இன்செப்ஷன்


            ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு உயிரைத்தேடின்னு ஒரு படக்கதை காமிக்ஸ் வடிவில் சிறுவர் மலரில் வெளிவந்தது யாருக்கும் நியாபகம் இருக்கிறதா? இல்லை சமீபத்தில் வெளிவந்த ஐ யாம் லெஜன்ட் (வில் ஸ்மித்) படம் நியாபகம் இருக்கிறதா? இருந்தால் அடுத்த பத்தியை புரிந்துகொள்வதில் ஒரு ரசனை ஒளிந்திருக்கும்.


            ஒரு நாள் காலை தூங்கி எழுந்து தூக்கக் கலக்கத்தில் டாய்லெட் செல்கிறேன். தூக்கம் கலையாத கண்களோடு நான், அப்போது எனக்கு ஒரு கொட்டாவி வருகிறது, சில சமயம் கொட்டாவி வரும்போது காதுகள் அடைத்துக்கொள்ளுமே, சில வினாடிகள் எதுவுமே காதில் விழாது, ஒரு கும்மென்ற சப்த்தத்தை தவிர. இதை அனுபத்திருக்கிறீர்களா? அப்படி ஒரு கொட்டாவி எனக்கு வருகிறது. திறந்த வாயை மூடும்போது மண்ணும் புழுதியுமாய் உணர்கிறேன். அவசர அவசரமாய் கண் திறந்து பார்க்கும் போது சுற்றி உள்ள அனைத்து கட்டிடங்களும் இடிந்து கிடக்கிறது. நான் மட்டும் அமர்ந்திருக்கிறேன்.  அம்மா, அப்பா, அக்கா, தங்கை, பக்கத்து வீடு எதுவுமே இல்லை. தேடிப்பிடித்து ஒரு பையில் எனக்கு தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டு நடக்கத்துவங்குகிறேன், உயிரைத்தேடி. அப்போது என் கால்களில் ஏதோவொன்று பலமாகத்தாக்க கால்கள் ஜில்லிடத்துவங்கின்றது. கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்து பார்க்கும்போது அம்மா கையில பால் குண்டாவோட சாரிடான்னு சொல்லிட்டு போயிட்டிருக்காங்க. காலை மிதிச்சதுக்கு சாரி. ஜில்லுன்னு இருந்தது என் காலில் கொட்டிய பால். 

             சில வினாடிகளில் அந்த கனவு முடிந்து விழித்துவிட்டேன். ஆனால் கனவில் நான் நடந்த தூரமும், நேரமும் எவ்வளவு? ம்ம்ஹும் கணக்கிட முடியவில்லைஇது என் கனவு, அப்போ எனக்கு பத்திமூணு வயசிருக்கலாம். அந்த கனவை இப்போ நினைத்து பார்க்கிறேன். காரணம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்செப்ஷன் என்கிற திரைப்படம். 
           
            ஒரு முழுமையான படம். மனுஷன் பிச்சி ஓதறியிருக்கார். காக்கா வடைய தூக்கிட்டு போற கதையிலேயே லாஜிக்கை விடுற ஆளுகளுக்கு மத்தியில இப்படி ஒரு குழப்பமான திரைக்கதையை எந்த குழப்பமுமில்லாமல் கொடுத்திருக்கிறார். கனவுகளை களவாடும் நாயகன். இறந்து அவன் நினைவில் வாழும் அவன் மனைவி, தன் போட்டியாளரிடம் அவர் மனதில் ஒரு தவறான கருத்தை விதைப்பதன் மூலம் அவரை போட்டியில் தோற்கடித்து வியாபர சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட நினைக்கும் ஒருவன். கனவில் எளிதாக சென்று திரும்பிவர நமக்கு விருப்பப்பட்ட மாதிரியான உலகை வடிவமைக்க ஒரு ஆர்க்கிடெக்ட் அப்பப்பா எத்தனை வித்தியாசமான கதாப்பத்திரங்கள். எப்படி இதையெல்லாம் யோசிச்சிருப்பார்? இன்னொன்னு எப்படி இதை நடிகர்களுக்கு புரியவைத்து அவர்களிடம் அந்த நடிப்பை  வாங்கியிருப்பார்? முடியலை மனசு முழுவது கேள்விகளால் நிறைந்துகிடக்கிறது. படம் எவ்வளவு குப்பை, ஒன்னும் புரியலை, ஓர் எளவும் விளங்கலை இப்படி யார் என்ன சொன்னாலும் இந்த படம் சூப்பர். ஐ லவ் திஸ் மூவி. கிளைமேக்ஸ் காட்சி  கேப்ரியோவின் நடிப்பிற்கு  சான்று, பயபுள்ள கண்ணுலேயே பேசுறான்யா..... முடியலை..             நான் சும்மா படத்தோட பாதிப்பை மட்டுமே சொல்லியிருக்கேன், இன்னும் சொல்லப்போன அந்த மனுஷன் காட்டிய கனவுலதான் இன்னும் இருக்கேன். தெளிவா படத்தை எல்லாருக்கும் புரியிற மாதிரி எழுத இன்னும் ஒரு முறை பார்க்கணும். அப்புறம் டயலாக்குகாக, ஸ்க்ரிப்ட்டுக்காக, காப்ரியோவின் நடிப்பிற்க்காக, நோலனுக்காகன்னு இன்னும் எத்தனை தடவை இந்த படத்தை பார்க்கபோறேன்னு தெரியலை. நண்பர் ஜெயின் பார்வையில் இன்செப்ஷன், இப்போதைக்கு படத்தை பத்தி ஒரு அவுட் லைன் தெரிய இங்கே போங்க, அணு அணுவா ரசிக்கணும்னா ஹாலிவுட் பாலாவின் பதிவுக்கோ இல்லை இதே மனுஷன் ஒரு தொடர்பதிவு எழுதுவார் அதுவரை வெயிட்பண்ணுங்க. 

            இது, இந்த படம் ஸ்க்ரீன் ப்ளேவில் ஒரு மாஸ்டர் பீஸ் - நான் படித்த ஒரு ரிவ்யு - ஜேம்ஸ்பாண்ட் மீட்ஸ் தி மேட்ரிக்ஸ்.இந்த படத்தைப் பற்றி எழுத நேரமில்லை, ஆனா விஷயம் இருக்கு வண்டி வண்டியா...... . சந்தோசம் இப்படி ஒரு படத்தை பார்த்துவிட்டேன் என்கிற மகிழ்ச்சி, எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆக பதிவு ஒரு மாதிரியா அரை குறையா இருந்தா மன்னிச்சிக்குங்க..

இரு வேறு உலகங்களுக்கிடையே ஒரு வாழ்க்கை பயணம்

      அம்மா அப்பா ரெண்டு பேரும் வீ.ஆர்.எஸ்ஸில் வேலையை விட்டு வந்து ஒரு எட்டு வருடங்கள் இருக்கும். அக்கா, தங்கை திருமணம் முடிந்த பின் ஒரு நாலு வருடமாகவே வீட்டில் இருக்கிறார்கள். வேலைக்கு போயே பழக்கப்பட்டவர்கள். வீட்டில் சும்மா இருக்க முடிவதில்லை. இங்கிருந்து ஒரு அறுபது கிலோமீட்டரில் உள்ள ஊட்டிக்குகூட இதுவரை அப்பா போனதாக தெரியவில்லை. நான் அப்பாவிடம் அடிக்கடி சொல்வேன் “ஏம்ப்பா இப்பதான் உங்க கடமை எல்லாம் முடிஞ்சதே? அப்படியே ஊட்டி, கொடைக்கானல், கோவில்கள், சொந்தபந்தகள் வீட்டிற்கு இப்படி ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாமில்லையா? வேலைக்கு போகும்போதுதான் இதையெல்லாம் செய்ய நேரமில்லை, இப்ப என்ன?” என்று. இங்க எவ்ளோ வேலை இருக்கு... இதையெல்லாம் வேற யார் பாத்துக்குவா? உனக்கு யார் சமைச்சி போடறது? இப்படி எதாவது சமாளிப்புகள் வருமே தவிர. உண்மையான காரணம் வெளியே வராது.

      எல்லாம் வாழ்ந்து முடிச்சாச்சு, இனி நமக்கென்ன டூரு கீரு.... இப்படி ஊர் சுத்துற காசை சேர்த்தா பையன் கல்யாணத்துக்கோ, பேரன் பேத்திக்கோ ஏதாவது செய்யலாம் என்கிற மாத சம்பளம் வாங்கும் ஒரு டிப்பிகல் நடுத்தர குடும்பத்தின் மனநிலைதான் அது, அந்த நிதர்சனம். அவர்கள் உழைத்த காலத்தில் ஒரு ஐம்பது வயசு வரைக்கும்தான் இப்படி, புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டா, அப்படியே காசி ராமேஸ்வரம்ன்னு ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரவேண்டியதுதான், இது அவர்கள் பேசி நான் கேட்டது. ஆனா இப்போ, இப்பவும் அவர்களால் அவர்களுக்கென வாழ முடிவதில்லை.

      இப்போ அப்பா ரொம்ப போரடிக்குதுன்னு அவர் பிரண்டு கடைக்கு வேலைக்கு போகிறார், தனியாக இருக்கும் அம்மாவை பார்க்க பல நேரங்களில் பாவமாயிருக்கிறது. அதிலும் மதிய நேரங்களில் தனியாக அமர்ந்து அம்மா சாப்பிடுவதை பார்க்கும்போது ஏதோ இனம்புரியாத குற்ற உணர்ச்சி மனதிற்குள் அதிகரிக்கிறது. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். நேம்ஷேக்


      டிபெண்டபிளிட்டி - குழந்தைகளாய் இருக்கும்வரை பெற்றோரின் அரவணைப்பு அவசியமாகிறது. கொஞ்சம் வளரும்போது அது நண்பர்கள், அவர்களை சார்ந்தவர்களோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது. திருமணமானபின் துணையுடன், குழந்தை பிறந்தவுடன் அதனோடு, அவர்கள் வளர்ச்சிக்கு பாடுபட்டு, பின் அவர்களின் துணையையே தேடி நிற்கும் பயணம்தான், இந்த வாழ்க்கை. குறிப்பாக இப்படியான ஒரு வாழ்க்கைமுறை இங்கு நம் நாட்டில் அதிகம். அப்பா சொத்து பிள்ளைக்கு என்பது முதல் வயதான பெற்றோர்களை தன்னோடு வைத்துக்கொள்ளும் பக்குவம் என்பது வரை. இந்திய கலாச்சாரத்தில் ஒரு ஆணிவேர்தான் இந்த சார்பு நிலை வாழ்க்கைமுறை.

      ஆனால் மேலை நாடுகளில் குழந்தைகள் பள்ளி படிப்பு முடியும்வரை மட்டுமே பெற்றோரின் கட்டுப்பாடுகளில் இருப்பர், பின் அவர்களின் வாழ்க்கை அவர்களின் முடிவு, துணை தேடுவது முதல் பொருள் தேடும்வரை. பெற்றவர்கள் அவர்கள் சம்பாதியத்தோடு அவர்களின் மிச்ச வாழ்க்கையை அனுபவிக்க தொடங்குவர். குறிப்பாக அமெரிக்காவில் தனக்கென சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளவே தயங்குவார்கள், என கேள்விப்பட்டிருக்கிறேன். சொந்தவீடு என்கிற ஒரு நிலைமையே கிழக்காசியர்களின் வருகைக்கு பின்னரே அங்கே அதிகரித்திருக்கிறதாம்.

      அப்படிப்பட்ட ஒரு இந்திய கலாச்சாரத்தில் ஊறிய ஒரு பெண், அமெரிக்காவில வேலை பார்க்கக்கூடிய ஒருவனை திருமணம் செய்வதன் மூலம், அவள் வாழ்க்கை பயணம் எங்கெல்லாம் அவளை அழைத்து செல்கிறது, என்பதுதான் இந்த படம். உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் இந்த படத்தை பார்த்தேன். என் நண்பரின் நண்பர் UTV-ல் பணி புரிகிறார், அவர் கொடுத்த திரைப்பட டிவிடிக்களில் இந்த படமும் இருந்தது. மீரா நாயர், தபூ, இர்ஃபான் கான் என்கிற மூன்று பெயர்களைத்தவிர வேறெந்த அறிமுகமும் இல்லாமல் பார்த்தேன்.

      கதாநாயகனின் ரயில் பயணம், அவனுடன் வரும் சக பயணியோடான உரையாடல். தபுவின் அறிமுக காட்சி. குறிப்பாக அந்தபாடல் ஆரம்பித்து முடிக்கும் வரையிலான காட்சியமைப்பும் இசையும். அப்படியே கல்கத்தாவை கண்முன் வைக்கிறது. அருமை. இர்பான் தபூவை பெண்பார்க்க வரும்போது, அவனது காலனியை அணிந்துகொண்டு நடக்கும் தபூ, ஒரு ஆணின் காலனியை அணிந்திருப்பதால் தன்னையும் ஆணாக பாவித்துக்கொண்டு ஒரு மாதிரி நெஞ்சை நிமிர்த்தி நிற்பார் பாருங்கள், அழகு. ஆதிக்க சிந்தனையை ஒரு நிமிடத்தில் சொல்லிவிட்டு போகும் காட்சி. இர்பானின் அப்பா, தபூவிடம் ஏம்மா, உன் சொந்த பந்தங்களை விட்டு, இந்த வீட்டை, நாட்டை விட்டு உலகின் பாதியை கடந்து பனிபொழியும் அந்த நாட்டில் உன்னால் தனியாக இருக்க முடியுமா? என்று கேட்ப்பார். அவர் இருப்பார்ல? என்ற கேள்வியின் மூலம் தன் சம்மதத்தை சொல்லும் அந்த காட்சி. இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த படத்தில் எனக்கு பிடித்தமான காட்சிகளை, ரசித்த காட்சிகளை எழுதுவது என்று முடிவெடுத்தால் இன்னும் இரண்டு பதிவின் நீளம் கொள்ளும். அவ்வளவு விஷயமுண்டு. பதிவின் நீளம் கருதி நான் உணர்வுப்பூர்வமாக புரிந்த சில விசயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.

      ஒரு சார்பு நிலை வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட ஒரு கணவன் மனைவி, அதிலும் கணவன் சில இடங்களில் இதெல்லாம் இங்க சகஜம் என தன்னையே ஆறுதல் செய்துகொள்ளும் மனமுடையவன். அவர்களின் ஒரு மகன், மகள். இவர்களை சுற்றிய கதை. நாயகன் வேலை காரணமாய் அமெரிக்காவில் வசிப்பவன், நாயகி அவன் மனைவியானதால் அமெரிக்காவில் வசிக்கிறாள். அவர்களின் குழந்தைகள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், பெற்றோர்களின் மூலம் இந்திய கலாச்சாரத்தையும் நேரடி அனுபவங்களில் அமெரிக்க கலாச்சாரத்தையும் ஒருங்கே கடைபிடிக்கின்றனர்.

      அடிக்கடி இந்தியா சென்றுவர முடியாது என்பதை தன் மனைவிக்கு புரிய வைக்கும் இடத்திலாகட்டும், இந்தியா வந்திருக்கும் முதல் நாளிலேயே நாம எப்பண்ணா வீட்டுக்குப் போவோம் என்கிற தங்கையாகட்டும், பெயர் மாற்றி வைத்துக்கொள்ள விரும்பும் மகனுக்கு பதில் சொல்ல முடியாமல், இது அமெரிக்கா, இங்க எதுவும் சாத்தியம் என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு வெளியே செல்லும் அப்பா, மகன் ஒரு இடத்தில், மகள் ஒரு இடத்தில், கணவன் ஒரு இடத்தில் என நால்வரும் தனித்தனியாக பிரிந்து இருக்கும் சமயம், வீட்டில் தன் இந்திய சொந்தங்களுக்கு வாழ்த்து அட்டையை வரைந்து கொண்டிருக்கும் அவள், இப்படிக்கு அன்புடன் என் நால்வரின் பெயரையும் சேர்த்து எழுதுமிடத்தில் எடுத்துக்கொள்ளும் அந்த இரண்டு நொடி யோசனை (இத்தனிக்கும் அந்த காட்சியில் அவள் கைகளை மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பார்கள்), தாயின் ஆசைக்கிணங்க தான் விரும்பிய அமெரிக்க பெண்ணை தவிர்த்து அங்கேயே ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மகன், பின் தன் மனைவிக்கு வேறு ஒரு பிரெஞ்சுகாரனுடன் காதலிருப்பதை அறியும் அவன், தன் தாயிடம் ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இருவரும் பெங்காலியாக மட்டும் இருந்தால் போதாது என்று சொல்லி அழும் காட்சி, தனிமையில் கணவன் இறந்துபோன செய்தியை நம்ப முடியாமல் அவஸ்தைப்படும் காட்சி, வீட்டின் பெரிய தோட்டத்தில் தனியாய் அழும் அந்த காட்சி என படம் நெடுகவும் மனித மனநிலையை பிரதிபலித்துக்கொண்டேயிருக்கிறது.

      இப்படி படம் முழுவதும் மனிதனின் ஒரு தடுமாற்றமான மனநிலையையே பார்க்க முடிகிறது. ஒவ்வொரு காட்சியமைப்பின் பின்னும் இயக்குனரும் கதாசிரியரும் தெரிகிறார்கள். கேமிரா - ஒவ்வொரு காட்சியிலும் ஸ்படிகமாய். படத்தில் குறிப்பிடும்படியான இன்னொரு விசயம் - இசை. நிதின் சஹானே. வயலின், தபேலா, புல்லாங்குழல், கிடார் மற்றுமொரு தந்திக்கருவி (கையில ஸ்பூன் மாதிரி வச்சி தட்டுவாங்களே, பெயர் தெரியலை.) இதை வைத்துக்கொண்டு மனுஷன் பூந்து விளையாடியிருக்கார். படத்தில் எங்கேயும் தனியாக பிண்ணனி இசை என்று தேட முடியாது. அவ்வளவு கச்சிதம். இந்த படத்தின் பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன், ஹிந்துஸ்த்தானி இசைதான் படத்தின் முக்கிய பலம். படத்தின் ஓப்பனிங் ம்யூசிக் இங்கே, மற்றுமொரு இசை வடிவம் இங்கே

      இன்னொரு விஷேசம். பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்கேன்னு சொல்ல வந்த மாமாவிடம் ஏண்டா இப்படி இளைச்சிட்டேன்னு கேட்டதும் சொல்ல வந்ததைவிட்டுவிட்டு இளைச்ச கதைய சொல்லுவாராம், அதுமாதிரி இந்த NAMESAKE படம் சொல்ல வருகிற விஷயமும் வேறுதான். ஆனால் நான் எடுத்துக்கொண்ட, கற்றுக்கொண்ட விஷயங்களை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன். வாழ்க்கையில் நாம் சந்திக்கிற நபர்கள், எதிர்படும் சின்ன சின்ன விஷயங்கள், எதுவுமே நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. கண்ணையும் மனசையும் திறந்தே வையுங்கள், இங்கே பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் ஏராளம் இருக்கிறது.  இனி வரும் மதியப்பொழுதுகளில் டீவியை அணைத்து விட்டு அம்மாவோடு ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருக்கிறேன்.

பால்யகால சகி

                இப்போதெல்லாம் எல்லோருமே நிறைய படிக்கிறோம்.  சிறுகதை, நாவல்கள், வாரப் பத்திரிக்கைகள், செய்தித்தாள், குறுஞ்செய்தி என இன்னும் நிறைய. ஆனால், அந்த எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்னசாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒரு குடும்பமே பலி! என செய்தித்தாள்  படிக்கும்போது, ஒரு நகைச்சுவையைப் படிக்கும்போது, அழுவாச்சி காவியங்களை படிக்கும்போது, சிறுகதை, நாவல்கள்சுயசரிதைகளை படிக்கும்போது, சுயமுன்னேற்றக் கருத்துக்களைப் படிக்கும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது, மனதில்? சட்டென அதை, அந்த செய்தி சொல்லும் கருத்தை, கதை காட்டும் பாதையை நோக்கி தொடர்ந்து பயணிக்க முடிகிறதாபோதையில் வாகனமோட்டிய இருவர் பலியென படிக்கும்போது, இனியெப்போதும் போதையில் வாகனம் ஓட்டுவதில்லை என்று முடிவெடுக்க முடியாததைப் போல கதைகளையும், கதை மாந்தர்களையும் கரம் பிடித்து நடக்க முடிவதில்லையே, ஏன்?   

                என் பார்வையில் இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று : நமக்கும் அந்த எழுத்துக்குமான நெருக்கம், மேலும், அது யாருக்கோ நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்கிற மாதிரியான ஒரு மனநிலை.
இரண்டு: அதை எழுதுபவர்கள் அதை வெறும் சேதியாக மட்டும் பார்ப்பது, போய்ச் சேர்ந்தால் போதும் என்கிற எண்ணமும், அதன் பிரதிபலன்களின் மீதான அவர்களை அக்கறையின்மையும் .

                பொதுவாக எழுத்துக்களை இப்படி ஆராய முடிந்தாலும்,  கதைகளும், கதைசொல்லிகளும் அப்படியல்ல. தவளை இளவரசனும், கோடாரி தந்த தேவதைகளும் நிறைந்த கதைகள்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். அந்த கதை மாந்தர்கள் மிகவும் அந்நியமானவர்கள் தான். இருந்தாலும், அதிலுள்ள நீதியை எங்கள் மீது படிய வைக்க என் பாட்டி எடுத்த அக்கறையினால் தான், இன்னும் அந்த கதைகள் அப்படியே நிற்கிறது மனதில். என் பேரக் குழந்தைகளுக்குக் கூட மறக்காமல் சொல்லிட முடியும்.

                எந்த மாதிரியான எழுத்துக்கள் இயல்பாக மனதிற்குள் ஓடுகிறது? எந்த மாதிரியான எழுத்துக்களை, திரும்பத் திரும்ப வாசிக்க முடிகிறது எந்த மாதிரியான எழுத்துக்களோடு, இது நான் தான்!  இது என்னைப் பற்றிய எழுத்துக்கள் தான்! என ஒத்துப்போக முடிகிறது அல்லது ஒப்பீடு செய்து கொள்ள முடிகிறதுஎந்த மாதிரியான எழுத்துக்கள் உங்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியாக படம் பிடித்துக் காண்பிக்கிறது?  

                இந்த கேள்விக்கான  பதில்கள் ஒவ்வொருவரின் ரசனைக்கும், வாழ்க்கைக்கும் ஏற்றபடி  ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடலாம். ஆனால், அந்த எழுத்துக்கள்தான்  வெற்றி பெறுகிறது. அப்படி வெற்றி பெற்ற ஒரு எழுத்துத்தான் இந்த பால்யகால சகி


நாவல் : பால்யகால சகி
ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர் , தமிழில் : குளச்சல் மு. யூசுப்
பதிப்பகம் : காலச்சுவடு, விலை : ரூ.60/-


       முதன் முதலாக இந்த நாவலை(?) என் மலையாள நண்பரின் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆனால் அது நான் மொழிபெயர்ப்பு எழுத்துக்களின்  மீது கொண்டிருந்த ஒரு அயர்ச்சியின் காரணமாக அப்போது படிக்காமல் விட்டிருந்தேன். சமீபத்தில் தான் படித்தேன். அதன் பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது, வெறும் சோம்பல் காரணமாய் ஒரு நல்ல எழுத்தை ஒன்பது வருடங்களாய்ப் புறக்கணித்து வந்திருக்கிறேன்,  என்பதை. என் பார்வையில் நான் முன் சொன்ன இரண்டு காரணிகளும் இந்தக் கதையோடு பொருந்திப் போகிறது. 

                இதில் ஒரு அழகான  காதல் சொல்லப்பட்டிருக்கிறது.  கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சியின் கொடுமையான கூட்டு வாழ்க்கையைப் போல, கூடவே அதன் பின்புலன்களும்  சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்வியல் முறை சொல்லப்பட்டிருக்கிறது. காலங்காலமாய் சொல்லிவரும் ஒரு சம்பிரதாயம் இயல்பாய் மீறப்பட்டிருக்கிறது. அதை அனைவரும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமலேயே வாசிப்பில் கடந்து போக முடிவது தான் அந்த எழுத்தின் வெற்றியாய் நினைக்கிறேன்.

                சுகறா, சிறுவயது முதலே ஒரு அடிமைப்பட்ட பெண்ணினத்தின் குறியீடாகவே வருகிறாள். தன்னை மகாராணியாக பாவிக்கக்கூடிய ஒரு மனிதனை கடவுளாகப் பார்க்கும் பழக்கமும் சரி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம், தன் பிறவிப் பயனை அடைவதாய் நினைப்பது வரை,  ஒரு சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். ஆனால், அதே சுகறா பின்னாளில் ஊருக்குத் திரும்பி வரும் மஜீதுவிடம் சரணடையும்போது, சராசரியான அடக்குமுறைகளுக்குட்பட்ட பெண் என்பதையும் தாண்டி, மனம் சொன்னபடி இயங்கத் தொடங்குகிறாள். என்றோ திரும்ப வரப்போகும் மஜீதுவிற்காக அவன் குடும்ப சுமையை தன்மீது போர்த்திக் கொண்டு, தன் பிரச்சனைகள் எதுவும் அவனுக்குத் தெரிந்து அவனை வருத்தப்படச் செய்துவிடக்கூடாது என்று அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்து, இறந்தும் போகி்றாள்.

                மஜீது, ஆணாதிக்கத்தின்   வெளிப்பாடு. சிறுவயது முதலே தான் ஆண் என்பதாலேயே, முன்னால் நடப்பது முதல் தனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் வீட்டை விட்டு வெளியேறுவது வரை, அவனது ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது . ஆனால், அப்படிப்பட்ட ஒரு ஆண், சுகறா என்கிற ஒரு பெண்ணிற்காக மெழுகாய் கரையும் காரணம் அவள் மீதான அன்பு. அவனைப் பொறுத்தமட்டிலும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவன் சமூகக் கோட்பாடுகள், அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே இயல்பாய் வருகிறது. ஆனால், அதையும் தாண்டி அவனை ஒரு நல்ல மனிதனாக சிந்திக்க வைப்பது சுகறாவின் தூய்மையான அன்பு.

                இத்தனைக்கும் மஜீதும் சுகறாவும் எனக்கு மிகவும் அந்நியமானவர்களே.  அவர்களின் வாழ்க்கை முறை எனக்கு சிறிதளவும் பரிச்சியமற்ற ஒன்றுதான். இருந்தாலும், அந்த எழுத்து என் கையைப்பிடித்து அவளோடு நடக்கச் செய்கிறது. மஜீது வீட்டை விட்டு வெளியேறும்போது, சுகறாவிற்காக மனம் துயரப்படுகிறது. ஊரிலிருந்து தொலைதூரத்திலிருக்கும் அந்த உணவகத்தில் பெரிய பெரிய பாத்திரங்களைத் துலக்கியபடி வீட்டை நினைத்துப் பார்க்கும் மஜீதோடு நம் மனமும் அவன் வீடு நோக்கியே பயணப்படுகிறது.

                என்னால் இந்தக் கதையோடு மிகவும் ஒத்துப்போக முடிகிறது.  என் வாழ்க்கையோடு பல இடங்களில் ஒப்பீடு செய்து கொள்ள முடிகிறது. தன் கூர்மையான நகங்களால், சிறிய தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் மஜீதை பிறாண்டிவிடும் சுகறாவை படிக்கும்போதெல்லாம் நாற்காலியை திருப்பிப் போட்டு அமர்ந்து, அதையே பஸ்ஸாக பாவித்து டுர்ர்ர்.... டுர்ர்ர்ன்று சப்தமிட்டுக்கொண்டிருந்த என் பால்யகாலமும், அந்த பஸ்ஸில் ஏற வந்து பஸ் புல்லா இருக்கு, நாளைக்கு வான்னு சொன்னதற்காக நகங்களால் கீறிவிட்ட செளமியாவும் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அவள் கீறிவைத்த தழும்புகளைத் தடவியபடியேதான் அடுத்த வரிகளுக்குள்ளாகவே பயணிக்கிறேன்.

                ஒண்ணும் ஒண்ணும் சேந்தா எவ்வளவு? என்ற கேள்விக்கு தன் சிறிய மூளையை பெரிதாய்க் கசக்கி கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன்று சொல்லும் மஜீது சக மாணவர்களால் கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன்று கிண்டல் செய்யப்படுகிறான்.  பின், சுகறாவின் கவனிப்பும், அக்கறையும் அவனையும் ஒரு மரியாதைக்குரியவனாய் மாற்றுகிறது. ஆனால், பல சமயங்களில் மஜீது சுகறாவாலும் கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன கிண்டலுக்குள்ளாகிறான். ஆனால், அந்த சந்தர்ப்பங்கள் எவ்வளவு அழகானவை! என அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்.
      பள்ளிக்காலங்களில், சக மாணவர்களால் சுமாருக்கும் கீழே மதிக்கப்பட்டவன் தான் நானும், ஒருமுறை ஆங்கில பரிட்சையில் POLICY என்கிற தலைப்பில் சிறு கட்டுரை எழுதுமாறு கேட்டிருந்த கேள்விக்கு நான் எழுதிய கட்டுரை பின்னாளில் POLICY முரளி என்று அழைக்கப்படுமளவிற்கு பெயர் வாங்கித்தந்தது. ஏனெனில், நான் எழுதியது போலீஸ் பற்றி, ஏதோ கேட்டிருக்கிறார்களென நினைத்து காவல்துறை நமது நண்பன் என்பது மாதிரியான ஒரு கட்டுரை.  ஆசிரியர்கள், மாணவர்கள் என பள்ளியே என்னை அப்படித்தான் கிண்டல் செய்தது, கலைசெல்வியைத் தவிர. அதன்பின், என் ஆங்கிலத்தில் அவள் காட்டிய அக்கறை தான் இன்று ஆங்கிலத்தில் நாவல்கள் படிக்குமளவிற்கு வந்து நிற்கிறது. ஆனால், செல்வியும் என்னைப் பல நேரங்களில் POLICY முரளி என்று கிண்டல் செய்திருக்கிறாள்.  ஆனால், எனக்கு எந்தக் கோபமும், அவமானமும் ஏற்படாத அழகான தருணங்களில்!

                பால்ய காலங்களில் ஏற்படுகிற ஒரு பிரியம், நட்பாய் வளர்ந்து காதலாய் பரிணமிக்கக்கூடிய வாழ்வு பெற்றவர்கள், வரம் வாங்கியவர்கள். ஆனால், மஜீதும் சுகறாவும் அப்படிப்பட்ட ஒரு வரம் பெற்றும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாய் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்களாய் வாழ்ந்து முடித்திருப்பது, மிகப்பெரிய துரதிஷ்டம்.

                இப்படிக் கதையின் ஒவ்வொரு பக்கமும் வாழ்க்கையின் ஏதோவொரு நாட்களை, சந்தித்த மனிதர்களை நினைவுபடுத்தியே போகிறது. இதை வாசிக்கும் அனைவருக்கும் இப்படி ஒரு மனநிலை வாய்க்கப் பெறுமாவென தெரியாது. ஆனால், இந்த நாவலை வாசித்து முடிக்கும் எவருக்கும், பால்யமும், முதல் காதலும், வாழ்வின் இன்றைய எதார்த்தமும், தொலைவில் செல்லும் ஒரு ரயிலின் கூவலும், தண்டவாள அதிர்வுகளும் போல மனது எழும்பி அடங்குவது  நிச்சயம்!

              நேற்றுதான் நண்பர் சிவகுமாரிடம் இந்த புத்தகத்தை கொடுத்தேன். இந்த புத்தகத்தை படியுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லியிருந்தேன். இன்று பதிவெழுதி முடித்தபின் புத்தக விலையறிய அவருக்கு போன் செய்தபோது சொன்னார். நாளை பஷீரின் நினைவு நாள் என்று. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இந்த பதிவு அவரின் நினைவாக..