பிரிவோம்..... சந்திப்போம்........ (ஆறுமாத்திற்கு பிறகு)

சூரிய உதயத்திற்கு முன்னால்

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் விழித்திருப்பீர்கள்? அதில் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருப்பீர்கள் அல்லது கேட்டுக்கொண்டிருப்பீர்கள்? உங்களுக்கு உரையாடல் பிடிக்குமா? உங்கள் வாழ்வின் மிக நீண்ட உரையாடல் எவ்வளவு நேரம் நடந்திருக்கும்? அது யாருடனாவது இருந்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு காதல் பிடிக்குமா? காதலர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உடையவரா?


மேற்சொன்ன கேள்விகளுக்கு உங்களுடைய பதில்கள் முறையே 12லிருந்து 15 மணி நேரம், 3 மணி நேரத்திற்குமேல், ஆம் பிடிக்கும், 6 மணி நேரத்திற்கு மேல், ஆம் பிடிக்கும், நிச்சயம். இப்படிபட்டதாக இருந்தால் உங்களுக்கென்றே ஒரு படம். இதோ “BEFORE SUNRISE” மற்றும் “BEFORE SUNSET”. இது, ஒரு முன்னறிமுகமில்லாத ஒரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை சொல்லும் கதை. அதுவும் வெகுவாக பழக்கமில்லதவர்களுடனான முதல் சந்திப்பில் நடக்கின்ற ஒரு நீண்ட உரையாடல். படம் முழுக்கவும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் (அவர்களின் உதடுகள், இணைந்திருக்கும் சில நிமிடங்களைத் தவிர).

படம் நெடுக அவர்களின் பேச்சுகளின் ஊடாகவே அவர்களின் விருப்பு வெறுப்புகள் மற்றும் சுக துக்கங்களை சொல்லியிருப்பர்கள். ஐரோப்பாவிலிருந்து மாண்ட்ரிட் நகரை நோக்கி செல்லும் ஒரு ரயிலில் ஜன்னல் ஓரமாய் புத்தகம் படித்துகொண்டிருக்கிறாள், செலின். அவளின் அருகில் உள்ள ஒரு நடுவயது தம்பதிகளுக்குள்ளான சண்டை, அதன் கூச்சலான பேச்சுக்கள், அவளின் படிப்பை இடையூறாக்கவே, அந்த பெட்டியின் கடைசி பகுதிக்கு வந்து அமர்கிறாள். எதிரில் ஜேசி. அவனும் ஏதோ புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறான். அவள் வந்து அமரும் அந்த நேரம் இருவரின் கண்களும் வெகு எதேட்சையாக சந்தித்து விளகுகிறது.
அந்த தம்பதிகள் ஏதோ சத்தமாக பேசிக்கொண்டே அவர்களை கடந்து செல்கின்றனர், இருவரும் அவர்கள் கண்களிலிருந்து மறையும்வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு, பின் திரும்பி கிண்டல் தொணிக்க சிறிய புன்முறுவலை பறிமாரிக்கொள்ள, அந்த தம்பதிகள் மீண்டும் அதே வேகத்தில் கத்திகொண்டு கடந்து செல்கின்றனர். இவர்கள் இருவரிடமிருந்தும் மீண்டும் அதே சம்பாஷணைகள். ஆனால் அந்த புன்னகையில் இப்போது நட்பு பூத்திருக்கிறது.
எல்லா ஆண்களையும்போல இங்கேயும் ஜெசியே ஆரம்பிக்கிறான். “என்னதான் பிரச்சனை, அவங்களுக்கு” என்று தொடர்ந்து பேசும் அவள் ”அவர்களின் தொல்லை தாங்காமல்தான் நான் இங்கே வந்தேன்” என்று சொல்ல அவர்களின் உரையாடல் தொடர்கிறது. என்ன புத்தகம் படிக்கிறார்கள்? எங்கிருந்து எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதுவரை தொடரும் அவர்களின் உரையாடலை அந்த நடுவயது தம்பதிகளின் உரத்த பேச்சுகள், தடுக்க. நாம் கேண்டீன் பெட்டிக்கு செல்ல்லாமா? ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு பேசலாம்” என்கிறான். சிறிது யோசனைக்கு பின் “ஓ, தாராளமா” என்கிறாள், செலின்.
தொடர்ந்து பேசும் அவர்களின் உரையாடல்களின் மூலமாக செலின், ஜேசியின் கள்ளமில்லா மனதையும், வெளிப்படையான பேச்சையும் ரசிக்கிறாள். ஒருகட்டத்தில் ஜேசி இறங்க வேண்டிய வியன்னா என்கிற நகரம் வந்திவிடவே, அவள் சொல்கிறாள். நீ இங்கதானே இறங்கனும், என்கிறாள். ஆம், என்றபடி தனது மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு வரும் அவன், அவளை பார்த்து உறுதியாக கேட்கிறான், ”நீ ஏன் என்னோடு இங்கேயே இறங்ககூடாது” “என்ன?” “நாம் இருவரும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம், நாளை சூரிய உதயத்திற்கு முன் உன்னை உனக்கான விமானத்தில் கொண்டுவந்து சேர்ப்பேன், நீ என்னை தாராளமாக நம்பலாம்” “ம்ம்ம்....” “.......................” “ஓகே, போகலாம்” அவ்வளவுதான், ஒருவர் மீது ஒருவரின் நம்பிக்கையை இருவரும் உணரும் அழகான காட்சி அது.
நான் சொன்ன அந்த முதல் காட்சி


இங்கிருந்து ஆரம்பிப்பார்கள், பேசுவதற்கு, ரயில் நிலையத்தில், பாலத்தில், கல்லறையில், உணவகத்தில், பாரில், கேளிக்கை விடுதியில் என் இன்னும் எங்கெல்லாமோ பேசுவார்கள். நட்பு, காதல், குடும்பம், விருப்பம், வேடிக்கை, விளையட்டு, உலகமயமாக்கல், கம்யூனிசம், போர், வியாபரம், கேளிக்கை இன்னும் என்னவெல்லாமோ பேசுவார்கள். வளர்ந்துகொண்டே போவது அவர்களின் உரையாடல் மட்டுமல்ல.
இதனிடையே அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நேர்த்தியாக பிச்சை கேட்கும் அந்த ரோட்டோர கவிஞன். என எல்லாமே வெகு அழகு. வெறும் இரண்டு கதாப்பாத்திரங்கள், திகட்டாத காதல். போரடிக்காத திரைகதை. தெளிவான வசனங்கள். இவைதான் இந்த படத்தின் வெற்றி.

சொல்லனும்னா முழுபடத்தையும் பத்தி ஏதாவது சொல்லிகொண்டே தான் இருப்பேன். ஆனால் பாருங்கள், பார்த்து விட்டு சொல்லுங்கள். மேலும் இந்த பட்த்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு காட்சிகளை கீழே லின்க் கொடுத்திருக்கிறேன். இந்த காட்சி ஏதாவது தமிழ் படங்களை நியாபகப்படுத்தினால் நான் பொருப்பல்ல.

எனக்கு ரொம்பவே பிடித்த வாலி சீன் இங்கே தி பெஸ்ட், சீன் (வாலி) அந்த ஆடியோ கேட்கும் சீன் இங்கே கண்கள் இரண்டால்...... என்னை கட்டி இழுத்தாய்....

படத்தின் ட்ரெய்லர் காட்சி
அவளோடு பேசிகொண்டிருக்கையில் அவள் முடி கலைந்து முகத்தில் விழும்போது அதை எடுத்துவிட அவன் முயல, அவள் அதைப்பார்த்துவிட, பிறகு சைகையால் முடி.... கலைந்திருக்கிறது என்று உணர்த்தும் இந்த இடம் ஒருகவிதை, விடியோவில் பார்க்க இந்த காட்சியின் 51 வது வினாடியில் பாருங்கள் அந்த கவிதையை
இருவரும் ஆறு மாதம் கழித்து சந்திக்கலாம் என்று பிரிந்தபின், அவர்களி நின்று பேசிய இடங்கள் ஒவ்வொன்றாக திரையில் வரும், காதலும் காதல்ர்களுமின்றி வெறுமையான அந்த இடத்தை ரம்மியமான இசையால் நிரப்பியிருப்பர்கள், அவசியம் பாருங்கள் இதுதான் கிளைமேக்ஸ், அவர்கள் பிரிந்தபின் வரும் இசையை கேளுங்கள்.
சமீபத்தில் இதுபோல உரையாடலை முன்னிருத்தி ஓரளவு வெற்றியும் பெற்ற படங்கள், தமிழில் அன்பேசிவம், ஹிந்தியில் JAB WE MET, இப்போது தமிழில் கண்டேன்காதலை என்று வந்திருக்கிறது. ஹிந்தியில் ரசிக்கமுடிந்த அளவிற்கு வசனங்களை தமிழில் ரசிக்கமுடியவில்லை என்பதே நிஜம். போரடிப்பதுபோல இருந்தது. ஆனால் இந்தபடம் முழுக்க முழுக்கவே உரையாடல்கள்தான், எப்படி போரடிக்காமல் எடுத்தார்களோ? டைரக்டருக்கே வெளிச்சம்.
1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த பட்த்தின் அடுத்த பாகம், 2005ஆ ஆண்டு BEFORE SUNSET என்ற பெயரில் வெளிவந்தது, அந்த படத்தையும் பார்த்திருக்கிறேன், வெறும் என்பதே நிமிடங்கள்தான், மிக அருமையான படம். முதல் பாகத்தை பார்த்த அனுபவத்தினால் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, என்னிடம் இருக்கும் பிரதியில் சப் டைட்டிலுக்கு வழி இல்லாததால், எனவே வசனங்கள் பற்றி தெளிவாக எதுவும் எழுத முடியவில்லை. ஆனால் முதல் பாகத்தை தூக்கி சாப்பிடும்விதமாக பெரிய ஓப்பனிங்கையும் வசூலையும் பெற்றது, இரண்டம் பாகம்.


BEFORE SUNSET படத்தின் விமர்சனத்தை எழுத, கேபிள்சங்கர், ஹாலிவுட் பாலா மற்றும் வண்ணத்துபூச்சியார் இவர்களை உரிமையோடு அழைக்கிறேன். ஏன்னா எனக்கு வசங்களை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களில் யார் எழுதுவது என்பதை நீங்களே பேசி முடிவு செய்துகொள்ளுங்கள், ஆனால் யாரவது ஒருவர் எழுதித்தான் ஆகவேண்டும். இங்கே ஒரு ஸ்மைலியை போட்டு உங்களிடம் எனக்கிருக்கும் உரிமையை தரமிறக்குவதாயில்லை. ஆக யாரவது எழுதுங்கள்.

தோழர் - ஒரு புத்தக அறிமுகம்

ஒருமுறை சென்னையில் ஒரு காபி கடையில் காபிக்காக டோக்கன் பெற்று நின்று கொண்டிருந்தேன். என் தோளில் மென்மையாக ஒரு ஸ்பரிசம், திரும்பி பார்த்தேன், ஒரு அழகான தேவதை(ஏன் தேவதை, பின்னால் சொல்கிறேன்). நீளமான கூந்தல், திருத்தமான முகம், காதில் தொங்கட்டான் மாதிரி ஒன்றை அணிந்திருந்தாள், குருவாயூரில் கொடுக்கும் சந்தனத்தின் நிறத்தில் இருந்தாள், நான் நின்றிருந்த வரிசையின் எதிர் புறத்திலிருந்து சூரியனின் இளமஞ்சள் வெளிச்சம், அவள் முகத்தை இன்னும் அழகாக காட்டிகொண்டிருந்தது.


அவளிடமிருந்து கிளம்பிய அந்த நறுமணம், என்னை எங்கெல்லாமோ கூட்டிசென்று கொண்டிருந்த்து. எங்கோ வானவீதிகளில் மிதந்து கொண்டிருந்த என்னை மீண்டும் இங்கேயே இழுத்துக்கொண்டு வந்தது அவளின் “இஸ் திஸ் க்யூ ஃபார் காபி?” என்ற குரல். நெற்றியில் புரண்டு கன்னத்தில் வழியும் முடிகளை நேர்த்தியாக காதுகளின் பின்னால் வழித்துவிட்டுக்கொண்டு முகத்தையே கேள்விகுறியாக்கி நின்றாள்.


“ஆங்..... ஆமா.......யெஸ்” என்று ஒருவழியாக சொல்லி முடித்தேன். சினேகமாக ஒரு புன்னகையை பதிலாக்கி விட்டு மெளனமாகிவிட்டாள், இன்னும் ஏதாவது பேசமட்டாளா? பதில் சொல்லும் சாக்கில் இன்னும் கொஞ்சம் அவளை நேராக பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்குமே என்று நினைத்தவாறு, அவளை பார்த்துகொண்டிருந்தேன். மெல்ல நேராக என் கண்ணை பார்த்தவள், எனக்கு முன்பும் பார்த்தாள், பின் ஒரு மெல்லிய புன்முறுவலுடன் சொன்னாள், “தி க்யூ இஸ் மூவிங்” .

மறுபடியும் ஒரு “ஆங்... யா... யா...” சொல்லிவிட்டு முகத்தை திரும்பிக்கொண்டேன், மனம் திரும்ப மறுத்தது. இரண்டு கைகளிலும் காபியை வாங்கிக்கொண்டு நண்பன் இருக்குமிடத்திற்கு வந்து மெல்ல திரும்பி பார்த்தேன், ம்ம்.. எங்கும் காணவில்லை, அவளை.


“வெகு அரிதாக தென்பட்டு
நிமிடங்களில் காணாமலும் கரைந்தும்
போய்விடுவார்கள், தேவதைகள்.”


‘தோழர்’ இந்த புத்தகத்தை வாசிக்கும்போது, ஷபின்னாவின் உரையாடல்களை படிக்கும்போது, பழனி முருகனின் மனஓட்டங்களை உணரும்போது, நான் சந்தித்த அந்த தேவதை எத்தனைமுறை என் நினைவில் வந்து போனாள் என்பது தெரியவில்லை.


இந்த புத்தகத்தை எனக்கு படிக்க பரிந்துரை செய்தது, என் அப்பா வயதுடைய, ஒரு கம்யூனிஸ்ட் தோழர். ராஜாமணி அவர்களின் மனைவி செம்மலர் அவர்கள். அப்பா என்றுதான் அழைப்பேன், அவரும் என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும்போதும் என் மூத்தமகன் என்றுதான் அறிமுகம் செய்வார். தீவிர இடதுசாரி கொள்கை பிடிப்புடையவர்கள், எப்படியும் அவர்களின் சித்தாங்களை உபதேசிக்கும் ஒரு நாவலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அது முற்றிலும் தவறில்லை.

இதை படிக்க ஆரம்பிக்கும் முன்பாக சென்னை சிறுகதை பட்டறை வந்த்தது. அங்கே முதன்முதலாக சந்திக்கும் நண்பர் கிருஷ்ணபிரபுவிற்கு ஒரு புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதென முடிவு செய்தபின் இந்த ’தோழர்’ புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதென முடிவு செய்துவிட்டேன். ஒரு நண்பருக்கு கொடுக்கும் முதல் பரிசு ‘தோழர்’ என்றிருப்பதை லாஜிக்காக விரும்பியதும், மேலும் அவர் ஒரு நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர், அவருடைய விமர்சனத்திற்கு பிறகு புத்தகத்தை படிப்பது இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டுமென்பதும், அதற்கான காரணங்கள்.


நான் விமர்சனம் செய்கிறேன் என்றபெயரில் எதை சொல்லியும் இந்த நாவலின் தரத்தை உயர்த்தவோ, தாழ்த்தவோ வரவில்லை. இது ஒரு நல்ல புத்தகத்தின் அறிமுகம். கம்யூனிஸ சிந்தனைகளில் பிடிப்புடையவர்கள், பிடிப்பற்றவர்கள் என இருவரையும் திருப்த்திபடுத்தும் ஒரு படைப்பு. அவசியம் படியுங்கள், சுவாரஸ்யத்திற்க்கும், நல்ல கருத்துக்கும், ஆழமான மனவியலுக்கும், மேம்பட்ட வளமான ஹாஸ்யத்திற்கும் மெல்லிய காதலுக்கும் நான் பொருப்பு. ஷபின்னாவிற்கும் பழனிமுருகனுக்குமிடையே நடக்கும் ஒவ்வொரு உரையாடல்களும், கவிதை. காதலை அனுபவித்தவர்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் எளிதில் விளங்கும்.சில விஷயங்கள் ச.தமிழ் செல்வன் முன்னுறையிலிருந்து

வருமையும் பசியும் பின்னிய கரிசல்காட்டுக் கிராமத்தை, அதன் வாழ்கையை ‘வேடிக்கை’ பார்க்கவரும் பிரான்ஸ் நாட்டு கிருஸ்த்துவர் குழு ஒன்றை வழிகாட்டியாக இருந்து அழைத்துச் செல்லும் இளைஞர் ஒருவருடைய பார்வையில் கதை விரிகிறது. சாதாரணமாக – இயல்பானதாக – நாம் பழகிய, கண்களில் படும் பல விஷயங்களை ஒரு வெளிக் கண்ணுக்கு வித்தியாசமாகவும், வேதனைதரும் ஒன்றாகவும் படுவது நாவலில் பல இடங்களில் பதிவாகியிருக்கும்.அரைகுறையான இடதுசாரி பார்வையும், தன் சக மனிதர்களின்மீது நேசமும் அக்கறையும்மிக்க அந்த இளைஞனின் மனதை புரிந்துகொண்ட அக்குழுவிலிருக்கும் ‘ஷபின்னா’ என்கிற இளம்பெண்ணின் மனதிற்குள் நிகழும் மாற்றங்கள் கதையின் மையமாக அமைகிறது. தோழர் என்ற சொல்லை கேட்டாலே அலறுகிறவளாக நாவலில் அறிமுகமாகும் ஷபின்னா நாவலின் முடிவில் குழுவோடு பிரான்ஸ் நாட்டிற்கு புறப்படும் தருணத்தில் அந்த இளைஞரை ‘தோழர்’ என்று அன்போடு கண்களில் நீருடன், கூவி அழைப்பதோடு நாவல் முடிவடையும்.எப்போதும் உணர்ச்சி கொந்தளிக்கும் ஒரு படைப்பு மனதோடு வாழ்ந்தவர் தனுஷ்கோடி ராமசாமி. அவருடைய எல்லா கதைகளுமே கரிசல்காட்டு வாழ்வை சொல்லும் உணர்ச்சிமயமான குரலில் சொன்ன கதைகளே.
தவிர, இலக்கிய உலகில் உரிய இட்த்தை அவர் பெறவில்லை என்றுதான் தோன்றுகிறது. அப்பாவிக்கு எங்குதான் இடம் கிடைக்கிறது? தன்னை முன்னிருத்திகொள்ள சகல தகிடுதித்தங்களையும் செய்கிற இந்த உலகத்தில் சத்தமில்லாமல் வாழ்ந்து, வாழ்ந்த சுவடு தெரியாமல் காற்றில் கலந்த அசலான மனிதன், தனுஷ்கோடி.தோழர்
தனுஸ்கோடி ராமசாமி
முதல் பதிப்பு 1985
இரண்டாம் பதிப்பு 2005
விலை – 130/-
பாரதி பதிப்பகம்.

ஆகவே தோழர்களே! .................................................

What's Eating Gilbert Grape ?

What's Eating Gilbert Grape
கில்பெர்ட் கிரேப் என்ன சாப்பிட்டான்?


இது ஒரு ஹாலிவூட் திரைப்படம் தான். 1993ல் வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்ற நல்ல திரைப்படங்களில் ஒன்று. Leanardo Di caprio, Johnny depp மற்றும் பலர் நடித்துள்ள ஒரு ஹாலிவூட் திரைப்படம். ஒரு முறை நண்பன் மதுவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இந்த படத்தைப் பற்றி என்னிடம் சொன்னான். ஒரு வேளை இதை அவனை தவிர வேறு யார் சொன்னாலும் எனக்கு இந்த அளவு ஆர்வம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எனக்கு ஒரு விசயத்தை கோர்வையாக சொல்லுவது என்பது சுட்டு போட்டாலும் வராது, இதே எழுதுவதாக இருந்தால் கூட யோசித்து ஓர் மாதிரியாக முடித்து விடுவேன். பேசும்போது என்னால் அவ்வளவு சுவாரஸ்யமாக பேசமுடிவதில்லை. ஆனால் மதுவை பொருத்த வரை Narration என்பது அவனுக்கு ஒரு கை வந்த கலை. அதிலும் மற்றவர்களுக்கு புரியும்படி அல்லது கவரும்படி சொல்லுவதில் அவனுக்கு நிகர் அவன்தான்.
ஆக அவன் சொன்ன நிமிடம் முதலாக எனக்கு இந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம் ஏற்ப்பட்டது. எனக்கு தெரிந்த பல நண்பர்களிடமும் இதை பற்றி முக்கியமாக சென்னை, பாண்டிசேரி மற்றும் பெங்களூர் - ல் உள்ள நண்பர்களிடம் இந்த படத்தின் DVD வாங்க சொல்லி, ஒரு கட்டத்தில் அவர்களை தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டேன். ஆனால் எங்கும் கிடைக்க வில்லை.ஒரு வழியாக நீண்ட தேடுதலுக்கு பிறகு கிடைத்தே விட்டது. ஆகா! ஓஹோ! என்று புகழ வேண்டிய படம் இல்லை என்றாலும் அழகாக ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதை.
இந்த படத்தில் ஒருவரி வரும் சந்தோசம் வரும் போகும், துக்கம் வரும் போகும், எது வந்தாலும் போனாலும் Life must be go on. இதுதான் இந்த படத்தின் tagline. அப்பா இல்லாத குடும்பத்தின் மூத்த மகனின் கதை. ஹாலிவுட் படங்களில் இது போல படங்களின் எண்ணிக்கை குறைவுதான் அல்லது ஒருவேளை அதைபற்றிய அறிமுகம் எனக்கு குறைவாகவே இருந்திருக்கலாம். 150 கிலோ எடைக்கு மேல் பருமனான அம்மா, திருமண வயதில் ஒரு தங்கை, குடும்ப சுமை அறியாத வயதில் ஒரு தங்கை மற்றும் மனவளம் குன்றிய தம்பி (Arnie Grape- Leonardo di Caprio), பொறுப்பான மூத்த மகன் (Gilbert Grape - Johnny Depp) என மிகவும் வித்தியாசமான பாத்திர படைப்பு.
24 மணி நேரமும் குடும்பமே நினைவாக இருக்கும் கில்பெர்ட், அவர்கள் ஒவ்வொருவரையும் கையாளும் விதம், அழகு. ஒரு நாள் இரவு வீட்டிற்கு வராததால் ஏற்ப்படும் குழப்பங்களை அவனை இன்னமும் அந்த குடும்பத்திடம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே அவன் காதல், அதன் தொடர்பான பிரச்சனைகள் இவற்றை சமாளிப்பதுதான் கதை. எதாவது குறும்பு செய்து எல்லோரிடமும் கோபத்தை பெறும் தம்பியிடம் அவன் காட்டும் அன்பும், ஒருகட்டத்தில் அவனது சேட்டைகளை பொருக்கமுடியாமல் திட்டிவிட, அதன் விளைவும், மிக நெகிழ்ச்சியான காட்சிகள். ஒருகட்டத்தில் அந்த பண்ணை வீட்டின் மாடியில் இருக்கும் அவனது அம்மா இறந்து விட பருத்த உடலை கொண்ட தாயை கீழே இறக்க முடியாமல் அம்மாவின் பிணத்தை உள்ளே வைத்து வீட்டையே எரிப்பது நெகிழ வைக்கும் காட்சி. அம்மா இறந்த பிறகு ஒரு தங்கை தனக்கு விருப்பபடவனுடனும் மற்றொரு தங்கை இசைக் குழுவினருடனும் சென்று விட தன் தம்பியுடன் ஒரு நாடோடியாக வாழ்க்கையை துவங்குவதாக முடிகிறது படம். குடும்பத்துக்காகவும் குடும்பத்தினருக்காகவும் தன்னையே வருத்திகொள்ளும் கில்பர்ட்டை, அவன் என்ன சாப்பிட்டான்? சாப்பிட்டானா? இல்லையா? என யாரும் கேள்வி கேட்க யாரும் இல்லாததையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இதில் மனவளம் இல்லாத தம்பியாக நடித்திருக்கும் Di Caprio- வின் நடிப்பு பிரமாதம். எந்தநேரமும் எதாவது குறும்பு செய்து கொண்டு, அல்லது எதாவது செய்து கொண்டே இருக்கும் அவனது துருதுருப்பு அனைவரையும் கவர்ந்து விடும். 1993 -ல் வெளிவந்த இந்த திரைப்படத்தில் உள்ள Di Caprio நமக்கு நிச்சயம் வித்தியாசமான பாத்திரம் தான். எந்த ஒருவரிடமும் மனம் கோணாதபடி நடந்து கொள்ளும் கில்பெர்டின் பாத்திர படைப்பும் அருமை.
எந்த ஒரு திரைப்படமும் சரி, புத்தகங்களும் சரி, அனுபவங்களும் சரி, நமக்கு எதாவது ஒன்றை கற்று கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த திரைப்படத்திலும் நாம் கற்று கொள்ள சில விஷயங்கள் இருக்கிறது. Handling - ஹேண்டிளிங் - கையாளுதல். முடிந்தால் ஒருமுறை இந்த திரைப்படத்தை பார்த்து விடுங்கள்.
அம்மா எழுந்திரு, இந்த காட்சி, ஒரு மன நலம் குன்றிய சிறுவன், காலையில் எழுந்துவந்து தூங்கிகொண்டிருக்கும் தன் அம்மாவை எழுப்புகிறான்,அவள் இறந்திருப்பது தெரியாமல். முதலில் கொஞ்சுகிறான், பிறகு மிரட்டுகிறான், பிறகு கெஞ்சுகிறான், தன் பேச்சை கேட்க்காமல் அம்மா எழமறுத்து படுத்தே கிடப்பதாக சொல்லி அழுதுகொண்டே ஒடுகிறான். இந்த காட்சி, டி காப்ப்ரியோவின் நடிப்பிற்கு ஒரு சோறு. இந்த வீடியோவை பார்க்க அம்மா எழுந்திரு,


இன்னொரு காட்சி, அண்ணன் பக்கத்திலுள்ளவரிடம் எதோ பேசிக்கொண்டு வருவான், அப்போது விளையாட்டுதனமாக ஒருகாலை தரையிலும் இன்னொரு காலை சுவற்றின் மீது வைத்து வழுக்கிகொண்டும் வருவான். இரண்டு மூன்று வினாடிகளே வரக்கூடிய அந்த காட்சிக்காக சீரியஸாக உழைத்திருப்பது தெரியும். இதுபோல சின்னசின்ன காட்சிகளின் மூலமாக ஒரு மனவளர்ச்சி குறைந்த சிறுவனின் செயல்பாடுகளை, டி காப்ப்ரியோ ஒரு கண்ணாடியைப்போல அப்படியே பிரதிபலித்திருப்பார். இதன் வீடியோ லின்க் இங்கே, இந்த வீடியோவின் 37வது நொடியில் பாருங்கள் .


அவசியம் படத்தை பாருங்கள், அல்லது இங்கே இந்த டிரெய்லர்களை பாருங்கள், நிச்சயம் படத்தை பார்க்கவைக்கும் அந்த இரண்டு டிரெய்லர்கள் டிரெய்லர் 1 , டிரெய்லர் 2

பாபநாசம் - பயணக்கட்டுரை

தீபாவளிக்கு திருப்பூரே காலியாகிவிடும் என்பதால் வருடாவருடம் எங்கேயாவது, (அதிகமாய் ஊட்டி) கிளம்பிவிடுவது வழக்கம். இந்த முறை நட்பு வட்டத்தில் ஏக குழப்பம் ஒருசிலர் கோவாவென்றும், ஒருசிலர் மூணாறென்றும், வெகு பலர் எங்க போனாலும் தண்ணிதான் அடிக்கபோறோம், ஆக அந்த ஒரு செலவாவது குறையட்டும் எனவே தீர்த்தகடல் பாண்டிசேரிக்கு போகலாமென்றும் பலவகையான மாற்றுக்கருத்து கொண்டிருந்தனர். பேசியவர்கள் பேசியபடி கிளம்ப, எனக்கு எங்கும் போகப் பிடிக்காமலும் எங்கே போவது என்று தெரியாமலும் குழம்பிக்கொண்டிருந்தேன்.

என்னை போன்றே குழப்பத்தில் திரிந்த கவுண்டனிடமும், அசோக்கிடமும்
பேசிக்கொண்டிருந்தபோது என் அசோக், “ஏண்டா, மக்கான் ஊருக்கு போகலாமா? அவன்தான் ரொம்ப நாளா கூப்ட்டுகிட்டு இருக்கானே? என்றான். அமால்ல, அவன் கல்யாணத்துக்கு கூட போகமுடியலை, அவனும் ஓவ்வொரு விடுமுறையின் போதும் கூப்புகிட்டேதான் இருக்கான் என்று தோன்றவே, ஆக பாபநாசமே செல்வதென்று ஒருமனதாக முடிவெடுத்தோம். நான், கவுண்டர், அசோக் மற்றும் அவன் மனைவி, மகன் சஞ்சு என நால்வரும் செல்வதாக முடிவு செய்து அசோக்கின் சாண்ட்ரோவில் கிளம்பினோம்( பிரபா, சஞ்சூ, அசோக், நான், கவுண்டர், மக்கான்)

கிளம்பும்போது எதையாவது மறந்துவிடுவது வழக்கம், ஆக வழக்கபோல இந்தமுறை என் பர்ஸ். வெறும் கையோடு கிளம்பிவிட்டேன். கவுண்டர்தான் நமக்கு படியளந்தார். தீபாவளி கொண்டாடிய கையோடு கிளம்பினோம், மதியம் 2.30 மணி. எட்டு மணி நேர பயணம். திருநெல்வெலியில் இரவு உணவை முடித்துவிட்டு பாப நாசம் “டாணா” வை சென்றடையும்போது மணி 11 ஆகிவிட்டிருந்தது. ஏற்கனவே முன்னேற்பாடாக ஒரு லாட்ஜில் ரூம் போட்டு வைத்திருந்தான், உள்ளே போய் செக் இன் செய்துவிட்டு, மூட்டை முடிச்சுக்களை அங்கே போட்டுவிட்டு, மக்கான் வீட்டிற்கு கிளம்பினோம். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது மணி 12 ஐ நெருங்கியிருந்தது. மக்கானின் குடும்பத்தில் அனைவரும் விழித்து காத்துகொண்டிருந்தார்கள், எங்களுக்காக. குளிச்சிட்டுவந்துட்டிங்கன்னா சாப்பிடலாம் என்றார்கள். பயணகளைப்பு குளித்தால் போகுமென கிளம்பி வீட்டின் வெகுஅருகில் உள்ள கோவிலை ஒட்டிய ஆற்றில் குளித்துவிட்டு திரும்பினோம். சுடசுட சப்பாத்தி, சிக்கன் குருமா, ஒருபிடிபிடித்துவிட்டு வந்து படுத்தோம். அடுத்த இரண்டு நாட்களுமே ஆற்றுகுளியலும், அருவிக்குளியலும், தூங்குவதும், கொஞ்சமாய் குடிப்பதும், வயிறு புடைக்க சாப்பிடுவதுமாக கழிந்தது.

தலையணை, ஆற்றின் ஆழமான பகுதிக்கிடையில் கட்டியிருக்கும் தடுப்பணை, பார்க்க தலைவத்து படுக்க வாகாக இருப்பதுபோல இருப்பதால் தலையணை என்றழைக்கப்படுகிறது. இடுப்பளவு தண்ணீர், தடுப்பணையை தாண்டிவருவதால் சீரான வேகம், வெகுசமமான தரைப்பகுதி. என்னை போல நீச்சல் தெரியாமலேயே ஆற்றுகுளியலை அனுபவிப்பவர்களுக்கான சொர்க்கம் அது.
அடுத்த நாள் இரவு, வேறெங்கும் செல்ல திட்டமிடாததால், வழக்கம்போல இரவு காட்சிக்கு செல்ல முடிவு செய்து, ஆதவனுக்கு சென்றோம். அங்கேயும் என்னை போல நிறைய ஏமாளிகள் இருந்தனர், தியேட்டர் நிரம்பியிருந்தது. எப்போதும் பாடல் சரியில்லையென்றால் வெளியேறி தம்மடிப்பது வழக்கம், எங்களுக்கு அதற்கும் வழியில்லை. ஆளாளுக்கு உள்ளேயே தண்ணி, தம்மடித்தனர். வேற வழியே இல்லாமல் எல்லா பாடல்களையும் புகை’ச்சலோடு பார்த்தோம். ஆதவன் -அழகன் சூர்யாவிற்கு ஒரு ஷோகேஷ், அவ்வளவுதான்.

அகத்தியர் அருவி, இங்கே முதலில் நாங்கள் செல்லும்போது மணி இரவு 10.30 இருக்கும். மக்கான் “இரவு நேரத்தில் அங்கே குளிப்பது சுகமாக இருக்கும், மேலும் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் ‘சுதந்திரமாக’ குளிக்கலாம்” என்றான். மக்கானுடைய நண்பன் சி.எம் (அவர்பேரு கருணாநிதிங்க) புண்ணியத்தில் ஸ்பெசல் பர்மிசன் வாங்கிகொண்டு மலையேறத்தொடங்கினோம். மலைமீது ஒரு அரை மணி நேர பயணம், அகத்தியர் அருவியின் நுழைவாயிலை அடைந்தோம். வரும் வழியில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் தங்களை இனிதே வரவேற்கிறது என்று போர்டு வைத்து பயமுறுத்தினார்கள். போர்டை பார்த்ததுமுதல் அசோகின் மனைவி பிரபா பயந்துதான் போனார்கள். மேலும் அவர்களை பயமுறுத்துவதன் மூலமாக எங்களது பயத்தினை குறைத்துகொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்தோம். வெறும் மொபைலில் வெளிச்சத்தில், புலிகள் நடமாட்டம் இருக்குமென நம்பப்படுகிற பகுதியில் மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தோம். தீக்குச்சியை பற்றவைத்துக்கொண்டே முன்னால் நடந்துகொண்டிருந்த சி.எம். அங்கே பாருங்கள் பளிச்சுன்னு ரெண்டு லைட் மாதிரி தெரியுதில்லையா? அந்த மாதிரிதான் இருக்கும் புலியோட கண்ணு, அப்படி எதையாவது பார்த்திங்கன்னா, சத்தம் போடாதிங்க, மெதுவா நடந்துகிட்டே இருங்கன்னார். அதுக்கு மேல ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டென்னு பிரபா அடம்பிடிக்க, அவர்களையும், அசோக்கையும் அனுப்பி வைத்து விட்டு நாங்கள் தொடர்ந்து செல்ல முற்பட்டோம். ஐந்து நிமிடம் கூட இல்லை, பயம் மெல்ல வயிறை பிசைய ஆரம்பித்தது, வெகு அருகில் அருவி இருந்தும் குளிக்கும் மனநிலையில் இல்லை, ஆக திரும்பி வந்துவிட்டோம்.

பேராண்மை படத்தில் ஆதிவாசிகள் வசிப்பதாக காட்டப்படும் இடத்திற்கு சென்றோம். மக்கானின் மச்சான், அந்த இடத்தை சுற்றிய காட்டுபகுதிக்குள் ஒரு இரண்டு மூன்று மைல்களுக்கு கூட்டிச் சென்றான். இது இதுவரை மனித காலடியே படாத இடம், நாம் குளிக்க செல்லுமிடத்தில் இருக்கும் தண்ணீர் இதுவரை மனித காலடிபடாத சுத்தமான தண்ணீர், என ஏகப்பட்ட விபரங்களை அள்ளி தெளித்துக்கொண்டே வந்தான். இடமும் தண்ணீரும் அவன் பேச்சின் நியாத்தை நிருபிப்பதாகவே இருந்தது. ஆனாலும் தண்ணீர் தேங்கி செல்வதால் பாசம் பிடித்திருந்தது, குளிக்க மனமில்லை. நீந்த முடியாமல் நாங்கள் அருகில் நடந்து செல்லும் போது விலகாமல் இருந்தது ஒரு மீன், அடிபட்டிருந்தது. அதை லாவகமாக பிடித்து “மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்று பாடிக்கொண்டு அதை தண்ணீரில் வீட்ட போது செத்திருந்தது. பாவம் அப்படியேவாவது விட்டிருக்கலாம்.

பானதீர்த்தம், ரோஜா படத்தில் மதுபாலா சின்ன சின்ன ஆசைன்னு கம்பிய புடிச்சிகிட்டு ஆடுவாங்களே அந்த இடம், அந்த அருவிதான் பானதீர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும், இரண்டு மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான அணையின் மறுகரையில் உள்ள மலையின் இரண்டாவது மைலில் உள்ளது, அந்த அருவி. படத்துல ரொம்ப சாதாரணமா மதுபாலா தங்கச்சி வீட்டிலிருந்து ஓடிவந்து குளிச்சிட்டு இருக்கும் மதுபாலாவை கூட்டிட்டு போவாங்க, அதெல்லாம் சும்மா. அரைமணி நேர மோட்டார் படகு சவாரி, பிறகு அரைமணி நேர மலையேற்றத்திற்கு பிறகே அருவியை அடைய முடிகிறது. நிம்மதியான குளியல், குளிர்ந்த நீர், கண்ணுக்கெட்டிய வரை நீர் கடல் போல் சூழ்ந்திருந்தது, அதிசயித்துபோயிருந்தேன்.

பாப நாசம், முண்டந்துறை, டானா, அகத்தியர் அருவி, பானதீர்த்தம், அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, மணிமுத்தாறு என இன்னும் சொல்லிகொண்டே போகலாம். எல்லா இடங்களும் வெகு அருகருகில் இருப்பது இன்னமும் சிறப்பு. எல்லாவற்றிலும் சிறப்பாக மகுடத்தில் வைத்த வைரமாக தென்தமிழ் மக்களுக்கே உரிய எளிமையான குணம், அன்பு, வெகுளித்தனம், குசும்பு எல்லாவற்றையும் ஒருசேர பெற்ற நண்பனின் குடும்பத்தினர். அவர்களின் உபசரிப்பு எனக்கு “போதுமென நிறுத்தும் புறங்கையில் சுடுசோறு போடும் தமிழ் மக்கள்” என்கிற வரிகளை நியாபப்படுத்தி செல்கிறது.
இன்னும் அங்கே விட்டுபோன இடங்களை சுற்றிப்பார்க்க இன்னொரு தீபாவளியை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னடா இவன் மட்டும் பார்த்துட்டு, இங்க சும்மா சர்ஃபை போட்டு விளக்கிட்டு இருக்கானேன்னு திட்டாதீங்க மக்களே!, படத்தை இங்க போயி பாருங்க, இல்லை கீழே உள்ள சுட்டியை கிளிக்கி பாருங்க.

தீபங்களின் திருநாள் தீபாவளி

எனக்கு தெரிந்து யார் ஒருவருடைய இறந்த நாளையும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது கிடையாது. தீபாவளி. கான்செப்ட் தப்பா இருந்தாலும் ரொம்ப கலர்புல் பண்டிகை. அனேகமாக இந்தியாவே ஒன்று சேர கொண்டாடும் பண்டிகை. முன்பு இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி, இன்று சாதி, சமய, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


தீபாவளி என்ற உடனே நினைவுக்கு வருவது கங்கா ஸ்நானம், புதுத்துணிகள், பட்டாசு. அதிலும் வெகு விஷேசம் கங்கா அதிலும் எங்கள் வீட்டில் பாட்டி இருந்தவரை காலை நாலு மணிகெல்லாம் அனைவரும் எழுப்பப்பட்டு இருப்போம், இத்தனைக்கும் காலையில் தீபாவளி என்ற கனவோடும், எங்கே எனது பட்டாசுக்களை அக்காவோ தங்கையோ எடுத்து விடுவார்களோ என்ற பயமும் கலந்து அநேகமாய் தூக்கத்தையே மறந்திருப்போம். அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருப்பார்கள். எல்லாரும் அழுங்க மழுங்க விழித்தபடி தலையில் பாட்டி வைத்து விட்ட எண்ணெய் வழிய பலகையில் அமர்திருப்பார்கள்.


எங்கள் ஊரில் ஒரு பழக்கம், யார் அந்த தெருவில் முதல் பட்டாசு போடுகிறார்களோ அவர்களே அந்த தெருவிற்கு தீபாவளியையே கொண்டு வந்து விட்டதாக சொல்லுவர். எனவே காலையில் எழுந்தவுடன் அந்த தெருவையே ஒரு சுற்று சுற்றி வந்து யாரும் இதுவரை பாட்டாசு வெடிக்கவில்லை என்று தெரிந்த பின்னரே நான் பூஜையறைக்கு வருவேன். எனக்கு தலையில் எண்ணெய் வைத்து ஸ்லோகங்கள் சொல்லி சாமி கும்பிட்டு விட்டு முதல் பட்டாசை பாட்டி எடுத்து கொடுக்கும்வரை, எனது முழு கவனமும் தெருவிலேயே இருக்கும். சாமி கும்பிட கண்களை மூடும்போது நல்லெணெய் விளக்கில் தண்ணீர் பட்டு வெடிக்கும், அந்த சத்தம் யாரோ தெருவில் முதலில் வெடித்து விட்டார்களோ என்கிற என் பயத்தை கூட்டவே அது வேண்டுமென்றே வெடிக்கிறது என்று நினைத்து கொள்வேன். பிறகு அந்த முதல் வெடி என்னால் வெடிக்கப்பட்டது என்று தெரிந்த பின்னர் தான் எனக்கு தீபாவளி.


செம்பருத்தியிலை, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை மற்றும் இன்னபிற எனக்கு தெரியாத சில பூக்களும் இலைகளும் ஒன்றுசேர்த்து நல்லெண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தீபாவளியின் ஒருசில நாட்களுக்கு முன்னராகவே கங்கா ஸ்நானத்திற்கு எண்ணெய் தயாராக இருக்கும். முறுக்கு, சீடை, ரவா லட்டு, முக்கியமாக மைசூர் பாகுபோன்ற இனிப்பு கார வகைகள் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அம்மாவும் பாட்டியும் செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளியன்று சாமிக்கு படைக்கப் பட்டு பின்னரே சாப்பிடவேண்டும் என்பது பாட்டியின் கட்டளை. அம்மா செய்யும் மைசூர் பாகு, கெட்டியாக விகடன் ஜோக்கில் வரும் சுத்தி வைத்து உடைக்கும் இனிப்புகள் போல இருக்கும். ஆனாலும் அது எனக்கு பிடித்த இனிப்பு. இன்னமும் எது மாறினாலும் மாறாத ஒன்று அம்மா செய்யும் மைசூர் பாகு. அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், பாகு கிண்டியபின்னர் நெய் தடவப்பட்ட அகண்ட தட்டில் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி வைப்பார். அதிலும் பாட்டிக்கு தெரியாமல் சிறு சிறு துண்டங்களை எனக்கு தரும் அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


எங்களை பொறுத்தவரை தீபாவளி , தீபாவளியன்று கொண்டாடப்படுவது கிடையாது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும், எங்களுக்கென்று பட்டாசும் புதுத்துணியும் வாங்கப்பட்டு விட்டதோ அன்றிலிருந்தே தீபாவளிதான். பட்டாசு வாங்கியவுடன் அப்பா எனக்கு என் தங்கைக்கு அக்காவுக்கு என்று பங்கிட்டு கொடுத்துவிடுவார். யார் மனதும் கோணாதபடி பங்கிடுவதில், அப்பாவுக்கு நிகர் அப்பாதான். இதில் எது சரியாக இருந்தாலும் பட்டாசுகளை அதிகம் வைத்திருக்கும் எனக்கு நான்தான் அதிகம் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வேன்.


ஒவ்வொருநாள் பள்ளி முடிந்து வந்தவுடன் அவரவர்க்கான பட்டாசுக்களை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று காயவைப்பதும், சிலேட்டு, நோட்டு, பேப்பர் என எங்கு பார்த்தாலும் எதை பார்த்தாலும் அதில் பாட்டாசு, மத்தாப்பு வகைகளை வரைந்து அதற்கு மேலே பட்டாசு கடை என்று எழுதுவதும், கடை என்பதை அடித்து கடல் என்று எழுதுவதும், அதிலும் லட்சுமி வெடி வரையும்போது அதில் லட்சுமி படம் தெரிய வரைய நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன், புது துணிமணிகள் சரசரக்க அக்காவும் தங்கையும் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று இனிப்புகளை கொடுத்து விட்டு வருவார்கள். பிறகு அவர்கள் வீட்லிருந்து எங்களுக்கு என்று ஒரு பண்டமாற்றமே நடந்து கொண்டு இருக்கும்.


பின்னர் நண்பர்கள் ஒவ்வொருவராக சேர பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் விதவிதமாக வெடித்துகொண்டிருப்போம். அதிலும் பரமசிவம் என்று ஒரு நண்பன் இருந்தான், அவனுக்கு மட்டும் எங்கு கிடைக்குமோ தெரியாது, கிலோ கணக்கில் வெங்காய வெடி கொண்டு வருவான். சாதாரண வெடியை கூட விதவிதமாக வெடிக்கும் பரமசிவத்திடம் நான் எனது குழந்தைகளுக்கு செய்துகாட்ட நிறைய சாகசங்கள் இருக்கிறது. இப்படி தீபாவளிக்கு முந்தய ஒவ்வொரு நாளும் தீபாவளியாகத்தான் இருந்திருக்கிறது.


முன்பெலாம் டிவி கிடையாது, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது. தீபாவளி தீபாவளியாகவே இருந்தது. இன்று தீபாவளி மற்றுமொரு விடுமுறை நாள். இப்பொழுது பாட்டி இறந்து விட்டார்கள், அக்காவும் தங்கையும் திருமணம் ஆகி சென்று விட்டார்கள், பரமசிவமும் இல்லை, ஆனாலும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு தீபாவளியும் என்னுள் பலபல நியாபகங்களை விதைத்து சென்றவாறேதான் இருக்கிறது.

நான் இன்னமும் 4 மணிக்கு எழுந்து கொண்டுதானிருக்கிறேன், தெருவின் முதல் வெடியை வெடித்து கொண்டுதானிருக்கிறேன் . எதற்காகவும் தீபாவளி கொண்டாடுவதை விடுவதாய் இல்லை.இதோ தீபாவளி வாரம் வந்துவிட்டது. இன்னும் நாலு நாட்களில் தீபாவளியும் வந்துவிடும், நம் எல்லோருக்குமாய்.


// பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவுதான் சில மாறுதல்களோடு, சென்றவருட தீபாவளிக்கு நான் எழுதியது. இப்போ எழுத நெறைய இருந்தாலும் நேரம் குறைவுதான். ஆக தொடர்ந்து படிப்பவர்கள் மன்னிக்கவும். புதிதாய் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சங்களையும் எப்பொதும் போல விட்டுச்செல்லுங்கள்.

சகபதிவர்கள்-நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். எங்கும் தீபத்தின் ஒளி பரவ, பொங்கும் இன்பம் எங்கும் தங்க, வாழ்வில் எல்லா செல்வங்களும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, சந்தோச தருணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நண்பன் முரளிகுமார் பத்மநாபன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்கள். :-) //

கோடீஸ்வரனின் முதல் காதல்


நல்லா இருக்குன்னு பார்க்கிற எந்த தமிழ் திரைப்படங்களும் ஏதாவது ஒரு உலக திரைப்படத்தை நியாபகப்படுத்துவது போய் இந்த கொரிய திரைப்படத்தை பார்க்கும்போது ஏகப்பட்ட தமிழ்படங்கள் நியாபகத்திற்க்கு வந்தது. இந்த படம் 2006ல் வெளிவந்த்தால் நாம் நம்மவர்களை சந்தேகப்படுவதில் நியாயமில்லை. தம்பிக்கு எந்த ஊரு, இதயத்தை திருடாதே, 7ஜி ரெயின்போ காலனி, இன்னும் பல படங்களின் கலவைதான் இந்த “கோடீஸ்வரனின் முதல் காதல்”.

இவான் வாங் என்கிற இளம்பெண்ணுக்கும் க்யான் உன் என்கிற இளம் வாலிபனுக்கும் இடையே வருகிற காதலும் (பெயர் உச்சரிக்க கடினமாக இருந்ததால், இனி பொண்ணு, பையன் என்றே தொடர்கிறேன்), அதைத்தொடர்ந்த சம்பவங்களுமே இந்த Millionaire’s First Love.
க்யான் உன் ஒரு இளைஞன், அழகானவன், முரடன், பணத்திமிர் அதிகம் கொண்டவன் ஆனால் கோடீஸ்வரன். உட்கார்ந்து சாப்பிட்டாலே பத்து தலைமுறைகள் சாப்பிடுமளவுக்கு இருக்கும் தாத்தாவின் சொத்தும் கேள்விகேட்க ஆள் இல்லாத்தாலும் அவனை அப்படி ஆக்கி வத்திருக்கின்றன.

இருந்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல அவனது 18வது பிறந்த நாளில் பார்ட்டி முடிந்து ஹோட்டல் திரும்புகையில் அவளைப்பார்க்கிறான். தன்னால் கைவிடப்பட்ட பெண்களில் ஒருத்தியாக இருக்கலாமென்று நினைப்பில் கொஞசம் பணத்தை கொடுத்துவிட்டு நகர்கிறான். அந்த பிறந்த நாளில், ஒருசெய்தி வருகிறது அவனின் குடும்ப வக்கீல் மூலமாக. அடுத்த ஒரு வருடம் அவனுடைய சொந்த ஊரில் தங்கி அங்கே உள்ள பள்ளியில் அவன் படிக்க வேண்டும், இதில் ஏதாவது முரண்பட்டாலோ அல்லது அவன் அந்த பள்ளியில் படிப்பை முடிக்காவிட்டாலோ 0.1% சதவிகித சொத்து அவனுக்கும் மீதமுல்ல அனைத்து சொத்துக்களும் தொண்டு நிறுவனங்களுக்கு போய் சேரும் என்கிறது தாத்தாவின் உயில்.

வேண்டா வெறுப்பாக கிராமத்திற்கு செல்கிறான். மிக உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் வாழ்ந்த அவனுக்கு கிராமத்து வீட்டில் இருபது அசெளகரியமாக இருக்கிறது. அதே கிராமத்தில் மீண்டும் அவளைப் அடுத்தடுத்து சந்திக்கிறான். ஒரு கடையில் வேலை செய்யும் பெண்ணாக, பள்ளியில் சக மாணவியாக, பெட்ரோல் பங்கில் வேலை செய்பவளாக, அங்குள்ள அனாதை ஆசிரமத்தில் பணிபுரிபவளாக இருக்கிறாள்.

தொடர்ந்து அவளோடு பழக, அவளோடு நட்பு மலர்கிறது. ஒரு நாள், நடனப்பயிற்ச்சியின் போது மயங்கி விழும் அவளை முதலில் நடிக்கிறாள் என்று நினைக்கும் அவன், பிறகு அவளைத்தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறான். டாக்டர் மூலமாக அவளுக்கு இதயத்தில்பிரச்சனை இருப்பதையும், அதீத மகிழ்ச்சியும், துன்பமும் அவளுக்கு மிக எளிதில் சாவைகொடுக்கும் என்றும் அறிகிறான். இதயத்தை மாற்றிவையுங்கள், எவ்வளவு செலவானாலும் சரி என்று கதறுகிறான். ஆனால் ”இனி இதயத்தை மாற்றுவது என்பது நடக்காது, ஏற்கனவே ரொம்ப லேட்” என்கிறார் டாக்டர்.


இதுவரை மற்றவர்களிடம் சுமுகமான உறவில்லாமல் இருந்தவன், அன்று பள்ளி நண்பர்களோடு அவளுக்கு எதையாவது வாங்கிவர செல்கிறான். சந்தையில் நண்பர்களுக்கு விரும்பியதை வாங்கி கொடுக்கிறான். வெறும் 10 டாலரில் அனைவருக்கும் விரும்பியதை வாங்கிக்கொள்ள முடிந்த்தை நினைத்து ஆச்சர்யம் அடைகிறான். பிறகு அவளுக்கு கம்பளியால் ஆன ஒரு ஷாக்ஸ் ஒன்றை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறான். அங்கு அவள் இல்லாத்தால் அங்கும் இங்குமாக அவளைத்தேடி அலைகிறான். அந்த அனாதை அசிரமத்திற்கு சென்று தேடும்போதுதான் அவனுக்கு அந்த இடமும் அவனது பால்ய நியாபகஙகளும் வருகிறது. பிறகு அவளது வளர்ப்புதந்தையை சந்தித்து அவளை தன்னோடு தங்கிகொள்ள அனுமதி பெருகிறான்.

அவளை சந்தித்து இது பற்றி சொல்கிறான். அவளுக்கும் இவன் மீது காதல் இருக்கவே சம்மதிக்கிறாள். அவள் தனது வியாதியை பற்றி அவனுக்கு தெரியாது என்று நினைக்கிறாள். அவனும் அதேபோல அவளுக்கு அந்த வியாதியை பற்றி தெரிந்தால் உடைந்துவிடுவாள் என்று நினைக்கிறான். அவள் மீது மிகுந்த அன்புசெலுத்துகிறான்.

ஒரு நாள் பள்ளியில் நாடகம் ஒத்திகை பார்த்துகொண்டிருக்கும்போது, ஒரு வசனம் வருகிறது “ நான் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வந்துவிடுவேன்” என்று காதலனும் “ நிஜமாத்தான் சொல்றியான்னு” காதலியும் பேசிக்கொள்வதுபோல ஒரு காட்சி. அதைப்பார்க்கும் அவனுக்கு அவனது பால்யக்காதல் கண்முன் வருகிறது. அவன் தாத்தாவிற்கு சொந்தமான அந்த ஆனாதை விடுதியில் இருக்கும் சிறு வயது இவான் வாங்கும் இவனும் பேசிக்கொண்ட்து நியாபகம் வருகிறது.

அவளிடம் சிறுவயதில் விடைபெற்று செல்லும்வழியில் நடந்த விபத்தில் பெற்றோரை இழந்த்தையும் அதனால் பழைய நினைவுகள் இல்லாமல் போனதையும் அவளிடம் சொல்லி வருந்துகிறான். மழையோடு கூடிய அந்த மாலை நேரத்தில் அவளிடம் தன்காதலை சொல்கிறான். நானும் உன்னை காதலிக்கிறேன் அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சியால் சீக்கிரம் சாகவும் போகிறேன் என்கிறாள். அப்போதுதான் அவளுக்கும் அந்த வியாதியை பற்றி தெரிந்திருக்கிறது என்பதை அறிகிறான்.

“நீ வாங்கி கொடுத்த கம்பளி ஷாக்ஸை, பனிபொழியும் பொழுதுதான் உபயோகிக்கமுடியும், ஆனால் அதற்குள்ளாக உன் அதீத காதலால் நான் இறந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது” என்கிறாள்.

அன்றிலிருந்து அவள் இறக்கும்வரை திகட்ட திகட்ட காதலிக்கிறார்கள். அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் அத்தனையிலும் காதல் வழிகிறது. தபூ சங்கரின் வரிகளைவிட மென்மையானது இந்த காதலர்களின் உரையாடல்கள். இதைவிட அழகாக காதல் காட்சிகளையோ, வசனங்களையோ நான் வேறு எந்த திரைப்படங்களிலும் பார்த்ததுஇல்லை. இந்த அதீத பாராட்டுக்கு என் குறைந்த பட்ச சினிமா அறிவுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த படம் எனக்கு அவ்வளவு பிடித்தது.

மிக எளிய திரைக்கதை, எந்த மூக்கை சுற்றி காதைத்தொடுகிற சமாச்சாரங்களும் இல்லை. காட்சிகளும் காட்ச்சியமைப்புகளும், அருமையான இசையும், ஒளிப்பதிவும் கொண்ட மென்சோகம் கலந்த காதல் கதை அல்லது கவிதை. அவ்வளவுதான் இந்த திரைப்படம். குறிப்பாக இசையும் ஒளிப்பதிவும் காதலைக்கொண்டாடியிருக்கிறது.

உலக காதலர்களுக்கான ஒரு அழகான திரைப்படம்.

பட்த்தின் ஒரு முக்கியமான காட்சி, உங்களுக்காக
http://www.youtube.com/watch?v=3QxF9yw6H6w&feature=related

மேலும் இதே படம் பற்றிய சக பதிவர் ரசிக்கும் சீமாட்டி அவர்களின் பார்வை உங்களுக்காக.
http://enathurasanai.blogspot.com/2009/09/millionaires-first-love.html