முதலாவது கிலுகிலுப்பை

நீண்ட நேரமாக ஒரு காலை நீட்டியும் இன்னொரு காலை மடக்கியும் உட்கார்ந்திருந்ததால் மரத்துபோயிருந்த காலில் தலையணையை போட்டு படுத்துக்கொண்டு "அண்ணா, எப்படியாவது மூணு போட்டுடுன்னா" என்று சொல்லிகொண்டிருந்த தங்கை, "சான்சே இல்லை இவன் எப்படியும் ரெண்டுதான் போடுவான், பாம்புகிட்ட கடிவாங்கி பாதாளத்துக்கு போகப்போறான்" என்று சொல்லிகொண்டிருந்த என் விளையாட்டு எதிரி என் அக்கா, "நல்லதொரு குடும்பம் என்று பாடிக்கொண்டிருந்த டேப் ரெக்கார்டர் இவையனைத்தையும் தவிர்த்து தாயக்கட்டையை கையில் வைத்து உருட்டிக்கொண்டு ஷீலா அக்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன், பரமபதத்தில் எனக்கு ஷீலா அக்கா சொல்வது அப்படியே நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. எனக்கு விளையாட்டு மட்டுமல்ல எல்லாவற்றிலும் அவங்க சொன்ன நடக்கும்.


ம்ம் ... போட்றா! என்ற ஷீலா அக்கா என் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டவராய் "கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம், முதல்ல வைகுண்டம் போகப்போவது நாமதான், எங்க மூணு போடு" என்றார். இனி எனக்கு எந்த கவலையும் இல்லை சொல்லப்போனால் என்ன விழப்போகிறது என்பதில்கூட, அக்கா சொல்லிட்டாங்க இனி மூணுதான்.


என்னுடைய சிறுவயதில் எனக்கு எல்லாமே ஷீலா அக்காதான், மாமா வேலைக்கு போனவுடனே நேரா அவங்க வீட்டுக்கு போயிடுவேன். எப்போ அவங்க வீட்டுக்கு போனாலும் இரண்டு விசயங்கள் நிச்சயம். ஒன்று தங்கபதக்கம் கதைவசனம் சொல்லிகொண்டிருக்கும் டேப் ரெக்கார்டர், இன்னொன்று அக்கா பாடும் சுசீலா அம்மா பாட்டு, சமையலில், தண்ணீர் பிடிக்கையில், கூட்டி பெருக்கையில் என எப்போதுமே எதாவது பாடலை சன்னமாக பாடிக்கொண்டே இருப்பார்கள். என் வீடு அந்த சந்தில் வீட்டுக்கார அத்தையின் வீட்டுக்கும் ஷீலா அக்காவின் வீட்டுக்கும் இடையில் இருக்கும். வீட்டை ஒட்டிய காம்பவுண்ட் சுவரில் கண்ணாடியை மாட்டிவைத்திருப்பர்கள். அக்காவின் உயரத்திலிருக்கும் அந்த கண்ணாடியை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருப்பேன், அப்போதெல்லாம் என்னை இழுத்து பக்கத்தில் நிறுத்தி "இப்போவே என் இடுப்புக்கு இருக்கான், நல்லா உயரமா வருவான், பாருங்க டீச்சர்" என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்வார்கள். இன்னமும் என்னுடைய உயரம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் ஷீலா அக்கா நியாபகம் வந்துபோய் கொண்டுதான் இருக்கிறார்கள்.


"பாவம், நல்ல பொண்ணு, கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது, இன்னும் குழந்தை இல்லையே இந்த புள்ளைக்கு" என்று வீட்டுக்கார அத்தை அம்மாவிடம் சொல்லும்போதெல்லாம் அதன் வீரியம் தெரியாமலேயே ஷீலா அக்காவை பார்த்து 'பாவம் அக்கா' என்று சொல்லிகொள்வேன்.

எதிர் வீட்டில்போய் வெளியில் நின்று ஒளியும் ஒலியும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து அக்காவிடம் புதுபாடல்களை பாடிக்கட்டுவேன். அப்போதெல்லாம் அம்மாவிடம் "ஏன் டீச்சர், ரெண்டுபேரும் சம்பாதிக்கிறீங்க வீட்டுக்கு ஒரு டி. வீ வாங்கலாமில்லையா? பாருங்க புள்ளைங்க எதிர்வீட்டுக்கு போயி வெளிய நின்னு பார்க்குதுங்க" என்று சொல்வார்கள். அக்கா இத்தனை தடவ சொல்லறாங்க டி.வி வாங்கினாதான் என்னன்னு அம்மா மீது கோபமாய் வரும்.
நீண்ட சிரமங்களுக்கு பிறகு அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் கொஞ்சமா குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து காட்டிய வீட்டுக்கு குடிபெயரும்போது எனக்கு சந்தோசத்தைவிட இனி அங்க ஷீலா அக்கா இருக்கமாட்டாங்களே என்ற கவலைதான் அதிகம் இருந்தது.


என்ன இங்க ஒரு ஊர்லதான இருக்கப்போறோம், நெனச்சா வந்து பார்க்க போறோம் என்று சொன்னாலும் நான் அழுவதை பார்த்துவிட்டு ஷீலா அக்காவும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் அழுததற்கு என்னகாரணம் என்று தெரியாது ஆனால் என்னிடம் நிறைய காரணங்கள் இருந்தது.

எவ்வளவு அவசரமான காலை பரபரப்பிலும் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும் என்னை இடுப்பில் தண்ணீர் குடத்தோடு கடந்து போகும்போது சிறிது தண்ணீரை எடுத்து என் மீது தெளித்தவாறே "படிக்கிரியாக்கும்" என்று சொல்லிய ஷீலா அக்கா.

அள்ளி முடிந்த தலைமுடியும் அதில் சொருகிய சீப்புமாய் எதையாவது தாளித்துக்கொண்டே "அடுத்து என்ன பாட்டுடா பாடட்டும் என்று என்று கேட்க்கும் ஷீலா அக்கா,

முதன்முதலாக சைக்கிள் ஊட்டிக் கற்றுக்கொண்டபோது எனக்கு பரிசாக ஜாமென்ட்ரி பாக்ஸ் வாங்கி தந்த ஷீலா அக்கா,

மக்கு மக்குன்னு குட்டி குட்டியே பாடம் சொல்லிகொடுத்த ஷீலா அக்கா,

இன்னும் எவ்வளவோ சொல்ல தகுதியுடைய ஷீலா அக்கா, இனி நான் வசிக்கும் வீட்டின் பக்கத்தில் இருக்க மாட்டார்கள்.

ஆறு வருடங்களுக்கு முன்பு அம்மா ஷீலா அக்காவை பஸ்ஸில் பார்த்ததாக சொன்னார்கள். "அடையாளமே தெரியலைடா, நல்லா குண்டடிச்சிட்டா, அவதான் என்கிட்டவந்து "வேணி டீச்சர்த்தானே!" என்று அறிமுகம் செய்துகொண்டதாகவும் போகும்போது "முரளி இன்னமும் அடம் பிடிக்கிறானா? என்னை பற்றி ஏதாவது கேட்ப்பானா?" என்று கேட்டதாகவும் சொன்னார்கள்.

இதை எழுதும்போது சிரித்துக்கொண்டே எழுதுகிறேன், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகும் என்னை அதே பத்து வயது சிறுவனாகவே நினைவு வைத்திருக்கும் ஷீலா அக்கா, எனக்கு இன்னமும் உங்களை நினைவில் இருக்குறது என்பதற்கு இந்த பதிவே சாட்சி, எனக்கு இப்பொழுது 29 வயது ஆகிறது, நான் முன்பு போல அதற்காகவும் அடம் பிடிப்பது கிடையாது, சொல்லபோனால் நிறையவே விட்டுக்கொடுக்க பழகிக்கொண்டிருக்கிறேன், உங்கள் விருப்பப்படி................. ..........

ஒரு குளம் மற்றும் சில கற்கள்

எல்லோருக்கும் மனதில் ஆயிரமாயிரம் விஷயங்கள் தோன்றிமறைந்த படிதான் இருக்கிறது. எஸ்.ராவின் சொல்வதுபோல, குளத்தில் எறிகிற கல் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்குகிறது, ஆனால் அது ஒன்றைபோல இன்னொன்று இருப்பதில்லை. மேலும் மேற்பரப்பில் அதிர்வுகளை உண்டாக்கிவிட்டு குளத்தின் அடியாளத்தில் உறங்கிக்கிடக்கும் கற்களைப் போல என் மனதிலும் எத்தனையோ மனிதர்கள், சம்பவங்கள், சுக துக்கங்கள், ஏளனம், பாராட்டுக்கள், லாபம், நட்டமென எத்தனையோ கற்கள் விழுந்த வண்ணமிருக்கிறது. எல்லோருக்கும் அப்படியே.

அப்படி என் மனமெனும் குளத்தில் கல் எறிந்தவர்களையும், எறியப்பட்ட கற்கள் உண்டாக்கிய நினைவலைகளை சுருங்க பதியும் முயற்சிதான் இந்த ஒரு குளம் மற்றும் சில கற்கள்.  எறியப்பட்ட கற்கள் பாசிபடிந்து என் மனதின் அடியாளத்தில் உறங்கிகொண்டுதான் இருக்கிறது. அதன் உறக்கத்தை கலைக்காமல் அந்த நினைவலைகளை நினைவில் கொள்ள இந்த பதிவுகள்.

அதுபோல கிலுகிலுப்பை என்றவுடன் நினைவில் வருவது பால்யம். இன்றைக்கு பால்யம் என்றால், கடந்தகாலம். எல்லோருடைய வாழ்விலும் கடந்தகாலம் பதிந்து விட்டு போன சங்கதிகள் ஏராளம். சிலருக்கு கடந்தகாலம் ஒரு பசுமையான நினைவுகளின் தொகுப்பாக இருக்கும், சிலருக்கு ஆறாத ரணத்தை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் நம் கையில் இல்லாதபோதும் கடந்தகாலம், குறிப்பாக பால்யம் என்றுமே நம் மனதில் அழியாத இடத்தை கொண்டிருக்கும்.

அதுபோல என்னுடைய வாழ்வில் என்னை அதிகம் பாதித்த, பாதிக்கச்செய்த அல்லது என்னால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களை, நான் பல நேரங்களில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் சிலசமயம் மெல்லிய சோகத்துடனும் நினைத்துப் பார்ப்பதுண்டு. அப்படிப்பட்ட நினைவுகூறலின் பதிவாக்கமே இந்த கிலுகிலுப்பை. இந்த கிலுகிலுப்பையின் மூலம் நான் அவர்களுக்கு என் நன்றியை, மன்னிப்பை, பாராட்டை, அனுதாபத்தை, ஆறுதலை உரித்தாக்குகிறேன். இவை தவிர இந்த கிலுகிலுப்பை அநேகம் பேருக்கு பால்யத்தின் நினைவுகளை சிறுபுன்னகையுடன் கிளர்ந்தெழ செய்ய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

இதை தொடர்ந்து படிக்கப் போகும் யாவருக்கும் என்னுடைய நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

தங்கையுடையான்

'உரையாடல்: சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

கண்களை மூடியவாறு, தலையணையை ஒட்டி உயர்ந்திருக்கும் சன்னலின் விளிம்பில் என்னுடைய மூக்கு கண்ணாடியை தேடி கிடைக்காதபோதுதான், அங்கே சன்னல் இல்லை என்பதை விட நான் என் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக யோசித்து கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டபோதுதான் விடிந்திருந்தது தெளிவாய் தெரிந்தது.


என்னுடைய எந்த காலைப்பொழுதும் இப்படி விடிந்ததில்லை. சூரியனின் இளம்கதிர்களின் வெளிச்சத்தில் பச்சை பசேலென்று கண்ணுக்கெட்டியவரை வயல் விரிந்திருந்தது. எனக்கு முன்னால் எழுந்து உட்கார்ந்திருந்த வினோத்தின் முதுகில் கட்டிலின் கயிறு பதிந்திருந்தது. வரிவரியாக குறுக்கும் நெடுக்குமாக சரிவர சொல்லமுடியாதபடி, சாட்டையால் அடித்துக் கொள்பவர்கள் ஞாபகத்தில் வந்து போனார்கள்.
நினைவுகளை நிகழ்காலத்திற்கு, பிறண்ட ஞாபகங்களிருந்து "என்னப்பா இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சிட்டீங்க?” என்ற வினோவின் அம்மாவின் கேள்வி திருப்பியது.
இல்ல்லிங்கம்மா, எப்போதும் இந்த நேரம் முழிச்சிருவோம் என்று நானும் கார்த்தியும் ஒரு சேர சொன்னது, பொய்…..


"இங்க பக்கத்தில ஒரு வாய்க்கால் இருக்கு, அங்க போய் குளிக்கலாம், துண்ட எடுத்துக்கிட்டு கிளம்புங்கடா" வினோத்.


கேள்வி எதுவும் கேட்காமல் வினோவின் கட்டளைக்கு பணிந்தோம்.
”ரொம்ப நாளாச்சுல்லடா கார்த்தி, இந்த மாதிரி சுத்தமான காத்த சுவாசிச்சு, வாவ் சூப்பர்டா" என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, "இங்க பாருடா கிராமத்து குயில்கள் குளிக்கிற அழகை , அடடா .... ..... ..." குளித்துக்கொண்டிருந்த பெண்கள் கார்த்தியின் மோசமான வர்ணிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர்.

"சும்மா வாடா, இங்க வந்ததிலேருந்து உன்னோட தொந்தரவு தாங்க முடியல. பாரு இப்பவே வினோத் கடுப்பாயிட்டான், இன்னும் நாலஞ்சு நாள்ல அவன் தங்கை கல்யாணம், நாம கல்யாணத்துக்கு வந்திருக்கோம், வந்த இடத்தில வாயக்குடுத்து வாங்கி கட்டிகாத்த, அவ்ளவுதான் நான் சொல்லுவேன்.


"அட போடா, அவனுக்கு கோவம் வருதுங்கிறதுக்காக நான் சொன்னது உண்மையில்லாம ஆயிடுமா என்ன?"


"யப்பா சாமி, ஊருக்கு போறவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் பேசுற மாதிரி இல்ல"
வினோத்தின் வீடு நல்ல விசாலமான பெரிய வீடுதான், ஆனாலும், கல்யாண வீடில்லையா? சொந்த பந்தங்கள், வினோத்தின் தங்கையின் தோழிகள் என வீடே நிரம்பியிருந்ததால், எங்களின் கிடை தோட்டத்தில், கயிற்றுக்கட்டிலில் தான். இதை சொல்லும்போது என்னிடம் எந்த சங்கடமும் இல்லை, சொல்லப் போனால் எனக்கு அது ரொம்பவே பிடித்திருந்தது.
மாலை, ஒடித்து போடப்பட்ட மாங்கிளைகளிலிருந்து தோரணத்திற்காக மாவிலைகளை கிள்ளிக்கொண்டிருந்தோம். தோட்டத்தை சுற்றிக்காட்ட வினோவின் தங்கை செல்வி தனது தோழிகள் புடை சூழ வந்துகொண்டிருந்தாள்,


"அண்ணா, இவங்கதான் என்னோட பிரெண்ட்ஸ், இவ கவிதா, இவ லட்சுமி, இவ பிரியா, .... .."
அவர்களின் அறிமுகத்திலிருந்து என்னுடைய கவனமெல்லாம் நான் வெற்றுடம்புடன் இருந்ததால் கழற்றிபோட்ட பனியனிலேயே இருந்தது.


"இவ்வ்ளோதான உன் பிரெண்ட்ஸ்?"


"இல்லையில்லை, இவங்க ரெண்டு பெரும் என்னோட ஒரே ஆபீஸில் வேலை செய்றவங்க, மத்தவங்கெல்லாம் நேர மேரேஜுக்கு வந்துடுவானுங்க"
அவளுடைய தோழி ஒருத்தி, "ஏண்ணா, அவங்க எதுவும் பேசமாட்டாங்களா? என்றாள்.


காத்திருந்தவன் போல கார்த்தி ஆரம்பித்தான் "ஏன் பேசாம? வாங்க வந்து இப்படி உட்காருங்க பேசலாம்"

சிறிது நேரத்திலேயே அந்த இடமே கலகலவென்றிருந்தது, கார்த்தி பெண்களிடம் பேசுவதை பார்க்குபோது எனக்கு பல நேரங்களில் பொறாமையாக இருக்கும், எப்படித்தான் இவ்ளோ சீக்கிரம் பெண்களிடம் தன்பால் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறான் என்று. எனக்கு தங்கைகள் இல்லையே என்கிற வருத்தம் வந்து போனது. கையிலிருந்த புத்தகத்தை பார்த்தவாறே அவர்களின் உரையாடல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பெண்களிடம் பேசுவது எப்படி? என்று அவனிடம் பாடமே படிக்கலாம், அந்த அளவிற்கு சினிமா, பாட்டு, டான்ஸ் என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தான்.


கிளம்பும்போது, ஒரு பெண் சொன்னாள், பேச மாட்டிங்களா?ன்னு கேட்டது தப்புதான், அதுக்காக இப்படியா? சரி விநோத்தண்ணா வர்றோம், அப்புறம் உங்க பேரு கார்த்திதானே" என்றாள்.

ஆமா… ஆமா, நீங்க என்னை போடா வாடான்னு வேணும்னாலும் கூப்பிட்டுக்கோங்க. ஆனா, இந்த அண்ணா மட்டும் வேண்டாம் என்றான்.


அவர்கள் சென்ற பிறகு, அப்போது கிலுக்கென்று சிரித்த பெண்ணின் பெயர் ஆனந்தி என்றும், பட்சி லுக் விடுதுடா! என்பதையும் அவனே சொன்னான்.

அடுத்த ஓரிரு நாட்களிலேயே கார்த்தியையும் அந்த பெண்ணையும் ஒரு சேர பார்க்க முடிந்தது. சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.


"என்னடா நடக்குது இங்க?" என்று அன்று இரவு கார்த்தியிடம் கேட்ட போது,
"பட்சி மடிஞ்சிடும்போல இருக்கு"


"டேய், வேணாம். அவன் தங்கச்சியோட பிரெண்டுடா அது"


"அதனால என்ன? நானா எதையும் ஆரம்பிக்கலையே"


"டேய், அது கிராமத்துபொண்ணுடா, கையில இருக்கிற இங்கிலீஸ் பேப்பரப் பார்த்தாலே மலைச்சு போயி இதெல்லாம் படிப்பீங்களா?ன்னு கேட்குற வெகுளிப் பொண்ணுடா, அது ஏதோ எதார்த்தமா பழகப்போய், நீ அத வேறமாதிரி பார்க்காதடா"


"இன்னும் ரெண்டு நாளில், செல்வி கல்யாணம், இங்க நாம விருந்தாளிகள், அவ்ளோதான் நான் சொல்லுவேன்" என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துகொண்டேன். எங்க வந்தாலும் உன்னோட ஒரே பஞ்சாயத்தா போச்சுடான்னு படுத்துக் கொண்டே முனகினான்.


அடுத்த நாள், நானும் வினோவும் பக்கத்து ஊரில் இருக்கும் அவனது பாட்டியையும் தாத்தாவையும் அழைத்துவரப் புறப்பட்டோம். எவ்வளவு வற்புறுத்தியும் கார்த்தி வரவேயில்லை. நாங்கள் திரும்பி வரும்போது இருட்டிவிட்டது, இரவு சாப்பிடும்போது கூட கார்த்தியைக் காணவில்லை.


"இந்த பய எங்க போனான்னு தெரியலையே, சரி சீக்கிரம் படு காலையில முகூர்த்தம் நாம ரொம்ப சீக்கிரம் எழுதிரிக்கணும்" என்று வினோத் சொல்லிவிட்டு படுத்து விட்டான். எனக்கு தூக்கமே வரவில்லை. கொஞ்ச நேரத்திலேயே பூனை மாதிரி வந்து பக்கத்தில் படுத்துகொண்டான்.


"எங்கடா போயிருந்த?"


"வயிறு சரியில்லை, அதான்"


"பொய் சொல்லாத, எங்க போயிருந்தனு உண்மையை சொல்லு"


"ஸ்ஸ்.... சத்தம் போடாத, டென்சன் ஆவாத, மேட்டர் முடிஞ்சது, அவ்ளோதான்"


"அடப்பாவி, நான் அவ்ளோ சொன்னனேடா"


"சும்மா பஞ்சாயத்து பண்ணாம படு, இப்பவும் நானா அவள பலவந்தப்படுத்தல,

எல்லாம் அதுவா நடந்தது"


"கருமம்! கருமம்!"

கல்யாணம் முடியும் வரை ஆனந்தியை நான் பார்க்கவே இல்லை. இவனோ எதுவுமே தெரியாத மாதிரி சாதுவாக இருந்தான், எனக்குத் தான் படபடவென்று வந்தது. இறுக்கம் தாங்காமல் ஒரு பெண்ணைக் கூப்பிட்டு, ”எங்க அந்த பொண்ணு ஆனந்தியை காணோம்?” என்றேன்.


"அவளுக்கு நேத்திலிருந்து ஒரே வயித்த வலிண்ணா. அதான் கல்யாணத்துக்கு வரலை, ஏன்'ணா?"


"இல்லைம்மா சும்மா காணாமேன்னு கேட்டேன்"நாங்கள் ஊருக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒருநாள் வினோத், "டேய் நேத்து செல்வி பிரெண்டு ஆனந்தி போன் பண்ணி உன்னோட நம்பர் கேட்டா. குடுத்திருக்கேன். ஏதோ, இங்க காலேஜ் பத்தி விசாரிச்சு சொல்றேன்னு சொல்லியிருந்தியாமே" என்று கார்த்தியிடம் சொன்னான்.


எனக்கு அவள் அதற்காக கூப்பிடவில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. சில மணி நேரங்களில் போனும் வந்தது. எடுத்தவுடனே அழுது கொண்டே பேசினாள்.


“நான் போன் பண்ணா கார்த்தி எடுக்கவே மாட்டேங்குறாருண்ணா. ப்ளீஸ்னா கூப்பிட சொல்லுங்கண்ணா. ஊருக்கு போய் அப்பா அம்மாவிடம் பேசிட்டு கூப்பிடறேன்னு சொன்னார்ண்ணா.

என்று அடிக்கொரு அண்ணா போட்டு பேசினாள். சரிம்மா! நான் பேசுறேன் என்று சொல்லி போனை அணைத்தேன்.


நான் என்ன பேசியும் அவன் மசியவில்லை, "டேய் அது சும்மா டைம் பாஸ்டா! நீ என்ன கோத்துவிட்டுடுவ போல இருக்கு. நான் பாத்துக்கிறேன். நீ கண்டுக்காத" வார்த்தைகள் மிக அலட்சியமாக வந்து விழுந்தது.


அடுத்த ஓரிரு நாட்களில் எனக்கும் கார்த்திக்கும் ஒரு புராஜக்ட் விசயமாக பெங்களூர் செல்ல ஆர்டர் வந்திருந்தது. மதியம் வினோத் படபடப்பாக ஓடிவந்து "டேய் அந்த ஆனந்தி இல்ல…. வயித்தவலி தாங்க முடியாம தற்கொலை பண்ணிகிட்டாலாம்டா"


"யாரடா .... அந்த ..."


"ஆமாம்! செல்வி பிரெண்டு. நான் கிளம்புறேன் கார்த்திட்டையும் சொல்லிடு, நீங்க ஏதும் வரீங்களா?"


"இல்லை ..... நீ போ..."அவன் சென்ற சிறிது நேரத்தில் முகம் நிறைய சிரிப்புடன் மேனேஜர் அறையிலிருந்து வெளிப்பட்டான் கார்த்தி.


"மச்சான், நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே புராஜக்ட், ரெடி, ஸ்டார்ட்" என்றான்.என்னால் பலம் கொண்டவரையில் அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை. ஏதும் பேசவில்லை அவனிடம்.


கண்களை மூடியவாறு தலையணையை ஒட்டி உயர்ந்திருக்கும் சன்னலின் விளிம்பில் என்னுடைய மூக்குக் கண்ணாடியை தேடி எடுத்து போட்டுக் கொண்டிருக்கும்போது அம்மாவின் குரல் ஓங்கியது.

"எல்லாம் உங்கள சொல்லணும், நல்ல வேலை. கை நிறைய சம்பளம். வேற என்ன வேணுமாம் உங்க புள்ளைக்கு?. திடுதிப்புன்னு நல்ல வேலைய உட்டுட்டு வந்து நிக்கிறான். நீங்க ஏன்னு கேக்க மாட்டீங்களா?"


ஆனந்தியின் "அண்ணாவும்" கார்த்தியின் "மச்சானும்" மாறி மாறி என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.

கிணற்றடியில் உட்கார்ந்திருந்த போது, அப்பா மெல்ல என்னை உலுக்கி கேட்டார் "என்னடா ஆச்சு? ஏன் வேலைய விட்ட?


என்னையும் அறியாமல் அப்பாவின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கி விட்டேன்.
"டேய்.. என்னடா இது?"


"என்ன கேட்டுட்டேன்னு இப்படி ......."


"சரி விடு, வேற நல்ல வேலையா ....."


"ஏய், இங்க பாருடி, பாவம் புள்ள ஏதோ பிரச்சனையில இருப்பான் போல…..

எதையாவது கேட்டு அவன தொந்தரவு பண்ணாத"


இன்னும் நான் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்.

காலை ராகம்

மூன்று வருடங்களுக்கு முன்பு எதேட்சசயாக சேனலை திருப்பிகொண்டிருந்தபோது ஸ்டார் மூவீஸ் சேனலில் ஷபானா ஆஷ்மி மைக்கை பிடித்துக்கொண்டு "தாயே யசோதா" என்று பாடிக்கொண்டு இருந்தார். என்னையும் அறியாமல் எனது விரல்கள் ரிமொட்டிலிருந்து விலகிக்கொண்டன. ஓரிரு நிமிடங்களில் பாடலும் முடிந்தது படமும் முடிந்தது. மகாகனபதி என்று ஒரு பெண்குரல் ஒலிக்கஎழுத்துக்கள் மேல் நோக்கி நகரத்தொடங்கின. அருமையான இசையமைப்பு மற்றும் குரல் இன்னும் கேட்க்கவேண்டும் என்பதுபோல.


அது நான் உலகத்திரைப்படங்களை பார்க்க ஆரம்பித்த ஒரு சமயம். என்னுடைய நண்பர்கள் பலரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன் ஆனால் ஒருவரிடமும் ஓரு வழியாக தெளிவான தகவலே இல்லை. Torrent, Rapidshare இப்படி எந்த தல அறிமுகமும் இல்லாத சமயமாதலால் என்னால் அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கொஞ்சம் சினிமா இசை அறிவு உள்ளவர்களிடம் பேசும்போது தாயே யசோதா படலை பாடிக்காட்டி கேட்டதும் உண்டு. ஒரு வழியாக நண்பன் பெரி மூலமாக அது Morning Raaga என்கிற திரைப்படம் என்பதை அறிந்தேன். திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த ஆவல் அது கிடைக்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனது, அனால் எப்பொழுது எந்த கேசட் கடைக்கு சென்றாலும் ஆடியோ கேசட் கிடைக்குமா என்று தேடிப்பார்ப்பது உண்டு. கடைசியாய் அருண் மூலமாக எனக்கு கிடைத்தது. அருமை.
கர்நாடக சங்கீதம் கேட்ப்பவர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கும், கர்நாடக இசையையும் மேற்க்கத்திய இசையையும் கலந்து "Fusion" இசையாக கொடுத்திருப்பார்கள் இசையமைப்பாளர்கள் மனிசர்மாவும்,


அமித்தும். பாடல்கள் கைக்கு கிடைத்த பலமாதங்களுக்கு என்னுடைய அலுவலகத்தை திறந்தவுடன் "காலைராகம்" தான். அதன் பிறகு அந்த படத்தை பார்க்கவேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை.

நேற்று என் நண்பருக்காக "On the Water Front" என்ற திரைப்படத்தை தேடிக்கொண்டிருந்தபோது தற்ச்செயலாக இந்த படத்தை பார்த்தேன். உடனே தரவிறக்கம் செய்து நேற்றுத்தான் முழுமையாக பார்த்தேன். நல்ல படமும் கூட. ராஜீவ் மேனனின் கேமரா அந்தகால ஆசியன் பெயின்ட், ஓல்ட் சிந்தால் விளம்பரங்களை நியாபகப்படுத்தின. சிவந்த மண்ணும் பச்சை பயிர்களும் நீல வானமும் அவரது கேமராவின் மூலமாக இன்னும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

அதிலும் top angle ஷாட்டில் காண்பிக்கும்அந்த வீடு அப்படியே எங்களது பூர்வீக வீட்டை நியாபகப்படுத்தியது. சுற்றிலும் ஓடுகள் வேயப்பட்ட சதுரவடிவ கூரையின் நடுவில் முத்தம், முத்தத்தின் நடுவே ஒரு துளசிமாடம் அதை ஒட்டிய ஒரு வேப்பமரம். சிறுவயதில் என்னுடைய இருகைகளாலும் கட்டி பிடிக்க முடியாதபடி பருத்திருக்கும் மரத்தூண்கள், மடக்கு கைகளோடு கூடிய நாற்காலிகள், பூஜை அறையின் முன்பாக நிமிர்த்தி வைக்கப்பட்டிருக்கும் தம்புரா என எனது பால்ய நியாபகங்கள் அனைத்தையும் பசுமையாய் நினைவுகூர செய்த Morning Raaga.
பெருசா கதையெல்லாம் எதிர்பார்த்து போக வேண்டாம் அல்லது பார்க்க வேண்டாம். குளுமையான காட்சியமைப்பு இனிமையான இசை இப்படி மற்ற எந்த விசயமும் உங்களை ஏமாற்றாது, அவசியம் பாருங்கள் அல்லது கேளுங்கள்.


மற்ற சில டெக்னிக்கல சமாச்சாரங்கள்:

எடிட்டிங் - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - ராஜீவ் மேனன் இயக்கம் - மகேஷ் தட்டாணி இசை - மணி சர்மா, "மாதே" மற்றும் "தாயே யசோதா" என இரண்டு பாடல்களையும் சுதா ரகுநாதன் பாடியிருக்கிறார்.

"ஓட்டு" போடுங்கள் அல்லது "ஓ" போடுங்கள்

அவர் உங்களின் நம்பிக்கைக்குரியவராக இருக்கலாம், உங்களின் நபராக இருக்கலாம், நல்லவராக இருக்கலாம், கடந்த ஆட்சியில் நன்மை செய்தவராக இருக்கலாம், அல்லது கடந்த ஆட்சியின்போது நடந்த பிழைகளை தட்டி கெட்டவராக இருக்கலாம். புதியவராக இருக்கலாம். உங்களின் சமூகத்தவராக இருக்கலாம். இளைஞராக இருக்கலாம், படித்தவராக இருக்கலாம் இல்லை எப்படியோ ஒருவகையில் உங்களின் கவனிப்பை பெற்றவராக இருக்கலாம். இப்படி யாராக வேண்டுமாலும் இருக்கலாம். ஆனால் அவர் நீங்கள் தேர்ந்தேடுத்தவர்களாக இருக்க வேண்டும்.


ஆகவே உங்கள் பொன்னான வாக்குக்களை கொடுத்து நம்மை சுரண்டி திண்ண யாருக்கு அதிக உரிமையும், அதற்கான தகுதியும் இருக்கிறது என்று நாமே முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது, ஆம் நாளை வாக்கு பதிவு.சிந்தியுங்கள் தோழர்களே! உங்களின் ஒவ்வொரு வாக்கும்தான் நம் தலை விதியை நிர்ணயம் செய்ய போகிறது. நிச்சயம் ஒட்டு போடுங்கள், வெறும் 50-50% வாக்குபதிவே நடந்து, நூறில் ஐம்பத்து பேர் மட்டுமே வாகளித்து அதில் முப்பது சதவிகிதம் வாக்கு பெற்று ஆட்சி அமைப்பவர் மீதமுள்ள எழுபது சதவிகிதம் பேரின் விருப்பத்திற்கு எதிரானவர் இல்லையா? அவர் எப்படி நம்மை ஆள முடியும். விருப்பமில்லாத எழுபது பேருக்கும் சேர்த்து அவர்தான் தலைவர். இது இன்னமும் தொடர்கிறது. நிச்சயம் இது மாற்றப்படவேண்டும். யாரும் சரியில்லை என்று வாகளிக்காமல் இருந்து விடாதீர்கள், உங்களுக்காகவே இருக்கிறது ஒரு வழி. 49- O. சரி 49 -ஒ போடுவதால் என்ன பயன்?


ஞானி " ஒட்டு போடாமல் இருப்பதை விட 49 ஒ போடுவதுதான் சிறந்தது. எனென்றால் எந்த வேட்பாளரையும் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை அவர்களுக்கு உணர்த்தும் ஒரே வழி இதுதான்." "ஒவ்வொரு தொகுதியிலும் 5000 பேர் 49 ஒ போடுவதால் அரசியல் காட்சிகளுக்கு ஒரு பயம் வரும். ஒவ்வொரு தொகுதியிலும் 5000 ஓட்டுக்கள் வைத்திருக்கும் சாதிக்கட்சிக்கு 20 திலிருந்து 30 சீட்டு வரை கொடுக்க தயாராயிருக்கும் அரசியல் கட்சிகள் அந்த அளவுக்கு 49 ஒ இருப்பது தெரிந்தால் முதல் வேலையாக அந்த தொகுதிக்கு நல்ல வேட்ப்பாளரை நிறுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படும்.""ஆனால், இவ்வளவு அகிம்சையான ஆயுதமாக 49 ஒ தங்கள் கையில் இருப்பதை மக்களே இன்னும் அறியாமல் இருக்கிறார்கள்" என்கிறார்.
ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள், போட்டியிடுகின்ற வேட்ப்பாளர்களில் ஒருவர்கூடவா நமக்கு நன்மை செய்யாமலிருக்க போகிறார்? அவரை தேடுங்கள் பிறகு வாகளியுங்கள். ஆனால் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்.


"ஓட்டு" போடுங்கள் அல்லது "ஓ" போடுங்கள்


இந்த தேர்தலில் என்னனை கவர்ந்த விஷயங்கள்.

1. வினைல் போர்டு கலாச்சாரம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்தது

2. கூம்பு ஒலிபெருக்கிகளைகொண்டு " அன்பான வாக்காள பெருமக்களே!" என்று காதை கிழிக்கும் அவலம் வெகுவாக குறைந்துள்ளது.

3. எப்போதும் போல ஒருவரை ஒருவர் காட்டிகொடுத்துகொள்ளும், புத்திசாலித்தனம்.

4. என்றைக்கும் இல்லாமல் இளைஞர்கள் அதிகம் அரசியல் பேசுவது.


பிடிக்காத ஒரே விஷயம்.

சன் டி.வி, கலைஞர் டி.வி. மற்றும் ஜெயா டி.வி. செய்திகள். மக்களை குழப்ப இவர்கள் இருவர் போதும். மொத்தத்தில் உண்மைகள் அறவே மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட செய்திகள். அதிலும் இவர்கள் "ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே" என்று பாட்டை போட்டு பண்ணுகிற காமெடி, யப்பா சகிக்கலை.

பேருந்து பய(ண)ம்

இரண்டு பஸ் மாறி கிட்டத்தட்ட ஆறு மணிநேர பிரயாணம் முடிந்து கிட்டத்தட்ட விடுமுறைக்கு பின் பள்ளிசெல்லும் சிறுவனின் அலுப்போடு நான் காட்டுப்புத்தூர் வந்திறங்கும்போது மணி 11 இருக்கும். காடுவெட்டிக்கு போக இன்னும் ஒரு மணிநேரம் போகணும்.

"அப்பா போயிட்டார்டா, மாப்ள" உடைந்த குரலில் வெள்ளியங்கிரி போனில் கதறியபோது எதையும் யோசிக்கவில்லை நீ போன வை நான் உடனே கிளம்பி வரேன்னு சொல்லிட்டேன். வரும்போது கொஞ்சம் பணம் எடுத்துட்டு வாடா, வெள்ளியங்கரி. ஏற்க்கனவே இந்நேரத்திற்கு ஒருமுறை இங்கே வந்திருக்கிறேன் என்பதால் உடனே கிளம்பிவந்துவிட்டேன். கொஞ்சம் யோசித்திருந்தால் இப்படி நேரங்கெட்ட நேரத்தல கிராமத்தில வராத பஸ்சுக்கு காத்திருக்க வேண்டியிருக்காது.

இரவு நேரம் என்பதால் பேருந்து நிலையத்தில் ஜனநடமாட்டமே இல்லை. குளிர் தனது நீண்ட கரங்களால் ஊரையெ இருக்க அணைத்திருந்தது. ஒரு தம்மை எடுத்து பத்தவச்சிகிட்டு சுத்தியும் நோட்டம் விட்டேன். ம்ம். ஒரு நாய் குப்பை தொட்டி அருகே எதையோ கவ்வி இழுத்துகொண்டிருந்தது. ஒரு சிலர் ஆங்காங்கே தூங்கிகொண்டிருந்தனர். அரை மணி நேரமாகியும் ஒரு பஸ்ஸையும் காணலை. தேவையில்லாமல் வெள்ளியங்கிரி அப்பாவின் மீது கோபம் வந்தது. நேரம் கிடைக்கலையா? இவரு சாவறதுக்கு.

"ஏன் தம்பி மணியவே பார்த்துகிட்டு, வண்டி வர நேரந்தான், இப்போ வந்திரும் "
திடுக்கிட்டு போய் குரல் வந்த திசையில் பார்த்தால் இதுவரையில் வெறும் சாக்கு மூட்டை என்று நம்பிக்கொண்டிருந்த குதிருக்குள்ளிருந்து ஒரு பெரியவர் பீடியை எடுத்து பற்றவைத்து கொண்டிருந்தார். "நல்லவேலை தாத்தா, நீங்களாவது இருக்கீங்களே. பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம மண்டை காஞ்சிகிட்டு இருந்தேன்."
" இங்கன ஆறு ஊருக்கும் இது ஒண்ணுதான் கடைசி வண்டி, எங்கனயாவது லேட்டாயிருக்கும்.
"ஆமா தம்பி எங்க போறீங்க?""காடுவெட்டிக்கு"
"அட நானும் அங்கதான் போகணும், தம்பி தோ, ஒரு பஸ்சு வருதுபாரு, என்ன நம்பரு?"
"ம்ம் 13 ஆம் நம்பர்""அதேதான், தம்பி இந்த மூட்டய ஒரு கை புடிப்பா"

எப்போ பஸ்சுல ஏறினாலும் அடிச்சு புடிச்சு ஏறி ஜன்னல் ஓரமா சீட்ட பிடிப்பதிலேயே கவனமாய் இருக்கும் எனக்கு அன்று பஸ்சில் ஏறியது வித்தியாசமான அனுபவம். ஒரே ஒரு சீட்டை தவிர மற்ற எல்லா ஜன்னலோர சீட்டுகளும் காலியாகவே இருந்தது. மொத்தமாகவே பஸ்ஸில் பத்து பன்னிரண்டு பேருதான் இருப்பாங்க போல இருந்தது. பெரியவர் கண்டக்டரிடம் ஏன் இவ்வளவு நேரம் என்றார். கண்டக்டர், வழியில ஒரு ஆக்சிடென்ட் அதான் என்றார். ம்ம் இவனுகளுக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பியவாறு மூட்டையை காலால் நகர்த்திக்கொண்டு பின் சீட்டை நோக்கி நடந்தார். மூட்டையை வாகாக வைக்க பெரியவர் கடைசி சீட்டிலேயே உட்க்கார்ந்து விட்டார், நானும் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து விட்டேன்.

இந்த பஸ்சே இப்படிதான் தம்பி அடிக்கடி ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணியவாறே இருப்பானுக போன மாசங்கூட நம்ம ஊரு பசங்க மேல வண்டிய உட்டு ஒரு பையன் பாவமா அந்த இடத்திலேயே செத்துபோயிட்டான். என்ன பண்ணறது இந்த ஊருக்கு வர ஒரே வண்டி இதுதான் அதனால உட்டுவச்சிருக்கோம். " அது சரி, அப்புறம் தம்பி, என்ன விசயமா காடுவேட்டிக்கு போறீங்க?"
"வெள்ளியங்கிரி வீட்டுக்கு"
"ஒ வாழமண்டி பிரகாசத்தொட சாவுக்கா? அவரு மவனு நீங்களும் சிநேகிதன்களோ?"
"ஆமாங்க தாத்தா"
"பாவம் நல்ல மனுஷன் காலையில்கூட நல்லாத்தான் பேசிகிட்டு இருந்தான், திடீர்ன்னு ... .... ""திடீர்ன்னு என்ன?"
"பேயடிச்சு போயிட்டான்"
"பேயடிச்சா?"
"பயப்படாதீங்க தம்பி, எங்க ஊர்ல இப்படி திடுதிப்புன்னு செத்து போறவங்கள இப்படி சொல்லறதுதான் வழக்கம்"
தூக்கம் கண்களை சொருக "நல்ல வழக்கம் போங்க" என்று மனதில் முனகிக்கொண்டு தலையை ஜன்னல் கம்பியில் வைத்தவாறு தூங்க முயற்சித்தேன். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் வைத்த மூட்டையின் காரணமாக சரியாக உட்கார முடியவில்லை. அதை கவனித்த பெரியவர், " எனக்குத்தான் விதி நீயும் ஏம்ப்பா சிரமபடுற, போ போயி முன்னால உட்கார்ந்துக்கோ, பாரு உன் சட்டையெல்லாம் பஞ்சு பஞ்சா இருக்கு."
"இல்ல தாத்தா, பரவாயில்லை"
"அட போப்பா அதான் இத்தன சீட்டு இருக்கே நல்லா விசாலமா உக்காரு.
"விட்டா அடிச்சுகூட துரத்திடுவாரோன்னு பயந்து! முன்னால பொய் உட்கார்ந்தேன், எனக்கு முந்தய சீட்டில் மட்டும்தான் மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். மற்ற எல்லா சீட்டிலும் அன்கோண்டும் இங்கொன்றுமாய் இருந்தனர். தகர டப்பாவை உருட்டி விட்டமாதிரி டம டமன்னு ஒரே சப்தம். ஜன்னல் கண்ணாடியை திறந்து வச்சாலாவது கொஞ்சம் சப்தம் குறையும் என்று நினைத்தவாறே கண்ணாடியை திறக்க முற்ப்பட்டபோது, சின்ன வயசில் சிலேட்டில் எழுதும்போது சாக்பீசின் இடையில் கல் வந்தால் ஒரு சப்தம் வருமே அதைபோல பலமடங்கு சப்த்தம் வந்தது. முன்னால் உட்கார்ந்திருந்த மூவரும் ஒன்று சேர திரும்பி பார்த்தனர். அவர்களில் ஒருவர் கர்ண கொடுரமாக இருந்தார். மற்றவர்களும்கூட தலையில் முகத்தில் என பல வெட்டுக்காயங்களுடன் இருந்தனர். சாரிங்கன்னு சொல்லிட்டு படக்குன்னு வெளியே பார்வையை திருப்பிவிட்டேன். அப்போதுதான் கவனித்தேன் ஒரு மோசமான அருவருக்கத்தக்க நாற்றம் அவர்களிடமிருந்து, ஏதாவது சாராயம் மாதிரி எதையாவது குடிச்சிருப்பானுங்க நினைச்சிக்கிட்டேன். கடைசியா இப்படி ஜன்னலோரமா உக்கார்ந்து நிதானமா பின்னால போற மரங்களையும் தூரத்தில தெரியிற கிராமத்து வெளிச்சங்களையும் பார்த்துக்கொண்டு பயணித்தது எப்போது என்று யோசித்துக்கொண்டே பயணகாற்றை நன்றா இழுத்து சுவாசிக்க தொடங்கினேன்.

திடீரென நியாபகம் வந்துவிட, பின்னால் திரும்பி "தாத்தா, காடுவெட்டி வந்தா சொல்லுங்க தூங்கிடபோறேன்னு சொன்னேன். முன்னால் இருந்த மூவரும் நாங்களும் அங்கதான் இறங்கனும், வந்தா சொல்ல்றோம் அப்படீன்னு கோரஸா சொல்ல நான் அப்படியே கண்ணமூடி தூங்க முயற்சி பண்ணினேன். எவ்வளவு நேரம் தூங்கினேன்னு தெரியாது. யாரோ கூப்பிடுவது மாதிரி இருக்க மெதுவாய் கண்திறந்து பார்த்தேன். "தம்பி அடுத்த நிறுத்தத்தில நாம இறங்கனும்" பெரியவர் பாந்தமாக என் தோளில் தட்டியவாறு சொல்லிகொண்டிருந்தார்.

காடுவேட்டிஎல்லாம் இறங்கு இறங்கு என கண்டக்டர் முன்னால் நின்றவாறு கத்தி கொண்டிருந்தார். அப்பாடா, ஒரு வழியா காடுவெட்டி வந்து சேந்தாச்சுன்னு மனசுல நினைச்சிகிட்டு நிதானமா பெரியவரோட மூட்டைய இறக்கிவிட்டு வெள்ளியங்கிரி ஏதும் வந்திருக்கிறானா? என்று சுற்றிலும் நோட்டம் விட்டேன். ஊகும், சரி அவனை இந்நேரத்தில இங்க என்ன வரவேற்க எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்த்தனம்.

மெதுவாக ஊருக்குள் நடந்து கொண்டிருந்தபோது எதேட்சசயாக பின்னல் பார்த்தபோது பஸ்ஸில் என் முன் சீட்டில் இருந்த மூவரும் வந்து கொண்டிருந்தனர். யாரு தாத்தா இவங்க என்று கேட்டேன். எவங்க? என்று திரும்பி பார்த்துவிட்டு தாத்தா சொன்னார். நான் சொன்னேல்ல தம்பி நம்ம ஊரு பசங்க, அந்த ஆக்சிடென்ட் அதுல பொழைச்சவனுகதான் இவனுங்க ரெண்டு பேரும், இவனுக கூட்டாளி செத்துபோனதிலிருந்து தெனமும் அவன் அடிபட்ட இதே பஸ்சுல இந்த நேரத்துக்கு வருவானுக, பாவம் என்றார்.

ரெண்டு பேரா? மூணு பேருதானன்னு சொல்லி மெதுவா திரும்பி பார்த்தேன், அந்த மூணாவது மனிதனின் சிரிப்பு கொஞ்சம் வித்தியாசமாக பட்டது. அதே நாற்றம், இன்னும் அதிகமாக, இன்னும் அதிகமாக என் நாசிக்குள் ஏறி ஒரு மாதிரியாக மயக்கம் வருவதுபோல இருந்தது. பஸ் நம்பர் 13 ங்கிறது மட்டும் எனக்கு ஒருதடவை நியாபகத்தில் வந்துவிட்டு போனது. எனக்கு கடைசியாக நினைவில் இருந்தது. அந்த பஸ் நம்பர் மட்டும்தான்.

ஐயோ ராமா!

சென்ற வாரம் நண்பன் சக்திவேலிடமிருந்து ஒரு போன், "நண்பா உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்"
எனக்கு ஒன்னும் புரியவில்லை இருந்தாலும் "இதுக்கு என்னடா போன் பண்ணி அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு வாடான்னு சொன்னேன்"
"இல்லடா நீ சனிகிழமை பிருந்தாவன் பாருக்கு வந்திடு அங்க பேசிக்கலாம்"
"சரிடா எதுக்கும் நீ வரதுக்கு முன்னால எனக்கு ஒரு போன் பண்ணிடு. மறந்தாலும் மறந்திடுவேன்."
சக்தி, என்னுடைய பள்ளிபருவ நண்பன். ரொம்பவே மென்மையான மனம் கொண்டவன். அதிர்ந்து பேசக்கூட தெரியாதவன். அப்பொழுது எங்களோடு படித்தவர்களில் அவன்தான் நாள் நிறமாகவும் அழகாகவும் இருப்பான். சனிக்கிழமை அவன் கூப்பிடாமலே சரியாக சென்று விட்டேன். அழகா ஓராம சீட்ட புடிச்சு உட்காதிருந்தான்.
"மச்சான், மனசு சரியில்லை டா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு சொல்லிட்டு என்கிட்டே கேட்காமலேயே ரெண்டு பீர் ஆர்டர் பண்ணிட்ட்டு கேட்டான், "நீ சாப்டுவதான? "
"இல்லடா சக்தி இப்போ இல்லை. நீ சாப்பிடு"
இதுதான் நான் பண்ண தப்பு, எதோ பிரச்சனையில இருக்கான், பாவம், எதோ அவன் என்கிட்டே பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்குன்னு எதோ பேசிகிட்டு இருக்கான், அவன தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு அப்படீனு நினச்சு விட்டுட்டேன். ஆனா உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம், நாம தண்ணி போடாம தண்ணியடிச்சவன் பேசுறத கேட்க்குறதுதான்னு அன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டேன்.
வேற என்ன காதல் பிரச்சனைதான். அவ சரியில்ல, இப்படி சொன்னா, அப்படி சொன்னா, அப்படீன்னு ஒரே மாதிரி குறையா சொல்லிகிட்டு இருந்தான். அவனுக்கும் சரி அந்த பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் நிச்சயம் பிடித்திருந்ததாகவும், இனி ஒருபோதும் தன்னால் பொருளாதாரத்தில் அடுத்த நிலைக்கு முன்னேற முடியாது என்று அவள் நினைப்பதாகவும் அதனால் இதுவரை என்னை காதலிக்கவே இல்லை என்று மறுப்பதாகவும் சொன்னான்.
"அதுசரி நீ நினைப்பது கிடக்கட்டும் அவள் உன்னிடம் எப்பொழுதாவது அப்படி சொன்னாளா"
"இல்லை"
" உண்மையில் உன்னை விரும்பியிருந்தால் அவள் இதை உன்னிடம்தான் முதலில் சொல்லியிருப்பாள். கவலைப்படாதே, அதெப்படிடா பழகும்போது இந்த குறைகள்ள ஒன்னு கூடவா உனக்கு தெரியாம போச்சு"
"மனசு விட்டு பழகும்போது, நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்ட இருக்கிற குறை நமக்கு தெரியறது இல்லை"
"சரி, இப்போ என்ன ஆச்சு? உங்க நெருக்கத்துக்கு?"
"அவதான ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டலேடா"
"ஏன்? என்னவாம் திடீர்ன்னு"
"எனக்கென்ன தெரியும், போன் பண்ணி தரேன் நீயே கேளுன்னு சொல்லி உடனே அந்த பெண்ணுக்கு போன் பண்ணிட்டான். இது என்னடா வம்பா போச்சுன்னு நான் சிங்கிளா பீல் பண்ணி முடிக்கிறதுக்குள்ள போன என் கைல குடுத்துட்டான்.
சரி, இரு நான் பேசிட்டு வரேன்னு சொல்லி, போன எடுத்துட்டு வெளியில வந்தேன்.
"என்ன சுபா பிரச்சனை உங்களுக்குள்ள?"
"ஒ, இன்னைக்கு நீங்களோ? பாவம்ன்னா நீங்க. அந்த லூசுக்கு இதே வேலையா போச்சு, நான் பண்ண வேண்டியதஎல்லாம் அவன் பண்ணிக்கிட்டு இருக்கான் னா, ஆ ஊன்னா கோவிச்சிகிறான், எதுவும் சொல்ல கூடாது, அப்படி சொன்னா, இந்த பொண்ணுகளே இப்பிடித்தான்னு சினிமா வசனமெல்லாம் பேசுறான், எப்படின்னா இதெயெல்லாம் சமாளிக்கிறீங்க? உண்மையிலேயே நீங்க கிரேட் னா"
"அட பாவிகளா! உங்க பஞ்சாயத்துக்கு என்ன ஊருகாயாக்கி விளையாடறீங்களா?""என்னமோ பண்ணுங்க, நல்ல இருந்தா சரி" சொல்லி போனை வச்சிட்டு உள்ளே போனேன்.
இன்னும் ரெண்டு பீரை ஆர்டர் பண்ணிவைத்துவிட்டு, ரெண்டு பீரையும் காலி பண்ணிட்டு நல்ல புள்ளமாதிரி உக்காந்திருந்தான்.
"பேசினியா? "
"பேசிட்டேன்"
"என்ன சொன்னா?"
".... ... ..."
" என்னடா சொன்னா?"
"ம்ம்ம் ...."
"ஏண்டா சக்தி இது உனக்கே நியாமா? சனிக்கிழமையும் அதுவுமா, இருக்கிற ஆயிரத்தெட்டு வேலைய உட்டுட்டு என்னமோ நீ கூப்பிட்டியேன்னு வந்தா, நீஎன்னடான்ன ஊத்திகித்த உளறிக்கிட்டு இருக்க, அவ என்னடானா போன்னா, போயி வேல ஏதாவது இருந்தா பாருங்கன்ரா"
"என்ன பார்த்தா எப்படிடா இருக்கு"
"அப்படியா சொன்னா"
ஒருவழியா எல்லா கருமத்தையும் குடிச்சிட்டு கிட்டத்தட்ட அவனை தூக்கிகிட்டு வராத குறையா வெளிய வந்திட்டு இருந்தேன். நல்ல நேரமா பார்த்து என்னுடைய கஸ்டமர் ஒருவர் அங்கே வர " என்ன சார் இந்நேரத்திலயேவான்னு கேட்டார். சக்திய மனசுல திட்டிகிட்டே அவரை பார்த்தது ஹி ன்னு அசிங்கமா ஒரு சிரிப்பு சிரிச்சிகிட்டு வெளிய வரேன்.

சொன்ன நம்ப மாட்டிங்க, பக்கத்துல ஒரு பையனோட மொபைல வந்த ரிங் டோன் "ஐயோ ராமா, இந்தமாதிரி கழிசட பசங்களோட என்ன ஏன் கூட்டு சேர வைக்குற"
என்னால அடக்க முடியாம சிரிச்சிட்டேன்.