“
இன்னைக்கு ஞாயிறு, பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நாளைக்கு திங்கள், வாரத்தோட முதல் நாள். ஊகும் சான்ஸே இல்லை. மொபைல் இல்லாம நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரத்தைகூட ஓட்ட முடியாது” என்றேன்.
“என்னோட போனை வேணும்னா யூஸ் பண்ணிக்கோடா” இது வெங்கி.
“இல்லடா ஒவ்வொரு முறையும் இந்த மொபைல் காண்டாக்டை ஒவ்வொரு போனா மாத்தி மாத்தி சேவ் செய்யறத நினச்சா எனக்கு பயங்கர கடுப்பா இருக்குடா” என்றேன்.
சொல்லும்போதே இரண்டு நாட்களுக்குமுன் கீழே விழுந்து உடைந்த என் பழைய போனை பார்த்தேன், அதை பார்த்த, அது உடைய ஒருவகையில் காரணமாயிருந்த மது, என்னை நக்கலாக பார்த்தான்.
ஒருவழியாக மழையையும் பொருட்ப்படுத்தாது, என்னை போன்ற மழைவிரும்பிகள் இருவரோடு கிளம்பி விட்டேன். மழை வெகுசன்னமான சாறலாக விழுந்துகொண்டிருந்தது. மணி எட்டரை இருக்கும், ரோட்டில் யாருமில்லை. எனக்கு இதுபோல மழையில் நனைந்தபடி மெதுவாக வண்டியோட்டுவது பிடிக்குமென்றாலும், கடையை மூடும் நேரமென்பதால் நல்ல வேகமாக சென்றேன்.
மேம்பாலம் ஏறி இறங்கும்போதுதான் கவனித்தேன். ஒரு பைக் நடு ரோட்டில் கீழே விழுந்து கிடந்தது. வண்டியின் அடியில் கால்கள் சிக்கியவாறு ஒரு 60 வயது மதிக்கதக்க பெரியவர், உடலில் எந்த சலனமுமின்றி கிடந்தார். வண்டியை நிருத்திவிட்டு அவர் அருகில் செல்லும்போதுதான் தெரிந்தது, உயிரோடுதான் இருக்கிறார் என்பது. விபத்தும் இப்பொதுதான் நடந்திருக்க வேண்டும், வண்டி இன்னும் அணையாமல் ஓடிக்கொண்டிருந்தது.
அவர் வண்டியை எடுத்து நிறுத்தி, அவரை ஓருமாதிரியாக எழுப்பி நடைபாதைத்திண்டில் அமர வைக்கவும், கொஞ்சம் தள்ளி நிருத்தப்பட்ட ஆட்டோவிலிருந்து ஒருவர் மற்ற சில வண்டிகளிலிருந்து சிலரும் என கூட்டம் சேரவும் சரியாக இருந்தது.
“என்னங்க ஆச்சு, இருக்காரா?” என்றார் மிகவும் பதட்டமாக.
“ஏங்க, எப்ப்டிங்க ஆச்சு?” இது இன்னொருவர்.
“ஒன்வே-ல வந்திருப்பாரு போல, வண்டிய பாருங்க இங்கிட்டு பார்த்து நிக்குது” என்றார் புதிதாய் வந்தவர்.
எல்லாத்தும் மேல ஒருத்தர் என்னை மத்தியமாக பார்த்தவாறு ” நீங்க அவ்ளோ வேகமா வரும்போதே நெனச்சேன். இப்படி ஆகும்ன்னு” என்றார்.
அடப்பாவிகளா! இந்தமாதிரி கூட்ட்த்துல பொத்தாம் பொதுவா எதையாவது பேசி வைக்காதிங்கப்பா, பொதுமாத்து போடறதுக்குன்னே ஒரு கூட்டம் சும்மா தின்னுபுட்டு அலையிற காலம் இது என்று மனதிற்குள் நினைத்துகொண்டு “அட ஏங்க நீங்க வேற, அவர் கீழ விழுத்துகிடப்பதைப் பார்த்துவிட்டுதான் நான் என் வண்டியையே நிருத்தினேன்” என்றேன்.
நான் சொன்னது உண்மைதான் என்பதை ஆமோதிப்பதுபோல “ஆமாங்க” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து சினேகமாய் புன்னகைத்தார்.
நல்ல வேளை என் தலை தப்பியது.
அந்த பெரியவர் மழைக்காக ஒரு கோட்டும் அதோடு சேர்ந்த குல்லாவை கழுத்தோடு சேர்த்தும் கட்டியிருந்தார். என்னால் அதை கழட்டவே முடியவில்லை. கையெல்லாம் ரத்தம், எனக்கு உள்ளுக்குள் எதோ செய்தது. ஒருவழியாக பிரித்து தலையை பார்த்தால், நல்ல அடி. எதோ ஒன்று தலைய் கிழித்திருக்கிறது. என் கட்டை விரலளவு, நெளிநெளிவாக பிளந்திருந்தது. ரத்தம் குபுக்கென்று வெளியேறிக்கொண்டிருந்தது, தலையிலிருந்து கழுத்து, கழுத்திலிருந்து சட்டை, அப்படியே கீழே ரோடுவரை வழிந்துகொண்டிருந்தது.
”பெருசு நல்ல மப்பு போல”
”எதுனா பேசுதா, பாரேன்... வலிக்கிற மாதிரி எந்த ரியாக்ஸனும் இல்லை”
“ஏப்பா, அவருக்கு கான்ஷியஸ் இல்லைன்னு நினைக்கிறேன்”
“யாராவது ஆம்புலஸ்சுக்கு போன் பண்ணுங்கப்பா”
எல்லாத்தையும் கேட்டுக்கொண்டே இருந்த அவருடைய தலையில் கர்ச்சீப்பை வைத்து அழுத்தி பிடித்து கொண்டிருந்த எனக்கு போன் என்றவுடன் நண்பனிடம் “அடடே இந்தநேரம் கடைய மூடிட்டிருப்பாங்களேன்னு சொன்னேன். இப்ப இது ரொம்ப முக்கியம் என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான்.
அதுவரை அமைதியாக இருந்த பெரியவர், ஆம்புலன்ஸ் என்றதும் “அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க, சின்ன காயம்தான். கீழ விழுந்த்தில் அடிபட்டிருக்கும்” என்றவாறே நான் பிடித்திருந்த துணியையும் தாண்டி காயத்தை தொட்டு அவர் கையில் ஆன ரத்தத்தை எல்லோருக்கும் காட்டிவிட்டு காலடியில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கைகளை கழுவிக்கொண்டார்.
“சார், ஆம்புலன்ஸ் வர லேட்டாகும் போல, ஒரு வண்டியில கூட்டிட்டு போயிடலாம்ங்க, டி.எம்.எஃப் ஹாஸ்ப்பிட்டல் பக்கத்துலதானே இருக்கு, ரத்தம் போயிட்டே இருக்குங்க” என்றார் ஒருவித பரபரப்புடன்.
எனக்கும் அதுவே சரின்னுபட அவர் வண்டியிலேயே அவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டேன். என்னுடைய வண்டியை நண்பன் எடுத்துக் கொண்டான். திரும்பி கூட்டத்தைப் பார்த்து கேட்டேன் “வேறயாரும் வறீங்களா?
“........ .............. ......”
”இல்லை தம்பீ, நானே உட்கார்ந்துக்குறேன். நீங்க போங்க” என்றார்.
மெதுவாக ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தோம். இடையே அவரது மகனுடைய போன் நம்பரை வாங்கிக்கொண்டேன். அவரை அவசர சிகிச்சைபிரிவில் சேர்த்துவிட்டு மதுவின் போனில் அவருடைய மகனுக்கு போன்செய்து விவரத்தை சொன்னேன்.
“சரி வா, போகலாம். இனியென்ன அவங்க இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவாங்க, அட்மிஷன்ல அவரு பையன் பேரையும், போன் நம்பரையும் கொடுத்துட்டு வாடா, கிளம்பலாம்” என்றான் வெங்கி.
“இருடா இன்னும் பத்து நிமிஷம்தானே, வந்தவுடனே சொல்லிட்டு புறப்படலாம்”
சொன்னபடியே பத்து நிமிஷத்தில் வந்து சேர்ந்தார்கள், காரிலிருந்து பதட்டமாக இறங்கி முன்னால் ஓடியவரிடம் கேட்டேன் “ நீங்க கண்ணனா?”
“ஆமாங்க”
“நாங்கதான் போன் பண்ணோம், ஒண்ணும் பயப்பட்த் தேவையில்லை. நல்லாதான் இருக்கார், போய் பாருங்க” நான் சொல்லிமுடிக்கும் முன்பே ஓடிவிட்டார்.
பின்னால் வாட்டசாட்டமாக வந்தவர், எங்களை பார்த்து கேட்டார் “ யாருங்க உட்டது, நீங்களா?”
அவர் கேட்ட தொணியிலிருந்தே அந்த கேள்வியை சரியாக புரிந்து கொண்ட மது “உட்டதுன்னா?...... இங்க கொண்டுவந்து உட்டதா? இல்லை அவரு வண்டியில கொண்டுவிட்டதா?” என்றான் நக்கலாக.
நான் மெல்ல அவன் கையைபிடித்து அழுத்தியாவாறே “ நாம கிளம்பலாம்” என்றேன்.
இருடா.... பெருசுகிட்ட சொல்லிட்டு போகலாம், இப்போ அவனுக்கு சொல்லிட்டு போவதை விட நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டியதன் அவசியம அதிகமாகிப்போனது.
உள்ளே அவர் தெளிவாக அமர்ந்திருந்தார், அடிபட்ட இடம், ஷேவ் செய்யப்பட்டு தையல் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
மது அவரிடம், ”ஐயா, எப்படி அடி பட்டுச்சுங்க இல்லை எப்படி விழுந்திங்கன்னு, எல்லாத்துக்கும் புரியிற மாதிரி சொல்லுங்க” என்றான்.
”முன்னால போன ஆட்டோகாரன் இடிச்சிட்டான் தம்பி, மழை நேரம்ங்கிறதால ஜன்னலை கண்ணாடி போட்டு மூடியிருந்தான், அதனால என்னை இடிச்சது கூட அவனுக்கு தெரியலை, கீழ விழுத்ததுக்கு பிறகுதான் வந்தான்” என்றார்.
“ எந்த ஆட்டோ, நமக்கு கொஞ்சம் முன்னடி நின்னுட்டு இருந்ததே.. அந்த வண்டியா?” என்றான் மது.
“ஆமா, தம்பீ”
“ஏங்க இதை கொஞ்சம் அங்கேயே சொல்லியிருக்கலாம்ல, ஒரு காட்டு காட்டியிருக்கலாம்ல” இது வெங்கி.
“அதாம்ப்பா சொல்லலை” என்றார் பெரியவர், சிறிய புன்முறுவலோடு.
அப்பாடா நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.
“ஓ! அதான் அவ்ளோ பரந்தானா, அந்தாளு” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன் மேலும் “அந்த விஷயத்தை, பெரியவர் எவ்வளவு ஈஸியா எடுத்துகிட்டாரு என்பதையும் நினைத்தால் ஆச்சர்யமாக இருந்தது. என்னால் இப்படி அடிபட்ட சமயத்தில் இவ்வளவு யோசிக்க முடியுமா? என்பதையும் யோசித்தவாறே ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினோம்.
வெளியே அந்த ஆட்டோகாரன் ரொம்ப பவ்யமாய் நின்றுகொண்டிருந்தான். அவனை நான் அங்கே எதிர்பார்க்கவேயில்லை. எங்களை பார்த்ததும் ஓடி வந்து “சார், அவரு எப்படிங்க? நல்லா இருகாருங்களா?” என்றான்.
நான் சொன்னேன் “ நல்லவரா இருக்காரு”
குறிப்பு : சமீபத்திய தொடர் மழை, மற்றும் சமீபத்தில் விபத்தில் சிக்குண்ட ஒரு வயதான ஒருவருக்கு செய்த உதவி என இந்த இரண்டு நிஜங்களோடு கொஞ்சம் புனைவுகள் கலந்து ஒரு சிறு கதையாக்க செய்த முயற்சி.