படமும் பாடலும்

              சிங்கம் டிக்கெட் கிடைக்காம கற்றது களவு படத்திற்கு போனேன். கிருஷ்ணா வின் இதற்கு முந்தைய படமும் எதிர்பார்ப்பில்லாமல் போனதால் ரசிக்க முடிந்தது. படத்தில் வரும் முன்று பாடல்களையும் கட் பண்ணி அந்த நகைச்சுவை என்கிற பெயரில் போட்ட மொக்கையை தவிர்த்திருந்தால் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும். முதல் பாதி கதைக்குள்ள போகமுடியாத அளவிற்கு தூக்கியடிக்குது, நீரவ் ஷா கேமரா. மனுஷன் பூந்து விளையாடியிருக்கார். இரண்டாவது பாதி கேமரா உட்பட எதையும் கவனிக்க முடியாத படி வேகமாய் இருக்கிறது படம், தவறுகள் மறையுமளவிற்கு. ஓரளவுக்கு பரவயில்லைன்னு சொல்லக்கூடிய படத்தை நல்லா இருக்குன்ன் சொல்லவச்சிருக்கு இதற்கு முன் பார்த்தப்டங்கள். :-)

கிருஷ்ணா, பார்க்க எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்கார். நல்லா சண்டை போடறார், டேன்ஸ் ஆடறார்.  நல்ல பேனர், நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்தால் ஒரு மினிமம் கியாரண்டி நடிகர் கிடைப்பார், தமிழ் திரையுலகிற்கு.

பெட்டர் லக் கிருஷ்ணா. அந்த டைட்டில் பச்சோந்தி நல்ல கிரியேட்டிவிட்டி, அதைசெய்த கிராபிக் நிபுணர்களுக்கு வாழ்த்துக்கள்.

--------------------------------------------------------------------

            நல்ல ஒரு படம் பார்த்தேன், அ குட் இயர்-ன்னு. ரிட்லி ஸ்காட் (:-)) அவரோட பேவரைட்(என்னுடைய பேவரைட்டும் கூட) ரஸல் க்ரோ, ம்,ஈண்டும் இணைந்த படம். ரேப்பிட் ஷேரில் ஒருவாரமாய் கஸ்ட்டப்பட்டு டவுன்லோடி பார்த்தேன். ஒரு பதிவு போடலாம்ன்னா நம்ம கருந்தேள் முந்திகிட்டாரு. அவருடைய விமர்சனமே நல்லா இருந்ததால நான் எழுதல, இங்க படிங்க படம் பாருங்க, டிவிடி வாங்குங்க இல்லை டவுன்லோட் பண்ணிக்குங்க, நல்ல மழை நாளில் பாருங்கள் இன்னும் அழகாய்  இருக்கும் மழை.

--------------------------------------------------------------------

சட்டென நனைந்தது நெஞ்சம்,
சர்க்கரையானது கண்ணீர்
இன்னும் இன்பம் ஒரு துன்பம்,
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூறல்,
உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டுவிடு.

எந்தன் வாசல் வழி
காதல் நடந்துவரும் என்று
காத்துக்கிடந்தேன் - அது
வானில் பறந்துவந்து
கூரை திறந்துவரும் என்று
இன்று நானும் தெளிந்தேன்.

தாவி வந்து எனை அணைத்தபோது
எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்.
சாவின் எல்லைவரை சென்று மீண்டும்
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்.

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைத்திடும் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை.

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு,
உயிரை மட்டும் விட்டு விடு

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்வரும் இந்த பாடல், அதிகம் கவனம் பெறாத பாடல் அல்லது முக்கியத்துவம் இல்லாத பாடல். இதிலேயே காட்சிக்கு பொருந்தகூடிய அருமையான வரிகள் மற்றும் ரம்மியமான இசையை கொடுத்திருக்கும் கவிஞரையும் இசையமைப்பாளரையும்.... ம்ம்ம். எனக்கு ரொம்ப பிடிச்சிடுக்கு.

ஒரு நாள் ஒரு பொழுது
உன்மூஞ்சக் காங்காம
உசிரு அல்லாடுதே

மறுநாள் வரும் வரைக்கும்
பசி தூக்கம் கொள்ளாமல்
மனசு தள்ளாடுதே

அந்திமந்தாரை படத்தில் வரும் இந்த பாடலும் ரகுமான் ஆல்பங்களில் அதிகம் கவனிக்கப் படாமல் போன பாடல்களில் ஒன்று. கேட்டுப்பாருங்க. ரம்மியமா இருக்கும். இது போல படத்தில், கேசட்டில் வராத அல்லது அதிகம் கவனம் பெறாமல் போன நல்ல பாடல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்க நண்பர்களே!
--------------------------------------------------------------------

ஒரு பதிவை எழுதிமுடித்து அதை போஸ்ட் செய்வதற்க்குள் ஒரு மூன்று முறையாவது படித்து பார்த்துவிட வேண்டியிருக்கிறது. எங்கே இதில் எந்த வரியாவது யாரையாவது குறிப்பிடும்படியாக இருக்கிறதா? என்று. ஒருபுறம் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. 
மோதல்கள் இல்லாமல் பயணிக்கவே முடியாதா? வெறும் நண்பர்களையும் மட்டும் பெற இயலாதா, நாலு நண்பர்கள் கிடைத்தால் ஒரு எதிரி இலவசமா, என்ன? யாருடைய செயல்களுக்கும் நான் நியாயம் கற்பிக்கவுமில்லை, வாதிடவுமில்லை. எல்லா நல்லவனுக்குள்ளாகவும் ஒரு கெட்டவன் இருக்கிறான். அவனை வெளிக்கொண்டுவராத வரைக்குமே, நல்லவன். முடிந்தவரை அவனை உள்ளேயே பூட்டிவையுங்கள்.   நாம் நண்பர்களாகவே இருப்போம். கூடித்தேர் இழுப்போம்.

ஊதி எரியவைக்கும் உதடாய் இரு
கற்றவை, பற்றவை
தீயவை, தீயை வை.
என்ற பாரதியின் வார்த்தைகளை கொண்டு வளம் சேர்ப்போம்


வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே!
உதிரத்தின் நிறமிங்கு வேறில்லையே!
காற்றுக்கு திசையில்லை, தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்.
மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும்போது
மனதோடு மனதிங்கு பகை கொள்வதேனோ?
மனமெங்கும் மதம் ஓயட்டும் - தேசம்
மலர்மீது துயில் கொள்ளட்டும்.


பம்பாய் திரைப்படத்தில் வரும் கிளைமேக்ஸ் பாடல்சிதம்பர நினைவுகள்


சிதம்பர நினைவுகள்
கவிஞர். பாலசந்திரன் சுள்ளிக்காடு
விலை. ரூ.60/-

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு அவர்களால் எழுதபட்ட “சிதம்பர ஸ்மரண” என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் கே.வி.ஷைலஜா அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார். வம்சி புக்ஸ்- பவா செல்லத்துரை அவர்களின் மனைவி. இதுவே நான் படிக்கும் இவரது முதல் தொகுப்பு. வெறுமனவே இதைத்தொகுப்பு என்று மட்டும் சொல்வதிலும் காரணம் உண்டு, உண்மையில் இதை கட்டுரைத்தொகுப்பு என்பதா? கவிதைத்தொகுப்பு என்பதா? சிறுகதைத்தொகுப்பு என்பதா? படித்திருப்பவர்களுக்கு நிச்சயம் நியாமாக வரக்கூடிய சந்தேகம்தான் எனக்கும். ஏனெனில் இந்த தொகுப்பை அப்படி மூன்றிலும் அடக்கமுடியாது அல்லது மூன்றுமே இதில் அடக்கம் என்று சொல்லலாம். நண்பர் பதிவர் சிவக்குமாருக்கும் எனக்குமான முதல் சந்திப்பில், அவர் என்னிடம் கொடுத்த புத்தகம். 21 தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்து ஆறு பக்கங்கள் கொண்ட வெறும் 152 பக்க சிறுபுத்தகம். ஆனால் படித்துமுடிக்கும்போது அது ஏற்ப்படுத்திய அதிர்வலைகள் அடங்க வெகுநேரம் பிடிக்கும்.“வாழ்வின் சில நிகழ்வுகள்
மங்கி மறைந்து போகாமல் மனசில்
மீண்டும் மீண்டும் அலை மோதிக் கொண்இருக்கின்றன.
அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்துப் பார்க்க தோன்றியது.
அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கைக் குறிப்புகள்.
ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று.
ஒருபோதும் எதிர்பார்க்காத எதோ ஒன்றை,
அது உங்களுக்காக பொத்தி வைத்து காத்திருக்கும்.
எப்போதும்.”
- பாலசந்திரன் சுள்ளிக்காடு –
ஆசிரியர்இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு பெளர்ணமியின் முன்னிரவு என்று ஞாபகம். ஆரண்யம் சிறுபத்திரிக்கையில் யாரோ ஒருவரின் கட்டுரை என்ற அலட்சியத்தோடுதான் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த சிவாஜிகணேசனுடனான அனுபவத்தைப்ப் படித்தேன். ஒரு மகா நடிகனோடான அந்த கவிஞனின் சந்திப்பும், அவர்களிருவரும் ஸ்காட்ச் விஸ்கியைப் பகிர்ந்து கொண்டதைக்கூட மிகக் கெளரவமாக கருதவைக்கும் எழுத்தும் என்னை உறைய வைத்தது. ஒரு சாதரண நிகழ்வைக்கூட இலக்கியத்தில் புறந்தள்ளிபோக முடியாதவாறு பதிவு செய்யமுடியும் என்ற அந்த எழுத்தின் வலிமைதான், கேரளத்து தெருக்களில் தன் பால்யத்தின் குரல் விற்றுப் பிழைத்த அந்த கவிஞனை தேட வைத்தது.
- கே.வி.ஷைலஜா –
மொழிபெயர்ப்பாளர் தமிழில்சிதம்பரம் என்றால் ரகசியம் என்றுதான் எண்ணத் தோன்றும். இது ஏறுக்குமாறானது, எல்லாமே அம்பலமாகிறது. தமிழ், மலையாளம் – திராவிடம் என்று முப்பரிமாணத்தையும் இவரது எழுத்துக்களில் கானமுடிகிறது. வறுமையும், காமமும், கர்வமும் இவரை புடம்போட்டு பொன்னாக்கி இருக்கின்றன. ஒரு சித்திரக்காரனைப்போன்று தன் மனசையும், உணர்வையும் கோடுகளாகவும், கோலங்களாகவும் தீட்டியுள்ளார்.
இதனை ஒரு மொழிபெயர்ப்பு என்று எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தமிழ்ப்படுத்தியுள்ளார் கே.வி,ஷைலஜா.
- காவ்யா சண்முகசுந்தரம் –
பதிப்பாசிரியர்

என்னுடைய வாசிப்பு பழக்கம் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். ஒரு புத்தகத்தை படிக்கும்பொழுது மனதை பிசைகிற வரிகளில் நிறுத்திவிட்டு அந்த அனுபவத்திலேயே திளைத்துதிரிவேன். பல நேரங்களில் சில நிமிடங்கள், சில மணிநேரங்கள் என்றும் சில நேரங்களில் நாள் கணக்கிலும் நீண்டு விடுவதுமுண்டு. இது புத்தக வாசிப்பில் மட்டுமல்ல திரைப்படங்களை பார்க்கும்பொழுதும் இதுவே வாடிக்கை. ஆகவே ஒரு புத்தகத்தை படித்துமுடிக்க எனக்கு கொஞ்சம் நேரம் அதிகமாகவே பிடிக்கும். அந்த வரிசையில் நான் மிக அதிக நேரம் எடுத்துப்படித்த புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இரண்டு பத்திகளுக்கு ஒருமுறை மனுஷன் அழ வைக்கிறார். சிரிக்க வைக்கிறார், யோசிக்க வைக்கிறார். பரிதாபம் கொள்ளச்செய்கிறார், கோபப்பட வைக்கிறார். இத்தனையும்.

என்றோ தன் கல்லூரி வாழ்வின் ஒரு அசட்டு திமிரில் ஒரு பெண்ணை மிரட்டி வாங்கிய முத்தத்தை பத்து வருடங்களுக்கு பின் அவளை ஒரு சங்கடமான சூழ்நிலையில் சந்திக்கும்போது திருப்பிக்கொடுப்பதும், ஒரு விலைமாதுவை சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டு “எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்” என்பதிலிருந்தும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளும், மனிதனின் சூழ்நிலையுமே அவனை தட்டி தட்டி உருக்கொள்ள செய்கிறது என்பதை உணர முடியும்.

திருவோண தினத்தன்று, ஏற்கனவே மூன்றுவேளை பட்டினியோடு பிடிசோறுக்கும் கதியற்று ஒரு வீட்டில் யாசித்து திண்ணையிலிட்ட சோற்றில் கைபுரளும் நேரம் அந்த வீட்டுப்பெண் இவரை கவிஞர் பாலசந்திரனென்பதை கண்டுகொள்கிறாள். தன் வீட்டுப்பெரியவர்களிடம் இவர் பிச்சைக்காரனில்லை, இவர் மிகப்பெரிய கவிஞர், என் கல்லூரியில் கவிதை வாசித்திருக்கிறார், என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். பாதி போஜனம் கழிந்த நிலையில் அந்த மனிதனின் நிலை என்னவாக இருக்கும்.

“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடி விடலாமா? வேண்டாம்.
ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றை தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையையும் விடப்பெரியது பசியும் சோறும்தான்.
நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்”

கண்ணிலிருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டு புத்தகத்தை மார்பில் கவிழ்த்துவிட்டு, விட்டத்தை வெரித்தபடியே பார்த்துக்கொண்டிருப்பேன். இதுபோல நெகிழ்ச்சியான தருணங்கள் புத்தகமெங்கும் விரவிக்கிடக்கிறது. பலதடவைகளில் அம்மா “ஏண்டா, அவ்ளோ கஸ்டமாவா இருக்கு படிக்க?” என்று கேட்ப்பார்கள். சிரித்துக்கொள்வேன். அழுதபடியே சிரிக்கும் பொழுதுகள்; கொள்ளை அழகு.

சில நொடிகளில், நாம் வாழ்வில் அற்பமாக நினைக்கும் பொழுதுகளைக்கூட கூர்ந்து கவனித்து தவிர்க்கமுடியாத வண்ணம் இல்லக்கியத்தரத்தில் பதிவுசெய்திருக்கிறார். இதில் புனைவுகளோ கற்பனைகளோ இருப்பதாய் தெரியவில்லை. தன் வாழ்வின் ஒரு பகுதியில் நடந்த நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி அப்பட்டமாக, பிச்சையெடுத்ததது முதல் இரத்தம் விற்றது வரை பட்டவர்த்தனமாக பதிவிட்டிருக்கிறார். ஆனால் அதை அவரது உணர்வுகளை தூக்கிப்பிடிப்பதோ இல்லை அதைப்பற்றிய தாழ்வுமனப்பான்மையோ இல்லாமல் விவரித்திருப்பதுதான், பாலசந்திரன் சுள்ளிக்காடின் எழுத்துக்கள்

NO EXCUSE, NO COMPROMISE என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. அதுபோலவே வாழ்ந்திருக்கிறார், மனுஷன். இது, ஒரு எழுத்தாளன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்கிற நியதியல்ல மாற்றாக ஒரு எழுத்தாளனால், கவிஞனால் இந்த கர்வத்தோடுதானிருக்க முடியும் என்பதுபோன்றது. தன்மீதான அசாத்திய நம்பிக்கையும் தன்எழுத்தின் மீதான கர்வமுமே, இந்த பாலசந்திரன் சுள்ளிக்காடும் அவரது சிதம்பர நினைவுகளும்.

புத்தகவாசிப்பில் ஆர்வமுடையவர்கள் அவசியம், வாழ்வில் ஒரு தடவையாவது படித்தே ஆக வேண்டிய ஒரு நல்ல புத்தகம். ஒவ்வொரு முறையும் இது போன்ற எழுத்துக்களை வாசிக்கும்போது இவர்கள் வாழும் அதே உலகில்தானே நானும் இருக்கிறேன். இவர்களோடு பேசிய காற்றுதானே என்னோடும் பேசிக்கொண்டிருக்கிறது, இவர்கள் நடந்துபோன பாதையில்தானே இன்று நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன். இவர்கள் சந்தித்த அந்த அற்புத மனிதர்களும், தருணங்களும் எங்கே? அவை எனக்கும் வாய்ப்பதெப்பொழுதென காத்திருப்பேன். பூ மலர்வதை பார்க்க விடிய விடிய விழித்திருந்த சிறுவனை ஏமாற்றி அவன் கண் அசந்த நொடியில் பூத்த பூவைப்போல, எனை ஏய்த்துச்செல்கின்றன, பொழுதுகள்.

என்றாவதொரு நாள் நான் பார்க்க மலரும், பூ.

கல்யாண்ஜியுடன் சில நிமிடங்கள்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் கவிஞர் கலாப்ரியாவின் படைப்புக்களம் பற்றிய விவாதம் மற்றும் அவருக்கான பாராட்டுவிழாவிற்க்கான அழைப்பிதழ், நண்பர் செல்வேந்திரனிடமிருந்து கிடைத்தது. இதழில் ஒவ்வொரு பெயராக வாசிக்கும்போது அன்பின் அழைப்பில் வண்ணதாசனும், வண்ணநிலவனும் என்றிருந்தது. வண்ணதாசனா?....... எவ்வளவு வேலை இருந்தாலும், அந்ததினம் அந்தநேரம் அங்கே இருக்கவேண்டுமென, படித்தமாத்திரம் முடிவு செய்துவிட்டேன்.

நான், ராமன், சிவகுமார், வெயிலான் மற்றும் நண்பர் பிரதீப்போடு விழாவிற்கு சென்றிருந்தோம். நாங்கள் சென்றபொழுது விழா ஆரம்பித்திருந்தது. வா.மணிகண்டன், கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், கவிஞர் வெண்ணிலா, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலாப்ப்ரியாவின் படைப்புகளை சிலாகித்து பேசினர். இதுவரை அவரது படைப்புகளை படித்ததில்லை என்றாலும் அங்கே கேட்ட சில கவிதைகளிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடிந்தது. கவிதைகள் மீதிருந்த புரியாது என்ற பிம்பம் உடைந்து, வெகு எளிமையாக இருந்தது, அவரது கவிதைகள். குறிப்பாக பழுதைடைந்த பஸ்ஸும், அதில் விளையாடும் குழந்தைகளும் சம்பந்தப்பட்ட அந்த கவிதை. அவசியம் வாசிக்கவேண்டும்.

விழா ஒருங்கிணைப்பாளரில் ஒருவரும் நண்பருமான அரங்கசாமி அவர்களோடு முன்னமே பேசியிருந்ததில் வண்ணநிலவன் அவர்களின் வருகை சந்தேகமே என்று சொல்லியிருந்தார். நான் சென்றதிலிருந்து விழா மேடையில் வண்ணதாசன் அவர்களை பார்க்க முடியவில்லை. ஒருவேளை இவரும் வரமுடியாமல் போயிருக்குமோ என்ற எண்ணம் வந்தபோது, ஏமாற்றமாக இருந்தது. ஆனால் கலாப்ரியா அவர்கள் ஏற்புரை வழங்கும்போது என்னை வளர்த்ததில் பெரும்பங்கு வண்ணதாசனுக்கும் என்று முன்வரிசையை கை காட்டினார். எட்டி முன்பார்த்ததில், ஆம். வண்ணதாசன்.

விழா முடிந்தபின் வடகரைவேலன் அண்ணாச்சி ஜெ.மோவிடம் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அவரோடு பேசிக்கொண்டிருந்த போது அங்கே வண்ணதாசன் வந்தார். நானாக சென்று அறிமுகம் செய்து கொள்வதில் சிறு கூச்சம் இருந்தது. அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பின்  நான் சிறிதாக செய்த ஒரு புன்னகையின் பதிலாக அவரது பளிரென்ற சிரிப்பு, அவரின் அருகாமையை எளிமையாக்கியது. நான் முரளி, சார். திருப்பூரிலிருந்து வருகிறேன், நல்லா இருக்கிங்களா? என்றேன். என் கைகளை பற்றியபடி நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கிங்க? என்றார். மேலும் என்ன பேசுவது என் தெரியாது, நான் உங்களை படித்திருக்கிறேன் என்று சொல்வது சம்பிரதாயமானதாக ஆகிப்போகும் என்பதால் யோசித்துகொண்டு நின்றிருந்தேன். பலரும் அவரை சந்தித்துபேசுவதில் முனைப்பாக இருக்கவே, விலகி நின்று கொண்டேன்.


சிறிது நேரத்திற்கு பின் சற்று ஓய்வாக கவிஞர் சுகுமாரனிடம் பேசிக்கொண்டிருந்தார். மெதுவாக அங்கே செல்லவும், வாங்க என்றார், சிரித்தபடி. மறுபடியும் கைகளை பற்றிக்கொண்டார். அவருடைய கதைகளில் வருகிற ஒரு சாதாரணமான மனிதர். வாஞ்சையான அவருடைய அந்த பற்றுதலிலேயே அதை புரிந்துகொள்ள முடிந்தது.

சார், உங்க கையெழுத்து வேண்டும், என்றபடி நான் எடுத்து சென்றிருந்த எஸ்.ராவின் வாசகபர்வம் புத்தகத்தை நீட்டினேன். என்ன புத்தகம்? என்று அட்டையை பார்த்துவிட்டு ஓ... எஸ்.ராவா என்றபடி புத்தகத்தை புரட்டினார். அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கி எழுத்தில் ஓடும் ஆறு என்ற அவரை பற்றிய கட்டுரை பக்கத்தை எடுத்து நீட்டினேன். சிரித்தபடியே வாங்கிக்கொண்டார். கையெழுத்து என்னன்னு போடுவிங்க வண்ணதாசன்னா? கல்யாண்ஜின்னா? என்றேன். அதற்கும்சிரித்தபடி வாழ்த்துக்களுடன் கல்யாணி என்று போட்டுக்கொடுத்தார்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு எழுத்தாளர்களை வாசிப்பது என் வழக்கம், சார். இந்த முறை உங்களுடைய புத்தகங்களைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன், எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டேன் என்றேன். மேலும் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக ஒருவரை படிக்கும்போது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த முறை அது அனிச்சையாக நடந்திருக்கிறது, அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, என்றேன். அப்படியானால் அடுத்து நீங்க படிக்கனும்ன்னா நான் சீக்கிரமா ஏதாவது எழுதியாகனுமே, எழுதறேன் என்றார் சிரித்தபடியே. இதற்கிடையில் முத்தையா, கிளம்பளாங்களா? என்றபடி வந்தார். அவரிடம் சிரித்துக்கொண்டே “இருப்பா, எங்கிட்ட எப்பவாவதுதான் இந்தமாதிரி கையெழுத்தெல்லாம் வாங்கறாங்க, அத கெடுக்க வந்தியே...” என்றபடி சரி மறுபடியும் சந்திப்போம் என்று கையைப்பற்றி குலுக்கியபடி கிளம்ப எத்தனித்தார். சார் உங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன்னு என்னால சட்டுன்னு நம்ப முடியலை,........... நீங்க வரலைன்னு நினைச்சிட்டேன், சார்..........., வெளியில அரசமரம் ஒண்ணு இருக்கு, பார்த்திங்களா.......? என்றேன். இன்னொரு கையால் என் கையை பொத்திய மாதிரி பிடித்துக்கொண்டார். அவர் கைகளின் வழியாக எழுத்தில் ஓடும் ஆறு எனக்குள்ளாகவும் ஓடியது.  காற்று மெல்ல வீசியது, சறுகுகள் மெல்ல புரண்டு புரண்டு படுக்க அவர் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தேன். கனவு மாதிரி..........
 
 

ரெண்டு பல்பும், நானும்

எனக்கும் ஹாரர் படங்களுக்கும் குறைஞ்சது ஒரு பத்து கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். ஒரு தெரிஞ்சவரோட பொண்ணு:-) கேட்டுச்சேன்னு சொல்லி, ஏற்கனவே  டவுன்லோட் பண்ணி வச்சிருந்த சில படங்களை கொடுக்கலாமென நினைத்தேன். பொதுவா டவுன்லோடட் மூவீஸ் அன்கட் வெர்ஸனாக இருக்கும் என்பதால், படத்தை ஒருதபா பார்த்துட்டு குடுக்கலாம்ன்னு நினைச்சேன். சில படங்களில் அருவருப்பாகவும் ஆபாசமாகவும் நிறைய காட்சிகள் இருந்து தொலைக்கும்.

நாம் டிவிடி-ய குடுத்த நேரம் ஏடாகூடமா ஏதாவது ஆகித்தொலைக்கப்போகுதுன்னு, ஒவ்வொரு படமா போட்டு பாத்துகிட்டிருந்தேன்.  எல்லா ப்டமும் ஒரே மாதிரிதான் இருக்கு. சொல்லப்போனால் படத்தின் ஆரம்ப காட்சியும் இறுதிக்காட்சியும் கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. எல்லா படங்களையும் முழுமையாக பார்க்கமுடியாது என்பதால் 8X-ல் ஓடவைத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.  இருந்தாலும் காட்சியமைப்புகள் ஒவ்வொரு படத்தையும் முழுமையாக பார்க்க வைத்து விட்டது.

SAW (வரிசையா மூணு படம் பார்த்தேன், மொத்தம் 5 பாகம் இருக்கு),

WRONG TURN (இது மொத்தம் மூணு, நான் ரெண்டாவதுதான் பார்த்தேன்),

HOSTEL (இது எத்தனின்னு தெரியலை ஒண்ணையே பார்க்கமுடியலை)

MIDNIGHT MEAT TRAIN ( நல்ல வேளையா ஒரே பாகம்தான், பின்னால வருமோ என்ன்வோ?).

இந்த படங்களின் மேலதிக விபரங்களுக்கு ஹாலிவுட் பாலாவின் 18+ ஐ தொடர்புகொள்ளுங்கள்.

ஒருவழியா ஒரு ஆறு படத்தை பார்த்துவிட்டு அந்த பெண்ணுக்கு கொடுப்பதற்கென படங்களை தேர்வு செய்துவிட்டு, இன்னொரு டிவிடீயில் காப்பி செய்து கொடுத்தேன். நேரம். சோனி ப்ளேயரில் AVI ஃபைல்ஸ் ரீட் ஆகாதாமே? எதுவுமே ஓடலைண்ணான்னு சொல்லி எல்லா டிவிடியையும் கொண்டுவந்து திரும்ப கொடுத்துவிட்டாள்.

அண்ணாவா!?  இப்படி சொல்லி கேட்டிருந்தா இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேனேன்னு மனசுக்குள்ளயே சொல்லிகிட்டேன். அப்படி இப்படின்னு இந்த வாரம் முழுக்கவே இதே மாதிரி படங்களா பார்த்துவிட்டேன். அவ்வ்வ்வ்வ். முடியலை சாப்பாட்டை பார்த்தாகூட ஒருமாதிரியா குமட்டிகிட்டு வருது. இப்போ இருக்கிற என் மனநிலைக்கு பொருந்துற மாதிரி யாராவது மனசுக்கு இதமா ரெண்டு படங்களை சிபார்சு செய்யுங்களேன். புண்ணியமா போகும்.