தூர்தர்ஷன் ஞாபகம் (நினைவுகள்)ஒவ்வொரு முறை பதிவெழுத ஆரம்பிக்கும்போதும் இந்த பதிவை எழுத வேண்டுமென நினைப்பதுண்டு. ஆனால் இது வரை எழுதியதில்லை திடீரென இப்பொழுது எழுதுவதற்கு எந்த விஷேச காரணமுமில்லை.இன்னைக்கு எத்தனை சேனல்கள் உங்கள் தொலைகாட்சியில் காணகிடைக்கிறது, எப்படியும் 100க்கும் மேலாக அல்லவா? அதில் எத்தனை சேனல்கள் உங்கள் விருப்பத்திற்குரியனவாக இருக்கிறது? அதிக பட்சம் 3க்கும் குறைவாக அல்லவா?இதன் காரணமென்னவாக இருக்கும். பணம்படைத்தவர்கள் தனக்கென ஒரு சேனல், ஒவ்வொரு கட்சிக்கு ஒவ்வொரு சேனல், மதவாரியாக, மொழிவாரியாக, இனம்வாரியாக ஒவ்வொரு சேனல், இசைக்கென தனி சேனல், தொடருக்கென தனி சேனல், திரைப்படத்திற்கென தனி சேனல் என இந்தியா முழுவதும் பல்வேறு அலைவரிசைகளில் ஒவ்வொருவரும் போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் காலம் போனால் அவரவர் துல்லியத்திற்காக ஆளுக்கொரு செயற்கைகோள்களையும் அனுப்பிவிடும் காலம் வரும்.தொடர்ந்து விளம்பரப்படுத்துவதன் மூலம் எந்த ஒரு மோசமான திரைப்படத்தையும் ஓட வைத்துவிட முடிகிறது, எந்த ஒரு மலிவான பொருட்களையும் விற்று கல்லாகட்ட முடிகிறது மேலும் நாளைய குழந்தைகளுக்கு பால் என்றால் பசுவிற்கு பதிலாக அரோக்யாவும், அவிட்டாவும் வந்து நிற்பதையும் என்ன செய்ய முடியும்.இதெல்லாம் தவிர்த்து ஒருகாலத்தில் ஒரு சேனல் இருந்தது, தூர்தர்ஷன் என்று. இந்தியா என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வரிகளை எனக்கு விவரம் தெரிந்து நான் கண்டு தெரிந்துகொண்டது இந்த சேனலில்தான். ஒவ்வொரு மாநிலவாரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தமிழ் அலைவரிசை என்றால் மாலை 6மணிமுதல் 8மணிவரை என்பதுபோல. 24 மணி நேர பாடல்கள், சிரிப்பு நிகழ்ச்சிகள், செய்திகள் கிடையாது. முக்கியமாக இந்த மெகா சீரியல் கிடையாது. நேரத்திற்கு சோறு கிடைத்தது. முக்கியமாக இரவுகளில் கதை கேட்க நிறைய நேரமிருந்தது.நான், என் அக்கா, என் தங்கை பக்கத்து வீட்டு ஷீலா அக்கா என அனைவரும் எதிர்வீட்டிற்கு சென்று சில சமயம் உள்ளே சிலசமயம் வெளியே என்று நின்று ராமாயணமும், மகாபாரத்த்தையும் பார்த்தது இந்த தூர்தர்ஷனில்தான். வெள்ளிகளில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும், புதன் கிழமை சித்ரஹார், ஞாயிறு சுரபி மற்றும் மால்குடி டேஸ் என நிகழச்சிகளை தேர்ந்தெடுத்து பார்க்க ரசிக்க முடிந்தது.ராமாயணம் பார்த்துவிட்டு இன்னைக்கு என்ன நடந்தது என்பதை என் பாட்டியிடம் சொல்லுவதற்கு ஒரு போட்டியே நடக்கும். சோகமாகவே இருக்கும் மால்குடி டேஸ் நாடகத்தை அப்பாவும் அம்மாவும் மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு நாடகம் முடிந்ததும் அம்மா அதன் நெறியை, கதை சொல்லும் நீதியை எங்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துசொல்லுவார்கள். இன்று என் அக்கா சீரியல் பார்த்து அழுகிறாள், அவள் மகன் “அம்மா, ஏம்மா அழுற?” என்கிறான். காரணம் சொல்லும்படியாக இல்லை, அக்காவும் சொல்லும் மனநிலையில் இல்லை.என்னுடைய பால்யத்தின் பெரும் பகுதி ரேடியோவில் ஆகாசவாணியையும் ஏறும் ஊரையும், தொலைகாட்சியில் வயலும் வாழ்வையுமே கண்டும் கேட்டும் கழிந்தன. அந்த கிராமத்தில் தொலைகாட்சி பெட்டி இருந்த வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சுற்றியுள்ள வீடுகளிருந்து எல்லோரும் எங்கள் வீட்டில் குழுமியிருப்பார்கள். ஆண்கள் கூட்டம் வயலும் வாழ்வும் முடிந்ததும் வீட்டு திண்ணையில் அதை தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.


பெண்களும் குழந்தைகளும் வீட்டின் வெளி முற்றத்தில் வட்டமாக அமர்ந்து ஏதாவது விடுகதைக்கு விடை யோசித்தபடி இருப்பர்கள். நிலா வந்துவிட்டால் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். பாட்டியின் கதை, நிச்சயம் காக்கா நரி இராது. ஒவ்வொரு நாளும் புதுபுதுக் கதைகளாக வரும். ஒருவேளை யாரவது இந்த கதை ஏற்கனவே சொல்லிடிங்க பாட்டின்னு சொன்னா “அதுல ராஜாவோட அம்பு தீர்ந்து போயிருக்கும், இது வேற கதை, இப்படி இடையில நிருத்தி கேள்விகேட்டா அப்புறம் கதை சொல்ல மாட்டேன்” என்று சாமர்த்தியமாக சமாளிக்கும் வித்தையை நான் என் பாட்டியைதவிர வேறு யாரும் திறம்பட உபயோகித்து பார்த்த்தில்லை.


ம்ம் அது ஒரு அழகிய கனாக்காலம்......இன்று நாம் வேண்டாமென்று விலகினாலும் தொலைக்காட்சி என்பது நம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகிவிட்டது. நாம் வெறுத்து ஒதுக்கினாலும் நம் அம்மா, அப்பா, குழந்தைகள் என ஏதாவது ஒரு ரூபத்தில் தொல்லைகாட்சி நம்மை வந்தடைகிறது.மீண்டும் அந்த தூர்தர்ஷன் என்ற அந்த ஒற்றை சூரியன் மட்டும் முளைக்காதா? இந்த தனியார் தொலைகாட்சிகளின் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வது குறையாதா? குறைந்தபட்சம் இந்த ஆடை அவிழ்ப்புகளாவது குறையாதா? சூனியம் வைக்கவும் குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் கெடுக்கலாமென திட்டம்போட்டு சொல்லிகொடுக்கும் நெடுந்தொடர்களையும் குறைத்துக்கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை கொடுக்காதா? என்று எப்போதும் போல நிறைவேறாத ஆசைகளுடன்......அந்த நாள் நியாபகம் நியாபகம் 1, நியாபகம் 2, நியாபகம் 3 அவசியம் பின்னூட்ட்த்தில் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்களுடைய நியாபக கிளர்வுகளை

14 கருத்துரைகள்:

மதுவதனன் மௌ. / cowboymathu said...

தலைப்பு உறுத்துகிறது..

நியாபகம் அல்ல ஞாபகம்

கலகலப்ரியா said...

நான் டிவி பார்க்கறதில்ல....

//பெண்களும் குழந்தைகளும் வீட்டின் வெளி முற்றத்தில் வட்டமாக அமர்ந்து ஏதாவது விடுகதைக்கு விடை யோசித்தபடி இருப்பர்கள். நிலா வந்துவிட்டால் பாட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.//

அதுதான் சொல்லிட்டீங்களே... அது ஒரு கனாக்காலம்... அல்லது... நிலாக்காலம்...!

பதிவு அருமை...!

கலகலப்ரியா said...

TamilManam la Thumbs up click pannungannu eththana vaatti sollurathu... avv...!

பட்டிக்காட்டான்.. said...

நாங்க கொஞ்சம் பின்னாடின்னாலும் சந்த்ரகாந்தா எல்லாம் ஞாபகம் இருக்கு.
உங்க பாட்டி மாதிரி எங்க அப்பிச்சியும், அப்பாரும் கதை சொல்லுவாங்க. அதுவும் மின்சாரம் இல்லாத நாட்கள்(படிக்க தேவையில்லாமல்) கொண்டாட்டமாக அமையும்..

முரளிகுமார் பத்மநாபன் said...

மதுவதனன் மௌ. / cowboymathu said...
தலைப்பு உறுத்துகிறது..

நியாபகம் அல்ல ஞாபகம்//

நன்றி நண்பா!, மாற்றிக்கொண்டுவிட்டேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி பட்டிக்காட்டான், ஏற்கனவே இதுபற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறேன். பாட்டிகதைகள். ம்ம். படிக்கத்தேவையில்லாமல், உண்மைதான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

//கலகலப்ரியா said...
நான் டிவி பார்க்கறதில்ல....//
நீங்க ரொம்பவே குடுத்துவச்சவங்க ப்ரியா. நான் சின்ன வயசுல அதிகம் பார்த்தேன், இப்போ விலக முடியலை. :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

கலகலப்ரியா, கிளிக் பண்ணிட்டேன் ஆனா எதோ ஓப்பன் ஐடின்னு கேக்குதே? எதை போட்டாலும் எடுத்துக்க மாட்டெங்குது.என்ன செய்யனும்? உதவி தேவை.

ஜீவன்பென்னி said...

நல்ல பதிவு. இப்பவும் எங்க வீட்ல தூர்தர்ஷன் மட்டும்தான். ஒரே ஒரு மாற்றம் 3 மணிக்கு ஆரம்பிச்சு 11 மணிக்கு முடியுது.

கனிமொழி said...

"மீண்டும் அந்த தூர்தர்ஷன் என்ற அந்த ஒற்றை சூரியன் மட்டும் முளைக்காதா?"

எனக்கும் அந்த ஏக்கம் உண்டு நண்பா...
நல்ல பதிவு.

நேசன்..., said...

இந்த அங்கலாய்ப்புகள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது!முதன் முதலில் சன் டி.வி வந்ததும் புளகாங்கிதமடைந்து தூர்தர்ஷனைத் திட்டியவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ண முடியாது!....பழகப் பழக எல்லாப் பாலுமேப் புளிக்கத் தான் செய்யும்!குறிப்பிட்ட சில தொடர்களைத் தவிர பெண்களும் எல்லாத் தொடர்களையும் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை!...அவர்களும் மாறி விட்டார்கள்!

bxbybz said...

அழகான பதிவு. சுரபி நிகழ்ச்சிகள் சிடிக்களாகக் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு ஏதும் தெரியுமா?

கலகலப்ரியா said...

அட ஆமாம் முரளி... தமிழ்மணம் ரொம்ப சொதப்புவான்..! யாஹூ ஐ டி... ப்ளாக் ஐ டி-ன்னு மாத்தி மாத்தி உசிர எடுப்பான்... அங்க விளக்கமா எழுதி இருக்கான்... (விளங்கிடும்..) அத திரும்ப திரும்ப ட்ரை பண்ணுங்க... எப்போவாவது கிளிக் ஆகும்.. (எனக்கு இப்போ கூட ரொம்ப சமயத்ல சொதப்புவான்.. விட மாட்டோம்ல...)... google chrome browser இருந்திச்சின்னா... கொஞ்சம் ஈஸின்னு நினைக்கிறேன்...!

Stephen Sunny Sheesen said...

yes, i remember malgudi days. i also remember some hindi serials called NUKKAD and ZINDAGI. i have seen them from first to last. I admit that i learnt most of my hindi watching doordarshan only. antha opening music super macha !!!!!! tooo toooo tooo tooo doi....to do to do do....

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.