நண்பன்
வருடத்தின் இறுதியிலேயே முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால்நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது போல எனக்கு இந்த வருத்தொடக்கத்திலிருந்தே அனுபவப் படுகின்ற ஒவ்வொரு விசயமும் ஏடாகூடமாகவே இருக்கிறது.
எதோ நான் பார்ப்பதற்கு ரொம்ப அழகு என்று இல்லாவிட்டாலும் ஒரு முறை திரும்பி பார்க்கும் அளவிற்காவது இருக்கிறேன் என்று எனக்குள் இருந்த ஒரு சிறு திமிர் என்னை சந்தேகத்தின் பேரில் போலிஸ் அழைத்து சென்றபோது அடியோடு மறைந்துவிட்டது. மகாநதி திரை படத்தில் கமல் ஒரு வசனம் பேசுவார் " ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையையும் கேட்டவனுக்கு தட்டில் வைத்து தருகிறது இந்த சமுதாயம் " என்று. என்னுடைய விசயத்தில் இது அப்படியே தலை கீழ்.
இரண்டாவது விஷயம், என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ரங்கராஜன், இப்போது மனநிலை தவறிய நிலையில் இருக்கிறான் என்பதுதான். ஒரு ஆறு மாதங்கள் முன்பு கல்லூரி நண்பனின் திருமண விழாவின் போதுகூட, தற்சமயம் துபாயில் பணியாற்றி கொண்டிருக்கும் செந்திலிடம் பேசி கொண்டிருக்கும்போது சொன்னேன் " பரவாயில்லைடா மச்சான், நம்ம எல்லா
நண்பர்களும் நல்ல வேலை, நல்ல சம்பளம்ன்னு ஓரளவுக்கு செட்டில் ஆகிட்டாங்க" என்று. ஆனால் இப்படி ஒருத்தன் இருப்பான்னு எங்க யாருக்குமே தெரியாமல் போனது, துரதிஷ்டமானது. நான் அவன் பற்றி கடைசியாக அறிந்த செய்தி, அவன் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக மலேசியா சென்றிருக்கிறான் என்பதுதான். அவனுடைய தற்சமய நிலைமை தெரியவரும் வரை, எங்கள் அனைவரின் நினைவும், இன்னமும் அவன் அங்கேயே இருக்கிறான் என்பதுதான்.
அங்கே அவனுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. அவனுடைய இந்த நிலைமைக்கு குடும்ப சிக்கல்கள் ஏதும் காரணமா? அல்லது போதை சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு காரணமா? என்பது இன்னமும் சரிவர பிடிபடவில்லை. ஆனால் அவனுடன் மலேசியா சென்ற இன்னொரு நபரும் இதே போன்ற நிலையில் இருக்கிறார் என்பதுதான், அவர்களுக்கு அங்கே எதோ நடந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தற்சமயம் அந்த மற்றொரு நபர் சரியான சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார் என்பதை அவரை சந்தித்து பேசி தெரிந்துகொண்டோம். இதில் சொன்ன சில விஷயங்கள் கூட அவர்களின் உரையாடல்களில் பகிர்ந்துகொள்ள பட்டவைதான். நண்பரின் குடும்பத்தில் அவனுக்கு சிகிச்சை செய்யும் அளவிற்கு பொருளாதார நிலைமை இல்லை மற்றும் நண்பரின் ஒத்துழைப்பு இல்லாததாலும் இதுவரை சிகிச்சை செய்யாமல் இருந்திருக்கின்றனர். இப்பொழுது கல்லூரி நண்பர்கள் முன்வந்து அவரது சிகிச்சைக்கு செலவு செய்ய முற்ப்பட்டது அவர்களுக்கு மிக்கவும்மகிழ்ச்சி.
என்னுடைய பயமெல்லாம் சிகிச்சிக்கு பிறகு அவனுடைய நிலை பற்றியதுதான். தற்சமயம் அவனை பாதித்த நினைவுகள் இல்லாமல் போகலாம், ஆனால் சிகிச்சிக்கு பிறகு அவனுக்கு பழைய நினைவுகள் வரலாம். ஒருவேளை இங்கே நடந்த சில பிரச்சனைகள் ஏது அவனுடைய நிலைமைக்கு காரணமாக இருந்தால், அது அவனை மீண்டும் அதே நிலைமைக்கு தள்ளிவிடுமோ என்று. எது எப்படியோ அவனுக்கு தேவை நல்ல உறக்கமும், உணவும், சிகிச்சையும் அதை இப்போதைக்கு கொடுப்போம் பிறகு என்ன தேவையோ அதையும் கொடுக்க முயற்சி செய்வோம்.
நண்பா! நீ விரைவில் குணமடைய எங்கள் அனைவரின் வாழ்த்துகளும் பிராத்தனைகளையும் உரித்தாக்குகிறோம். விரைவில் உன்னையும் எங்களோடு சக மனிதராக சமுதாயமா அடையாளம் காண வேண்டுன் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம்.
யாருக்கு காவல்?
போலீஸ் - காவல் துறை, எனக்கு இதுவரையில் காவல் துறையில் அல்லது காவல் துறையின் மீது இருந்த அத்துணை நம்பிக்கையும் மரியாதையும் துடைத்து எடுக்கப்பட்டுவிட்டது. இனி எந்த காவல் துறைனரை பார்க்கும் போதும் அவர்களை நான் எந்த மரியாதையுடனும் பார்ப்பதாயில்லை.
அந்த இரவு நாங்கள் செய்த ஒரே தவறு படிக்காதவன் படத்திற்கு சென்றதுதான். திரைப்படம் முடிந்து நாங்கள் நண்பர்கள் வாகனங்களை வெளியே எடுத்து வெளியே காத்திருந்த என்னையும் எனது நண்பர் சந்துருவையும் எந்த ஒரு விளக்கமும் இன்றி அவர்களின் வாகனத்தில் ஏற்றி ( எங்களுடன் மொத்தம் இருபத்து பேர், வண்டி நிறைந்தவுடன் ) போலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர். எங்களின் எந்த கேள்விகளுக்கும் அவர்கள் பதில் கொடுக்கவில்லை. ஏன்? ஏதற்கு என்று கூட தெரியாமல் இறுகிய முகத்துடன் சென்றுகொண்டிருந்தேன்.
எங்களை இவ்வளவு மரியாதையுடன் அழைத்து சென்ற பெண் எஸ். ஐ . ஸ்டேசன் வந்தவுடன் எனது வேலை முடிந்துவிட்டது என்பது போல எங்களை இறக்கி விட்டவுடன் அடுத்த இருபது பேருக்கான வேட்டைக்கு கிளம்பிவிட்டார். உள்ளே எங்களை குற்றவாளிகளையும் விட மிகக் கேவலமாக நடத்தினர். மரியாதை என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்க்கும் அளவிற்கு மிகவும் மோசமான கவனிப்பு .
இரவு மணி இரண்டை தொட்டிருந்தது, யாருக்கும் அழைத்து அவைகளை தொந்தரவு செய்யவோ சங்கடப்படுத்தவோ மனமில்லாமல் சரி என்னதான் நடக்கிறது பார்போம் என்ற நிலைமையில் அமர்ந்திருந்தேன். நாங்கள் இருவர் மட்டும் உள்ளே அமர்ந்திருப்பதை கண்டு எனது மற்ற நண்பர்களும் தாமாகவே உள்ளே வந்து அமர்ந்து கொண்டனர். பிறகு கை ரேகை (கிட்டத்தட்ட இருபத்து ரேகை பதிவுகள் ) முகவரி ஆகியவற்றை பெற்றுக்கொண்ட பின்னரே எங்களை அனுப்பினார். இதற்கிடையில் அங்கிருந்த ஒரு ஏட்டு எங்களில் ஒருவரை அழைத்து அவருக்கும் மற்ற மரியாதைக்குரிய அனைத்து போலிஸ் நண்பர்களுக்கும், அவர்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தேநீரை பரிமாரச்செய்தார். என்னை பார்த்து ஒரு மலையாளியாக இருப்பேன் என்று எண்ணிக்கொண்ட அவர் நான் தமிழன் என்று சொல்வதை நம்ப தயாராக இல்லை, நான் போய்த்தான் சொல்கிறேன் என்று திட்டவட்டமாக முடிவு செய்த அவர் ஒரு கட்டத்தில் என்னை அடிக்கவே துணிந்து விட்டார். எதோ நண்பர்கள் புண்ணியத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.
காவல் நிலையத்தில் எங்களை விசாரித்தவர், நாங்கள் திரை அரங்கிளிருந்துதான் வருகிறோம் என்ற பிறகே எங்களை சற்று நம்ம்பத்தொடங்கினார். அதுவரையில் நாங்கள் எதோ நாடு இரவில் கும்பலாக சுற்றிக் கொண்டிருந்ததாகவே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார். நாங்கள் வீடு வந்து சேரும்போது அதிகாலை மூன்று மணி . உண்மையாக என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
ஏன் இவர்களை யாருமே எதிர்க்கவில்லை? நான் உட்பட.
நமக்கு காவலாக இருக்க வேண்டிய காவல் துறையின் மீது பயம் வர காரணம்?
காவல் துறை நமது நண்பன் , இனி யாராவது இந்த வரிகளை உபயோகித்தால் அவர்களின் முதல் எதிரி நானாகத்தான் இருப்பேன். மேலும் இனி நடக்க இருக்கும் அனைத்து காவல்துறை- பொதுமக்கள் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்வேன். என்னால் முடிந்தவரை என் கருத்துக்கள் அவர்களுக்கும் சென்று சேரட்டும்.