அப்பா என்கிற மனிதன்


          குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைப்பாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன். பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேணுமென்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.

சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாபாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது. எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது. கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதோடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.

மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை. மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.


அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.

தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.

மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.

          எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.

       எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?

       சிறுவயது முதலே தாயுடன் ஏற்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாய்க்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது. ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனைமரமாய் நின்று போகிறது.

       என்னுடைய சிறுவயதில், சர்க்கஸ் பார்ப்பதற்காக, சைக்கிளில் அம்மா, அக்கா மற்றும் என்னையும் உட்காரவைத்துக்கொண்டு பனிரெண்டு கிலோமீட்டர் மிதித்துக்கொண்டு வந்த என் அப்பாவை எனக்கு அப்படியே நியாபகம் இருக்கிறது. கால்வலிக்கிறது என்று இடையே சைக்கிளை நிறுத்தினால், சீக்கிரம் போகணுமென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் என்னையும் சமாளித்துக்கொண்டு சைக்கிளை ஓட்டியபடி வருவார்.

      இன்றோ ஏதோஒரு மதிய வேளைகளில் எங்காவது சென்றுவிட்டு திரும்பும்போது "பஸ் ஸ்டாப்புல நிக்குறேன்,கொஞ்சம் வீட்டுல கொண்டுபோய் விட்டுறியாடா,தம்பி?" என்று கேட்க்கும் அப்பாவிற்கு "ஏதாவது ஆட்டோபிடித்து போயிடுங்கலேம்ப்பா, கொஞ்சம் வேலையா இருக்கேன்" என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.என் அப்பாவின் அந்த கால்வலிக்கு, இன்று என்ன செய்தால் சரிப்படும்? என்ன செய்து அவர் கால்வலியை போக்குவது. ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

       நான் இந்த பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது, நண்பர் ரங்கனிடமிருந்து வந்த மின்னஞ்சலில் ஒரு விடியோ என் பதிவிற்கு பொருத்தமாக, அவருடைய அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன்.
video
         தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்.

பட்டாம்பூச்சி பார்த்தல்

னக்கெனவோ அவளும் உங்கள மாதிரியே, ஆயிடுவளோன்னு பயமாஇருக்குங்க!" என்றாள் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த என்னிடம்.
"என்னடி, இப்போ வந்ததும் வராததுமா" என்றேன் சலிப்புடன்.

"உங்க வாரிசைத்தான் சொல்றேன், போனவாரம் கழுதையை பார்க்கணும்னா,இப்போ பட்டாம்பூச்சி பார்க்கணுமாம், பட்டம் விடணுமாம்"

"குழந்தைன்னா இதெல்லாம் கேட்க்கத்தானே செய்யும், நாமதான் இதெல்லாம் செஞ்சி கொடுக்கணும்" என்றேன்.

"ஓகோ, அப்படியா!... உள்ளதான் உங்க மகராணி மூஞ்சிய தூக்கிவச்சிட்டுஉட்காந்திருக்காங்க, போங்க போயி பட்டாம்பூச்சி காமிங்க" என்றாள் கிண்டல்தொனிக்கும் குரலில்.



கைகால்களை கழுவிவிட்டு மெல்ல என் அறைக்குள் நுழைந்தேன். அமைதியாய்தனது வீட்டு பாடங்களை செய்து கொண்டிருந்தாள் எனது நாலரை வயது மகள்,திவ்யா என்கிற அம்முகுட்டி.
"குட்டிம்மா, அப்பா வந்துட்டேன்"
"ஐயா, டாடி வந்தாச்சு"
"என்னடா செல்லம், அம்மாகிட்ட என்னை கேட்ட ?"
"B for Butterfly அப்புறம் K for Kite"
"அவ்வ்ளோதான, டாடி உனக்கு ரெண்டையுமே காட்டுறேன், பட்டாம்பூச்சியைபார்க்கலாம், பட்டத்தை நீயே பறக்கவிடலாம், இப்போ ஹோம் ஒர்க் பண்ணிட்டுதூங்குவியாம், காலைல அம்முகுட்டியும் அப்பாவும் பட்டாம்பூச்சி பிடிக்கபோவாங்களாம்" "ஒகேவா?, "
"டாடின்னா டாடிதான்" என்று சொல்லிவிட்டு பாடம் செய்வதில் மும்முரமாகிவிட்டாள்.



காலை ஆறுமணிக்கெல்லாம் சுடசுட காபியோடு எழுப்பினாள், மனைவி. அருகில் பிரவுன் சார்ட்ஸ், வெள்ளை பனியன் என அமர்க்களமாய் தயாரகி நின்றிருந்தாள் அம்முகுட்டி.
“வாப்பா, ப்ட்டாம்பூச்சி பிடிக்கப்போகலாம்”
பத்துமாடி அடுக்கு குடியிருப்பில் ஆறாவது மாடியில் இருக்கும் எனக்கு பட்டாம்பூச்சியை பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல என்று தெரியும். இருந்தாலும் மனதிற்க்குள் “கடவுளே, எனக்கு இந்த கார்டனில் ஒரு சின்ன பட்டாம்பூச்சியையாவது காட்ட்டிவிடப்பா” என்று வேண்டிக்கொண்டு அப்பார்ட்மெண்ட் கார்டனுக்கு சென்றோம்.
“ நாம வேணும்னா இப்போ பட்டம் செய்யலாம், சாயந்திரமா பட்டாம்பூச்சியை பிடிக்கப்போகலாம்” என்றேன்.
“ நோ டாடி, இப்போ பட்டாம்பூச்சி, ஈவினிங் பட்டம்” என்றாள் விடப்பிடியாக.


ரு மணி நேரத்திற்க்கும் மேலாகத்தேடியும் ஒரு பட்டாம்பூச்சியையும் பார்க்க முடியவில்லை.சோர்ந்து போய் விட்டாள், அம்முகுட்டி.
“என்னடா பண்றது, ஒரு பட்டாம்பூச்சியும் கிடைக்கலையே, சரி வா. நாம டீ.வில ட்ரை பண்ணலாம்”என்றேன்.
"போப்பா நான் நேத்தே ட்ரை பார்த்துட்டேன்”
இதென்னடா வம்பா போச்சு என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு “சரிம்மா வா, இப்போ போயி பட்டம் செய்யலாம், சாயந்திரமா வந்து பட்டம் விடலாம். அப்பா எப்படியாவது ரெண்டு மூனு நாளைக்குள்ள உனக்கு ஒரு பட்டாம்பூச்சியை பிடித்துத்த்ருவேன்னாம், சரியா?”
“இப்போதான் நீங்க குட் டாடி”



ட்டம் செய்வதற்கு தேவையான பேப்பர், ஈர்க்குச்சி, கோந்து, நூல் எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஹாலில் வசதியாக உட்கார்ந்தேன்.
சமையலறயிலிருந்துகொண்டே “என்ன மகாராஜாவும், இளவரசியும் பட்டாம்பூச்சி வேட்டைக்கு போனிங்களே, என்னாச்சு?” என்றாள் மனைவி.
“பேட் மம்மி, இல்லடா குட்டிம்மா”என்றேன் மகளிடம்.
ஆமோதிப்பதாய் தலையை ஆட்டினாள். என்னுடைய சிறுவயதில் பரமனும் நானும் சேர்ந்து விட்ட பட்டங்கள், அந்த மாஞ்சா கயிறு எல்லாம் ஒருமுறை நினைவில் வந்து போனது. ஊரில் பட்டம் விடுவதில் பரமன் கில்லாடி, அவன் சுண்டினால் பல்டி அடிக்காத பட்டங்களே கிடையாது, மாஞ்சாவில் அவனை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
பரமனை மனதில் வைத்துகொண்டு பட்டம் செய்ய ஆரம்பித்தேன். ஓரளவு நான் நினைத்ததைவிட நன்றாகவே வந்திருந்தது, பட்டம். ”இங்க குடுங்க” என்று வாங்கிய மனைவி அதில் “FLY HIGH" என்று எழுதிகொடுத்தாள், ”ம்க்கும், இதுவேறையா?”
அதன் கீழே அவளது பெயரை எழுதிகொண்டாள், அம்முகுட்டி.
“சரி, இப்பொ ஸ்கூலுக்கு கிளம்பு, பட்டம் காயட்டும், சாயந்திரம் அப்பா வந்ததும் மாடியில போயி பட்டம் விடலாம், ஓகேவா?”
“ஓகே, டாடி” என்று சொல்லியபடி குதித்து குதித்து ஓடினாள்.
”எவ்வளவு சந்தோசம் பாரேன் அவளுக்கு! என்றேன் மனைவியிடம்.
“அப்பாவுக்கும் மகளுக்கும் என்னவொ ஆச்சு இன்னைக்கு” என்று சிரித்தபடியே அவளது வேலைகளில் மூழ்கினாள்.

ன்னென்னவோ பொய்யை சொல்லிவிட்டு நாலரை மணிக்கெல்லாம் வீடு வந்துவிட்டேன். பட்டம் விடும் ஆசை எனக்குள்ளும் இறங்கியிருந்தது. கை, கால்களைகூட கழுவவில்லை. நேராக அம்முகுட்டியை அழைத்துக்கொண்டு மாடிக்கு சென்று பட்டத்தை பறக்கவிடும் முயற்சியில் இறங்கினோம்.
எவ்வளவு முயன்றும் பட்டம், வட்டமடித்துக்கொண்டிருந்ததே தவிர கொஞ்சமும் பறக்கவேயில்லை.
“அப்பா, இந்த நூலை புடிச்சிக்கிறேன், நீ இந்த பட்டத்தை இப்படி பிடித்துக்கொண்டு வேகமா ஒடு, அப்பா விடுன்னு சொன்னதும் விடனும், சரியா?” என்றேன்.
“சரிப்பா” என்று சொல்லிவிட்டு மாடியின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தாள். அவளை, அவள் ஓடிகொண்டிருப்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.
இனி இந்த பட்டம் பறக்குமென்பதில் எனக்கிருந்த நம்பிக்கை குறைந்துகொண்டே வந்தது.
ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய், அழ ஆரம்பித்தாள்.
“உனக்கு பட்டமே செய்யத்தெரியலை.... போ.... நீ பேட் டாடி” என்று சொல்லிவிட்டு என் கால்களை அடித்தவாறு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


ரு முடிவுக்கு வந்தவனா, ”உஷா! ரெண்டு நாளைக்கு தேவையான துணிமணிகளை எடுத்து வை, நாம இப்பவே ஊருக்கு கிளம்புறோம்” என்றேன்.
எப்பொதும் ஏதாவது நையாண்டி செய்யும் மனைவி, எதையோ உணர்ந்துகொண்டவளாய், எதுவும் பேசாமல் துணிகளை பேக் செய்ய ஆரம்பித்தது எனக்கு ஆறுதலாக இருந்தது.
காரை ஓட்டிக்கொண்டே அப்பாவிற்க்கு போன்செய்து நாங்கள் வருவதை சொல்லிவிட்டு பின் சீட்டில் படுத்திருந்த அம்முகுட்டியை பார்த்தேன். என்மீதிருந்த கோபத்தில் எதுவுமே பேசாமல் வந்த அம்மு, ஒர் கட்டத்தில் தூங்கிபோயிருந்தாள்.
“தூங்குடா குட்டிமா, நாளைக்கு அப்பா உனக்கு பட்டம்பூச்சி பிடிச்சிதறேன்” என்றேன் அவளை மெல்ல தட்டிகொடுத்தபடி.
“ஓகோ, அப்படியா சங்கதி, மகளுக்காக பட்டம்பூச்சி பிடிக்க 250 கிலோமீட்டர் பயணம் செய்கிற பைத்தியகார அப்பாவை இப்போதான் பார்க்கிறேன்” என்று சொல்லியவாறே கண்களை மூடிக்கொண்டாள்.
இரவின் வெளீச்சத்தில், காற்று வேகத்தில் கார் கண்ணாடியில் பட்டு இறந்துபோகிற ஒவ்வொரு பூச்சியும் பட்டாம்பூச்சியை நியாபகப்படுத்திக் கொண்டேவந்தது.

”என்னடா இது, திடுதிப்புன்னு போன பண்ணி நாங்க வரோம்னு சொல்லிட்டு, இப்படி நடுராத்திரியில வந்து நிக்குற, ஏதும் பிரச்சனையா?” என்றார் அப்பா.
“ஒண்ணும் பிரச்சனையெல்லாம் இல்லப்பா, சும்மாதான்..... நீங்க படுங்க எல்லாம் காலையில பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு படுக்கசென்றேன்.


திகாலையிலேயே எழுந்து பரமனை பார்க்கக் கிளம்பிவிட்டேன். உடன் வந்த அப்பாவிடம் அம்முகுட்டிக்கு பட்டாம்பூச்சியை காண்பிக்கவும், பட்டம் விட்டு காட்டவும்தான் வந்தேன் என்கிற விஷயத்தை சொன்னேன். "அடப்போடா பைத்தியக்காரா, இன்னும் அப்படியேதான் இருக்க" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
பரமனை பார்த்துவிட்டு, குசலம் விசாரித்த பிறகு அவனிடம் விஷயத்தை சொன்னேன்.
"எனக்கும் மறந்து போச்சுடா, விடு நம்ம வாரிசு எதுக்கு இருக்கு?" என்றபடி அவன் மகனை அழைத்து "மாமா, ஊர்ல இருந்து வந்திருக்காக, அவரு பொண்ணுக்கு பட்டம் ஒண்ணு செஞ்சிகுடுடா, தம்பி. கூடவே நல்ல ஒரு நல்ல ராஜா பட்டாம்பூச்சியா ஒண்ணை பிடி" என்றான்.

அப்படியே திரும்பி என்னைப்பார்த்து கேட்டான் "சாரு இதுக்காகத்தான் அங்கிருந்து கிளம்பி வந்திருக்கிறாரா?"
"ஆமாம்"
"பாருங்கப்பா இவனை, இவன் இன்னும் அப்படியே இருக்கான் பாருங்க" என்று சொல்லிவிட்டு உரக்க சிரிக்க ஆரம்பித்தான். கூடவே அப்பாவும். சிறுவயதில் பட்டம்விட பரமனின் வீட்டிற்கு வந்த என்னை அடித்து இழுத்துக்கொண்டு போகும் அப்பா, இப்போது பேத்திக்காக பரமனின் வீட்டிற்கு வந்து உட்க்கார்ந்திருப்பதை, அவனோடு சேர்ந்து சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த நானும் அவர்களோடு சேர்ந்து சிரித்துக்கொண்டிருந்தேன்.

ரமன் மகன் கொண்டுவந்து கொடுத்த, கருப்பு இறக்கையில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு வட்டங்களைக்கொண்ட ராஜா பட்டாபூச்சியை அம்முகுட்டியிடம் கொடுத்தபோது "ஹையா, பட்டாபூச்சி, பட்டாபூச்சி" என்று கத்திக்கொண்டு அதை நூலில் கட்டிக்கொண்டு வெகுநேரம் விளையாடிகொண்டிருந்தாள். அவளையே பாரத்துகொண்டிருந்த என்னை அவ்வப்போது ஓடிவந்து கட்டிக்கொண்டு "ஐ லவ் யூ, டாடி" என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

மாலை, பரமனின் மகன் துணையுடன் பட்டம் விட்டுக்கொண்டிருந்தாள், அம்முகுட்டி. நானும் மனைவியும் தூரத்திலிருந்து அதையே பார்த்துக்கொடிருந்தோம்.
போன் அடித்தது, என் மேனேஜர்.
"என்னப்பா ரகு, ஏதோ அவசரவேலை. உடனே ஊருக்குப்போகனும்ன்னியே? எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?"
"ஆங்..., எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, சார். ரொம்ப சந்தோசமா இருக்கேன், இன்னொருநாள் லீவை எக்ஸ்டன் பண்ணிக்கட்டுமா, சார்?" என்று கேட்டுகொண்டிருந்தேன்.
மனைவி, என்னை இடுப்போடு சேர்த்து இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள்.

கண்ணாடி பார்க்கும் வரையில்


கண்ணாடி பார்க்கும் வரையிலும்
(நவீன மலையாள சிறுகதைகள்)
மொழிபெயர்ப்பும் தொகுப்பும்: உதய சங்கர்
வம்சி பதிப்பகம், விலை: ரூ.60.00



இந்த புத்தகத்தின் அறிமுக உரையாக குறிஞ்சிவேலன் அவர்கள், மலையாள சிறுகதை வளர்ச்சி, ஓர் தூரப் பார்வை - என்கிற பெயரில்ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நல்ல கட்டுரை. மலையாள சிறுகதைகள் படிக்க விரும்புவோர், அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை. இதில் அவர் மலையாள சிறுகதை உலகை ஐந்து பாகங்களாக, ஐந்து காலகட்டங்களாக பிரித்திருக்கிறார். மேலும் அந்தந்த காலகட்டங்களுக்கு பொருத்தும் ஆசிரியர்களையும், அவர்களின் எழுத்தின் போக்கையும் மிக சுருக்கமாக மற்றும் எளிதில் விளங்கும் படியாகவும் எழுதியிருக்கிறார்.

"இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பதிமூன்று கதைகளின் மூலம் மலையாள சிறுகதை உலகையே நம் முன் சிறப்பாகத் தொகுத்து தந்துள்ளார், உதயசங்கர். சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியரான அவர், இத்தொகுப்பின் மூலம் தம் கொள்கையை விட்டுகொடுக்காமல் மலையாள சிறுகதை வரலாற்றிலுள்ள தலைமுறை இடைவெளிகளையும் திறம்பட ஒருங்கினைத்து, வாசகர்களை மிரட்டாத மொழியாக்கத் தன்மையையும் அளித்துள்ளதால் அழமான சிறந்த சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்துள்ளன என்பதில் சந்தேகமில்லை".

- குறிஞ்சிவேலன் -




பத்து வருடங்களுக்கு மேலாக புத்தகங்கள் வாசித்து வந்தாலும், வெகு சமீபமாகத்தான் நல்ல புத்தகங்களையும், எழுத்தாளர்களையும் தேடி படித்து வருகிறேன். புத்தக வாசிப்பில் நானாக தேடி தேடி சிலபல புத்தகங்களை வாசித்ததுண்டு. பிறகு எஸ்.ராவின் கதாவிலாசம் மூலம் பல நல்ல எழுத்தாளர்களை வாசிக்க முடிந்தது. மேலும் என்னுடைய புத்தக வாசிப்பில் நண்பர் கிருஷ்ணபிரபுவின் பங்கு நிறையவே இருக்கிறது. இவரது அறிமுகங்கள் என்றைக்குமே ஏமாற்றியதில்லை. இவரது அண்மைய பதிவுகளில் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் எழுத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருந்தார். அவற்றை படித்ததிலிருந்து பஷீர் மற்றும் இன்னபிற மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

இந்த தேடலின்போது, எந்த புத்தகம் வாங்குவது என்ற குழப்பம் இருந்தது, தோழர்.ராஜாமணி அவர்கள் பரிந்துரைத்ததன் பெயரில் சிலபுத்தகங்களை வாங்க நேர்ந்தது. இதில் வைக்கம் முகமதுபஷிர்அவர்களின் "மதிலுகள்" நகுலனின் "வாக்குமூலம்" மற்றும் .... உதய சங்கர் அவர்கள்தொகுத்த "கண்ணாடி பார்க்கும் வரையில்" தகளி சுந்தரம்பிள்ளை அவர்களின் "தோட்டியின்மகன்" நான்கு புத்தகங்களை வாங்கினேன். நேரம் கருதி முதலில் படித்த புத்தகம்தான் "கண்ணாடி பார்க்கும் வரையிலும்".

வைக்கம் முகமது பஷீர் அவர்களின் "கொசுவை கொள்ளலாமோ", "ஒரு மனிதன்", "மரங்கள்",தகழி சுந்தரம் பிள்ளை அவர்களின் "பட்டாலத்துக்காரன்", ஜான் அப்ரகாம் அவர்களின் "ஒரு காத்திருப்பு", "ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி", ஸக்கரியா அவர்களின் "இரண்டு நாடகக்கதைகள்", "கண்ணாடி பார்க்கும் வரையில்", கிரேஸி அவர்களின் "பாஞ்சாலி", "ஒரு ஜனரஞ்சகக் கதையின் மரபு", "தேவி மகாத்மியம்", டி. பத்மநாபன் அவர்களின் "உயிரின் வழி"மற்றும் என்.எஸ். மாதவன் அவர்களின் "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." இந்த ஐந்து எழுத்தாளர்களின் பதிமூன்று கதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

இதில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள், “ஒரு மனிதன்”,
"ஒரு கழுதையின் மண்டைஓடு தேடி" "கண்ணாடி பார்க்கும் வரையில்", "பெரிய மரங்கள் விழுகின்ற போது.." . இந்த நான்கு கதைகளும் படித்தவுடனே சட்ட்டென்று விளங்கி விட்டன. மற்ற கதைகளை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறேன்.

கதைகளை பற்றி எதுவும் சொல்லவில்லை அவசியம் படியுங்கள். இந்த புத்தகம் மலையாள சிறுகதை வாசிக்கதுவங்கும் என்னை போன்ற எவர்க்கும் ஒரு நல்ல அறிமுகம்.

கிறுக்கல்கள் 4

சற்றுமுன் பெய்தமழையின்
குழந்தையாய், சன்னமாய் ஓடுகிறது
ஓடை.

தொலைவில் எங்கோ
பாடிக்கொண்டிருக்கிறது ரேடியோ,
“வானம் எனக்கொரு போதிமரம்”

தூரத்தில் ஒரே குடையின் கீழ்
இரண்டு பேர்,
காதலர்களாய் இருக்கக்கூடும்.

என்னை சுற்றிலும் பரவியிருந்தது
மழையினில் உதிர்ந்த
வேப்பம்பூக்கள்

மழை நின்று விட்டது
நின்றும் துளிக்கிறது,
மரம்.

செய்துவிட்ட குழந்தையின் சந்தோசத்திற்க்காக
இன்னமும் கவிழாமல் போகிறது,
காகிதகப்பல்

உன்க்கென்று கொண்டுவந்த
கடிதங்கள் நனைந்துவிடாமல்
குடைக்கடியில்
காத்திருக்கிறேன்.

அவரசரம் எதுவுமில்லை
இன்னும் பொறுமையாகவே வா,
நீ வரும்வரை இருக்கும்
ஒவ்வொரு நொடியையும் -இதைப்போல்
இன்னும் அழகாக்க
எத்தனையோ இருக்கிறது என்னிடம்


Akon - எகோன்

வெகு சமீபத்தில் அறிமுகப்பட்டு நான் மிகவும் ரசிக்கும் இன்னுமொரு இசை வடிவம்தான் ஹிப்-ஹாப். இன்றைய தமிழ் திரைப்படங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இசை வடிவம்தான் ராப் மற்றும் ஹிப்-ஹாப். ராப் என்பது சரியான இசைகோர்ப்புடன் பாடல் வரிகளை வசனங்களைப் போல படிப்பதுதான். காதலன் படத்தில் ஏ.ஆர். ரகுமான் "பேட்டை ராப்" என்ற பாடலில் செய்திருப்பாரே அதுதான். இப்பொழுது தமிழிலேயே நிறைய ராப் பாடகர்கள் வந்துவிட்டனர். "யோகி பி", "நட்சத்ரா" இப்பொழுது "கவிதை குண்டர்" என பல ராப் பாடகர்கள் நல்லமுறையில் பாடிவருகின்றனர். ஹிப்-ஹாப் என்பது அமெரிக்க ஆப்பிரிக்க இசையின் கலவை வடிவம்தான். இதில் ஒரு நல்ல மெலடியும் இருக்கும், அதே சமயம் வெஸ்டர்ன் மியூசிக் என்று சொல்லக்கூடிய அமெரிக்க இசையும் கலந்திருக்கும். வெகு இனிமையான பேளட் டிரம்ஸும், இன்னபிற வெஸ்டர்ன் சங்கதிகளும் சரிவர இணைந்த ஒரு வடிவம்தான் ஹிப்-ஹாப்.

இன்றைய தேதியில் அனேகம் பேரால் ரசிக்கபடுகிற ஒரு ஹிப்-ஹாப் பாடகர்தான் எகோன்।அகோன் என்று அறியப்படுகிற இவரது இயற்பெயர் அலியவுன் பதரா அகோன் தியாம். முஸ்லிம். மதத்தைசேர்ந்த அமெரிக்க கறுப்பினத்தவர். எகோனுக்கு அவரது குரல் ஒரு வரபிரசாதம், அப்படி ஒரு பெக்குலியர் வாய்ஸ் அவருக்கு. அகோன் என்ற பெயரில் பாடல்களை பாடி வருகிறார். இதுவரை மூன்று ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். 2004 லில் “டிரபில்” (
Trouble ) 2006ல் ”கன்விக்டட்” ( Konvicted ) மற்றும் 2008ல் “பிரீடம்” ( Freedom ). முன்றுமே அருமையான பல பாடல்களைக் கொண்டது, மேலும் நல்ல ஹிட் ஆல்பங்கள்.

”வாய்ஸ் மிக்ஸிங்” எனப்படுகிற ஒரு முறையை இவரது இசையில் அதிகம் பார்க்க முடியும். இதற்க்காகவே இவர் சில விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.மேலும் இரண்டு முறை கிராமி விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவரது அனேகப் பாடல்கள் தமிழ் திரையிசைக்கு பொருத்தமானதாக இருக்கும். இவரது பாதிப்பை “ஹாரிஸ் ஜெயராஜ்” மற்றும் “யுவன்” பாடல்களில் அதிகம் உணரமுடியும். மேலும் நமது பெரும்பாலான பாடல்கள் “வாய்ஸ் மிக்ஸிங்” முறையைக்கூட இவரது ஸ்டைலிலேயே பின்பற்றியிருக்கின்றன. தமிழில் நல்லமுறையில் வாய்ஸ் மிக்ஸிங் செய்த பாடல்கள், சட்டென்று நினைவிற்கு வரவில்லை. அதனால் அதை இங்கே குறிப்பிடவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


பாடுவது தவிர இவருக்கு சொந்தமாக ஆப்ரிக்காவில் ஒரு வைர சுரங்கம் ஒன்று இருக்கிறது. இதில் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை அவரது தொண்டு நிருவனமான ”கான்பிடன்ஸ் பவுண்டேசன்” மூலமாக பல சேவைகளை செய்து வருகிறார்.


இசைதுறைக்கு வருவதற்க்கு முன்பு இவர் போதை மருந்துகளை விற்றுவந்ததாகவும், இவருக்கு மூன்று மனைவிகள் என்றும் நிறைய வதந்திகள் உண்டு. மெலும் இவரது பாடல் வரிகள் வன்மையாகவும் காட்சியமைப்புகள் ஆபாசமாகவும் இருப்பதாக இவர் மீது குற்றசாட்டு உண்டு. அதை தொடந்த இவரது சமீபத்திய பேட்டியில் “ நான் இதற்குமுன் என்னுடைய பாடல்வரிகளில் அதிகம் கவனம் செலுத்தியதில்லை, தற்சமயம் என்னை பல குழந்தைகளும் பார்க்கின்றனர், நான் அவர்களையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. எனவே இனி என் பாடல் வரிகளிலும், காட்சியமைப்பிலும் அவசியம் கவனமாக இருப்பேன்” என்கிறார்.


ஆக இவற்றை தாராளமாக ஒதுக்கிவைத்துவிடலாம், இவரது இசைக்காக. நல்ல இசை எங்கிருந்தாலும் அதை ரசிப்போம்.இவரது பாடல்களில் எனக்கு பிடித்த ஒரு சில பாடல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். சொடுக்கிகளை சொடுக்கி பாருங்கள், கேளுங்கள்.


ஒரு கொசுறுத் தகவல், நம்ம ஏ.ஆர்.ரஹுமானுக்கும் இவருக்கும் நல்ல நட்புவட்டம் இருக்கிறது. இவரது சமீபத்திய ஹிட்டான யூ சோ பியூட்டிஃபுல் பாடலில் நட்பிற்க்காக தலையை காட்டியிருக்கிறார், நம்ம ஏ.ஆர்.ரஹுமான். சரியாக பாடலின் 2.30 நிமிடத்தில் சின்னதாய் ஒரு கெஸ்ட் அப்பியரென்ஸ்.
Beautiful (பியூட்டிபுல்)
http://www.youtube.com/watch?v=8dq9g7soIDo&feature=fvst

Smack that (ஸ்மேக் தட்)
http://www.youtube.com/watch?v=cZHx6-skK7k



Don't Matter (டோண்ட் மேட்டர்) http://www.youtube.com/watch?v=HiBcQeIax4g&feature=channel


Right now (ரைட் நவ்) http://www.youtube.com/watch?v=b-Qr9t_lDUE


இதுபோக எகோனின் மற்ற அனைத்து பாடல்களையும் பார்க்க அவரது தளத்திற்க்கு செல்லவும்।
http://www.akononline.com/

கிறுக்கல்கள் 3

கோவில் வாசலில் பூ விற்பவரிடம்
இரண்டு ரூபாய் குறைக்க சொல்லி
சண்டை போட்டுகொண்டிருந்தார்
ஒரு வயதான குண்டு பெண்மணி.
குடித்துவிட்டு வந்து தினமும்
ரோட்டில்வைத்து அடிக்கிறான்
மனைவியை, குடிகார கணவன்.
சன்னிதி தெருவில்
வெகுநேரமாய் நிற்க்கிறான்
யாசகம் கேட்டு, நொண்டி சிறுவன்.

எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்
கடவுள், சிலையாய்.

தனக்கான வலையை
தானே பின்னிக்கொண்டிருக்கிறது
சிலந்தி.


விழுதுகள்



எங்கள் வீட்டிற்கு இரண்டு பெருமை, ஒண்ணு சிவன் கோவில். அதுவும் இருநூறு வருடங்களுக்கும் பழைமையான சிவன் கோவில் அது. பராமரிக்காமல் இருந்தாலும் ஒரு அழகோடு கம்பீரமாய் இருக்கும் கோவில். பதினைந்து அடிக்கும் உயரமான காவியும் வெள்ளையும் அடித்த மதில்கள். பாசி படர்ந்து கருத்த, ஆங்காங்கே சில செடிகளுடன் கோபுரம் என்று தொன்மையிழக்காத கோவில்.

கோவில் சுவத்தை ஒட்டினாப்புல இருக்கும் ரெண்டு மரம். ஒரு ஆலமரம் இன்னொன்று அரச மரம். ஆலமரம் நான் பிறக்கும் முன்பிருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. அரச மரம் வைத்ததும் வளர்ந்ததும் எனக்கும் தெரிதிருந்தது. நான் வந்து படிக்கும் போது கலெக்டர் முன்னிலையில் மரம் நாடும் விழா என்ற பெயரில் கொண்டு வந்து நட்டுவைத்தார்கள். அப்போதே என்னை விட உயரமான செடியாகத்தான் இருந்தது.

இதில் எனக்கு அல்லது எங்கள் வீட்டிற்கு என்னை பெருமை? இருக்கே. ஏன்னா அந்த தெருவின் எங்கள் வீடும் இருந்தது. ஊரிலிருந்து வரும் சொந்தங்கள் அனைவரும் "இப்படி அழகான கோவிலும் மரங்களும் இருக்குற தெருவில் குடியிருக்கிரதுக்கு, நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்" என்று சொல்லும்போதெல்லாம் என்னையும் அறியாமல் என்னுடைய கண்களில் பெருமைஎட்டிபார்க்கும்.
எங்கள் ஊரின் எந்த மூளையிலிருந்து பார்த்தாலும் இந்த இருமரங்களும் தெரியும். இன்னமும் என் வீட்டிற்கு அடையாளம் சொல்லும் பொழுது மரங்களையே அடையாளம் காட்டி வருகிறேன். ஒரு பத்து வருசத்துக்கு முன்பாக ஆலமரத்தை சுற்றி இரண்டடிக்கு மேடை அமைத்தார்கள். அரச மரத்தை சுற்றி இருந்த கோவில் இடத்தை கம்பியில வேலிய போட்டுபூங்ககாவாக மாற்றிவிட்டிருந்தார்கள்.

என் அப்பாவின் நண்பர்கள் குலாம், மரத்த்தடியில்தான், எங்கப்பா, எதிர் வீட்டு குமாரோடஅப்பா, தங்கையா தாத்தா இப்படி எல்லோருமே அந்த மரத்த்தடியில்தான் ஒன்று கூடுவார்கள்.
மாலை ஆறு ஏழு மணிக்கு சேர ஆரம்பிச்சாங்கன்னா, ஏதாவது பேசிகிட்டே இருப்பாங்க, நான் தூங்கும்வரை அப்பா வீடு வந்தது கிடையாது. அதற்க்கு பிறகும் அவர் எப்பொழுது வந்தார் என்று தெரியாது. ஆனால் அம்மா என்னை எழுப்பும்போது அப்பா என் அருகில் படுத்திருப்பார். என்னுடைய பள்ளிபருவத்தில் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து வாங்கக்கூட மரத்தடிக்குதான் ஓடுவேன். "காபி ரெடி", "சாப்பாடு ரெடி" போயி உங்கப்பாவை வரச்சொல்லு என்று அம்மா சொல்லிவிட்டு நான் மரத்தடிக்கு ஓடிய நாட்கள் எவ்வளவோ இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ராத்திரி பூரா அந்த மரத்தடியையே கட்டிக்கிட்டு அழறது, காலையில நேரங்காலமா எந்திரிக்காம எப்புடி தூங்குறாரு பாரு உங்க அப்பா" என்று திட்டிக்கொண்டே,
அப்பா மீதுள்ள கோபத்தை என்மீது கட்டியபடி அம்மா, என்னை தரதவென்று இழுத்துக்கொண்டே போவார்கள். எல்லா திட்டியும் கேட்டுக்கொண்டு, அப்பா வெகு சாதாரணமாக புரண்டு படுத்துக்கொள்வார்.

வீட்டு வேளைகளில் தனக்கு அனுசரணையாக இல்லையே? என்கிற கோவம்தான் அம்மாவை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. மேலும் பக்கத்து வீடுகளில் வரிசையாக வாங்கப்பட்டு கொண்டிருக்கும் கலர் டீ.வி, வாஷிங் மெசின், என் பள்ளித்தோழன் எதிர்வீட்டு குமாரின் எஞ்சினியரிங் படிப்பு இதெல்லாம் கூட, அப்பாவின் மீதான அம்மாவின் கோவங்களுக்கு காரணம்.

பிறந்த வீடுகளில் செழிப்புடன் வளர்ந்த பெண்ணை திருமணம் செய்து அவளை சொத்து பத்துக்களில் திருப்த்தி படுத்தாத எந்தஒரு ஆணுக்கும் வந்திருக்கும் நிலைதான், என் அப்பாவிற்கும். அப்பாவை சொல்லி குற்றமில்லை, அவருடைய வேலை அப்படி. காதி கிராப்ப்டில் பியூன் வேலை, பேங்க் போகவேண்டியது, டேபிளுக்கு டேபிள் கோப்புக்களை பரிமாறுவது, ஆபிஸிற்கு தண்ணிர் பிடித்து வைப்பது, சமயங்களில் டீ, காபி வாங்கிவருவது என அவரது உயரதிகாரிகளுக்கு உதவிசெய்வதுதான் அவர் வேலை. பத்து வருடங்களாக அதே வேலையைத்தான் செய்து வருகிறார். இன்னமும் அதையேதான் செய்யக்கூடும். அவருடைய சம்பளங்களில் உயர்வு வரலாமே தவிர பணிஉயர்வு வர வாய்ப்பே இல்லாத ஒரு உத்தியோகம். வீட்டிலேயாவது ஒரு அதிகாரத்திற்கு உட்ப்படாமல் இருந்துவிட வேண்டுமென்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால் அதற்கும் அவர் கொடுத்து வைத்திருக்கவில்லை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆனாலும் என்னை பொறுத்தவரை அப்பா ஒரு கதாநாயகன்தான், அவரது உயரதிகாரிகளை பிடித்து, அங்கே இங்கே என்று கடனை வாங்கி அவரது தகுதிக்கும் மீறி என்னையும் இன்ஜினியரிங் படிக்க வைத்தார். ஒரு பெரிய கடமையை செய்து முடித்துவிட்ட திருப்தி அவருக்கு. எனக்கும், தங்கைக்கும் ஏன் அம்மாவிற்கும் அவரால் முடிந்ததை சிலசமயங்களில் முடியாததையும் செய்துகொண்டுதனிருந்தார்.

அம்மாவிற்கு, அப்பாவைப் போல சண்டை போடும்போது பதிலேதும் பேசாமல் வெகு சுலபமாய் எதிராளியை அலட்சியப்படுத்த தெரியாது. அதுவே அவர்களுக்கு அப்பாவின் மீது கோபம் கொள்ள போதுமான காரணமாயிருந்தது. அன்றும் எப்போதும்போல அப்பா, இரவு மரத்தடியிலிருந்து திரும்ப வந்து உட்கார்ந்ததும் அடுத்த குருஷேத்ரம் ஆரம்பமானது.

"இன்னும் ரெண்டு மாசத்துல சின்னவ கல்யாணம், ஒழுங்கா போயி நாலு பேர பாத்தமா, ஒரு கடன கிடன வாங்கி புல்லை கல்யாணத்த முடிச்சமான்னு இல்ல"

"எப்போ பாரு, நாலு பேரா சேர்ந்துகிட்டு மரத்த சுத்தி கிடக்க வேண்டியது"

"உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம், புள்ள குட்டிங்க"

"பேசாம அந்த மரத்துக்கு தாலிய கட்டியிருக்க வேண்டியதுதான"

அப்போது, அம்மா கோவத்தின் சாட்சியாக தெரிந்தார்கள்.

அப்பா அமர்த்திருந்த நாற்காலியிலிருந்து துண்டை உதறியவாறு எழுந்து மெதுவாக வெளியே நடந்தார்.

"நான் இங்க ஒருத்தி பேசிகிட்டு இருக்கிறது உங்களுக்கு தெரியலையா"

"..... ............ ......."

"நில்லுங்க, நான் பேசிகிட்டு இருக்கேன்ல"

"..................."


வாசல் வரை சென்று விட்ட அப்பா மெதுவாக "மரத்துக்கே தாலிய கட்டியிருக்கலாம்" என்று முனகியபடி மரத்தடிக்கு பயப்பட்டிருந்தார்.

வெகு நேரமாகியும் அப்பா வராததால், அப்பாவை பார்த்துவர சென்றேன். அங்கு எதுவும் நடக்காதது போல அப்பா, அமைதியாக ஒரு இலையை கையில் வைத்துக் கொண்டு மரத்தையே பார்த்துகொண்டிருந்தார். அவர் பார்வை எதோ பேசிகொண்டிருந்தது. அப்பா சொல்லும் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுகொண்டிருந்தது, மரம்.

எனக்கு அவரை கூப்பிடுவது, அவரை தொந்தரவு செய்வதாய் தோன்றியது. கொஞ்ச நேரம் தூரத்திலேயே நின்று பார்த்து விட்டு, திரும்பி வந்து விட்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

எனக்கு விபரம் தெரிந்த நாட்களில், கல்லூரிக்கு சென்ற நாட்களில், வேலைக்கு சேர்ந்த பொழுது, என்று எப்போதுமே அப்பாவை மரத்தடியில் பார்க்கமுடியும். அவருக்கும் மரத்திற்க்கும் ஏதோ வெகு அரோக்கியமான ஒரு நட்பு இருப்பதுபோல எனக்கு தோன்றிற்று. யாரும் இல்லாத நேரங்களிலும் அப்பா, மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருப்பார்.

சில சமயம் எனக்கும் அப்பா மீது கோபம் வரும், அப்படி என்னதான் இருக்கோ அந்த மரத்தடியில என்று!

"ஒருவேளை அந்த விழுதுகள் ஒவ்வொன்றும், அம்மாவைவிட அவரை அதிகம் புரிந்து கொண்டிருக்கும் அல்லது மரங்கள் அவரிடம் எதுவுமே பேசப்போவதில்லை"

"பரந்து விரிந்த தனது ஆயிரம் கைகளால் ஒரு அரவணைப்பை கொடுத்திருக்கலாம்"

அப்பா இறக்கும்வரை அவருக்கும் அந்த மரங்களுக்குமான உறவு தொடர்ந்தது. கடைசிவரை அந்த ரகசியத்தை புரிந்துகொள்ள முடியவில்லை, முடியவில்லை என்பதை விட அதை தெரிந்துகொள்ள பிரயத்தனப் படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அப்பா இறந்த பொழுதைவிட அம்மா அழுதது, அந்த இரு பெரும் மரங்களில் ஒன்றான அரசமரத்தை வெட்டியபோதுதான்.

"எப்போ பார்த்தாலும் இந்த மரத்த சுத்திதான் கிடந்தாரு அந்த மனுஷன், நல்லவேளை இதெல்லாம் பார்க்காமலேயே அந்த மனுஷன் போயி சேர்ந்துட்டாரு"

ம்ம்ம்... எனக்கு ஒன்றும் புரியவில்லை. கடைசி வரை அம்மாவையும் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

காலையில் தபாலில் வந்த அப்பாவின் செட்டில்மென்ட் செக் ஒரு கையிலும் இன்னொரு கையில் தேநீர் கோப்பையையும் வைத்துக்கொண்டு தூரத்தில் நூறு விழுதுகளின் துணையின் நின்றுகொண்டிருந்த ஆலமரத்தை பார்த்துகொண்டிருந்தேன். இப்போது எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, கை நிறைய சம்பளம், அன்பான மனைவி, அமைதியான வாழ்க்கை, என நிம்மதியாக இருக்கிறேன்.

அப்பாவின் நினைவாக நான் நட்டுவைத்த அரசன்செடி இப்போது என்னைவிட உயரமாய் வளர்ந்து விட்டிருந்தது. செடிக்கு தண்ணீர் விட்டுகொண்டிருந்தபோது, உள்ளேயிருந்து மனைவி சொன்னால் "போதும் ஒருநாளைக்கு தண்ணி ஊத்தலைன்ன, செடி ஒன்னும் செத்துபோயிடாது", "வாங்க, வந்து இவனை ஹோம் ஒர்க் பண்ணவைங்க, அப்புடியே ஒங்களை மாதிரி" என்று சொல்லிகொண்டிருந்தாள்.வீட்டுக்குள்ள அம்மா கூப்பிடுறா! போ" என்பது போல என்பதுபோல செடி தலை ஆட்டியது.

உள்ளே போய் மனைவியுடம் சொன்னேன் "எனக்கு அப்பா நியாபகமாவே இருக்கு, எனக்கென்னவோ அங்க மரத்தடியில கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்".

எதிர் வீட்டு குமாரின் மகன் பார்த்துகொண்டிருக்க நான் மரத்தடியை நோக்கி நடக்கலானேன்


கிறுக்கல்கள் 2



காலை நேர பரபரப்பு சாலை, நடந்துவிட்ட விபத்தின் சுவடை சுற்றி, கூட்டம்.
உதவி செய்ய ஒருத்தனையும் காணோம்,
வேடிக்கைப் பார்க்க மட்டும் கூட்டம் என்று

கூடிய ஜனங்களை திட்டிக்கொண்டே வண்டியை வேகமாய் முடுக்கினான்,
வேலை இருக்குல்ல..

அந்த ஜனசந்தடியில் சன்னமாய் பிரிந்து கொண்டிருந்தது ஒரு அப்பாவின் உயிர்.

தியாகிகள் பென்சனில் வாங்கிய அனைத்தையும் பேருந்தில் தொலைத்துவிட்டு
ஒரு வேலையாவது உருப்படியா செய்யிறியா? என்னும்
மருமகளின் கேள்விக்கு பதிலை யோசித்ததில்
தியாகியால் வேண்டாமென்று சொல்லத் தோன்றவில்லை,
பிடிபட்டவனின் 'தரும அடியை'

பால் வாங்க சென்ற மகன் சாலை விபத்தில் இறந்தான்.
ஊரையே எழுப்பியது தாயின் ஓலம் - எப்போபார்த்தாலும்
இதுங்களுக்கு வேற வேலையே கிடையாது,
தூக்கம் கலைந்த கோபம், இரண்டாவது மாடியில் அவன்.

இடுப்பில் குழந்தையுடன், தர்மம் கேட்க்கும் பெண்,
முதுமையால் பிச்சையெடுத்து கொண்டிருந்த பெரியவர்,
என்னை நோக்கி வரும் இவர்களுக்கு
கொடுப்பதற்கென்று ஒரு பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன், நான்.

ஜன்னலின் கம்பியில் தங்கிவிட்ட மழையின் துளியில்
தலைகீழாகத் தெரிகிறது வானம்.

பிரையன் ஆடம்ஸ் ஒரு அறிமுகம்


பிரையன் ஆடம்ஸ், என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சம் தொண்டை கட்டினாற்போல இருக்கும் அவரது குரல்தான். மிக விஷேசமான குரல் அவருடையது. ஏழு கட்டையை விட்டு எட்டாவது கட்டையில் பாடுவதைபோல உச்சஸ்தாயில் பாடுவது இவரின் சிறப்பம்சம். ஆடம்ஸ் ஒரு தலை சிறந்த ரக் இசைப்பாடகர், Stirng Guitar மற்றும் Electrical Guitar வாசிப்பதில் கைதேர்ந்தவர்.

என்னுடைய கல்லூரி காலங்களில் MTV- யில் அடிக்கடி இவரது பாடல்களை ஒளிபரப்புவார்கள். அவ்வப்போது அதை பார்த்தாலும் அதற்கு முன் பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் அவ்வளவாக அறிமுகமில்லை, அதிகம் கேட்டதுமில்லை. ஆனாலும் அவரது வசீகரிக்கும் குரல் சேனலை மாற்ற அனுமதித்ததேயில்லை. "யார்ட இது? இப்படி தொண்டை கிழிய கத்தி பாடுறதுன்னு தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.அதுவும் கிடாரையும் வாசித்துக்கொண்டு அவ்வப்போது நடனமும் ஆடியபடி ஏழாவது கட்டையில் பட்டும் பாடியபடி இருந்த மேடை கச்சேரிகளை பார்த்தேன். (என்னுடைய நண்பனுக்கு ராக் இசையே பிடிக்காது, அவன் Aero Smith என்கிற பாடகரின் பாடல்களை கேட்டுவிட்டு இது என்னடா பாட்டு, என்று சண்டைக்கே வந்து விட்டான்) . ஏரோ ஸ்மித் பாடுவதும் ராக்தான், ஆனால் எனக்கும் அது பிடித்தமானதாய் இருந்ததில்லை.

பிறகு பிரையன் ஆடம்ஸ் பாடல்கள் ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்த பின்னர்தான் அவரது குரலிலும் பாடலிலும் இருந்த மெலடியை அனுபவிக்க முடிந்தது. அன்று முதல் அவரது பாடல்களை விரும்பி கேட்க்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து நான் ரசித்த, முதல் ராக் இசைபாடகர் பிரையன் ஆடம்ஸ். இவருடைய பாடல்களை கேட்ட பின்னர்தான் இவரது முந்தைய தலைமுறை பாடர்கர்களின் பாடல்களை கேட்க ஆரம்பித்தேன்.

"அடியே கொள்ளுதே" பாடலின் முடிவில் சூர்யா வெறும் கையில் கிடாரை வாசிப்பது போல செய்துகொண்டு ஒரு காலை தூக்குவாரே , அது பிரையன் ஆடம்ஸின் ஸ்டைல். அவரது பெரும்பாலான பாடல்களின் முடிவில் இசை முடியும் பொழுது ஒரு காலை மட்டும் இசைக்கு ஏற்றவாறு காலை அசைப்பது அவரது ஸ்டைல்.

பிரையன் ஆடம்ஸ், உலகம் முழுவதும் பலபல சேவை அமைப்புக்களுக்கும்,குழந்தைகளுக்கும்,இளம்வயதினருக்கும் அவர்களுக்கான உயர்படிப்புகளுக்கும், வேலைவாயப்புக்களுக்கும், பெருமளவிக்கு தன்னாலான உதவிகளை "தி பிரையன் ஆடம்ஸ் பவுண்டேசன்" என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் செய்து வருகிறார். மேலும் இயற்கை பேரழிவுகள், போர் போன்ற அழிவுகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று கலைநிகச்சிகள் நடத்தி அதன் வருமானத்தை அந்த நாட்டின் வளரச்சிக்காக செலவிடுவார். அனேகமாக பல வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் கலைநிகழ்ச்சி நடத்திய முதல் ஒரே மேற்கத்திய இசைகலைஞர் இவராகத்தான் இருப்பார். அங்கு நடந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அங்கே நிகழ்ச்சிநடத்தினார்.

இசை தவிர பிரையன் ஆடம்ஸின் மற்றொரு திறமை புகைப்படம் எடுத்தல். புகைப்படம் எடுப்பது என்பது இவரது பொழுதுபோக்கு, இதில் நல்ல அனுபவமும் தேர்ந்த அறிவும் இவருக்கு உண்டு. 2008-ல் ஜெர்மனியை சேர்ந்த லீட் என்கிற அச்சுகலை நிறுவனம் இவரது புகைப்படக்கலையை பாராட்டி "லீட் அவார்ட்" என்ற விருதை கொடுத்தது.

இவரது பெரும்பாலான பாடல்கள், ஒரிவித மென்சோகம் கொண்டதாக இருக்கும். "ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் ஆறு பாடல்களுமே பிரையன் ஆடம்ஸ் இயற்றி பாடியதுதான். அதற்காகவே அந்த படத்தை தேடி தேடி பார்த்தேன். படமும் அருமை. இந்த படத்தின் இறுதியில் வரும் (End Tiltle) "Here I Am" என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்.

அந்த படத்தில் வரும் பாடல்களுக்கான வீடியோ சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.

"Here I am"

http://www.youtube.com/watch?v=R2U9GA-1QX4&feature=related

"This is where I belong"

http://www.youtube.com/watch?v=vaYrEqsmMqg&feature=related

"I will always return"

http://www.youtube.com/watch?v=FB8QeHILXJQ&feature=related

"You can't take me"

http://www.youtube.com/watch?v=hxeIWBECZpU&feature=related

"Get off my back"

http://www.youtube.com/watch?v=G6MmbDhjXLM&feature=related

"Sound the Bulge"

http://www.youtube.com/watch?v=BKh8cTzN8Lc

இதுபோக ஆடம்ஸின் எனது விருப்பப் பாடல்கள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

சம்மர் 69 (Summer 69)
அனேகமாக நான் முதலில் மிகவும் விரும்பி கேட்ட ராக் இசைப்பாடல் இதுவாகத்தானிருக்கும். எலக்ட்ரிகல் கிடாரும் மெட்டல் ட்ரம்ஸுமாக அதிர அதிர ஒரு ராக் பாடல்.
http://www.youtube.com/watch?v=9f06QZCVUHg&feature=channel

தயவு செய்து என்னை மன்னித்து விடு. (Please Forgive Me)
இந்த பாடலும் ஈகிள்சின் "ஹோட்டல் கலிபோர்னியாவும்" என்னுடைய சோனி ஆடியோ பிளேயரில் "All Time Favorites" என்ற பிரிவில் முதலில் இருக்கும்பாடல்கள்.
http://www.youtube.com/watch?v=9EHAo6rEuas&feature=channel


எல்லாமே காதலுக்காகத்தான் (All for Love)
இந்த பாடல் பிரையன் ஆடம்ஸ், ரோட் ஸ்டுவர்ட் மற்றும் என்னுடைய மிகவிருப்பதிர்ககுறிய மற்றொரு ராகிசை பாடகர் ஸ்டிங், இவர்கள் மூவரும் இணைந்து பாடியது. இந்த பாடல் ஆடம்ஸ் மட்டுமே தனித்து பாடிய பதிப்பும் கிடைக்கிறது, இருந்தும் இந்த பதிப்பை இங்கே குறிப்பிடக்காரணம் இந்த பாடலின் ஆரம்பத்தில் ஸ்டிங், ஆடம்ஸ் போல உச்சஸ்தாயில் பாட முயன்றிருப்பார். ஆனால் அவரால் அவ்வாறு பாட முடியாது, அதன்பின் அதே வரிகளை ஆடம்ஸ் வெகு சுலபமாக பாடியிருப்பார். அவசியம்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=n-AB7RJpOjY&feature=channel

நான் இங்கேதான் இருக்கிறேன் (HERE I AM)

இந்த பாடலும் ஸ்பிரிட்: தி ஸ்டாலின் ஆப் காமரான்" என்ற அனிமேசன் படத்தில் பின்னணியில் வரும் பாடல்தான் ஆனால் இது ஆடம்ஸ் நடித்து அவரது விடியோ ஆல்பத்திற்காக வெளியிட்ட பிரத்தியேக விடியோ இணைந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=G6xr6VKg7sE







ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன


ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.60.00

உயர பறக்கும் எதுவானாலும் இறங்கத்தான் செய்யும், ஹெலிகாப்ட்டரானாலும் சரி, காதாலாக இருந்தாலும் சரி. இது ஒரு காதல் கதையா? என்றால் இல்லை. ஆனால் இதில் ஒரு காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல், பாசாங்கு செய்யாமல், எந்த முகமூடியும் இல்லாமல், மிக இயல்பாய் ஒரு பட்டாம்பூச்சியை போல சுற்றி சுற்றி வருகிறது. சிறைப்படுத்த முயலும் கைகளைப் பார்த்தது அது ஏளனமாக சிரிக்கிறது.

முற்றிலும் புதியதொரு அனுபவத்தை புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார், இ.பா. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, அவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாக இதுவரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

தலைப்பு ஹெலிகாப்டராக இருந்தாலும் ஜெத்வேகத்த்தில் பறக்கும்அழுத்தமான படைப்பு - தி.ஜானகிராமன்.


"என்னுடைய இளமையை மீண்டும் வாழ வேண்டுமென்று விரும்புகிறேன்....... அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல் துடிப்பை மீண்டும் நடைமுறைப் படுத்தி வாழ முடியுமா என்பதுதான் என் பரிசோதனை..... கடந்துபோன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதுதான் என் ஆசை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு யயாதி ஒளிந்து கொண்டிருக்கிறான்"

மேலே குறிப்பிட்டுள்ள வரிகள், நாவலிலிருந்து சிலவரிகள் என்று நாவலின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. பொதுவாக எந்த நாவலையும் படித்து முடிக்க இரண்டு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்ளும் நான் இந்த வரிகளில் என்ன விஷேசம் இருந்துவிடப் போகிறது என்ற ஆர்வத்திலேயே நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

திருமணமாகி இருபத்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் திலகம், ஒரு சின்ன ஆபரேசன் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றாலும் ஆப்பரேசனுக்கு பயந்து பிள்ளை பெறுவதையே தவிர்த்து நிற்கும் பயந்த சுபாவம் கொண்டவள். வெகுளி. தனக்கு குழந்தை இல்லாதகாரணத்தால், எங்கே கணவன் தன்னிடம் சுவாரஸ்யம் இழந்துவிடுவானோ என்கிற தாழ்வுமனப்பான்மையோடு வாழும் திலகம்.


அவளின்
வயது நாற்ப்பதுகளில்
இருக்கும் கணவனாக அமிர்தம். ஒரு ரசனையற்ற மனைவிக்கு கணவனாயிருப்பதை மிகப்பெரிய தியாகமாக நினைப்பவன், கூடவே தன்னை அந்த தியாகியாகவும் நினைப்பவன். தன வாழ்வில் தற்ச்செயலாக சந்த்தித்த, (ஒருவேளை அவனுக்கு குழந்தை பிறந்திருந்தால், அவன் மகள் வயதுள்ள) பானு என்கிற பெண்ணின்
ஒவ்வொரு செயல்களிலும் தன் பழைய காதலை நினைவுகொள்கிறான். நாற்ப்பதுகளில் நாய் குணம் என்ற மனைவியின் சொல்லுக்கு பொருளாக, அமிர்தம்.


பானு, எலலா துறைகளிலும் தேர்ந்த ஞானம் கொண்டவளாய், இ.பாவின் கதைகளில் வரும் இண்டலேக்ட்சுவல் கதாபாத்திரம். இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, இவள் போன்ற பெண்களை பாலச்சந்தரின் படங்களில் அதிகம் பார்க்க முடியும். எத்தகைய சூழ்நிலைகளையும் வெகு புத்திசாலித்தனத்துடனும் யதார்த்தம் குறையாமலும் நேர்கொள்ளும் பக்குவம் மிக்க ஒரு கதாபாத்திரம், பானு.


அமிர்தத்தின் கடந்த கால காதலை நினைவுபடுத்தும்படியாக வருகிற பானுவால் நினைவு கூறப்படுகிற முன்னாள் காதலியாக வரும் நித்யா, இவர்களை சுற்றியே பயணிக்கிற கதை.

இந்த நாலு பிரதான கதாப்பாத்திரங்கள் மூலம் வெகு வேகமான ஒரு நாவல்.


மனைவியை ஒன்றும் தெரியாதவளாக பார்க்கும் அமிர்தம், தன்னுடைய ரசனைக்கு ஒத்துபோககூடிய பானுவிடம் தன்னுடைய இழந்த இளமையை வாழ்ந்து பார்க்க விரும்புகிறான். மனைவியின் கோவத்தை அலட்சியப்படுத்தும் அவன் கோவம் பானுவால் அலட்சியப்படுத்தப் படுகிறது. பானுவிடம் ஒவ்வொரு சுழலிலும் அவமானப்படும்போதும் எதுவும் செய்ய இயலாதவனாய் நிற்க்கிறான். தனக்கு நிகரானவள் தனக்கு மனைவியாக இருக்க முடியாது என்கிற ஆண்வர்கத்தின் சாட்சியாக கடைசியில் திலகத்திடமே வந்து சேர்கிற பொழுது திலகமும் அவனை விட்டு விலகியிருக்கிறாள்.

நாவலில் ஒரு சில சுவாரஸ்யமான வரிகள்.
"நீங்க விருப்பபடுற மாதிரி நான் நடந்துக்குறேன், ஆனா அந்த பொண்ணோட அம்மா சொன்ன மாதிரி விரசமா நடந்துக்காதிங்க"

"விரசமா?"

"ஆமாம், நமக்கு ஒரு பொண்ணு இருந்தா, அவளுக்கு இந்நேரம் பதினாறு, பதினேழு வயதிருக்காதா?

"என்னை கிழவனா காட்டுறதுல உனக்கு ஏன் இவ்வளவு அசுர திருப்தி"

"அப்ப, நீங்க இளமையா இருப்பதை காட்டத்தான் இப்படி செய்கிறீர்களா?"

மனைவியின் இந்த கேள்வியால் நிலைகுலைந்து போகிறான், அமிர்தம். இந்த நிலையிலும் கூட இவளாகத்தான் பேசுகிறாளா? இல்லை யாரேனும் சொல்லி கொடுத்திருப்பார்களா? என்று மனதிற்குள் யோசிக்கிறான்.


நாவலின் கடைசியில் டெலிபோன் ஒலிக்கிறது. அது யாராக இருக்கும்? பானுவா? திலகமா? அல்லது பிரம்மையா? அது நமக்கு தெரியவேண்டியதில்லை. இந்த சந்தேகம்தான் சரியான விடை. நாவலின் இடையே வருகிற செய்தியைபோல எது தைரியம்? எது கோழைத்தனம்? என்கிற கேள்விக்கு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பதிலை தந்து கொண்டிருக்கும் என்பதுதான் சரி.