விண்ணைதாண்டி வருவாயா?             படத்திற்கு போவதற்குமுன் ட்ரெய்லர் பார்த்தேன், ட்ரெய்லரில் வழக்கம்போல ஹீரோ கதையை, நேரேட் செய்வதுபோல இருந்தது. போச்சுடா மறுபடியும் ஒரே ஸ்டைலில் அடுத்தபடத்தையும்  செய்கிறாரே என்று அலுப்பாய் இருந்தது. ஆனால்.....

             விண்ணைதாண்டி வருவாயா படம் பார்த்தாகிவிட்டது, படம் பற்றி நிறைய கருத்துக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தமான மெலோ டிராமா வகையை சேர்ந்த படம். ரொம்பவே பிடித்துப்போனது. சிம்பு சான்ஸே இல்லைப்பா, கலக்கிட்டாரு மனுஷன். நல்ல மெச்சூரிட்டி, ஹேண்ட்சம்மாவும் இருக்கார். அடுத்தபடம் மணிரத்னம் படமாமே? ஜாமாய்ங்க, சிம்பு.

             எனக்கு இந்த படம் பிடித்துப்போக இரண்டு அதிமுக்கிய காரணம், ஒன்று ரகுமான் இன்னொன்று மனோஜ் பரமஹம்சா. ரெண்டு பேரும் இந்த பட்த்துக்கு அவ்ளோ மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் ரகுமான் ஏரோமலே பாடலின் கிடார் இசையை மெல்ல வாசிக்க, கதாநாயகன் கார்த்திக்கின் பார்வையில் படம் விரிகிறது. ஒவ்வொரு ஷாட்டாக படம் தொடர தொடர இசை மெல்ல மனதிற்குள் வியாபிக்கிறது. ரகுமானுக்கு ஏன் ஆஸ்கார் குடுத்தாங்கன்னு புரியலைங்கிறவங்க இந்த படத்தை ஒருமுறை பாருங்கள். கேளுங்கள். படம் ஆரம்பித்த முதல் 30 நிமிடத்திலேயே முடிவு செய்துவிட்டேன், மறுபடியும் பார்க்கனும் என்று.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ ..

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே!

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?

*****************************

வண்ணவண்ண பட்டுபூச்சி

பூத்தேடி பூத்தேடி அங்குமிங்கும் அலைகின்றதே
சொட்டுசொட்டாய் தொட்டுசெல்ல

மேகமொன்று மேகமொன்று எங்கெங்கோ அலைகின்றதே

பட்டுபூச்சி வந்தாச்சா?
மேகமுன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறாய், நான் குழந்தையாகிறேன்.
உன்னை அள்ளி கையில்வைத்து பொத்திக்கொள்கிறேன்
என்மீது அன்பு கொள்ள, என்னோடு சேர்ந்து செல்ல
ம் என்று சொல்லு போதும்.

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறுஇதயம் தருவேன் நீ உடைக்கவே

                 (ரொம்ப நாளா பரிசல் கேட்டுகிட்டே இருந்தார், மறு இதயம்ன்னு ஏன் சொல்றாங்கன்னு, ஹீரோயின் ஜெஸி, ஒரு கிருத்துவ பெண் என்றதும், ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்ற பைபிளின் வாசகத்தைக் கொண்டு இவரிகளை அமைக்க ரகுமானே உதவியதாக கெளதம் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்)

           (விஜய் பிரகாஷ், பாடிய பாடல், முதலில் ரகுமான் தான் பாடியிருப்பரென நினைத்தேன், ஓம் சிவ ஓம் என்ற நான் கடவுள் பட பாடலை பாடியவர். என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன், நம்பவே முடியலை)

******************************************
                ஏரோமலே பாடல்வரிகளின் அர்த்தம் புரியவில்லை, ஆனால் இசையே ஒரு மொழியாகிற பொழுது அது அவ்வளவு முக்கியமாய் படவில்லை. மனுஷன் என்னமா ஃபீல் பண்ணி பாடியிருக்கிறார். இந்த பாடலை கேட்பவர்கள், ஆரம்பத்தில் வரும் கிடாரையும் பாடலின் கடைசி 20 வினாடிகளையும் தவறவிடாமல் கேளுங்கள்.

******************************************

              படத்தோட முதல் ப்ரேமிலேயே ராஜீவ் மேன்னுக்கு நன்றி சொல்கிறார்கள், விண்ணைதாண்டி வருவாயா என்ற கவித்துவமான தலைப்பிற்கு. முதல் ஷாட்டில் சிம்புவின் வசனம்

காதலை தேடிப்போக முடியாது, அது நினைக்கனும், அதுவா நடக்கனும்,

நம்ம போட்டு தாக்கனும், தலைகீழா போட்டு திருப்பனும்

எப்போதும் கூடவே இருக்கனும், அதான் ட்ரூ லவ்.

எனக்கு அது நடந்தது,

சோ, ஆக்ட்சுவலா நான் ஜெசிய ச்சூஸ் பண்ணேன்

என்னை அடிச்சது அந்த காதல்....

உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க

நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்?


                     படம் முழுக்க இதை கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவர்களாய் அதை சொல்லவில்லை. ஆனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. பொதுவா கெளதமின் வசனங்கள் ரொம்பவே செயற்கையாக இருப்பதாய் தோன்றும். அவசியமாக திணிக்கப்பட்டதுபோல இருக்கும் அவரது வசனங்கள். விண்ணைதாண்டி வருவாயா படத்தில் வசனங்கள், அத்தனை பொருத்தம் படத்திற்கு. வாழ்த்துக்கள் கெளதம்.

*******************************************

                       இரண்டு நாட்களுக்குமுன்பு என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள் என்ற பதிவெழுதியிருந்தேன். முதல்காதலை நியாபகப்படுத்திய அந்த ஓரிரு தினங்களிலேயே இப்படி ஒரு படத்தைப் பார்க்கிறேன். என் வாழ்கையோடு ரொம்பவே ஒத்துபோகக்கூடிய காட்சி அமைப்புகள். ஒவ்வொரு காட்சியிலும் என்னை சம்பந்தப்படுத்தியே பார்த்துக்கொண்டிருந்தேன். சத்தியமா இது எனக்கு மட்டும் இல்லை. வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிமிடத்தில் காதலித்தவர்களுக்கும், காதலிக்கப்பட்டவர்களுக்கும் இப்படி ஒரு உணர்வு தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.முதல் பாதி ஓக்கே, இரண்டாவது பாதி ஸ்லோ, ஒரு தொய்வு இருக்கு என்பவர்கள். அந்த தொய்வின் பாதிப்பை படம் முடிந்து சில மணி நேரங்களியே உணரக்கூடும். நிச்சயம் இந்த படத்தை ஸ்லோவாகத்தான் செய்ய வேண்டும். பொதுவாகவே கெளதமின் கதை மாந்தர்கள் இண்டெக்ட்சுவலாக இருப்பர்கள். அவர்களின் பார்வையில் எதுவுமே புதிதாக இருக்கும். அது மறுபடியும் நடந்திருக்கிறது, இந்த திரைப்படத்தில்.

********************************************

கெளதம் மேனன், இந்த மனுஷனுக்கு மட்டும் பாட்டெல்லாம் எப்படி அமையுதுன்னு தெரியலைங்க, இவருடைய எல்லா படங்களும் மியூசிகல் ஹிட். BEFORE SUNRISE, SUNSET மாதிரியான படங்கள் தமிழில் வருமா? வந்தாலும் வெற்றிபெருமா? என்றிருந்த சந்தேகம் இந்த படத்திற்கு பிறகு குறைந்துவிட்டது.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

என் நாட்குறிப்பிலிருந்து சில பக்கங்கள்


பிப்டீன் போனது சிக்ஸ்டீன் வந்தது
தாவணி பார்த்தேன் மீசை வந்தது
தடவிப்பார்த்தேன் பருக்கள் இருந்தது
உன்னாலே!.

சென்ற வாரம் கலகலப்ரியாவிடமிருந்து தொடர்பதிவிற்காக ஒரு அழைப்பு வந்தது. தலைப்பு சரியாக புரியாமல் என்ன எழுதனும் என்று அவர்களையே கேட்க, ப்ரியாவும் அதானே, நானும் எழுதிட்டேன், இந்தாங்க இந்த பதிவுகளை பாருங்க அப்புறம் எழுதுங்க, என்றார். அவர் சுட்டிய பதிவுகளை படித்ததில் பதின்ம வயது டைரி குறிப்புகள் போல என்று முடிவுக்கு வந்தேன். ஏதாவது விஷயம் கிடைக்குமா என என் பதின்மவயதில் நான் உபயோகித்த நாட்குறிப்புகளை தேட முதல் பக்கத்திலேயே கிடைத்தது. அவளுக்காக நான் எழுதிய முதல் கவிதை. இனி அதை தவிர வேறு எதை எழுதினாலும், பாவம் பீடிக்குமென என முதல் காதலை எழுதியிருக்கிறேன். சுவாரஸ்யத்திற்காக எதையும் கூட்ட குறைக்கவில்லை. உள்ளது உள்ளபடி.(ஆக, மொக்கையா இருந்தாலும் வேற வழியில்லை, படிங்க)

 பள்ளி முடிந்தது, வீடு திரும்பியதும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் ஒருமுறை குளித்து ஆறு மணிக்கு கோவிலுக்கு சென்றுவிடுவேன். எங்கள் காலனியிலுள்ள எல்லா தேவதைகளும் கோவிலுக்கு வரும் நேரம். கூடவே அவளும். பரீட்சையில் நல்ல மதிப்பெண்களுக்காக எல்லா பெண்களும் கோவிலை 108 சுத்து சுத்துவாங்க, தினமும்.  நாங்கள் அவர்களையே சுற்றுவோம்.

தேவதைகள் வரம் வேண்டும் அரிய காட்சி அங்கே தினமும் நடக்கும். பொதுவாக இது உன் ஆள், இது என் ஆள் என்று பிரித்துகொள்ளும் நண்பர்கள், (சும்மானாச்சுக்கும், ஒரு கிக்குக்காக, இது அந்த தேவதைகளுக்குகூட தெரியாது. ஒருத்தன் ஆளை இன்னொருத்தன் பார்க்க கூடாதுங்றது எங்களுக்குள்ள ஒரு ஜெண்டில்மேன் (?) அக்ரீமெண்ட்) சுமாராக இருக்கும் எனக்கு சூப்பராகவே இருக்கும் அவளை விட்டு வைத்தது ஆச்சர்யம். ஆக அவள் என் ஆள் என்பது தானாகவே அமைந்த்து.
       
      ஒரு நாள், நண்பனின் பட்டறையில் வெள்ளி கிழமை பூஜை முடிந்து அன்று கோவிலுக்கு வரும்போது மணி ஏழு இருக்கும். அவள் தங்கை என்னிடம் ‘எவ்ளோ நேரமா அக்கா வெயிட் பண்ணிட்டு இருக்கா தெரியுமா? சீக்கிரம் போங்க என்றாள். ஏன் வெயிட் பண்ணனும்? என்ன இது புதுசா? இப்படி மனசு நிறைய கேள்விகளோடு கோவிலுக்கு போனேன். எல்லாரும் பிரகாரத்தை சுத்திகிட்டு இருக்க இவள் மட்டும் பத்தாவது விக்ரகமா உக்கார்ந்திருந்தா,நவகிரத்து பக்கத்தில். எப்போதும்போல மொக்கையாய் சிரித்து வைத்தேன். அதுக்கு ரொம்ப அழகா ஒரு சிரிப்பை கொடுத்தாள், என்றைக்கும் இல்லாத சிரிப்பு அது. எனக்கு மெல்ல விளங்க ஆரம்பித்தது.

சென்னையில் ஏற்பட்ட வியாபார நொடிப்பில் இடம்பெயர்ந்த ஒரு கேரளகுடும்ப பிண்ணனி கொண்ட பெண், கோவிலில் என் கையைப் பிடித்துக்கொண்டு,. அப்பா குடிக்கிறார், அம்மா சண்டை போடறாங்க, கடன்காரங்க வீட்டுக்கி வந்துபோயிட்டே இருக்காங்க, இப்படி என்னென்னவோ பேசிக்கொண்டிருப்பாள். நான் சந்தித்த எல்லா அழகான பெண்களும் ஒரு துயரப்பின்னணி கொண்டிருப்பதன் அதிசயம் விளங்கவில்லை. அம்மா டீச்சர் என்பதால், பொதுவாக இரவு நேரங்களில் குரூப் ஸ்டடி என்கிற பெயரில் நண்பர்கள் அனைவரும் என் வீட்டில்தான் இருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் என் அம்மாவிடம் பேசி ஆண்ட்டி, ஆண்ட்டின்னு சந்தேகம் கேட்கும் சாக்கில் அவள் என் வீட்டிற்கு வர சில நாட்களிலேயே மற்ற பெண்களும் வர ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் எங்கள் வீடே ஒரு சின்ன ட்யூசன் செண்டர் மாதிரி ஆகிவிட்டிருந்த்து. அம்மாவும் அவர்களில் குடும்ப சூழ்நிலையை தெரிந்திருந்தால் அவளிடம் சற்று அன்யோன்யமாக இருப்பார்கள்.

வீட்டிற்குள்ளேயே படுக்கவும், படிக்கவும் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், ஆயுத எழுத்துபோன்ற முன்பக்க வேப்பமரம் மற்றும் கொள்ளையிலுள்ள இரண்டு தென்னை மரங்களின் நடுவே மொட்டை மாடியில்தான் படுத்திருப்பேன், காலை நாலரை மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்து கிழக்கு நோக்கி தவம் இருப்பேன், ஐந்து மணிக்கு மெல்ல வெளிச்சம் வர நான் தயாரகிவிடுவேன், ஐந்து மணிக்கு எப்படி வெளிச்சம் வருமென்று கேட்காதீர்கள், அது வரும் அவள் அறையிலிருந்து. பல் விளக்கியபடியே வெளியே வருவாள். என்னுடைய டேபிள் லேம்ப்பை அணைத்து, எரித்து அவளுக்கு, நான் உனக்காக காத்திருக்கிறேன் என்பதை உணர்த்துவேன். அவளும் அங்கிருந்து கையை காட்டும்போது விடிந்திருக்கும். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி படித்துக்கொண்டிருப்பாள். நான் படிப்பதுபோன்ற பாவ்லாவில் அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன்.

அம்மாவோ, கீழே எதிர்வீட்டு ராஜியிடம் வருஷம் பூரா விளையாடிகிட்டேதான் இருப்பான். எக்ஸாம்ன்னு வந்துட்டா அந்த ஒரு வாரம்தான் புக்கை எடுத்து வச்சி உக்காந்தான்னா, மளமளன்னு எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணிடுவான்என்று பெருமையாக பீற்றிக்கொண்டிருப்பார்கள்.

நட்பா, காதலா என்று ஒரு முடிவுக்கு வரமுடியாத உறவு. நண்பர்கள் அனைவரும் சொல்வார்கள், டேய் மச்சான், அவ நிஜமாவே உன்னை லவ் பண்றாடாஎன்று.  மெல்ல எனக்குள்ளும் சொல்லிக்கொள்ளாமலே காதல் வளர்ந்தது, ஆம் நான் காதலித்துக்கொண்டுதான் இருந்தேன். அறிவுமதி, தபூ சங்கரின் கவிதைகளை படித்து அவளுக்கு புரியச்செய்துகொண்டிருப்பேன், கவிதையோடு என் காதலையும்.

காலையில் பள்ளி செல்லும்போது அப்பாவோடு ஸ்கூட்டரில் போவாள், நான் தெருமுனையில் உள்ள டெய்லர் கடையில் சைக்கிளோடு நின்றுகொண்டிருப்பேன். அப்பாவுக்கு தெரியாம “பை டாந்னு சொல்லிட்டு போவா. ம்ம்.... இன்னும் பாசி பச்சையாய் அத்தனையும்.

ப்ளஸ் டூவிற்கு எங்கள் பள்ளியின் அருகிலேயே உள்ள பெண்கள் பள்ளிக்கு மாறிக்கொண்டாள். அதன் பின் தினமும் இருவரும் ஒரே பஸ்ஸில் தான் காலையிலும் மாலையிலும் போவோம், வருவோம். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்த நேரம். எல்லோரும் விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பிவிட்டிருந்தனர். ஒரு நாள், அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்தாள், அம்மாவிடம் ஆண்ட்டி நாங்க ஊருக்கு போறோம், சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன், முர்ளி எங்கே? என்றபடி என் அறைக்குள் வந்தாள். (இன்னமுமென் மின்னஞ்சல் முகவரி ஏன் முர்ளீ03 என்று கேட்பவர்களுக்கு இதுதான் என் பதில்).
 நாங்க ஊருக்கு போறோண்டா, அனேகமா திரும்பி வரமாட்டோம்ன்னு நினைக்கிறேன். இந்தா இது என்னோட கேரளா அட்ரஸ், கண்டிப்பா லெட்டர் போடு. சுமதி பேர்ல என்று சொல்லிவிட்டு ஓடினாள், பிறகு திரும்பி வந்து கையைப்பிடித்துக்கொண்டு “ நான் கிளம்பறேண்டா, கண்டிப்பா லெட்டர் போடுடா, இங்லீஷ்லயே எழுது, நான் புரிஞ்சிக்குவேன்என்றாள். எனக்குதான் ஒண்ணுமே புரியலை.

ரெண்டு பேரும் ஒரு முறைகூட “ஐ லவு யூன்னு சொல்லிகிட்ட்தில்லை. ஆனா அவ என்னை காதலிக்கிறாளா என்கிற சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருக்கும். அன்று முதல் அது இல்லாமல் போனது. நானும் காதலித்திருக்கிறேன். காதலிக்கப்பட்டிருக்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அவளுக்கு திருமணமாகிவிட்டது என்றும் செய்தி வந்தது. எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இன்றுவரை ஓடிவிட்டது, முதல் காதல். அவளுக்காக எழுதிய முதல் கவிதை (?)

மின்மினி,
இரவில் மட்டும்
தெரியும் அவள்
என் கண்களுக்கு மட்டும்
எப்போதும் தெரிகிறாள்!


என்னை வாசிக்கும் எல்லோரையும் அழைக்கிறேன். விருப்பமானவர்கள் தொடருங்கள், உங்களின் பதின்ம வயதின் அனுபவங்களை. இன்னும் அகலமாகட்டும் மனது.

 தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

பறவையின் பாடல்

SONG OF SPARROWS (சாங்ஸ் ஆஃப் தி ஸ்பேரோஸ்)
                  மஜீத் மஜீதி. இரானின் தலைசிறந்த இயக்குனர். உலகதிரைப்பட பிரியர்களின் பட்டியலில் முக்கிய இடம்பெறும் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை இயக்கியவர். வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களை, அடித்தட்டு மக்களின் வாழ்வை சொல்லும் நகைசுவையோடு கூடிய மென்சோக கதைகளே, இவரது . திரைப்படங்கள். ஒரு கதைக்கு தேவையான எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற வரையறைக்குள் அடங்காமல் ஒரு நிகழ்வை, ஒரு சராசரி மனிதனை, அவன் வாழ்வின் ஒரு சில நாட்களை, அவன் வாழ்வின் சில மணிதுளிகளை எந்த ஒரு பாசங்கும் இல்லாமல் அப்படியே சொல்லுவது இவரது பாணி. இன்னும் பொதுவாக சொல்லபோனால் இயலாமையால் குறிவைக்கப்படும் எளிய மனிதர்களின் மனவோட்டத்தை பிரதிபளிக்கும் இவரது திரைப்படங்கள்.

               நான் பதிவெழுத முடிவெடுத்தபிறகு முதலில் எழுதியதே இவரது Children of Heaven பற்றிதான். இந்த படத்தின் கடைசி காட்சியில் கிழிந்த காலணியுடன் ஓடி பந்தயத்தில் வென்ற சிறுவனின் ரணப்பட்ட கால்களை, அவனது காயங்களை மீன்தொட்டியிலுள்ள மீன்கள் மெல்ல கடிப்பதுபோல அமைத்திருப்பார். இந்த காட்சியைபற்றிய வேறு மாதிரியான பல பார்வைகள் இருந்தாலும் சிறுவனின் ரணப்பட்ட மனதிற்கு அவன் கால்களின் வழி, ஒத்தடமாகவே உணர்கிறேன். பொதுவாகவே இவரது திரைப்படங்களில் பின்னணி இசை ஒரு முக்கியாம்சம். ஒரு நல்ல திரைபடத்திற்கு இசை, அதிலும் குறிப்பாக பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பது இவரது படங்களை பார்க்கும்போது, எளிதில் விளங்கும்.

             சரி இந்த படத்திற்கு வருவோம், கரீம், இரண்டு பெண் குழந்தைகள், மற்றுமொரு மகனுக்கு தந்தை, ஒரு கணவன், ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன். அவன் ஊரில் இருக்குமொரு நெருப்புக்கோழிப்பண்ணையில் பராமரிப்பு பணி செய்து வருகிறான். கோழிகளுக்கு தீவணமிடுவது, அதன் முட்டைகளை ஒருங்கிணைப்பது இப்படி. ஒரு நாள் அவனது பராமரிப்பிலிருக்கும் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி விடுகிறது. அதற்கு கரீமின் கவனக்குறைவே ஒரு காரணமெனசொல்லப்பட, எப்படியும் வேலை பரிபோய்விடுமென நினைக்கிறான், பின் வேலையிலிருந்தும் விலகுகிறான். வீட்டிற்கு வரும் கரீம், தனது காது கேளாத பெரிய மகளின் காது கேட்க்கும் கருவி தொலைந்து போனதை அறிகிறான்.

                அது எங்கே தொலைந்தது என்று தேடப்போக, அது அவனது மகன், மகள்கள் மற்றும் அவன் வயதை ஒத்த சில சிறுவர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய பாழடைந்த கிணறு போன்றதொரு பெரிய தொட்டியை சுத்தம் செய்து அதில் தங்க மீன்களை வளர்க்க செய்யும் முயற்சியில் அந்த தொட்டியில் விழுந்திருப்பதை அறிகிறான். இனி இந்த மாதிரி குப்பையில் விளையாட்தீர்கள், அப்புறம் அது இதுன்னு வந்து படுத்துகிட்டா, என்று சராசரி தகப்பனாக பேசிவிட்டு, தானும் அதில் இறங்கி ஒருவழியாக கருவியை கண்டுபிடிகின்றனர். ஆனால் அது வேலை செய்யாமல் போனதை அறிந்து, மகன் மீது கோபம் கொள்கிறான்.
                 அருகிலிருக்கும் நகரத்திற்கு சென்று அதனை சரிசெய்ய முயலும் அவனுக்கு அதை சரிசெய்ய இரண்டு மாதங்களாகும் என்று பதில்வருகிறது. சரி புதிதாக வாங்கலாமென்றாலும் விலை அவனுக்கு விண்ணைமுட்டி நிற்கிறது. வேலையுமில்லை, என்ன செய்வது என்று சோகமாக வெளியே வரும் கரீமின் வண்டியில் ஒருவர் ஏறிக்கொண்டு ரயில் நிலையத்தில் இறக்கிவிடுமாறு சொல்கிறார். அதற்கு பணமும் தருகிறார். அந்த நகரத்தில் அதையே ஒரு தொழிலாக செய்யப்பட்டு வருவதை கவனிக்கிறான். அதையே தொடர்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு தனது வீட்டை சிறிது சிறிதாக புனரமைத்து வருகிறார். இதற்கிடையில் ஏற்படும் விபத்தில் சிக்கி படுக்கைக்கு தள்ளப்படுகிறார்.                   இதற்க்கிடையில் மகன் வேலைக்கு போகிறான்., மனைவியும் காது கேளாத மகளும் கீரைகளை பறித்து அருகிலுள்ளவர்களுக்கு விற்று சம்பாதிகின்றனர். ஆசையாய் செய்து வைத்த கதவு விலைபோகிறது. எல்லாவற்றையும் படுத்தபடியே பார்த்து கண்ணீர்விட்டபடியே கரீம். சூழ்நிலை ஒரு மனிதனை புரட்டி எடுக்கும் காலம். மைத்துனன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவரும் வழியில், கரீமுடன் அவனது மகனும் அவனது நனபர்களும் பிரயாணப்படுகிறார்கள். அந்த வண்டியிலிருக்கும் பூந்தொட்டிகளை வீடுகளில் இறக்கிவைக்க அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதை வைத்து தங்க மீன்களை வளர்ப்பது அவர்களின் கனவு. தந்தையின் நிலை அறிந்து மகன் வேலைக்கு செல்கிறான் என்று மேதாவித்தனமாக நான் யோசித்த வேளையில், அது அப்படியில்லை சிறுவர்கள் உலகம் வேறு, அவர்களைன் கனவுகள் வேறு என்று சொல்லும் காட்சியமைப்பு.                   அதே வண்டியில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் அவர்கள் மீனையும் வாங்கிப்போட்டுக்கொண்டு வருகிறார்கள், வழியில் ஒரு வீட்டில் தொட்டிகளை இறக்கும்போது அந்த பிளாஸ்டிக் தொட்டி உடைந்திருப்பதை கவனிக்கிறார்கள். மற்றதொட்டிகளை தூக்கிப்போட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு அருகிலுள்ள வாய்க்காலில் உள்ள நீரை அள்ளி நிரப்பும் நோக்கில் அங்கே தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள், சிறுவர்கள். பிடிநழுவி கீழே விழுந்த பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து அனைத்து மீன்களும் கீழே சிதறித்துடிக்கிறது. கூடவே சிறுவர்களின் கதறல். ஆசை ஆசையாஇ சம்பாதித்து சேர்த்த காசில் வாங்கிய கனவு மீன்கள் தரையில் துடிப்பதைப்பார்த்த சிறுவர்கள் அழுதுகொண்டே கைகளால் வாய்க்காலில் தள்ளிவிடும்காட்சி கவிதை. சோகத்தை உணர்த்த வலிய திணிக்கப்பட்ட காட்சியாய் தோன்றினாலும் மென்சோக கவிதை அந்த காட்சி.                 பின் ஒரேயொரு மீனை ஒரு பையில் போட்டுக்கொண்டு சோகமாய் திரும்பும் சிறுவர்களை தெம்பாக்க கரீம் ஒரு பாடல் பாடுகிறார். பாடலினூடே ஊர் வந்து சேர்கின்றனர். கரீமின் மகன் ஒற்றைமீனை தங்களது சுத்தம் செய்து வைத்திருக்கும் தொட்டியில் விட ஓடுகிறான். தனியே அமர்ந்திருக்கும் கரீமிற்கு அவனது பழைய நெருப்புகோழி பண்ணையிலேயே மறுபடியும் வேலையில் சேர அழைப்பு வருகிறது. எழுந்து கதவை திறக்க முடியாத கரீம் உள்ளே இருந்தபடியே செய்தியை கேட்கிறார். வெளியே நிற்கும் மனிதன் சுற்றுசுவரின் மீது ஒரு இனிப்பு பொட்டலத்தை வைத்துவிட்டு செல்கிறான். கரீமின் முகத்தில் நம்பிக்கை ஒரு ஒளியைப்போல மெல்ல பரவுகிறது. இசையோடு எழுத்துக்கள் மேல் நோக்கிநகர எதோ நம் நண்பன் ஒருவனின் துயரம் மெல்லத் தோய்ந்து நம்பிக்கை துளிர் விடுவதைப்போல ஒரு ரிலீஃப் ஃபீலிங் வருவது, நிஜம்.                 இவ்வளவுதான் இந்த படம், வெறும் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் இன்னும் நீங்கள் ரசிக்க எத்தனையோ காட்சிகள் உண்டு, இங்கே சில காட்சிகள்.
                தொலைந்த நெருப்புக்கோழியைத் தேடி அதேபோல வேடமணிந்து செல்லும் கரீம், அவரது தேடலும் அதை தொடரும் காட்சியும், அப்பாவின் மனது குளிர காதுகேட்கிறது என்று சொல்லும் பெண்ணும் அதனால் மகிழும் கரீம் அடுத்த வினாடியிலேயே இன்னும் மகளுக்கு காது கேட்கவில்லை எனத்தெரிந்து குமுறும் காட்சி, நகரத்தில் கரீமின் ஒவ்வொரு நாட்களும், கதவை எடுத்துக்கொண்டு வயலில் வரும் காட்சி, கிளைமாக்ஸில் அந்த சிறுவர்களின் நடிப்பு இன்னும் எவ்வளவோ சொல்லலாம். எல்லோரும் பாருங்க, இது ஒரு MUST SEE FLIM வகையறாதான். உலகத்திரைப்படங்கள் மந்தமாக இருக்கும், புரியாது இப்படி ஒரு பார்வை உங்களுக்கு இருந்தால் இவரது பட்த்திற்கு பிறகு நிச்சயம் மாறிவிடும், அதற்கு நான் பொறுப்பு.
தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

மைத்ரியும் கண்ணாமூச்சியும்
தினமும் தெருக்களில், வயதான, உடல் ஊனமுற்றவர்களை, மனநலம் குன்றியவர்களை, ஆதரவற்றவர்களை என எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம். தொலைந்துபோனவர்கள், தொலைக்கபட்டவர்கள், வாழ்க்கையை தொலைத்தவர்கள் இப்படி.

இவர்கள ஏன் இப்படியிருக்கிறார்கள்? அவர்களின்  சிறுவயதிலிருந்தே இப்படித்தான் இருந்திருப்பார்களோ? ஒருவேளை யாராவது சிறுவயதில் இவர்களை கவனித்திருந்தால் இப்படியாகியிருக்க மாட்டார்களோ? என ஆயிரம் கேள்வி மனதில் எழுவது இயல்புதான். வண்டியை நிறுத்தி ஒவ்வொருவருக்காய் உதவி செய்து கொண்டிருக்க மனம் நினைத்தாலும், தாளும் காலமும் அனுமதிப்பதில்லை. இருந்தாலும் எதிர்படும் ஒவ்வொருவருக்கும் நம்மால் ஆன ஏதாவது உதவியை செய்தபடிதானிருக்கிறோம்.


எதோவொரு காலத்தில் மறுக்கபட்ட உதவிதான் அவர்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு நேர உதவி அவர்களை அவர்களின் குறையை நிவர்த்தி செய்திருக்க முடியும். ஆக என்னால் முடிந்தவரை உதவி என்று வருபவர்களுக்கு, எதையாவது செய்துவிட வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய ஒரே ஆசை. அதற்காகவாவது பணம் நிறைய வேண்டும் எனக்கு.

என் அப்பா அடிக்கடி சொல்லுவார் "நம்மால் முடியாததை செய்பவர்கள் நம் மரியாதைக்குரியவர்கள். அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் நம்மால் ஆன உதவிகளை செய்யணும்" என்று. என்னால் ஒரு போதும் மனநலம் குன்றிய குழந்தைகளை இவ்வளவு அன்போடு பராமரித்து வளர்த்து வர முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதுதான் என் பதில். 

              தேர்ந்த அனுபவமும், பொறுமையும், கனிவும் நிரம்ப பெற்றவர்களால் மட்டுமே அதை வெற்றி கரமாக செயல்படுத்த முடியும் அப்படி ஒரு அமைப்புதான் மைத்ரி, நேரடி அனுபவம் இல்லாவிடிலும் நண்பரின் இந்த பதிவு புரியச்செய்யும். ///இலாப நோக்கில்லாமல் அன்பளிப்புகளால் மட்டுமே நடக்கும் நிறுவனம் என்பதை கடந்த சில மாதங்களாக நானும் இணைந்து பணியாற்றுவதால் நன்கறிவேன். இந்நிறுவனத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு என்னால் இயன்ற சிறு உதவிகளையும் செய்து வருகிறேன். அதனால் வலைப்பூவிலும் அதிகம் நேரம் ஒதுக்க முடியவில்லை.///


வாழ்த்துக்கள் வண்ணத்துபூச்சி சூர்யா


////இன்றைய சமுதாய ஓட்டத்தில் இது போன்ற பணிகளி நம்மால் முழு நேரமும் ஈடுபட முடியுமாதென்பது ஒப்பு கொள்ள வேண்டியதே எனினும் இதை முழுமூச்சுடன் முனையும் இவர்களுக்கு தோள் கொடுக்கவும் இயன்ற உதவியை செய்யவும் வாருங்கள் என சக பதிவர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.////

அண்ணன் சூர்யா அவர்களின் சார்பாக நானும் அதே அன்புடனும் உரிமையுடனும் வேண்டுகிறேன்.

****************************************************திருப்பூரை சேர்ந்த சக பதிவர், நண்பர் ரவிகுமாரின் குறும்படம் கண்ணாமூச்சி . ஏற்கனவே தோழர். மாதவராஜ் இந்த குறும்படத்திற்கு அறிமுகம் செய்துவிட்டாரெனும்போதும், இது என் நண்பருடைய குறும்படம் என்று நான் அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நண்பர்களோடு நிறைய திரைப்படங்கள் பார்க்கும்போது அதிலுள்ள நிறை குறைகளை பற்றி நெடு நேரம் பேசிக்கொண்டிருப்போம், சில படங்களை பார்க்கும்போது இதைவிட நாமே நல்லா செய்திலுக்கலாம்டா என்று பேசிக்கொள்வதுண்டு. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. சில புகைப்படங்களுக்கு நான் வேண்டிய லைட்டிங் கிடைக்கும் வரை பொருமையாக காத்திருக்கும்போது நினைத்துகொள்வேன். நிச்சயம் திரைப்படம் என்பது அவ்வளவு எளிதான சமாச்சாரம் அல்ல.

ரவியின் இந்த குறும்படத்தை பார்க்கும்போதும் அதுபோன்றதொரு நினைவே வருகிறது. தன்க்கு கிடைத்த வாய்ப்புகளில் இப்படி ஒரு படம் எடுப்பது என்பது நிச்சயம் பாராட்டப்படக்கூடிய ஒரு விசயம்தான். இதில் நடித்துள்ள சிலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான். அவர்களையும் இப்படி பார்க்க சந்தோஷமாக உணர்கிறேன்.

ஒரு தாத்தாவிற்கும் பேரனுக்குமிடையேயான ஒரு மெல்லிய உறவை சொல்லும் படம். அனேகமாக எல்லா வீட்டிலும் இப்படி ஒரு தாத்தா இருப்பது நிச்சயம். எனக்கு தாத்தா இல்லை. பக்கத்து வீட்டு தாத்தா, அவர் பள்ளியில் படிக்கும்போது பின்னால் வந்த நரியை தனது தூக்குவாளியை வைத்தே அடித்து துரத்தியதையும், சைக்கிளை பெரிய மலைப்பாம்பின்மீது ஏற்றி அதை கொன்றதையும் வாயைபிளந்து கொண்டு கேட்டிருக்கிறேன். அதே தாத்தா வீட்டில் பாம்பு நுழைந்ததற்காக அலறியதும் திடீரென நினைவுக்கு வருகிறது.

இங்கே தாத்தா ஒரே வாரத்தில் செஸ் கத்துகொள்வார். ஏனென்றால் அவர் பேரன்மீது கொண்ட அன்பின் வெளிப்பாடும், அவர்மீது, அவரது தன்னம்பிக்கையின்மீது கொண்டுள்ள பார்வை, இவை இரண்டும் அவரை கிரிகெட்டையும் கற்றுக்கொள்ள செய்யும்.

வாழ்த்துக்கள் ரவிக்குமார்!


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

என் புத்தகபட்டியலும் வண்ணதாசனும்

                 இந்த வருடம் புத்தக சந்தை. திருப்பூரின் 7வது புத்தக திருவிழா.

              ஒவ்வொரு வருட புத்த்க்கண்காட்சியின் போதும் ஏதோவொரு எழுத்தாளரை தேர்ந்தெடுத்து அவர்களின் பெரும்பான்மையான புத்தகங்களை ஒருசேர வாங்குவது என் பழக்கம். கடந்த முறை அசோகமித்ரன், அதற்குமுன் இந்திரா பார்த்தசாரதி..

                ஏசுவின் தோழர்கள், குருதிபுனல், தந்திரபூமி, சுதந்திர புமி, வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன என வாங்கிய எல்லா இ.பா வின் புத்தகங்களையும் படித்தாகிவிட்டது. ஆனால் அசோகமித்ரனின் ஆகாசத்தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் படித்துவிட்டேன், இன்னும் மிச்சமிருக்கிறது தண்ணீரும் பதினெட்டாவது அட்சகோடும். அதற்குள்ளாக அடுத்த புத்தக கண்காட்சி வந்தேவிட்டது.

                 ஒரு முறை வாங்கு புத்தகம் எனக்கு ஓராண்டுக்கு போதுமானதாக இருக்கிறது. பொதுவாக நான் ஒரு புத்தகத்தை படிக்க ஏழு முதல் பத்து நாட்கள் பிடிக்கும். வேலை நேரம் போக காலை மாலை இரு நேரமும் சேர்த்து ஒரு நாளைக்கு நாலைந்து மணி நேர ஓய்வே கிடைக்கிறது. அதிலும் நண்பர்கள், வீடு, சினிமா, இசை இதெல்லாம் போக கிடைக்கும் சொற்பமான நேரங்களிலேயே எழுதவும் படிக்கவும் முடிகிறது. ஆனால் அப்படியும் இரண்டு பக்கங்களையாவது தினமும் படித்துவிட வேண்டும் என்பதை சிரமத்துடன் கடைபிடித்து வருகிறேன்.
 
           இந்தமுறை வண்ணதாசனை முழுமையாக வாசிக்க நினைத்திருக்கிறேன். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். இடதுசாரி அல்லது வேறு ஏதோ ஒரு கொள்கைபிடிப்புள்ளவன் எங்கள் நண்பர்களின் மத்தியில் அவனின் வாதங்கள் மிகவும் பிரசித்தி. பன்றி காய்ச்சலுக்கு எய்ட்ஸ்க்கு உண்டான மருந்தே கொடுக்கப்படுகிறது, எய்ட்ஸ் கிருமியே மனிதன் உண்டாக்கிய செயற்கை கிருமிதான் (ப்யோ வெப்பன்) என்பான். தசாவதாரம், உன்னைபோல் ஒருவன் பார்த்துவிட்டு பார்ப்பனீயம் பற்றி பேசுவான், வாழ்வு குறித்த எந்த விஷயத்திலும் எதிர்மறையான கொள்கை பிடிப்புள்ளவன், எஸ்.ராமகிருஷ்ணனை, வாசிக்க முடியாது என்பான். மரத்திலிருந்து இலை உதிர்வது இயல்பு, அதையெல்லாம் சிலாகித்துக்கொண்டிருக்க முடியாது. இன்றைய அவசர உலகத்தில் இதற்கெல்லாம் சாத்தியமில்லை என்பான். பொதுவாக என்னுடைய எந்த கருத்தும் அவனோடு ஒத்துபோவது கிடையாது, ஆனால் அவன் எனக்கு பிடித்தமானவனாயிருக்கிறான். அவனை பற்றிய எனது ஒரே பயம், அவன் எதையுமே பாஸிட்டிவாக பார்க்க மாட்டானா என்பதுதான்.

                மரத்திலிருந்து இலை உதிர்வதை பார்க்க முடிந்தவன், அதிர்ஸ்டசாலி. இலை உதிர்வதையோ, பூ மலர்வதியோ ரசிக்க முடிந்தவனின் இதயத்தில் வன்மதிற்கும் எதிமறை கண்ணோட்டத்திற்கும் இடமேது. இந்த வருடம் அவனது பிறந்த நாளுக்கு அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கவேண்டும். எனக்கு பிடித்த எஸ்.ராவை அவனுக்கு பிடிக்காதெனினும் எஸ்.ராவுக்கு பிடித்த வண்ணதாசனை அவனுக்கு பிடிக்ககூடும் என யோசித்துவைத்திருக்கிறேன்.

               வண்ணதாசன் பற்றியும், அவர் ஒரே மாதிரியான எழுத்து நடை கொண்டவர், ஒரு கட்ட்த்தில் அலுப்பு தட்டகூடியது அவரது எழுத்துக்கள், நல்லா கதை சொல்லியபடியே வருவார் அவருக்கு போதுமென படுகிற இட்த்தில் கதை முடித்துக்கொள்வார் என பல எதிர்மறை கருத்துக்கள் உண்டு.

               29 வருசங்கள் ஆனாலும் அம்மா வைக்கிற சாம்பார் அலுக்க வில்லை எனக்கு. எத்தனை முறை கேட்டாலும் அலுப்புதட்டாத என் பாட்டி சொன்ன தவளை இளவரசனின் கதைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை, வண்ணதாசனின் கதைகள். வால் விடைத்து தென்னைமரமேறுகிற அணில்கள், காம்பு நனைந்த பசுக்களின் சாந்த்தின் வாசனை, விருந்தினர் மாளிகை தோட்டத்து போகன் வில்லா மரம், நாகலிங்க பூ, நந்தியாவட்டை இதையெல்லாம் வெறு யார் சொல்லப்போகிறார்கள். அவரது புத்தகத்தில் படித்த ஒரே காரணத்திற்காக மனோரஞ்சித பூவை தேடி பத்து நாட்களுக்கும் மேல் அலைந்திருக்கிறேன். அப்படியென்ன வாசனை என்று அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். இன்னும் என்னுடைய 2006ஆம் வருட டைரியில் இருகிறது மனோரஞ்சிதம். எஸ்.ரா சொல்லுவதுபோல வாசகர்களை கையை பிடித்து கதைக்குள் கூட்டி செல்லும் உரிமை தெரிந்தவர் வண்ணதாசன். அவரது கதை மாந்தர்களும் அப்படியே.

             தமிழ் சினிமாவில் வயலினை இளையராஜா அளவிற்கு யாரலும் கொண்டாடியிருக்க முடியாது என்பதுபோல தமிழ் எழுத்துக்களில் பூவை, செடியை, மண்ணை, மண்புழுவை வண்ணதாசனை தவிர கொண்டாடியவர்கள் யாருமில்லை. ஆக இந்த வருடம் வண்ணதாசன் வருடம்

நான் வாங்கவிருக்கும் புத்த்கங்களின் பட்டியல் இது.

1. என்றும் நன்மைகள் - க.சீ.சிவக்குமார்

2. குணசித்தர்கள் – க.சீ.சிவகுமார்

3. புலி நகக்கொண்றை – பி.ஏ.கிருஷ்ணன்

4. வாசகர் பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்

5. ஏற்கனவே – யுவன் சந்திர சேகர்

6. எல்லொருக்கும் அன்புடன் – கல்யாண்ஜி

7. பெய்தலும் ஓய்தலும் – வண்ணதாசன்

8. கலைக்க முடியாத ஒப்பனைகள் – வண்ணதாசன்

9. சமவெளி – வண்ணதாசன்

10. தோட்ட்திற்கு வெளியிலும் சில பூக்கள்– வண்ணதாசன்

11. பெயர் தெரியாத ஒரு பறவை – வண்ணதாசன்

12. கனிவு – வண்ணதாசன்

13. நடுகை – வண்ணதாசன்

14. உயரப்பறத்தல் – வண்ணதாசன்

15. கல்யான் ஜி கவிதைகள் - கல்யாண்ஜி

           நண்பர்கள் யரேனும் இந்த புத்தகங்களின் பதிப்பகங்களை தெரிந்திருந்தால் பின்னூட்டங்களில் தெரியசெய்யவும். உதவியாய் இருக்கும். பதிப்பகம் தவிர விலை, குறிப்பிட்ட சில கதைகள் உட்படபுத்தகம் சார்ந்த வேறு ஏதேனும் சுவாரஸ்யமான செய்திகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)