இன்னொரு தொடர்பதிவில் அழைத்த நண்பர் பரிசல்காரன்
இரண்டு : காதலையே காதலிக்கும் தம்பி லோகு

மூன்று :
காலங்காத்தால
காப்பி கொடுத்த
கார்க்கி (ஒரே கவிதையா வருது, சகா)

நான்கு : அப்புறம் எங்க, தங்க, சங்க தலைவர் வெயிலான்


உங்க நாலுபேரையும் அவசியம் இந்த தொடரைக் கட்டியிலுக்க சொல்லவில்லை, உங்கள் தேவைகள், வரங்கள், வேண்டுதல்கள் எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசையோடு காத்திருக்கிறேன். என் தேவதை உங்களை ஒருமுறையேனும் ஆசிர்வதிக்கக்கூடும். ஆதலினால் வரத்தை கேட்ப்பீர்.

இது யாருடைய கவிதை

அனுஜன்யா, க.பாலாஜி, ஆதவா, லோகு, சிந்தன், பரிசல், வெயிலான், அண்ணாச்சி, அண்ணன் அப்துல்லா, ஜெய் சிங் ராஜா மற்றும் எனக்கு தெரியாத கவிதை விரும்பிகள் யாரவது எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்.

இது யாருடைய கவிதை,

கண்ணன் தலையில்
ஒற்றை மயிலிறகு
ஒரு மயில் நடக்கிறது
எத்தனை கண்ணன்கள்.

இது யாருடைய கவிதை?
எந்த கவிதை தொகுப்பில் இந்த கவிதை வருகிறது?
எந்த பதிப்பகம்?

இப்படி இந்த கவிதை பற்றிய எந்த தகவல் தெரிந்தாலும், அவசியம் எனக்கு தெரியசெய்யுங்கள். கட்டாயம் உங்களுக்கு ஒரு பிரதி அனுப்புகிறேன்.

இதுவும் ஒருவகையில் கிறுக்கல்கள்தான் 2

என்னமோ தெரியவில்லை. இந்த மாதம் முழுவதும் ஒரே கிறுக்கல்களாகவே இருக்கிறது. சரி விடுங்க அது உங்க விதி, நான் ஏன் காரணம் சொல்ல வேண்டும் அல்லது கவலைப்பட வேண்டும். (எல்லாம் நேரம்தான்)

வெகுஜனபத்திரிக்கைகளில் வரும் பெரும்பாலான ஓவியங்களை பார்த்த்தும் அதை வரைந்தவரை கண்டுபிடிக்குமளவிற்க்குதான் என்னுடைய ஓவிய அறிவு. இருந்தும் ஓவியத்தை பற்றி பதிவெழுத தைரியம், எனக்கு ம.செவை பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த அல்லது கவர்ந்த ஓவியர் ம.செ என்கிற மணியம் செல்வன். இவரது ஓவியங்களை பார்க்கும்போது, ஒருவித எதார்த்தம் தெரியும்.வெகு அலட்சியமாக கிறுக்கப்பட்ட கோடுகள் போல இருக்கும் இவரது கோட்டோவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இவரது ஓவியஙகளில் பெரும்பாலும் பெண்கள் ஜிமிக்கி அணிந்திருப்பார்கள், நெற்றியில் ஒற்றையாய் அல்லது கற்றையாய் முடியை தொங்க விட்டிருப்பார்கள். பெரும்பாலான பெண்கள் புடவையோ தாவணியோ அணிந்திருப்பார்கள். இவர்களின் கண்கள் படு அழகாக இருக்கும். பொதுவாக
பெண்களுக்கான எல்லா இலக்கணங்களோடு இருப்பாள், இவரது ஓவியப் பெண்.

இவர் வரைவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. மெல்லிய சோகத்தை சிந்தும் கண்களோடுகூடிய பெண்கள், ரெளத்திரமான கண்களோடு கூடிய பெண்கள், புன்னைகை, அழுகை, சிரிப்பு என எல்லா உணர்ச்சிகளையும் வெகு அற்புதமாக ஓவியத்தில் கொண்டுவந்துவிடும் அதிசய கலைஞன், ம.செ.

எனது ஓவியங்களை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து வரையுங்கள் என்று என்னை மறுபடியும் பென்சிலை கயிலெடுக்க வைத்த ராமலக்‌ஷ்மி அவர்களுக்கு எனது நன்றிகள். என் கல்லூரி காலங்களில் இவரை பார்த்து நான் வரைந்த சில ஓவியங்களை இங்கே பதிவிடுகிறேன். இப்பொழுது வரைந்துகொண்டிருக்கும் சில படங்களை பிறகு பதிவிடுகிறேன்.
அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.
போட்டொஷாப்பின் மூலம் கொஞ்சம் வர்ணம் சேர்த்தியிருக்கிறேன்.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.(ரங்ஸ் இந்த வரிகள் நியாபகம் இருக்கிறதா?)

இது நடிகை ஷோபனாவை மனதில் வைத்து வரைந்தது.


அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.


ரெளத்திரம் தெரிகிறதா கண்களில்? அவரது ஓவியத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அனேகமாக இதில் எழுதப்பட்டுள்ள கவிதை வரிகள், தபூ சங்கருக்கோ அல்லது அறிவுமதிக்கோ சொந்தமானவை.

இதுவும் கிறுக்கல்கள்தான்

என்னுடைய சமீபத்திய பதிவான விழுதுகள் என்கிற சிறுகதையில் ஏதாவது படம் போட்டால் நன்றாக இருக்குமே என்று கூகிளாண்டவரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது, நான் எனது கல்லூரி பருவத்தில் வரைந்த கோவில் ஓவியங்கள்(? ) நியாபகத்தில் வந்துபோனது. இந்தகதைக்கு பொருத்தமாக கோவிலும் மரமும் இருக்குமென்பதால், அந்த பழைய நோட்டுக்களை தேடியெடுத்து தூசுதட்டியதில், இதெல்லாம் என்ன ஓவியங்கள் என்று எனக்கே தோன்றியது.
பின் புதிதாக வரைந்துகொள்ளாமே என்று தோன்றியது. ஆக மறுபடியும் பெரிய இன்ஜினியர் ரேஞ்சுக்கு டேபிளில் டிராஃப்டரையெல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டு, அம்மாவிடம் படம் காட்டியவாறு படம் வரைய ஆரம்பித்தேன். ஆனால் முன்னால் வரைந்த படங்களை 50 சதவிகிதம் கூட தாண்ட முடியவில்லை. மறுபடியும் பழைய நோட்டுக்கே வந்தபோது, அதே ஓவியங்கள், இப்போது அருமையாக தெரிந்தது.

ஆக அதிலிருந்தே ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அந்த கதையில் போட்டிருப்பேன். அதை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக சொன்னார்கள். பின்னூட்டத்தில் ராமலக்‌ஷ்மி அவர்கள் “ தயங்காமல் கல்லூரி காலத்தில் வரைந்தது எல்லாவற்றையும் பொருத்தமான பதிவுகளுடன் தந்திடுங்கள்” என்று சொன்னதும் இங்க நமக்கு அப்படியே புல்லரிச்சி போச்சு.

இதுக்காக, பொருத்தமான பதிவுகளை தேடிக்கொண்டிருப்பதை காட்டிலும் இதையே ஒரு பதிவாக போடலாமே என்று தோன்றியதே, இந்த பதிவின் கதை.

எனவே பாருங்க, நல்லா இருந்தாலும் இல்லாட்டினாலும் நல்லா இருக்குன்னே சொல்லிவைங்க. இல்லைன்னா... எதிர்காலத்தில ஒரு நல்ல ஓவியனா வரவேண்டிய ஒருத்தனை “ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிச்ச பாவம்” உங்களுக்கு வந்து சேரும். ஜாக்கிரதை.

இதுவும் ஒரு மரம்தான், என் பால்ய நண்பன் பாபுவின் யோசனையின் பேரில் இலைகளை வெறும் புள்ளிகளாலேயே வரைந்திருக்கிறேன்.

இதுதான் நான் விழுதுகள் கதைக்காக தேர்த்டுத்த படம். என் கதையில் வரும் சிவன் கோவிலும் அந்த பெரிய அரசமரமும் இந்த படத்தைத் தேர்தெடுக்க காரணங்களாயின.ஒரு விஷ்ணு கோவில், பெரிய தெப்பக்குளம்
அதை ஒட்டிய பரந்து விரிந்து வளர்ந்த ஒரு மரம்.இன்னும் சில படங்கள் இருக்கின்றன, அதை கொஞ்சம் சுத்தம் செய்யவும், சற்று அழகுபடுத்தவும் வேண்டியிருப்பதால் அதை இன்னொரு பதிவாக, பதிவிட நினைக்கிறேன்.

பிடிச்சா தாராளமா ஒட்டு போடுங்க.
:-)