உடான் - விமானம் - காத்தாடி - ஒரு கனவு

சமீபத்தில் பார்த்த மிகவும் பாதித்த ஒரு படம் உடான், ஹிந்தி படம். மிகப்பெரிய வியாபர இலக்கு கொண்ட பாலிவுட்டில் இதுபோன்ற திரைப்படங்கள் வரவேற்பிற்குடையது. இயக்குனர் விக்ரமாதித்யா மொட்வானி, இவரோடு இணைந்து திரைக்கதை எழுதியிருப்பவர் நம்ம சத்யா புகழ் அனுராக் காஷ்யப். இவர்கள் இருவரும் இதற்கு முன்பே தேவ் டி-யில் இணைந்து வேலை செய்திருகின்றனர். அதே வெற்றிக் கூட்டணிதான் இதிலும் இணைந்திருக்கின்றனர், வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

ஒரு சாதாரண சம்பவத்தையோ, கதையையோ சுவைபட சொல்லும் இவர்களது கதை சொல்லும்முறையே அலாதியானது. தேவ் டி என்பது ஏற்கனவே கேட்டும் பார்த்தும் சலித்த தேவதாஸ் கதைதான், ஆனால் விக்ரமாதித்யா+அனுராகின் கதை சொல்லும் யுக்கிதியாலேயே படம் சுவரஸ்யாமாக இருந்தது. அந்த படத்தை அனுராக் இயக்கியிருப்பார்.

இவ்வளவு ஸ்லோவான ஒரு கதையை இவ்வளவு ரசனையாக சொல்வது அவ்வளவு எளிதல்ல. வேகமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களைப் பார்க்கும்போது அதிலுள்ள லாஜிக் ஓட்டைகளை நின்று கவனிக்க முடியாதபடி திரைக்கதை இருக்கும், படம் பார்த்து முடித்தபின் குறைகள் தெரியும், ஆனாலும் “அடடா, நம்மை யோசிக்கவே விடலையே” என்று எவ்வளவு மொக்கையான திரைக்கதைகளும் பேர்பெற்றும் விடும். ஆனால் இதுபோன்ற கதைகளை சொல்லும்போது பார்வையாளர்கள் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைகளை கண்டுபிடித்துவிடக் கூடும். ஆக கூடுதல் கவனம் இதுபோன்ற கதைகளுக்கு மிக அவசியம் தேவை. பொதுவாக வேலையெல்லாம் முடித்து இரவு வீடு சென்ற பின்னரே படங்கள் பார்க்க முடிகிறது, ஒரு படத்தை இரண்டு மூன்று நாட்கள் பார்த்து முடிப்பதுதான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தை ஒரே மூச்சில் கடைசி வரை பார்க்கவைத்துவிட்டனர். காரணம் அதன் திரைக்கதை, நிறைய பில்டப் இருக்கிறதே என்று யோசிக்கவேண்டாம். அத்தனைக்கும் தகுதியான படமே இது.

உடான் என்றால் விமானம் என்று பொருள், ஆனால் நாட்டுப்புறக் கதைகளில் உடான் என்ற சொல்லை விமானம் மட்டுமின்றி சிறுவர்களின் கனவாகவும் அதன் குறீயீடாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனாலேயே இந்த தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமானதாயிருக்கிறது.

ரோகன், இந்தியாவிலேயே மிகவும் பணக்காரப் பள்ளிகளில் ஒன்றான சிம்லாவிலுள்ள ஒரு பள்ளியில் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் ஒரு மாணவன். எழுத்தாளனாக வேண்டும் என்கிற கனவோடு வாழ்கிறான். பள்ளியில் நடக்கும் ஒரு தவறான நடவடிக்கைக்காக நண்பர்களோடு பிடிபடுகிறான். இது அவர்களுக்கு முதல்முறை அல்ல என்பதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. தங்களை அழைத்துச்செல்ல வரும் பெற்றோர்களை சந்திப்பதில் நால்வருக்குமே சில பிரச்சனைகள் உள்ளது. ரோகனுக்கு, பள்ளியில் சேர்த்துவிட்டதிலிருந்து எட்டுவருடங்களாக ஒருமுறைகூட வந்து பார்க்காத அப்பாவிடம் போகப்போகிறோம் என்பதே பிரச்சனையாக இருக்கிறது.

ரோகனின் அப்பா ஜிம்மி, ஜாம்செட்பூரில் ஒரு இரும்பு பொருட்கள் செய்யும் பேக்டரி வைத்திருக்கிறார். ஒரு ராணுவக்கட்டுப்பாட்டுடன் பிள்ளைகளை வளர்க்க நினைக்கும் கோபக்காரர், முரடன். வீட்டிற்கு திரும்பும் ரோகனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது வீட்டுச்சூழல். வீடு என்கிற பெயரில் ஒரு சிறைச்சாலையை உணர்கிறான். மேலும் வீட்டில் இன்னொரு அடிமையாக ஆறு வயதில் தனக்கொரு தம்பி இருப்பதையும் பார்க்கிறான். அவன் பெயர் அர்ஜுன். “உன் அம்மா இறந்ததும் நான் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டேன், ஆனால் எனக்கும் அவளுக்கும் சரிவரவில்லை, நாங்கள் பிரிந்துவிட்டோம், இவன் என் மகன், இவன் உன் தம்பி” என்கிறார் அப்பா.

தன்னுடைய அறையில் புதிதாக ரோகனைப் பார்க்கிறான் அர்ஜுன், இவர்கள் இருவரின் சந்திப்பும் உரையாடல்களும் கவிதை. பதினெட்டுவயது பையனுக்கும் ஆறுவயது சிறுவனுக்கும் இடையே மெல்ல பாசம் வளரும் காட்சிகள் அருமை. இதுபோன்ற ஒரு உறவுசிக்கல் கொண்ட இருவருக்கிடையேயான மனநிலைகளை வேறெந்த படத்திலும் பார்த்ததில்லை, மிகவும் புதிதாக இருக்கிறது.

ஜிம்மியின் சகோதரன், அதாவது ரோகனின் சித்தப்பா அதே ஊரில் சில தெருக்கள் தள்ளி வசிக்கிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. ரோகன் வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர், அவனது சித்தப்பாவும் சித்தியும். ஒரு நாள் இரவு உணவின்போது “அப்புறம் ரோகன் பெரிய மனுஷனாயிட்ட, அடுத்து என்ன பண்ணப்போற?” என்கிறார் சித்தப்பா. நான் இலக்கியம் படிக்கப்போகிறேன், எனக்கு எழுத்தாளாரக வேண்டும் என்பது ஆசை என்கிறான். அதற்கு “இல்லை, இவன் இன்ஜினியரிங் படிக்கப்போகிறான், என்னுடைய பேக்டரியில் வேலை செய்துகொண்டே” என்கிறார் ஜிம்மி. “இல்லைண்ணா, அவன் எழுதனும்ன்னு ஆசைப்படுறானே, எத்தனை பேருக்கு இப்படி ஒரு ஆசை வரும் சொல்லு?” என்கிறார் சித்தப்பா.

அதற்கு ஜிம்மி “என் அப்பா என்னிடம் இப்படியெல்லாம் கேடதில்லையே, நாமென்ன கெட்டாபோயிட்டோம், எவ்வளவு பெரிய பள்ளி அது அங்க இங்க கெஞ்சி சேர்த்துவிட்டா பேரைக்கெடுத்துட்டு வந்தி நிக்கிறான், இப்பக்கூட ஒரு பெரிய இன்ஜினியரிங் காலேஜ்ல, கெஞ்சிக்கூத்தாடி இவனுக்கு சீட் வாங்கியிருக்கேன், இவனுக்கு எழுதனுமாம், குர்தா போட்டுகிட்டு நாலு பேர் கைதட்டலுக்கா ஏங்கி தாடி வச்சி தண்ணிய போட்டுகிட்டு.... இதுவாடா உன் ஆசை” என்று கத்துகிறார்.

ரோகன் உங்க அப்பா உங்களை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்திருக்கலாம், ஆனால் எட்டு வருஷம் வந்துகூட பார்க்காம இருந்திருக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான். கோபத்தில் ஜிம்மி அவனை புரட்டியெடுக்கிறான். வீடு திரும்பியதும் “இது என் வீடு, என் உழைப்பில்தான் நீ சாப்பிடுகிறாய், நான் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டும்தான் இங்கே இடம், குரலை உயர்த்தி பேசக்கூடாது, தலைகுனிந்துதான் பேச வேண்டும் என்கிற அந்த வீட்டின் எழுதப்படாத விதிகளை சொல்கிறார். மேலும் தன்னை ”சார்” என்றே அழைக்கவேண்டும் என்கிறார்.

இன்னொரு அடிமையாக அந்த வீட்டில் வாழத்தொடங்குகிறான் ரோகன். காலையிலிருந்து மதியம் வரை அப்பவின் பேக்டரியில் வேலை செய்கிறான், பிரகு கல்லூரி, வீடு. இரவு அப்பா குடித்துவிட்டு தூங்கியதும் அவரது காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான், குடிக்கிறான்.

தன் தம்பியோடு எந்த உறவையும் வளர்த்துகொள்ளவில்லை. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறான். ஒரு நாள், தம்பிக்கு உடல்நிலை சையில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். ஜிம்மிக்கு கல்கத்தா செல்லவேண்டியிருப்பதால், நாலு நாட்கள் அப்பா இல்லாமல் அர்ஜுனோடு தங்க நேரிடுகிறது. ஜிம்மி அடித்ததாலேயே அர்ஜுன் காயப்பட்டிருக்கிறான் என்பதையும், அந்த சிறுவனின் மனவலிகளையும் உணர்கிறான். அன்று முதல் தம்பியோடு பாசமாக இருக்கத்துவங்குகிறான்.

ரோகன், கல்லூரியில் எல்லா பாடங்களிலும் தோல்வியடைகிறான், அதைக்கேட்கும் அப்பாவிடம் எல்லாம் பாஸ் என்று பொய் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அது தெரிந்து அப்பா அவனை அடிக்கிறார். ”பொய் சொல்பவன் கோழை, பெயில் ஆயிட்டேன்னா உண்மை சொல்லியிருக்கலாம், நீ ஒரு கோழை, அப்படியே உங்கம்மா மாதிரி எதற்கெடுத்தாலும் அழும் ஒரு பெண் நீ” என்று கத்துகிறார், மன்னிப்பு கேள் என்கிறார். ரோகன் “ நீங்களும்தான் பொய் சொல்கிறீர்கள், அர்ஜுன் கீழே விழுந்து அடிபட்டதாக, ஆனால் அவனை மாட்டை அடிப்பதுபோல அடித்திருக்கிறீர்கள், அவன் பள்ளியில் என்ன நடந்தது என்றூ கேட்கிற பொறுமை இல்லை உங்களிடம், நீங்களும்தான் கோழை, நீங்க மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் நானும் கேட்கிறேன்” என்கிறான்.

அடுத்த நாள் காலை, ஜிம்மி இருவரிடமும் மன்னிப்பு கேட்கிறான். என் கோபம் என்னை இப்படி நடந்துகொள்ள செய்கிறது. னான் உங்களை நிறைய கொடுமை செய்துவிட்டேன் என்கிறார், மேலும் அர்ஜுன் இனி நீ இங்கே இருக்க வேண்டாம், நீ ஹாஸ்டலுக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது, ரோகன் உனக்கு இன்ஜினியரிங் படிக்க விருப்பமில்லை என்றால் நீ படிக்க வேண்டாம் ஆனால் இந்த எழுதுவதையெல்லா மூட்டை கட்டிவிட்டு என்னோடு முழுநேரமும் பேக்டரியில் வேலை செய் என்கிறார். எனக்கும் அமைதி வேண்டும் நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார். அப்பா திருந்தப்போவதேயில்லை என நினைக்கிறான் ரோகன்.

சித்தப்பா, ஜிம்மியிடம் “அண்ணா நீ கல்யாணம் பண்ணிக்கிறதுகூட பிரச்சனையில்லை, அர்ஜுனை நினைத்துப்பார், அவன் இன்னும் குழந்தை, அதுக்குள்ள அவனைக்கொண்டு ஹாஸ்டலில்.... வேண்டாம்னா, நீ ரொம்ப ஓவரா போற” என்கிறார். அவரிடமும் கோபித்துக்கொண்டு அவரையும் வீட்டைவிட்டு துரத்துகிறார். ஆதரவாக வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டிருந்த பேசிக்கொண்டிருந்த ஒரே நபரையும் இழந்து விட்டதாக நினைக்கிறான், ரோகன்.

ஜிம்மி ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு ரோகனிடம் “எட்டுவருசமா உன்னை வந்து பார்க்கலைன்னு சொல்றியே, நான் நிறைய தடவை வந்திருக்கிறேன், நீ உன் நண்பர்களோடு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்தாய், மேலும் அதைவிட உன்னை சந்தோசப்படுத்திவிட என்னிடம் எந்த செய்திகளும் இல்லை, அதனால் உன்னை தொந்தரவு செய்யாமல் திரும்ப வந்துவிடுவேன்” என்று புலம்புகிறான். இதனாலேயே ரோகன் கடைசிவரை வீட்டிலேயே இருக்கிறான். என்றாவது ஒருநாள் அப்பா நம்மை புரிந்து கொள்வார் என்று குழந்தைகளும், குழந்தைகள் நம்மை புரிந்துகொள்ளுமென அப்பாவும் காத்திருப்பார்கள். கடைவரை அது நடக்காமலேயே போனது துரதிஸ்டம்.

நிலைமை இன்னும் மோசமாகிறது, ஒரு கட்டத்தில், அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் தம்பியோடு வீட்டை விட்டு வெளியேறுகிறான். படம் முடிகிறது. ஏன் வெளியேறுகிறான் எப்படி என்பதையெல்லாம் , படம்பார்த்து அனுபவியுங்கள். இது வெறும் படம் அல்ல, நான் அதை இங்கே அறிமுகம் மட்டும் செய்யவில்லை. இது சிலரின் வாழ்க்கை, நான் கண்டது ஒரு அனுபவம். நான் என் சிறுவயதில் இரண்டு முறை வீட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்தவன்.

ரோஹனாக நடித்த ரஜத் பர்மெச்சா பாடிலேங்வேஜிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறான். குட்டி பயல் அர்ஜுனாக நடித்த ஆர்யனும் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கிறான். குறிப்பாக கிளைமேக்ஸில் “ரோகன் வா போகலாம் என்கிறான்,அர்ஜுன், எங்கண்ணா என்கிறான். உன் அப்பா இல்லாத இடத்திற்கு என்கிறான். அப்போது ஒரு மகிழ்ச்சியை தன் கண்களிலும் முகத்திலும் வெளிப்படுத்துவான் பாருங்கள். ஹா.... தேர்ந்த நடிகர்களே அப்படி நடிப்பது சிரமம். எதுக்காக படம் பார்ப்பீர்களோ இல்லையோ இவனுக்காக பாருங்கள். அப்பா ஜிம்மியாக வரும் ராம் கபூராகட்டும், சித்தப்பாவாக வரும் ரோனித் ரயாகட்டும் அவ்வளவு இயல்பான ஒரு நடிப்பு. பல இடங்களில் கண்கலங்கி பார்த்துக்கொண்டிருந்தேன். அதேபோல இசை, பின்ணணி இசை மிக அற்புதம். கேமிரா ஜாம்செட்பூரின் அழகிய இடங்களை நேரில் பார்த்த உணர்வைத்தருகிறது. டெக்னிக்கலாகவும் நல்ல படம்தான் இது. பாடல்களை இங்கே சொடுக்கிக் கேளுங்கள் குறிப்பாக தீம் மியூசிக்கைகல்யாணம் ஆகி புள்ளைய பெத்த எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். :-)
வர்மாவும் வன்மமும் - எக்ஸ்படேஷன் ஆஃப் ரக்த சரித்ரா.

எப்போதும் ஒரு மென்மையான,மெசோக திரைப்படங்களையே நான் அதிகம் விரும்புவேன். வன்முறை பின்புலன் கொண்ட படங்கள் என்றால் சில செலக்டிவான இயக்குனர்களை, அவர்களின் படங்களை மட்டுமே தொடர்ந்து பார்த்துவருகிறேன். அதில் இந்திய இயக்குனர்களில் வர்மா மட்டும்தான் என் சாய்ஸ். ரொம்ப நாளாகவே இவரது படங்களைப்பற்றி எழுத வேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன். யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் நேரடியாக ஹாலிவுட் மற்றும் உலகத்திரைப்படங்களைப் படங்களைப்பார்த்தே இயக்குனராவர் ராம்கோபால் வர்மா. கதை, லாஜிக் மற்ற கந்தாயங்களை தவிர்த்து சம்பவஙகளை படமாக்கும் யுக்தி, வர்மாவினுடையது.

ரக்த சரித்ரம், ஆந்திராவைக் கலக்கிய ரெளடி பரிதாலா ரவி 2005-ல் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தையும் அதன் பின்புலன்களையும் மையமாகக் கொண்ட கதை. பொதுவாகவே வர்மா படங்களில் வன்முறை அதிகம் இருக்கும். அதுவும் இந்த படத்தில் பிரதான அம்சமே பழிவாங்கல்தான். படத்தின் முன்னோட்டமே பழிவாங்குதல் மனிதனின் உன்னதமான உணர்வுஎன்கிற மகாபாரத வரிகளோடு தொடங்குகிறது இந்தியாவின் மோஸ்ட வயலண்ட் மூவி – ரக்தசரித்ராவாகத்தான் இருக்கும் என்று ரிவ்யூ பார்த்த அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. கொடூரம் கொப்பளிக்கும் கண்களோடு சூர்யா, மாறுபட்ட தோற்றம், உடல்மொழியோடு வன்மம் பேசும் கண்களோடு விவேக் ஓபராய், மணி சர்மாவின் மிரட்டலான இசை என முன்னோட்டமே பதபதைப்பைக் கூட்டுகிறது.

வன்முறை என்றால் சா (SAW) படங்களில் வருவது போல வயிற்றிற்குள் கையைவிட்டு குடைவது போல அறுவருப்பான வன்முறை அல்ல. காட்பாதர் மாதியான, ரிசர்வேயர் டாக் மாதியான அழகான வன்முறை. வன்முறை அழகியல். என்றுகூட சொல்லலாம். உதாரணமாக சர்கார் பட்த்தில் ஒரு காட்சி வரும். தாதா அமிதாப்பின் பெரிய மகனின் சாவுபற்றி,  அமிதாப் மற்றும் அபிஷேக்கின் கண்களின் உணர்ச்சிகளின் மூலமாகவே அவன் இறந்துவிட்டான் என்று பொருள்பட காட்சியெடுத்திருப்பார்கள். எவ்வளவு கொடூரமானது அவன் சாவு மற்றும் எவ்வளவு சோகம் அந்த சாவில் என்பதை துளி ரத்தமின்றி முழுவதுமாய் உணரும் படியான் காட்சி அது.  
     
காதலை கவிதையாய் சொல்ல ஆயிரம் பேர் உண்டு, வன்முறையையே கவிதை மாதிரி ஒரு அழகாய் சொல்பவர்தான் வர்மா. மிகச் சாதாரணமாண, மசாலாக் கதைகள்தான் இவருடையதும், ஆனால் அதை படமாக்கிய விதமும், பின்ணணி இசையும் ஒரு புது கலரைக்கொடுக்கும் இவரது படங்களில். உதயம் படத்தில் இளையராஜாவிற்கே பிண்ணனி பற்றி அலோசனைகள் வழங்கியிருக்கிறார் வர்மா என்று சொல்வார்கள். செல்வராகவனின் திரைப்படங்களுக்கு பிண்ணனி எவ்வளவு முக்கியமோ, மணிரத்னம் படங்களுக்கு வசனம் எவ்வளவு முக்கியமோ அதுபோல வர்மா படங்களில் இரண்டுமே அவ்வளவு முக்கியமாக இருக்கும். புதுப்பேட்டை – ஒரு வர்மா ஸ்டைல் ஆப் மூவிதான். சமீப தமிழ்த்திரைப்படங்களில் புதுப்பேட்டை அளவிற்கு பிண்ணனி இசையும் மேக்கிங்கும் வேறு எந்த படங்களிலும் மிரட்டியதாகத் தெரியவில்லை.

முன்னதாக ராம்கோபால் வர்மா அமிதாப்பச்சன், மோகன்லால், விவேக் ஓபராய், அஜய் தேவ்கன், ஆமிர்கான் மற்றும் நிறைய பெரிய பெரிய ஸ்டார் நடிகர்களை இயக்கியிருக்கிறார். இன்னமும் இவரது படங்களில் நடிப்பது என்றால் நெருக்கடிகளை தளர்த்திக்கொண்டு நடிக்க முன் வருவார்கள். முதன்முதலாக சூர்யா, ரக்தசரித்ராவின் மூலமாக ஹிந்திக்கும், வர்மாவின் படங்களிலும் எண்டர் ஆகிறார். முதலில் ஹிந்தியில் மட்டுமே எடுப்பதாக இருந்த இந்தப் படம், இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போன வர்மா சூர்யாவை அமிதாப்பச்சனோடு ஒப்பிட்டு தனது பதிவில் எழுதியிருக்கிறார். குறிப்பாக சூர்யாவின் கண்களைப்பற்றி, நானும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லுவேன், சூர்யாவின் கண்கள் உயிருள்ளவை என்று.  அதுபோல, பச்சனின் கண்களில் ஒரு ஆழ்கடலின் அமைதியைக் காணமுடியும் மாறாக சூர்யாவின் கண்களில் அந்த கடலைக் கிழித்து வெளிவரும் எரிமலையின் குமுறலைக் காணமுடியும் என்றூ வர்மா சொல்கிறார். மேலும் தனது சினிமா வாழ்க்கையில் சூர்யாவைப்போல ஒரு நடிகனைப் பார்த்த்தில்லை என்கிறார்.


எனக்கு மிகவும் பிடித்த வர்மா படங்கள்எப்பொதுமே இளையராஜாவிடமிருந்து ஒரு ஸ்பெசல் இசையைப் பெற்றுத்தருவார் வர்மா, தமிழைக்காட்டிலும் இன்று ஹிந்தியில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இசைப்புயலை ஹிந்தியில் ரங்கீலா மூலமாக நேரடிப்படம் செய்யவைத்தவர் வர்மாதான். ஹாலிவுட்டில் படம் இயக்கத்தகுதியான இயக்குனர் சங்கர் என்று ஒரு நிகழ்ச்சியில் நிறைய பேர் பேசிக்கொண்டிருந்தார்கள், என்னைப் பொருத்தவரை ஹாலிவுட் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு லோக்கலாக படம் பண்ணுபவர்தான் சங்கர், மேக்கிங்கைப் பொருத்தவரை ஹாலிவுட்டிற்கு இணையாக படம் பண்ணுபவர் வர்மாதான். மனவுணர்வுகளை படிக்கும்படியான நிறைய க்ளோசப் ஷாட்கள், ஷாக்கிங்கான பிண்ணனி இசை, செபியா டோனில் பிக்சரைஷேசன், இருள் சூழ்ந்த காட்சிகள் என மிரட்டலான மேகிங்தான் வர்மா ஸ்பெசல்.

வர்மா, மிகக் காண்ட்ரோவர்சியலான விஷயங்களை மிக தைரியமாக படமாக்குபவர். காட்பாதரைத் தழுவியே அதன் பாதிப்பிலேயே என்னுடைய மாஃபியா படங்களை இயக்குகிறேன் என்று வெளிப்படையாகவே சொல்கிறார். காட்பாதரில் பார்த்த மிரட்டலான திரைக்கதைகளும், அதில் பார்த்த மார்லன் பிரண்டோ, அல்பச்சினோவின் மிரட்டலான உடல்மொழிகளும், வாய்ஸ் மாடுலேஷன்களையும் பார்க்கும்போது இப்படி ஒரு படம் தமிழில் வராதா? என்ற ஏக்கம் வரும், தமிழில் இல்லாவிட்டாலும் இந்திய அளவில் இந்த ஏக்க்கங்களை ஒரளவேனும் சமாளித்து வருபவர் வர்மா, கம்பெனி பட்த்தில் வருகிற அஜய் தேவ்கன் அப்படியே அல்பச்சினோவைக் கண்முன் நிருத்தியிருப்பார். இப்படி வர்மாவின் படங்களின் மூல தனது திறமையைக் கண்டடைந்தவர்கள், ஜே.டி.சக்ரவர்த்தி, அமிதாப், அஜய் தேவ்கன், விவேக் ஓப்ராய், சுதீப் என இன்னும் பலரை சொல்லலாம்.

இன்னும் இப்படி வர்மா பற்றி எழுத நிறைய இருக்கிறது என்னிடம். பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். சத்யா அல்லது சர்க்கார் பற்றிய முழு விமர்சனத்தோடு இல்லை அனுபவத்தோடு என்பதே சரியாக இருக்கும். அனுபவத்தோடு வேறு பதிவில் சந்திப்போம். நன்றி.......

ப்ளாஸ் பேக் @ நார்த் பேஸிங்

பீப்ளி லைவ் - இன்னும் இந்த படம் பார்க்கவில்லை, ஆனாலும் மிகுந்த எதிர்பார்ப்போடு தியேட்டரில் பார்க்கக் காத்திருக்கிறேன். அதுக்கு நிறைய காரணங்களும் இருக்கு,  இன்றைய இந்தியாவின்  நம்பத்தகுந்த ஒரு தயாரிப்பு, ஆமீர்கான். அவருடைய தயாரிப்பில் வருகிற படம்.  ஜீனி புகழ் இந்தியன் ஓசியன் குழுவினரின் இசை, இப்படி நிறைய காரணங்கள் உண்டு. இருந்தாலும் நண்பர் திருநாவுக்கரசு சமீபத்தில் எழுதிய இந்தப்படத்தின் திரைஅறிமுகமும் இந்த படம் பார்க்கும் ஆவலை இன்னும் அதிகமாக்கிவிட்டது.  "பீப்ளி-(லைவ்)" - இந்தியாவின் முகம் 


ப்ளாஸ் பேக் என்று சொல்லிவிட்டு எதேதோ எழுதிட்டிருக்கேன்னு கேட்காதிங்க, எனக்கே நான் இந்த பதிவை எழுதும்போது இந்த பீப்ளி பற்றி எழுதுவேனென்று தெரியாது. :-) ஆனால் இந்தியன் ஓசியன் பாடலை சொல்லும்போது தானாகவே அவர்கள் இசையமைத்த இந்த படமும் மனதில் ஒட்டிக்கொண்டது.சரி இனி ப்ளாஸ்பேக் பாடல்களை பார்க்கலாம்.

இண்டியன் ஓசியன் குழுவின் ஜீனி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல், ஒரு மாதிரியான துள்ளலான மனநிலைக்கு கொண்டு செல்லும் பக்குவமுடைய பாடல். கேளுங்க....
 

ரெமோ பெர்ணாண்டஸின் ஓ மேரி முன்னி  எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகர், கம்போஸர். இவரது பாடல்களில் வரும் ஜிமிக்ஸிற்கு நான் அடிமை. பம்பாயில் வரும் அரபிக்கடலோரம் பாடலில் இடையிடையே வருகிற தில்லாலங்கடி வேலைகளுக்கு சொந்தக்காரர். இவரோட கம்போஸிசனில் ஃப்லூட் சாங் கேட்டுப்பாருங்கள். புல்லாங்குழலையும் ட்ரம்ஸையும் வைத்துக்கொண்டு இவர்கள் காட்டுகிற இந்த மேஜிக்கை, அவசியம் அனுபவியுங்கள், இடம் மறந்து ஆட்டம் போட்டால் நான் பொறுப்பல்ல........


  ஹோ கயி ஹே மொகாபத் 90களில் வந்த ஒரு கலர்ஃபுல் ஆல்பம், அலிஷாவின் மேட் இன் இண்டியாவிற்கு பிறகு எங்களால் குடும்பத்தோடு  அதிகம் பார்க்கப்பட்ட ஒரு ஆல்பம் இதுவாகத்தானிருக்கும்.  சின்னசின்ன ஊடலோடு கூடிய ஒரு க்யூட் காதல், ஜாலியா இருக்கும் பாருங்க. இந்த பாட்டோட வீடியோவைப் பாருங்க, எவ்வளவு கலர்ஃபுல்லா.....  அனேகமா ராஜீவ்மேனன் கேமிராவா இருக்கலாம்.


அப்புறமா என்னோட பழைய பதிவுகளில் அதிகம் முறை சொல்லியிருக்கலாம் இவரது பாடல்களை, பங்கஞ் உதாஸ். என் ஆல் டைம் பேவரைட் கஜல் பாடகர். இவரது பாட்ல்களில் மிகவும் பிடித்த ஒரு பாடல்   ஒரு அழகான காதல் கதை. சிண்ட்ரெல்லா கதை ஒன்றை படமாக்கியிருப்பார்கள், கவிதையாக. இந்த மாதிரியான ஆல்பங்கள் ஏன் தமிழில் வருவதேயில்லைன்னு நான் நிறைய புலம்பியிருக்கிறேன். படத்துக்கெல்லாம் வரதுக்கு முன்னாடி கார்ஜியஸ் கேர்ள் சமீரா ரெட்டியைப் பாருங்கள், இந்த ஆல்பத்தில்.


லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கலோனியல் கஸின்ஸ், நம்ம ஹரியும் லெஸ்லியும். தமிழில் திரைப்படங்களுக்கு நல்ல இசையை கொடுக்கமுடியாவிட்டாலும் இவர்களது இந்த முதல ஆல்பம் பட்டிதொட்டிவரை ஹிட். அலுப்புதட்டாத அத்துனை பாடல்களிலும் எனக்கு பிடித்த இரண்டு பாடல். மகிழ்ச்சியான மனநிலைக்கு ச நி த ப ம க ம க ரி ச வும் அமைதியான ஒரு மனநிலைக்கு  கிருஷ்ணா நீ பேகனே வும் கேளுங்கள்.


என்னடா, எல்லாம் ஹிந்தி பாட்டா இருக்கேன்னு கேக்குறிங்களா? அடுத்த எழுதப்போற இரண்டு பதிவுமே ஹிந்தி திரைப்படங்கள்தான்.  இரண்டுமே  வலிகள் நிறைந்த படங்கள்தான். ஆகவே இங்க கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க ஜாலியா சில நல்ல பாடல்களோடு ஒரு சின்ன முன்னோட்டமா நம்ம சேனலை நார்த் பேஸிங்கில் திருப்பியிருக்கிறேன். சிக்னல் ஸ்ட்ரெந்த்தைப் பார்த்துட்டு மத்ததை முடிவு பண்ணிக்கலாம்ன்னு, ஐடியா. :-) 

வாசகர் பர்வம் - எஸ்.ராவுடன் நான்

முன்னமே அறியப்பட்ட நிகழ்வுதான் என்றாலும் என்னுடைய புறப்பாடு குறித்து ஒரு முடிவிற்கு வர முடியாதவனாகவே இருந்தேன். எஸ்.ராவின் புத்தக வெளியீட்டு விழா. வெயிலானிடமிருந்து அழைப்பு வந்தது. என்னய்யா போலாமா? என்று. 99% போகலாம் தல என்று சொல்லி வைத்தேன். 1% - அன்று என் அக்கா மகளுக்கு சோறூட்டல். சரி என வழக்கம்போல வீட்டில் அம்மா, அப்பா திட்டி வழியனுப்பி வைக்க மதுரைக்கு பறந்தேன். ஆமா நிஜமாவே பறந்தேன். வேற என்ன சொல்லமுடியும் யாரைப் பார்க்கப்போகிறேன்.

எதுக்கு இப்படி இருக்கிற வேலைய விட்டுட்டு..... மதுரவரை போகணுமா? அங்க இங்கன்னு வரும்போது பார்த்துக்கிடக் கூடாதா? இப்படி நிறைய கேள்விகளையும் என்னமோ போ, நீ ஒரு மார்க்கமாத்தான் திரியிற என்கிறமாதிரியான நண்பர்களின் சர்ட்டிஃபிகேசனையும் தாண்டிதான் பறந்துகொண்டிருந்தேன். ()

வழி நெடுக, என்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பது முதல் அவரிடம் எப்படி கை குலுக்க வேண்டும், எப்படி பேச வேண்டுமென்பதுவரை மனதிற்குள் சொல்லிப்பார்த்தபடியே வந்துகொண்டிருந்தேன். பயணம், அவருடைய எழுத்துக்களை மனதிற்குள் புரட்டியபடியும் இருந்தது. உண்மையில் எதற்காக இந்த பயணம், அவருடைய புத்தகங்களை படிப்பதோடு விட்டுவிடலாமே? எனும் கேள்விகளுக்கு முரளி எப்படி இருக்கிங்க? என்றோ, அவரிடம் ஒரு கையொப்பம் வாங்கிக்கொண்டுவரவோ, அவர் எழுத்துக்கள் திறந்த விட்ட கதவுகள் வழி நீண்ட பாதைகளில் அனுபவித்த காட்சிகளை அவரின் கரங்களைப் பற்றியபடி உரையாடிக்கொண்டிருக்கவோ, இப்படி என்னிடம் இன்னும் ஆயிரம் ஆசைகள் இருக்கிறது பதில்களாய். இந்த பதில்கள் கேட்கவோ, படிக்கவோ சிலருக்கு சிரிப்பாக இருக்கலாம்.

ஆனால், தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக அவரை வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல. எப்படி வாசிக்க வேண்டும், எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனை, புதுமைப்பித்தனை, சம்பத்தை, பஷீரை, வண்ணதாசனை, எம்.எஸ்ஸை, நகுலனை, வண்ணநிலவனை, போர்ஹேவை, செகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணமான ஒரு மனிதரை நேரில் சந்தித்து ஒரு நன்றியாவது சொல்ல வேண்டாமா?

இப்போது நான் சந்திக்கும் பல நண்பர்கள் என்னிடம் முரளி நீ நிறைய படிக்கிற, அது உன் எழுத்துக்களில் சிறிய மாறுதலை ஏற்படுத்தியிருக்கிறது என் சொல்லியிருக்கின்றனர். ஒரு சிறுகதை அச்சேறியிருக்கிறது, கவிதை ஒன்று பரிசு வாங்கியிருக்கிறது. இவ்வளவு ஏன்? பொட்டி தட்டுறதே வேலையாயிருந்தும் பதிவுலகத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமலிருந்த நான் ஒரு செய்தி சேனலில், எஸ்.ரா அவர்களின் ஒரு பேட்டியிலிருந்தே இந்த பதிவுலகை அறிந்தேன்.

இசையமைப்பாளருக்காக, இயக்குனருக்காகவெனத் தேடித்தேடி உலகத்திரைப்படங்களை பார்க்கிறேன் என்றால் அதுவும் இந்த மனுஷனாலதான். மொத்ததில் பார்த்தல், படித்தல், எழுதுதல் என என் அனைத்துத்தளங்களின் கதவுகளும் அவராலேயே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நான் அனுபவித்து வரும் அனைத்திற்காகவும், அவர் கரம் பற்றி சுற்றிய அந்த உலகத்தை அந்த அனுபவித்தமைக்கேனும் அவரை சந்தித்திட வேண்டும், ஒரு நன்றியாவது சொல்லிவிட வேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டுதான் கிளம்பினேன்.

விழா தொடங்கிய பிறகே ஓட்டலுக்கு செல்ல முடிந்தது, அரங்கம் நிறைந்து வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். தட்டுதடுமாறி உள்ளே நுழைத்துகொண்டோம் எங்களை. திமிறி வழிந்த கூட்டம் எஸ்.ராவை சந்தித்து உரையாட வேண்டுமென்ற என் ஆசைகளை உள்வாங்கிக்கொண்டன. சரி நேரில் சந்தித்தவரையில் மகிழ்ச்சி என்று முடிவு செய்து கொண்டேன். ஒவ்வொரு புத்தகத்தையும் ஒவ்வொருவர் அறிமுகம் செய்து வைத்து வெளியிட்டார்கள். நாங்கள் போனபோது கலாப்ரியாவும், பாரதி கிருஷ்ணகுமாரும் அவரவர் உரைகளை முடித்திருந்தார்கள், (குறிப்பாக இவர்கள் இருவரின் உரையும் மிக நேர்த்தியாக இருந்த்தாக நண்பர்கள் சொன்னார்கள், மிஸ் பண்ணிட்டோம்) சாரு பேசிக்கொண்டிருந்தார். வழக்கம்போல. நான் சொன்னா நம்ப மாட்டிங்கன்னுதான் பேசவே ஆரம்பிச்சார்.. சிரிக்கசிரிக்க பேசினார்.

பின் என்றும் இளமை என்று புகழாரத்தோடு பிரஞ்சன் பேச வந்தார், பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்களைவிடவும் அவரது அறிமுகங்களுக்கு நான் அடிமை. குறிப்பாக எதோவொரு தொலைக்காட்சியில் புத்தகங்களை அறிமுகம் செய்து அவர்பேசுவது. ஒரு கதையை சிலாகித்து பேசிக்கொண்டே வருவார் கடைசி வரியில் அந்த கதையின் சாரத்தை கேட்பவரது மனதில் இறக்கிவைத்துவிட்டு, கடைசியாய் சொல்லி முடிப்பார் கதையின் பெயரை. இன்னும் ஐந்து வருங்களுக்குமுன் அவர் சொன்ன அம்மிகொத்துகிறவன் கதை காதிலேயே இருக்கிறது. இங்கேயும் அப்படியே எஸ்.ராவின் சிறுகதைகளை வெகுவாய் பாராட்டி பேசினார், இரண்டு கதைகளும் சொன்னார். குறிப்பாக முயல்கதை. புத்தகம் வாங்கிவிட்டேன்.

பேராசிரியர் அருணன், அழகாக பேசினார். உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் வாழ்வை குறித்த திரைப்படங்களை, அதன் அனுபவங்களை, நிகழவுகளை சமகால எழுத்தாளர்களோடும், தன்னோடும் செய்துகொண்ட எஸ்.ராவின் ஒப்பீடுகளையும் பற்றி பேசினார். பேச்சினூடே அவ்வப்போது இல்லிங்களா? என்று எஸ்.ராவைப் பார்த்துக் கேட்டுக்கொண்டதும் ,அதற்கு எஸ்.ரா ஆமோதிப்பதாய் தலையை ஆட்டுவதும் அழகாக இருந்தது.

கடைசியாய், எஸ்.ரா. செகாவின்மீது பனி பெய்கிறது என்றும் ஆண்டன் செகாவைக்கொண்டாடுங்கள் என்பது பற்றியும் பேசினார். அவர் பேசிய அனைத்தையுமே அவரது தளத்திலும் எழுத்திலும் ஏற்கனவே படித்ததுதான் ஆனாலும் புதிதாய் இருந்தது, கேட்டது. இன்றுமுதல் அவர் பேச்சிற்கும் ரசிகனாகிப்போகிறேன். செகாவின் மீது பனி பெய்கிறது என்பதையும், நாயின் பசியை போக்க முடியாமல் தன் நிலையை குறிக்கும் செகாவின் மனநிலையை அரங்கிலிருந்த அனைவருக்கும் கொண்டுவந்து விட்டார். சிரித்துக்கொண்டேயிருப்பது போன்ற ஒரு முகம், எஸ்.ராவினுடையது. பனியில் நனைந்தபடி நிற்கும் ஒரு குதிரையைப் பார்த்து தன் நிலைமையை எண்ணும் செகாவ், தனது வருமையை தானே பகடி செய்துகொள்ளும் அந்த நிகழ்வைச் சொல்லும்போதும் அவர் சிரித்தபடியே சொன்னார், நாங்கள் கண்களில் நீர் நிறுத்தியபடி கேட்டுக்கொண்டிருந்தோம்.

அனைவருக்கும் நன்றி என்று முடித்தபின், அவரது புத்தகங்களோடு நிறையபேர் சூழ்ந்து கொண்டனர். சிரித்தபடியே அனைவருக்கும் கையெழுத்திட்டபடி இருந்தார். எங்கே கொஞ்சம் நேரம் அவர் தனியாக இருப்பாரோ, போய்ப் பேசிவிடலாமென்று அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். ஊகும்.. நேரம் கூடக்கூட கூட்டமும் கூடிக்கொண்டேயிருந்தது. இரவிற்குள் ஊர் திரும்ப வேண்டுமென்பதால் நானும் கூட்டத்தோடு கூட்டமாய் சேர்ந்து கொண்டேன்.

நண்பர் பெரியசாமி எஸ்.ராவைச் சந்தித்தால் அவர் கையெழுத்திட்ட ஒரு புத்தகம் வாங்கிவரச் சொல்லியிருந்தார். அவருக்கும் எனக்குமாய் இரண்டு புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவருக்கென நான் கொண்டுபோயிருந்த எம்.டி. வாசுதேவனின் காலம், நாவலை என் நினைவாக எஸ்.ராவிடம் கொடுத்தேன்.


“ஓ, காலம்..... ரொம்ப நாள் முன்னாடி வாசிச்சிருக்கேன், எனக்கா? நீங்க..?”

“முரளி, திருப்பூரிலிருந்து... சார்.

“உங்க கையெழுத்து போட்டுக்கொடுங்க........ ?”

“உள்ளே கடிதமே எழுதியிருக்கிறேன், சார்” என்றேன்

மேலும் எப்படியும் நீங்க படிச்சிருப்பீங்கன்னு தெரியும் இருந்தாலும் என் நினைவாக உங்கள் நூலகத்தில் உறங்கட்டுமே, என்றேன். சிரித்தார். ஒரு நிமிடம் அந்த கூடத்தில் நானும் அவரும் மட்டுமே இருந்திருக்கலாமென தோன்றியது.

வண்ணதாசனோடு வாய்த்ததுபோல ஒரு பத்து நிமிடங்கள் கிடைக்கவில்லை என்பதைத்தவிர மனம் நிரம்பிய சந்தோசம், இந்த பயணத்தில். என்னுடைய ஒவ்வொரு பதிவுகளையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி.

இதர : இந்த வாரமும் எனது கிறுக்கல் ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியாகியிருக்கிறது, பகிர்வதில் மகிழ்ச்சி.

ஒரு புள்ளியில் இணையும் ஒன்பது வாழ்க்கை - மெட்ரோ

லைஃப் இன் மெட்ரோ-இயக்குனர்-அனுராக் பாசு, அனேகமாக இவரது அனேக படங்களைப் பார்த்திருக்கிறேன், கைட்ஸ் வரை. காரணம்,  இவரது படங்கள் வழக்கமான மசாலாத்தனங்களைத் தவிர்த்து ஒருவித தனித்தன்மையோடிருப்பதை காண முடியும். இது ஒரு மாதிரி பீல் குட் மூவி வைகைதான் என்றாலும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள், குளோபலைஸேசன் மற்றும் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் பாதிப்புகள் இன்றைய வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில் செய்துள்ள மாற்றங்களையும், அதன் விளைவுகளையும் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது.
இந்தப்படம் கூட அப்படி ஒரு திரைக்கதையைக் கொண்டதுதான், ஒரு மெட்ரோ சிட்டியில் வசிக்கும் குறிப்பிட்ட ஒன்பது பேரைசுற்றி நகரும் கதை, வெவ்வேறு பொருளாதார, சமூக நிலைகளில் வாழ்ந்துவரும் இவர்களை, ஒரு நகரம் எப்படி இணைக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதையும் வெற்றிகரமாக சொல்லப்பட்ட ஒரு திரைப்படம்தான், லைஃப் இன் மெட்ரோ.


(இடமிருந்து வலமாக: இன்ஃபான் கான், கொங்கனாசென் ஷர்மா, அகுஜா, ஷில்பா ஷெட்டி, ஷர்மான் ஜோஷி, கங்கனா ராவந்த், கேகே மேனன்)

இதில் நாயகன், நாயகி என்று யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஒரு குறிப்பிட்ட சில நபர்களை சுற்றி நகரும் ஒரு கதை. ஒரு வளர்ந்த(!) நகரத்தில் தொடங்குகிறது கதை.

  1. கொங்கனா சென்னும், ஷில்பாவும் ஷெட்டியும் சகோதரிகள், மூத்தவள் ஷில்பாவிற்கு திருமணமாகி இருக்கிறது, கணவன் கால் சென்டர் ஒன்றின் முதலாளி. அன்யோன்யமற்ற அவர்களின் மனவாழ்க்கைக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் உண்டு.
  1. இளையவள் , கொங்கனா சென் சர்மா. 27 வயதாகிய ஒரு முதிர்கன்னி, மெட்ரோ வாழ்க்கைக்கு முற்றிலும் தகுதியற்றவளாய் இருக்கிறாள். சில சமயங்களில் அவளுக்கு தான் சுத்த கர்நாடகமாக இருப்பதாகவும், சில சமயங்களில் மற்றவர்கள் தவறாக இருப்பதாகவும் இரண்டு எண்ணம் எப்போதும் உண்டு. தனக்கான கணவனை, அவளின் சிலபல நிபந்தனைகளுக்குட்பட்டவனாய் மேட்ரிமோனியல் சைட்களின் உதவியோடு தேடிய வண்ணம் இருக்கிறாள்.
  1. இவர்கள் இருவரும், ஒரு கணவனை இழந்த முதியவளிடம் (நபீஷா அலி) பேயிங் கெஸ்டாக இருந்து வருகிறார்கள், கிட்டத்தட்ட ஒரு அம்மாவைப்போல அந்த முதியவள், அவருக்கு ஒரு கடிதம் வருகிறது, தனது திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்து பின் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரை பிரிந்து அமெரிக்கா சென்றுவிட்ட முன்னாள் காதலனிடமிருந்து(தர்மேந்திரா). “உன்னை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. இறப்பதற்குமுன், உனக்கு சம்மதம் என்றால் எங்கு உன்னை காத்திருக்க சொல்லி வராமல் போனேனோ அதே ரயில் நிலையத்தில் எனக்காக காத்திரு, என்கிறது கடிதம். அங்கு தொடரும் அவர்களின் சந்திப்பு, நிராதரவாக இருக்கும் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவரின் அன்பு தேவையானதாக இருப்பதை உணர்கின்றனர்.
  1. ஷில்பாவின் கணவன் (கேகே மேனன்), மிகப்பெரிய ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருபவன். நேர்மறையான ஒரு குடும்ப வாழ்க்கையுடன். ஷில்பாவிற்கும் அவனுக்கு எதிலும் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் உண்டு. குழந்தை ஒன்று மட்டுமே அவர்கள் இருவரையும் ஒரே வீட்டில் வசிக்கச் செய்யும் ஒரு காரணி. இவனுக்கு வீட்டில் இரண்டு பெட்ரூம்கள் இருப்பதால் வெளியே பல பெண்களுடன் சல்லாபமாக இருந்து வருகிறான்.
  1. இவனது அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒரு இளைஞன், சர்மான்ஜோஷி. அவன் வாடகைக்கு இருந்துவரும் அப்பார்ட்மெண்ட்டை தனது சீனியர்களுக்கு அவர்கள் விரும்பிய பெண்களை அழைத்து வந்து அனுபவிக்க கொடுப்பதும் அதன் மூலம் பணி உயர்வுக்கான சிறுசிறு உதவிகளைப் பெறுவதுமாய் இருக்கிறான். எப்படியாவது உயர்ந்த நிலையை அடைந்துவிட வேண்டுமென்கிற அவனது வெறி. அவன் தனது மனதில் அதே அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் கங்கனா ரவந்தை ஒருதலையாய் காதலித்து வருகிறான்.  

  
( தர்மேந்திரா, நபீஷா அலி)

  1. கங்கனா, அதே அலுவகலத்தில் அவனைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவள். காரணம் அவள் முதலாளியின்(கேகே) இச்சைக்கு அடங்கியவளாய் இருக்கிறாள். அதன் மூலம் நிறைய பணமும் சொகுசு வாழ்க்கையையும் அனுபவித்து வருகிறாள். இவளும் கொங்கனாவும் (ஷில்பாவின் ச்கோதரி) ஒரே வீட்டில் வசிக்கும் தோழிகள். நேரெதிர் குணங்கள் கொண்ட தோழிகள். கொங்கனாவிற்கு தன் அக்காவின் கணவனுடன் தன் தோழிக்கு உறவிருப்பது தெரியாது. அதேபோல ஷர்மானுக்கும் கங்கனா-முதலாளி உறவு தெரியாது.
  1. கொங்கணாவின் மணமகன் தேடலில் ஒரு நாள் இர்பான்கானை சந்திக்கிறாள். ஆனால் அவனுடைய தோற்றமும், கஞ்சத்தனமும், பெண்களின் அந்தரங்க பகுதிகளில் பாயும் அவனது கண்களும் அவளுக்கு பிடிக்காமல் போகிறது. ஆனால், இர்பான், ஒரு மிகச்சராசரியானவன். நல்லவேலை இல்லாத காரணத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாலும் 30 வயதாகியும் திருமணமாகமல் தள்ளிப்போன ஒரு ஆண். தெருவெங்கும் குட்டைப்பாவடைகளோடும், இறுக்கமான உடைகளோடும் கடக்கும் பெண்களை இயல்பாக அவன் கண்கள் தேடுகிறது, நோட்டம் விடுகிறது.
  1. கொங்கணா வேலை செய்யும் அலுவலக முதலாளி, அங்கே கொங்கணா ஒரு இளைஞனிடம் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள முயல்வதைப் பார்க்கிறார். கொங்கணாவை அழைத்து உனக்கு அவனைப்பிடித்திருக்கிறதா? சொல். அவன் நம்ம பயதான், நான் சொன்னா தட்ட மாட்டான். உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு நான் அவனிடமும் அவங்க வீட்டிலும் பேசுகிறேன், என்கிறார். சொன்னபடியும் செய்கிறார்.
  1. தினமும் பேருந்து நிறுத்ததில் சந்திப்பதில் தொடங்கி நண்பர்களாகிறார்கள், ஷில்பாவும் அகுஜாவும், அவன் ஒரு நாடகாசிரியராகவும் நடிகனாகவும் இருக்கிறான். மேடை நாடகங்களை இயக்குவதும் அதில் நடிப்பதையும் ஆத்ம திருப்தியோடு செய்துவருகிறான். நாடகங்கள் மீதிருக்கும் அதீத ஆர்வத்தால் தன் காதலை இழந்தவன். மென்மையானவன். அவளுக்கு என்னை மட்டுமே காதலிக்கத்தெரிந்தது, எனக்கு பிடித்ததையும் சேர்த்து காதலிக்க சொல்லமுடியாது அல்லவா? எனப் பிரிந்து போன காதலிக்கும் அனுசரணையாக பேசுபவன். “ச்சே, எவ்வளவு அன்பானவனாய் இருக்கிறாய், உன்னை பிரிய, புரிந்துகொள்ளாமல் போக அந்த முட்டாள் பெண்ணால் எப்படி முடிந்தது எனும் ஷில்பாவை அவன் மெல்ல நேசிக்கத் தொடங்குகிறான். ஷில்பாவும், அவளுக்கும் அவளது கணவனுக்கும் இடையே உள்ள விரிசலைச் சொல்ல நட்ப்பைத்தாண்டி காதலுக்குள் பயணிக்கிறது இவரகளின் உறவு.

இதுவரை சொன்னது இந்த திரைப்படத்தின் கதாப்பத்திரங்களும் அவர்களின் குணாதிசயங்களும்தான்.
கதை, முதலாளிக்கும் தன் காதலிக்கும் இருக்கிற உறவு ஷர்மானுக்கு தெரிகிறது. தன் தோழியின் கள்ளக்காதலன் தன்னுடைய அக்காவின் கணவன்தான் என்பது அபர்ணாவிற்கு தெரிகிறது. தன் மனைவிக்கு வேறோருவனுடன் காதல் இருப்பது கேகேவிற்கும் தெரிகிறது. அபர்ணாவின் முதலாளிக்கும் அவர் ஏற்பாடு செய்த இளைஞனுக்கும் ஒரு தகாத உறவிருப்பது அபர்ணாவிற்கு தெரிகிறது. அபர்ணா ஏற்கனவே பார்த்து பிடிக்காமல் போன இர்பானுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நபீஷா-தர்மேந்திரா ஜோடி ஒன்றாய் இருப்பது சமூகத்தால் நிராகரிக்கப்படுகிறது.
ஷ்ர்மான்-கங்கனா சேர்தார்களா? கேகே திருந்தினாரா? ஷில்பா கேகேவோடு சேர்ந்தாளா? அல்லது நாடக இயக்குனரான அகுஜாவோடு இணைந்தாளா? இர்பான் திருமணம் நடந்ததா? கொங்கனாவின் நிலை என்ன? வயதான ஜோடிகளின் நிலை என்ன?

இப்படி படிப்படியான கேள்விகளுக்கு சம்பிரதாயங்களை உடைக்காமல், ரசனையான பதில்தான் இந்த படம். என்னுடைய எழுத்துக்கள், இந்த படம் ஒரு மாதிரியான படமோ என்கிற எண்ணம் வரும்படியாக இருந்தால், சத்தியமாக அது என்னுடைய தவறுதான். திரைப்படத்தில் எந்த வித கண்ணிய குறைவும் இல்லை. கொஞ்சம் சறுக்கினாலும் பி கிரேட் மூவி என்ற நிலைக்கு தள்ளப்பட்டிவிடும் அபாயம் இருந்து அழகான திரைக்கதையால் குடும்பத்தோடு பார்க்கிற ஒரு நல்ல படமாக்த்தான் இயக்கியிருக்கிறார். அனுராக் பாஷு.

சில காட்சிகள் ரசனையாகவும், சில காட்சிகள் கவிதையாகவும், சில காட்சிகள் எதார்த்தமாகவும், சில காட்சிகள் மேற்கு நோக்கி வேகமாய் நகர்ந்து அழியும் நகர மக்களுக்கு சம்மட்டியடியாகவும், சில காட்சிகளில் “வேற என்னதான் செய்ய? என்கிற மாதிரியான புலம்பல்களையும் கலந்து தருகிறது. ஆகா, ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுற படமில்லை, ஆனாலும்  நல்ல படங்களைத் தேடிப்பார்ப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம், மற்றவர்களுக்கு இந்த படத்தைப் பார்க்கத் தவறினால் ஒரு நல்ல படத்தை மிஸ் செய்த பாவம் வந்து சேரும். 

செலுத்த இயலாத காணிக்கை

ஓரிரு வாரங்களுக்கு முன் சேர்தளம் சார்பில் கவிஞர் மகுடேஷ்வரன் அவர்களோடு ஒரு சந்திப்பு நடந்தது, கார்த்திகையையும் மார்கழியையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நினைவூட்டும் விதமாக இருந்தது அந்த சந்திப்பு. ஆம், கார்த்திகையும் மார்கழியும் வந்தால் யாரெல்லாம் நினைவிற்கு வருவார்களோ, அவர்கள் அனைவரும் நினைவில் வந்துபோயினர். குறிப்பாக எங்கள் தமிழ் அய்யா. கதிர்வேல் அய்யா. காரணம், பேச்சினூடே மகுடேஷ்வரனும் அய்யாவின் மாணவர்தான் என்பதை அறிந்ததுதான்.(இரு மாணவர்கள்)


சந்திப்பினிடையே ஒரு கட்டத்தில் திரு.மகுடேஷ்வரன் ஒரு கேள்வியெழுப்பினார். இங்கு வந்துள்ளவர்களில் யாரெல்லாம் கவிதை எழுதுவிங்க, என்று. ஒரு சிலர் என்னையும் நோக்கி கைகளை திருப்ப, வெகு அலட்சியமாய், மகுடேஷ்வரன் சொல்கிறார், இவர் எழுதுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை, இவர் என் ஆசிரியரின் மாணவன், வேறு யாரெல்லாம் எழுதிவிங்க என்று. அவர் இது என் மீது வைத்த நம்பிக்கை அல்ல இது, என் ஆசிரியர் மீதுகொண்ட நம்பிக்கை.

எழுதுற எல்லாருக்கும் பின்னாடி ஒரு ஆசிரியர் இருப்பார்கள், எனக்கு கதிர்வேலு அய்யாவைப்போல. இதற்கு முன் அவர் பற்றி எழுதிய எந்த பதிவிலும் அவர் நடத்திய அந்த செய்யுளை குறிப்பிட்டது இல்லை, அது குற்றால குறவஞ்சி என்பதாக மட்டும் நினைவிருந்தது. ஈரோடு புத்தகத் திருவிழாவில் தேடி குற்றால குறவஞ்சியைத் தேடிப்பிடித்தேன்.

கைக்கெட்டும் உயரத்தில் பழுத்து வெடித்த பலாக்களையும், அதைப் பிய்த்து விளையாடும் குரங்குகளையும், தேவலோக ரதி, ரம்பைகளைப் போன்ற அழகுப் பெண்கள் பந்து விளையாடிக்கொண்டிருக்கும் தெருக்களையும், நெய்விளக்கு ஏற்றப்பட்ட கோலங்களையும், அருவியின் சாறல் எப்போதும் மழையாய் நனைக்கும் அந்த தெருக்களெங்கும் நிறைந்த கோலங்களையும், தேனடைகளிலிருந்து ஒழுகும் தேன் வெடித்த பலாவில் வழிந்து, ஒருவித சுகந்த நறுமணத்தை கமழக் கொண்டிருக்கும் அந்த வீதிகளை உள்ளடக்கிய அந்தப் பாடலை, பக்கம்பக்கமாகத் தேடினேன்.

என் நினைவிற்கெட்டிய வரையில் எனக்கு பாடப்புத்தகத்தில் வந்த அந்த ஒற்றைச் செய்யுள் இதுதான்.

முழங்குதிரைப் புனலருவி கழங்கெனமுத் தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்

கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்

செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்

வழங்குகொடை மகராசர் குறும்பலவில் ஈசர்
வளம்பெருகும் திரிகூட மலை எங்கள் மலையே.

இதில் நான் தேடியவற்றில் ஒன்று மட்டும்தான் கிடைத்தது.  மாறாக பந்தடிக்கும் பெண்களையும், தேன் சொட்டும் பலாவையும் வெவ்வேறு பாடல்களில்தான் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் அவர் எங்களுக்கு காட்டிய, சொல்லிக்கொடுத்த குற்றாலத்தில் இவை அனைத்துமே இருந்தது. ஒற்றைச் செய்யுளை கற்பிக்க அவர் கிட்டத்தட்ட மொத்த குறவஞ்சியையுமே எங்களுக்கு சொல்லியிருக்கிறார்.

அவர் பாடம் எடுத்ததில்லை. அதை அனுபவிக்கவே கற்றுக்கொடுத்திருந்தார். அவர் விவரிக்கும் அழகு எங்களை பாடத்தில் ஈர்ப்பு கொள்ளச் செய்யும். நான் கிறுக்கல்களில் பெரிய பெரியப் பத்திகளை எழுதும் போது நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள், இதற்கு இத்தனை விவரணைகள் தேவையா? என. இப்போது புரியலாம் தவறு என்னுடையதல்ல என்று. :-).  அது நான் என் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்,
வாழ்க்கையில நான் எடுக்கிற எல்லா முயற்சிகளும் அதற்கான திசையில் சரியான வேகத்தில் முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறது. மனம் நிறைவை உணர்கிறது. முதல் முறையாக, சின்ன வயசிலிருந்தேப் பார்த்துப்பார்த்து வளர்ந்த ஆனந்தவிகடனில் எனது இரு கவிதைகள் அச்சேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் தொடர்ந்து படைப்புகளை அனுப்புங்கள் என்கிற அவர்களின் வார்த்தைகள் இன்னும் சில கிலோ நம்பிக்கையை மனதிற்குள் கொட்டிப்போயிருக்கிறது.

அய்யா, புரிதல்களை சுவரஸ்யமாக பகிரும் கலையை உங்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். உங்களில் ஒரு சதவிகிதமேனும் எனக்கு வாய்க்கப்பட்டிருப்பதாய் பெருமையாய் உணர்கிறேன். இங்கு எது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது உங்களிடமிருந்தே பெறப்பட்டது. நான் உங்கள் மாணவன், இது எனக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்று உங்கள் கரம் பிடித்து சொல்லிக்கொள்ள முடியவில்லை என்பதைத் தவிர நிறைவாய் உணர்கிறேன்.  பகிர்தலும் புரிதலுமே வாழ்க்கை.

*******************************

வேரிலே பழம்பழுத்துத் தூரிலே
சுளைவெடித்து வெடித்த தீந்தேன்
பாரிலே பாதாள கங்கைவந்த
தெனக் குதித்துப் பசுந்தேன் கங்கை
நீரிலே பெருகுகுறும் பலாவிலே
கொலுவிருக்கும் நிமல மூர்த்தி
பேரிலே பிரமைகொண்ட பெண்களிலே
நானுமொரு பெண் கண்டாயே

*******************************

இந்திரை யோவிவள் சுந்தரி யோதெய்வ
ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர
முந்திய தோவெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல வீசுரர்
சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்
யாரிபொற் பந்து கொண்டாடினளே!

*******************************
என் தேடலில் கிடைத்த அவரது நினைவுகள் சில