செம்மொழி மாநாடு - என் அனுபவம், சில துளிகள்.

நண்பர் ரவிசங்கர் (விக்கிபீடியா) மற்றும் திரு. எஸ்.பாலபாரதி இருவரும் மாநாட்டிற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே தமிழ் இணைய மாநாட்டில் நமக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள ஸ்டால்களில் தமிழ் எழுத்துறு, தமிழில் விக்கிபீடியா, தமிழில் வலைப்பதிவுகள் உட்பட்ட ஆறு தலைப்புகளில் வகுப்புகள் எடுக்க வேண்டியிருக்கிறது, ஒரு நாளைக்கு ஆறு பேர் தேவை ஐந்து நாட்களுக்கு முப்பது பேர் தன்னார்வளர்களாக தேவைப்படுகிறார்கள். விருப்பமிருப்பவர்கள் அனுகவும் என்று மடலனுப்பியிருந்தார்.


திருப்பூர் பதிவர்கள் சார்பாக நான், வெயிலான், பரிசல்காரன், பேரரசன், கடலையூர் செலவம், ராமன்குட்டி என அனைவரும் செல்ல திட்டமிட்டிருந்தோம். சாமிநாதனும், நிகழ்காலத்தில் சிவா அண்ணனும் கடுமையான பணி நிமித்தம் வருவது சிரமம் என்று சொல்லிவிட்டனர். பின் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவெடுக்கும்போது அனைவரும் ஒருசேர செல்வதென்பது இயலாத ஒன்றாகிப்போனது. காரணம் பணிச்சுமை. ஆக பரிசல், வெயிலான் நீங்கலாக நாங்கள் நால்வரும் கடந்த வியாழன் அன்று சென்றிருந்தோம்.

நிறைய அச்சுறுத்தல்கள் இருந்தது, மாநாடு பற்றி. வாகனங்கள் கருமத்தம்பட்டி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்றும், அதற்குமேல் அரசு ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகள் மூலம் மட்டுமே விழா நடக்கும் கொடீசியா வளாகத்திற்கு செல்ல முடியும் என்று, ஏகப்பட்ட வாகன நெரிசல் போய்வருவதென்பது மிகவும் சிரமம் என இன்னும் நிறைய.   ஆனால் அப்படியேதும் இல்லை, இருசக்கர வாகனங்களில் நேராக விழா நடக்குமிடத்திற்கு வெகு அருகில் (ஒரு கிலோ மீட்டர்) வாகன நிறுத்துமிடம் வரை செல்ல முடிந்தது. அங்கிருந்து ஒரு 20 நிமிட நடை அவ்வளவுதான். பிரம்மாண்டம், என் வாழ்நாளில் இத்தைகைய மக்கள் வெள்ளத்தை ஒரு போதும் சந்தித்ததில்லை. எங்கு பார்த்தாலும் மக்கள், மக்கள், மக்கள். இன்னும் ஒரு பத்து நாளைக்கு மனிதர்களைப் பார்த்தாலே சங்கடம் வரும் அளவிற்கு மக்கள் வெள்ளம்.

நிறைய குறைகள் உண்டு, அதை நிறைய பேர் எழுதவும் கூடும். அதேபோல இந்த மாநாட்டின் நிறைவுகளையும். என்ன இருந்தாலும் எவ்வளவு குறைகள் இருந்தாலும் இவை அனைத்தையும் என்னால் சகித்துக்கொள்ள முடிந்தது, காரணம் என் கண்ணில் பட்ட, நான் அனுபவித்த சில விஷயங்கள்.

*இணைய வளாகத்திற்க்குள் நுழைய இரண்டரை மணி நேரம் வரிசையில் நின்று உள்ளே வந்த விக்கீபீடியாவை சேர்ந்த நண்பர் .... சொன்ன “ரொம்ப சந்தோசமா இருக்குங்க, எத்தனையோ இடத்தில் எதற்கெல்லாமோ நின்றிருக்கிறேன், இன்று தமிழுக்காக நின்று வந்தது, மிகவும் பெருமையாககவும் சந்தோசமாகவும் இருக்கிறது”.

* ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த தமிழ் மைய நிர்வாகிகள் இரண்டு பேர், எந்த வித அடையாள அட்டையையும் தவிர்த்து எங்கும் சராசரியாக மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஒவ்வொரு நிகழ்வுகளாக கண்டுகளித்துக்கொண்டிருந்தனர்.

* கைக்குழந்தையை இடுப்பில் வைத்தபடி நின்ற பெண்கள், வயதானவர்கள், தளைய தழைய பட்டுபுடவைகளை கட்டிக்கொண்டு தலை நிறைய பூவோடு ஏதோ தங்கள் வீட்டு திருமண விழாவிற்கு வருவதுபோல வந்திருந்த பெண்கள். நாள் முழுவதும் வெயிலிலும் வேர்வையிலும் நனைந்து கொடுமையான மக்கள் வெள்ளத்தை அடக்கி முடிந்தவரை இன்முகத்துடன் இருந்த காவல்துறை நண்பர்கள்.

அரங்கு முன் வந்து கூப்பிடுங்கள், நான் வந்து உள்ளே அழைத்து செல்கிறேன் என்று சொன்ன ரவி, சொன்னபடி வரமுடியததால் அவர்மீது கோபமாய் வந்தது, திரும்ப போய்விடலாம் என்றி செல்வத்திடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒரு நிமிடம் கூட வரிசையில் நிற்கலாமென்றோ உள்ளே வரமுடியாத அளவிற்கு ரவிக்கு என்ன வேலை இருக்குமோவென்று எதையுமே யோசிக்கவில்லை, என் மனம். எனக்கு களைப்பாயிருந்தது.

முன் சொன்ன இவர்களோடு ஒப்பிடும்போது நான் எவ்வளவு கீழே இருக்கிறேன் என்பது புரிந்தது. என்னை நானே புரிந்து கொள்வதில் உதவி செய்த அனைவருக்கும் எனது நன்றி.

ஒரு வழியாக மதியம் மூன்று மணிவரை எல்லா கண்காட்சிகளுக்கும் சென்றுவிட்டு ரவியின் சிபாரிசோடு இணைய அரங்கத்திற்குள்ளே சென்றோம். அரசு இலவசமாக ஒதுக்கியிருந்த ஸ்டால்களில் தமிழ் வலைபதிவுகள் என்கிற தலைப்பின்கீழ் வலைப்பதிவு உருவாகுவது எப்படி, தமிழில் தட்டச்சுவது எப்படி, வலைப்பதிவின் நன்மைகள் என எங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை பார்வையாளர்களுக்கு சொல்லிக்கொடுத்தோம். பலருக்கு வலைப்பதிவு என்றால் கிலோ எவ்வளவு என்கிற நிலைதான், இருப்பினும் பலரும் ஆர்வத்துடன் வந்து கேட்டு சென்றனர்.

எங்கள் ஸ்டாலிற்கு அடுத்த ஸ்டாலான NHM Wtiter -ல் எழுத்தாளர் பா.ராகவன் இருந்தார். வெகு நேரம் அவரை கவனிக்கவில்லை. அவரை பார்த்தபின் அவரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தோம், ”சார், நாம் சென்னையில சிறுகதை பட்டறையில் சந்தித்திருக்கிறோம்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஆனால் அந்த அறிமுகமெல்லாம் தேவையே இல்லை என்பதுபோல மனிதர் வெகு சகஜமாக நிறைய நேரம் எங்களோடு பேசிக்கொண்டிருந்தார். எங்களின் உரையாடல் வெகு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது. (உபயம் : பேயோன்)


நான் உட்பட அனைவரின் கடிகாரங்களும் மணிக்கட்டில் கனக்க, பேச எவ்வளவோ இருந்தும் விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம்.

இதர கண்ணில்பட்ட, காதில் விழுந்த, பிடித்த, பிடிக்காத சில விஷயங்கள்:

* எத்தனை மக்கள் எவ்வளவு இடையூறுகளுக்கிடையே, நீண்ட பயணத்திற்கிடையே, களைப்பினூடே நடந்த படி இருந்தனர், அவர்களுக்கிடையே செல்லும் அரசியல்வாதிகளின் கார்கள், அவர்களை ஒரு கடந்தவிதம். அருவருப்பு. அவ்வளவு அவசரமாய்ப் போய் அப்படி என்னத்தைத்தான் வெட்டி முறிக்கப்போகிறார்களோ என்று ஆத்திர ஆத்திரமாய் வந்த்தது.

* தமிழனின் கலாச்சாரத்தில் மிகமுக்கியமானது விருந்தோம்பல், அது சரியில்லை என்பதுதான் என் கருத்து. மான்யம் பெற்றுக்கொண்டாலும் கொடுத்த காசுக்கே உணவு கொடுக்கப்பட்டது. அரசிடம் பெற்ற மானியம் எங்கே?

*உள்ளே வருபவர்களை வாங்க உட்காருங்க என்று சொல்ல யாருமில்லை, மாறாக நிக்காதிங்க, போங்க என்ற வார்த்தைகளையே அதிகம் கேட்க முடிந்தது.

* யார், யார் எங்கே செல்லவேண்டும் என்பதை கேட்டு அவரவர்களை அங்கங்கே அனுப்பிவைக்க ஒரு குழு அமைத்திருக்கலாம், என்ன ஏது என்று தெரியாமல் அனைவரும் எல்லா இடங்களிலும் தங்களை திணித்து பின் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

*இந்த மாநாடு எவ்வளவு தூரம் தமிழை வளர்க்கும் என்று தெரியவில்லை. ஆனால் நான் இருந்த அந்த பத்து மணி நேர கால அவகாசத்தில் தமிழ் என்கிற சொல் வெவ்வேறு மனிதர்களின் குரலில் வெவ்வேறு காரணத்திற்காக ஒரு பத்தாயிரம் முறையாவது என் காதில் விழுந்திருக்கும். அதுவரையில் மிக்க மகிழ்ச்சி.

* ஒரு வகையில் இதுவும் தலைவருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவோ என்னுமளவிற்கு கலைஞர் பெயரும் கேட்டுக்கொண்டுதானிருந்தது.

* எனக்கு மிகவும் பிடிக்காத ஒரு விசயமாய் நான் நினைப்பது, கால்கடுக்க மிகவும் கடுமையான வேலை செய்துகொண்டிருந்த காவல்துறையினருக்கு உணவு வழங்கிய விதம். ச்சே... இவர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக கவனித்திருக்கலாம் என்றாகிப்போனது.

எது எப்படியோ மாநாடு மிகப்பெரிய வெற்றி, இதை இவ்வளவு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு என் வாழ்த்துக்கள். முக்கியமாக காவல்துறைக்கு.

11 கருத்துரைகள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்விற்கு நன்றி

மிக அருமை

அன்பரசன் said...

//விருந்தோம்பல்??????

வாங்க உட்காருங்க என்று சொல்ல யாருமில்லை, மாறாக நிக்காதிங்க, போங்க என்ற வார்த்தைகளையே அதிகம் கேட்க முடிந்தது//

இதுதாங்க நம்ம ஆளுங்களோட மிகப்பெரிய பிரச்சனை.

அகல்விளக்கு said...

நல்ல அனுபவப் பகிர்வு நண்பா....

எல்லாவற்றிலிருந்தும் ஏதோவொன்றை கற்றுக் கொள்ளும் மனம் வாய்த்திருக்கிறது உங்களுக்கு....

வாழ்த்துக்கள்... :-)

பா.ராஜாராம் said...

அருமை முரளி! மிகுந்த நன்றி..

கோபிநாத் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி தல...;)

மோகன் குமார் said...

அருமையான பகிர்வு. உங்கள் பாணியிலேயே சொல்லி உள்ளீர்கள்.

முரளிகண்ணன் said...

நல்ல கவரேஜ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

இவ்வளவு பெரிய பொது விழாவில் வாங்க, உட்காருங்க சாத்தியமில்லை நண்பரே. நன்றாகயிருந்தது பகிர்வு. இன்னும் கொஞ்சம் சிறப்புகளைப் பகிர்ந்துகொண்டிருக்கலாம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

மணிக்கட்டில் கணக்க//

கழைப்பினூடே நடந்த படி//

நல்ல எழுத்தினூடே பிழைகள் சகிப்பது கடினம். கூர்ந்து கவனியுங்கள் முரளி.

விக்னேஷ்வரி said...

ம், பல ஓட்டைகளோடிருந்தாலும், அதை மறைக்குமளவுக்கு மீடியாக்கள் மூலம் பெயர் மட்டும் வந்து விட்டது செம்மொழி மாநாட்டிற்கு.

Babu K said...

திரு. முரளி அவர்களுக்கு,

உங்கள் தமிழ் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என் பார்வையில் செம்மொழி மாநாடு:

விழாவிற்கு வந்திருந்த அனேகம் பேர் கட்சி சார்பில்லாமல், செந்தமிழுக்கு விழா எடுக்கும் சம்யம் நாமும் அங்கிருக்க வேண்டும் என்றே வந்தது போல் தெரிந்தது. என்னோடு சேர்த்து நிறைய பேர் கையில் குழந்தைகளுடன் ஆர்வத்துடனும், பொருமையுடனும் 3 மணி நேரத்திற்கும் மேல் நின்று கண்காட்சியை பார்வையிட்டதிலேயே விளங்கியது. சின்னக் குழந்தைகள் “கலைஞர் தாத்தா” இருக்காரா? பார்க்க முடியுமா? என்று காவலர்களிடம் வினவி சென்றதைக் கண்டோம். காவலர்கள் இவ்வளவு பொறுமையாக சிறித்த முகத்தோடு பதிலளித்தது அனேகமாக இங்கே தான் இருக்கும். விருந்தோம்பல் பற்றி சொன்னீர்கள். இலட்ச கணக்கில் வரும் பொதுமக்களை எப்படி வரவேற்க இயலும்? ஆங்காங்கே இடத்தின் வரைபடம் வைத்திருந்தார்களே? என் 34 வயதில் காணாத கூட்டம். இப்படி ஒரு நிகழ்வில் நானும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. தஞ்சாவூரோடு ஒப்பிட்டால் இது தேவலாம்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.