காற்று நின்று விட்டால்?

விண்ட் ஸ்ட்ரக் - மறுபடியும் இன்னொரு கொரியப்படம். எல்லா தமிழ்படங்களையும்போல ஒரு அழகான பாடலோடு படம் ஆரம்பிக்கிறது, எழுத்துக்கள் மறைந்து காட்சி நீளும்போது ஹீரோயின் யூ ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறாள், மெல்ல அவளது கால்கள் விளிம்பை நோக்கி நகர்கிறது. மேலிருந்து கீழே விழும் அவளது நினைவுகளில் தொடங்குகிறது படம். 

அவள் ஒரு காவல் அதிகாரியாக இருக்கிறாள், தற்செயலாக ஒரு பிக்பாக்கெட் விவகாரத்தில் தவறுதலாக கதாநாயகனை  கைது செய்கிறாள். அவன் தான் ஒரு இயற்பியல் ஆசிரியர் என்றும், நான் அந்த திருடனை துரத்திக்கொண்டிருந்தேன், நீங்கள் என்னை தவறுதலாக பிடித்துவிட்டீர்கள், வேண்டுமானால் அவனை வரைந்து தருகிறேன் என்கிறான். மற்ற அதிகாரிகள் ஒத்துகொண்டபோதிலும் அவளால் தான் தவறு செய்திருக்கமுடியாது என நினைக்கிறாள். அங்கிருந்து வெளியேறும் அவனை பின்தொடருகிறாள். வழியில் அந்த திருடன் விட்டுச்சென்ற பொருட்களை பார்க்கவே அங்கே நிற்கிறான். மீண்டும் அவள் அவனை கைது செய்கிறாள். எனக்கு தெரியும் நீ நேரா இங்கதான் வருவேன்னு, என் கணிப்பு என்னைக்குமே பொய்யானதில்லை, என்கிறாள்.

ஆனால் அவனை ஸ்டேசனுக்கு கொண்டுவரும்போது அங்கே நிஜ திருடன் பிடிபட்டிருக்கிறான். உடனே அவள் அவனை விட்டுவிட்டு வெளியேறுகிறாள். கடுப்பாகிப்போன அவன் “தப்புதான் பண்ணிட்ட ஒரு சாரி கூட கேட்கமுடியாதா? உன்னால” என்று கத்துகிறான். அவள் மிகவும் சாதாரணமாக “சாரி என்ற சொல்லுக்கு என் வாழ்க்கையில் இடமேயில்லை, வேண்டுமானால் உன் பெயரை சாரி என்று மாற்றிக்கொள். பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறேன்” என்கிறாள்.

கடினமான மனதுடன் வெளியேறும் அவனுக்கு அவனது பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்புக்காக அவளையே நியமிக்கிறார்கள். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டு வரும்போது சிலர் ரோட்டில் புகைப்பிடித்தவாறே வருகின்றனர். ஒரு காவல் அதிகாரியாக அவர்களை இது தவறு என்று சொல்கிறாள், அவர்கள் இதுகென்ன ஃபைனோ அதை சொல்லு வாங்கிட்டுப்போ என்று சொல்லி சிகரெட்டை எறிகிறார்கள். கோவமடையும் அவள் அவர்களை அடித்து அதை சுத்தம் செய்ய வைக்கிறாள். அடிபட்ட அவர்கள் இதுக்கு நீ எங்கப்பாவுக்கு பதில் சொல்லியே ஆகனும் என்கிறார்கள்.

இதேபோல ஒரு  போதை மருந்து கும்பலிடம் தனியாக போராட வேண்டிய நிலைவருகிறது. என்னுடன் துணைக்கு வருகிறாயா? என்கிறாள்.  மறுக்கும் அவனை தன் கையோடு விலங்கால் கட்டிக்கொண்டு அழைத்து செல்கிறாள். அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருக்கிறது. தன்னோடு அவன் இருப்பதை விரும்புகிறாள். ஒருவழியாக எல்லாம் முடிந்து வெளியே வருகிறார்கள். இப்பொழுதாவது என்னை இந்த விலங்கிலிருந்து விடுவிப்பாயா?  என்கிறான். இல்லை என்னால் முடியாது சாவி அங்கே நடந்த களேபரத்தில் தொலைந்து போய்விட்டது என்கிறாள். வேறுவழியின்றி இருவரும் கரங்கள் பிணைக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கின்றனர். அன்றிரவு இருவரும் தனித்தனி கட்டிலில் படுத்திருக்கின்றனர். ஆனால் இருவரின் கரங்களும் இணைந்திருக்கின்றது, அதிலும் மங்வாவின் சுண்டுவிரல் அவளின் சுண்டு விரலை பற்றியிருக்கிறது. காலையில் முதலில் எழுந்துவிடும் யூ, அனிச்சையாய் தன் கைகளை விலங்கிலிருந்து விடுவித்து தன் தலைமுடியை சரிசெய்துகொண்டு மீண்டும் தன் கைகளை விலங்கிலேயே இணைத்துக்கொள்வாள். இருவருக்குள்ளும் காதல் வந்த விஷயத்தை வெகு அழகாக காட்டியிருப்பார்கள். அழகான இசையுடன் கவிதை போன்ற காட்சி இது.


பள்ளிவிடுமுறையின்போது தன் சொந்த ஊருக்கு அவளை அழைத்துசெல்கிறான். எங்கும் பச்சை விரிந்திருக்கும் அழகிய மலையுச்சியில் இருக்கும் அவனது பூர்வீகவீடு. மலையுச்சியில் நின்றுகொண்டு இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு நான் இப்போது பறப்பதைப்போல உணர்கிறேன், நிச்சயம் நான் என் முன் ஜென்மத்தில் காற்றாகத்தான் இருந்திருப்பேன். இனி இறந்தாலும் காற்றாகவே மாறி சுதந்திரமாய் இந்த உலகை சுற்றி சுற்றி வருவேன் என்கிறான். யூவும் அதை ஆமோதிக்கிறாள். பிறகு அன்றிரவு அவள் ஒரு கதை சொல்கிறாள். மங்வா நீயூம் அந்த கதையில் வரும் இளவரசி போல நான் இறந்தபிறகு இறந்துவிடுவாயா என்கிறான். இல்லை நான் சாக மாட்டேன் என்கிறாள். இதி சற்று வருத்தமடையும் அவன் காரை வேகமாக ஓட்டுகிறான். அப்போது  ஏற்படும் விபத்திலிருந்து யூ, மங்வாவை காப்பாற்றுகிறாள்.


மருத்துவமனையில் இனி உன்னை எப்போதும் பிரிய மாட்டேன் என்கிறான். அதைத்தொடர்ந்து எப்போதும் அவளுடனே இருக்கிறான். அப்படி ஒரு சமயத்தில் ஒரு துப்பாக்கி சூட்டில் தவறுதலாக சுடப்பட்டு மங்வா இறந்துபோகிறான்.  அதில் மிகவும் மனமுடைந்துபோகும் அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்படுகிறாள். ஒருமுறை மருத்துமனையில் இருக்கும் அவள் ஒரு காற்றாடி பறப்பதைப் பார்த்து அதை தொடருகிறாள். அதை பார்க்கும்போது அது முன்பொரு நாள் மங்வா செய்துகொடுத்ததைப்போலவே இருப்பதால், அதை வீட்டுக்கு கொண்டுவருகிறாள். அந்த காகிதம் அவன் செய்துகொடுத்த அதே காகிதமாக இருக்கிறது.

ஆக, மங்வா தான் முன் சொன்னதுபோல தன் இறப்பிற்கு பிறகு காற்றாக மாறி தன்னுடன் இருப்பதாகவே கருதுகிறாள். காற்றோடு பேசுகிறாள். தன் அறைமுழுவதும் காற்றாடிகளை செய்து வைதுக்கொண்டு மங்வாவின் வருகைக்காகவே காத்துகொண்டிருக்கிறாள். அவள் வாழ்வினை ஒவ்வொரு நொடியிலும் மங்வா கூடவே இருக்கிறான். அவளுக்கான புதிய துணையையும் அவனே சொல்கிறான்.

நிஜத்தில் இப்படி நடக்க முடியாது என்றாலும், தொய்வின்றி  பார்க்கமுடிகிறது. படத்தின் பாதிக்குமேல் காற்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ரம்மியமான இசையும், காதலும் படம் நெடுக நிரம்பியிருக்கிறது. தொடர்ந்து கொரியத்திரைப்படங்களாக பார்ப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கொஞ்சம் நேரமிருக்கிறது, ஒரு ஃபீல் குட் மூவி பார்க்கணும்ங்கிற யோட்சனை இருப்பவர்களுக்கு என்னுடைய சாய்ஸ் இந்த படம். MY SAASY GIRL, 500 OF SUMMER இந்த இரண்டு படங்களும் இன்னும் மிச்சமிருக்கிறது, என்னுடைய 10 SENSATIONAL ROMANTIC MOVIES  என்கிற லிஸ்டில். பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்.

படத்தின் ட்ரெய்லருக்கு இங்கே சுட்டவும்


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

வாழ்க்கை வாழ்வதற்கே!
கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.போன மாதம் அப்பா சொன்னார். “என்னோட வேலை செய்த அட்டெண்டர் பசங்கல்லாம் BE, MCA ன்னு படிச்சிட்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஏதாவது கல்யாண வீட்லயோ விஷேசத்திலேயோ நண்பர்களை சந்திக்கும்போது, பையன் என்னடா பண்றான்னு கேட்டா, கொஞ்சமா யோசிச்சு, ம்ம் எதோ கம்ப்யூட்டர் பிசினஸ் பண்றான், நல்லா பண்றான்னு ஒரு பொய்யை சொல்ல வேண்டியிருக்கிறது” என்றார்.

கடனில்லாமல், கடன் கொடுக்காமல் இங்கு தொழில் செய்வது மிகவும் சிரமம். போதாக்குறைக்கு ஆற்க்காடு வீராசாமி வேறு அழையாத விருந்தாளியாய் தினமும் நாலு மணி நேரம் வந்துபோகிறார். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்து மணி வரை வேலை. எல்லா நாளிலும் வேலை. எல்லா வாரங்களிலும், மாதங்களிலும், வருடங்களிலும் வேலை. வேலைக்கு ஒன்றும் குறைச்சலேயில்லை. ஆனால் பிரச்சனை அதுவல்ல, காகிதம். என்ன பசப்பினாலும் என் கையில் ஒட்டுவதேயில்லை, காகிதம். என் தகுதி என் கையில் பையில் ஒட்டியிருக்கும் காகிதத்தை பொருத்தது. எனக்காக இல்லை என்றாலும் அப்பா மற்றும் இன்ன பிறருக்காகவாவது, காகிதம் பொறுக்க வேண்டியிருக்கிறது.

வேலை முடிந்ததும் நண்பர்களோடு சிறிது நேரம் செலவழித்து பின் வீடு திரும்பவே பதினோரு மணியாகிவிடுகிறது. எனக்காக ஒரு பொழுதும் நிற்காத சூரியனால், மறுபடியும் விடியும் காலை. மறுபடியும் அதே வண்டி, அலைச்சல், ஓட்டம், பொய், காசு சொல்லிமுடிப்பதற்குள் இரவாகிவிடுகிறது. ஒரே மாதிரியான் இந்த வாழ்க்கை சுழற்சி, ஒரு வித அயற்சியையும், சலிப்பையுமே தருகிறது.

இதையெல்லாம் கொஞ்சம் விட்டு விலகி நிற்கலாமென அல்லது கொஞ்சம் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்ளாமென பதிவுலகில்  கொஞ்சமாய் எழுதவும் படிக்கவும் தொடங்கினேன். ஆனால், இங்கும் பிரச்சனைகளும், வீண் விவாதங்களும், சச்சரவுகளுமே மிச்சமிருக்கிறது. இதுதான் நான் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை.

தீர்வு நோக்கி நகரும் பயணம் இன்னும் புறப்படவே இல்லையா என்றிருக்கிறது. உலகம் ரொம்பவே அழகானது, அதனினும் வாழ்க்கை இன்னும் அழகு. அதை நொடி நொடியாய் அனுபவிக்க கற்றுக்கொடுக்கும் கவிதை இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது. யாரவது எழுதுங்கள், ஒவ்வொரு தனிமனிதனின் பார்வையும் அதைத்தேடித்தான் இருக்கிறது.

மனசை சந்தோசமாக வைத்துக்கொள்ளவே முய்ற்சிக்கிறேன். என் கிடார் வகுப்புகள் வெகு வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.  கீ போர்டும் கற்றுக்கொண்டிருக்கிறேன். இசையும் காதலும் வாழ்க்கையை இன்னமும் அழகாக்கும் மந்திர கருவிகள்.

கொஞ்சம் யோசித்து விட்டு அப்பாவிடம் சொன்னேன். “அப்பா!  இனி உங்கள் நண்பர்கள் யாரவது கேட்டால், இப்படி சொல்லுங்கள், என் மகன் எதோ பிசினஸ் செய்கிறான், ஆனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறான்” என்று சொன்னேன். ஏனென்றால் நான் அதற்கான முயற்சியில்தான் இருக்கிறேன், ஆக இதைத்தவிர நீங்கள் எதை சொன்னாலும் அது பொய்தான் என்று. போனவாரம் மன்னார்குடிக்கு அவரது பள்ளி கல்லூரி நண்பர்களை சந்திக்க சென்றிருந்தார். திரும்ப வந்தபொழுது என்னிடம் சொன்னார் “முரளி, போன இடத்துல பசங்க கேட்டாங்க, நீ சொன்னமாதிரியே சொல்லிட்டேன்டா”, என்றார். அவரிடம் என்மீதான நம்பிக்கை தெரிந்தது.

சத்தியமாக நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். கையில் நூறு ரூபாய் கூட இல்லை, இன்னும் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் இந்தக்கணம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

புது நம்பிக்கை ஒளி மனதிலே,
ஒரு புதுவழி உதயமாகுதே!
கைப்பற்றுவோம் ஸ்டாரை......... இப்படி ஒரு விளம்பரம் கேட்பரீஸ் டெய்ரிமில்க் சாக்லேட்டிற்கு வருமே, அந்த பாடல் நினைவிற்கு வருகிறது.

:-)


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)

இசை - அறிமுகம்

ஓரிரு தினங்களுக்கு முன் நண்பர் சிவகுமார், என் பதிவுகளின் மூலம் நான் திருப்பூரிலே இருப்பதை அறிந்து மெயிலில் தொடர்புகொண்டார். வாசிப்புகளிலும், திரைப்படங்களிலும் இருவருக்கும் ஒத்த கருத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பாக அங்காடித்தெரு பற்றிய என் கருத்து பற்றியும் பேசவேண்டும் என்று மெயில் செய்திருந்தார். அவரை தொடர்பு கொண்டபோது அவரும் திருப்பூரிலேயே இருப்பதையும், ஒரு பின்னாலாடை தொழில் பிண்ணனியில் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.  பின் இருவரும் பேசி நேற்று சந்தித்தோம்.

நிறைய வாசிப்பனுவம் உடையவராக இருக்கிறார், மேலும் நிறைய எழுத்தாளர்களுடன் அவரின் சந்திப்புகள் பற்றி, சினிமா பற்றி, இசை பற்றி இன்னும் என்னென்னவோ பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு அவரோடு ஒப்பிடும்போது இன்னும் நிறைய படிக்கவேண்டும் என்று தோன்றியது. படம் பார்ப்பதில் வேண்டுமானால் நான்தான் சீனியராக (ம்க்கும்) இருப்பேனென்று தோன்றியது.

மேலும் ஞாயிறு காலை இரண்டு புத்தகங்களோடு என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மீண்டும் நிறைய பேசினோம். அன்று படிக்க கொண்டுவந்த அபிதாவை ஒரே வீச்சில் அவர் படித்துவிட்டு, அதைப்பற்றிய சிறு விமர்சனத்தையும் வைத்துவிட்டு போனார். அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் எனக்கு ஒரு விஷயம் மட்டும் பிடிபட்டது. அவர் சொன்னதுபோல எங்களிருவருக்கும் நிறைய கருத்து ஒற்றுமைகள் இல்லை. சொல்லப்போனால்  புத்தக வாசிப்பாகட்டும், திரைப்படங்களின் பார்வையாகட்டும், இசை கேட்ப்பதாகட்டும் கிட்டதட்ட இருவரும் எதிர் துருவங்களில் வாசித்துவருகிறோம். ஆனால், அவரால் எனக்கு இன்னும் நல்ல புத்தகங்களும், திரைப்படங்களும் அறிமுகப்படப்போகிறது. ஒருவேளை அவருக்கும், என்னால்.

 நேற்று சிவக்குமாரோடு பேசிக்கொண்டிருந்ததில் அறியப்பட்ட இந்திய இசைக்குழு இண்டியன் ஓசியன் ( INDIAN OCEAN).  ஒரு தபேலா கலைஞர், ஒரு ட்ரம்மர், கார்ட்ஸ் மற்றும் பேஸ் கிடாருக்கு ஒருவர், லீட்ஸ் கிடார் வாசிக்க ஒருவர் என மொத்தம் நான்கு பேர். அவர்களே மாறி மாறி பாடிக்கொள்கின்றனர். பாடல்கள் அருமை, அற்புதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் ஒரு மாறுதலான இசைக்கு நான் கியாரண்டி.
பெயருக்கேற்றார்ப்போல இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களின் பாரம்பரிய இசையை பின்பற்றி ஆல்பங்கள் செய்கின்றனர். கூடவே நதிகள் காப்பு,  இயற்கை வளம் பற்றிய காட்சிகளை பின்புலமாக கொண்ட வீடியோ ஆல்பங்கள். இசை கருவிகளை இவர்கள் கையாளுவது பார்க்க அருமையாக இருக்கும் என்று சிவக்குமார் சொன்னார். ஆனால் அத்தகைய வீடியோ எதுவும் கிடைக்கவில்லை. யாராவது வைத்திருந்தால் தெரியச்செய்யுங்கள்.

இந்தியன் ஓசியன் குழுவின் சில பாடல்கள் இங்கே,

-----------------------------------------------------------------------

சங்கர் மகாதேவன், இந்த மனுஷன் என்ன பாடினாலும் அருமையா இருக்கு, அதுவும் ராஹத் பதே அலி கான் வேற கூட பாடியிருக்கார். அமன் கி ஆஷா. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்டது இந்த ஆல்பம்.

-----------------------------------------------------------------------

சென்றவாரத்தில் என் ஆர்குட் ஸ்கிராப்பில் நண்பர் நெய்தல் சந்துருவிடமிருந்து இப்படி ஒரு வாசகம்.  

“கைக்கொள்ளும் சித்திரங்கள் சிதறடிக்கப்பட்ட மனவெளியில் பிரம்மாண்டமாய் வடிவெடுத்து பதட்டத்தையும் விவரிக்க இயலாத பரவசத்தையும் ஒருங்கே தரும் தருணம் நான் என்னளவில் அடக்கிக்கொண்டுவிட்ட ஒரு மாயலோகத்தில் பித்தேறி சஞ்சரித்தேன். காதலின் கூப்பாட்டுக்கும், அரற்றலுக்கும், களிப்புக்கும் நடுவில் ஊசலென அலைவுறும் பாடலில் அல்போன்ஸ் 'ஆரோமலே' என்று உச்சஸ்தாயியில் கதறும்போது நெஞ்சுக்கூட்டுக்குள் பெருவெடிப்பை சாத்தியமாக்குகிறார். காதலின் உன்மத்தத்தை, புறக்கணிப்பின் வலியை, நெகிழ்வை வெகுமூர்க்கமான தொனியில் இப்பாடல் வெளிப்படுத்துவதாகவே நான் பார்க்கிறேன்... என்னளவில் விண்ணைத்தாண்டி வருவாயா ஆல்பத்தின் மிகச்சிறந்த பாடல் இதுதானென்பேன்”


என்னளவில் இந்தபாடலுக்கானா மிகச்சிறந்த பாராட்டு இதுவாகத்தானிருக்கும். அரோமலே... இந்த பாட்டை எவ்வளவு தூரம் அனுபவித்திருப்பேன் என்றால் உடனடியாக ஒரு கிடார் வாங்கி வகுப்புக்கு சென்றுகொண்டிருக்கிறேன். எப்படியும் இன்னும் ஓரிருவாரங்களில் மொட்டைமாடியில் நின்று கிடாரும் கையுமாக அரோமலேன்னு கத்தப்போறேன். இந்த பாடலை உருகி உருகி பாடி பாடலுக்கு உயிர் கொடுத்த அல்போன்ஸ் ஜோசப்பின் பாடல் திறமைக்கு இந்த வீடியோ. என்ன த்ரோ பாருங்க அவருடைய குரலில். எவ்வளவு உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருக்கிறார்? கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல்.... பாருங்க...


இன்று மளையாளம் சினிமாவில் இவர் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளர். ஆனாலும் இந்த பாடலை பாடியதற்கு நிச்சயம் பெருமைப்பட்டுக்கொண்டுதானிருப்பார்.


தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் ஓட்டு போடுங்க, நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும். :-)