ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை

            இரண்டு வருடங்களுக்கு முன், நண்பன் மது ஒரு புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். அது ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ எழுதிய சிறுகதை தொகுப்பின் தமிழாக்கம். மொழிபெயர்ப்பு . திரு. எம்.சிவசுப்ரமணியன் (எம்.எஸ்).


            முதலில் ஆசிரியரைப் பற்றிய ஒரு அறிமுகம். ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ, இவரைப்பற்றி எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாதெனினும், அவருடைய குறிப்பிலிருந்து சில விஷயங்கள். பொதுவாக என் எழுத்துக்கள் அதீத கற்பனையும் ஹாஸ்யமும் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள், சில சமயம் சற்று விகாரமாக இருந்தாலும் உண்மையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் இதுவரை இவரது  சிறுகதைகள் ஆங்கிலம், போர்த்துகீஸ், இத்தாலி, ஜெர்மன், பிரான்ஸ், பின்னிஸ், ஹங்கேரியன், போலிஷ், வியட்நாமிஸ் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.எஸ் அவர்களின் மூலமாக தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

     எம்.எஸ், இவர் தொடர்ச்சியாக நிறைய மொழிபெயர்ப்புகளை செய்து வருகிறார். இந்த சிறுகதைத் தொகுப்பு அதன் மூலத்திலிருந்து அன்றி ஆங்கில மொழியாக்கத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன் நான் படித்த இவரது புத்தகம் எர்னெஸ்ட் ஹெமிங்வெயின் “கிழவனும் கடலும்”.  அதில், எழுத்தின் ஆழம் கிழவன் கண்ணிலும் கடலிலும் தெரியும் அளவிற்கு அப்படியே ஹெமிங்வெயின் உயிர்ப்பைக் கொடுத்திருப்பார். இந்த புத்தகத்திலும் அப்படியே, தெருப்பெயர், உணவுப்பொருட்கள், அவற்றின் பெயர், தாவரமாகட்டும், எதிலுமே சரி நாம் அறிந்திராத பெயர்கள் ஒரு அன்னியத்தை கொடுத்தாலும் ஒருவித ஈர்ப்புடன் படிக்க முடிகிறது என்றால் அது எம்.எஸ்-ஸின் எழுத்துதான்.

            இதற்குமுன் இப்படிப்பட்ட சிறுகதைகளை சத்தியமாக வாசித்தது ஏன் கேள்விப்பட்டது கூட கிடையாது. ஏனெனில் சிறுகதை என்பதற்கான எல்லா அடையாளங்களையும் துடைத்து விட்டு நிற்கிறது, இந்த கதைகள். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிற அடிப்படை விதிகள் கூட கிடையாது. பொதுவாக என் ரசனை அன்பும், காதலும், மென்சோகமும், அதீத மகிழ்ச்சி சார்ந்த விடயங்களை நோக்கியே நீண்டிருக்கும். சிறுகதைகள் மற்றும் நாவல் வாசிப்பிலும் சரி, நானாக தேடி வாங்கிய எல்லாப் புத்தகங்களும் இப்படிப்பட்டவையே. சோதனை முயற்சியாக கூட மாறுபட்ட கதைக் களங்களைத் தேடியது இல்லை. அதையும் தாண்டி சில மாறுபட்ட திரைப்படங்கள், நாவல்களை வாசித்திருக்கிறேன் என்றால் அது, இது போன்ற நண்பர்களின் பரிந்துரையின் பேரில் தான் இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமன வாசிப்பனுபவத்தை கொடுத்ததுதான் இந்த ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை.

            பொதுவாக படிக்கவெனில் நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் நான் இந்த புத்தகத்தை ஒரே மிடறில் குடித்துவிட்டேன். காரணம் ஒருமுறை எஸ்.ரா. அவர்கள் அவரது வலைதளத்தில் ஒரு குறும்படத்தை அறிமுகம் செய்திருந்தார். அது ஒருவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்  என்பதுதான். பெயரே வித்தியாசமாக இருந்ததால் உடனே அந்த படத்தைத் தேடிப்பார்த்தேன். இந்த புத்தகத்தில் முதல் கதையின் பெயரே  “அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்”  என்பதுதான். படித்தால் அதே கதை. இந்த கதையைத்தான் ஒரு குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும்போதிருந்ததைவிட ஒரு புரிதல் உணர்வு படிக்கும்போது கிடைத்தது. 

            தொடர்ந்து குடையால் அடிக்கும் ஒருவன், அதை ஒருகட்டத்தில் ஏற்றுக்கொள்ள பழகி தனக்கு தேவைப்படும்போது அந்த குடையடி இல்லாமல் உயிர் வாழ முடியுமாவென நினைக்கும் இவன், தொடர்ச்சியாய் ரொட்டிக்குள் மோதிரங்களை பெறும் பிச்சைக்காரன், ஹார்ன் இசைப்பவர், தண்டனைகள் அளிக்கும் ஆட்டுக்குட்டிகள், வீடு முழுவதும் பரந்து வளரும் ஆர்ட்டிசோக் செடி, முக்கியமாக கொசுவின் தாக்குதலுக்கு பயந்து தன் முடிவை நோக்கி காத்திருக்கும் மனிதன் என மிக அதிசயமான மனிதர்களும், அவர்களின் பின்புலங்களும், வித்தியாசமான நிகழ்வுகளும் இவரது கதை முழுவதும் விரவிக்கிடக்கிறது.

      அதை அப்படியே புரிந்துகொள்வதில் வெறும் ஹாஸ்யம் மட்டுமே மிஞ்சும். ஆனால் அதைதவிர்த்து அவற்றை ஒரு குறியீடாக நனது வாழ்வில் பொருத்திப்பார்த்தால் மனித மனதின் போராட்டங்களும், அவஸ்தைகளும் புலப்படும். ஒரு கொசு எடுக்கப்போகும் முடிவிற்க்காக ஒருவன் பயந்து போகிறான் என்றால் வெறும் சிரிப்புதான் வரும், அல்லது ஒரு அற்ப விஷயமாக்த்தான் தோன்றும். ஆனால் நம் வாழ்வில் ஒரு கொசுவின் முக்கியத்துவமே கொண்ட ஒருவன் நம்மை அவன் பிடியில் வைத்திருப்பதாய் யோசித்துப்பார்த்தால், அவன் பயமும், அவஸ்தையும் புரியக்கூடும். அப்படி இந்தத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே என்னை சில சம்பவங்களோடு பொருத்திப் பார்க்க வைக்கிறது. அப்படி பார்க்கும்போது ஏற்ப்படுகிற உணர்வு ஒரு புதுவிதமாகவே இருக்கிறது. நிச்சயம் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவம், இது.

      இன்னும் இந்தத் தொகுப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஒவ்வொரு கதைக்கும் நான்கு பத்திகளாவது அல்லது தனித்தனியாய் ஒரு பதிவே தேவைப்படலாம். இந்தப்பதிவின் நீளம் கருதி, புத்தகத்தின் மீதான சுவாரஸ்யம் கருதியும் இதோடு முடிக்கிறேன். இன்னொன்று, இந்த தொகுப்பிலிருந்து ஒரு கதை, எனக்கு மிகவும் பிடித்த கதை ஒன்றைத் தனியாக ஒரு பதிவாகவே எழுதலாமென இருக்கிறேன். ஒரே ஒரு நிபந்தனை, யாராவது இந்த தொகுப்பை படித்து அதைப் பற்றி எழுதவில்லை என்றால் நான் அதை எழுதலாமென இருக்கிறேன். புத்தகம் நானே தருகிறேன். ம்ம் யாராவது தயாரா?

மிக நீண்ட நாட்களுக்கு முன் படித்த இதை வெகு சமீபமாய் நினைவிற் கொணர்ந்த வெயிலானுக்கும், நல்ல புத்தகத்தை கொடுத்து படிக்கச்செய்த நண்பன் மதுவிற்கும் என் நன்றிகள்.

22 கருத்துரைகள்:

கார்த்திகைப் பாண்டியன் said...

துண்டு போட்டு இடம் பிடிச்சுக்கிறேன் சாமியோவ்.. என்ன பதிப்பகம் போன்ற தகவல்களை இணையுங்க தல..

கோபிநாத் said...

நோட் பண்ணிக்கிட்டேன் சாமியோவ் ;)))

தல நீங்க அடுத்த கட்டத்துக்கு போக ரெடியாகிட்டிங்க போல ;))

விஜய் மகேந்திரன் said...

நீங்கள் தொடர்த்து இலக்கிய பிரதிகள் குறித்து எழுதிவருவது மகிழ்ச்சி
.ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ, உலகின் மிகமுக்கிய சிறுகதை எழுத்தாளர்.மெல்லிய அங்கதமும் கூர்மையான மன அவதானிப்புகளும் நிரம்பியவை.அவரது கதைகள். எளிய வாசகங்களால் அற்புதமான மொழியை உருவாக்குபவர்...அதை எம்.எஸ் ம்ம்ம் மிக துல்லியமாக மொழிப்பெயர்த்து தமிழுக்கு கொடுத்துள்ளார்...
ஹோர்ன் வாசிப்பவர் எனக்கு தொகுப்பில் மிகவும் பிடித்த கதை..குடையால் அடிப்பவன் கதையின் இறுதி வாசகங்கள் கவித்துவத்தின் உச்சம்.நான் இது பற்றி விரிவாக எழுதலாம் என்று இருந்தேன்...நல்ல விசயங்களை யார் செய்தால் என்ன...வாழ்த்துக்கள்.தனியாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு எழுதுங்கள் அது அந்த படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாகவே இருக்கும்..முக்கியமாக சிறுகதைகளுக்கு இருக்கும் அத்தனை விதிகளையும் புறம் தள்ளி விட்டு வேறு உலகத்தினுள் செல்பவை ஸோரண்டினோவின் கதைகள் .காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளதையும் குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நலம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திகைப்பாண்டியன்
தல தேங்க்ஸ், புத்தகம் வீட்டில் இருக்கு, நாளை பின்னூட்டத்தில் மற்ற தகவல்களை இணைத்து விடுகிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபிநாத்
கோபி, அடுத்தகட்டம்ன்னா? கலாய்க்கிறிங்களோ?

முரளிகுமார் பத்மநாபன் said...

@விஜய் மகேந்திரன்
நன்றி நண்பரே! பாருங்களேன் நான் வேறு யாரவது ஒரு கதையையாவது எழ்ஹுத வேண்டுமென ஆசைப்படுகிறேன். நீங்களே துவக்கி வையுங்களேன்.

//தனியாக ஒரு கதையை எடுத்துக்கொண்டு எழுதுங்கள் அது அந்த படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாகவே இருக்கும்.//

இன்னொன்று எது எப்படியோ என்னை கவர்ந்த கதை ஒன்றை தனியாக எழுதுவது நிச்சயம். :-))

நன்றி நண்பரே!

விஜய் மகேந்திரன் said...

கண்டிப்பாக செய்வோம் நண்பரே....எழுதுகிறேன்..

தமிழ் said...

இத்தொகுப்பிலுள்ள‌ 11 சிறுகதைகளும் கற்பனை கலந்த யதார்த்தமான சொல்முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.. எம். சிவசுப்பிர மணியத்தின் சிதைவில்லாத மொழிபெயர்ப்பு கூடுதல் பலம்.. ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களுடன் ஒரு நெருக்கமான உறவை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார்..

நோபல் பரிசு பெற்ற 'கடலும் கிழவனும்' எனக்குப் பிடித்தமான நாவல்(நீண்ட‌சிறுகதை).

மோகன் குமார் said...

நல்ல அறிமுகம். வழக்கம் போல உங்கள் எழுத்து அருமை

ஆதவா said...

இதுவரை நான் எந்த மொழிபெயர்ப்பும் படித்ததேயில்லை (அன்னா கரினீனா தவிர) உங்கள் பதிவு, பல்நாட்டு சாஸ்திரங்களின் மதிப்பை எடுத்துக் காட்டுகிறது.

SIVA said...

முர்ளீக்கு, இந்த எம்.எஸ் தான் சுரா.வின் நீண்ட கால நண்பர். இவரைப் பற்றி நாஞ்சில் நாடனும், ஜெயமோகனும் ஆங்காங்கே சில இடங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இவர் சமீபமாகத்தான் இந்த மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இப்போது புரிகிறதா!!! சுரா என்கிற ஆளுமையைச் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லோருமே மிகுந்த கவனிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் ஜே.ஜே. சில குறிப்புக்களையும் படீத்தீர்களானால் நன்றாக இருக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

//எம்.சிவசுப்பிரமணியத்தின் சிதைவில்லாத மொழிபெயர்ப்பு கூடுதல் பலம்.. ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களுடன் ஒரு நெருக்கமான உறவை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார்..
நோபல் பரிசு பெற்ற 'கடலும் கிழவனும்' எனக்குப் பிடித்தமான நாவல்//

நன்றி தமிழ், நீங்க கூட ஏதாவது ஒரு கதையைப் பற்றி எழுதலாமே? :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ மோகன் குமார்
நன்றி தலைவரே!

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
தேங்க்ஸ் ஆதவா, நேரம் கிடைக்கும்போது கூப்பிடுங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவா,
//முர்ளீக்கு....//
முதலில் முர்ளிக்கு ஒரு தேங்க்ஸ்

//சுரா எனற ஆளுமையைச் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லோருமே மிகுந்த கவனிப்பிற்குள்ளானவர்களாக இருக்கிறார்கள். எனவே நீங்கள் ஜே.ஜே. சில குறிப்புக்களையும் படீத்தீர்களானால் நன்றாக இருக்கும்.//

அவசியம் படிக்கிறேன், சிவா. ஒண்ணு தெரியுமா? நான் அந்த புத்தகத்தின் பாலித்தீன் உறையை ப்ரித்துவிட்டேன். முதல் அடி எடுத்து வைத்துவிட்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பயணம் தொடர்க முரளிகுமார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதிண்ணா,
ரொம்ப சந்தோசமா இருக்கு. :-))

veeralakshmi said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

எம்.எம்.அப்துல்லா said...

பாருங்க..உங்க நண்பர்களெல்லாம் உங்களுக்கு நல்ல புத்தகம் குடுத்து படிக்கச் சொல்றாங்க! நீங்க என்னைக்காவது எனக்கு இப்படி குடுத்துருக்கீங்களா?!?

தமிழ் said...

நேரமும், மனமும் வாய்த்தால் எழுதுகிறேன் :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்துல்லா
ஆமான்னா நீங்க சொல்றது சரிதான், பாருங்க எனக்கு கூட அப்துல்லான்னு ஒருத்தர் பிரமிள் கவிதைகள் புத்தகம் கொடுத்து வாசிக்க சொன்னார், என்ன எவ்ளோ படிச்சாலும் புரியத்தான் மாட்டேங்குது என் மண்டைக்கு.... நீங்க வேணா அந்த புத்தகம் தரை பண்ணுங்களேன்.. :-))

முரளிகுமார் பத்மநாபன் said...

ஒ தாராளமா நிறமும் மனசும் சம்மதிக்கும்போது எழுதுங்கள், நன்றி தமிழ்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.