அழகான மாதங்கள் - கார்த்திகை, மார்கழி


எனக்கு தெரிந்து தமிழ் மாதங்களில் மிகவும் அழகான மாதங்கள், கார்த்திகை - மார்கழி. பொதுவாக இந்த அழகு அதுவாகவே அமைந்து விடுகின்றது.

கார்த்திகை மாதம், முன்பனிக்காலம். நான்தான் குளிர், அடுத்த மாதம் கொஞ்சம் அதிகமாக வருவேன் என்று சொல்வதற்காகவே வரும் மாதம், கார்த்திகை. பெரிதாக இல்லையென்றாலும் கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் இருக்கும். இந்த மாதங்களில் அனேகமாக சபரிமலை செல்ல விரதத்திலிருப்பேன். என்னால் முடிந்த மட்டும் கட்டுப்பாடுகளில் இருப்பேன். (நான் புகைக்காமல் இருப்பதே பெரிய விரதம்தான் ). பெரும்பாலும் இந்தசமயத்தில் கோப, தாபங்களை புடிந்த மட்டும் குறைத்துக்கொள்வேன். அநேகநேரம் அலுவலகத்திலேயே செலவிடுவேன். முகமும் மனதும் அரிதாரம் தவிர்த்திருக்கும். வேறுஎந்த நாட்களிலும் எனக்கு நானே இவ்வளவு உண்மையாக இருப்பேனா என்பது எனக்கே ஆச்சர்யம்தான். ஆனால் ஒவ்வொரு முறை விரதத்திலிருக்கும்போதும், ஆண்டு முழுவதும் இப்படியே இருந்துவிட கூடாதா என்று நினைப்பதுண்டு. ஆனால் எப்பொழுதும் அது நடப்பதேயில்லை. கோவிலுக்கு சென்றுவந்ததும் பழையபடி வீட்டிற்கொரு முகம், அலுவலுக்கு ஒரு முகம், வாடிக்கையாளருக்கு ஒரு முகம், நண்பர்களுக்கொரு முகமென முகம் மூட தேடும் மனது.என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய சிறுவயதில், என்னுடைய பாட்டியை பார்த்தால் யாருக்கும் சாமி கும்பிடவேண்டும் என்று எண்ணம் வரும். ப்ரியா வீடு, பூர்ணிமா வீடு, NTCகாரர் வீடு, டீச்சர் வீடு இப்படி எங்கள் வீட்டிற்கு எத்தனையோ பேர்கள் இருந்தாலும் ஓம்சக்தி பாட்டி வீடுன்னு எல்லாருக்கும் தெரியுமளவிற்கு பாட்டியும் அவர்களின் ஓம் சக்தியும் பிரபலம். அந்த அளவிற்கு வீடே பக்தி மயமாகத்தானிருக்கும். ஆனால் பாட்டி இறந்த பிறகு அவர்களின் நினைவுகளைப்போல கடவுள் பக்தி என்பது நாட்கள் செல்ல செல்ல குறைந்து கொண்டே வருகிறது. எங்கே கடைசியாக அது இல்லாமலே போய்விடுமோ என்ற சிந்தனையை குறைத்த மாதம், கார்த்திகை.அரையாண்டு விடுமுறையில் தேனியில் மாமா வீட்டிற்கு செல்வோம். அக்கா தங்கைக்கு கிருஷ்ணன் வேடமிட்டு, தலைக்கு சவுரி வைத்து இன்னும் எதேதோ செய்து ஆடலும் பாடலுமாய் கரையும் எங்கள் விடுமுறை. கும்பக்கரையில் ஆற்றில் குளித்து விட்டு, நெற்றியில் பட்டையை போட்டுக்கொண்டு, ஆற்றங்கரையில் பிள்ளையாரை கும்பிட்டபடி, மாமா திருவாசகம் சொல்ல சொல்ல பின்னால் அதைன் திருப்பி சொன்னபடியே வீட்டிற்கு நடந்து வருவோம். பால்யத்தை நினைவில் கொண்டுவரும்போதெல்லாம் வேறு எதைக்காட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகளே இன்னும் பசுமையாய் பதிந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை என்னுடைய குழந்தைகளையும் நான் சிறுவயது முதலாக கோவிலையும் சிலைகளையும் காட்டித்தான் வளர்க்கவேண்டும் என்பதை வருடம் தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் மாதம், கார்த்திகை.

மார்கழி, என்றதும் எனக்கு இரண்டு விஷயங்கள் உடனே நியாபகத்திற்கு உடனே நியாபகத்திற்கு வரும். ஒன்று, எனது பள்ளி தமிழாசிரியர் கதிர்வேலு அய்யா மற்றும் அவர் சொன்ன ஒரு சங்க இலக்கிய அல்லது குற்றால குறவஞ்சி அல்லது வேறு ஏதோ ஒரு பாடல், செய்யுள் மறந்துவிட்டது, ஆனால் அதன் பொருளும் அதை எங்களுக்கு அவ்வளவு சுவைபட சொல்லி கொடுத்த கதிர்வேலு அய்யாவையும் ஆனால் என்றுமே மறக்க முடியாது. நீங்கள் அனைவரும் எனது கண்ணுக்குள் அல்ல கைக்குள் இருக்கவேண்டும் என்று அழகான காரணத்துடன், இவர் வகுப்பெடுக்கும்போது அனைவரையும் அவரது காலடியில் சுற்றி அமர்ந்துகொள்ளசெய்வார். அந்த சங்க காலத்தின் மார்கழியை சொல்லும் ஒரு பாடல் அது. ஒரு மார்கழி மாதம், அதிகாலை பொழுது, தெருவில் பஜனை செய்தவாறு சிலர் சென்றுகொண்டிருப்பர், அந்த தெரு முழுவதும் அழகாக மாக்கோலமிடப்பட்டிருக்கும் அதன் நடுவே எருவின் நடுவே பூசணி பூ நடபட்டுருக்கும். அதை சுற்றி எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் தோலினால் செய்யப்பட்ட விளக்கில் நெய்யால் தீபம் ஏற்றபட்டிருக்கும். அந்த எலுமிச்சம்பழமும் நெய்யும் கலந்து அந்த தெருவே மணம்கமழ்ந்து கொண்டிருக்கும். இதை சொல்லும் போது அவர் அந்த தெருவிலே நடந்துபோய் கொண்டிருப்பார். கண்களை மூடிக்கொண்டு அவர் இத சொல்லும் போது மார்கழியைவிட அழகாக இருப்பார். அந்த ஊரில் வீடுகளில் வளர்க்கும் பலா மரத்தில் பலா பழங்கள் பழுத்து வெடித்து அதன் வாசம் அந்த ஊரையே ஒரு வித நறுமணத்தில் மூடிகொண்டிருக்கும் என அந்த பாடல் நீண்டு கொண்டேயிருக்கும். இப்பொழுது இதை எழுதும் போது கூட அய்யா சொன்ன ஒவ்வொன்றும் நினைவில் வந்து போகிறது. இனி யாரும் இப்படி அந்த பாடலை உருகி உருகி சொல்லி கொடுப்பார்களா என்பது சந்தேகம்தான். தமிழ் என்று நினைக்கும்போதெல்லாம் ஐயாவும், ஐயாவை நினைக்கும் போதெல்லாம் அவரின் மார்கழியும் நினைவிற்கு வரும், அழகு.மற்றொன்று, எங்கள் காலனி பிள்ளையார் கோவிலும், சாரதா அக்காவும். ஒவ்வொருவருக்கும் பிராத்தனை செய்ய, கோவிலுக்கு செல்ல ஆயிரம் காரணங்கள் உண்டு. எனக்கும் எனது நண்பர்களுக்கும் சிறுவயதில் கோவிலுக்கு செல்ல இரண்டே காரணங்கள்தான். பொங்கல் விநியோகம் செய்யவும் சாரதா அக்காவை பார்க்கவும் தான். பத்தாவது படித்து கொண்டுடிருக்கிறேன், மார்கழி மாதம், அந்த குளிரிலும் எழுந்து குளித்து விட்டு ஆறு மணிக்கெல்லாம் எங்கள் காலனி விநாயகர் கோவிலுக்கு சென்று விடுவேன். நண்பர்களும். சாரதா அக்கா எங்களுக்கு முன்பே வந்து ஈர தலையுடன் உட்கார்ந்திருப்பார்கள். ஏன் பிடிக்கும் என்று தெரியாது, ஆனால் அவர்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய அக்கா என்னை இவன்தான் என் தம்பி, என்று என்னை அறிமுகம் செய்யும்போது, பெரும்பாலும் என்னுடைய பிராத்தனை சாரதா அக்கா என்னை தம்பி என்று கூப்பிட்டுவிடக் கூடாது என்பதாகதான் இருக்கும். நான் கல்லூரி சென்றுகொண்டிருந்த சமயம், சாராதா அக்காவிற்கு திருமணம் என்று கேள்விப்பட்டபோது கூட கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. பூஜை முடிந்த பின்னர் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்குவது எங்களின் பொறுப்பு. பல நேரங்களில் எங்களுக்கு கடைசியாக எதுவும் கிடைக்காத போதும், இந்த பொறுப்பு எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.இப்போதெல்லாம் அப்படி கோவிலுக்கு சென்று, அமைதியாக அமர்ந்து நினைவுகளை அசைபோடக் கூட முடிவதில்லை. கோவிலுக்கு செல்லும் கொஞ்ச நேரத்திலும் செல்போனை அணைத்து வைக்க முடிவதில்லை. எப்போதும் வேலை, பணம் இடையிடையே கொஞ்சம் ஓய்வு என்று போகிறது வாழ்க்கை. எப்போதெல்லாம் பணம் தேடி ஓடிக்கொண்டேயிருக்கிற இந்த வாழ்க்கையில் ஒரு விரக்தி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சரியாக வந்துவிடுகிறது, யாருமற்ற இரண்டங்குல பச்சைப்புல் பெருவெளியில், வானம் பார்த்தபடி படுத்துக்கிடப்பதைப்போல ஒரு அமைதியும், ஆன்ந்தத்தையும் கண்ணை மூடித்திறப்பதற்குள் மனதிற்குள் அமிழ்த்துவிட்டு சென்றிடும் அதிசயம் நிறைந்த, அழகான மாதங்கள் இந்த கார்த்திகையும் மார்கழியும்.
ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்ட ஒரு மீள் பதிவுதான் இது. இந்தமுறையும் கார்த்திகை மார்கழியைப் பற்றி ஏதாவது புதிதாக எழுதத்தான் நினைத்தேன். ஆனால் பால்ய நினைவுகளை தின்று கிரகிக்கும்படியாக எதுவும் புதிதாய் நடந்துவிடவில்லை என்பதே நிதர்சனம். பழைய பதிவாக இருந்தாலும் என்னில் படுமையாய் பதிந்துவிட்ட நினைவுகள். அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.எனக்கு இந்த புத்தாண்டிற்கு ஒரு இனிய செய்தி , என்னுடைய ஒரு சிறுகதை, வம்சி பதிப்பகத்தின் மரப்பாச்சியின் சில ஆடைகள் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. அனுபவமிக்க பதிவர்கள் சென்ஷி, நர்சிம், பா.ரா, கென், செல்வேந்திரன், அய்யனார், ஜியோவ்ராம் இன்னும் பலரின் கதைகள் இடம்பெற்றுள்ள இந்த புத்தகத்தில் என்னுடைய கதையும் இடம்பெற்றிருப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு மூலகாரணமாக இருந்த தோழர்.மாதவராஜ் அவ்ர்களுக்கும் வம்சி பதிப்பகத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இது குறித்த மாதவராஜ் அவர்களின் பதிவு : மரப்பாச்சியின் சில ஆடைகள்

இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில், (வம்சி புக்ஸ்: கடை எண்:214) கிடைக்கும்!

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)


25 கருத்துரைகள்:

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் முரளி!

அடுத்த வருடம் தனி புத்தக வெளியீடு நடத்திடலாம்.

கலக்குங்க!

கிருஷ்ண பிரபு said...

வாழ்த்துக்கள் முரளி.

Romeoboy said...

\\என்னுடைய ஒரு சிறுகதை, வம்சி பதிப்பகத்தின் மரப்பாச்சியின் சில ஆடைகள் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. //

மேட்டர் சூப்பர் .. கண்டிப்பா வாங்கிடுறேன் ..

கனிமொழி said...

வாழ்த்துக்கள் நண்பா...

கார்த்திகைப் பாண்டியன் said...

வழிந்தோடும் அருவியாய் வார்த்தைகள்.. எழுத்துகள் வசீகரிக்குது.. அழகான கட்டுரை நண்பா.. புத்தகத்துக்கு வாழ்த்துகள்.. என்னை மாதிரியே நீங்களும் எஸ்ராவைப் பிடிக்கும்னு சொல்றதைக் கேட்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு..

க.பாலாசி said...

ரொம்ப லேட்டா படிச்சிட்டேன்னு நினைக்கிறேன்.

மார்கழிமாத நினைவுகள் இப்போதும் மனதுக்குள் இருக்கிறது. அதுபற்றி எழுதலாமா வேண்டாமா என்ற எண்ணத்துடன் கொஞ்சம் சோம்பேறித்தனமும் மனதில் ஒட்டிக்கொண்டுள்ளதால் முயன்றுகொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு ஊருக்கும் இதுபோல் சாரதா அக்கா இருப்பார்கள் போல. எனக்கும் இதுபோன்ற தருணங்கள் வாய்த்திருக்கின்றன. நான் இரண்டுவருடங்கள் முன்புவரை காலை 5.30 மணிக்கு பிள்ளையார் கோயிலுக்கு சென்று விளக்குபோடுவேன். அந்த பொழுதுகளை இப்போது தொலைத்திருக்கிறேன். வேலைநிமித்தம் பணிச்சுமை போன்றவைகளால் இன்று காலை 5.30 மணியென்பது நடுநிசிப்போல் உள்ளது.

மனதில் அவ்வப்போது ஆர்ப்பரிக்கும் சில ஆற்றாமைகளையும் காலமாற்றத்தின் பொருட்டு அடக்க பழகிவிட்டோம்(டேன்). மீண்டு(ம்) பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே.

வாழ்த்துக்கள் நண்பா..சிறுகதைக்கு.

சென்ஷி said...

வாழ்த்துக்கள் முரளி.. :)

அன்பரசன் said...

நல்ல பதிவுங்க.

நினைவுகளுடன் -நிகே- said...

வாழ்த்துக்கள் முரளி.

புது வருட வாழ்த்துக்கள்

Sindhan R said...

தமிழிஸ் என் வீட்டு கம்பியூட்டர்ல வேலை செய்ய மாட்டிங்குது ... ஓட்டு போட முடியவில்லை ... தயவுசெய்து சரி செய்து கொடுக்கவும் ...

முரளி அண்ணாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

Sindhan R said...

தமிழிஸ் என் வீட்டு கம்பியூட்டர்ல வேலை செய்ய மாட்டிங்குது ... ஓட்டு போட முடியவில்லை ... தயவுசெய்து சரி செய்து கொடுக்கவும் ...

முரளி அண்ணாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

raman- Pages said...

//வாழ்த்துக்கள் முரளி!

அடுத்த வருடம் தனி புத்தக வெளியீடு நடத்திடலாம்.

கலக்குங்க!//

வெயிலானின் வாழ்த்துக்கள் உண்மையாக, உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

வாழ்த்துகள் முரளி.

ஆனால் வம்சியில நிறைய புத்தகங்கள் இன்னு ஸ்டாக் வரவில்லை என்றார்கள். மீண்டும் நாளை செல்வேன் வாங்கி விடுகிறேன்.

புத்தக கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்...

http://mynandavanam.blogspot.com/2009/12/blog-post_31.html

முரளிகுமார் பத்மநாபன் said...

@வெயிலான்
நன்றி தலைவரே, நீங்க சொல்றது கொஞ்சம் அதிகமா இருந்தாலும் எனக்கு ஆசையாத்தான் இருக்கு

முரளிகுமார் பத்மநாபன் said...

@கிருஷ்ணபிரபு
நன்றி நண்பா

முரளிகுமார் பத்மநாபன் said...

@Romeoboy
தேங்க்ஸ் தல

முரளிகுமார் பத்மநாபன் said...

@கனிமொழி
நன்றி தோழி கனிமொழி

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப்பாண்டியன்
நண்பா, எஸ்.ரா. ம்ம்,,
இன்னைக்குதான் மலைக்கு போயிட்டு வந்தேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள், தலைவரே.

முரளிகுமார் பத்மநாபன் said...

@க.பாலாசி
//மனதில் அவ்வப்போது ஆர்ப்பரிக்கும் சில ஆற்றாமைகளையும் காலமாற்றத்தின் பொருட்டு அடக்க பழகிவிட்டோம்(டேன்). மீண்டு(ம்) பார்க்கமுடியுமா என்பது சந்தேகமே. //
இதில் சந்தேகப்பட என்ன இருக்கு நண்பா. இனி அப்படியொரு காலம் வாய்ப்பே இல்லை.

முரளிகுமார் பத்மநாபன் said...

@சென்ஷி
தல ரொம்ப நன்றி தல

முரளிகுமார் பத்மநாபன் said...

@அன்பரசன்
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@நினைவுகளுடன் -நிகே
நன்றி நண்பா, உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிந்தன்
நன்றி சிந்தன்,

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராமன்
நன்றி ராமன்.

தோழி said...

kathai padithuvitten murli. book romba nalla vanthirukku. vaazhthukkal

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.