பால்யகால சகி

                இப்போதெல்லாம் எல்லோருமே நிறைய படிக்கிறோம்.  சிறுகதை, நாவல்கள், வாரப் பத்திரிக்கைகள், செய்தித்தாள், குறுஞ்செய்தி என இன்னும் நிறைய. ஆனால், அந்த எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்னசாலை விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒரு குடும்பமே பலி! என செய்தித்தாள்  படிக்கும்போது, ஒரு நகைச்சுவையைப் படிக்கும்போது, அழுவாச்சி காவியங்களை படிக்கும்போது, சிறுகதை, நாவல்கள்சுயசரிதைகளை படிக்கும்போது, சுயமுன்னேற்றக் கருத்துக்களைப் படிக்கும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது, மனதில்? சட்டென அதை, அந்த செய்தி சொல்லும் கருத்தை, கதை காட்டும் பாதையை நோக்கி தொடர்ந்து பயணிக்க முடிகிறதாபோதையில் வாகனமோட்டிய இருவர் பலியென படிக்கும்போது, இனியெப்போதும் போதையில் வாகனம் ஓட்டுவதில்லை என்று முடிவெடுக்க முடியாததைப் போல கதைகளையும், கதை மாந்தர்களையும் கரம் பிடித்து நடக்க முடிவதில்லையே, ஏன்?   

                என் பார்வையில் இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று : நமக்கும் அந்த எழுத்துக்குமான நெருக்கம், மேலும், அது யாருக்கோ நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்கிற மாதிரியான ஒரு மனநிலை.
இரண்டு: அதை எழுதுபவர்கள் அதை வெறும் சேதியாக மட்டும் பார்ப்பது, போய்ச் சேர்ந்தால் போதும் என்கிற எண்ணமும், அதன் பிரதிபலன்களின் மீதான அவர்களை அக்கறையின்மையும் .

                பொதுவாக எழுத்துக்களை இப்படி ஆராய முடிந்தாலும்,  கதைகளும், கதைசொல்லிகளும் அப்படியல்ல. தவளை இளவரசனும், கோடாரி தந்த தேவதைகளும் நிறைந்த கதைகள்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். அந்த கதை மாந்தர்கள் மிகவும் அந்நியமானவர்கள் தான். இருந்தாலும், அதிலுள்ள நீதியை எங்கள் மீது படிய வைக்க என் பாட்டி எடுத்த அக்கறையினால் தான், இன்னும் அந்த கதைகள் அப்படியே நிற்கிறது மனதில். என் பேரக் குழந்தைகளுக்குக் கூட மறக்காமல் சொல்லிட முடியும்.

                எந்த மாதிரியான எழுத்துக்கள் இயல்பாக மனதிற்குள் ஓடுகிறது? எந்த மாதிரியான எழுத்துக்களை, திரும்பத் திரும்ப வாசிக்க முடிகிறது எந்த மாதிரியான எழுத்துக்களோடு, இது நான் தான்!  இது என்னைப் பற்றிய எழுத்துக்கள் தான்! என ஒத்துப்போக முடிகிறது அல்லது ஒப்பீடு செய்து கொள்ள முடிகிறதுஎந்த மாதிரியான எழுத்துக்கள் உங்கள் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியாக படம் பிடித்துக் காண்பிக்கிறது?  

                இந்த கேள்விக்கான  பதில்கள் ஒவ்வொருவரின் ரசனைக்கும், வாழ்க்கைக்கும் ஏற்றபடி  ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுபடலாம். ஆனால், அந்த எழுத்துக்கள்தான்  வெற்றி பெறுகிறது. அப்படி வெற்றி பெற்ற ஒரு எழுத்துத்தான் இந்த பால்யகால சகி


நாவல் : பால்யகால சகி
ஆசிரியர் : வைக்கம் முகமது பஷீர் , தமிழில் : குளச்சல் மு. யூசுப்
பதிப்பகம் : காலச்சுவடு, விலை : ரூ.60/-


       முதன் முதலாக இந்த நாவலை(?) என் மலையாள நண்பரின் மூலமாக தெரிந்து கொண்டேன். ஆனால் அது நான் மொழிபெயர்ப்பு எழுத்துக்களின்  மீது கொண்டிருந்த ஒரு அயர்ச்சியின் காரணமாக அப்போது படிக்காமல் விட்டிருந்தேன். சமீபத்தில் தான் படித்தேன். அதன் பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது, வெறும் சோம்பல் காரணமாய் ஒரு நல்ல எழுத்தை ஒன்பது வருடங்களாய்ப் புறக்கணித்து வந்திருக்கிறேன்,  என்பதை. என் பார்வையில் நான் முன் சொன்ன இரண்டு காரணிகளும் இந்தக் கதையோடு பொருந்திப் போகிறது. 

                இதில் ஒரு அழகான  காதல் சொல்லப்பட்டிருக்கிறது.  கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சியின் கொடுமையான கூட்டு வாழ்க்கையைப் போல, கூடவே அதன் பின்புலன்களும்  சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்வியல் முறை சொல்லப்பட்டிருக்கிறது. காலங்காலமாய் சொல்லிவரும் ஒரு சம்பிரதாயம் இயல்பாய் மீறப்பட்டிருக்கிறது. அதை அனைவரும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லாமலேயே வாசிப்பில் கடந்து போக முடிவது தான் அந்த எழுத்தின் வெற்றியாய் நினைக்கிறேன்.

                சுகறா, சிறுவயது முதலே ஒரு அடிமைப்பட்ட பெண்ணினத்தின் குறியீடாகவே வருகிறாள். தன்னை மகாராணியாக பாவிக்கக்கூடிய ஒரு மனிதனை கடவுளாகப் பார்க்கும் பழக்கமும் சரி, அவனுக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம், தன் பிறவிப் பயனை அடைவதாய் நினைப்பது வரை,  ஒரு சராசரி பெண்ணாகவே இருக்கிறாள். ஆனால், அதே சுகறா பின்னாளில் ஊருக்குத் திரும்பி வரும் மஜீதுவிடம் சரணடையும்போது, சராசரியான அடக்குமுறைகளுக்குட்பட்ட பெண் என்பதையும் தாண்டி, மனம் சொன்னபடி இயங்கத் தொடங்குகிறாள். என்றோ திரும்ப வரப்போகும் மஜீதுவிற்காக அவன் குடும்ப சுமையை தன்மீது போர்த்திக் கொண்டு, தன் பிரச்சனைகள் எதுவும் அவனுக்குத் தெரிந்து அவனை வருத்தப்படச் செய்துவிடக்கூடாது என்று அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்து, இறந்தும் போகி்றாள்.

                மஜீது, ஆணாதிக்கத்தின்   வெளிப்பாடு. சிறுவயது முதலே தான் ஆண் என்பதாலேயே, முன்னால் நடப்பது முதல் தனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் வீட்டை விட்டு வெளியேறுவது வரை, அவனது ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது . ஆனால், அப்படிப்பட்ட ஒரு ஆண், சுகறா என்கிற ஒரு பெண்ணிற்காக மெழுகாய் கரையும் காரணம் அவள் மீதான அன்பு. அவனைப் பொறுத்தமட்டிலும், ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற அவன் சமூகக் கோட்பாடுகள், அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலேயே இயல்பாய் வருகிறது. ஆனால், அதையும் தாண்டி அவனை ஒரு நல்ல மனிதனாக சிந்திக்க வைப்பது சுகறாவின் தூய்மையான அன்பு.

                இத்தனைக்கும் மஜீதும் சுகறாவும் எனக்கு மிகவும் அந்நியமானவர்களே.  அவர்களின் வாழ்க்கை முறை எனக்கு சிறிதளவும் பரிச்சியமற்ற ஒன்றுதான். இருந்தாலும், அந்த எழுத்து என் கையைப்பிடித்து அவளோடு நடக்கச் செய்கிறது. மஜீது வீட்டை விட்டு வெளியேறும்போது, சுகறாவிற்காக மனம் துயரப்படுகிறது. ஊரிலிருந்து தொலைதூரத்திலிருக்கும் அந்த உணவகத்தில் பெரிய பெரிய பாத்திரங்களைத் துலக்கியபடி வீட்டை நினைத்துப் பார்க்கும் மஜீதோடு நம் மனமும் அவன் வீடு நோக்கியே பயணப்படுகிறது.

                என்னால் இந்தக் கதையோடு மிகவும் ஒத்துப்போக முடிகிறது.  என் வாழ்க்கையோடு பல இடங்களில் ஒப்பீடு செய்து கொள்ள முடிகிறது. தன் கூர்மையான நகங்களால், சிறிய தோல்விகளைக் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் மஜீதை பிறாண்டிவிடும் சுகறாவை படிக்கும்போதெல்லாம் நாற்காலியை திருப்பிப் போட்டு அமர்ந்து, அதையே பஸ்ஸாக பாவித்து டுர்ர்ர்.... டுர்ர்ர்ன்று சப்தமிட்டுக்கொண்டிருந்த என் பால்யகாலமும், அந்த பஸ்ஸில் ஏற வந்து பஸ் புல்லா இருக்கு, நாளைக்கு வான்னு சொன்னதற்காக நகங்களால் கீறிவிட்ட செளமியாவும் ஞாபகத்திற்கு வருகிறார்கள். அவள் கீறிவைத்த தழும்புகளைத் தடவியபடியேதான் அடுத்த வரிகளுக்குள்ளாகவே பயணிக்கிறேன்.

                ஒண்ணும் ஒண்ணும் சேந்தா எவ்வளவு? என்ற கேள்விக்கு தன் சிறிய மூளையை பெரிதாய்க் கசக்கி கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன்று சொல்லும் மஜீது சக மாணவர்களால் கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன்று கிண்டல் செய்யப்படுகிறான்.  பின், சுகறாவின் கவனிப்பும், அக்கறையும் அவனையும் ஒரு மரியாதைக்குரியவனாய் மாற்றுகிறது. ஆனால், பல சமயங்களில் மஜீது சுகறாவாலும் கொஞ்சம் பெரிய ஒண்ணுஎன கிண்டலுக்குள்ளாகிறான். ஆனால், அந்த சந்தர்ப்பங்கள் எவ்வளவு அழகானவை! என அதை அனுபவித்தவர்களுக்கே புரியும்.
      பள்ளிக்காலங்களில், சக மாணவர்களால் சுமாருக்கும் கீழே மதிக்கப்பட்டவன் தான் நானும், ஒருமுறை ஆங்கில பரிட்சையில் POLICY என்கிற தலைப்பில் சிறு கட்டுரை எழுதுமாறு கேட்டிருந்த கேள்விக்கு நான் எழுதிய கட்டுரை பின்னாளில் POLICY முரளி என்று அழைக்கப்படுமளவிற்கு பெயர் வாங்கித்தந்தது. ஏனெனில், நான் எழுதியது போலீஸ் பற்றி, ஏதோ கேட்டிருக்கிறார்களென நினைத்து காவல்துறை நமது நண்பன் என்பது மாதிரியான ஒரு கட்டுரை.  ஆசிரியர்கள், மாணவர்கள் என பள்ளியே என்னை அப்படித்தான் கிண்டல் செய்தது, கலைசெல்வியைத் தவிர. அதன்பின், என் ஆங்கிலத்தில் அவள் காட்டிய அக்கறை தான் இன்று ஆங்கிலத்தில் நாவல்கள் படிக்குமளவிற்கு வந்து நிற்கிறது. ஆனால், செல்வியும் என்னைப் பல நேரங்களில் POLICY முரளி என்று கிண்டல் செய்திருக்கிறாள்.  ஆனால், எனக்கு எந்தக் கோபமும், அவமானமும் ஏற்படாத அழகான தருணங்களில்!

                பால்ய காலங்களில் ஏற்படுகிற ஒரு பிரியம், நட்பாய் வளர்ந்து காதலாய் பரிணமிக்கக்கூடிய வாழ்வு பெற்றவர்கள், வரம் வாங்கியவர்கள். ஆனால், மஜீதும் சுகறாவும் அப்படிப்பட்ட ஒரு வரம் பெற்றும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாய் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதவர்களாய் வாழ்ந்து முடித்திருப்பது, மிகப்பெரிய துரதிஷ்டம்.

                இப்படிக் கதையின் ஒவ்வொரு பக்கமும் வாழ்க்கையின் ஏதோவொரு நாட்களை, சந்தித்த மனிதர்களை நினைவுபடுத்தியே போகிறது. இதை வாசிக்கும் அனைவருக்கும் இப்படி ஒரு மனநிலை வாய்க்கப் பெறுமாவென தெரியாது. ஆனால், இந்த நாவலை வாசித்து முடிக்கும் எவருக்கும், பால்யமும், முதல் காதலும், வாழ்வின் இன்றைய எதார்த்தமும், தொலைவில் செல்லும் ஒரு ரயிலின் கூவலும், தண்டவாள அதிர்வுகளும் போல மனது எழும்பி அடங்குவது  நிச்சயம்!

              நேற்றுதான் நண்பர் சிவகுமாரிடம் இந்த புத்தகத்தை கொடுத்தேன். இந்த புத்தகத்தை படியுங்கள் பிறகு பேசலாம் என்று சொல்லியிருந்தேன். இன்று பதிவெழுதி முடித்தபின் புத்தக விலையறிய அவருக்கு போன் செய்தபோது சொன்னார். நாளை பஷீரின் நினைவு நாள் என்று. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... இந்த பதிவு அவரின் நினைவாக..

27 கருத்துரைகள்:

சென்ஷி said...

//வளை இளவரசனும், கோடாரி தந்த தேவதைகளும் நிறைந்த கதைகள்தான் அதிகம் கேட்டிருக்கிறேன். அந்த கதை மாந்தர்கள் மிகவும் அந்நியமானவர்கள் தான். இருந்தாலும், அதிலுள்ள நீதியை எங்கள் மீது படிய வைக்க என் பாட்டி எடுத்த அக்கறையினால் தான், இன்னும் அந்த கதைகள் அப்படியே நிற்கிறது மனதில்.//

//அவள் கீறிவைத்த தழும்புகளைத் தடவியபடியேதான் அடுத்த வரிகளுக்குள்ளாகவே பயணிக்கிறேன். //


கூடவே பயணிக்க வைக்கிறது விமர்சனம். பகிர்விற்கு நன்றி முரளி.

ராம்ஜி_யாஹூ said...

பஷீர் எழுத்து சித்தர் அல்லவா.

அதுவும் அவரின் எழுத்துக்களை மம்மூட்டியின் நடிப்பில் திரையில் பார்க்கும் பொழுது, மிகப் பெரிய விருந்து சாப்பிடும் உணர்வு

அன்புடன் அருணா said...

ரொம்ப அழகா,கூடவே வாசிப்பவர்களை கூட்டிச் செல்லும் எழுத்து!ரொம்ப உணர்ந்து அதை அப்படியே வெளிக்கொணரும் திறமைக்கு ஒரு பூங்கொத்து!

பத்மா said...

ரொம்ப அழகா எழுதிருக்கீங்க முரளி ...
நம்மை நம்மிடம் அடையாளப் படுத்தும் எல்லாம் இலக்கியம் தான் ..
சந்தர்ப்பம் நேர்ந்தால் வாசிக்க முயல்கிறேன் ..
இப்போதைக்கு நெய்வேலி புத்தக கண் காட்சியில் வாங்க லிஸ்ட் தேவை ..ஞாபகம் இருக்கா சார்?
சௌமியா செல்வி போன்றவர்கள் வரம் போலத்தான் ..

Rajasurian said...

அழகான விமர்சனம்

கோபிநாத் said...

அழகான அழமான விமர்சனம் தல...நோட் பண்ணிக்கிட்டேன் ;)

கலகலப்ரியா said...

ம்ம்.. அருமையான எழுத்து முரளி.. வழக்கம் போலவே..

Kayelen said...

செயற்கை தனமில்லாத எழுத்துக்கள் போல தோன்றுகிறது..!!
எப்போதுமே மலையாள கலை உலகம் மிக அழகு.!
சாந்து பொட்டு, பாலேட்டன், போல படங்கள் இது போல.!
அடுத்து பஷீர் ஐ வாசிக்கலாம் .!
நன்றி murli என் நினைவிலும் என் பால்ய கால சிநேகிதி நினைவுடன்.!:) :)

கார்த்தி.!

மோகன் குமார் said...

என்னமா எழுதுறீங்க முரளி.. ம்ம்ம்

விக்னேஷ்வரி said...

எப்போதும் மனதைத் தொட்டுச் செல்லும் எழுத்து உங்களது. இதுவும் அப்படியே.

விக்னேஷ்வரி said...

பஷீரினுடைய கதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இயல்பாய்ச் செல்கின்றன. இந்த நாவலையும் முயற்சிக்கிறேன்.

இளங்கோ said...

தன் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளைத் தாண்டி பெண் என்பவள் அன்பை பொழிந்து கொண்டே இருக்கிறாள்..
நீங்கள் எழுதியுள்ளது படிக்கணும் போல இருக்கிறது... படிக்க வேண்டும்....

கிருஷ்ண பிரபு said...

ரொம்ப நல்லா எழுதி இருக்க முரளி. நானும் படிச்சி சிலாகிக்கும் எழுத்தாளர்களில் பஷீர் முக்கியமானவர்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ சென்ஷி

தேங்க்ஸ் தல, நீங்கல்லாம் வந்துட்டு போறது எவ்ளோ சந்தோசமா இருக்குன்னு தெரியுமா? ...:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராம்ஜி_யாஹூ
//அதுவும் அவரின் எழுத்துக்களை மம்மூட்டியின் நடிப்பில் திரையில் பார்க்கும் பொழுது, மிகப் பெரிய விருந்து சாப்பிடும் உணர்வு//

இதுவரை அந்த விருந்துக்கு போகலை, சொல்லிட்டிங்கள்ல, ரெண்டு நாளைக்கு வயித்தை காயப்போட்டுட்டு போயிட வேண்டியதுதான். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ அன்புடன் அருணா
//ரொம்ப அழகா,கூடவே வாசிப்பவர்களை கூட்டிச் செல்லும் எழுத்து!ரொம்ப உணர்ந்து அதை அப்படியே வெளிக்கொணரும் திறமைக்கு ஒரு பூங்கொத்து!//

தேங்க்யூ மேடம். :-) அடிக்கடி பூங்கொத்து வாங்குவது மகிழ்ச்சி

முரளிகுமார் பத்மநாபன் said...

@பத்மா
//சௌமியா செல்வி போன்றவர்கள் வரம் போலத்தான் ..//

உண்மைதான் ஆனால் என்க்கு கொடுத்தவரம் ஒரு சபிக்கப்பட்ட கடவுளிடமிருந்து.. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

@ ராஜா சூரியன்
நன்றி நண்பரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கோபிநாத்
//அழகான அழமான விமர்சனம் தல...நோட் பண்ணிக்கிட்டேன் ;)//

அவசியம் படிங்க கோபி, மனசு கரைஞ்சு போயிடும்

முரளிகுமார் பத்மநாபன் said...

@கலகல்ப்ரியா
//ம்ம்.. அருமையான எழுத்து முரளி.. வழக்கம் போலவே..//

தேங்க்ஸ் ப்ரியா? இப்பல்லாம் கடை பக்கம வரதே கிடையாதுன்னு கேட்க முடியலை... ம்ம்ம்ம்ம் :-(

முரளிகுமார் பத்மநாபன் said...

@ கார்த்தி
//செயற்கை தனமில்லாத எழுத்துக்கள் போல தோன்றுகிறது..!!
எப்போதுமே மலையாள கலை உலகம் மிக அழகு.!
சாந்து பொட்டு, பாலேட்டன் படங்கள் இது போல.!
அடுத்து பஷீர் ஐ வாசிக்கலாம் .!
நன்றி murli என் நினைவிலும் என் பால்ய கால சிநேகிதி நினைவுடன்.!:) :)

கார்த்தி.//

நிச்சயம் வாசிக்கும் அனைவருக்கும் பால்யகால தோழி நினைவில் ஒரு வாராமாவது வந்து போவாள்...

புத்தகபட்டியல் கேட்டிங்கள்ல? இங்கிருந்து கூட ஆரம்பிங்க......:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
//என்னமா எழுதுறீங்க முரளி.. ம்ம்ம்///

தல இதெல்லாம் சும்மா.... :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ விக்னேஷ்வரி
//எப்போதும் மனதைத் தொட்டுச் செல்லும் எழுத்து உங்களது. இதுவும் அப்படியே.//

தேங்க்ஸ் விக்கி

//பஷீரினுடைய கதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இயல்பாய்ச் செல்கின்றன. இந்த நாவலையும் முயற்சிக்கிறேன்.//

அவசியம் படிங்க... ஒரு நல்ல புத்தகத்தை சிபாரிசு செய்த திருப்தி இருக்கு இப்ப....

முரளிகுமார் பத்மநாபன் said...

@ இளங்கோ
//தன் மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளைத் தாண்டி பெண் என்பவள் அன்பை பொழிந்து கொண்டே இருக்கிறாள்..
நீங்கள் எழுதியுள்ளது படிக்கணும் போல இருக்கிறது... படிக்க வேண்டும்....///

படிங்க இளங்கோ அவசியம் படிங்க... அப்புறம் பேசலாம், சகியைபற்றி///

முரளிகுமார் பத்மநாபன் said...

@கிருஷ்ணபிரபு
//ரொம்ப நல்லா எழுதி இருக்க முரளி. நானும் படிச்சி சிலாகிக்கும் எழுத்தாளர்களில் பஷீர் முக்கியமானவர்//

இங்க நல்லா எழுதியிருக்கடான்னு பாராட்ட வேண்டியது, போன் பண்ணி கன்னாபின்னான்னு திட்ட வேண்டியது, உஸ்ஸ்ஸ்... முடியலை...
ஹி ஹி ஹி..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல அறிமுகம் நண்பா,அப்படியே த ஜாப்பனீஸ் வைஃபும் எழுதுங்க,நல்லா வரும்.

ரம்சின் நிஸாம் said...

புத்தகத்தை இரண்டு முறை வாசிததாயிற்றுஇஇஇ சுகறாவுடனும் மஜிதுடனும் நடந்து சென்றதது போல் பிரம்மை....

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.