ஒரு மனம் இருவேறு அதிர்வுகள்

இது என் அனுபவம், என்னை பாதித்த எனக்கு முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் பற்றியது.

திருப்பூரின் வெகுமுக்கியமான சாலையும் அதிக சனநடமாட்டமும்கொண்ட அவினாசி சாலையின் ஓரமாக இருக்கும் ஒரே காரணத்தினால், தினமும் வாடிக்கையாளர்களைக் காட்டிலும் பிச்சைகாரர்களின் வருகை அதிகமாகவே இருக்கும், என் அலுவலகம். ஆரம்பகாலங்களில் தினமும் 25 பைசா 50 பைசா என்று எதையாவது கொடுத்துக்கொண்டிருந்த எனக்கு ஒரு கட்டத்தில் வெறுத்தே போய்விட்டது.

சாமிவேடமிட்டுகொண்டு, குழந்தைகளை தூக்கிக்கொண்டு, ஊருக்கு செல்லவேண்டிய பேருந்துக்கு பணம் வேண்டுமென்று, பாட்டுபாடிக்கொண்டு, சாட்டையிலடித்துக் கொண்டு, வேடிக்கைகாட்டிக்கொண்டு, காசு கொடுக்கவில்லையெனில் உனக்கும் என்னை மாதிரியே புள்ளை பிறக்குமென்று சாபம் கொடுக்கும் அரவாணிகள் . அப்பப்பா இவர்களுல்தான் எத்தனை ரகம். பிறகு இவ்வாறு முடிவு செய்துகொண்டேன். வயதானவர்கள், உடலூனமுற்றவர்கள் இவர்களுக்கு மட்டுமே உதவிசெய்வது என்று.
ஆக பிச்சை அல்லது காசுவேண்டுமென்று வரும் யாராக இருந்தாலும் பத்துரூபாய் தருகிறேன், அலுவலகத்தின் முகப்புகண்ணாடியை துடைத்துவிட்டு வாங்கிக்கொள் அல்லது என் வண்டியை துடைத்துவிட்டு வாங்கிகொள் என்று சொல்ல ஆரம்பித்தேன். அனேகமாய் ஆறு வருடங்களிருக்கும், இதுவரை ஒரு சிறுவனைத்தவிர யாரும் ஒரு சின்ன வேலைதானே செய்துவிட்டு வாங்கிக்கொள்வோமென்று நினைத்ததுகூட கிடையாது. அந்த சிறுவன் பெயர், பழனி. இரண்டு வருடங்களிருக்கும் ஏதோ ஒரு டீக்கடையின் முன்பு நின்று நண்பனோடு பேசிகொண்டிருந்தபோது வந்தான். அவனுக்கு எட்டிலிருந்து பத்து வயதிற்க்குள் இருக்கும். காலைப்பிடித்துக் கொண்டு கேட்டான் “அண்ணா, காசு கொடுங்கண்ணா, ரொம்ப பசிக்குது” என்று.

ஒருவேளை உணவிற்க்காக கையேந்தி நிற்ப்பவனின் நிலைமை, தட்டை நீட்டியபொழுதெல்லாம் உணவுகிடைக்கும் நமக்கு தெரிய சாத்தியமில்லை என்ற எஸ்.ராவின் வரிகள், நினைவில் ஓடியது. என் மனதிலிருந்த அந்த சின்ன இரக்க உணர்வையும் தாண்டி அவனிடம் சொன்னேன் “இந்தா இது என்னோட வண்டி. டேங்க் பேக்ல துணியிருக்கு, எடுத்து வண்டியை சுத்தமா துடை. நானே உனக்கு நல்ல சாப்பாடா வாங்கித்தரேன்”. எந்த யோசனையும் மறுப்புமில்லாமல் உடனடியாக துணியை எடுத்து வண்டியை துடைக்க ஆரம்பித்துவிட்டான். நாங்கள் தொடர்ந்து பேசிகொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, ஏதோ அவனுக்கு தெரிந்தமாதிரியாக துடைத்திருந்தான். எனக்கு வண்டியும் சுத்தமாகத்தான் தெரிந்தது.

எங்கே காசு கொடுக்காமல் விரட்டிவிடுவேனோ என்கிற பயம் அவன் கண்களில் இருந்தது. இது நான் என் நேர்மையை அவனிடம் நிருபிக்கும் நேரம். அவனை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த சாப்பாட்டுகடைக்கு சென்று சாப்பிட வைத்து, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். “ஒரு ரூபாயை கையில திணிச்சிருந்தா அவன்பாட்டுக்கு போயிருப்பான், இப்போ ஐம்பது அறுபதை சாப்ட்டானா?” என்ற நண்பனின் கேள்வியை நான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
இன்றுவரை அந்த சிறுவனை நான் மறுபடியும் பார்க்கவே முடியவில்லை, நல்லதுதான். அவன் கடைசியாக பிச்சையெடுத்தது அன்றே கடைசியாக இருக்க வேண்டுமென்றுதான் நான் இன்றுவரை ஆசைபடுகிறேன்.

--------------------------------------------------------

என் அலுவலக வாசலில் எப்போதும் ஒரு பிச்சைகாரர் இரவு நேரங்களில் படுத்திருப்பார். காலை நான் அலுவலகத்திற்கு வந்து கதவை திறக்கும்போது அவரும் தன் மூட்டைமுடிச்சுக்களோடு அடுத்தவேளைக்கான உணவுத் தேடலிற்காககிளம்பிவிடுவார். அதன் பிறகு இரவு வேளைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். சில மத்திய நேரங்களில் என் அலுவலகத்தின் முன் உள்ள நிழலில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கிட்டதட்ட ஆறு மாதங்களாக அவரை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். எங்கெங்கோ போய் பிச்சையெடுத்து வந்தாலும் இதுவரை என்னிடம் காசு என்று கேட்டதேயில்லை. இரவுமுழுவதும் படுத்துக்கொள்ள அலுவலக படிக்கட்டுக்களை விட்டுக்கொடுத்ததே போதுமென்று அவர் நினைத்திருக்கலாம்.
இரண்டுவாரங்களுக்கு முன்பு நல்ல மழை, வேலைபளுவேதுமில்லாததால் வண்டியை எடுத்துக்கொண்டு நானும் நண்பனும் மழையில் நனைவதென்று முடிவுசெய்து கிளம்பினோம். ஒரு பத்துகிலோமீட்டர் சுற்றிவிட்டு தொப்பலாக நனைந்துவிட்டு திரும்பினோம். எங்கள் அலுவலக கட்டிடத்தின் மாடிக்கு செல்லும் வழியில் சூடான இரண்டு “பிளாக் டீ”யுடன் வந்து நின்றோம். அங்கே அவரும் முழுக்க நனைந்து வெடவெடத்து நின்று கொண்டிருந்தார். நான் மழையில் நனைந்ததை சொன்னது, என் மழையனுபவத்திற்க்காக அல்ல, இருவரின் நனைதலுக்குமிடையேயான வித்தியாசத்திற்க்காக.

”ஏன்யா, மழை வருதுன்னு தெரியுதுல்ல, எங்கயாவது ஓரமா நிக்க வேண்டியதுதானே?” என்றேன்.

“ நாலுபேரு நிக்கிற இடத்துல நம்மல எங்க நிக்க உடுறாங்க”

“சரி, எந்த ஊரு நீங்க?”

“அந்தியுருங்க”

“உங்களுக்கு வீடு ஏது இல்லையா? பையன், பொண்ணு இப்படி யாரவது இருக்காங்களா?”

“வீடெல்லாம் இல்லிங்க ரெண்டுபேர் படுக்குற அளவில ஒரு குடிசை இருந்தது, அதையும் வித்துதான் புள்ள கல்யாணம் செஞ்சு வச்சேன்” என்றவர் மீண்டும் அவராகவே தொடர்ந்தார் “ஊட்டுகாரியும் போனதுகப்புறம், அப்படியே வந்துட்டேன், என்ன கிடைக்குதோ, சாப்டுகிட்டு, எங்க இடம் கிடைக்குதோ அங்க படுத்துக்குவேன். உசுரு போனா, கவுர்மெண்ட் ஆளுக தூக்கி போடப்போறாங்க” என்றார்.

எனக்கு அதுக்கு மேல் எது பேசத்தோணலை. அவருக்கு பத்துரூபாயோடு, ஒரு டீயும் பீடிக்கட்டும் வாங்கிகொடுத்துவிட்டு வந்து விட்டேன். அதன் பிறகு என்னை பார்க்கும்போதெல்லாம் “சின்னையா” என்று கூப்பிடுகிறார். யாரு பெரியய்யா என்றோ நான் ஏன் சின்னையா என்றோ அவரிடம் இதுவரை கேட்கவில்லை. போன வாரம் என்னிடம் கேட்டார் “ஒரு ஐந்து ரூபாய் கொடுங்க, சின்னையா. நான் ஊருக்கு போறேன், இங்க எங்கேயும் படுக்க முடியலை, தினமும் மழைபெய்யுது” என்றார்.

நான் பத்து ரூபாயாக கொடுத்தேன். என்னிடம் ஐந்து ரூபாய் இருக்குங்க, அதுபோதும் என்றுசொல்லி ஐந்து ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நேற்றுதான் அவரை பார்த்தேன். அவரோடு கூடவே ஒரு ஆறு வயது மதிக்கதக்க சிறுவன். பேரனாம். ஆயுத பூஜை காரணமாக அவன்கையில் ஏராளமான பொறி, சுண்டல் தட்டுகள். அவர் ஒவ்வொரு கடையாகப் போய் பேரனுக்கு பொறி, சுண்டல், கேசரி என்று வாங்கிகொண்டுவந்து கொண்டிருந்தார்.அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் அச்சிறுவன் மகளின் மகனென்றும், அச்சிறுவனை அந்த பெண் இவரோடு கட்டாயமாக அனுப்பிவைத்திருந்ததும் தெரிந்தது.

அவரிடம் இரு பத்து ரூபாயைக் கொடுத்து, ஏன்யா நீ இங்க கஸ்டபடுறது பத்தாதா? இந்தபையனை ஏன் கூட்டிகிட்டு வந்த? மொதோ வேலையா பையனை கொண்டுபோய் விட்டுட்டு வந்திடு என்றேன்.

பிறகு என் நண்பனிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நண்பன் என்னிடம் “ஏண்டா அந்த குடுசையில இந்தாளுக்கு ஒரு சின்ன இடம் இல்லாமலா போகும்” என்றான்.

“வீட்டுக்குள்ள வேண்டாம், வெளிய படுக்கவச்சுகூடவா சோறுபோட முடியாது. என்ன ஜென்மங்களோ” என்றேன் நான்.

”என்ன மனுசங்கடா அவங்க? பெத்த அப்பனை கூட வச்சு சோறு போட துப்பில்லை, மகனை அப்பங்கூட டூர் அனுப்பி வச்சிருக்குதுங்க, ஒருவேளை
அடுத்த குழந்தைக்கான ஆயத்தவேலைகள், இன்று அங்கே நடக்கும்” என்றான் இதைக்கேட்டுகொண்டிருந்த இன்னொரு நண்பன்.எது எப்படியோ மகள் வீட்டிலிருக்கும்போது அவர் இறந்துபோய்விட வேண்டும், அவர் சொன்னதுபோல கவுர்மெண்ட் ஆளுக தூக்கிபோடும் நிலை வரக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.

17 கருத்துரைகள்:

நாடோடி இலக்கியன் said...

டச்சிங்கான பதிவு.படித்து முடித்ததும் கஷ்டமாக இருந்தது,வேறு என்ன சொல்ல.

தமிழ் நாடன் said...

உண்மையிலேயே படித்து முடித்தபோது மனம் அதிர்ந்தது.

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

நெகிழ்ச்சியடைய வைத்த பதிவு.
பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

arulmozhi said...

மிகவும் நெகிழ வைத்த பதிவு

arulmozhi said...

மிகவும் நெகிழ வைத்த பதிவு

கார்க்கி said...

எல்லோரும் சொன்ன மாதிரி நெகிழ்வாத்தான் உணர்ந்தேன்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி இலக்கியன், வேறு எதுவும் சொல்ல வேண்டாம், உங்கள் உணர்வுகள் போதுமானது. மகிழ்ச்சி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தமிழ் நாடன், தொடர்ந்து படியுங்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் அகநாழிகை அவரகளே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

வணக்கம் அருள்மொழி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சகா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishna Prabhu said...

ஒன்றும் சொல்வதற்கில்லை...

அகல் விளக்கு said...

சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நானும் என்னால் ஆனவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.

இடம் வேறானாலும் துயர் ஒன்றுதான்.
உணர்வு ஒன்றுதான்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கிருஷ்ணா! புதிய தலைமுறை புத்தகம் பார்த்தீர்களா? :-) பக்கம் 30

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி நண்பா! அகல்விளக்கு.

சந்ரு said...

இப்படியுமா?

நெகிழ்ச்சியடைய வைத்த பதிவு.
பகிர்தலுக்கு நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சந்ரு, தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்தமைக்கு நன்றி :-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.