இசை அறிமுகம் - ஸ்டரைக்கர்
ரங் தே பஸந்திக்கு பிறகு சித்தார்த் நடித்திருக்கும் ஒரு முழுமையான ஹிந்தி படம். ஸ்ட்ரைக்கர். ஒரு கேரம்போர்டு விளையாட்டு வீரனாக சித்தார்த் நடித்திருக்கிறார். மேலும் பொக்கிஷம் பத்மப்ரியாவும் நடித்திருக்கிறார்கள். பத்மப்ரியா சத்தமில்லாமல் நடித்து முடித்துவிட்ட படம். பட்த்துல பொண்ணு சாரயம் விக்கிற பொண்ணா வருதாம், அம்மணியோட நடிப்புக்கு அவார்டு நிச்சயமென ஏற்கனவே விகடனில் செய்தி வெளியாகியாகிவிட்டது. அப்புறம் ரொம்ப நாளைக்கு பிறகு ஆதித்யா பஞ்சோலி நடித்திருக்கிறார். அனுபம்கேர் இருக்கார் இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகள் படத்தை பார்க்கனும்ங்கிற ஆசையை அதிகப்படுத்தியபடியே இருந்தாலும் ஒரு விஷயம் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது.

நிக்கோலெட்டி பேர்ட்(Nicolette Bird ) என்கிற இந்த குருவிதான். சமீபகாலமா கார்னியர் ஃபேசியல் க்ரீமின் விளம்பரத்தில் இந்த பொண்ணை பார்த்த முதலே தேடிக்கொண்டிருந்தேன். எங்கேயோ பாத்திருக்கேனே? என்று. முதல் முறையாக இந்த பாடலின் ப்ரமோவை பார்த்ததிலிருந்து அடிக்கடி மனசுக்குள் அமர்ந்து கொன்னுட்டு இருக்கு இந்த பொண்ணோட சிரிப்பு. ஸ்மைல்ன்னா இது ஸ்மைல்.

இந்த லின்க்ல பாருங்க. அதுவும் விடியோவின் முடிவில் வரும் அந்த காட்சியில் பொண்ணோட ஸ்மைலையும் ரியாக்க்‌ஷனையும் பாருங்க. இப்பவே சொல்லிட்டேன் எனக்கு புடிச்சிருக்கு, எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியலை. :-)

மெளலா.... மெளலா.... பாடல், பாம்பே...பாம்பே... பாடல் மற்றும் ச்சம் ச்சம் பாடல் பாருங்கள், நிச்சயம் பிடித்துபோகும். எனக்கு தெரிந்து இந்த் பட்த்திற்க்கான ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அழகாக வந்திருக்கிறது. குறிப்பாக சம் சம் பாடல், என் அபிமான பாடகரான சோனு நிகம் பாடியிருக்கிறாராம். என்னால் நம்பவே முடியலை. என்ன ஒரு வாய்ஸ் மாடரேஷன்.

சொல்ல மறந்த ஒரு விஷயம் , நம்ம யுவன் கம்போஸ் பண்ணி சித்தார்த்தோடடு சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார். குத்து.
அந்த பாடலுக்கு இங்கே கிளிக்கவும்

படம் எப்படி இருக்கோ தெரியலை. இல்லை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. பாடல்களை கேளுங்கள். கேளுங்க நல்லா இருந்தா என்ஜாய் பண்ணுங்க.

பாடல்களுக்கு இங்கே சொடுக்குங்கள்

படத்தின் ட்ரெய்லர் பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

ஒரு குளம், இரண்டு கல்

வெகு சமீபத்தில் என் மனதை பிசைந்த இரு நிகழ்வுகள்.
*************************************************************


வழக்கம்போல அலுவலை முடித்துவிட்டு இரவு 10.30க்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு என் வண்டியை எடுத்து சென்றிருந்த நண்பனுக்காக காத்துக்கொண்டிருந்தேன். குளிருக்கு இதமாக ப்ளாக் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தபோது அந்த விபத்து நடந்தது, ஏதோ போட்டி போட்டுக்கொண்டு வந்தபடியாக இருந்த இரண்டு வண்டிகளில் ஒன்று கீழேயும் இன்னொன்று அதிவேகமாக கடந்தும் போயிற்று. சில வினாடிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலையிலிருந்து சற்று விலகி சன்னமாக அசைவுகளோடு அவன் கிடந்தான். நெரிசல் இல்லாத இரவு நேரம், எனக்கு ரத்தத்தை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வரும். சுற்றி முற்றி பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் அவனருகே சென்றபொது மெல்ல புரண்டு படுக்கிறான்.

தெருவிளக்கு ஒளியில் அவன் காது, மூக்குகளிலிருந்து ரத்தம் கசிவதை பார்க்க முடிந்தது. கடவுளே! என்றபடி 108 க்கு போன் செய்துவிட்டு நானும் இன்னொரு நண்பரும் இன்ன சிலரும் அவ்விடம் சேர்ந்தோம். ஈனமான முனகலுடன் மெல்ல உடம்பை அசைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். வேறு சில தனியார் மருத்துவமனைக்கான ஆம்புலன்ஸ்களுக்கும் போன் செய்தோம். விபத்து என்றாலே விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் பிரைவேட் ஆம்புலன்ஸ்களும் அன்றைக்கு காலை வாறியது. கண் முன்னால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் செத்துக்கொண்டிருப்பது போல இருந்தது. பத்து நிமிடம் காத்திருந்தோம்.

அதற்கு மேல் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவன் உயிர் தப்பிப்போய்க் கொண்டிருக்கிறது என்பதால் இரண்டு சக்கர வாகனத்திலேயே அவனை அழைத்துச் செல்வதென முடிவு செய்தபின் அவனை தூக்கி ஒரு வாகனத்திலே அமரச்செய்யும்போது, அவன் குருதி கிட்டதட்ட நனைத்திருந்தது என்னை. வாகனத்தின் பின்னால் நான் அமர்ந்தபடி ஒருமாதிரியாக அவனை எனக்கும் ஓட்டுனருக்கும் இடையில் இருக்கச்செய்யும்போது வந்து சேர்ந்தது 108. மீண்டும் அவனை இறக்கி ஆம்புலன்ஸில் ஏற்றும்போது கிட்டத்தட்ட இறந்திருந்தான். இத்தனை இடத்திலும் அவனை அவன் என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. எவ்வளவு பரிதாபமான சூழ்நிலையிலும் அவன்மீது ஒரு தனியாத கோபத்தை உண்டாக்குமளவிற்கு குடித்திருந்தான்.

எது எப்படியோ, ஒரு மனிதனின் கடைசி நிமிடங்களை வெகு அருகாமையில் பார்த்த அந்த நிமிடம் வாழ்க்கையில் எல்லா பிடிப்புகளும் ஒரு நிமிடம் தளர்ந்துதான் போனது. குடித்தோமோ இல்லையோ விபத்து ஒரு மனிதனின் வாழ்க்கையை நொடியில் திருப்பிப்போட்டுவிடுகிறது. வீட்டிற்கு வந்து கைகளிலிருந்த ரத்தகரையை கழுவிவிட்டு படுத்தேன். ஒருமாதிரியாக போயிருந்த்தது, கைகளில்சரி ஆனால் மனது அப்படியில்லையே!

அந்த இரவும் இந்த இரவும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணிக்கெல்லாம் எழுந்து பா.ராவின் அலகிலா விளையாட்டு படித்துக்கொண்டிருந்தேன். எதேட்சையாக எழுந்த அம்மா “இந்த பிளாக் எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்ச, இப்படி கண்ட நேரத்துக்கும் புத்தகமும், கம்ப்யூட்டருமா இருக்க என்றபடி அவர்களுக்கு தெரிந்த பதிவர்களின் பெயர்களாய் சொல்லி திட்டியபடி கடந்து போனார்கள். பாவம் அவர்களுக்கு அவர்களின் மகனின் தூக்கம் பெரிது.***************************************************************************


வெள்ளி கிழமை, மாலை 5 மணி. வங்கியில் எனக்கான காசோலை புத்தகத்திற்காக காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமையா? வேறேதும் விஷேசமா? தெரியவில்லை. வங்கியில் ஐயர்களைக் கொண்டு பூசை செய்துகொண்டிருந்தார்கள். பூசை முடித்துவந்ததும் காசோலை கொடுப்பதாக சொல்லிச் சென்ற காசாளருக்கு காத்திருக்கும்போது கவனித்தேன். எனக்கு பின்னாலிருந்து வந்த விசும்பலை. உடனடியாக திரும்பிபார்த்தால் சங்கடமாக உணர்வார்களோ என்றெண்ணி சற்று தாமதித்து திரும்பிப்பார்த்தேன். என் பெரியம்மா வயதையொத்த பெண்மணி கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருந்தார்.

என்னம்மா பணம் எடுக்க வந்திருக்கிங்களா? என்றேன் பொதுவாய்.

அவர்களைத்தான் கேட்க்கிறேன் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பார்வையுடன் மெல்ல பேச ஆரம்பித்தார்கள் “ ஆமாம், தம்பி”

ஏன் அழறிங்க என்று கேட்கத்தோணியது.

“ரெண்டு வருஷமா சேர்த்து வச்சி ஒரு மூவாயிரத்தை போட்டு வச்சிருந்தேன், இப்போ வட்டி போட்டு மூவாயிரத்தி ஐநூறு இருக்கு, ஒரு நூறு ரூபாய எடுத்துட்டு மிச்சத்த போட்டு வச்சா இன்னும் ரெண்டு வருஷத்துல இன்னியொரு ஐநூறுக்கு கூடவோ குறையவோ கிடைக்கும்ல” என்றவர் சிறிய மெள்னதிற்கு பிறகு “ரெண்டு வருஷத்துக்குள்ள என்ன செத்தா போயிடப்போறோம்” என்றார்.

“ஆமாம், அதனால என்ன?”

“ஒரு ரெண்டுவருஷம் கழிச்சு இந்த பணத்தை மவனுக்கு கொடுத்தா எதாவது செய்து பொழச்சிக்குவான், ஆனா மவளுகளுக்கு மட்டும் கொடுக்கமாட்டேன், தம்பி”

“ஏன் அப்படி?”

“எப்போ பாரு, நீதான் மில்லுல வேலை செய்றல்ல, பெரிய இன்ஜினியர்கிட்ட சொல்லி எதாவது வாங்கிக்கொடுன்னு கேட்டுகிட்டே இருப்பாளுக”, “போனமாசம் கூட இப்படித்தான் தம்பி, ஒருவருஷமா சீட்டு போட்டு சேர்த்து வச்ச ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய எடுத்து கொடுத்தேன், அதையும் வாங்கிட்டு இப்போ கேட்டதுக்கு, இப்பதானடி கொடுத்தேன்னு சொன்னா, ஆமா என்னத்த கொடுத்த, நீ கொடுத்தத வச்சுத்தான் ரெண்டு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருகேன்னு எளக்காரம் பண்ணுறா” என்றார்.

என்றவர் தொடர்ந்து “ 27 வருஷமா இந்த மில்லுல வேலை செய்யுறேன், பஞ்சு குப்பைகளை கூட்டி பெருக்கனும், வாரம் எம்பத்தியஞ்சி ரூபா சம்பளம், எனக்கு சோத்துக்கு போக கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துவச்சி சீட்டு போட்டு, இப்படி பேங்குல ஆர்.டி போட்டு சேர்த்து ஏதோ என்னால முடிஞ்சத நானும் செஞ்சிட்டுதான் தம்பி இருக்கேன்”

“இருந்தும் என்னை இங்க வாங்கிட்டு வா அங்க வாங்கிட்டு வான்னு எப்போ பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்குறா”

“போயிச்சேரலாம்ன்னா அந்த எளவும் வந்து சேர மாட்டேங்குதுன்னு சொன்னபடி மறுபடியும் விசும்ப தொடங்கினார்.

எனக்கு அவரை, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமைதியாக அவர்களை பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்த்தபடியாக தெரியவில்லை. ஒருவேளை என்னிடம் இறக்கி வைத்ததில் அவர்களின் சுமை குறைந்திருக்கலாம்.

எனக்கு, மாதம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் சம்பாதிச்சாலும் கடைசி வாரத்துல அஞ்சு பத்துன்னு தேடிக்கிட்டிருக்கிற எனக்கு வாரம் ரூ.85-ல் பொழப்பு நடத்தி பொண்ணுக்கு கல்யாணமும் செஞ்சி வச்சி இன்னமும் தன்னால முடிஞ்ச பணத்தை தன் பிள்ளைகளின் எதிகாலத்திற்கென சேர்த்து வச்சிகிட்டிருக்கிற அந்த பெரியம்மா, அதிசயமா தெரிஞ்சாங்க. அதிலும் “ரெண்டு வருஷத்துக்குள்ள என்ன செத்தா போயிடப்போறோம்” என்று அவர்கள் சொல்லும்போது வாழ்கையின் மீதான அசாத்திய நம்பிக்கையை அவரின் குரல் வழியாக உணர முடிந்தது.

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

மூன்று ஏமாற்றங்களும் ஒரு சமாதானமும்                     பதிவர் அனு அவர்களின் மூலமாக வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் பவா.செல்லத்துரை அவர்களை சந்திப்பது, திருவண்ணாமலையில் அவரது வீடு பற்றி பேசிக்கொண்டிருப்பது, “மரப்பாச்சியின் சில ஆடைகள்” புத்தகத்தின் மூலமாக, பிரபல பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எழுத்துக்களினிடையே என் எழுத்தையும் பதியச்செய்த தோழர்.மாதவராஜ் அவர்களை நேரில் சந்தித்து, அவர் கைகளை பற்றி நன்றி என்று சொல்லவேண்டுமென்பது, எனது ஆதர்ச எழுத்தாளரான எஸ்.ராவை சந்திப்பது, ஆதி, தண்டோரா, நர்சிம், அப்துல்லா என பதிவுலகமே அறிந்த இந்த நட்பு வட்டத்தினூடே சில மணிகளை செலவழித்தல், கேபிள் சங்கருடன் திரைப்படம் மற்றும் சிறுகதைகள் குறித்து பேசவும், வண்ணத்துபூச்சியாருடன் சேர்ந்து ஒரு உலக படமாவது பார்ப்பது, மகாபலிபுரம் கடற்கரை கோவிலுக்கு செல்வது, பப்பி அக்கா வீட்டில் தங்குவது என இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்கான சென்னை பயணத்தின் திட்டங்களை வெகு அருமையாக வகுத்து வைத்திருந்தேன்.

                          நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்குமென்பது போல, இதற்கு தகுந்தாற்ப்போல பொங்கலுக்கு வெகுமுன்னதாகவே முடிகப்பட்ட புத்தகத்திருவிழா அட்டவணையோடு சேர்ந்து சதி செய்தது என் அலுவலக ஆணிகள். எப்போதுமில்லாதபடி அலுவலகத்திலிருந்த ஏகப்பட்ட ஆணிகளை புடுங்கியபிறகுதான் தெரிந்தது நான் புடுங்கியது பூராவுமே தேவையில்லாத ஆணிகள்தானென்று. ம்ம்… . ஆக போட்டுவைத்த அனைத்து திட்டங்களும், புஸ்சென்றானது. இங்க இருந்ததுக்கு அங்கயே போயிருக்கலாம்னு, எப்போதும்போல சமாதான பேச்சுக்களினூடே கடந்துபோனது, இந்த வருடத்திற்கான முதல் ஏமாற்றம், மிகப்பெரியது.

-------------------------------------------------------------------------------------------

                         தொன்னைமரமென்று எழுதியதற்க்காக மடங்க பிடித்த புறங்கை முட்டிகளில் ஸ்கேலால் அடித்தேனும் குறைக்கச் செய்த மேரி டீச்சர்கூட ஒருகட்டத்தில் அயற்ச்சியால் விட்டுவிட்ட, எவ்வளவு முயற்சி செய்தும் அடியோடு விடமுடியாத என் எழுத்துப்பிழையை, ஒவ்வொரு முறையும் அதை கவனத்தோடு படித்து இது தவறு, இங்கே இப்படி இருந்திருக்கலாம் என அர்ச்சனைகளையும் அலோசனைகளை நிறையத்தரும் இனிய நண்பர்களில் மிகமுக்கியமான ஒருவர், ஆதிமூலகிருஷ்ணன். ஏனைய இருவர் வெயிலான் மற்றும் கிருஷ்ணபிரபு. இதில் ஆதி அவர்கள் கடந்த சனி இரவு திருப்பூர் வந்திருந்தார். இப்படி ஒரு சந்திப்பு, எந்த திட்டமிடலுமின்றி வெகு எளிதாக அமையபெற்றது, அனுபவமிக்க பதிவர்கள் பரிசல், வெயிலான், ஆதி ஆகியோரின் கூட இருந்து அவர்களின் அனுபவத்தை, பகிர்வை, நிச்சயம் பாட்டு பாடியிருப்பார்கள் அதை என எல்லா இனிய நிகழ்வுகளையும் நிகழ்வின் நெருக்கத்தையும் ஒருசேரக் கெடுத்தது, அவதார் 3D ( 3D இதை அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்). யோசிக்காமல் புக் செய்துவைத்த டிக்கெட்டுகளால் விட்டுப்போனது, இன்னுமொரு பெரிய ஏமாற்றம்.

                       மிகவும் வருத்தமாக இருந்தது. திருப்பூரிலேயே இருந்துவிடுவதா? இல்லை அவதார் பார்க்க கோவை செல்வதா என்ற முடிவெடுக்க முடியாமல் சிரமப்பட்ட வேலையில், உங்களை மிஸ் செய்வதும் கஸ்டமாயிருக்கு அதே நேரம் உங்களை இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்தவும் விருப்பமில்லை, ஏனேனில் நானும் ஒரு சினிமா காதலன் என்று பெருந்தன்மையாக சொல்லி அனுப்பிய பரிசல்காரனுக்கும், இதுவரை படம் பார்க்கவில்லையெனில் அவசியம் பாருங்கள், இது ஒரு நல்ல எக்ஸ்ப்பீரியன்ஸா இருக்குமென சொல்லியனுப்பிய ஆதிக்கும் எனது நன்றிகள்.

                   அதிலும் உங்களை ஏன் அதிகம் கட்டாயப்படுத்தவில்லையென்றால், நீங்கள் போகவிருந்த தியேட்டரில் பணிபுரியும் நண்பருக்கு போன் செய்து கேட்டேன், வருகிற 14ஆம் தேதியிலிருந்து பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியிட இருப்பதாக சொன்னார்கள், ஆக நீங்க இன்னைக்கு பார்க்கலைன்னா அப்புறம் பார்க்கவே முடியாதுன்னு தோணுச்சு அதான்.. என்று என்னிடம் சாட்டிய பரிசல் சொன்னார். ரியலி தேங்க்ஸ் தல. உண்மையில் அந்த இரவை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றம்.

--------------------------------------------------------------------------------------

                ஆதி அவர்களை ஈரோடிலிருந்து திருப்பூரில் விட்டுச்செல்வதற்க்காக வந்திருந்த பதிவர்கள் வால்பையன், கார்த்தி மற்றும் அவரது நண்பர் பூபதி (இவருக்கான அறிமுகம் பூபதி போன்ற உற்சாகமான மனிதரை நான் சமீபத்தில் சந்தித்ததில்லை. பார்த்த மாத்திரத்தில் நண்பராகிறார் எல்லோரிடமும். பரிசலின் இந்த பதிவில் இருக்கிறது) அனைவரையும் சந்தித்துவிட்டு ஒருவழியாக கோவையில் பத்துமணிக்கு ஆரம்பிக்கப்போகும் அவதார் படத்திற்கு திருப்பூரிலிருந்து 9.10 மணிக்கு கிளம்பினேன்.

                   அவசர அவசரமாக வண்டியோட்டி எப்படியோ படம் ஆரம்பித்த பதினைந்து நிமிடங்களுக்குள் போய் சேர்ந்து விட்டேன். படம் வெளியாகி கிட்டதட்ட ஐம்பது நாட்களை நெருங்கிவிட்டதாலோ அல்லது படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் சிலாகித்து எழுதியிருந்த எல்லா பதிவுகளையும் படித்ததாலோ என்னவோ, படத்தோடு ஒன்றவே முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் CG செய்யப்பட்ட பொய் பிம்பங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை மாற்றவே முடியவில்லை.

                  சில வருடக்களுக்கு முன் அனிமேஷன் கற்றுக்கொள்ளும் ஆசையில் 3D Studio Max என்ற ஒரு டிசைனிங் சாஃப்ட்வேரை படித்தேன். மூன்றுமாத அரைகுறை அறிவில் ஒரு பந்து தரையில் பட்டு மேலே எழும்புவதை ஒரு காட்சியாக செய்ய நினைத்தேன். தரையில் ரப்பர் பந்துமோதும்போது ஏற்படும் நெளிவுகளுக்காக என் ஒருவார உழைப்பு தேவைப்பட்டது என்பதை நினைவில் வரவே என் கவனம் முழுவதும் படத்தின் டெக்னிக்கல் பகுதியிலேயே இருந்தது. எத்தனை பெரிய உழைப்பு ஒழிந்துகொண்டிருக்கிறது ஒவ்வொரு காட்சியின் பின்னும் என்பதை நினைக்கும்போது ஆயாசமாக உணர்கிறேன். என்ன இருந்தாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற எனக்கு அவதார் ஒரு ஏமாற்றமே.
-------------------------------------------------------------------------------

                  பதிவர் கிருஷ்ணபிரபு வாங்கி அனுப்பிய புத்தகங்கள் என் கைக்கு வந்து சேர்ந்தது. அவசர அவசரமாக பிரித்துப்புரட்டினேன், மரப்பாச்சியின் சில ஆடைகளை. பட்டாம்பூச்சி பார்த்தல்…, முரளிகுமார் பத்மநாபன்…. என் கதை… என் பெயர் புத்தகத்தில் அச்சாகப்பார்க்கும்போது என் மகிழ்ச்சியினை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. கடந்த ஒரிரு நாட்களாக ஏமாற்றங்களினுடே பயணப்பட்டவனுக்கு யாரிடம் இதை சொல்லி சந்தோஷப்படுவது எனத்தெரியாமல் மனதிற்குள்ளேயே சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டேன். மனசு சங்கடப்பட்டு் கிடக்கும் நேரத்தில் இதுபோல ஏதாவது சின்ன சின்ன சந்தோஷங்களில் தானகவே ஆசுவாசப்பட்டுக் கொள்ளும் மனிதமனம், ஒரு விஷேசம்.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

மனங்கவர்ந்த பாடல்கள்

PATHIVARKAL ANAIVARUKKUM ENATHU INIYA ANGILA PUTHTHAANDU VAAZHTHUKKAL
                வருடாவருடம் சபரிமலைக்கு செல்லும்பொழுது பொதுவாக வாடகை கார்களில் செல்வதுதான் வழக்கம், இந்தமுறை நண்பரின் காரிலேயே செல்ல முடிவெடுத்ததாலும், நாங்களே கார் ஓட்டிசெல்ல வேண்டியிருந்தாலும் ஏதாவது நல்ல பாடல்கள் இருந்தால் செல்லும்பொழுது நெடிய பயணத்தை தோதாக்கிக்கொள்ள வசதியாக இருக்குமென பழைய பாடல்கள் அடங்கிய இசைதட்டுக்களை வீட்டில் தேடிக்கொண்டிருந்தேன். எப்பொழுதோ பதியப்பட்டு கிடந்த GOLDEN HITZ என்ற சிடி கண்ணை உறுத்தவே அதையும் எடுத்துகொண்டேன்.

                 போகும்போதும் வரும்போதும் நிறைய பாடல்கள் கேட்டோம், ஆனால் ரொம்ப நாளைக்கு பிறகு கேட்ட சில ஆங்கில, ஹிந்தி ஆல்பங்கள், அப்படியே மனதை குளிரச்செய்தது. ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன்பு அந்தப்பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வுகள், நினைவுகளாய் வந்துபோனது. அதிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக,
                 1977 களின் முற்பகுதியில் வெளிவந்த ஈகிள்ஸ் குழுவினரின் ஹோட்டல் கலிபோர்னியா என்ற ஆல்பத்தின் தலைப்புப் பாடல் இது. 1978 ஆம் ஆண்டு இசைக் கலைஞர்க்கான உயரிய விருதான கிராமி விருதினை வென்றது. இன்றளவும் உலகின் தலை சிறந்த நூறு பாடல்களில் முதல் முப்பது இடங்களில் இடம்பெறுகின்றது இந்த பாடல். பொதுவாக ஈகிள்ஸ் குழுவினரின் பாடல்களில் அதிக ஆடம்பரமான இசையை நீங்கள் காணமுடியாது. பாடலை தெளிவாக கேட்க்கும் அளவுக்கு மெல்லிய இசை பாடலோடு பொருந்தியிருக்கும். Strings Guitar எனப்படும் தந்தி கிடார் மற்றும் Basic Drum மூலமாகவே ஒரு தெளிவான இசையை கொடுத்திருப்பார்கள். இசை பிரியர்கள் அனைவரும் நிச்சயம் கேட்க வேண்டிய பாடல். நீண்ட பயணத்தின் போது ரம்மியமான இசையை கேட்க்க விரும்புபவர்களுக்கு இந்த பாடல் என்னுடைய சிபாரிசு.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

               அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பாடகர். பழைய ஹிந்தி நகைசுவை நடிகர் மெகமுத் அவர்களின் மகன். லக்கி அலி ஒரு பாடகர், இசையமைப்பாளர், தற்சமயம் ஒரு நடிகரும் கூட. லக்கி அலி இதுவரை ஆறு தனி ஆல்பங்கள் பாடியுள்ளார், எல்லா ஆல்பங்களும் பலத்த வரவேற்பிற்குட்பட்டவையே.

              இவரது ஸ்பெசல் இவரது குரலில் உள்ள சோகம், அதுதான் இவரது பலமும் கூட. பொதுவாக இவரது பாடல்களும் மெலடி வகைகளே. நான் பள்ளியில் படிக்கும்போது, வெளியான இந்த பாடல், அடிக்கடி எம் டீவியில் பார்த்துகொண்டிருப்பேன். இவரது எல்லா தனிப்பாடல்களும் ஒரே ஒரு கருவியிலான மெல்லிய இசையோடு தொடங்கி முடிவதைப் பார்க்க முடியும். பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பும் சரி பாடல் முடிந்த பின்னரும் சரி குறைந்தது 30 வினாடிகளாவது பாடலோடு சம்பந்தப்பட்ட ஒரு மெல்லிய இசை தொடர்ந்து கொண்டேயிருக்கும். காட்சியமைப்பிலும் பாடலிலும் நம்மை உட்புகுத்திக் கொள்ளவும், மெல்ல வெளியே வரவுமே இந்த யுக்தி என்பது என் கருத்து.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்


                  சோனு நிகம், ஜீன்ஸ் படத்துல வரும் வாராயோ தோழி வாராயென் தோழின்னு ஒரு பாட்டு வருமே அந்த பாடலை பாடியவர் இவர்தான். அனேகமாக அதுதான் இவரது முதல் தமிழ்பாடல் இதுவாக தான் இருக்கும். இவர் எளிதாக திரைத்துறைக்கு வந்தவர் இல்லை, முதலில் திருமணங்களில் பாடிவந்தார் பிறகு தொலைகாட்சிகளில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திவந்தார், இசையின் மீது இவருக்கிருந்த ஈடுபாடு தொடர்ந்து சினிமாவில் பாட முயற்சி செய்துகொண்டே இருக்கச்செய்தது. இன்று 300 திரைப்பாடல்களுக்கும் மேலாக பாடியிருக்கிறார். பத்துக்கும் மேற்ப்பட்ட தனி ஆல்பங்கள் வெளியிட்டிருக்கிறார். மிகவும் மென்மையான குரல் இவருடையது. இவரது பாடலகள் பொதுவாக மெலடியாகவே இருக்கும்.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

இணைப்பாக இன்னுமொரு முக்கியமான பாடல் எல்லோரும் கேட்டிருப்பீர்கள், கல் ஹோ நா ஹோ பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்.              இவரை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும், பாய்ஸில் நெஞ்சமெல்லாம் காதல் பாடல் உட்பட தமிழிலில் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். வேகமாக கீபோர்ட் வாசிப்பதில் கில்லாடி, ஆசியாவின் ஃபார்ஸ்டஸ்ட் கீபோர்ட் ப்ளேயர் இவர் என்று விருதுகூட வாங்கியிருக்கிறாரென சொல்ல கேட்டிருக்கிறேன். இந்த பாடலில்கூட அவரது கீபோர்ட் பகுதி ஒன்றிருக்கிறது பாருங்கள், கேளுங்கள்.

பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்                  ஹிந்துஸ்தானி பாடகர், கஜல் குரு, பாடலாசிரியர் இன்னும் நிறைய அறியப்பட்டவர். இவரது பாடல்கள் பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அவ்வளவு பாடல்கள் இருக்கிறது. இருந்தாலும் நேற்றுக்கேட்ட அந்தப்பாடல் இங்கே. பாடலைப்பார்க்க இங்கே சொடுக்கவும்

                 இன்னும் சில பாடல்கள் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். உங்களின் வரவேற்ப்பையும் பின்னூட்டங்களையும் கொண்டே இதை தொடரலாமென்றிருக்கிறேன். உங்கள் ரசனையோடு ஒத்துபோகும் பட்சத்தில் இந்த பாடல்கள், எந்த ஒரு வெறுமையான சூழ்நிலையிலும் மனதிற்கு கூழாங்கல்லின் குளுமையை தரக்கூடியது.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)