உடான் - விமானம் - காத்தாடி - ஒரு கனவு

சமீபத்தில் பார்த்த மிகவும் பாதித்த ஒரு படம் உடான், ஹிந்தி படம். மிகப்பெரிய வியாபர இலக்கு கொண்ட பாலிவுட்டில் இதுபோன்ற திரைப்படங்கள் வரவேற்பிற்குடையது. இயக்குனர் விக்ரமாதித்யா மொட்வானி, இவரோடு இணைந்து திரைக்கதை எழுதியிருப்பவர் நம்ம சத்யா புகழ் அனுராக் காஷ்யப். இவர்கள் இருவரும் இதற்கு முன்பே தேவ் டி-யில் இணைந்து வேலை செய்திருகின்றனர். அதே வெற்றிக் கூட்டணிதான் இதிலும் இணைந்திருக்கின்றனர், வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

ஒரு சாதாரண சம்பவத்தையோ, கதையையோ சுவைபட சொல்லும் இவர்களது கதை சொல்லும்முறையே அலாதியானது. தேவ் டி என்பது ஏற்கனவே கேட்டும் பார்த்தும் சலித்த தேவதாஸ் கதைதான், ஆனால் விக்ரமாதித்யா+அனுராகின் கதை சொல்லும் யுக்கிதியாலேயே படம் சுவரஸ்யாமாக இருந்தது. அந்த படத்தை அனுராக் இயக்கியிருப்பார்.

இவ்வளவு ஸ்லோவான ஒரு கதையை இவ்வளவு ரசனையாக சொல்வது அவ்வளவு எளிதல்ல. வேகமான திரைக்கதைகளைக் கொண்ட படங்களைப் பார்க்கும்போது அதிலுள்ள லாஜிக் ஓட்டைகளை நின்று கவனிக்க முடியாதபடி திரைக்கதை இருக்கும், படம் பார்த்து முடித்தபின் குறைகள் தெரியும், ஆனாலும் “அடடா, நம்மை யோசிக்கவே விடலையே” என்று எவ்வளவு மொக்கையான திரைக்கதைகளும் பேர்பெற்றும் விடும். ஆனால் இதுபோன்ற கதைகளை சொல்லும்போது பார்வையாளர்கள் ஒவ்வொரு ப்ரேமிலும் குறைகளை கண்டுபிடித்துவிடக் கூடும். ஆக கூடுதல் கவனம் இதுபோன்ற கதைகளுக்கு மிக அவசியம் தேவை. பொதுவாக வேலையெல்லாம் முடித்து இரவு வீடு சென்ற பின்னரே படங்கள் பார்க்க முடிகிறது, ஒரு படத்தை இரண்டு மூன்று நாட்கள் பார்த்து முடிப்பதுதான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தை ஒரே மூச்சில் கடைசி வரை பார்க்கவைத்துவிட்டனர். காரணம் அதன் திரைக்கதை, நிறைய பில்டப் இருக்கிறதே என்று யோசிக்கவேண்டாம். அத்தனைக்கும் தகுதியான படமே இது.

உடான் என்றால் விமானம் என்று பொருள், ஆனால் நாட்டுப்புறக் கதைகளில் உடான் என்ற சொல்லை விமானம் மட்டுமின்றி சிறுவர்களின் கனவாகவும் அதன் குறீயீடாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனாலேயே இந்த தலைப்பு இந்த கதைக்கு பொருத்தமானதாயிருக்கிறது.

ரோகன், இந்தியாவிலேயே மிகவும் பணக்காரப் பள்ளிகளில் ஒன்றான சிம்லாவிலுள்ள ஒரு பள்ளியில் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவரும் ஒரு மாணவன். எழுத்தாளனாக வேண்டும் என்கிற கனவோடு வாழ்கிறான். பள்ளியில் நடக்கும் ஒரு தவறான நடவடிக்கைக்காக நண்பர்களோடு பிடிபடுகிறான். இது அவர்களுக்கு முதல்முறை அல்ல என்பதால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. தங்களை அழைத்துச்செல்ல வரும் பெற்றோர்களை சந்திப்பதில் நால்வருக்குமே சில பிரச்சனைகள் உள்ளது. ரோகனுக்கு, பள்ளியில் சேர்த்துவிட்டதிலிருந்து எட்டுவருடங்களாக ஒருமுறைகூட வந்து பார்க்காத அப்பாவிடம் போகப்போகிறோம் என்பதே பிரச்சனையாக இருக்கிறது.

ரோகனின் அப்பா ஜிம்மி, ஜாம்செட்பூரில் ஒரு இரும்பு பொருட்கள் செய்யும் பேக்டரி வைத்திருக்கிறார். ஒரு ராணுவக்கட்டுப்பாட்டுடன் பிள்ளைகளை வளர்க்க நினைக்கும் கோபக்காரர், முரடன். வீட்டிற்கு திரும்பும் ரோகனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது வீட்டுச்சூழல். வீடு என்கிற பெயரில் ஒரு சிறைச்சாலையை உணர்கிறான். மேலும் வீட்டில் இன்னொரு அடிமையாக ஆறு வயதில் தனக்கொரு தம்பி இருப்பதையும் பார்க்கிறான். அவன் பெயர் அர்ஜுன். “உன் அம்மா இறந்ததும் நான் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டேன், ஆனால் எனக்கும் அவளுக்கும் சரிவரவில்லை, நாங்கள் பிரிந்துவிட்டோம், இவன் என் மகன், இவன் உன் தம்பி” என்கிறார் அப்பா.

தன்னுடைய அறையில் புதிதாக ரோகனைப் பார்க்கிறான் அர்ஜுன், இவர்கள் இருவரின் சந்திப்பும் உரையாடல்களும் கவிதை. பதினெட்டுவயது பையனுக்கும் ஆறுவயது சிறுவனுக்கும் இடையே மெல்ல பாசம் வளரும் காட்சிகள் அருமை. இதுபோன்ற ஒரு உறவுசிக்கல் கொண்ட இருவருக்கிடையேயான மனநிலைகளை வேறெந்த படத்திலும் பார்த்ததில்லை, மிகவும் புதிதாக இருக்கிறது.

ஜிம்மியின் சகோதரன், அதாவது ரோகனின் சித்தப்பா அதே ஊரில் சில தெருக்கள் தள்ளி வசிக்கிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. ரோகன் வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர், அவனது சித்தப்பாவும் சித்தியும். ஒரு நாள் இரவு உணவின்போது “அப்புறம் ரோகன் பெரிய மனுஷனாயிட்ட, அடுத்து என்ன பண்ணப்போற?” என்கிறார் சித்தப்பா. நான் இலக்கியம் படிக்கப்போகிறேன், எனக்கு எழுத்தாளாரக வேண்டும் என்பது ஆசை என்கிறான். அதற்கு “இல்லை, இவன் இன்ஜினியரிங் படிக்கப்போகிறான், என்னுடைய பேக்டரியில் வேலை செய்துகொண்டே” என்கிறார் ஜிம்மி. “இல்லைண்ணா, அவன் எழுதனும்ன்னு ஆசைப்படுறானே, எத்தனை பேருக்கு இப்படி ஒரு ஆசை வரும் சொல்லு?” என்கிறார் சித்தப்பா.

அதற்கு ஜிம்மி “என் அப்பா என்னிடம் இப்படியெல்லாம் கேடதில்லையே, நாமென்ன கெட்டாபோயிட்டோம், எவ்வளவு பெரிய பள்ளி அது அங்க இங்க கெஞ்சி சேர்த்துவிட்டா பேரைக்கெடுத்துட்டு வந்தி நிக்கிறான், இப்பக்கூட ஒரு பெரிய இன்ஜினியரிங் காலேஜ்ல, கெஞ்சிக்கூத்தாடி இவனுக்கு சீட் வாங்கியிருக்கேன், இவனுக்கு எழுதனுமாம், குர்தா போட்டுகிட்டு நாலு பேர் கைதட்டலுக்கா ஏங்கி தாடி வச்சி தண்ணிய போட்டுகிட்டு.... இதுவாடா உன் ஆசை” என்று கத்துகிறார்.

ரோகன் உங்க அப்பா உங்களை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்திருக்கலாம், ஆனால் எட்டு வருஷம் வந்துகூட பார்க்காம இருந்திருக்க மாட்டார் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான். கோபத்தில் ஜிம்மி அவனை புரட்டியெடுக்கிறான். வீடு திரும்பியதும் “இது என் வீடு, என் உழைப்பில்தான் நீ சாப்பிடுகிறாய், நான் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டும்தான் இங்கே இடம், குரலை உயர்த்தி பேசக்கூடாது, தலைகுனிந்துதான் பேச வேண்டும் என்கிற அந்த வீட்டின் எழுதப்படாத விதிகளை சொல்கிறார். மேலும் தன்னை ”சார்” என்றே அழைக்கவேண்டும் என்கிறார்.

இன்னொரு அடிமையாக அந்த வீட்டில் வாழத்தொடங்குகிறான் ரோகன். காலையிலிருந்து மதியம் வரை அப்பவின் பேக்டரியில் வேலை செய்கிறான், பிரகு கல்லூரி, வீடு. இரவு அப்பா குடித்துவிட்டு தூங்கியதும் அவரது காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான், குடிக்கிறான்.

தன் தம்பியோடு எந்த உறவையும் வளர்த்துகொள்ளவில்லை. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறான். ஒரு நாள், தம்பிக்கு உடல்நிலை சையில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். ஜிம்மிக்கு கல்கத்தா செல்லவேண்டியிருப்பதால், நாலு நாட்கள் அப்பா இல்லாமல் அர்ஜுனோடு தங்க நேரிடுகிறது. ஜிம்மி அடித்ததாலேயே அர்ஜுன் காயப்பட்டிருக்கிறான் என்பதையும், அந்த சிறுவனின் மனவலிகளையும் உணர்கிறான். அன்று முதல் தம்பியோடு பாசமாக இருக்கத்துவங்குகிறான்.

ரோகன், கல்லூரியில் எல்லா பாடங்களிலும் தோல்வியடைகிறான், அதைக்கேட்கும் அப்பாவிடம் எல்லாம் பாஸ் என்று பொய் சொல்கிறான். ஒரு கட்டத்தில் அது தெரிந்து அப்பா அவனை அடிக்கிறார். ”பொய் சொல்பவன் கோழை, பெயில் ஆயிட்டேன்னா உண்மை சொல்லியிருக்கலாம், நீ ஒரு கோழை, அப்படியே உங்கம்மா மாதிரி எதற்கெடுத்தாலும் அழும் ஒரு பெண் நீ” என்று கத்துகிறார், மன்னிப்பு கேள் என்கிறார். ரோகன் “ நீங்களும்தான் பொய் சொல்கிறீர்கள், அர்ஜுன் கீழே விழுந்து அடிபட்டதாக, ஆனால் அவனை மாட்டை அடிப்பதுபோல அடித்திருக்கிறீர்கள், அவன் பள்ளியில் என்ன நடந்தது என்றூ கேட்கிற பொறுமை இல்லை உங்களிடம், நீங்களும்தான் கோழை, நீங்க மன்னிப்பு கேட்க தயாராக இருந்தால் நானும் கேட்கிறேன்” என்கிறான்.

அடுத்த நாள் காலை, ஜிம்மி இருவரிடமும் மன்னிப்பு கேட்கிறான். என் கோபம் என்னை இப்படி நடந்துகொள்ள செய்கிறது. னான் உங்களை நிறைய கொடுமை செய்துவிட்டேன் என்கிறார், மேலும் அர்ஜுன் இனி நீ இங்கே இருக்க வேண்டாம், நீ ஹாஸ்டலுக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது, ரோகன் உனக்கு இன்ஜினியரிங் படிக்க விருப்பமில்லை என்றால் நீ படிக்க வேண்டாம் ஆனால் இந்த எழுதுவதையெல்லா மூட்டை கட்டிவிட்டு என்னோடு முழுநேரமும் பேக்டரியில் வேலை செய் என்கிறார். எனக்கும் அமைதி வேண்டும் நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன் என்கிறார். அப்பா திருந்தப்போவதேயில்லை என நினைக்கிறான் ரோகன்.

சித்தப்பா, ஜிம்மியிடம் “அண்ணா நீ கல்யாணம் பண்ணிக்கிறதுகூட பிரச்சனையில்லை, அர்ஜுனை நினைத்துப்பார், அவன் இன்னும் குழந்தை, அதுக்குள்ள அவனைக்கொண்டு ஹாஸ்டலில்.... வேண்டாம்னா, நீ ரொம்ப ஓவரா போற” என்கிறார். அவரிடமும் கோபித்துக்கொண்டு அவரையும் வீட்டைவிட்டு துரத்துகிறார். ஆதரவாக வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டிருந்த பேசிக்கொண்டிருந்த ஒரே நபரையும் இழந்து விட்டதாக நினைக்கிறான், ரோகன்.

ஜிம்மி ஒரு கட்டத்தில் குடித்துவிட்டு ரோகனிடம் “எட்டுவருசமா உன்னை வந்து பார்க்கலைன்னு சொல்றியே, நான் நிறைய தடவை வந்திருக்கிறேன், நீ உன் நண்பர்களோடு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்தாய், மேலும் அதைவிட உன்னை சந்தோசப்படுத்திவிட என்னிடம் எந்த செய்திகளும் இல்லை, அதனால் உன்னை தொந்தரவு செய்யாமல் திரும்ப வந்துவிடுவேன்” என்று புலம்புகிறான். இதனாலேயே ரோகன் கடைசிவரை வீட்டிலேயே இருக்கிறான். என்றாவது ஒருநாள் அப்பா நம்மை புரிந்து கொள்வார் என்று குழந்தைகளும், குழந்தைகள் நம்மை புரிந்துகொள்ளுமென அப்பாவும் காத்திருப்பார்கள். கடைவரை அது நடக்காமலேயே போனது துரதிஸ்டம்.

நிலைமை இன்னும் மோசமாகிறது, ஒரு கட்டத்தில், அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் தம்பியோடு வீட்டை விட்டு வெளியேறுகிறான். படம் முடிகிறது. ஏன் வெளியேறுகிறான் எப்படி என்பதையெல்லாம் , படம்பார்த்து அனுபவியுங்கள். இது வெறும் படம் அல்ல, நான் அதை இங்கே அறிமுகம் மட்டும் செய்யவில்லை. இது சிலரின் வாழ்க்கை, நான் கண்டது ஒரு அனுபவம். நான் என் சிறுவயதில் இரண்டு முறை வீட்டைவிட்டு வெளியேற முயற்சி செய்தவன்.

ரோஹனாக நடித்த ரஜத் பர்மெச்சா பாடிலேங்வேஜிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறான். குட்டி பயல் அர்ஜுனாக நடித்த ஆர்யனும் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கிறான். குறிப்பாக கிளைமேக்ஸில் “ரோகன் வா போகலாம் என்கிறான்,அர்ஜுன், எங்கண்ணா என்கிறான். உன் அப்பா இல்லாத இடத்திற்கு என்கிறான். அப்போது ஒரு மகிழ்ச்சியை தன் கண்களிலும் முகத்திலும் வெளிப்படுத்துவான் பாருங்கள். ஹா.... தேர்ந்த நடிகர்களே அப்படி நடிப்பது சிரமம். எதுக்காக படம் பார்ப்பீர்களோ இல்லையோ இவனுக்காக பாருங்கள். அப்பா ஜிம்மியாக வரும் ராம் கபூராகட்டும், சித்தப்பாவாக வரும் ரோனித் ரயாகட்டும் அவ்வளவு இயல்பான ஒரு நடிப்பு. பல இடங்களில் கண்கலங்கி பார்த்துக்கொண்டிருந்தேன். அதேபோல இசை, பின்ணணி இசை மிக அற்புதம். கேமிரா ஜாம்செட்பூரின் அழகிய இடங்களை நேரில் பார்த்த உணர்வைத்தருகிறது. டெக்னிக்கலாகவும் நல்ல படம்தான் இது. பாடல்களை இங்கே சொடுக்கிக் கேளுங்கள் குறிப்பாக தீம் மியூசிக்கைகல்யாணம் ஆகி புள்ளைய பெத்த எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். :-)
8 கருத்துரைகள்:

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

நண்பா ,

கலக்கல் விமர்சனம்.வாழ்த்துக்கள்

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

கலக்கல்

எஸ்.கே said...

மிக நல்லதொரு படத்தை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி! பார்ப்போம்!

Vel Kannan said...

மிக நல்ல படம் நல்லவும் எழுதியிருங்க
பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

chandru / RVC said...

good post & good intro nanba!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் நண்பா.. .(யோவ்..ஓட்டுல்லாம் போட்டுருக்கேன்..பாத்து பண்ணுங்க..)

கருந்தேள் கண்ணாயிரம் said...

நண்பா.... உங்க பதிவு, தமிழ்மணத்தில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கு. மனமார்ந்த வாழ்த்துகள். இது எனக்கும் மிகப்பிடித்த படங்களில் ஒன்று. பட்டையைக் கிளப்புங்கள் !

Anonymous said...

Excellent blog you have here but I was curious about if you knew of any
user discussion forums that cover the same topics talked
about here? I'd really love to be a part of online community where I can get advice from other experienced people that share the same interest. If you have any recommendations, please let me know. Thanks!

Feel free to visit my web blog ... pure garcinia cambogia

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.