செம்மொழி மாநாடு - என் அனுபவம், சில துளிகள்.

நண்பர் ரவிசங்கர் (விக்கிபீடியா) மற்றும் திரு. எஸ்.பாலபாரதி இருவரும் மாநாட்டிற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே தமிழ் இணைய மாநாட்டில் நமக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் தமிழ் எழுத்துறு, தமிழில் விக்கிபீடியா, தமிழில் வலைப்பதிவுகள் உட்பட்ட ஆறு தலைப்புகளில் வகுப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது, ஒரு நாளைக்கு ஆறு பேர் தேவை ஐந்து நாட்களுக்கு முப்பது பேர் தன்னார்வளர்களாக தேவைப்படுகிறார்கள். விருப்பமிருப்பவர்கள் அனுகவும் என்று மடலனுப்பியிருந்தார்.


திருப்பூர் பதிவர்கள் சார்பாக நான், வெயிலான், பரிசல்காரன், பேரரசன், கடலையூர் செலவம், ராமன்குட்டி என அனைவரும் செல்ல திட்டமிட்டிருந்தோம். சாமிநாதனும், நிகழ்காலத்தில் சிவா அண்ணனும் கடுமையான பணி நிமித்தம் வருவது சிரமம் என்று சொல்லிவிட்டனர். பின் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கும்போது அனைவரும் ஒருசேர செல்வதென்பது இயலாத ஒன்றாகிப்போனது. காரணம் பணிச்சுமை. ஆக பரிசல், வெயிலான் நீங்கலாக நாங்கள் நால்வரும் கடந்த வியாழன் அன்று சென்றிருந்தோம்.

நிறைய அச்சுறுத்தல்கள் இருந்தது, மாநாடு பற்றி. வாகனங்கள் கருமத்தம்பட்டி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்றும், அதற்குமேல் அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகள் மூலம் மட்டுமே விழா நடக்கும் கொடீசியா வளாகத்திற்கு செல்ல முடியும் என்று, ஏகப்பட்ட வாகன நெரிசல் போய்வருவதென்பது மிகவும் சிரமம் என இன்னும் நிறைய.   ஆனால் அப்படியேதும் இல்லை, இருசக்கர வாகனங்களில் நேராக விழா நடக்குமிடத்திற்கு வெகு அருகில் (ஒரு கிலோ மீட்டர்) வாகன நிறுத்துமிடம் வரை செல்ல முடிந்தது. அங்கிருந்து ஒரு 20 நிமிட நடை அவ்வளவுதான். பிரம்மாண்டம், என் வாழ்நாளில் இத்தைகைய மக்கள் வெள்ளத்தை ஒரு போதும் சந்தித்ததில்லை. எங்கு பார்த்தாலும் மக்கள், மக்கள், மக்கள். இன்னும் ஒரு பத்து நாளைக்கு மனிதர்களைப் பார்த்தாலே சங்கடம் வரும் அளவிற்கு மக்கள் வெள்ளம்.

நிறைய குறைகள் உண்டு, அதை நிறைய பேர் எழுதவும் கூடும். அதேபோல இந்த மாநாட்டின் நிறைவுகளையும். என்ன இருந்தாலும் எவ்வளவு குறைகள் இருந்தாலும் இவை அனைத்தையும் என்னால் சகித்துக்கொள்ள முடிந்தது, காரணம் என் கண்ணில் பட்ட, நான் அனுபவித்த சில விஷயங்கள்.

*இணைய வளாகத்திற்க்குள் நுழைய இரண்டரை மணி நேரம் வரிசையில் நின்று உள்ளே வந்த விக்கீபீடியாவை சேர்ந்த நண்பர் .... சொன்ன “ரொம்ப சந்தோசமா இருக்குங்க, எத்தனையோ இடத்தில் எதற்கெல்லாமோ நின்றிருக்கிறேன், இன்று தமிழுக்காக நின்று வந்தது, மிகவும் பெருமையாககவும் சந்தோசமாகவும் இருக்கிறது”.

* ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த தமிழ் மைய நிர்வாகிகள் இரண்டு பேர், எந்த வித அடையாள அட்டையையும் தவிர்த்து எங்கும் சராசரியாக மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஒவ்வொரு நிகழ்வுகளாக கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.

* கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்ற பெண்கள், வயதானவர்கள், தளைய தழைய பட்டுபுடவைகளை கட்டிக்கொண்டு தலை நிறைய பூவோடு ஏதோ தங்கள் வீட்டு திருமண விழாவிற்கு வருவதுபோல வந்திருந்த பெண்கள். நாள் முழுவதும் வெயிலிலும் வேர்வையிலும் நனைந்து கொடுமையான மக்கள் வெள்ளத்தை அடக்கி முடிந்தவரை இன்முகத்துடன் இருந்த காவல்துறை நண்பர்கள்.

அரங்கு முன் வந்து கூப்பிடுங்கள், நான் வந்து உள்ளே அழைத்து செல்கிறேன் என்று சொன்ன ரவி, சொன்னபடி வரமுடியததால் அவர்மீது கோபமாய் வந்தது, திரும்ப போய்விடலாம் என்றி செல்வத்திடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு நிமிடம் கூட வரிசையில் நிற்கலாமென்றோ உள்ளே வரமுடியாத அளவிற்கு ரவிக்கு என்ன வேலை இருக்குமோவென்று எதையுமே யோசிக்கவில்லை, என் மனம். எனக்கு களைப்பாயிருந்தது.

முன் சொன்ன இவர்களோடு ஒப்பிடும்போது நான் எவ்வளவு கீழே இருக்கிறேன் என்பது புரிந்தது. என்னை நானே புரிந்து கொள்வதில் உதவி செய்த அனைவருக்கும் எனது நன்றி.

ஒரு வழியாக மதியம் மூன்று மணிவரை எல்லா கண்காட்சிகளுக்கும் சென்றுவிட்டு ரவியின் சிபாரிசோடு இணைய அரங்கத்திற்குள்ளே சென்றோம். அரசு இலவசமாக ஒதுக்கியிருந்த ஸ்டால்களில் தமிழ் வலைபதிவுகள் என்கிற தலைப்பின்கீழ் வலைப்பதிவு உருவாகுவது எப்படி, தமிழில் தட்டச்சுவது எப்படி, வலைப்பதிவின் நன்மைகள் என எங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை பார்வையாளர்களுக்கு சொல்லிக்கொடுத்தோம். பலருக்கு வலைப்பதிவு என்றால் கிலோ எவ்வளவு என்கிற நிலைதான், இருப்பினும் பலரும் ஆர்வத்துடன் வந்து கேட்டு சென்றனர்.

எங்கள் ஸ்டாலிற்கு அடுத்த ஸ்டாலான NHM Wtiter -ல் எழுத்தாளர் பா.ராகவன் இருந்தார். வெகு நேரம் அவரை கவனிக்கவில்லை. அவரை பார்த்தபின் அவரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தோம், ”சார், நாம் சென்னையில சிறுகதை பட்டறையில் சந்தித்திருக்கிறோம்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஆனால் அந்த அறிமுகமெல்லாம் தேவையே இல்லை என்பதுபோல மனிதர் வெகு சகஜமாக நிறைய நேரம் எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். எங்களின் உரையாடல் வெகு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. (உபயம் : பேயோன்)


நான் உட்பட அனைவரின் கடிகாரங்களும் மணிக்கட்டில் கனக்க, பேச எவ்வளவோ இருந்தும் விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம்.

இதர கண்ணில்பட்ட, காதில் விழுந்த, பிடித்த, பிடிக்காத சில விஷயங்கள்:

* எத்தனை மக்கள் எவ்வளவு இடையூறுகளுக்கிடையே, நீண்ட பயணத்திற்கிடையே, களைப்பினூடே நடந்த படி இருந்தனர், அவர்களுக்கிடையே செல்லும் அரசியல்வாதிகளின் கார்கள், அவர்களை ஒரு கடந்தவிதம். அருவருப்பு. அவ்வளவு அவசரமாய்ப் போய் அப்படி என்னத்தைத்தான் வெட்டி முறிக்கப்போகிறார்களோ என்று ஆத்திர ஆத்திரமாய் வந்த்தது.

* தமிழனின் கலாச்சாரத்தில் மிகமுக்கியமானது விருந்தோம்பல், அது சரியில்லை என்பதுதான் என் கருத்து. மான்யம் பெற்றுக்கொண்டாலும் கொடுத்த காசுக்கே உணவு கொடுக்கப்பட்டது. அரசிடம் பெற்ற மானியம் எங்கே?

*உள்ளே வருபவர்களை வாங்க உட்காருங்க என்று சொல்ல யாருமில்லை, மாறாக நிக்காதிங்க, போங்க என்ற வார்த்தைகளையே அதிகம் கேட்க முடிந்தது.

* யார், யார் எங்கே செல்லவேண்டும் என்பதை கேட்டு அவரவர்களை அங்கங்கே அனுப்பிவைக்க ஒரு குழு அமைத்திருக்கலாம், என்ன ஏது என்று தெரியாமல் அனைவரும் எல்லா இடங்களிலும் தங்களை திணித்து பின் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

*இந்த மாநாடு எவ்வளவு தூரம் தமிழை வளர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் நான் இருந்த அந்த பத்து மணி நேர கால அவகாசத்தில் தமிழ் என்கிற சொல் வெவ்வேறு மனிதர்களின் குரலில் வெவ்வேறு காரணத்திற்காக ஒரு பத்தாயிரம் முறையாவது என் காதில் விழுந்திருக்கும். அதுவரையில் மிக்க மகிழ்ச்சி.

* ஒரு வகையில் இதுவும் தலைவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவோ என்னுமளவிற்கு கலைஞர் பெயரும் கேட்டுக்கொண்டுதானிருந்தது.

* எனக்கு மிகவும் பிடிக்காத ஒரு விசயமாய் நான் நினைப்பது, கால்கடுக்க மிகவும் கடுமையான வேலை செய்துகொண்டிருந்த காவல்துறையினருக்கு உணவு வழங்கிய விதம். ச்சே... இவர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாம் என்றாகிப்போனது.

எது எப்படியோ மாநாடு மிகப்பெரிய வெற்றி, இதை இவ்வளவு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு என் வாழ்த்துக்கள். முக்கியமாக காவல்துறைக்கு.

நான் மிகவும் மகிழ்ச்சியோடிருக்கிறேன்!

இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த நாள் முதல் வெறுமனவே ஏதேதோ எழுதுக்கொண்டிருந்தேன். கதை ,கவிதை, கட்டுரை என எதிலும் அடங்காமல் பத்தி பத்தியாக எழுதிக்கொண்டிருப்பேன். என்னால் சிறுகதை எழுத முடியும் என்ற நம்பிக்கையை உருவாகியதே இந்த உரையாடல் அமைப்பின் சிறுகதைப்போட்டியில்தான். நான் எழுதிய முதல் சிறுகதை (!) ‘பேருந்து பயணம்’ இந்த போட்டிக்காக எழுதியதுதான், வெற்றி பெறவில்லை எனினும் கலந்துகொண்டதே மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் மூலம் கிடைத்த நட்பு, சிறுகதை பட்டறை என என் நட்புவட்டம் பெரிதாகிக்கொண்டே போகிறது, அப்படிப்போவதிலும் மகிழ்ச்சி.இன்று கவிதைப்போட்டி ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். நானும் இதிலும் கலந்து கொண்டேன். இந்த போட்டிக்கான முடிவுகளை முன் அறிவித்தபடி இருந்த நாட்களில் வந்து பார்ப்பேன், எங்கே என் பெயரேதும் இருக்கிறதாவென. ஆனால் இரண்டு முறை நாட்கள் தப்பிப்போக, எனக்கே முடிவுகளின் மீதிருந்த ஆர்வம் மெல்ல அற்று போயிற்று.. கவிதை எழுதிய எனக்கே இப்படியென்றால், உங்களை (ஜிவோவ்ராம் சுந்தர் மற்றும் சிவராமன்) நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இவ்வளவு சிரமங்களுக்கிடையே ஒரு போட்டியை நடத்தி வெற்றிகரமாக முடித்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி.

நேற்றய முந்தினம் நண்பர் வெயிலான் சொல்லியே முடிவு அன்று வெளியாகியிருக்கிறது என்பதும், அதில் எனக்கும் பரிசு கிடைத்திருக்கிறது என்பதும் தெரியவந்தது. உரையாடல் கவிதை போட்டியில் நான் எழுதியதையும் கவிதையாய் பாவித்து, அதை தேர்வும் செய்து என்னை வெற்றியும் பெறச்செய்திருக்கிறீர்கள், அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். என்னாலேயே கவிதையென தைரியமாக பெயரிடாதபடியிருந்த என் கிறுக்கலைத் தேர்ந்தெடுத்த கவிஞர் சுகுமாரன் மற்றும் என் ப்ரியமான யுவன் அவர்களுக்கும் கோடி நன்றி. வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என் மீது எனக்கிருந்த மரியாதையை இன்னும் ஒரு படி உயர்த்தி பிடித்திருக்கிறது, இந்த வெற்றி. தோழர்.மாதவராஜ் அவர்கள் தொகுத்த மரப்பாச்சியின் சில ஆடைகள், சிறுகதை தொகுப்பில் என்னுடைய சிறுகதையும் (பட்டாம்பூச்சி பார்த்தல்) தேர்வுசெய்யப்பட்டதும், இன்று உரையாடல் கவிதப்போட்டியில், அப்பாவும் ஆல் இந்தியா ரேடியோவும் என்ற என் கிறுக்கலுக்காக  முதல் இருபது பேரில் ஒருவனாய் என்னையும் தேர்தெடுக்கப்பட்டதும், எழுதுவதென்பது வெறும் பொழுதுபோக்கு, ஒரு சோஷியல் நெட்வொர்க், வெட்டிவேலை, டைம் பாஸ், மொக்கை இன்னும் என்னவெல்லாமோ சொன்னாலும் எல்லாவற்றையும் தாண்டி மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

துக்கம் பங்கிடும்போது குறையும், மகிழ்ச்சி பங்கிடும்போது அதிகரிக்கும், என் மகிழ்ச்சி இன்னும் பெருக வேண்டும் என்ற பேராசையுடன் இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவரோடும் பங்கிட்டுக்கொள்கிறேன். என்னையும் கிறுக்கத்தூண்டிய இந்த எழுத்துக்களுக்கு என் வெற்றியை காணிக்கையாக்குகிறேன்.

வரப்போகும்
விருந்தினர்க்காக
அதிகப்படி காய்கறி
வாங்கிவரப் போகையில்
தற்செயலாக நிலா
தலைக்குமேல் விழுந்தது.

ரயில் வண்டியின்
குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கித் தெரிந்தது
நீரற்ற ஆற்று
மணல்மேல் நிலா

மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவமனைக்
கட்டிலில் உறங்க
கணக்கும் மனத்துடன்
நிசியில் வெளிவந்து
நின்றபோது
வேப்பமரத்து
கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது

நண்பனின்
அறைபிரிந்து,
திரும்பும்போது
ஏற்பட்ட
திடீர் வெருமையில்
நிச்சயமற்ற
தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத்தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது

மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத்தேடி
இருட்டில் துளாவி
கைப்பிடி சுவரில்
முகம் பதித்தபோது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை

தானாக இப்படித்
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க
என்று போய்
நிலா பார்த்து
நாளாயிற்று.

                           -கல்யாண்ஜி-

காதலைத் தேடி.......

     நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், நாவலாசிரியர். மனுசன் வாழ்க்கை முழுவது காதலாலேயே நிரம்பியிருக்கும் போல, வெகு சமீபத்தில்தான் இவரது ஒரு நாவலை பற்றி தோழி ஒருவர் சொல்லியிருந்தார். நாவல்கள், அதுவும் ஆங்கிலத்தில் படிப்பதென்பது என்னை பொருத்தமட்டிலும் சிரமமான காரியம், ஆகவே இவரது நாவல்கள் பற்றிய ஏதேனும் விஷயங்கள் கிட்டுமாவென இணையத்தில் தேடியபோதுதான் தெரிந்தது, Message in a Bottle, A Walk to remember, Notebook, Dear John மற்றும் The Last Song என  இவரது நாவல்களைத் தழுவி நிறைய திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றது, வெற்றிகரமாக    அதிலும்  MESSAGE IN A BOTTLE, A WALK TO REMEMBER, NOTEBOOK இந்த மூன்று படங்களையும் ஏற்கனவே பார்த்துவிட்டேன். ஆனால் அந்த படங்களை பார்க்கும்போது இவரை பற்றி எதுவும் தெரியாதது என் துரதிஸ்டமே. இவரது எல்லா கதைகளிலும் காதலும் மென்சோகமும் இழையோடிக்கொண்டேயிருக்கிறது. மனுஷன் அப்படியே நம்ம டேஸ்ட்டு...:-). இப்போ அவசர அவசரமா  Dear John மற்றும் The Last Song ரெண்டு படத்தையும் டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் எழுதலாம் என்றதும் முதலில் தோன்றியது Message in a Bottle தான்.


வாழ்க்கை, எப்பொழுதும் ஒரு தேடலை நோக்கியே இருக்கும். சிலருக்கு தேடலே வாழ்க்கையாகவும் இருக்கும். எத்தனையோ வகையில் சொல்லலாம் தேடல்களை. இத்தனை பூவும் உதிர்ந்தா கிடந்தது? என்கிற ஒற்றை வரியை தேடியதில்தான் வண்ணதாசனையும் அவரது எழுத்துக்களும் கண்டுபிடித்தேன்.. கடலை மடித்து வந்த காகிதத்தில் இருந்த எழுத்துக்கள் தானே ஷைலஜா அவர்களை பாலச்சந்திரன் சுள்ளிக்காடை தேடி அவரது எழுத்தை தமிழில் மொழிபெயர்க்க வைத்தது. அதுபோல ஒரு தேடல்தான், இந்த கதையும்.
    
தெரசா ஒரு விவாகரத்து பெற்றவள், தன் மகனோடு, அவனுக்காகவே வாழ்ந்து வருகிறாள். மகனின் விருப்பப்படி அவனை அவன் தந்தையோடு இரண்டு தங்கி வர ஊருக்கு வருகிறாள். அங்கே ஒரு ரம்மியமான காலைப்பொழுதில் கடற்கரையில் ஜாக்கிங் செய்து கொண்டிருக்கிறாள், அப்போது ஒரு காகிதம் அடைக்கப்பட்ட பாட்டிலை பார்க்கிறாள். அதை பிரித்து படிக்கும் அவளுக்கு அதில் மனைவியை பிரிந்த ஒரு கணவனின் வலியும், காதலும் கவிதையாய் தெரிகிறது. அதில் லயித்துபோன அவள் தன் பத்திரிக்கை அலுவலகத்தில் சக நண்பர்களோடு அதை பகிர்ந்து கொள்கிறாள்.
     
அந்த கடிதத்தை யார் எழுதியது, அவரை கண்டுபிடிக்க வேண்டும், சந்திக்கவேண்டும் என்கிற உந்துதல் அவளுக்கு அதிகமாகிறது. அந்த பத்திரிக்கை அலுவலக மேலதிகாரி அந்த கடித்தை தனது பேப்பரில் வெளியிட்டு அது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்கிறார். ஏன் இப்படி செய்தீர்கள்? இது ஒரு மனிதனின் தனிப்பட்ட பக்கம் அதை இப்படி ஏன் பொதுவில் வெளியிட்டீர்கள் என்று அவரோடு சண்டையிடுகிறாள். ஆனால் அந்த விளம்பரத்தை தொடர்ந்து வரும் கடிதங்களால் சமாதானமடைகிறாள். அதே போல வெவ்வேறு இடங்களில் கிடைத்த இன்னும் இரண்டு கடிதங்கள் அவளுக்கு கிடைக்கிறது. ஒரே மாதிரியான காகிதம், பாட்டில்கள்.
     
அந்த தேடுதல் வேட்கை அவளுக்கு இன்னும் அதிகமாகிறது, ஒரு வழியாய் கண்டும்பிடிக்கிறாள். நீண்ட பயணத்திற்கு பிறகு அவன் இருக்கும் இடைத்தை அடைகிறாள். அவன் கேராட் பிளாக் (கெவின் காஸ்ட்னர்,  கெவின் காஸ்ட்னர் எப்பொழுதுமே ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடிகர், எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களில் ஒருவர்). ஒரு மீனவன், கப்பல் கட்டும் தொழில் செய்து வருகிறான். கேராட், மனைவியை இழந்தவன், தன் தந்தையோடு தனியாக பண்ணை வீட்டில் வசித்து வருகிறான், வீடு முழுவதும் தன் மனைவி ஓவியங்கள், அவளது செருப்பு, அவளுடைய ஆடைகள் என உபயோகித்த பொருட்களை அப்படியே அதே இடத்தில் வைத்திருக்கிறான். அதை மாற்றி வைப்பது கூட அவள் நினைவினை கலைப்பதாய் நினைக்கிறான். அவனுடனான முதல் சந்திப்பிலேயே அவன் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது, அவனது மனைவி மீதிருக்கும் அன்பும் அந்த எழுத்துக்களின் காரணமாகவும்.
     
மெல்ல இவர்களுக்குள்ளாக ஒரு நட்பு வளர்கிறது, காதலுக்கு முந்தைய கணங்கள் அவை, அழகானவை. மெல்ல இவர்களுக்குள்ளாக, ஒருவர்மீது ஒருவருக்கு வரும் காதலும் அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது. தெரசாவை சந்திக்க கேராட் அமெரிக்காவிற்கு வருகிறான், அங்கே ஒரு இரவில் அவனுடைய கடித்ததை அவளது படுக்கையறையில் பார்க்கிறான், பாட்டிலையும் கூடவே அந்த செய்தித்தாள் விளம்பரத்தையும். ஆக கடித்ததை செய்தித்தாளில் பார்த்தே தெரசா தன்னை தொடர்ந்திருக்கிறாள் என நினைக்கிறான், தெரசாவுடன் சண்டையிடுகிறான். தெரசா, தான் கடற்கரையில் முதலில் ஒரு பாட்டில் கடித்ததை பார்த்த்து முதல் அனைத்தையும் சொல்கிறாள். எனது மேலதிகாரி செய்த வேலைதான் அந்த செய்தி விளம்பரம் என்கிறாள், மேலும் அதன் மூலமாகத்தான் மற்ற இரண்டு கடிதங்களையும் உன்னையும் கண்டுபிடித்தேன் என்கிறாள்.
    
மொத்தம் மூன்று கடிதங்களா? நான் இரண்டுதானே எழுதியிருக்கிறேன்? என்று மற்ற கடித்ததை படிக்கும் கேராட்டிற்கு, அது இறந்துபோன அவள் மனைவி அவனுக்காக எழுதியது என்று தெரிகிறது. மனைவியின் நியாபகங்கள் அவனை அழுத்த அந்த கடித்ததை பெற்றுக்கொண்டு வீடு திரும்புகிறான். அந்த பிரிவு இருவரின் மனதிலும் நிறைய மாறுதல்களை கொண்டு வருகிறது. ஒரு நாள் கேராட் தான் மனைவியின் நினைவாக செய்துவந்த பாய்மரக்கப்பலை செய்துமுடித்து விட்டதாகவும் அதன் வெள்ளோட்டத்திற்கு வருமாறும் தெரசாவை அழைக்கிறான். சந்தோசமாய் அங்கே வரும் தெரசா, அவனது மனைவியின் மீதான காதலை அவனது பேச்சின் மூலம் உணர்கிறாள். தனது காதல் அவனது உணர்வுகளை புண்படுத்தலாம் என நினைக்கிறாள். ஆகவே அவனிடமிருந்து விலகியிருக்க நினைக்கிறாள்.
    
கேராட் தன் மனைவிக்கு என் ஒரு கடிதம் எழுதுகிறான், அதை க்டலில் வீச மழை நேரத்தில் கடலுக்குள் செல்கிறான். அங்கே நடுக்கடலில் படகு விபத்தில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் இறந்தும் போகிறான். கேராட்டின் தந்தை தெரசாவிற்கு போன் செய்கிறார். நேரில் வரும் தெரசாவிற்கு அந்த கடித்ததையும் அவனது திருமண மோதிரத்தையும் தருகிறார்.
      
நான் இங்கே சொல்லாத இரண்டு விஷயங்கள், கேராட்டிற்கும் அவனது தந்தைக்குமிடையே நடக்கும் உரையாடலும், கிளைமேக்ஸிற்கு முன் தெரசாவினுடனுமான உரையாடலும் வெகு எதார்த்தம், அழகு. மேலும் அந்த நான்கு கடிதங்களும் கவிதை, நான் சொல்லப்போவதில்லை. படம் பாருங்கள், காதலை அனுபவியுங்கள். நீங்கள் எதைத்தேடி பயணிக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள் என்கிற ஒற்றைவரியில் முடிகிறது கதை.

யூஸ் & த்ரோ

சமீபத்தில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பார்த்த இரண்டு சம்பவங்கள்.

ஒன்று.

ஒரு ஆசிரியரின் குரல்: இன்னைக்கு நாங்க பள்ளிக்கு நடந்தோ, டூ வீலர்லயோ வருகிறோம். ஆனா பசங்க கார்ல வரங்க. அவங்களுக்கு நான் வெரும் டீச்சர் மட்டும்தான்.

ஒரு மாணவி: இதுல என்ன இருக்கு? நாங்க குடுக்குற டொனேஷன்லதான் அவங்க சம்பளமே வங்குறாங்க, ஸ்கூலுக்குள்ள அவங்களுக்கு உரிய மரியாதை குடுக்கிறோம். அதுக்காக வெளிய பார்க்கிற இடத்திலெல்லாம் குனிஞ்சி சலாம் போட்டுகிட்டிருக்க முடியாது.

இரண்டு.

ஒரு பெற்றவர்: எங்க சார், முன்ன மாதிரியா? வீட்ல நமக்கு முன்னாடியே கால்மேல கால போட்டுக்கிட்டு, எதை கேட்டாலும் ஒத்த வார்த்தையில பதில். ம்ம்ம்ம்... காலம் மாறிப்போச்சுங்க.
ஒரு மகன்: அது எங்க பாடிலேங்வேஜ், சார். அப்பாவுக்கு ஒரு மாதிரி, ஆபீஸ்ல ஒரு மாதிரின்னு எங்க பாடி லேங்வேஜ மாத்திக்கிட்டு இருக்க முடியாது.

எனக்கு மாலை ஐந்து மணிக்கு அலுவலக பணிகள் முடிந்து விடுகிறது, அதன் பின்வரும் நேரத்தை கழிக்க நண்பர்கள் வேண்டும். அதன் பின்?
குறிப்பிட்ட ஒரு வயது வரை எடுத்த எடுப்பிற்கெல்லாம் தேவை பெற்றவர்கள், தேவைகள் பூர்த்தியான பின்?

ஒரு வங்கியில் எழுதக்கொடுத்த பேனாவிற்கு, மதிப்பில்லை. பேருந்தில் மறுக்கப்பட்ட சில்லறைகளைக்கும் மதிப்பில்லை. அம்மா, அப்பா, வீடு தெரு, நண்பர்கள் நாடு இப்படி எதை பற்றிய ஒட்டுதலும் இல்லை.

எஸ்.ராவின் ஒரு கட்டுரையில் வரும் தலையில்லாத ரப்பர் பொம்மை, ஒரு உபயோகித்து விட்டெறிந்த ஒரு விளையாட்டு சாமான்தான். தூக்கி எறிந்து விடுவது இன்றைக்கு வெகு சாதாரணமாகிவிட்டது. முதியோர் காப்பகத்தின் நிறைந்திருக்கும் அனைவரும் வீசியெறியப்பட்ட உயிருள்ள பொம்மைகளே. பிரதி உபகாரம் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை, உதவி என்ற சொல் மெல்ல மழுங்கி வருகிறது.
தேவைக்கு பின் எறிந்துவிடு. யூஸ் அண்ட் த்ரோ, எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை (?). அனேக பிரச்சனைகளின் ஆரம்பமாய் இருக்கும் இது வெறும் வார்த்தையாகவோ வாக்கியமாகவோ பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது இன்றைய சமுதாயத்தின் மனப்பான்மை. குறிப்பாக இளைய சமுதாயம்.
என் அப்பா அவர் உபயோகிக்கும் பேனாவை பத்து வருடங்களுக்கும் மேலாக உபயோகித்து வருகிறார். அவரால் அந்த பேனாவுடனும்கூட ஒரு ஈர்ப்புடன் வாழ முடிகிறது. நாளைக்கு தூக்கி எறியப்போகும் இதனோடு என்ன உறவு இருந்துவிடமுடியும் என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் மனநிலை. அது வெறும் பேப்பரிலும் பேனாவிலும் ஆரம்பித்த இந்த யூஸ் அண்ட் த்ரோ பழக்கவழக்கங்கள் இன்று ஒரு கலாச்சாரம் அடையாளமாகவே மாறி நிற்கிறது.
இது நிச்சயம் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் குரல் அல்ல, இருந்தாலும் வருத்தத்துடன் ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயம், இதுதான் பெரும்பான்மை. இதுதான் நிதர்சனம். வெறும் மேம்போக்கான கருத்துக்களுடனும், படிப்பறிவும் போது என்கிற மனோபாவம். பத்தாவதில் நல்ல மார்க் வந்தால் எந்த க்ருப்பில் சேர்க்கலாம், அடுத்து டாக்டரோ, இன்ஜினியரோ அடுத்த இலக்காக எது நிர்ணயிக்கப்படுகிறதோ அதை நோக்கிய தேடலும் ஓடலும். பின் நல்ல வேளை, கை நிறைய சம்பளம் பிறகு டீவியின் முன் அமர்ந்து உலகத்தையே குறை சொல்லும், மனப்பாங்கு. ஐ பே மணி, புட் சட்னி” அப்படிங்கிற மாதிரி நான் காசு கொடுக்கிறேன், நீ சொன்னத செய். என்கிறது இந்த யூஸ்&த்ரோ வகையறாக்கள். தன்க்கு ஒரு காரியம் ஆகவேண்டுமெனில் காசுகொடுத்தோ, கெஞ்சியோ காரியம் சாதிக்க தெரிந்தவர்கள். பின் ஏறி வந்தது ஏணியிலா? என்றும் கேட்பார்கள். எதைப்பற்றிய அறிவு சார்ந்த பார்வையும், அரசியல் சார்ந்த பார்வையோ இருப்பதில்லை, எல்லாவற்றிர்க்குமாய் ஒரு பொது புத்தி.

தற்ச்செயலாக ஒரு திருமண விழாவில் பந்தியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது என் 8ஆம் வகுப்பு ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது. என்னையும் அறியாமல் எழுந்து நின்று வணக்கம் சார், என்றேன். என் குழந்தைகளும் அவர்களின் ஆசிரியரை பிரிதொரு நாளில் சந்திக்கும்போது எழுந்து நின்று வணக்கம் சொல்லும் குழந்தைகளாகவே வளர விரும்புகிறேன். பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் என்கிற மேற்கத்திய மனநிலையை இங்கேயும் விதைக்கும் இந்த யூஸ் & த்ரோ ப்ற்றியும் நிச்சயம் குழந்தைகளுக்கு இதையும் சொல்லி வளர்த்த வேண்டும். பேனா, பென்சில் முதற்க்கொண்டு வீடு நாய்குட்டி வரை எதனுடனும் நமது உறவு மிகமுக்கியமானது.
சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட இந்த யூஸ்&த்ரோ அனுபவமே எனக்குஇதை எழுதச்செய்தது.இதில் என் தற்ப்போதைய மன நிலைய பதிவு செய்திருக்கிறேன். இந்த கருத்து அனைவருடனும் ஒத்துபோக வேண்டுமென்பதில்லை. அடுத்தவர் தவ்றுகளில் பாடம் படிப்பவனே, புத்திசாலி. யாராவது ஒருவருக்கு இது உதவுமெனினும் சந்தோசமே.

நமக்கு நடக்கும்வரை எதுவுமே வேடிக்கைதான் என்கிற ஆட்டோ வாசகம் புரிய போகிறது, வாழ்க்கை.