தீபங்களின் திருநாள் தீபாவளி

எனக்கு தெரிந்து யார் ஒருவருடைய இறந்த நாளையும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது கிடையாது. தீபாவளி. கான்செப்ட் தப்பா இருந்தாலும் ரொம்ப கலர்புல் பண்டிகை. அனேகமாக இந்தியாவே ஒன்று சேர கொண்டாடும் பண்டிகை. முன்பு இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி, இன்று சாதி, சமய, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.


தீபாவளி என்ற உடனே நினைவுக்கு வருவது கங்கா ஸ்நானம், புதுத்துணிகள், பட்டாசு. அதிலும் வெகு விஷேசம் கங்கா அதிலும் எங்கள் வீட்டில் பாட்டி இருந்தவரை காலை நாலு மணிகெல்லாம் அனைவரும் எழுப்பப்பட்டு இருப்போம், இத்தனைக்கும் காலையில் தீபாவளி என்ற கனவோடும், எங்கே எனது பட்டாசுக்களை அக்காவோ தங்கையோ எடுத்து விடுவார்களோ என்ற பயமும் கலந்து அநேகமாய் தூக்கத்தையே மறந்திருப்போம். அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருப்பார்கள். எல்லாரும் அழுங்க மழுங்க விழித்தபடி தலையில் பாட்டி வைத்து விட்ட எண்ணெய் வழிய பலகையில் அமர்திருப்பார்கள்.


எங்கள் ஊரில் ஒரு பழக்கம், யார் அந்த தெருவில் முதல் பட்டாசு போடுகிறார்களோ அவர்களே அந்த தெருவிற்கு தீபாவளியையே கொண்டு வந்து விட்டதாக சொல்லுவர். எனவே காலையில் எழுந்தவுடன் அந்த தெருவையே ஒரு சுற்று சுற்றி வந்து யாரும் இதுவரை பாட்டாசு வெடிக்கவில்லை என்று தெரிந்த பின்னரே நான் பூஜையறைக்கு வருவேன். எனக்கு தலையில் எண்ணெய் வைத்து ஸ்லோகங்கள் சொல்லி சாமி கும்பிட்டு விட்டு முதல் பட்டாசை பாட்டி எடுத்து கொடுக்கும்வரை, எனது முழு கவனமும் தெருவிலேயே இருக்கும். சாமி கும்பிட கண்களை மூடும்போது நல்லெணெய் விளக்கில் தண்ணீர் பட்டு வெடிக்கும், அந்த சத்தம் யாரோ தெருவில் முதலில் வெடித்து விட்டார்களோ என்கிற என் பயத்தை கூட்டவே அது வேண்டுமென்றே வெடிக்கிறது என்று நினைத்து கொள்வேன். பிறகு அந்த முதல் வெடி என்னால் வெடிக்கப்பட்டது என்று தெரிந்த பின்னர் தான் எனக்கு தீபாவளி.


செம்பருத்தியிலை, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை மற்றும் இன்னபிற எனக்கு தெரியாத சில பூக்களும் இலைகளும் ஒன்றுசேர்த்து நல்லெண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தீபாவளியின் ஒருசில நாட்களுக்கு முன்னராகவே கங்கா ஸ்நானத்திற்கு எண்ணெய் தயாராக இருக்கும். முறுக்கு, சீடை, ரவா லட்டு, முக்கியமாக மைசூர் பாகுபோன்ற இனிப்பு கார வகைகள் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அம்மாவும் பாட்டியும் செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளியன்று சாமிக்கு படைக்கப் பட்டு பின்னரே சாப்பிடவேண்டும் என்பது பாட்டியின் கட்டளை. அம்மா செய்யும் மைசூர் பாகு, கெட்டியாக விகடன் ஜோக்கில் வரும் சுத்தி வைத்து உடைக்கும் இனிப்புகள் போல இருக்கும். ஆனாலும் அது எனக்கு பிடித்த இனிப்பு. இன்னமும் எது மாறினாலும் மாறாத ஒன்று அம்மா செய்யும் மைசூர் பாகு. அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும், பாகு கிண்டியபின்னர் நெய் தடவப்பட்ட அகண்ட தட்டில் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி வைப்பார். அதிலும் பாட்டிக்கு தெரியாமல் சிறு சிறு துண்டங்களை எனக்கு தரும் அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.


எங்களை பொறுத்தவரை தீபாவளி , தீபாவளியன்று கொண்டாடப்படுவது கிடையாது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும், எங்களுக்கென்று பட்டாசும் புதுத்துணியும் வாங்கப்பட்டு விட்டதோ அன்றிலிருந்தே தீபாவளிதான். பட்டாசு வாங்கியவுடன் அப்பா எனக்கு என் தங்கைக்கு அக்காவுக்கு என்று பங்கிட்டு கொடுத்துவிடுவார். யார் மனதும் கோணாதபடி பங்கிடுவதில், அப்பாவுக்கு நிகர் அப்பாதான். இதில் எது சரியாக இருந்தாலும் பட்டாசுகளை அதிகம் வைத்திருக்கும் எனக்கு நான்தான் அதிகம் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வேன்.


ஒவ்வொருநாள் பள்ளி முடிந்து வந்தவுடன் அவரவர்க்கான பட்டாசுக்களை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று காயவைப்பதும், சிலேட்டு, நோட்டு, பேப்பர் என எங்கு பார்த்தாலும் எதை பார்த்தாலும் அதில் பாட்டாசு, மத்தாப்பு வகைகளை வரைந்து அதற்கு மேலே பட்டாசு கடை என்று எழுதுவதும், கடை என்பதை அடித்து கடல் என்று எழுதுவதும், அதிலும் லட்சுமி வெடி வரையும்போது அதில் லட்சுமி படம் தெரிய வரைய நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன், புது துணிமணிகள் சரசரக்க அக்காவும் தங்கையும் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று இனிப்புகளை கொடுத்து விட்டு வருவார்கள். பிறகு அவர்கள் வீட்லிருந்து எங்களுக்கு என்று ஒரு பண்டமாற்றமே நடந்து கொண்டு இருக்கும்.


பின்னர் நண்பர்கள் ஒவ்வொருவராக சேர பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் விதவிதமாக வெடித்துகொண்டிருப்போம். அதிலும் பரமசிவம் என்று ஒரு நண்பன் இருந்தான், அவனுக்கு மட்டும் எங்கு கிடைக்குமோ தெரியாது, கிலோ கணக்கில் வெங்காய வெடி கொண்டு வருவான். சாதாரண வெடியை கூட விதவிதமாக வெடிக்கும் பரமசிவத்திடம் நான் எனது குழந்தைகளுக்கு செய்துகாட்ட நிறைய சாகசங்கள் இருக்கிறது. இப்படி தீபாவளிக்கு முந்தய ஒவ்வொரு நாளும் தீபாவளியாகத்தான் இருந்திருக்கிறது.


முன்பெலாம் டிவி கிடையாது, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது. தீபாவளி தீபாவளியாகவே இருந்தது. இன்று தீபாவளி மற்றுமொரு விடுமுறை நாள். இப்பொழுது பாட்டி இறந்து விட்டார்கள், அக்காவும் தங்கையும் திருமணம் ஆகி சென்று விட்டார்கள், பரமசிவமும் இல்லை, ஆனாலும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு தீபாவளியும் என்னுள் பலபல நியாபகங்களை விதைத்து சென்றவாறேதான் இருக்கிறது.

நான் இன்னமும் 4 மணிக்கு எழுந்து கொண்டுதானிருக்கிறேன், தெருவின் முதல் வெடியை வெடித்து கொண்டுதானிருக்கிறேன் . எதற்காகவும் தீபாவளி கொண்டாடுவதை விடுவதாய் இல்லை.இதோ தீபாவளி வாரம் வந்துவிட்டது. இன்னும் நாலு நாட்களில் தீபாவளியும் வந்துவிடும், நம் எல்லோருக்குமாய்.


// பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவுதான் சில மாறுதல்களோடு, சென்றவருட தீபாவளிக்கு நான் எழுதியது. இப்போ எழுத நெறைய இருந்தாலும் நேரம் குறைவுதான். ஆக தொடர்ந்து படிப்பவர்கள் மன்னிக்கவும். புதிதாய் படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சங்களையும் எப்பொதும் போல விட்டுச்செல்லுங்கள்.

சகபதிவர்கள்-நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். எங்கும் தீபத்தின் ஒளி பரவ, பொங்கும் இன்பம் எங்கும் தங்க, வாழ்வில் எல்லா செல்வங்களும் தழைத்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, சந்தோச தருணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளும் நண்பன் முரளிகுமார் பத்மநாபன்.

மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் வாழ்த்துக்கள். :-) //

15 கருத்துரைகள்:

பின்னோக்கி said...

ஏறக்குறைய இதே மாதிரி தான் நானும் சிறு வயதில் தீபாவளி கொண்டாடியிருக்கிறேன். அது அந்த காலம். அதுவும் பட்டாசை வாங்கி வெயிலில் காய வைப்பது, சரம் வாங்கி, அது சீக்கிரம் வெடித்துவிடுமென உதிரி பட்டாசாக மாற்றி, நாள் முழுவதும் வெடித்து, இரவில் அந்த கடைசி பட்டாசை வெடிக்கும் போது வரும் சோகம், சில நாட்கள் கழித்து வரும் கார்த்திகைக்காக பட்டாசை சேமிப்பது.

நீங்கள் சொன்ன மாதிரி, இப்போது இன்னொரு விடுமுறை நாள்.

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா

க.பாலாஜி said...

//செம்பருத்தியிலை, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை மற்றும் இன்னபிற எனக்கு தெரியாத சில பூக்களும் இலைகளும் ஒன்றுசேர்த்து நல்லெண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தீபாவளியின் ஒருசில நாட்களுக்கு முன்னராகவே கங்கா ஸ்நானத்திற்கு எண்ணெய் தயாராக இருக்கும். //

ஓ.....இந்த எண்ணெய்யில இவ்வளவு பொருட்கள் போடுவாங்களா? எனக்கு தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன்.

//முன்பெலாம் டிவி கிடையாது, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது. தீபாவளி தீபாவளியாகவே இருந்தது. இன்று தீபாவளி மற்றுமொரு விடுமுறை நாள். இப்பொழுது பாட்டி இறந்து விட்டார்கள், அக்காவும் தங்கையும் திருமணம் ஆகி சென்று விட்டார்கள், பரமசிவமும் இல்லை, ஆனாலும் தீபாவளி வரத்தான் செய்கிறது//

கடைசியா கவிதையா கொண்டுவந்து முடிச்சிட்டீங்களே தலைவா....

நைஸ்........வாழ்த்துக்கள்....

முரளிகுமார் பத்மநாபன் said...

//பின்னோக்கி : நீங்கள் சொன்ன மாதிரி, இப்போது இன்னொரு விடுமுறை நாள்//

நன்றி நண்பா உங்கள் வருகைக்குக் கருத்துக்கும், ஆனால் நாம் அதை மாற்ற முயற்சி செய்வோம், தீபாவளி ஒரு பண்டிகை, நிறைய விஷயங்களை சொல்லித்தரும் ஒரு அழகான நாள் அதை எப்படி கொண்டாடவேண்டுமென்பதை இனி நாமே முடிவு செய்வோம்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி சகா, உங்கள் வருகைக்குக் கருத்துக்கும். தீபாவளி வார வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

// கடைசியா கவிதையா கொண்டுவந்து முடிச்சிட்டீங்களே தலைவா....
நைஸ்........வாழ்த்துக்கள்.... //

நன்றி நண்பா பாலாஜி, உங்கள் வருகைக்குக் கருத்துக்கும். உங்களுக்கும் என் இனிய தீபாவளி வார வாழ்த்துக்கள்.

கனிமொழி said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...
தீபாவளி தீபாவளியாகவே கொண்டாடுவோம்...

:-)

சின்ன அம்மிணி said...

//இதில் எது சரியாக இருந்தாலும் பட்டாசுகளை அதிகம் வைத்திருக்கும் எனக்கு நான்தான் அதிகம் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வேன்//

ஒரு சில வெடிகள் எங்களுக்கு வெடிக்க பயம். அதனாலேயே அவைகள் அன்ணனுக்கு கிடைத்துவிடும். இப்போதெல்லாம் பழைய நினைசுகளிலேயே தீபாவளி கழிகிறது.

கோபிநாத் said...

தீபாவளி வாழ்த்துக்கள் தல ;)

அப்படியே வுட்டுக்கு போயிட்டு வந்தது போல இருக்கு ;)

முரளிகுமார் பத்மநாபன் said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...
தீபாவளி தீபாவளியாகவே கொண்டாடுவோம்...

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தோழி, தீபாவளி வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

// ஒரு சில வெடிகள் எங்களுக்கு வெடிக்க பயம். அதனாலேயே அவைகள் அன்ணனுக்கு கிடைத்துவிடும். இப்போதெல்லாம் பழைய நினைசுகளிலேயே தீபாவளி கழிகிறது///

நன்றி சின்ன அம்மணி,தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கோபி, வரலையா? ஊருக்கு.
தீபாவளி வாழ்த்துகள், அழகான விழா சந்தோசமாக கொண்டாருங்கள். வாழ்த்துகள்

கிருஷ்ண பிரபு said...

வித்யாசமான பதிவு. நன்றாக இருந்தது முரளி. இந்த பதிவு சமந்தமாக உனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஜெகநாதன் said...

தெருவின் முதல்​வெடிக்காரருக்கு....
தீபாவளியை ​​தெருவுக்கு​கொண்டுவருபவர்க்கு என் வாழ்த்துக்கள்!!
நான் கூட ரொம்ப நான் ​தெருவின் முதல் வெடிக்காரனாதான் இருந்தேன்!
அந்த பட்டம் என்னை விட்டு நீங்கிய நாள், நான் வேறொரு பருவம் ​தொட்டவனாக, நீண்ட கனவுகள் காண்பவனாக, தாமதமாக எந்திரிப்பவனாக மாறிவிட்டிருந்தேன்.
-
உங்கள் அனுபவம் இந்த நினைவுகளை ​கொண்டாட வைக்கிறது! நன்றி!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.