பாபநாசம் - பயணக்கட்டுரை

தீபாவளிக்கு திருப்பூரே காலியாகிவிடும் என்பதால் வருடாவருடம் எங்கேயாவது, (அதிகமாய் ஊட்டி) கிளம்பிவிடுவது வழக்கம். இந்த முறை நட்பு வட்டத்தில் ஏக குழப்பம் ஒருசிலர் கோவாவென்றும், ஒருசிலர் மூணாறென்றும், வெகு பலர் எங்க போனாலும் தண்ணிதான் அடிக்கபோறோம், ஆக அந்த ஒரு செலவாவது குறையட்டும் எனவே தீர்த்தகடல் பாண்டிசேரிக்கு போகலாமென்றும் பலவகையான மாற்றுக்கருத்து கொண்டிருந்தனர். பேசியவர்கள் பேசியபடி கிளம்ப, எனக்கு எங்கும் போகப் பிடிக்காமலும் எங்கே போவது என்று தெரியாமலும் குழம்பிக்கொண்டிருந்தேன்.

என்னை போன்றே குழப்பத்தில் திரிந்த கவுண்டனிடமும், அசோக்கிடமும்
பேசிக்கொண்டிருந்தபோது என் அசோக், “ஏண்டா, மக்கான் ஊருக்கு போகலாமா? அவன்தான் ரொம்ப நாளா கூப்ட்டுகிட்டு இருக்கானே? என்றான். அமால்ல, அவன் கல்யாணத்துக்கு கூட போகமுடியலை, அவனும் ஓவ்வொரு விடுமுறையின் போதும் கூப்புகிட்டேதான் இருக்கான் என்று தோன்றவே, ஆக பாபநாசமே செல்வதென்று ஒருமனதாக முடிவெடுத்தோம். நான், கவுண்டர், அசோக் மற்றும் அவன் மனைவி, மகன் சஞ்சு என நால்வரும் செல்வதாக முடிவு செய்து அசோக்கின் சாண்ட்ரோவில் கிளம்பினோம்( பிரபா, சஞ்சூ, அசோக், நான், கவுண்டர், மக்கான்)

கிளம்பும்போது எதையாவது மறந்துவிடுவது வழக்கம், ஆக வழக்கபோல இந்தமுறை என் பர்ஸ். வெறும் கையோடு கிளம்பிவிட்டேன். கவுண்டர்தான் நமக்கு படியளந்தார். தீபாவளி கொண்டாடிய கையோடு கிளம்பினோம், மதியம் 2.30 மணி. எட்டு மணி நேர பயணம். திருநெல்வெலியில் இரவு உணவை முடித்துவிட்டு பாப நாசம் “டாணா” வை சென்றடையும்போது மணி 11 ஆகிவிட்டிருந்தது. ஏற்கனவே முன்னேற்பாடாக ஒரு லாட்ஜில் ரூம் போட்டு வைத்திருந்தான், உள்ளே போய் செக் இன் செய்துவிட்டு, மூட்டை முடிச்சுக்களை அங்கே போட்டுவிட்டு, மக்கான் வீட்டிற்கு கிளம்பினோம். அவர்கள் வீட்டிற்கு சென்றபொழுது மணி 12 ஐ நெருங்கியிருந்தது. மக்கானின் குடும்பத்தில் அனைவரும் விழித்து காத்துகொண்டிருந்தார்கள், எங்களுக்காக. குளிச்சிட்டுவந்துட்டிங்கன்னா சாப்பிடலாம் என்றார்கள். பயணகளைப்பு குளித்தால் போகுமென கிளம்பி வீட்டின் வெகுஅருகில் உள்ள கோவிலை ஒட்டிய ஆற்றில் குளித்துவிட்டு திரும்பினோம். சுடசுட சப்பாத்தி, சிக்கன் குருமா, ஒருபிடிபிடித்துவிட்டு வந்து படுத்தோம். அடுத்த இரண்டு நாட்களுமே ஆற்றுகுளியலும், அருவிக்குளியலும், தூங்குவதும், கொஞ்சமாய் குடிப்பதும், வயிறு புடைக்க சாப்பிடுவதுமாக கழிந்தது.

தலையணை, ஆற்றின் ஆழமான பகுதிக்கிடையில் கட்டியிருக்கும் தடுப்பணை, பார்க்க தலைவத்து படுக்க வாகாக இருப்பதுபோல இருப்பதால் தலையணை என்றழைக்கப்படுகிறது. இடுப்பளவு தண்ணீர், தடுப்பணையை தாண்டிவருவதால் சீரான வேகம், வெகுசமமான தரைப்பகுதி. என்னை போல நீச்சல் தெரியாமலேயே ஆற்றுகுளியலை அனுபவிப்பவர்களுக்கான சொர்க்கம் அது.
அடுத்த நாள் இரவு, வேறெங்கும் செல்ல திட்டமிடாததால், வழக்கம்போல இரவு காட்சிக்கு செல்ல முடிவு செய்து, ஆதவனுக்கு சென்றோம். அங்கேயும் என்னை போல நிறைய ஏமாளிகள் இருந்தனர், தியேட்டர் நிரம்பியிருந்தது. எப்போதும் பாடல் சரியில்லையென்றால் வெளியேறி தம்மடிப்பது வழக்கம், எங்களுக்கு அதற்கும் வழியில்லை. ஆளாளுக்கு உள்ளேயே தண்ணி, தம்மடித்தனர். வேற வழியே இல்லாமல் எல்லா பாடல்களையும் புகை’ச்சலோடு பார்த்தோம். ஆதவன் -அழகன் சூர்யாவிற்கு ஒரு ஷோகேஷ், அவ்வளவுதான்.

அகத்தியர் அருவி, இங்கே முதலில் நாங்கள் செல்லும்போது மணி இரவு 10.30 இருக்கும். மக்கான் “இரவு நேரத்தில் அங்கே குளிப்பது சுகமாக இருக்கும், மேலும் வேறு யாரும் இருக்க மாட்டார்கள் ‘சுதந்திரமாக’ குளிக்கலாம்” என்றான். மக்கானுடைய நண்பன் சி.எம் (அவர்பேரு கருணாநிதிங்க) புண்ணியத்தில் ஸ்பெசல் பர்மிசன் வாங்கிகொண்டு மலையேறத்தொடங்கினோம். மலைமீது ஒரு அரை மணி நேர பயணம், அகத்தியர் அருவியின் நுழைவாயிலை அடைந்தோம். வரும் வழியில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் தங்களை இனிதே வரவேற்கிறது என்று போர்டு வைத்து பயமுறுத்தினார்கள். போர்டை பார்த்ததுமுதல் அசோகின் மனைவி பிரபா பயந்துதான் போனார்கள். மேலும் அவர்களை பயமுறுத்துவதன் மூலமாக எங்களது பயத்தினை குறைத்துகொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்தோம். வெறும் மொபைலில் வெளிச்சத்தில், புலிகள் நடமாட்டம் இருக்குமென நம்பப்படுகிற பகுதியில் மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தோம். தீக்குச்சியை பற்றவைத்துக்கொண்டே முன்னால் நடந்துகொண்டிருந்த சி.எம். அங்கே பாருங்கள் பளிச்சுன்னு ரெண்டு லைட் மாதிரி தெரியுதில்லையா? அந்த மாதிரிதான் இருக்கும் புலியோட கண்ணு, அப்படி எதையாவது பார்த்திங்கன்னா, சத்தம் போடாதிங்க, மெதுவா நடந்துகிட்டே இருங்கன்னார். அதுக்கு மேல ஒரு அடிகூட எடுத்து வைக்க மாட்டென்னு பிரபா அடம்பிடிக்க, அவர்களையும், அசோக்கையும் அனுப்பி வைத்து விட்டு நாங்கள் தொடர்ந்து செல்ல முற்பட்டோம். ஐந்து நிமிடம் கூட இல்லை, பயம் மெல்ல வயிறை பிசைய ஆரம்பித்தது, வெகு அருகில் அருவி இருந்தும் குளிக்கும் மனநிலையில் இல்லை, ஆக திரும்பி வந்துவிட்டோம்.

பேராண்மை படத்தில் ஆதிவாசிகள் வசிப்பதாக காட்டப்படும் இடத்திற்கு சென்றோம். மக்கானின் மச்சான், அந்த இடத்தை சுற்றிய காட்டுபகுதிக்குள் ஒரு இரண்டு மூன்று மைல்களுக்கு கூட்டிச் சென்றான். இது இதுவரை மனித காலடியே படாத இடம், நாம் குளிக்க செல்லுமிடத்தில் இருக்கும் தண்ணீர் இதுவரை மனித காலடிபடாத சுத்தமான தண்ணீர், என ஏகப்பட்ட விபரங்களை அள்ளி தெளித்துக்கொண்டே வந்தான். இடமும் தண்ணீரும் அவன் பேச்சின் நியாத்தை நிருபிப்பதாகவே இருந்தது. ஆனாலும் தண்ணீர் தேங்கி செல்வதால் பாசம் பிடித்திருந்தது, குளிக்க மனமில்லை. நீந்த முடியாமல் நாங்கள் அருகில் நடந்து செல்லும் போது விலகாமல் இருந்தது ஒரு மீன், அடிபட்டிருந்தது. அதை லாவகமாக பிடித்து “மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை” என்று பாடிக்கொண்டு அதை தண்ணீரில் வீட்ட போது செத்திருந்தது. பாவம் அப்படியேவாவது விட்டிருக்கலாம்.

பானதீர்த்தம், ரோஜா படத்தில் மதுபாலா சின்ன சின்ன ஆசைன்னு கம்பிய புடிச்சிகிட்டு ஆடுவாங்களே அந்த இடம், அந்த அருவிதான் பானதீர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும், இரண்டு மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான அணையின் மறுகரையில் உள்ள மலையின் இரண்டாவது மைலில் உள்ளது, அந்த அருவி. படத்துல ரொம்ப சாதாரணமா மதுபாலா தங்கச்சி வீட்டிலிருந்து ஓடிவந்து குளிச்சிட்டு இருக்கும் மதுபாலாவை கூட்டிட்டு போவாங்க, அதெல்லாம் சும்மா. அரைமணி நேர மோட்டார் படகு சவாரி, பிறகு அரைமணி நேர மலையேற்றத்திற்கு பிறகே அருவியை அடைய முடிகிறது. நிம்மதியான குளியல், குளிர்ந்த நீர், கண்ணுக்கெட்டிய வரை நீர் கடல் போல் சூழ்ந்திருந்தது, அதிசயித்துபோயிருந்தேன்.

பாப நாசம், முண்டந்துறை, டானா, அகத்தியர் அருவி, பானதீர்த்தம், அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, மணிமுத்தாறு என இன்னும் சொல்லிகொண்டே போகலாம். எல்லா இடங்களும் வெகு அருகருகில் இருப்பது இன்னமும் சிறப்பு. எல்லாவற்றிலும் சிறப்பாக மகுடத்தில் வைத்த வைரமாக தென்தமிழ் மக்களுக்கே உரிய எளிமையான குணம், அன்பு, வெகுளித்தனம், குசும்பு எல்லாவற்றையும் ஒருசேர பெற்ற நண்பனின் குடும்பத்தினர். அவர்களின் உபசரிப்பு எனக்கு “போதுமென நிறுத்தும் புறங்கையில் சுடுசோறு போடும் தமிழ் மக்கள்” என்கிற வரிகளை நியாபப்படுத்தி செல்கிறது.
இன்னும் அங்கே விட்டுபோன இடங்களை சுற்றிப்பார்க்க இன்னொரு தீபாவளியை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னடா இவன் மட்டும் பார்த்துட்டு, இங்க சும்மா சர்ஃபை போட்டு விளக்கிட்டு இருக்கானேன்னு திட்டாதீங்க மக்களே!, படத்தை இங்க போயி பாருங்க, இல்லை கீழே உள்ள சுட்டியை கிளிக்கி பாருங்க.

18 கருத்துரைகள்:

துபாய் ராஜா said...

எங்கள் ஊர் பற்றிய அழகான வர்ணனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே...

நீங்க சொன்ன எல்லா இடத்திலையும் எங்க கால் படாத இடம் கிடையாது.. :))

முரளிகுமார் பத்மநாபன் said...

வாங்க துபாய் ராஜா, நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து படிங்க....

ஆமா, எங்களை கூட்டிட்டு போகும்போது மனுசங்க கால்படாத இடம்ன்னுல்ல சொல்லி கூட்டிட்டு போனானுக......
ஒருவேளை நீங்க மனுசங்க இல்லையோ.....

அ..

அது....

அதாவது.....

தெய்வபிறவியோன்னு சொலவந்தனுங்கோ.....

:-)

கனிமொழி said...

“போதுமென நிறுத்தும் புறங்கையில் சுடுசோறு போடும் தமிழ் மக்கள்”

அழகா உபயோகபடுத்தி இருக்கிங்க நண்பா...

துபாய் ராஜா said...

//தெய்வபிறவியோன்னு சொலவந்தனுங்கோ.....

:-)//

உண்மைதான் நண்பரே. தெய்வ அருள் மிகுந்த தென்பொதிகை திருநெல்வேலி வாழ் மக்கள் எல்லாம் தெய்வப்பிறவிகள்தான்.... :))

அகல் விளக்கு said...

//வெகு பலர் எங்க போனாலும் தண்ணிதான் அடிக்கபோறோம், ஆக அந்த ஒரு செலவாவது குறையட்டும் எனவே தீர்த்தகடல் பாண்டிசேரிக்கு போகலாம்//

ம்ம்ம்ம்ம்ம்.......
நடக்கட்டும்... நடக்கட்டும்...

துபாய் ராஜா said...

//ஆமா, எங்களை கூட்டிட்டு போகும்போது மனுசங்க கால்படாத இடம்ன்னுல்ல சொல்லி கூட்டிட்டு போனானுக......
ஒருவேளை நீங்க மனுசங்க இல்லையோ.....

அ..

அது....

அதாவது.....

தெய்வபிறவியோன்னு சொலவந்தனுங்கோ.....//

கோயம்புத்தூர் குசும்பு... எங்க ஊர் சாப்பாடும், தண்ணியும் இப்படி பேச வைக்குது. அடுத்த தடவை வாங்க, பாபநாசம் ஆத்துல யாருமே குளிக்காத இடத்துக்கு கூட்டிட்டு போய் நீச்சல் சொல்லி தந்து முக்கி எடுக்கிறேன் ...
:))

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி தோழி

முரளிகுமார் பத்மநாபன் said...

///உண்மைதான் நண்பரே. தெய்வ அருள் மிகுந்த தென்பொதிகை திருநெல்வேலி வாழ் மக்கள் எல்லாம் தெய்வப்பிறவிகள்தான்.... :))///

ஒத்துக்குறேன் நண்பா

முரளிகுமார் பத்மநாபன் said...

// ம்ம்ம்ம்ம்ம்.......
நடக்கட்டும்... நடக்கட்டும்.../// நண்பா நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமில்லை நண்பா.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

கோயம்புத்தூர் குசும்பு... எங்க ஊர் சாப்பாடும், தண்ணியும் இப்படி பேச வைக்குது. அடுத்த தடவை வாங்க, பாபநாசம் ஆத்துல யாருமே குளிக்காத இடத்துக்கு கூட்டிட்டு போய் நீச்சல் சொல்லி தந்து முக்கி எடுக்கிறேன் ...
:))

நண்பா நீங்க சொன்ன எல்லாத்தோட ஒத்துபோறேன்... ஏற்கனவே எனக்கு தண்ணியில கண்டம்.....
:-(

Babu K said...

எனக்கு தெரிந்த முரளி ஒரு கணிப்பொறி பொறியாளர். ஆனால் அவருக்குள் இவ்வளவு எழுத்துத் திறமை, எதையும் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கும் தன்மை, அதை போட்டோ எடுக்கும் திறமை.... அருமையான ஒரு திரை விமர்சனம்.... இன்னும் எவ்வளவு இருக்கோ தெரியலை.... உங்கள் இணைய தள பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் பாபு சார், தொடர்ந்து படிங்க அதுதான் எனக்கு வேணும், நீங்கள்லாம் படிக்கலைன்னா, என்ன எழுதியும் பிரயோஜனமில்லை. :-)

லோகு said...

அட்டகாசமான வர்ணனை அண்ணா.. நேரில் பார்ப்பது போல உணர முடிகிறது.. ஒரு சிறுகதைக்கான நடையோடு எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

ஆண்ட்ரு சுபாசு said...

அடுத்த முறை எனது நண்பனாய் எங்கள் வீட்டுக்கு வரவும்.புகைப்படங்களை பதிவு செய்து இருக்கலாம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி லோகு, உண்மைதான் எனது அடுத்த கதைக்கான கரு அங்கிருந்துதான் எடுத்திருக்கிறேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

//ஆண்ட்ரு சுபாசு said...
அடுத்த முறை எனது நண்பனாய் எங்கள் வீட்டுக்கு வரவும்.புகைப்படங்களை பதிவு செய்து இருக்கலாம்//

அவசியம் வருகிறேன் நண்பா, புகைப்படம் லின்கில் கொடுத்திருக்கிறேனே, பார்க்கவில்லையா நீங்க?

ஆதிமூலகிருஷ்ணன் said...

எங்க ஊருக்கு எங்கிட்ட பர்மிஷன் வாங்காம போனதுமில்லாம பதிவு வேற போட்டிருக்கீங்களா? இன்னொருவாட்டி இப்பிடி நடந்துச்சு.. தொலைச்சுப்புடுவேன்.!

(அப்புறம் தலையணைன்னா தலையணை இல்லீங்க.. முதல் அணைன்னு அர்த்தம்.. ஹிஹி.!)

ஆதிமூலகிருஷ்ணன் said...

எனக்கே சரியா தெரியலை.. ஹிஹி. அது பானதீர்த்தமும் அல்ல (ரொம்ப பானம் உள்ளே போயிருந்தா அப்படியும் சொல்லலாம்).

வானதீர்த்தம் அல்லது பாணதீர்த்தம்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.