விடை தேடும் பயணம்

நவம்பர் 26,2008.
ஒருவருடம் ஓடி விட்டது. இன்னும் நமது அரசாங்கம் கசாபை விசாரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்றைய நாளிதழில்கூட இந்த போராட்டத்தில் உயிர் நீத்த ஹேமந்த் கர்கரே மற்றும் விஜய் சாலேஸ்கரின் அவர்களின் மனைவிகள் கசாபை தூக்கிலிட மனுகொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை பொருத்தவரை இதில் தயவு தாட்சன்யமே கூடாது. அந்த கொடிய நிகழ்வை எந்த காரணத்திற்காகவும் மன்னிக்கவும்கூடாது, மறந்துவிடவும் கூடாது. உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பேசுகிற ஒருவசனம், “மறதி, இந்தியாவின் தேசிய வியாதி. தவறுகளை மன்னிக்கிறோமோ இல்லையோ மறந்துவிடுகிறோம்” எவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள். ஆனால் நமக்கு இங்கே அந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட மறந்தேபோய் விட்டது. இனி இந்த நவம்பர் 26க்கு ஒரு நிமிட அஞ்சலியை உட்க்கார்ந்த இடத்திலிருந்தே செலுத்திவிட்டு அடுத்தகட்ட வேலைக்கு ஆயத்தமாகிவிடுவோம்.இன்னொருமுறை நமது தேசபக்தியை காட்ட இன்னொரு குண்டோவெடிப்போ, சுனாமியோ, போரோ நடந்தேற வேண்டும். இதுக்காகவாவது அவ்வப்போது குண்டுகள் வெடித்தவண்ணம் இருக்கவேண்டுமென்று ஒரு தேர்ந்த அரசியல்வாதி சொல்லியிருக்கிறார். நமது பாதுகாப்புத்துறையின் முக்கியமான கோப்புகள் களவாடப்பட்டு பிரபல நாளிதழில் வெளியிடப்படுகிறது. ஹோம்மினிஸ்டர் இதற்காக வருந்துவதாகவும் இந்த தவறுக்கு வருந்துவதாகவும் அறிக்கை வெளியிடுகிறார். என்ன ஒரு சாபக்கேடு. இந்தமாதிரியான ஒரு சூழ்நிலைக்காக நான் அனைவரும் வெட்கிதலைகுனிய வேண்டும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் போதிய நிதிஒதுக்கியும் தேசிய பதுகாப்பில் ஏன் இத்தனை ஓட்டைகள்?


எனக்கு அரசியல்வாதிகள் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. சொல்லப்போனால் எனது கோவம், என் மீதுதான் என்னை போன்ற உங்கள் மீதுதான். என் நண்பர் அடிக்கடி சொல்லுவார் “ All the politician’s should educate peoples. But they don’t Nor all the peoples should educate our politicians, but they also don’t “ என்று. எங்கே மக்கள் விழித்துக்கொண்டால் நாம் பிழைக்க முடியாதோ என்கிற அரசியவாதிகளின் நினைப்பும், படிக்காத மக்களின் அறியாமையும், படித்தவர்களின் ”சீ இந்த பழம் புளிக்கும் என்கிற நினைப்புமே இந்தியாவை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றும் அடிக்கடி சொல்லுவார்.


இங்கே ஒவ்வொரு அரசியல் கூட்டத்திலும் ”யாழ்ப்பாணம் இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, உன் சகோதரன் அங்கே கொல்லப்படுகிறான், இன்னும் நாலுபேர் சேர்ந்து அழுதால் உன் வீட்டிற்கே கேட்க்கும் தொலைவில் உன்னைப்போலவே தமிழ்பேசும் உன் சகோதரன் துடித்துக்கொண்டிருக்கிறான், உன்னால் எப்படி இங்கே நிம்மதியாய் உறங்க முடிகிறது” என்று உணர்ச்சி பிளம்பாக கதறிக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் அழுவதை கூட பார்த்திருக்கிறேன். காவிரி பிரச்சனையையும், ஈழப்பிரச்சனையும் இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. இலங்கை, தமிழ் நாட்டிலிருந்து எவ்வளவு தூரமோ அதைவிட கொஞ்சமே அதிக தூரம்தான் கேரளாவிலிருந்து. ஏன் அங்கே இதுபோல எந்த ஒரு அரசியல்வாதிகளும் பேசுவதில்லை. இன்னும் கொஞ்சம் தூரம் அதிகம் ஆந்திராவும் கர்நாடகாவும், ஏன் அங்கு சட்டசபையில் கூட இது ஒரு விவாதப்பொருளாகக்கூட எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. என்னுடைய அஸ்ஸாமில் வசிக்கும் நண்பனுக்கு இது பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை.


ஏனென்றால் இது தமிழர்கள் பிரச்சனை. சகோதரனின் தண்ணீர் தாகத்தை தீர்க்க மறுக்கும் அண்டை மாநிலம், தேர்தல் நேர அரசியல்வாதிகளின் தனிதமிழ்நாடு முழக்கம், தாக்ரே சகோதரர்களின் தனி மஹாராஸ்ட்ரா என எங்கு பார்த்தாலும் இனக்கலவரம். இதையெல்லாம் பார்க்கும்போது ஈழத்தமிழர்களின் பிரச்சனையை எப்படி தேசிய பிரச்சனையாக கருத முடியும். என்னைப்பொருத்தவரை ஈழப்பிரச்சனைகூட எப்பொழுது எரிய ஆரம்பித்தாலும் உடனே அணைந்துபோக ஒருகாரணம் அதற்கு பூசப்பட்ட தமிழ்முலாம். 20000 மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து ஒருவரால் நம்மை 50 ஆண்டுகாலம் ஆள முடிந்திருக்கிறது என்றால், 25000 மைல்கள் தொலைவிலிருந்து பெரியண்ணா அமெரிக்காவால் இங்கே இருக்கிற ஈரானில் பஞ்சாயத்து பண்ணமுடிகிறதென்றால், இது முடியாதா என்ன?


என் முன்னோர் எனக்கு இந்தியா என் தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என்று அல்லவா சொல்லிகொடுத்து வளர்த்தார்கள். இனி என் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்லி வளர்ப்பேன்? இந்தியா என் தாய் நாடு என்றா? அல்லது இந்தியர்கள் என் உடன்பிறந்தவர்கள் என்றா? அப்படி சொன்னால் என் மன்சாட்சிக்கு நான் பொய் சொன்னவனகிப்போவேனே? இனி என் செய்வேன்?


விடைகளற்ற இந்த கேள்விகளுக்கு நம் வாழ்வின் எஞ்சிய நாட்களிலும் ஓடியபடியே தேடிக்கொண்டுதானிருக்கப்போகிறோம். சிலருக்கு இந்த கேள்வியின் வீரியம் புரியாமல் இருக்கலாம், சிலருக்கு விடைகளின் அவசியம் இல்லாமலிருக்கலாம் ஆனால் இதன் பதில்கள் தரும் உஸ்ணதகிப்பு அனைவராலும் உணரக்கூடியதாகவே இருக்கும்.


ஊதி எரிய வைக்கும் உதடாய் இரு, என்று சொன்னார் பாரதியார். அவர் சொன்னது அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ போன்றவைகளை கனன்று கொண்டிருக்க விடாமல் ஊதி எரிய வைக்கும் உதடுகளாய் இருக்க வேண்டுமென்று. ஓவ்வொருவருக்குள்ளேயும் எரியும் அந்த தீயை அணைய விடாமல் தொடர்ந்து ஊதி எரியசெய்யுங்கள். இன்றில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் வெந்து தணியும் இந்த காடு.


தீ எரிக!

அதனிடையே தசை பொழிகின்றோம்

தீ எரிக!

அதனிடையே செந்நீர் பொழிகின்றோம்

தீ எரிக!

அறத்தீ, அறிவுத்தீ, உயிர்த்தீ,

இவையனைத்தையும் தொழுகின்றோம்!

தீயே!

நின்னைபோல் எமதுள்ளம் சுடர் விடுக!

தீயே!

நின்னைபோல் எமறிவு கனழுக!

-மகாகவி பாரதியார்-

தூர்தர்ஷன் ஞாபகம் (நினைவுகள்)ஒவ்வொரு முறை பதிவெழுத ஆரம்பிக்கும்போதும் இந்த பதிவை எழுத வேண்டுமென நினைப்பதுண்டு. ஆனால் இது வரை எழுதியதில்லை திடீரென இப்பொழுது எழுதுவதற்கு எந்த விஷேச காரணமுமில்லை.இன்னைக்கு எத்தனை சேனல்கள் உங்கள் தொலைகாட்சியில் காணகிடைக்கிறது, எப்படியும் 100க்கும் மேலாக அல்லவா? அதில் எத்தனை சேனல்கள் உங்கள் விருப்பத்திற்குரியனவாக இருக்கிறது? அதிக பட்சம் 3க்கும் குறைவாக அல்லவா?இதன் காரணமென்னவாக இருக்கும். பணம்படைத்தவர்கள் தனக்கென ஒரு சேனல், ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு சேனல், மதவாரியாக, மொழிவாரியாக, இனம்வாரியாக ஒவ்வொரு சேனல், இசைக்கென தனி சேனல், தொடருக்கென தனி சேனல், திரைப்படத்திற்கென தனி சேனல் என இந்தியா முழுவதும் பல்வேறு அலைவரிசைகளில் ஒவ்வொருவரும் போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் காலம் போனால் அவரவர் துல்லியத்திற்காக ஆளுக்கொரு செயற்கைகோள்களையும் அனுப்பிவிடும் காலம் வரும்.தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் எந்த ஒரு மோசமான திரைப்படத்தையும் ஓட வைத்துவிட முடிகிறது, எந்த ஒரு மலிவான பொருட்களையும் விற்று கல்லாகட்ட முடிகிறது மேலும் நாளைய குழந்தைகளுக்கு பால் என்றால் பசுவிற்கு பதிலாக அரோக்யாவும், அவிட்டாவும் வந்து நிற்பதையும் என்ன செய்ய முடியும்.இதெல்லாம் தவிர்த்து ஒருகாலத்தில் ஒரு சேனல் இருந்தது, தூர்தர்ஷன் என்று. இந்தியா என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வரிகளை எனக்கு விவரம் தெரிந்து நான் கண்டு தெரிந்துகொண்டது இந்த சேனலில்தான். ஒவ்வொரு மாநிலவாரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தமிழ் அலைவரிசை என்றால் மாலை 6மணிமுதல் 8மணிவரை என்பதுபோல. 24 மணி நேர பாடல்கள், சிரிப்பு நிகழ்ச்சிகள், செய்திகள் கிடையாது. முக்கியமாக இந்த மெகா சீரியல் கிடையாது. நேரத்திற்கு சோறு கிடைத்தது. முக்கியமாக இரவுகளில் கதை கேட்க நிறைய நேரமிருந்தது.நான், என் அக்கா, என் தங்கை பக்கத்து வீட்டு ஷீலா அக்கா என அனைவரும் எதிர்வீட்டிற்கு சென்று சில சமயம் உள்ளே சிலசமயம் வெளியே என்று நின்று ராமாயணமும், மகாபாரத்த்தையும் பார்த்தது இந்த தூர்தர்ஷனில்தான். வெள்ளிகளில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், புதன் கிழமை சித்ரஹார், ஞாயிறு சுரபி மற்றும் மால்குடி டேஸ் என நிகழச்சிகளை தேர்ந்தெடுத்து பார்க்க ரசிக்க முடிந்தது.ராமாயணம் பார்த்துவிட்டு இன்னைக்கு என்ன நடந்தது என்பதை என் பாட்டியிடம் சொல்லுவதற்கு ஒரு போட்டியே நடக்கும். சோகமாகவே இருக்கும் மால்குடி டேஸ் நாடகத்தை அப்பாவும் அம்மாவும் மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு நாடகம் முடிந்ததும் அம்மா அதன் நெறியை, கதை சொல்லும் நீதியை எங்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துசொல்லுவார்கள். இன்று என் அக்கா சீரியல் பார்த்து அழுகிறாள், அவள் மகன் “அம்மா, ஏம்மா அழுற?” என்கிறான். காரணம் சொல்லும்படியாக இல்லை, அக்காவும் சொல்லும் மனநிலையில் இல்லை.என்னுடைய பால்யத்தின் பெரும் பகுதி ரேடியோவில் ஆகாசவாணியையும் ஏறும் ஊரையும், தொலைகாட்சியில் வயலும் வாழ்வையுமே கண்டும் கேட்டும் கழிந்தன. அந்த கிராமத்தில் தொலைகாட்சி பெட்டி இருந்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சுற்றியுள்ள வீடுகளிருந்து எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமியிருப்பார்கள். ஆண்கள் கூட்டம் வயலும் வாழ்வும் முடிந்ததும் வீட்டு திண்ணையில் அதை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.


பெண்களும் குழந்தைகளும் வீட்டின் வெளி முற்றத்தில் வட்டமாக அமர்ந்து ஏதாவது விடுகதைக்கு விடை யோசித்தபடி இருப்பர்கள். நிலா வந்துவிட்டால் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். பாட்டியின் கதை, நிச்சயம் காக்கா நரி இராது. ஒவ்வொரு நாளும் புதுபுதுக் கதைகளாக வரும். ஒருவேளை யாரவது இந்த கதை ஏற்கனவே சொல்லிடிங்க பாட்டின்னு சொன்னா “அதுல ராஜாவோட அம்பு தீர்ந்து போயிருக்கும், இது வேற கதை, இப்படி இடையில நிருத்தி கேள்விகேட்டா அப்புறம் கதை சொல்ல மாட்டேன்” என்று சாமர்த்தியமாக சமாளிக்கும் வித்தையை நான் என் பாட்டியைதவிர வேறு யாரும் திறம்பட உபயோகித்து பார்த்த்தில்லை.


ம்ம் அது ஒரு அழகிய கனாக்காலம்......இன்று நாம் வேண்டாமென்று விலகினாலும் தொலைக்காட்சி என்பது நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது. நாம் வெறுத்து ஒதுக்கினாலும் நம் அம்மா, அப்பா, குழந்தைகள் என ஏதாவது ஒரு ரூபத்தில் தொல்லைகாட்சி நம்மை வந்தடைகிறது.மீண்டும் அந்த தூர்தர்ஷன் என்ற அந்த ஒற்றை சூரியன் மட்டும் முளைக்காதா? இந்த தனியார் தொலைகாட்சிகளின் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது குறையாதா? குறைந்தபட்சம் இந்த ஆடை அவிழ்ப்புகளாவது குறையாதா? சூனியம் வைக்கவும் குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் கெடுக்கலாமென திட்டம்போட்டு சொல்லிகொடுக்கும் நெடுந்தொடர்களையும் குறைத்துக்கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை கொடுக்காதா? என்று எப்போதும் போல நிறைவேறாத ஆசைகளுடன்......அந்த நாள் நியாபகம் நியாபகம் 1, நியாபகம் 2, நியாபகம் 3 அவசியம் பின்னூட்ட்த்தில் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்களுடைய நியாபக கிளர்வுகளை

தேசம் என்பது மக்களாகிய நாம்தான்

மோகன் பார்கவா, இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்கவாழ் இந்தியன், ஒரு இளம் விஞ்ஞானி, அமெரிக்காவின் நாசாவில் செயற்கைகோள் ஆராய்ச்சி பிரிவில் ஒரு புராஜக்ட் மேனேஜராக பணிபுரிகிறான். சிறுவயதிலேயே தாய்தந்தையரை விபத்தில் இழந்து, அவனது பாட்டி காவேரியம்மாவால் வளர்கப்பட்டு இப்போது அமெரிகாவில் பணிபுரிந்து வருகிறான். தன்னுடைய புராஜக்டை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு, இந்தியா சென்றுவர நினைக்கிறான். அப்படியே தன்னுடைய பாட்டியையும் தன்னுடன் அழைத்துவந்திடவும் நினைக்கிறான். இரண்டு மாதம் விடுப்பெடுத்துக்கொண்டு, இந்தியா வருகிறான். விமானத்தில் மோகன் வரும்போது வருகிற ரம்மியமான பின்னணி இசையும், பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவை மேலிருந்து மோகன் பார்க்கும்போது அவனது உணர்ச்சிகளும் ஒரு நல்ல படம் பார்க்கப்போகிறோம் என்பதை மெல்ல உணர்த்தியது.


காவேரியம்மாவிற்கு எந்த தகவலும் சொல்லாமல் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பொருட்டு இந்தியா வரும் மோகனுக்கு அவர்கள் முன்பிருந்த முகவரியில் இல்லாதது அதிர்ச்சியாக அமைகிறது. தன்னுடைய இந்திய நண்பனின் உதவியோடு அவர்களின் தற்போதைய இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் இறங்குகிறான். அப்போது நண்பனின் புத்தக்கடையில் கீதா என்கிற இளம்பெண்ணை சந்திக்கிறான். அவள் வேறு யாருமல்ல, மோகனின் பால்ய சினேகிதி. காவேரியம்மா என்று விசாரிப்பதிலிருந்தும், அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான் என்பதிலிருந்தும் இது காவெரியம்மாவின் பேரன் மோகன் பார்கவாதான் என்பதையும் வந்தால் காவேரியம்மாவையும் அமெரிக்கா அழைத்துபோய் விடுவான் என்பதையும் உணர்கிறான். அதனால் தனக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியும் என்று சொல்லி தவறான ஒரு முகவரியை கொடுக்கிறாள்.


நண்பனின் மூலமாக ஒரு குளியலறை, கழிப்பறை வசதியோடு ஒரு வாகனத்தை (கேரவன்) வாடகைக்கு எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். ஒருவழியாக சரியான முகவரியை கண்டுபிடித்து சரன்பூர் சென்றடைகிறான். சரண்பூர், முறையான மின்சார வசதிகூட இல்லாத ஒரு குக்கிராமம். அங்கு கேரவனில் செல்லும் மோகன், அந்த ஊரையே அதிசயமாக பார்க்க, அந்த ஊரே இவனை அதிசயமாகப் பார்க்க, ஆரம்பிக்கிறது படம்.


மோகனில் திடீர் வருகையில், மகிழ்ச்சியின் உச்சத்திலிருக்கிறார் காவேரியம்மா. அப்போது கீதா அங்கு வருகிறாள். காவேரியம்மா, கீதாவிற்கு மோகனையும் மோகனுக்கு இவள்தான் கீதா, சின்ன வயசுல நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருந்தாளே! என்கிறார். தனக்கு நியாபகம் இருப்பதாகவும், இங்கு வருவதற்கே இவள்தான் உதவிசெய்தாள் என்கிறான் கிண்டலாக. கீதா, தன்னுடைய தம்பியுடன் அந்த கிராமத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள். அவளது பெற்றோரின் இழப்பிற்கு பிறகு அவளும் காவேரியம்மாவும் ஒரே வீட்டில், ஒருவருக்கொருவர் ஆதரவாக இந்த கிராமத்திற்கு வந்து வசிக்கத்தொடங்குகிறார்கள். எங்கே காவேரியம்மாவை தன்னிடமிருந்து பிரித்து அமெரிக்கா அழைத்து சென்றுவிடுவானோ என்கிற பய உணர்ச்சியே அவளை மோகனை வெறுக்கசெய்கிறது.


மோகனைப் பொருத்தவரை, கீதாவின் மீது ஒரு முதிர்ந்த இனகவர்ச்சி ஏற்படுகிறது. அவளை கவரும்பொருட்டு அவனது தம்பி முதல் கிராமத்து பெரியவர்கள் வரை இணக்கமாகிறான். அதுவே அந்த கிராமத்தில் பொருந்திபோக உதவியாய் இருக்கிறது. ஒரு சராசரி இந்திய கிராம்ம், பஞ்சாயத்து, மற்றும் அதன் தலைவர்கள், ஊர் பெரியவர்கள், உயர்ந்த, தாழ்ந்த சாதி பிரிவுகள். அறியாமை, மூட நம்பிக்கை, யதார்த்தமான மனிதர்கள் ( மோகனுடன் அமெரிக்கா சென்று, அங்கே ரோட்டோரங்களில் ஓட்டல் தொடங்கும் எண்ணத்துடன் மோகனுக்கு சிறுசிறு உதவிகளை செய்யும் இளைஞன், போஸ்ட் மாஸ்டர், பள்ளி தலைமை ஆசிரியர், பஞ்சாயத்து தலைவர்) அவர்களிடம் கள்ளம் கபடமில்லாத மனதும், மோகனை ஊரோடு ஒன்றச்செய்கிறது.


நாட்கள் மெல்ல நகர்கிறது, அமெரிக்கா வர மறுக்கும் காவேரியம்மாவை எப்படியும் சரிசெய்துவிடலாம் என்று நினைக்கும் மோகனுக்கு நாட்கள் செல்ல செல்ல ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒருநாள் தன்னிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கிய பக்கத்து கிராமத்து மனிதர், வெகு நாட்களாக குத்தகை பணம் தராமலிருப்பதால் அவரை போய் சந்தித்து பணம் வாங்கிவர மோகனை அனுப்புகிறார், கவேரியம்மா. சிறிது நேர பஸ் பிரயாணம், சிலமணிநேர ரயில் பிரயாணம், நெடிய படகுசவாரி என் நீண்ட பயணத்திற்கு பின் அந்த கிராமத்திற்கு வந்து சேர்கிறான் மோகன். அவர்களிடம் குத்தகைக்கு இடம் வாங்கிய நபர், வருமையின் உச்சத்தில் இருக்கிறார். பருவ மழை பொய்த்து, அரசு மின்சாரம் ரத்தாகி, விவசாய நிலம் முழுவது வறண்டு கிடக்க சோகமே உருவாய் தன் கதையை சொல்கிறார். அந்த மனிதர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்களின் நிலையைப் பார்க்கும் மோகனின் மனது, ஏன் இவர்களுக்கு இப்படி ஒரு வறுமை என்று தவிக்கிறது. அந்த நிலையிலும் அவர்கள் தங்களது இரவு உணவை மோகனோடு பகிர்ந்து கொள்கின்றனர்.


அங்கே அவன் விழுங்கும் ஒவ்வொரு பிடியும் அவன் கழுத்தை நெரிப்பதாய் உணர்கிறான். இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில் கிளம்பும் மோகன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து அவர்களிடம் கொடுக்கிறான். அதைப்பெற மறுக்கும் அவர்களிடம் வற்புறுத்தி கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் கிளம்புகிறான். வரும் வழியில் ரயிலில் ஒரு கோப்பை தண்ணீரை 25 பைசாவிற்கு விற்கும் சிறுவனை, இந்தியாவின் வருமையின் சின்னமாக அவனைப்பார்கிறான். இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் இதுவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையை இங்கே கவனியுங்கள், மனுசன் ஜீனியஸ்ங்க விளையாடியிருப்பார். இந்த காட்சியில் ஷாருக்கானின் நடிப்பை பாராட்டியே தீரவேண்டும். சின்ன டயலாக் கூட கிடையாது, முக அசைவுகளிலேயே மனுஷன் பின்னியிருப்பார், அவசியம் பாருங்க , லின்க் இங்கே தண்ணீர் தண்ணீர்


தான் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்குள் இந்த கிராமத்திற்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றை செய்துவிட நினைக்கிறான். தன்னிடன் இருக்கும் பணத்தைகொண்டு அருகிலிருக்கும் மலையிலிருந்து வழியும் நீரை தேக்கி, வேகமாக கீழிறங்கச்செய்து, அதன் மூலம் ப்ரொப்பல்லர் ஷாப்டை சுழலசெய்து மின்சாரம் எடுக்கும் முயற்சியில் வெற்றிபெருகிறான். கிராமத்தில் நிழவும் ஜாதிபிரச்சனைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு முயற்சியிலும் படிபடியாக கீதாவின் மனதும் கரைகிறது.
நாட்கள் இப்படியாக செல்ல, அவன் அமெரிக்கா திரும்பும் நேரம் வருகிறது. அந்த கிர்ரம்த்தில் ஒவ்வொரு உயிருக்கு அவன் வேண்டியவனாகிப் போகிறான். யாரும் அவனுடைய பிரிவினை தாங்குவதாயில்லை. கண்ணீர் மல்க வழிஅனுப்பி வைக்கின்றனர். கீதா அவனுக்கு இந்தியாவையும் அதன் பாரம்பரியத்தையும் நினைவுபடுத்தும் படியாக அஞ்சறைபெட்டியை கொடுக்கிறாள்.


மிக்கடினமான மன நிலையில் அமெரிக்கா திரும்பும் மோகன், அங்கும் மனம்கொள்ளாமல் தவிக்கிறான். யாருடைய போட்டோவைப் பார்த்தாலும், உலக வரைபடத்தில் இந்தியாவைப் பார்த்தாலும் அவனுக்கு அங்கே இருப்பு கொள்ளமுடியாமல் செய்கிறது, இந்திய நினைவுகள் அவனது மனதில் பசுமையாய் படர்ந்துவிடுகிறது. இங்கே பின்னணியில் ஒரு பாடல் அனேகமாக எல்லோராலும் கேட்கப்பட்ட பாடல். அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா


“உந்தன் தேசத்தின் குரல், தொலைதூரத்தில் அதோ, செவியில் விழாதா?
சொந்தவீடுன்னை வாவென்று அழைக்குதடா, தமிழா
அந்த நாட்களை நினை, அவை நீங்குமா உனை? நிழல் போல் வராதா?
அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா, தமிழா”


கவிஞர் வாலியின் அர்த்தம் பொதிந்த வரிகள், மிக அருமையான ட்யூன், மெல்லிய இசை, ரகுமானின் பிசிறில்லாத குரல் என இந்த மொத்தபாடலும் சொக்கவைக்கும் சுகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவலைகளை கிளறிவிடும், வசியம் இந்த பாடலுக்கு உண்டு.

மோகன், தன் நண்பனிடம் நடந்த விஷயங்களை விளக்கிசொல்லி, தான் இந்தியாவிற்கே திரும்ப இருப்பதாகவும் சொல்கிறான். அதை கேட்ட நணபன் “இந்தியர்கள் என்றாலே எளிதில் உணர்ச்சிவசப்படும் பைத்தியங்கள், என்பதை நிருபிக்கும்படியாக இருக்கிறது உன் பேச்சு, எதோ ரெண்டுமாசம் ஊருக்கு போனமா வந்தமான்னு இல்லாம, நீ ஒருத்தன் போறதால் இந்தியா செழித்திட போவதில்லை” என்று வியாக்ஞானம் பேச “ நான், இவ்வலவு சொல்லியும் உனக்கு புரியவில்லை என்றால் நான் உன்னிடம் இனி பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை” என்று சொல்லிவிட்டு இந்தியா வருகிறான். இனி அவன் மிச்சம், இந்தியாவில். சுபம்.

இந்த படத்தின் இயக்குனர் அஸ்தோஷ் கெளரிகர், இவர் இதற்கு முன் லகான் என்ற வெற்றி படத்தை கொடுத்தவர், கதாநாயகன் ஷாருக்கானின் இளம்வயது நண்பனும் கூட, தூர்தர்ஷனில் வெளிவந்த சர்கஸ் என்கிற பிரம்மாண்டமான நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். இந்த நாடகம்தான் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிக்க உதவியாய் இருந்தது. ஸ்வதெஸ், வீ த பீப்புள். SWADES, we the people. இந்த ஹிந்தி திரைப்படம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தேசம் என்கிற பெயரில் தமிழிலும் வெளியானது. நான் தமிழில்தான் முதலில் பார்த்தேன். இந்த பதிவை படிக்கிற எவரும், யாரும் உங்களிடம் இந்த பட்த்தின் தமிழ் பிரதி இருந்தால் அல்லது கிடைத்தால் எனக்கு ஒரு காப்பி அனுப்பிவையுங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்.

சிலபல நாட்கள் வெளியூர் சென்றுவிட்டோ, தாய்மொழி தெரியாத ஒரு ஊருக்கு சென்றுவிட்டோ அல்லது வேறு வெளிநாடு சென்றுவிட்டோ வீடு திரும்பும்போது, சொந்த ஊரில் நுழையும்போது அல்லது சொந்தமண்ணில் கால்வைக்கும்போது வருகிற சந்தோசத்திற்கு ஈடு, இணை ஏதும் கிடையாது. ஆம், வெயிலுக்கு வரும் வரை நிழலின் அருமை தெரிவதில்லை.

அன்பேசிவம் - சதம் மற்றும் சில குறிப்புகள்

முதன்முதலாக நான் பதிவெழுத ஒருவகையில் காரணமாகவும், ஆரம்ப கட்டத்தில் தொடர்ந்து படித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்கமளித்து வந்த இனிய சகோதரர் வெங்கட்ராமன் மற்றும் நான் என்ன எழுதினாலும் “நல்லா இருக்குங்க, முரளி” என்று சும்மானாச்சுக்கும் சொல்லி என்னை தொடர்ந்து எழுத செய்த நண்பர் ஷிவா இருவருக்கும் என் முதல் நன்றிகள்.


நானே எழுதி நானே படித்துக்கொண்டுமிருந்த ஆரம்பகட்டங்களில் என் பதிவை படித்துவிட்டு “ஏன் முரளி, உங்க பதிவில் ஒரு மினிமம் ஸ்டேண்ட்ர்ட் இருக்கே, நீங்க ஏன் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற பிளாக் அக்ரகேட்டர்களில் இணையக்கூடாது?” என்று அக்ரகேட்டர்களை அறிமுகம் செய்துவைத்த நண்பர், பதிவர் கடலையூர் செல்வமிற்கும் எனது தனிப்பட்ட நன்றிகள்.

மேலும் அண்ணாச்சி வடகரைவேலன், சகா. கார்க்கி, தல பரிசல்காரன், சங்கத்தலைவர் வெயிலான் ரமேஷ், அகநாழிகை.பொன்.வாசுதேவன், நண்பர்கள். கேபிள்சங்கர், பட்டர்பிளை சூர்யா, ஆதிமூலகிருஷ்ணன், கிருஷ்ணபிரபு, நாஞ்சில்நாதம், அகல்விலக்கு, க,.பாலாஜி, நுனிப்புல்.சந்ரு, நெஸ்ட்லே சிவகுமார், லோகு, கிர்பால் வெங்கட், நிகழ்காலத்தில், ஹாலிவுட்பாலா, தோழர் சிந்தன், சக்கரை சுரேஷ் என பதிவுலகில் எனக்கு நல்ல நண்பர்களையும், ஒத்த சிந்தனையுடைவர்களையும், என்மீதும் என் எழுத்தின்மீதும் அக்கறை கொண்டு நல்ல கருத்துக்களை, பாரட்டுகளை, விமர்சங்களை பின்னூட்டங்கள் மற்றும் தொலைபேசியிலும் தொடர்ந்து சொல்லிவரும் இவர்களை எனக்கு தந்த பதிவுலகில்,


இதுவரை முகமறியாது என்னை தொடர்ந்து படித்துவரும் நண்பர்கள் ஆதவா, அன்பு, அன்பரசன், சிவராஜ், மா.திரு, உண்மைதமிழன், நாகங்குயில், இராகவன் நைஜிரியா, உலவு.காம், ஸ்ரீ, ஷிரடி சாய்நேசன், தேவன்மாயம், சந்துரு, ஆர்.கே, பிரியமுடன் பிரபு, பித்தன், பிரபாகர் ராமசாமி, தமிழ், முத்துகுமார் கோபாலகிருஷ்ணன், விஷ்ணுகுமார், வானம்பாடிகள், ராஜாராம், ஊடகன், வெண்நிறஇரவுகள் இவர்களை எனக்கு தந்த பதிவுலகில்,


சக பதிவர் என்கிற அடிப்படையில் இதுவரையிலும் என்எழுத்தை படித்தும், விமர்சித்தும், இனிமேலும் அதையே தொடர்ந்து செய்யவிருக்கும் பெண் பதிவர்கள் மற்றும் தோழிகள் கனிமொழி, அனுராதா, கலகலப்ரியா மற்றும் அண்ணி மயில் விஜி, ரசிக்கும்சிமாட்டி, சுமஜ்லா, தியாவின் பேனா, விதூஷ் என இவர்களை எனக்கு தந்த பதிவுலகில், நான் எழுதும் 100ஆவது பதிவு இது.


எனக்கு மிகவும் பிடித்த கிரிகெட் விளையாட்டில்கூட நான் அதிகபட்சமாக 58 ரன்களுக்குமேல் அடித்தது கிடையாது. சொல்லபோனால் நான் அடிக்கும் முதல் சதம் இதுதான். எனக்கு இப்படி சொல்வதில் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.


எனக்கு வாதம் பிடிக்கும், விதண்டாவாதம் பிடிக்காது. அதனாலேயே இதுவரையிலும் என்னுடைய பதிவுகளில் தனிப்பட்டு யாரையும் தாக்கியோ, அவர்களுக்கு எதிரான கண்டன கருத்துகளை பதிவு செய்வதற்கோ பயன்படுத்தியதில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை நான் எழுதிய பதிவுகளில், என் எழுத்து யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இருந்திருந்தால், மன்னிக்கவும். இது என்னுடைய ரசனைகளுக்கு, விருப்பங்களுக்கு, கற்பனைகளுக்கு, கனவுகளுக்கான களம்.

இதுவரை ஒண்ணும் பெருசா எழுதிவிடவில்லை என்றாலும் இனிமேல எழுதுறது உருப்படியா நல்ல விஷயங்களை எழுது என்று உங்களின் ஒவ்வொரு பின்னூட்டக்களும் எனக்கு சொல்லிக்காட்டிவதாய் எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். யாருடைய பெயரையும் விட்டிருந்தால், பிழை பொருத்தருள்க. இனியும் தொடர்ந்து படியுங்கள், நான் எழுதத்தான் போகிறேன்.

எனக்கு பிடித்த பலபேர் இன்னும் இறக்க/பிறக்கவில்லை

நண்பர் பரிசல்காரன் என்னை அழைக்கும் இரண்டாவது தொடர் பதிவு இது. (தல நீங்கல்லாம் இங்க வருவீங்களா? இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அநியாயமாத் தெரியலையா) பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் குண்டக்க மண்டக்க இருந்தாலும் யோசிக்காம எழுதி முடிச்சிட்டேன். ஏ.... நம்புங்கப்பா... ஆட்டோ எதும் அனுப்பிடாதீங்கோ.....


ஏங்க, எனக்கு பிடிக்கலைன்னு சொல்ற உரிமை கூட எனக்கு கிடையாதா? இதுக்கெல்லாமா ஆட்டோ அனுப்புவாங்க? புடிக்கலைன்னா சுத்தமா... புடிக்கலைன்னு இல்லை.. கொஞ்சமா... இந்தா இத்துண்னூண்டு.......

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

ரொம்பவெல்லாம் யோசிக்கலை, கேள்வியை படிச்சவுடனே டக்குன்னு மனசுக்கு தோனினதை சொல்லிட்டேன். ஏன் புடிச்சது? ஏன் புடிக்கலைன்னு சண்டைக்கு வராதிங்க, ஆமா சொல்லிட்டேன். அதையும் மீறி கேள்விகேட்பவர்களுக்கு என் பதில்கள் கொஞ்சம் முன்னதாகவே.....


பிடிச்சவங்க : அதான் பிடிச்சிருக்குன்னு சொல்லியாச்சே அப்புறமென்ன, பிடிக்கலன்னா ஆயிரம் காரணம் சொல்லாம், பிடிச்சிருக்குன்னா என்ன சொல்லறது, பிடிச்சிருக்கு...... அவ்ளோதான்.

பிடிகாதவங்க : அதான் பிடிக்கலைன்னு சொல்லியாச்சே அப்புறமென்ன, பிடிச்சிருக்குன்னா ஆயிரம் காரணம் சொல்லாம், பிடிக்கலன்னா என்ன சொல்லறது, பிடிக்கலை...... அவ்ளோதான்.

என்றோ சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் பகுதியில் படித்ததாக நினைவு. இங்கே பொருத்தாமாயிருக்குமென நினைக்கிறேன்.

எனக்கு பிடித்த பலபேர் இன்னும் பிறக்கவில்லை
எனக்கு பிடித்த பலபேர் இன்னும் இறக்கவில்லை

பிடிக்காதவங்கன்னு ஒருத்தருமே இல்லைன்னு சொல்லதான் ஆசை, என்ன பண்றது, ஆக பிடிக்காதவர்களைக்காட்டிலும் பிடித்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்பதை குறிப்பால் உணர்த்தவே பிடித்தவர்(கள்) என்கிற இந்த பன்மையை பிடித்தவர்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறேன்.


1.அரசியல் தலைவர்


பிடித்தவர் : தமிழருவி மணியன், நல்ல மனிதர். அவர் இப்போ அரசியலிருந்து விலகி விட்டாராமே? அதனால இப்போ நல்லகண்ணு
பிடிக்காதவர்: வை.கோ (அவர் பேசாம (கவனிக்கனும் பேசாம) டிராமாவில நடிக்க போகலாம்)2.எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி
பிடிக்காதவர் : அனுராதா ரமணன் (இந்த அன்புடன் அந்தரங்கத்தை நிறுத்துங்க மேடம்)3.கவிஞர்

பிடித்தவர் : வாலி மற்றும் வைரமுத்து
பிடிக்காதவர் : சினேகன் (யூ ட்யூபில் டைனமைட் திருமணம் என்று ஒன்றை பார்த்தேன், அதை முன்னின்று நட்த்தி வைத்தவர், சாட்சாத் நம்ம சினேகன், உவ்வே....)


4.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்தினம், வெற்றிமாறன்
பிடிக்காதவர் : பேரரசு ( ஏன்னெல்லாம் கேக்காதிங்க, செம காண்டாயிடுவேன்)


5.நடிகர்

பிடித்தவர் : ரஜினிகாந்த், கமல்ஹாசன்
பிடிக்காதவர் : சேரன் ( நீங்க கேமிராவுக்கு பின்னாடிதான் சரியா இருப்பிங்க தலைவரே!)6.நடிகை

பிடித்தவர் : சினேகா, சிம்ரன்
பிடிக்காதவர் : ராதிகா (அத என் வாயால எப்ப்டீங்க சொல்லுவேன்)


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர் ஸ்ரீகாந்த் தேவா (எனக்கும் எல்லா இசைக்கருவிகளையும் வாசிக்க தெரியும் அல்லது வாசிக்க வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா செய்யமுடியும் என்று நிருபிக்க எல்லா வாத்தியத்தையும் ஒண்ணா அடிச்சு துவைப்பாரு பாருங்க... அக....அக....அக.....)8. அரசு அதிகாரி (காவல்துறை அதிகாரி)

பிடித்தவர் : பொன்.மாணிக்கவேல் எஸ்.பி ( என்ன மனுசங்க இவரு,.. எங்க ஊர்காரங்களுக்கு தெரியும்)
பிடிக்காதவர் : பெயர் தெரியவில்லை, எங்க ஏரியா வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும்/புரிந்த பெண் எஸ்.பி ( சீருடை அணிந்திருக்கும் ஒரே காரணத்திற்காக, அந்தம்மா பண்ணுற அட்டூளியம் இருக்கே....)


9. தொழிலதிபர்
பிடித்தவர் : இவர்கள் என் விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அக எல்லோரையும் பிடிக்கும்
பிடிக்காதவர் : தொழிலில் ஏமாற்றுவதென்பது தொழில்தர்மமாகிவிட்டது, இந்த தொழில் தர்மத்தை சரிவர கடைபிடிக்கும் எவரும் எனக்கு பிடிகாதவரே.


10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : பாலாஜி (ராகமாலிகா- யார் மனதும் கோணாதபடி இவர் செய்யும் கேலி, கிண்டல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்) கோபிநாத் ( நியா? நானா?)
பிடிக்காதவர் : லட்சுமி (கதையல்ல நிஜம்)

பின்குறிப்பு : எனக்கு உலகத்தில் பிடிக்காத ஒரு விஷயம், சண்டை. யார், எதற்க்காக என்பதெல்லாம் கிடையாது. பேசினால் சரியாகாத விஷயம் ஒன்றுமே இல்லை என்பதை திடமாக நம்புபவன் நான்.

விளையாட்டை விளையாட்டாகவே தொடர நான் அழைப்பது
கேபிள்சங்கர், அனுராதா, அகல்விளக்கு மற்றும் ரங்கன் .

மகிழ்ச்சியை பங்கு போடுங்கள், இன்னும் அதிகமாகும்

எஸ்.ராமகிருஷ்ணன் என்ற பெயருக்குப்பின் என்னுடைய பதிவில் அதிகம் புழங்கிய பெயர், கிருஷ்ணபிரபு. ‘சங்கமம்- பேருந்து’ என்கிற தலைப்பில் சிறுகதைப்போட்டி நடத்திய பொழுது, அதுவரை பின்னூட்டங்களிலேயே பேசிக்கொண்டிருந்த எங்கள் நட்பின் அடுத்தகட்டமாக, கிருஷ்ணா ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.


“ நீ எதை எழுதினாலும் கதை மாதிரிதான் எழுதுற, பேசாம ஒரு கதையையே எழுதலாமில்லையா?” என்று.


நான் ”இப்போதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்கேன், அதுக்குள்ள எழுதுறது.....அதெல்லாம் சரிபட்டுவராது, கிருஷ்ணா” என்றேன்.
அவருடைய வற்புத்துதலின் பெயரில் மற்றும் நீயும் எழுதினால்தான் நான் எழுதுவேன் என்கிற ஒரு சமரச உடன்படிக்கையின் பெயரிலும் நான் எழுதிய முதல் கதை பேருந்து பய(ண)ம். பரிசு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னால் கதை அல்லது கதைமாதிரி ஒன்றை எழுதமுடியும் என்று கண்டுபிடித்தது, கிருஷ்ணாதான். வேற என்னங்க வேணும், ஒரு மனுசனுக்கு? நம்மிடமுள்ள திறமையை எடுத்துசொல்லி ஊக்குவிச்சு நல்லதனமா பேசுற நல்ல உறவுகளை தவிற. நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் வரிகள் இது (குறிப்பு:பசங்க படத்துக்கு முன்னாடியிலிருந்தே). கை தட்ட, தட்ட வளரும் ஒரு அதிசய செடி, மனிதன்.


இப்போகூட எனக்கு Scrumptious Blod Award - ருசிகர பதிவு என்று ஒரு விருது கொடுத்திருக்கிறார். இது நிச்சயம் என் எழுத்தின் தரத்திற்க்கோ அல்லது அதை பாராட்டுவதற்காகவோ இல்லை என்பது எனக்கு தெரியும். இது என்மீதான அனபின், நட்பின் வெளிப்பாடு. கிருஷ்ணா, இந்த விருதை உன்னிடமிருந்து பெறுவதில் எனக்கு, உன்னைவிட அளவுகடந்த மகிழ்ச்சி. நன்றி.


இந்த விருதினை நான் மற்றவர்களோடு அவசியம் பகிர்ந்துகொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் உண்மையான அன்பு பகிர்ந்துகொள்வதிலேயே இருக்கிறது என்பதில் அசாத்ய நம்பிக்கைகொண்டவன் நான். கிருஷ்ணபிரபுவைப்போல என் எழுத்தில் அக்கறை கொண்டு, நிறை குறைகளை தொடர்ந்து சுட்டிகாட்டிவரும் இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


கலகலப்ரியா

பேருதான் கலகலப்ரியா, பாரதியின் பரம விசிறி, ரெளத்திரத்தை மட்டுமே பழகுபவள். ரொம்ப தைரியமான பெண். இவரது பால்ய சிங்கள அனுபவங்களை, ரொம்பவே அழகாக, தைரியமாக, தெளிவாக, கிண்டலாக, நகைச்சுவையாக மற்றும் இவை எல்லாவற்றோடும் அவர்களின் மனதில் ஆராத ரணமாகிப்போன வேதனையான நினைவுகளை மென்சோகத்தோடு தொடர்ந்து எழுதிவருகிறார். அவரது பின்னூடங்களில் இது அழுவாச்சி காவியம் அல்ல என்றாலும் அழுவாச்சி நிச்சயம். என்னை தொடர்ந்து வாசித்துவரும் தோழி கலகலப்ரியாவின் அன்பிற்கு இந்த விருது, பரிசு.

க.பாலாஜி
கவிதை, கட்டுரை, கதைகள் என பல தளங்களிலும் இயங்கிவரும் இளைஞர். எனக்கு இவருடைய கவிதைகள், பிடிக்கும். என்னை தொடர்ந்து வாசித்தும், பின்னூட்டியும் ஊக்குவித்துவரும் நண்பர். என்மீதான இவருடைய அன்பிற்கு இந்த பரிசு. (வாழ்த்துகளை எதிர் நோக்காத நண்பனுக்கு என் வாழ்த்துகள்)

ஆதிமூலகிருஷ்ணன்
சென்னை சிறுகதை பட்டறையில் சந்தித்தோம், ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், அங்கே சந்திப்பு மட்டுமெ நடந்தது. பேச்சுவார்த்தயெல்லாம், பிக்னிக் போன இடத்துலதான். நல்லாயிருக்கு, மீ த பர்ஸ்ட், போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்களிடாமல், முழுவதும் வாசித்து எழுத்துப்பிழையோ, கருத்துப்பிழையோ தயங்காமல் சொல்லிவரும் நண்பர். என் எழுத்தில் அவருடைய அக்கறைக்கு என் சிறிய பரிசு, இந்த விருது.

தோழி
அனுராதா, எங்க ஊர் பொண்ணு. தோழிங்கிற பெயரில் எழுதுகிறார்கள். கவிதைகள் இவரது பலம். இவரது கவிதையில் இருக்கும் வீரியம், நிறைய யோசிக்கவைக்கும். எது சரி, எது தவறு என்பதை அனுபவத்தினால் மட்டுமே முடிவு செய்யும் துணிச்சலான, பயணிப்பதையும், மனித உறவுகளையும் விரும்பும், பெண். வெகுசில நாட்களே பழகியிருந்தாலும், என் பதிவுகள் பற்றிய அவரது விமர்சனங்கள், வாழ்த்துகள் என்னை தொடர்ந்து எழுதச்செய்கிறது. எங்கள் நட்பின் அடையாளமாய் இந்த விருது. உங்க நாலு பேரோட பங்கிட்டதால், என் சந்தோஷம் இப்போ நாலு மடங்கா கூடிப்போச்சு. ஆகவே, நீங்களும் உங்க மகிழ்ச்சியை நாலா, ஆறா, எட்டா....... ம்ம்ம்ம், பெருக்குங்க. :-)


நண்பர்களே! இது உங்களுக்கான என் நட்பின் அடையாளம். உங்கள் மீதான என் நட்பின், அன்பின் வெளிப்பாடு. மேலும் என்னை தொடர்ந்து வாசித்தும், பின்னூட்டமிட்டும் ஊக்குவித்துவரும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும், எனது நன்றிகள்.