கிறுக்கலிருந்து கவிதைக்கு.........


சில சமயங்களில் நான் எழுதியதை திரும்ப வாசிக்கும் போது என் எழுத்துக்களுக்கு பரிசாய் சிரிப்பைத் தவிர வெறொன்றும் கொடுத்துக்கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் பொறுமையாக இவ்வளவையும் சகித்து வாசித்து,தொடர்ந்து என்னை கைதட்டி, கைகொடுத்துவரும் என் பதிவுலக நண்பர்கள் அனைவரோடும் என் மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொள்கிறேன்.
            இன்னும் பெருகுமென்ற பேராசையுடன்.
                சுஜாதா, எஸ்.ரா, மதன், க.சீ.சிவகுமார் இப்படி யாரையெல்லாம் பார்த்து பார்த்து, அவர்களின் கரம் பிடித்து வாசிக்கவும் பின் எழுதவும் அடியெடுத்து வைத்தேனோ, அவர்கள் அனைவரும் எழுதிய புத்தகம், ஆனந்த விகடன். இன்று என்னுடைய இரு கிறுக்கல்கள், சொல்வனத்தில் கவிதையாய் அச்சேறியிருக்கிறது. இதை வெறுமனவே மகிழ்ச்சியாயிருக்கிறது என்று சொல்ல முடியாது. என்னைப் புரிந்து கொண்டவர்களால் என்னுடைய இந்த உணர்வையும் புரிந்துகொள்ள முடியுமெனெ நம்புகிறேன்.

             எனக்கும் கவிதைக்குமான இடைவெளி குறைந்து வருகிறதோ அன்றி நான், என்னால் கவிதைகள் எழுத முடியுமென்று ஒருபோது நினைத்ததில்லை. வண்ணதாசனின் கவிதைகளை படித்தது முதலே கவிதைகள் மீது எனக்கிருந்த தூரம் விலகியது. முதன்முதலில் கவிதை என்று ஒன்றை எழுதியபோது அது அந்த அந்தஸ்த்தை அடைய இன்னும் நிறைய பிரயத்தணப்பட வேண்டுமென்பது விளங்கியது. ஆகவே கிறுக்கல்கள் என்ற பெயரிலியே தொடர்ந்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் நண்பர்கள்  என்னடா இது? எங்களுக்கு கவிதைன்னா என்னன்னு தெரியாதுங்கிறதால நீ எழுதுறதையெல்லாம் கவிதைன்னுக்குவியா? என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். (எவ்ளோ கேவலமா திட்டினாலும் நாங்க அதை பாராட்டாவே நினைச்சிப்போம், ஹி ஹி ஹி...நம்ம பாஸிட்டிவ் ஆட்டிடியூடுக்கு இதெல்லாம் உதாரணம்). இந்த பாராட்டுகள் என் கவிதை ஆசையை இன்னும் ஆழத்திற்கு கொண்டு போய்க்கொண்டேயிருக்கும்.


            ஆனாலும், அவ்வப்போது என்னையுமறியாமல் வந்துவிடுகிற சில நல்ல எழுத்துக்கள், அந்த கவிதை ஆசையை தூர் வாறிக்கொண்டே இருக்கிறது. அதுமாதிரியான ஒரு தூர்வாறல்தான், பதிவுலக அண்ணன்கள் நடத்திய உரையாடல் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதும் இப்போது ஆனந்தவிகடனில் வந்திருப்பதும்.
     
     நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன், உங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த சந்தோஷம், மகிழ்ச்சியே பங்கிடுவதில்தானே இருக்கிறது. :-)

விகடனில் வெளிவந்த இரு கிறுக்கல்கள்
1.பிரம்மச்சர்யம்
 வியாபாரம்,
அலுவல் நிமித்தமான சந்திப்புகள்,
அதன் பிந்தய எரிச்சல்,
ஆலோசனை,
அடுக்கடுக்காய்ப் பொய்கள்,
பணத்திற்காக சீரளியும் தன்மானம்
மானத்திற்காக விலைபோகும் லாபம்,
கழிவறைவரை துரத்தும் 
கடன்காரர்களின் கேள்விகள்
நேரம்கெட்ட சாப்பாடு,
ஆகாரத்திற்கு முன் பின்னென 
வேளைக்கு இரண்டு மணிநேர 
தொலைபேசி உரையாடல்கள்,
இவை அனைத்துக்குமிடையே
வரும் அம்மாவின் போன்.

நம்ம ஊர்தாண்டா,
பார்க்கவும் லட்சணமா இருக்கா,
காலேஜ் படிச்சிருக்காளாம்.......
அம்மா முடிக்கும்முன்
இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்,
போனை வைம்மா
எனும் கடுமையான வார்த்தைகளில்
தொடர்பற்றுப் போகும்
அம்மாவின் குரல்.

நித்திரையற்ற இரவில் 
புரண்டு படுக்கும் தனிமையில் 
இறுக பற்றிய தலையணையினூடே
லட்சமாண பெண் என்றால்
எப்படியிருப்பாளென
யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.


2.அர்த்தமற்றுப் போகும் அன்பு.

"வரும்போது அச்சு முறுக்கு வாங்கியாப்பா" 
என்ற மகளின் நினைப்புத்தட்ட
சட்டைப்பைகளில் 
துழாவியெடுத்த சில்லறைகளை 
உள்ளங்கையில் கொட்டி 
மூணுமூணரை என்று எண்ணும்
நேரம்பார்த்து வருகிறது 
"சாப்ட்டு ரெண்டு நாளாச்சுண்ணா"
என்கிற  ரோட்டோர சிறுமியின் குரல்.

காகித பொட்டலத்தைப் பிரித்து
இரண்டு முறுக்குகளையும் எடுத்துக்கொண்டு
நடுவாசலில் அமர்ந்துகொண்டு 
நாய்க்கு பலிப்பு காட்டியபடி 
தின்கிறதுகுழந்தை.

மனசு நிறைந்து 
மகிழ்ச்சி உதட்டில் பூக்கும்போது 
தற்செயலாய் வந்து போனது,
"இந்த நாளும் கடந்துபோனால் 
மூணு நாள் ஆகிப்போகும் அந்தச் சிறுமிக்கு"
என்கிற  நினைப்பு
அப்படியே அர்த்தமற்றுப் போகிறது 
என் அன்பு.

சொந்த செலவில் சூனியம்

எந்த படம் வந்தாலும் வெள்ளிக்கிழமைகளில் அந்த படங்களைத் தவறவிட்டதே கிடையாது “நாங்கள்“. இந்த நாங்கள் என்பது ஒரு கூட்டணி. எதாவது ஒரு மொக்கைப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது “நாங்களில்யாரவது ஒருத்தன் இப்படி ஆரம்பிப்பான். டேய், மாப்ள. இனி கொஞ்சம் வெயிட் பண்ணி படம் பார்க்கலாம்டா.... முடியலை கொலையா கொல்றானுங்க...கடைசியா ஒருத்தன் இப்படி முடிப்பான் “நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம், நமக்கு மட்டும் ஏன் இப்படின்னு.

ஆனா எல்லாருக்குமே தெரியும் நாங்க என்ன பாவம், பண்ணோம், பண்றோம், பன்ணப்போறோம்ன்னு. வெள்ளிக்கிழமைகளின் காலையிலேயே கேபிள்சங்கர் மாதிரியான புண்ணியவான்களின் விமர்சனங்களை படித்தவர்களோ, எங்களைப்போன்றே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டவர்களோ எங்கள் மீதிருக்கும் மிகைப்பட்ட அன்பின் காரணமாக(?) எவ்வளவோ எடுத்துச் சொல்லுவார்கள். “போன படமாவது பரவாயில்லை, வெறும் கொலை மட்டும்தான் பண்ணாங்க, இந்த படத்துல கொடுமை படுத்தி கொலை பண்ணுறானுகடா, படம் மரண மொக்கைஅப்படின்னு எச்சரிக்கை கலந்த அறிவுரை சொல்வார்கள். 

ஊகும்... அதெல்லாம் எங்க மண்டையில ஏறியதே கிடையாது. டிக்கெட் செலவு, இடைவேளியில் பாப்கார்ன் உட்பட்ட நொறுகல்கள், போக வர பெட்ரொல் செலவு, இரவு காட்சி என்பதால், சப்பாடு,  இத்யாதி, இத்யாதி..... என அந்த  படத்தைப் பார்ப்பதற்கு ஒரு 500-600 ரூபாயை செலவு செய்துவிட்டு, அடுத்த நாள் காலைவரை கல் உடைப்பவனுக்கு மண்டையை வாடகைக்கு கொடுத்துவிட்டு, காலையில் அனாசின் மாத்திரைப் பொட்டுக்கொண்டு அட்வைஸ் பண்ணவன்கிட்ட சொல்லுவோம், “ஆமாண்டா மாப்ள, படம் மொக்கைதான்”, 

இது பாவம்தானங்க..... பாவம்ன்னு தெரிஞ்சும் ஏண்டா இதப்பண்றேன்னு கேட்குறிங்களா?

       எல்லா விசயத்திலும் எனக்கு ஒரு வெல்விஷரா, காட்பாதர் மாதிரி இருக்கிற இளங்கோவன் சார், செல்வராஜ் சார் இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் நான் செய்ற ஒரே பிரதி உதவி, இதுதான். சனிக்கிழமை காலைகளில் அவர்கள் போன் பண்ணி என்ன முரளி “என்ன படம் பார்க்கலாம்ன்னுகேட்கும்போது, எந்த படமும் வேண்டாம் சார், ஸ்டார் மூவிஸ்ல இன்னைக்கு கேஸ்ட் அவே  பொடறான் முடிஞ்சா அதைப்பாருங்கன்னு, அவங்களுக்கு ஒரு நல்ல வழியை காமிக்கவாவது, தெரிஞ்சே இந்த பாவத்தை செய்துட்டு வ்ரேன். எனக்கு இவங்க ரெண்டுபேர், அந்த மாதிரி “நாங்கள்“-ல ஒவ்வொருத்தருக்கும் சில பல ஆட்கள் இருப்பார்கள், அவர்களின் நலம் கருதி ஒரு பொதுத்தொண்டாகவே இதை செய்து வருகிறோம்.

       இப்படி நல்லா? போயிட்டிருந்த எங்க வாழ்க்கையில யார் கண்ணுபட்டதோ தெரியலை, ஒருத்தன் சொந்த ஊருக்கு போயிட்டான், இன்னொருத்தன் வேற ஒரு ஊருக்கு வேலைக்கு போயிட்டான், இன்னொருத்தன் மீள முடியாத தண்டனையாம் கல்யாணம் பண்ணிகிட்டாச்சு.. இன்னும் சிலர் விட்டாபோதும், பொழச்சிக்கலாம்ன்னு ஓடிட்டானுக... எது எப்படியோ முடிஞ்சா இன்னொரு “நாங்கள்“ கூட்டணி அமைப்பேன், அல்லது தனியாகவாவது என் பணியை தொடர்ந்து செய்வேன்.

       இத்தனை பில்டப் எதுக்குன்னா, அப்படி சமீபத்தில் இந்த திருப்பணியில் ஒரு உச்சகட்டமாய் கடந்த வெள்ளி, சனி இரண்டு நாட்களிலும் இரண்டு படங்களைப் பார்த்தோம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............

ஒண்ணு EXPANDABLES இன்னொண்ணு வம்சம். 

சில்வர்ஸ்டார் ஸ்டலோன், அர்னால்ட் இவங்களைப் பற்றிய ஒரு நல்ல பிம்பம் மனசுக்குள்ள இருக்குறவங்க இந்த படத்தை தயவு செய்து பார்த்திடாதிங்க, ரெண்டு கிழட்டு சிங்கமும் பாவமா இருக்கு படத்துல, அதுலயும் அர்னால்டை கூட சகிச்சிக்கலாம் ஏன்னா படத்துல எங்கயும் தன் உடலை, உடல் அழகை காட்ட முயற்ச்சிக்க வில்லை . ஆனா இந்த ஸ்டலோன், அடடடா... சிக்ஸ் பேக்கெல்லாம் காட்டுறேன்னுட்டு... தாங்க முடியலை. படத்துல பாதி ஸ்டண்ட்டு அனிமேஷன் மாதிரி இருக்கு, எதோ வீடியோ கேம் பாக்குற மாதிரி. கதையென்னன்னெலாம் கேள்வி கேட்டு மறுபடியும் டென்ஷன் ஆக்கிடாதிங்க.

அப்புறம் வம்சம்.. ஒரு நல்ல மவுத் டாக் இருக்கே, அதுவும் பசங்க பாண்டிராஜ் பசமாச்சேன்னு போனேன். அப்படியே ஒரு கிராமத்து திருவிழாவுக்குள்ள போன ஒரு பீலிங். என்னா நேட்டிவிட்டி, வட்டார வழக்கோடு வசனங்கள், இயல்பான ஜெய்பிரகாஷின் நடிப்பு, கேமிரா அப்படி பாராட்ட நிறைய இருந்தாலும் எனக்கு சத்தியமா புடிக்கலை. குறிப்பா அந்த கிராமிய திருவிழாவில் போடப்படும் பிட் பாடல்கள். படத்துல அதை மட்டும் தனியா தொகுத்தா 40 நிமிஷத்துக்கும் மேல வரும்போல.. அப்பப்பா என்னா சவுண்டு. நொந்து போற அளவுக்கு சவுண்ட குடுக்குறாங்க. திருவிழா பாக்கனும்ன்னா திருவிழாவுக்கே போயிக்குங்க, வம்சத்துக்கு வேண்டாம்ங்கிறதுதான் என் எண்ணம். படத்துல திருவிழாவில் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவருக்கு முதல் மரியாதை செய்வாங்க, என்னோட முதல் மரியாதை “எப்பாடு பட்டேனும் இப்படம் பார்பவருக்குதான். அடுத்தமுறையாவது பசங்க மாதிரியான ஒரு நல்ல பேமிலி எண்டர்டெய்னரைக் கொடுக்க பாண்டிராஜ் அவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்.

இதில் முதல் படத்தைப்பற்றி அனேகமாக அனைவரும் ஒரே பார்வைதான் கொண்டுள்ளனர். இரண்டாவது படத்தைப் பற்றிய நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்,  இது என் தனிப்பட்ட பார்வைதான், இது யாரோடும் ஒத்துப்போக வேண்டிய நிர்பந்தம் கிடையாது. ஆக விருப்பப்பட்டவர்கள் பாருங்கள், பார்த்துவிட்டு மாற்றுக்கருத்துக்கள் இருந்தால் பேசலாம். பின்னூட்டத்தில்......

இதர: வம்சம் படத்தில் பாடல்கள் எழுதியிருக்கும் ஏக்நாத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

            இரண்டு வருடங்களுக்கு முன், நண்பன் மது ஒரு புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். அது ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ எழுதிய சிறுகதை தொகுப்பின் தமிழாக்கம். மொழிபெயர்ப்பு . திரு. எம்.சிவசுப்ரமணியன் (எம்.எஸ்).


            முதலில் ஆசிரியரைப் பற்றிய ஒரு அறிமுகம். ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ, இவரைப்பற்றி எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாதெனினும், அவருடைய குறிப்பிலிருந்து சில விஷயங்கள். பொதுவாக என் எழுத்துக்கள் அதீத கற்பனையும் ஹாஸ்யமும் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள், சில சமயம் சற்று விகாரமாக இருந்தாலும் உண்மையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் இதுவரை இவரது  சிறுகதைகள் ஆங்கிலம், போர்த்துகீஸ், இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், பின்னிஸ், ஹங்கேரியன், போலிஷ், வியட்நாமிஸ் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.எஸ் அவர்களின் மூலமாக தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

     எம்.எஸ், இவர் தொடர்ச்சியாக நிறைய மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். இந்த சிறுகதைத் தொகுப்பு அதன் மூலத்திலிருந்து அன்றி ஆங்கில மொழியாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன் நான் படித்த இவரது புத்தகம் எர்னெஸ்ட் ஹெமிங்வெயின் “கிழவனும் கடலும்”.  அதில், எழுத்தின் ஆழம் கிழவன் கண்ணிலும் கடலிலும் தெரியும் அளவிற்கு அப்படியே ஹெமிங்வெயின் உயிர்ப்பைக் கொடுத்திருப்பார். இந்த புத்தகத்திலும் அப்படியே, தெருப்பெயர், உணவுப்பொருட்கள், அவற்றின் பெயர், தாவரமாகட்டும், எதிலுமே சரி நாம் அறிந்திராத பெயர்கள் ஒரு அன்னியத்தை கொடுத்தாலும் ஒருவித ஈர்ப்புடன் படிக்க முடிகிறது என்றால் அது எம்.எஸ்-ஸின் எழுத்துதான்.

            இதற்குமுன் இப்படிப்பட்ட சிறுகதைகளை சத்தியமாக வாசித்தது ஏன் கேள்விப்பட்டது கூட கிடையாது. ஏனெனில் சிறுகதை என்பதற்கான எல்லா அடையாளங்களையும் துடைத்து விட்டு நிற்கிறது, இந்த கதைகள். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிற அடிப்படை விதிகள் கூட கிடையாது. பொதுவாக என் ரசனை அன்பும், காதலும், மென்சோகமும், அதீத மகிழ்ச்சி சார்ந்த விடயங்களை நோக்கியே நீண்டிருக்கும். சிறுகதைகள் மற்றும் நாவல் வாசிப்பிலும் சரி, நானாக தேடி வாங்கிய எல்லாப் புத்தகங்களும் இப்படிப்பட்டவையே. சோதனை முயற்சியாக கூட மாறுபட்ட கதைக் களங்களைத் தேடியது இல்லை. அதையும் தாண்டி சில மாறுபட்ட திரைப்படங்கள், நாவல்களை வாசித்திருக்கிறேன் என்றால் அது, இது போன்ற நண்பர்களின் பரிந்துரையின் பேரில் தான் இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமன வாசிப்பனுபவத்தை கொடுத்ததுதான் இந்த ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை.

            பொதுவாக படிக்கவெனில் நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் நான் இந்த புத்தகத்தை ஒரே மிடறில் குடித்துவிட்டேன். காரணம் ஒருமுறை எஸ்.ரா. அவர்கள் அவரது வலைதளத்தில் ஒரு குறும்படத்தை அறிமுகம் செய்திருந்தார். அது ஒருவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்  என்பதுதான். பெயரே வித்தியாசமாக இருந்ததால் உடனே அந்த படத்தைத் தேடிப்பார்த்தேன். இந்த புத்தகத்தில் முதல் கதையின் பெயரே  “அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்”  என்பதுதான். படித்தால் அதே கதை. இந்த கதையைத்தான் ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும்போதிருந்ததைவிட ஒரு புரிதல் உணர்வு படிக்கும்போது கிடைத்தது. 

            தொடர்ந்து குடையால் அடிக்கும் ஒருவன், அதை ஒருகட்டத்தில் ஏற்றுக்கொள்ள பழகி தனக்கு தேவைப்படும்போது அந்த குடையடி இல்லாமல் உயிர் வாழ முடியுமாவென நினைக்கும் இவன், தொடர்ச்சியாய் ரொட்டிக்குள் மோதிரங்களை பெறும் பிச்சைக்காரன், ஹார்ன் இசைப்பவர், தண்டனைகள் அளிக்கும் ஆட்டுக்குட்டிகள், வீடு முழுவதும் பரந்து வளரும் ஆர்ட்டிசோக் செடி, முக்கியமாக கொசுவின் தாக்குதலுக்கு பயந்து தன் முடிவை நோக்கி காத்திருக்கும் மனிதன் என மிக அதிசயமான மனிதர்களும், அவர்களின் பின்புலங்களும், வித்தியாசமான நிகழ்வுகளும் இவரது கதை முழுவதும் விரவிக்கிடக்கிறது.

      அதை அப்படியே புரிந்துகொள்வதில் வெறும் ஹாஸ்யம் மட்டுமே மிஞ்சும். ஆனால் அதைதவிர்த்து அவற்றை ஒரு குறியீடாக நனது வாழ்வில் பொருத்திப்பார்த்தால் மனித மனதின் போராட்டங்களும், அவஸ்தைகளும் புலப்படும். ஒரு கொசு எடுக்கப்போகும் முடிவிற்க்காக ஒருவன் பயந்து போகிறான் என்றால் வெறும் சிரிப்புதான் வரும், அல்லது ஒரு அற்ப விஷயமாக்த்தான் தோன்றும். ஆனால் நம் வாழ்வில் ஒரு கொசுவின் முக்கியத்துவமே கொண்ட ஒருவன் நம்மை அவன் பிடியில் வைத்திருப்பதாய் யோசித்துப்பார்த்தால், அவன் பயமும், அவஸ்தையும் புரியக்கூடும். அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே என்னை சில சம்பவங்களோடு பொருத்திப் பார்க்க வைக்கிறது. அப்படி பார்க்கும்போது ஏற்ப்படுகிற உணர்வு ஒரு புதுவிதமாகவே இருக்கிறது. நிச்சயம் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம், இது.

      இன்னும் இந்தத் தொகுப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஒவ்வொரு கதைக்கும் நான்கு பத்திகளாவது அல்லது தனித்தனியாய் ஒரு பதிவே தேவைப்படலாம். இந்தப்பதிவின் நீளம் கருதி, புத்தகத்தின் மீதான சுவாரஸ்யம் கருதியும் இதோடு முடிக்கிறேன். இன்னொன்று, இந்த தொகுப்பிலிருந்து ஒரு கதை, எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்றைத் தனியாக ஒரு பதிவாகவே எழுதலாமென இருக்கிறேன். ஒரே ஒரு நிபந்தனை, யாராவது இந்த தொகுப்பை படித்து அதைப் பற்றி எழுதவில்லை என்றால் நான் அதை எழுதலாமென இருக்கிறேன். புத்தகம் நானே தருகிறேன். ம்ம் யாராவது தயாரா?

மிக நீண்ட நாட்களுக்கு முன் படித்த இதை வெகு சமீபமாய் நினைவிற் கொணர்ந்த வெயிலானுக்கும், நல்ல புத்தகத்தை கொடுத்து படிக்கச்செய்த நண்பன் மதுவிற்கும் என் நன்றிகள்.

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன்........... ஒரு தொடர்பதிவு1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
            அன்பேசிவம்

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
            என் பெயர் முரளிகுமார், வலைப்பதிவிற்காக அன்பேசிவம் என்கிற பெயரில் எழுதுகிறேன். கடிதங்களிலோ மின்னஞ்சல்களிலோ கையெழுத்திடும் முன்பு அன்பேசிவம் என்று எழுதி கையெழுத்திடும் பழக்கம் பல வருடங்களாகவே எனக்கு இருந்து வரும் பழக்கம்தான். (குறிப்பு: இது அன்பேசிவம் படம் வருவதற்கு முன்பிருந்தே, தில் படம் பார்த்துட்டு ஜிம்முக்கு போகிற பழக்கமில்லை இது. :-)) ஆக வலைப்பதிவு ஆரம்பித்ததும் பெயர் ஒன்று வைக்க வேண்டும் என்றதும் என்னுடைய ஒரே சாய்ஸ் “அன்பேசிவம்”.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
     இதை பெரிய நிகழ்வாக சொல்ல எதுவுமில்லை, ஆரம்ப காலங்களில் என்னுடைய சொந்தமான நாட்குறிப்பு போல எழுத் தொடங்கியதுதான். தொடர்ந்து வந்த ஊக்கமும், நட்புமே இன்னமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
  
4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
            தனியா எதுவும் செய்யவில்லை, தொடர்ந்து இயங்குவதும், இலகுவான நடையும் நிறைய பேரைச் சென்றடையும். அதுதான் பிரபலம்ன்னு நினைக்கிறேன்.
     மொழி படத்தில் ஒரு காட்சி, ஜோதிகா, ப்ரித்விராஜிடம் நீ கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணு எப்படியிருக்கனும்ன்னு ஆசைப்படுறன்னு கேட்பாங்க, அதுக்கு ப்ரித்வி “நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும், தைரியமான பொண்ணா இருக்கனும், எதையும் சுயமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும்ன்னு சொல்வார், மறுபடியும் அப்ப அழகா இருக்கனும்ங்கிறது அவசியமில்லையான்னு கேட்பாங்க. அதுக்கு “நான் சொல்ற இந்த மூணும் இருந்தா அந்த பொண்ணு நிச்சயம் அழகாத்தான் இருப்பான்னு சொல்வார்.
     அது மாதிரி யதார்த்தமான எழுத்து, சிறுதேனும் சுவாரஸ்யம், சுயமாக சிந்தித்து தொடர்ந்து எழுதுவது போன்ற அடிப்படை தகுதிகள் நிச்சயம் பிரலம் என்கிற அடைமொழிக்கு வழிவகுக்கும்.

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
     ஆம், சினிமா அறிமுகம், புத்தக அறிமுகம் தவிர்த்து மற்ற அனைத்து விடயங்களுமே என சொந்த மற்றும் சார்ந்த விடயங்களே. ஏனெனில் சிந்தித்து கற்பனையான நிகழ்வுகளை சுவைபட எழுதுவது சிரமம். என்னைப் பொருத்தவரை. ஆகவே என் சார்ந்த சுவையான நிகழ்வுகளையே தொடர்ந்து சில கற்பனை கூட்டல்களோடு எழுதிவருகிறேன்.
     விளைவு : இதுக்கு என்ன பதில் சொல்வது. எல்லாம் நல்லதுக்குத்தான்.
  
6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
     நிச்சயமாக பொழுதுபோக்கிற்காக இல்லை, ஏனெனில் சிலபல நேரங்களில் தவறு என்று தெரிந்திருந்தும் வேலையை விட்டுவிட்டு எழுதியிருக்கிறேன். ஆக நிச்சயம் இது ஒரு பொழுதுபோக்கு இல்லை. பதிவெழுதுவதன் மூலம் சம்பாதிக்க எழுதவில்லை, ஆனால் சம்பாதிக்க முடிந்தால் அதுவும் மகிழ்சியே.


7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
     இரண்டு பதிவுகள், ஒன்று அன்பேசிவம் மற்றொன்று புகைப்படம், இரண்டுமே தமிழில்தான்.

 8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
     கோபம், இதுவரை இல்லை, என்னைவிட நல்லா எழுதுற எல்லோரையும், எப்படி இப்படியெல்லாம் எழுதுறாங்கன்னு நிறைய முறை ஆச்சர்யங்களோடு பார்த்திருக்கிறேன்.
     பொறாமை, அது வண்டி வண்டியா இருக்கு. குறிப்பா சொல்லனும்ன்னா, இன்னைக்கி எழுத ஒண்ணுமில்லைன்னு ஒரு வரி எழுதினா, ஏன்?ன்னு கேட்டு ஒரு நூறு பின்னூட்டம் வருமே அப்போவெல்லாம் கேபிள், ஆதிண்ணா, கார்க்கி, பரிசல் இன்னும் இப்படி நிறைய பேர் மேல பொறாமையா இருக்கும். :-)


9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..
     முன்னமே சொன்னதுபோல ஒரு முறை அலுவல் நிமித்தமாய் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிய போது அதில் என் கையொப்பதின் மேலே என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்திருந்தேன். அதை பார்த்து, படித்து என்னை நேரிலும் சந்தித்து, பரவாயில்லையே முரளி நிறைய எழுதியிருக்கிங்க, உங்க எழுத்துல ஒரு மினிமம் ஸ்டேண்டர்ட் இருக்கு. தொடர்ந்து எழுதி வருவதன் முதிர்ச்சி எழுத்தில் தெரிகிறதுஎன்று பாராட்டிவிட்டு சென்றார். அவர்தான் என்னை முதன்முதலில் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர், இன்றளவும் தொடர்ந்து வாசித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டியும் வருகிறார்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
     கிடைக்கும் இடத்திலெல்லாம் தன்னை இட்டு நிரப்பிக்கொள்ளும் காற்றைப்போல, மனதில் இருக்கும் இடமெங்கும் அன்பை இட்டு நிறைக்க நினைக்கும், ஒரு சாதாரணமானவன்.
     

இது ஒரு தொடர்பதிவு, நண்பர் பாலாசியின் அழைப்பில் இதை எழுதியிருக்கிறேன், எத்தனை பேரை அழைக்கலாமென்று தெரியவில்லை, இவர்களின் பதிலை தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன், ஆகவே இதன் தொடர்ச்சியாய் நான் அழைக்கும் இருவர்.


நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். ஒரு தடவை பார்த்தா அவன் ப்ரெண்டு, ரெண்டாவது முறை பார்த்தா அவன் என்னோட பெஸ்ட் ப்ரெண்டு. இதுதான் என்னுடைய ப்ரெண்டாலஜி. இது ஒண்ணும் பெரிய விசயமில்லை, என்னைப் போலவேதான் என் தோழர்களும். இதுநாள் வரை எங்கும் எதற்காகவும் தயங்கியதில்லை, ஏன்னா என்னை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருக்கிறார்கள். இதுவும் எனக்கு மட்டுமல்ல நல்ல நண்பர்கள் அதிகம் கொண்ட எவரும், எவருக்கும் இதுவே நிதர்சனம். இதை ஒரு தினமாக கொண்டாட வேண்டியதில்லை என்றாலும் ஒருநாள் கொண்டாடும் தீபாவளியின் அழகை அனுபவிக்க கசக்குமா என்ன? ஹேப்பி ப்ரெண்ட்ஷிப் டே.. :-))


முத்தாய்ப்பாக இன்று நண்பர்கள் தினம், அதே நாளில் திருப்பூர் வலைதள நண்பர்கள் குழுவான 'சேர்தளம்' குறித்த ஒரு கட்டுரை இன்று தினமலரில் வெளியாகியிருக்கிறது. பகிர்தல் - மிகிழ்ச்சி - பெருக்கல்