அழகான மாதங்கள் - கார்த்திகை, மார்கழி


எனக்கு தெரிந்து தமிழ் மாதங்களில் மிகவும் அழகான மாதங்கள், கார்த்திகை - மார்கழி. பொதுவாக இந்த அழகு அதுவாகவே அமைந்து விடுகின்றது.

கார்த்திகை மாதம், முன்பனிக்காலம். நான்தான் குளிர், அடுத்த மாதம் கொஞ்சம் அதிகமாக வருவேன் என்று சொல்வதற்காகவே வரும் மாதம், கார்த்திகை. பெரிதாக இல்லையென்றாலும் கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் இருக்கும். இந்த மாதங்களில் அனேகமாக சபரிமலை செல்ல விரதத்திலிருப்பேன். என்னால் முடிந்த மட்டும் கட்டுப்பாடுகளில் இருப்பேன். (நான் புகைக்காமல் இருப்பதே பெரிய விரதம்தான் ). பெரும்பாலும் இந்தசமயத்தில் கோப, தாபங்களை புடிந்த மட்டும் குறைத்துக்கொள்வேன். அநேகநேரம் அலுவலகத்திலேயே செலவிடுவேன். முகமும் மனதும் அரிதாரம் தவிர்த்திருக்கும். வேறுஎந்த நாட்களிலும் எனக்கு நானே இவ்வளவு உண்மையாக இருப்பேனா என்பது எனக்கே ஆச்சர்யம்தான். ஆனால் ஒவ்வொரு முறை விரதத்திலிருக்கும்போதும், ஆண்டு முழுவதும் இப்படியே இருந்துவிட கூடாதா என்று நினைப்பதுண்டு. ஆனால் எப்பொழுதும் அது நடப்பதேயில்லை. கோவிலுக்கு சென்றுவந்ததும் பழையபடி வீட்டிற்கொரு முகம், அலுவலுக்கு ஒரு முகம், வாடிக்கையாளருக்கு ஒரு முகம், நண்பர்களுக்கொரு முகமென முகம் மூட தேடும் மனது.என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய சிறுவயதில், என்னுடைய பாட்டியை பார்த்தால் யாருக்கும் சாமி கும்பிடவேண்டும் என்று எண்ணம் வரும். ப்ரியா வீடு, பூர்ணிமா வீடு, NTCகாரர் வீடு, டீச்சர் வீடு இப்படி எங்கள் வீட்டிற்கு எத்தனையோ பேர்கள் இருந்தாலும் ஓம்சக்தி பாட்டி வீடுன்னு எல்லாருக்கும் தெரியுமளவிற்கு பாட்டியும் அவர்களின் ஓம் சக்தியும் பிரபலம். அந்த அளவிற்கு வீடே பக்தி மயமாகத்தானிருக்கும். ஆனால் பாட்டி இறந்த பிறகு அவர்களின் நினைவுகளைப்போல கடவுள் பக்தி என்பது நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டே வருகிறது. எங்கே கடைசியாக அது இல்லாமலே போய்விடுமோ என்ற சிந்தனையை குறைத்த மாதம், கார்த்திகை.அரையாண்டு விடுமுறையில் தேனியில் மாமா வீட்டிற்கு செல்வோம். அக்கா தங்கைக்கு கிருஷ்ணன் வேடமிட்டு, தலைக்கு சவுரி வைத்து இன்னும் எதேதோ செய்து ஆடலும் பாடலுமாய் கரையும் எங்கள் விடுமுறை. கும்பக்கரையில் ஆற்றில் குளித்து விட்டு, நெற்றியில் பட்டையை போட்டுக்கொண்டு, ஆற்றங்கரையில் பிள்ளையாரை கும்பிட்டபடி, மாமா திருவாசகம் சொல்ல சொல்ல பின்னால் அதைன் திருப்பி சொன்னபடியே வீட்டிற்கு நடந்து வருவோம். பால்யத்தை நினைவில் கொண்டுவரும்போதெல்லாம் வேறு எதைக்காட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகளே இன்னும் பசுமையாய் பதிந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை என்னுடைய குழந்தைகளையும் நான் சிறுவயது முதலாக கோவிலையும் சிலைகளையும் காட்டித்தான் வளர்க்கவேண்டும் என்பதை வருடம் தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் மாதம், கார்த்திகை.

மார்கழி, என்றதும் எனக்கு இரண்டு விஷயங்கள் உடனே நியாபகத்திற்கு உடனே நியாபகத்திற்கு வரும். ஒன்று, எனது பள்ளி தமிழாசிரியர் கதிர்வேலு அய்யா மற்றும் அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய அல்லது குற்றால குறவஞ்சி அல்லது வேறு ஏதோ ஒரு பாடல், செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. நீங்கள் அனைவரும் எனது கண்ணுக்குள் அல்ல கைக்குள் இருக்கவேண்டும் என்று அழகான காரணத்துடன், இவர் வகுப்பெடுக்கும்போது அனைவரையும் அவரது காலடியில் சுற்றி அமர்ந்துகொள்ளசெய்வார். அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இத சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான். தமிழ் என்று நினைக்கும்போதெல்லாம் ஐயாவும், ஐயாவை நினைக்கும் போதெல்லாம் அவரின் மார்கழியும் நினைவிற்கு வரும், அழகு.மற்றொன்று, எங்கள் காலனி பிள்ளையார் கோவிலும், சாரதா அக்காவும். ஒவ்வொருவருக்கும் பிராத்தனை செய்ய, கோவிலுக்கு செல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு. எனக்கும் எனது நண்பர்களுக்கும் சிறுவயதில் கோவிலுக்கு செல்ல இரண்டே காரணங்கள்தான். பொங்கல் விநியோகம் செய்யவும் சாரதா அக்காவை பார்க்கவும் தான். பத்தாவது படித்து கொண்டுடிருக்கிறேன், மார்கழி மாதம், அந்த குளிரிலும் எழுந்து குளித்து விட்டு ஆறு மணிக்கெல்லாம் எங்கள் காலனி விநாயகர் கோவிலுக்கு சென்று விடுவேன். நண்பர்களும். சாரதா அக்கா எங்களுக்கு முன்பே வந்து ஈர தலையுடன் உட்கார்ந்திருப்பார்கள். ஏன் பிடிக்கும் என்று தெரியாது, ஆனால் அவர்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய அக்கா என்னை இவன்தான் என் தம்பி, என்று என்னை அறிமுகம் செய்யும்போது, பெரும்பாலும் என்னுடைய பிராத்தனை சாரதா அக்கா என்னை தம்பி என்று கூப்பிட்டுவிடக் கூடாது என்பதாகதான் இருக்கும். நான் கல்லூரி சென்றுகொண்டிருந்த சமயம், சாராதா அக்காவிற்கு திருமணம் என்று கேள்விப்பட்டபோது கூட கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. பூஜை முடிந்த பின்னர் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது எங்களின் பொறுப்பு. பல நேரங்களில் எங்களுக்கு கடைசியாக எதுவும் கிடைக்காத போதும், இந்த பொறுப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.இப்போதெல்லாம் அப்படி கோவிலுக்கு சென்று, அமைதியாக அமர்ந்து நினைவுகளை அசைபோடக் கூட முடிவதில்லை. கோவிலுக்கு செல்லும் கொஞ்ச நேரத்திலும் செல்போனை அணைத்து வைக்க முடிவதில்லை. எப்போதும் வேலை, பணம் இடையிடையே கொஞ்சம் ஓய்வு என்று போகிறது வாழ்க்கை. எப்போதெல்லாம் பணம் தேடி ஓடிக்கொண்டேயிருக்கிற இந்த வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சரியாக வந்துவிடுகிறது, யாருமற்ற இரண்டங்குல பச்சைப்புல் பெருவெளியில், வானம் பார்த்தபடி படுத்துக்கிடப்பதைப்போல ஒரு அமைதியும், ஆன்ந்தத்தையும் கண்ணை மூடித்திறப்பதற்குள் மனதிற்குள் அமிழ்த்துவிட்டு சென்றிடும் அதிசயம் நிறைந்த, அழகான மாதங்கள் இந்த கார்த்திகையும் மார்கழியும்.
ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்ட ஒரு மீள் பதிவுதான் இது. இந்தமுறையும் கார்த்திகை மார்கழியைப் பற்றி ஏதாவது புதிதாக எழுதத்தான் நினைத்தேன். ஆனால் பால்ய நினைவுகளை தின்று கிரகிக்கும்படியாக எதுவும் புதிதாய் நடந்துவிடவில்லை என்பதே நிதர்சனம். பழைய பதிவாக இருந்தாலும் என்னில் படுமையாய் பதிந்துவிட்ட நினைவுகள். அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.எனக்கு இந்த புத்தாண்டிற்கு ஒரு இனிய செய்தி , என்னுடைய ஒரு சிறுகதை, வம்சி பதிப்பகத்தின் மரப்பாச்சியின் சில ஆடைகள் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. அனுபவமிக்க பதிவர்கள் சென்ஷி, நர்சிம், பா.ரா, கென், செல்வேந்திரன், அய்யனார், ஜியோவ்ராம் இன்னும் பலரின் கதைகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகத்தில் என்னுடைய கதையும் இடம்பெற்றிருப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மூலகாரணமாக இருந்த தோழர்.மாதவராஜ் அவ்ர்களுக்கும் வம்சி பதிப்பகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இது குறித்த மாதவராஜ் அவர்களின் பதிவு : மரப்பாச்சியின் சில ஆடைகள்

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)


ஆம், விருது நிச்சயம் சும்மா இல்லை
நிச்சயமா நாலு பேர் படிக்கனும், பேர் வாங்கனும்ன்னு எழுத்த்தொடங்கலை,. ஆனாலும் என் பதிவுலகின் என் ஆரம்பக்காலத்தில், பதிவெழுதியவுடன் விமர்சங்களையும் பாராட்டுகளையும் எதிர்நோக்கிக் காத்திருப்பேன், எத்தனையோ பேர் படிக்கிற பதிவுலகத்தில் ஒருத்தருக்கு புடிக்கிற மாதிரிகூடவா என்னால எழுத முடியலைன்னு ரொம்பவே விசனப்பட்ட, காலம். என் திருப்திக்கு எழுத ஆரம்பித்தபின் அதை ஏன எதிர்பார்க்கனும்? அப்படீன்னு நானே என்னை சமாதானப்படுத்திகொண்டு, இன்னமும் தொடர்ந்து எழுதிகொண்டிதான் இருக்கிறேன்.


ஒரு பொது ஊடகத்தில் எழுதுபவன், பாராட்டுக்களைப்போல் விமர்சனங்களையும் சந்திக்கும் பக்குவம் கொண்டிருக்கவேண்டும். விமர்சன்ங்கள் நிச்சயம் உங்கள் எழுத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதனால் இன்றளவில் நான் ஒரு சிலர் படிக்குமளவிற்கு எதோ எழுதுகிறேன் என்றால், இன்றுவரை என் எழுத்துக்களில் தவறிருந்தால் விமர்சித்து சுட்டிக்காட்டி தட்டிகொடுத்த நண்பர்களும், கொஞ்சமாய் நன்றாக இருக்கும்போதே மனம்திறந்து பாராட்டும் நண்பர்களினாலும் மட்டுமே.

அப்படியாக மனம்திறந்து அன்பை பிதுக்கியெறிந்திருக்கிறார், பதிவுலகில் சித்தப்பூ, மகாப்பா என அறியப்படும், பா.ரா எனப்படும் பா.ராஜாராம். தன் அன்பை ஒரு விருதாகக் கொடுத்திருக்கிறார். கொடுத்ததுமில்லாமல், விருது சும்மா இல்லை என்று வேறு சொல்லிவைத்திருக்கிறார். ஆம், உண்மைதான். எனக்கு இந்த விருது சத்தியமாக சும்மா இல்லை. கருவேலநிழல் என்ற பதிவின் சொந்தக்காரர், இவர் அன்பின் வெளிப்பாடு, இவரது புரையேறும் மனிதர்களில் அப்பட்டமாக வெளியேறும். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கவிதையாக அணுகத்தெரிந்தவர், அதை பதிவாக படிப்பவர்களை அந்த நொடியை அதே பாங்கோடு அனுபவிக்கும்படி பதியத்தெரிந்தவர்.

என் பதிவிற்கு இவர் பின்னூட்டமிடுகிற போதெல்லாம், எனக்கு வராத ஆங்கிலத்தை சொல்லிகொடுத்த என் ஆங்கிலஆசிரியர் என் ஆங்கிலகட்டுரை படித்து பாராட்டியது நினைவில் வந்துபோகும். இன்றளவில் நான் எழுதிய எதையும் கவிதை என்று சொல்லிக்கொள்ளும் தைரியம் எனக்கு இருந்ததில்லை. இனி தைரியமாக காலரை உயர்த்தி சொல்லிக்கொள்ளலாம், ஏனெனில் பா.ரா. என்கிர கவிஞர் நான் எழுதியதை கவிதை என்று சொல்லியிருக்கிறார் மேலும் இந்தா மக்கான்னு ஒரு விருதையும் கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.

நன்றி, மகாப்பா...

இனி என் அன்பை என் சகபயணிகளான இவர்களோடுதான் பகிர்ந்துகொள்ளப்போகிறேன். ஏற்கனவே சொன்னதுபோல உண்மையான அன்பு பகிர்ந்துகொள்வதிலேயே இருக்கிறது என்பதில் அசாத்ய நம்பிக்கை கொண்டவன் நான். உங்க எழுத்து நல்லா இருக்கு, இல்லைன்னு சொல்ற அளவீட்டின் குறியீடு அல்ல இந்த விருது. நண்பர்களே! இது வெறும் என் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. மகிழ்ச்சியோடு கொடுக்கிறேன், என் மகிழ்ச்சி உங்கள் மூலமாக பரவட்டும். நன்றி.

க.பாலாசி, பழக இனிமையான மனிதர். வெளிப்பகட்டு அறியாத வெள்ளந்தியான நண்பர். இவரது எழுத்து ஒரு தனித்தன்மையோடேயிருக்கும். இந்த விருது இவரை அடுத்த உயரத்திற்கு கொண்டுசெல்லும் ஏணியாய் இருக்குமென நம்பிக்கையுடன்.
அகல்விளக்கு, நண்பன். ரொம்ப சீக்கிரமே எழுதவந்திருக்கிறார். இப்போதே கதை, கவிதையென பல பகுதிகளில் இயங்கி வருகிறார், அனுபவமும் கைகொடுக்கும் பட்சத்தில் இன்னும் பல நல்ல எழுத்துக்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
 

வெயிலான், பதிவர்களின் அடையாளம். எல்லோரும் சொல்வது போல வருடத்திற்கு இரண்டு பதிவுகள் போட்டாலும் இவரைத் தெரியாத பதிவர்கள் இருக்க முடியாது. இவரும் ஒரு ஊர்சுற்றி. என் பொறாமைக்குரிய மனிதர்களில் மிக முக்கியமானவர்.கலகலப்ரியா, அறிமுகம் தேவையில்லாத ஒரு பெண். தேநீர் குடித்ததைப்பற்றி எழுதினதை படிக்கும்போது, தேநீர் மணமறிவதுபோன்றதொரு எழுத்து இவருடையது, இவரது அனுபவத்தை படிப்பவர்களின் மனதில் இறக்கிவைக்கிறார். என் கனத்த மனதிற்கு காரணமான, பாரதியின் பரம விசிறி.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)ஒரு தந்தை, 3000 மகன்கள்

ஒரு மனிதர் தனியாளாக 3000 மரங்களுக்கும் மேல் நட்டு, பராமரித்து, வளர்த்திருக்கிறார் என்ற செய்தியை 03.12.2009, புதியதலைமுறை இதழில் பக்கம் 28-ல் மரங்களின் மகாத்மா என்கிற கட்டுரைப்படித்தேன். அடுத்தநாள், சென்னையிலிருந்து நண்பர் பெரியசாமியிடமிருந்து போன் வந்தது. நண்பா, கட்டுரை படித்தீர்களா? அவர் சத்தியமங்கலம்தானாமே? ஒரு நடை போய்பார்த்துவிட்டு வரலாமா? யோசிச்சு சொல்லுங்க, என்றார். இதில் யோசிக்க என்ன இருக்கிறது, போகலாம் என்றேன்.

சனிக்கிழமை, நேற்று காலை பத்துமணிக்கு திருப்பூரிலிருந்து கிளம்புதவதாகத் திட்டமிட்டோம். சென்னையிலிருந்து பெருந்துறை, பெருந்துறையிலிருந்து அவினாசி வந்து காத்திருந்த பெரியசாமியை அவினாசியிலிருந்து கிளாம்பும்போது மணி 10.30. அவரை பார்க்கப்போகும்போது என்ன வாங்கிச்செல்வது என்று யோசித்தோம். ஒருவழியாக மரக்கன்றுகளையே வாங்கிப்போவதென்று முடிவு செய்தோம். இரண்டு வேப்பங்கன்றுகளும், ஒரு புங்கை, ஒரு மாமர நாத்தும் வாங்கிகொண்டோம். வழிநெடுக பெரியவரைப் பற்றியே பேசிக்கொண்டே சென்றோம். 3000 மரங்களை நட்டுவைப்பது, வளர்ப்பது என்பது நீரும் நீர் சார்ந்த இடங்களில் சாத்தியமான ஒன்றுதான் என்பதில் ஆரம்பித்து, இல்லை ஒரு மரம் வளர்க்க குறைந்தது எட்டிலிருந்து பத்து மாதங்களாவது அதை சரிவர பராமரிக்கத் தேவையிருக்கும் என்பதில் நின்றது. ஆக 3000 மரங்கள் என்பது நிச்சயம் ஒரு தனி மனிதனைப் பொருத்தவரை, சாத்தியமற்ற ஒன்றுதான். அப்படியே சாத்தியப்படுத்தினால், அது சாதனைதான்.

ஒருவழியாக சத்தியமங்கலம் சென்று சேரும்போது மணி 12ஐ தொட்டுவிட்டிருந்தது. மேலும் அவருக்கு பழங்கள் ஏதாவது வாங்கிப் போகலாமென முடிவு செய்து, கடை தேடினோம். அரசு மானியத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு சாமனியனுக்கு, ஒரு கிலோ பழம் என்பது வைத்து சாப்பிடக்கூடிய விஷயமல்ல, என்பதாலும், கட்டுரையில் அவர் சட்டை அணிவதில்லை என்று படித்த ஞாபகத்திலும் அவருக்கு ஒரு வேட்டியும், துண்டும் வாங்கலாமென முடிவு செய்து, கதர்பவனைத் தேடி. அதை வாங்கி முடிக்கவும், அவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் விஜி என்கிற விஜயகுமார் ( எங்களை அழைத்துச் செல்லவந்தவர்) எங்களுக்கு செல்போனில் அழைக்கவும் சரியாக இருந்தது. சத்தியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் வேட்டுவன்புதூர் என்கிற கிராமத்தில், இருந்தது அவரது வீடு, விஜி அவர்கள் எங்களை முதலில் மரங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

ஆகா, எத்தனை மரங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் தழும்பி ஓடியிருக்கும் என கருதப்படுகிற ஒரு வாய்க்காலின் இருமருங்கிலும் வேப்பமரம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள்தான். எல்லா மரங்களும் சுமார் 15 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்தான். அகண்டு விரிந்து கிளை பரப்பி சுதந்திரமாக வளர்ந்திருக்கின்றன, மரங்கள்.

கொஞ்சம் மரங்களை எண்ணலாமென்று தோன்றவே, மனதிற்குள் மரங்களை எண்ணத்தொடங்கினேன். 172 மரங்களை ஒரு நூறு மீட்டர் தொலைவு நடப்பத்ற்குள், பார்த்துவிட்டேன். இன்னும் இப்படியே எவ்வளவு தூரம் நடக்கனும் என்று விஜியிடம் கேட்டோம். இரண்டரையிலிருந்து மூணு கிலோமீட்டர் வரை இருக்கும் அதுபோக இங்கே உள்ள பள்ளி மைதானத்தில், சுடுகாட்டிலும் நிறைய மரங்கள் வைத்திருக்கிறார், என்றார். எங்களுக்கு அவ்வளவு தொலைவு நடந்து மரங்களை எண்ணுவதென்பதே ஆயாசமாக இருந்தது. சரி போகலாம் போய் பெரியவரைப் பார்க்கலாம், என்றோம். சில புகைப்படங்களை பதிவிற்க்காக படம்பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்த்தும், ஆறடி உயரத்தில் மெலிந்த தேகத்தோடு அந்த மனிதர் எழுந்துவந்து வணக்கம் சொல்லி அழைத்து சென்றார். தன் பேரனிடம் கலர் (கோலி சோடா) வாங்கிவரச் சொல்லி எங்களுக்குக் கொடுத்தார். ஐந்தடி உயரக்கூரை, என்போன்றவர்கள் உள்ளே குனிந்தே நிற்க வேண்டும். ஒரு சுவர் முழுக்க அவருக்கு கொடுக்கப்பட்ட மரியதைகள், புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தது. மரங்களின் மகாத்மா என்ற விருது, ஒரு ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இதற்குமுன் வந்து சந்தித்த செய்தியாளர்கள், நண்பர்கள் இவரோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இவருக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி, அந்த நினைவுகளை எங்களோடு பகிர்ந்துகொண்டார். எப்படி உங்களுக்கு இவ்வளவு மரங்களை தனிஒருவராக வளர்த்தீர்கள்? இதில் உங்களுக்கு சிரமம் ஏது இல்லையா? என்றதற்கு விதைகளை எடுத்து வீட்டிலேயே நாத்துசெய்துகொண்டும் ஒவ்வொருமுறை ஆடுமேய்க்கும்போது அப்படியே நட்டுவைத்து விடுவேன், முட்களை பிடுங்கி வேலிமாதிரி கட்டிவிடுவேன், கொஞ்ச நாளைக்கு தண்ணிவிடுவேன், அப்புறம் அதுதானா கிடுகிடுன்னு வளர்ந்திடும் என்றார், மிக எளிமையாக. மரங்கள் சின்னதா இருக்கும்போதுகூட சிரம்மில்லை, பெரிதாக வளர்ந்த பின் ஆளாளுக்கு அதை வெட்டத்தொடங்கினார்கள். புள்ளைங்க மாதிரி வளர்த்த ஒவ்வொண்னையும் கண்ணுமுன்னால வெட்டி எடுத்துட்டு போகும்போது மனசு ரொம்ப கஸ்டமா இருக்கும். ஊர் மணியக்காரரிடம், இதுகுறித்து சொன்னபோது “நீயா தண்ணி ஊத்தி வளர்த்த, எல்லாம் அதுவா வளர்ந்தது” என்று சொல்லி அனுப்பிவிட்டதை, வருத்தத்தோடு நினைவுகூர்ந்தார்.

சரிங்கையா, இப்போ என்ன வருமானம் உங்களுக்கு என்றோம், ஒரு வருடம் முன்பு வரை பக்கத்திலுள்ள உரக்கம்பேனிக்கு வேலைக்குபோனதாகவும், தற்சமயம் இளைப்பு அதிகமானதால், வேலைக்குப்போக முடிவதில்லை என்றும் சொன்னார். மேலும், ஒரே பொண்ணு திருப்பூர்ல கட்டி கொடுத்தோம், மருமகனும் இப்போ செத்து போயிட்டாரு, அவ இப்போ இங்க ஒரு ஸ்பின்னிங் மில்லுக்கு வெலைக்கு போறா, அவ ரெண்டு படங்களுக்குப் போக எங்களையும் சேர்த்து கவனிக்கனும். அப்புறம் அரசாங்கம் மாதாமாதம் முதியோர்களுக்கென கொடுக்கும் ரூ.400ம் என்று வாழ்க்கை ஓடுகிறது என்றார். அதுவரை அவருக்கு பணம் எதுவும் கொடுத்தாம் தவறாக எடுத்துக்கொள்வாறோ என்று யோசித்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ஏதாவது கொடுத்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. அவருக்கென வாங்கிய வேட்டித்துண்டோடு ஒரு ஐநூறு ரூபாயையும் வைத்து, காசு கொடுக்கிறோமென்று தவறாக நினைக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள், என்று அவரிடம் கொடுத்தோம். மிகவும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.

தன் பேரனுக்கு நல்ல படிக்கசொல்லி அறிவுரை சொல்லச் சொன்னார், பிறகு அவராகவே ரெண்டு பேரையும் நல்லா படிக்க வைக்கனும்ன்னு பாவம் அவ கஸ்டப்படுறா, சரி யார் சொல்லி என்ன, அவனுக்கு ஏறுனாதானே அவன் படிப்பான், என்றார் எதார்த்தமாக. விடைபெறும்போது, அவரோடும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்போது அவசியம் எங்கள் வீட்டில் சாப்பிடும்படியாக வாங்க, என்றார்.

விஜி மற்றும் தேவேந்திரன் என்ற இருவரும் அவரது பக்கத்து வீட்டுக்கார்ர்கள், அவர்கள்தான் இப்போது பெரியவரை அனுசரனையாக கவனித்துகொள்கிறார்கள் மற்றும் மரங்களை பராமரிப்பதிலும், புதிதாக மரங்களை நட்டு வளர்ப்பதையும் செய்து வருகிறார்கள். எங்களை வழியனுப்ப வந்த விஜி மற்றும் தேவேந்திரன் இருவரிடமும் “அந்த பெரியவரைவிட நல்ல காரியம் செய்துவருகிறீர்கள், வாழ்த்துக்கள், உங்களுக்கோ பெரியவருக்கோ எதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளுங்கள், என்று அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு, அவர்களுக்கென கொண்டுவந்திர்ந்த டி-ஸர்ட்டுகளை கொடுத்துவிட்டு, அடுத்தமுறை அவரும்போது 50 மரக்கன்றுகள் கொண்டுவருவதாகச் சொல்லிக்கிளம்பினோம்.

டிஸ்கி : நான்கு மாதங்களாக வராமலிருந்த முதியோர்களுக்கான அரசின் உதவித்தொகை ரூ.400, புதியதலைமுறை கட்டுரைக்குப் பின் நான்குமாதத்திற்குமாக சேர்த்து நேற்றுதான் வந்த்து என்றார், பெரியவர். வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள், புதியதலைமுறைக்கு.

மற்ற புகைப்படங்களுக்கு இங்கே செல்லுங்கள்
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

எட்டுத் திக்கும் மதயானை

எட்டுத் திக்கும் மதயானை
ஆசிரியர் - நாஞ்சில் நாடன்
விலை – ரூ.100/-
விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி,கோவை

// நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல்,
அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்… கையைத்
தூக்கிப் பிடித்து நாயிக்குக் காட்டும் பிஸ்கெட் போலைச் சில
பரிசுகள். நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது
துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக்
கண்கொள்ளாமல் கண்டு களித்தலா என்று
தெரியவில்லை

படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல.
போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையில் வால்
நுழைத்துப் பல்லிளித்து ஒடும் நாட்டு நாய் போலும்.
பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு கார்த்திகை
மாத்த்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்
இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது இந்த
இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை படைப்பாளி
என்பவன் வேலிக்கு வெளியே நிற்பவன், போற்றுதலும்
கவனிப்பும் மறுக்கப் பெற்று

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப்
பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக்
கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.

பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும்
போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில்
வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்...

என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது.
உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம்,
தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து
கொள்பவந்தானே நல்ல வாசகன்!////


இது நாவலின் அறிமுக உரையாக ஆசிரியர் எழுதியது. எவ்வளவு பட்டவர்த்தனமான உண்மை. பூரணம், பரிபூரணம், ஆசை, நிராசை, வெட்கம், கோவம் என எழுத்தின் மீதான அவரது அத்துணை வெளிப்பாடுகளையும் கொட்டி தீர்க்கும் வார்த்தைகள். எழுதாளர்களின் கோபங்களையும் இயலாமையையும் வெகு இயல்பாகவும், எதார்த்தமாகவும் அதே சமயம் பொட்டில் அறையும் வேகத்துடன் வந்து விழுந்த வார்த்தைகள், இந்த முன்னுரை. முன்னுரையில் ஆரம்பித்த இந்த வேகம் நாவலின் கடைசி பக்கம் வரை நீடிக்கிறது.


எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, ஒற்றை துரத்தும் வாழ்க்கை. வாழ்க்கை ஏதேனும் ஒன்று துரத்த அல்லது ஏதேனும் ஒன்றை துரத்தியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி வாழ்க்கை எனும் காட்டாற்று வெள்ளம் அடித்த திசையில் இலக்கின்றி பயணிக்கும் பூலிங்கமும், அவன் வாழ்வும்தான் இந்த நாவல்.


நாவல் நெடுக வாசகர்களுக்கு நிறைய கேள்விகளை விதைத்துக்கொண்டே போகும் பாங்கு அருமை. படித்துமுடித்ததும் விடைகளற்ற எண்ணற்ற கேள்விகள் நிச்சயம் வாசகர் மனதில் எழும். அந்த கேள்விக்கான விடைகளை தேடியலையும் மனம், தேடல்தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. மற்றவர்களின் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் அறிஞனாகிறான், தன் பிழைகளிலிருந்து கற்றுக்கொள்பவன் மனிதனாகிறான் என்று ஒரு சொலவடை உண்டு. அந்தவகையில் இது ஒரு மனிதனை பற்றிய கதை.


எது தவறு, கொலை செய்வதா? கொலை செய்தவன் இரண்டு நொடி தாமதித்திருந்தால் கொலை செய்யப்பட்டிருப்பானென்கிற நிலையில் ஒரு கொலை, தற்காப்பாகிறது. திருட்டு, குற்றமா? அப்படியானால் அதை இங்கே செய்யாதவன் யார்? அரசாங்கம் திட்டம் போட்டு செய்கிறது. திருட்டு, கொலை, கொள்ளை, கற்பு, காதல், காம்ம், பாசம், துரோகம் எல்லாம் வெரும் வார்த்தைகள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு அர்த்தம் கொடுக்கும் வெரும் வார்த்தைகள்.

இருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவனின் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. அவசியம் ஒருமுறை படித்துவிடுங்கள். இந்த நாவல் இதுவரை இரண்டே பதிப்புகள் மட்டுமே வந்திருப்பது, சாபம்.

டிஸ்கி 1: கற்றது தமிழ் படத்தின் மூலக்கதை என்று சொல்லப்பட்ட நாவல், எனக்கு கேபிள்சங்கரின் ரேணிகுண்டா விமர்சனம் படித்ததிலிருந்து பரமுவின் கிளைக்கதைதான் நியாபகம் வருகிறது. தல ஒருமுறை படிச்சிருங்க...

டிஸ்கி 2: நாஞ்சில் நாடன் - இப்படி ஒரு எழுத்தை, எழுத்தாளரை எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறேன் (மன்னிக்கனும், சகா. கார்க்கி, எனக்கும் தெரியலை-ரொம்ப மிஸ் பண்ணுறேங்கிறத தமிழ்ல என்ன சொல்லலாம்). இவருடைய இதற்கு முந்தைய ஐந்து நாவல்களையும் பதிவு செய்துவிட்டேன்.

நான்கு குறும்படங்கள்


எய்ட்ஸ் தினமான இன்று, இரண்டு நல்ல விஷயங்களை கவனித்தேன். இதோ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒன்று
ஏற்கனவே கமல் எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் ”இவர்கள் நலம்பெற இனி எத்துனை விதிகள் வேண்டுமோ, அத்தனையும் செய்வொம், அதை எந்த நாளும் காப்போம் என உளமாற உறுதிகூறுகிறேன்” என்று சொன்னது அனைவருக்கும் நினைவிலிருக்கும்.
அதற்கு முன்னுதாரணமாக அவரே ஒரு விதியை செய்து, அதை காக்கும் விதமாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1000 குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார். முதன்முதலில் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றி பலருக்கும் முன்னோடியாக இருந்த இவர், இப்பொழுது இத்தகைய நல்ல விஷயத்தின் மூலமாக, நடிகர்கள் மற்றும் அவர்களின் நற்ப்பணி இயக்கங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கமல் அவர்களுக்கு ரசிகனாகவும் சாமனியனாகவும் எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.


இரண்டு

மேலும் எய்ட்ஸின் பாதிப்பை மெல்ல உணரச்செய்யும் மூன்று குறும்படங்கள், மூன்றுமே சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறது. அவசியம் பாருங்கள். கிருத்திகா உதயநிதி, இயக்குனர் மிஸ்கின் மற்றும் சசிகுமார் ஆகிய மூவரும் கொடுக்கப்பட்ட நான்கு நிமிடங்களில் மனதை அசைத்துப்பார்க்கும் விதமாக எடுத்துள்ள மூன்று குறும்படங்கள். இதில் ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று இருப்பது கூடுதல் சிறப்பு.

LIFE - கிருத்திகா உதயநிதி
LOVE - சசிகுமார்
HOPE - மிஸ்கின்
மேலும் ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ்சிவன் அவர்களின் ஒரு குறும்படம் இங்கே,