என் காதலி மற்றும் நான்

       அவன் (சுஹோ) கடலை ஒட்டிய தண்டவாளத்தில் நடந்துகொண்டிருக்கிறான், தன்னை யாரோ அழைப்பதாய் உணர்ந்து திரும்புகிறான், கடல் எப்போதும்போல கரையோடு பேசிக்கொண்டிருக்கிறது. கடலுக்கடியில் பெயரிடப்படாத வண்ண மீன்களுக்கிடையே கிடக்கிறது ஒரு பீப்பர் (பேஜர் போன்ற ஒரு கருவி). மெல்ல பியானோவின் இசை அவிழ அவள் குரல் அவனை அழைக்கிறது,

                         சுஹோ.....
வருடாவருடம் பள்ளி நண்பர்கள் சந்தித்துகொள்ளும் நிகழ்விற்கு பத்து வருடங்களாக வராமலே இருக்கும் சுஹோவைப்பற்றி, அவன் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“இந்த வருடமாவது அவன் வருவானா?”,

“எனக்கு வருவான்னு தோணலை, அவன் இன்னும் அவளை மறக்கலை”

“யாரை?”,

“சூயேங்கைத்தான், அதோட இன்னைக்குதான் அவளோட இறந்த நாளும்கூட”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வருகிறான், சுஹோ. வழக்கமான விசாரிப்புகள் முடிந்து அவர்கள் இருவரும் காதலிக்கும்போது சந்தித்துக்கொள்ளும் அந்த கலங்கரை விளக்கத்தின் கீழே பேசிக்கொண்டிருக்கின்றனர், நண்பர்கள் அனைவரும்.சுஹோவின் நண்பன் கடலை பார்த்து கத்துகிறான், “சூயேங், நீ எங்க இருக்க? இவன் இன்னமும் உன்னை மறக்க முடியாமல் உன் நினைவாகவே இருக்கிறான். தயவுசெய்து இவன் நினைவிலிருந்துபோ” என்று அழுதபடியே கதறுகிறான். நண்பர்கள் அவனை அழைத்துசெல்ல சுஹோவின் நினைவுகள் பின்னோக்கி நகருகிறது.

கடலில் நினைவிழந்து கிடக்கும் அவனை, காப்பாற்றி கரையில் கொண்டுவந்துபோடும் அவள் தன்னுடைய பீப்பர் கடலியே தவறிவிழுந்திருப்பதை உணர்கிறாள். நண்பர்கள்தான் தன்னை காப்பாற்றியதாக அவனும் நினைத்துக்கொள்கிறான். எப்போதும் போல பள்ளி முடிந்து தன் தாத்தாவின் கடைக்கு வருகிறான், சுஹோ. தாத்தா கல்லறைபெட்டிகளை செய்து வருகிறார். அவன்வரும்போதுகூட ஓரு வயதானவர் தனக்கான பெட்டிக்கு அளவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். தாத்தாவிற்கு அவரது பழைய நினைவுகளை பேரனோடு பகிர்ந்துகொள்வதில் ஆர்வம். இருவரும் கடலை பார்த்தபடி வெகு நேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அடுத்தநாள் பள்ளியில் இசைபாடத்தின்போது, பள்ளியின் கனவு பெண்ணாக சொல்லப்படும் சூயேங் இவனை திரும்பி திரும்பி பார்த்தபடி இருக்கிறாள். இவன் தன்னைத்தான் பார்க்கிறாள் என்பதை நம்பமுடியாமல் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டிருக்கிறான். சூயெங் தானாகவே வலிய வந்து தன்னுடன் பேசுவதையும் பழகுவதையும் ஆச்சர்யமாக பார்க்கிறான், சுஹோ. அவன் நண்பன் அவனிடம் “இந்த பணக்கார பொண்ணுகளே இப்படிதான், திடீர்ன்னு யாரையாவது சேர்த்துகிட்டு சுத்துவாங்க, அப்புறமா கழட்டியும் விட்டுடுவாங்க, அதோட அவ பின்னாடி சுத்துற நம்ம சீனியர் ஒருத்தன் உனக்கு குறி வச்சிட்டான்”என்கிறான்.

அன்று மாலையே அதுவும் நடக்க, நண்பர்கள் உதவியுடன் தப்பித்து இருவரும் சைக்கிளில் கடற்கரைக்கு வந்து சேர்கின்றனர். மெல்ல இவர்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது.. பின் ஒருநாள் தன்னுடைய போன் நம்பரைக் கொடுக்கிறாள், சுஹோ, இரவில் தன் தங்கையுடன் சண்டையிட்டு அவளுக்கு போன் செய்கிறான், அவனுக்காக ஏற்கனவே செய்தி காத்திருக்கிறது. “சூஹோ நீ ஒரு மடையன், உன்னை ஒரு பெண் கவனித்துவருவதையே அறியாமல் இருந்திருக்கிறாய், கடலில் நீ தவறியபோது நானே விழுந்ததைபோலவே நினைத்துக்கொண்டேன், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறாள். இங்கேதான் தன்னை காப்பாற்றியது சூயேங்தான் என்பதை அறிகிறான்.

ஒரு மழை நேரம் சுஹோவின் தாத்தா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாய் செய்தி பள்ளிக்கு செய்தி வருகிறது. சுஹோ உடனே தாத்தாவை சந்திக்க ஓடுகிறான். அங்கே தாத்தா இவனுக்கான பியருடன் காத்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவு அழகான கிளைமேட் இதை அனுபவிக்கத்தான் உன்னை அழைத்தேன், மேலும் உன்னோடும் பேசவேண்டும் போல இருந்தது என்கிறார். அப்போது சுஹோ விட்டுவந்த அவனது புத்தகங்களை கொடுத்துச்செல்ல சூயேங் அங்கே வருகிறாள். அவளும் ஆர்வமுடன் தாத்தாவின் முதல் காதலை பற்றி கேட்கிறாள்.

பாட்டி போட்டோவின் பின் ஒளித்துவைத்திருந்த தன் காதலியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு தாத்தா தன் முதல்காதலை நினைவு கூர்கிறார். குடும்பத்தினரின் பலமான எதிர்ப்பினூடே உயிராக காதலித்து வந்த பெண்ணை போரின் காரணமாக பிரிய நேரிடுகிறது. அப்போது அந்த பெண் நீ வரும் வரை நான் காத்திருப்பேன். நீயில்லாமல் உயிரோடிருப்பேன் ஆனால் வாழமுடியாது, செத்தும்போவேன் ஆனால் பிரிந்திருக்க முடியாது என்கிறாள். கண்ணீருடன் இருவரும் விடை பெறுகின்றனர், ஆனால் போர் முடிந்து ஊர் திரும்பும்போது எனக்காக யாரும் காத்திருக்கவில்லை, எனக்கு அவள் சொன்ன வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருந்தது” என்கிறார். இருவரும் கலங்கிய கண்களுடன் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தாத்தா, தன் திருமண வாழ்வில் பாட்டிக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார், என்கிறான் சுஹோ. அப்படியில்லை எந்த ஒருவராலும் தன் முதல் காதலை எளிதில் மறந்துவிட முடிவதில்லை அவ்வளவுதான். சரிவிடு உன் தாத்தா அவர் காதலியோடு சேர்ந்திருந்தால் இன்று நான் சந்தித்திருக்கவே முடியாது, என்கிறாள் சூயேங், மேலும் அவர் இறந்தபின்னாவது அந்த பெண்ணுடன் வாழட்டும் என்கிறாள். எனக்கு இறப்பிற்கு பிந்தைய வாழ்வு என்பதில் நம்பிக்கையில்லை என்கிறான். இதில் சற்று கோபமடையும் இருவரும் கோபித்துக்கொண்டு கிளம்புகிறார்கள்.

வீட்டிற்கு வரும் அவனிடம் தாத்தா தன் கதையை தொடர்கிறார். ஒரு நாள் எனக்கு ஒரு சவப்பெட்டி செய்யும் வேலை வந்தது, அங்கு சென்றபோதுதான் தெரிந்தது அது என் காதலியின் கணவருக்கு என்று, நாங்கள் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை, அவள் அழுதுகொண்டே இருந்தாள். வாழ்க்கை அப்படித்தான் ஒரு சிறிய வளைவில் நம்மை அப்படியே புரட்டி போட்டுவிடும், என்கிறார். சுஹோ தான் சூயேங்கிடம் கோபப்பட்டிருக்கவேண்டாம் என்று நினைக்கிறான். சூயேஙின் மீதான தன் காதலை உணர்கிறான், அதை அவளிடம் சொல்ல, அவளைத்தேடி வீட்டிற்கு செல்கிறான். ஒரு கல்லை எடுத்திவீச அவள்வீட்டு கண்ணாடி உடைகிறது. பி அங்கிருந்து ஓடிவருகிறான், வழியில் போனில் அவளுக்கு செய்தியை பதிகிறான். “நீ எப்போது சொல்லவதுபோல எல்லோரின் வாழ்விலும் ஒரு எல்லை இருக்கும் என் தாத்தாவிற்கு பாட்டி, அப்பாவிற்கு அம்மா, எனக்கு நீதான்” என்கிறான். அவனை துரத்திவரும் சூயேங் ஆம், எனக்கும் அப்படித்தான் என்கிறாள் அவன் பின்னாலிருந்து. இருவரும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட காதலை உணர்கின்றனர்.

ஒருநாள், நண்பர்களோடு சேர்ந்து அருகிலுள்ள தீவிற்கு ஒரு நாள் சென்று தங்கிவர முடிவு செய்து சூயேங்கை அழைக்கிறான். கடைசி நேரத்தில் மற்றவர்களின் வருகை தடைபட இருவரும் அந்த தீவிற்கு செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியான அந்த இரவில் விழிக்கும் அவன், அவளை தேடுகிறான். சூயேங், கடற்கரையில் அமர்ந்தபடி தனது டைரியில் எழுதிக்கொண்டிருக்கிறாள். அங்குவரும் சுஹோவிடம் ஓவ்வொரு வருடமும் என்னை நீ இங்கே அழைத்துவா, என்கிறாள். அடுத்த நாள் கிளம்பும் தருவாயிலும், சூயேங் அந்த மலையுச்சியில் விதைகளை தூவிக்கொண்டிருக்கிறாள். அங்கே வரும் சுஹோவிடம் மகிழ்ச்சியாக எதையோ சொல்ல வாயெடுக்க மயங்கி விழுகிறாள்.

அவசரமாய் ஊருக்கு திரும்பியதும், சூயேங்கின் தந்தை இவனை கடிந்துகொண்டு, அறைகிறார். அவளுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள ஹாஸ்பிட்டலுக்கு வருகிறான். அங்கே அவள் லுகோமியா என்ற நோயின் தீவிரத்தில் இருப்பது தெரிகிறது. ஆனால் சூயேங் மருத்துவமனையிலிருந்து ஓடிவிடுகிறாள். அவளைத்தேடி அவர்கள் பொதுவாக சந்திக்குமிடத்திலெல்லாம் தெடுகிறான் சுஹோ. எங்கும் அவள் இல்லாததால் மிகுந்த வருத்ததுடன் தாத்தாவை பார்க்க வருகிறான். அங்கே சூயேங் தனக்கான சவப்பட்டிக்கு அளவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள். தாத்தா அவர்களின் மனசுமையை குறைக்க, ஒரு நாள் தன்னுடைய காதலி இறந்துவீட்டதையும் அவளது இறுதி சடங்குகளை நானே செய்யவேண்டும் என்று அவள் விரும்பியதையும் தானே அதை செய்து வந்ததையும் சொல்கிறார். சுஹோ மேலும் கவலையடைகிறான், சூயேங், அவனிடம் நீ என்னை மன்னித்துவிடு சுஹோ என்று சொல்கிறாள். மெல்ல மெல்ல அவள் இறந்துகொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிகிறது, அவளை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறான். வழியில் சுஹோ நான் எப்ப கூப்பிட்டாலும் நீ எனக்கு பதில் சொல்வியா? என்கிறாள்.

மருத்துவமனையில், சூயேங்கின் தந்தை அவனை அழைத்து, ”என்னிடம் நிறைய பணம் இருக்கு, ஆனால் என்னால் என் மகளை காப்பாற்ற முடியவில்லை, அவ்ளுக்கு எதுவும் செய்துவிடமுடியவில்லை, அவள் உன்னை விரும்புகிறாள். உன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்” என்கிறார். அவளும் அவனிடம் என்னை அந்த தீவிற்கு அழைத்துபோ சுஹோ என்கிறாள். ஆனால் கடுமையான புயலின் காரணமாய் படகுகள் கடலில் செல்ல இயலாது என்கிறார்கள். சுஹோ அவர்களோடு சண்டையிடுகிறான். தூரத்தில் இதை கவனித்தபடியே சூயேங் தன் மனதுடன் பேசுகிறாள், நீ ரொம்ப நல்லவன் சுஹோ, என்னுடைய இந்த கடைசி நாட்களை மறக்கமுடியாததாக ஆக்கியிருக்கிறாய், ஆனால் நான் உன்னை காதலித்ததற்காக என்னை மன்னித்துவிடு, என்னை நீ புரிந்துகொள்வாயா, சுஹோ என்கிறாள். அப்போது திரும்பிவரும் சுஹோ அழுதபடியே அவளிடம் உன்னுடைய இந்த சின்ன ஆசையை கூட என்னால நிறைவேற்ற முடியலை சூயேங் என்கிறான். மெல்ல புன்னகைத்தபடி அவன் மடியிலேயே உயிரை விடுகிறாள்.

மெல்ல பழைய நினைவுகளிலிருந்து மீண்டு வரும் சுஹோ, மீண்டும் அந்த தீவிற்கு செல்கிறான். அங்கே சூயேங்கின் டைரியை பார்க்கிறான். அதிலுள்ள வரிகள் உயிர்பெற்று, அவள் குரலிலேயே ஒலிக்கிறது.

“ நான் சுஹோவை காதலித்திருக்க கூடாது, ஆனால் அவன்மீதான என் காதலை என்னால் அடக்கி வைக்க முடியவில்லை, உன்னோடு அதிகநாள் வாழ முடியாவிட்டாலும் நான் உனக்காக காத்திருப்பேன். நீ சந்தோஷமா இருக்கனும் சுஹோ, நான் உனக்கொரு பரிசு வைத்திருக்கிறேன், உனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. இந்த மலையின் உச்சிமுழுவதும் நான் பூக்களின் விதையை தூவியிருக்கிறேன். அடுத்தவருடம் நாம் இங்கே வரும்போது அவை பூத்திருக்குமா? அவை என்ன நிறத்தில் இருக்கும்? எனக்கு இப்பொதே அதை பார்க்கவேண்டும்போல இருக்கிறது. இல்லை நானே அந்த பூக்கள், நீதான் என் கடல் நான் சிரித்த முகத்தோடு உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன்”

படித்துவிட்டு சுஹோ அந்த மலையுச்சிக்கு செல்கிறான். அங்கே மலை முழுவதும் பூக்கள், பூத்துக்கிடக்கின்றது. கடல் எப்போதும்போல கரையோடு பேசிக்கொண்டிருக்கிறது. கடலுக்கடியில் பெயரிடப்படாத வண்ண மீன்களுக்கிடையே கிடக்கிறது அந்த பீப்பர். மெல்ல பியானோவின் இசை அவிழ அவள் குரல் அவனை அழைக்கிறது,

“சுஹோ...”

“ம்ம்..”

“சுஹோ...”

“ம்ம்..”

“நான் உன்னை காதலிக்கிறேன்...”

“நானும்தான்........”

-------------------------------------------------------------------------------------------------------------------


Parang-juuibo எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கொரிய படமான தி கிளாசிக் பட்த்தின் இயக்குனர், அவருடைய திரைக்கதையில் உருவான கொரியப்படம் My Girl & I. வெகுசாதாரணமான திரைக்கதைதான், திடீர் திருப்பங்களோ, யூகிக்க முடியாத காட்சியமைப்புகளோ எதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இதுபோல நூறு தமிழ்படங்கள் பார்த்திருக்கலாம்.  ஆனாலும் என்ன ஸ்பெசல் இந்த படத்தில், காதல்.
மிக அருமையாக சொல்லப்பட்ட காதல், சுஹோவும் சரி அவனுடைய தாத்தாவின் காதலும் சரி. வெகு இயல்பு. ரம்மியமான காட்சியமைப்பு, மனதை கவ்வும் இசை, எதார்த்தமான வசனங்கள் இதெல்லாம்தான் ஸ்பெசல். முடிஞ்சா ஒருமுறை பாருங்க...
ட்ரெய்லர் இங்கே

தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)15 கருத்துரைகள்:

லேகா said...

Tnx for Sharing Murali..Very Poetic Story!!

அகல்விளக்கு said...

இதுபோன்ற சோலோ வகை படங்கள் எனக்கும் மிகப் பிடிக்கும் நண்பா...

உங்களிடமிருந்து இன்னோரு சிறந்த படத்திற்கான அறிமுகம்...

விரைவில் பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்...

:-)

திருநாவுக்கரசு பழனிசாமி said...

download பண்ணிட்டேன்..
பாத்துடுவோம்...நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

ம்ம், நன்றி லேகா, ஆக்ச்சுவலா நான் எழுதிமுடிச்சி போஸ்ட் பண்ண செகண்ட் நீங்க பிங் பண்ணிங்க, அதுதான் நீங்க செய்த ஒரே தப்பு, அதுக்கு தண்டனையாத்தான் உங்களுக்கு இந்த பதிவின் லின்க்கை அனுப்பினேன். :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அகல்விளக்கு
ரொமாண்டிக் மெலோ டிராமா வகை படம், நண்பா, தி கிளாசிக் பாருங்க அதும் அவருடைய படம்தான். நான் அதை எழுதனும்ன்னு நினைச்சேன். நீங்க பாருங்க புடிச்சா நீங்க எழுதுங்க.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு

ம்ம், செம ஸ்பீடா இருக்குங்க, கலக்குங்க, காதல்மழையில் நனையுங்கள்.

த‌மிழ் said...

நன்றி முரளி.. பார்க்க வேண்டும்..

முரளிகுமார் பத்மநாபன் said...

பாருங்க தமிழ், எனக்கு மிகவும் பிடித்தமான படம்.

விக்னேஷ்வரி said...

இன்னும் காதலிலிருந்து வெளிய வரலையா... ;)

Ravikumar Tirupur said...

மிக அருமை!
படத்தில் உங்களுக்கு பிடித்த அம்சங்களை உங்களது பாணியில் விளக்கி எழுதினால் கூடுதல் சிறப்பாயிருக்கும்.

கோபிநாத் said...

தல வர வர என்ன கொரியன் ப்டமாக பார்க்குறிங்க!? ;-)))

கிடைத்தால் கண்டிப்பாக பார்க்க தூண்டும் படம் தான்.

google.com said...

காதல் மழையா? அல்ல கண்ணீா்மழையா?

google.com said...

காதல் மழையா? அல்ல கண்ணீா்மழையா?

aazhimazhai said...

அருமை !!! ஓவியம் தீடியபின்னும் வர்ணம் தூரிகையோடு தங்கிவிடுவது போல படித்து முடித்த பின்னும் காதல் நெஞ்சோடு நின்று விடுகிறது

Eswar said...

“ நான் சுஹோவை காதலித்திருக்க கூடாது, ஆனால் அவன்மீதான என் காதலை என்னால் அடக்கி வைக்க முடியவில்லை, உன்னோடு அதிகநாள் வாழ முடியாவிட்டாலும் நான் உனக்காக காத்திருப்பேன். நீ சந்தோஷமா இருக்கனும் சுஹோ, நான் உனக்கொரு பரிசு வைத்திருக்கிறேன், உனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. இந்த மலையின் உச்சிமுழுவதும் நான் பூக்களின் விதையை தூவியிருக்கிறேன். அடுத்தவருடம் நாம் இங்கே வரும்போது அவை பூத்திருக்குமா? அவை என்ன நிறத்தில் இருக்கும்? எனக்கு இப்பொதே அதை பார்க்கவேண்டும்போல இருக்கிறது. இல்லை நானே அந்த பூக்கள், நீதான் என் கடல் நான் சிரித்த முகத்தோடு உன்னை பார்த்துக்கொண்டே இருப்பேன்” indha varigal miga arumai

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.