அகம், லீலை, காலைப்பனி.......ஒரு இசை அனுபவம்

சென்ற வாரம் நண்பனோடு பேசிக்கொண்டிருந்தபோது, அதிகம் சினிமாவும் இசையும் எழுதுகிறாயே? உனக்கு இந்த இரண்டுமே உனக்கு முறையாகத் தெரியாதேடா? என்றான் நண்பன் கிண்டலாக. மேலும் “நீ சொன்ன சில திரைப்படங்களைப் பார்த்தேன், என்னடா மச்சான், மொக்கை போட்டுடுச்சுடாஎன்றான். பாஸ் படத்தில் வருகிற சந்தானம் ஸ்டைலில் “வாழ்க்கை என்பது ஒரு அனுபவம்தானே, எக்ஸ்பீரியன்ஸ் மேக்ஸ் தி மேன் பர்ஃபெக்ட்என்றேன்.
இரண்டுமே கிண்டலாக இருந்தாலும் அதுதான் உண்மை. என்னுடைய பதிவில் நான் சொல்வது உலக திரைப்படங்கள் அல்ல, உலகமே கொண்டாடக்கூடிய இசை அல்ல. என் அனுபவம். என்னுடைய ரசனைக்குட்பட்ட இசையும் திரைப்படங்களும் மட்டுமே. என்னுடைய இசை அறிவு இரண்டு மாதங்கள் கிடார் மற்றும் கீபோர்ட் வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன் என்பதோடு சரி. தவிர சினிமாக்களும் இணையம் இலவசமாகக்கிடைப்பதால் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு நல்ல திரைப்படங்களை தேடி பார்த்துவருகிறேன். 
ஒத்த மனவோட்டங்களைக்கொண்ட நண்பர்களுக்கு உதவுமெனதேடிப்பிடித்த, படித்தஎன் மனதுக்கு நெருக்கமானவற்றை, முகம்காணா நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள பதிவு செய்து வைக்கிறேன். அவ்வளவே. நான் குறிப்பிடுகிற படங்களும், இசையும் மிகச்சிறந்தது என்கிற எந்த வியாக்ஞானமும் என்னிடம் இல்லை. எனக்குப்பிடித்திருக்கிறது என்கிற ஒரே தகுதியின் அடிப்படையில்தான் அவை பதிவாகின்றன.
    ஒருசமயம் கொரியத்திரைப்படங்களின் சாயல் பிடித்துப்போய், கொரியத்திரைப்படங்களாய் எழுதிக்கொண்டிருந்தபோது அண்ணன் வண்ணத்துபூச்சி சொன்னார், கொரிய படங்களில் நம்ம ஊர் படங்களைக்காட்டிலும் மொக்கையான படங்கள் உண்டு, தேர்வு செய்வதில் கவனம் தேவை என்று அதுபோல  உங்களுடைய கருத்துக்களையும் விமர்சங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அது பதிவின் தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும்.
       இந்த பதிவில் அதிகம் கவனம்பெறாத, நல்ல இசைகளையே சொல்ல இருக்கிறேன்
**********************************************************************
1. அ க ம் தி பே ண் ட் - A G A M T H E  B A N D
பேஸ்புக்கில் அதிக பழக்கம் இல்லாததால் அதிகம் அதில் புழங்குவது கிடையாது. இப்போதுதான் நண்பர்களின் தொடர் அழைப்புகளால் அதில் தலைகாட்டத் துவங்கியிருக்கிறேன். அதில் மிக சமீபத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் அவர்களின் பக்கத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல் அகம் என்ற பேண்டிற்காகப் பாடிய, மார்பக புற்றுநோயிற்கெதிரான விழிப்புணர்வு பாடலை சுட்டியிருந்தார். அதன் மூலம் அகம் பேண்டின் அறிமுகம் கிடைத்தது.
ஹரீஸ்- வயலின், சுவாமி -கீபோர்ட், ப்ரவீன், சூரஜ் - கிடார், விக்னேஷ்-பாஸ்கிடார், கணேஷ் - ட்ரம்ஸ், சிவா- பாடகர், இந்த இளைஞர்களின் குழுதான், அகம் தி பேண்ட்.  பெங்களூரில் இருந்து இயங்கிவரும் இந்தக்குழுவினரின் இசைவடிவம், ராக்பேண்ட் அல்ல, மாறாக கர்நாடிக் பேண்ட். கர்நாடக இசையும் மேற்கத்திய இசையும் கலந்த பியூஷன் வகையைச் சேர்ந்தது.
 மேற்கத்திய இசையின் பின்புலத்தோடு சுத்தமாய் கர்நாடக இசைக்கலந்து கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. கர்நாடக இசையும் சரி, மற்ற இசையும் சரி முழுமையாக தெரியாததால் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியவதில்லை, இசையோடு மட்டுமே ஒன்ற முடிகிறது.  அவசியம் கேளுங்கள்
லட்சியபாதை என்கிற இந்த பாடல் இவர்களின் பானையின் ஒரு சோறு. லட்சியபாதை மற்றும் அம்மா என்ற தாலாட்டுப்பாடலும் இனிமை. எனக்கு இவர்களின் மொத்தப்பாடல்களும் பிடித்திருக்கிறது. 

இவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கி தெரிந்துகொள்ளுங்கள்

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இவர்களின் பேஸ்புக் அக்கவுண்டிலேயே பாடல்களைக் கேட்க முடியும், டவுன்லோட் செய்துகொள்ள இன்னும் வசதி செய்யப்படவில்லை, ஒரிரு பாடல்களைத் தவிர. மற்றவர்களுக்கு இவர்களது இணையமுகவரியான http://agamtheband.in/ ல சென்று பாடல்களை ஆன்லைனில் கேட்க முடியும்.
**********************************************************************
2. ச தீ ஸ் ச க் ர வ ர் த் தி
சதீஸ் சக்ரவர்த்தி, ஏ.ஆர்.ரகுமானின் பட்டறையில் பயின்றவர். ஜானேது ய ஜானேனா படம் வரை அவரோடு பணியாற்றியிருக்கிறார். லீலை இவரது முதல் படம் 2009 லேயே பாடல்கள் வெளிவந்து பரவலான கவனம் பெற்றிருந்தாலும் இன்னும் வெளிவராத ஒரு படம். ஏர்டெல் விளம்பரத்தில் வரும் ஷிவ் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணிய ஒரு படம். அதன் ட்ரெய்லர்கள்.
ட்ரெய்லர் 1                    
 ட்ரெய்லரைப் பார்த்தே, கேட்டே அதன் மேக்கிங்கிலும் இசையிலும் ஒரு அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை லீலை மற்றும் கனிமொழி என இவர் இசையமைத்த  இரண்டு படங்களின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. இவரது குரல் மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு இணையத்தளத்திற்காக இவரளித்த பிரத்தேயகப் பேட்டி, பாகம் 1, பாகம் 2

லீலையிலிருந்து எனக்கு பிடித்தமான இரண்டு பாடல்கள்.

 இந்த இரண்டு பாடல்களும் மிகவும் அருமையான பாடல்கள், மேலும் விஷேசம் இந்த இரண்டு பாடல்களுமே சதீஸ் சக்ரவர்த்தியே பாடியிருப்பது. கிட்டதட்ட கார்த்திக்கின் குரல். அதுவும் இரண்டாவது பாடலில் ஸ்ரேயாவுடன் சேர்ந்து வசீகரிக்கிறது இவரது குரல்.
**********************************************************************
    3. ச தீ ஸ் ரா ம லி ங் க ம்
காலைப்பனி என்ற படத்தில் குறிப்பிட்டும்படியான இரண்டு பாடல்கள் பற்றி நண்பர் வெங்கடேஷ் சொல்லியிருந்தார். இணையத்தில் தேடியபொழுது ஏற்கனவே வெளியாகி டீவியில்கூட ஒளிபரப்பாகிவிட்ட ஒரு படம் இந்த காலைப்பனி. ரம்யமான இரண்டு பாடல்களைக் கொடுத்தும் கவனம் பெறாமல் போன இன்னொரு இசையமைப்பாளர், சதீஸ் ராமலிங்கம். FIRST Impression is Should be a best impression என்று சொல்வதுபோல நல்ல திறமை இருந்தும் பெரிய ஓப்பனிங் கிடைக்காத ஒரு கலைஞன் என்றே நினைக்கிறேன்.

ஒரு விளம்பரம்............

சமீபத்தில் நண்பர் செல்வமிடம் (கடலையூர்)  பேசிக்கொண்டிருந்த போது, எந்திரனின் வியாபார யுக்தியையும் விளம்பரங்களையும்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். வீட்டில் தேமேவென இருப்பவர்களையும் கூட விளம்பரம் என்கிற பெயரில் வீட்டைவிட்டு, தியேட்டர்களுக்குள் தள்ளுகிற ஒரு கார்ப்பொரேட் கொள்ளைதான். இந்த சினிமா விளம்பரங்கள். முன்பெல்லாம் போஸ்ர்களும், பாடல்களுமே திரைப்படங்களுக்கு ஒரு அடையாளத்தையும் முகவரியையும் கொடுத்துவந்தது. இப்பொழுது, இரண்டரை மணிநேர முழுநீள படத்தில் தேறும் இரண்டு மூன்று காட்சிகளை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி கவருவது எந்த விஷயத்தில் புத்திசாலித்தனம் என்று புரியவில்லை. இது எந்திரனுக்கு மட்டுமல்ல.

செய்திகளுக்கு பாடல்களுக்கு படங்களுக்கு என ஆறு ஏழு சேனல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் குறைந்தது அரை மணிநேரத்திற்கு ஒரு முறையாவது திரைப்பட விளம்பரங்கள் இடம்பெறுகிறது. எந்திரன் கூட பரவாயில்லை, சில மொக்கைப்படங்களையும் இதேபோல விளம்பரப்படுத்தி வருகின்றனர். சன் குழுமம் அறிமுகப்படுத்திய இந்த மோசமான விளம்பர யுக்தியை தற்சமயம் அனேகமாக அனைத்து சேனல்களும் கடைபிடிக்கின்றன. மிகுந்த அயற்சியை உண்டுபண்ணுகிற விஷயங்கள்.

சரி இவர்கள்தான் இப்படி என்றால், துணிக்கடை விளம்பரங்களும் நகைக்கடை விளம்பரங்களும் அடடடா...... அதுவும் தீபாவளி மற்றும் எதாவது பண்டிகை சமயங்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம், அரைமணி நேரத்திற்குள்ளாக அரைடஜன் விளம்பரங்கள். தீபாவளி என்றாலே புத்தாடைகள் உடுத்துவதும் புதிய பொருட்களை வாங்குவதும்தான் என்றாகிவிடும்போல, இனிவரும் எதிர்காலங்களில்.

சரி கோடிகோடியாய் பணத்தை கொட்டி முதலீடு செய்த வியாபரம் இது, இதுபோல விளம்பரங்கள் இல்லையென்றால் என்ன செய்வது, இது ஒரு வகை வியாபரயுக்திதானே என்பவர்களுக்கு, நான் சொல்வது, முறைப்படுத்துதல். ஒரு வறையறை வகுத்துக்கொள்ளுங்கள் எனபதுதான். முறையற்ற எதுவும் மோசமான தீர்வுகளையே கொண்டிருக்கின்றன. 

 நீ படிச்சவந்தானே? நீயேன் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுகிறாய், சரியான பொருட்களை நீயே கடையேறி தேர்வு செய்யவேண்டியதுதானே என்பத்தெல்லாம் வாதத்திற்கு சரியாக இருக்கலாம். நீங்கள் வேண்டாமென்றாலும் உங்கள் மனைவி சொல்லலாம், ஏங்க இந்த கடைக்கு போகலாம் என்று, இல்லை உங்கள் குழந்தை சொல்லலாம் இன்று அனேக விளம்பரங்கள் இந்த இருவரைத்தான் அதிகம் குறிவைக்கிறது. சத்தமாய் சொல்வது உண்மை, அதிகம் விற்பது நல்லது எனகிற ஒரு பொதுபுத்தியை இது மக்களுக்கு சொல்லிக்கொடுக்கிறது. வாடிக்கையாளர்களை, பார்வையாளர்களை அவர்களின் புத்தியை மழுங்கடிக்கச்செய்யும் ஒரு ஆயுதம்தான் இதுபோன்ற விளம்பரங்கள்.

சரி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நிறுத்திக்கொள்ள உங்களிடம்தான் ரிமோட் இருக்கிறதே. ஆம் அதைத்தான் சொல்லவந்தேன். செல்வம் அவருடைய அப்பாவின் ஆலோசனைப்படி அவர் தனது வீட்டில் இப்படி ஒரு முறையத்தான் கடைபிடித்து வருகிறாராம். அதாவது நிகழ்ச்சியின் இடையே வரும் விளம்பர இடைவேளையை ம்யூட் செய்துவிடுவது. அட்லீஸ்ட் அந்த நேரத்திலாவது வீட்டிற்குள் பேச நேரம் கிடைக்குமே. எட்டு வயது பிள்ளையை கற்பழித்து கொள்வதாகட்டும், நரமாமிசம் சாப்பிடும் அகோரிகளாகட்டும் நாம் சாப்பிட்டுக்கொண்டே ரிலாகஸ் செய்ய டீவி பார்க்கிற அந்த நேரத்தில் நமது அனுமதியின்றி  நமக்கு சரிசமமாக நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்துபோவதுபோல இந்த விளம்பரங்கள். ஆனால் எல்லா விளம்பரங்களும் அப்படியிருப்பதில்லை என்பது வரை மிகிழ்ச்சி. 

த்ரிஷா வருகிற போத்தீஸ் விளம்பரம், இருவத்தியஞ்சு வருஷமாச்சு இன்னும் பொண்ணோட மனச புரிஞ்சிக்கலை என்று சொல்லும் நகைக்கடை விளம்பரம், தீபாவளிக்கு மாமனார், மாமியாரைக்கூட்டிவரும் மாப்பிளையாக, ஒரு கேட்பரீஸ் சாக்லெட் விளம்பரம் இப்படி சில விளம்பரங்கள் அதன் மேக்கிங்கிற்காகவும், அதில் வருபவர்களுக்காகவும் திரும்பதிரும்ப பார்ர்க்கும்படியான சில விஷயங்கள் விளம்பரங்கள் வரத்தான் செய்கிறது. அதிகமாக இரண்டு நிமிடங்களில் பார்வையாளர்களைக்கவர அவர்களின் பிரயத்தனம் மிகவும அதிகம். என்னைப்பொருத்தவரை விளம்பரங்கள் ஒரு குறும்படங்கள். அவை தமது ப்ராடக்டை விற்க வலியுருத்தத் தேவையில்லை. அந்ததந்த பொருட்களை நியாபகப்படுத்தினாலே போதும். இன்றைய தேதியில் கிரியேடிவ் அர்வர்டைசிங் என்ற பிரிவில் பாடங்களே வருகின்றன. 

விளம்பரப்படுத்தவேண்டிய பொருளை விளம்பரத்தின் ஏதாவதொரு நொடியில் சொல்லிவிட்டுப்போவது, ஒரு கான்செப்ட் வைத்துக்கொண்டு அதன் படி விளபரப்படுத்துவது, சில நிறங்கள் போதும் அந்த கம்பெனியை நினைவில் கொண்டுவர, இப்படி விளம்பரத்துறையும் வளர்ந்து வரும்வேளையில் இதுபோன்ற மலிவான விளம்பரங்கள் அந்த முன்னேற்றத்தைத் தடுத்துவிடுகிறது என்பதுதான் கடினமாக இருக்கிறது.

ரொம்ப பிடிச்ச கேட்பரீஸின் இரண்டு விளம்பரங்கள்
காதலும் பாசமும் கூடவே இசையும் கலந்த கடைசி பாடல்

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், ஏற்கனவே இவரை பற்றி எழுதியாயிற்று. இது இவரது அடுத்த, கடைசியாய் வெளிவந்த நாவலைத்தழுவிய திரைப்படம். நாவல், படம் இரண்டின் பெயருமே தி லாஸ்ட் சாங். வழக்கம்போல திரைக்கதையை அவரே எழுதியிருக்கிறார். இசையும் காதலும் வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்றுகிறது என்பதைச் சொல்லும் இன்னுமொரு படம். இதுதான் எனக்கு பிடித்தமான வகைப்படங்கள். இவற்றைப் பார்க்கும்போதும் எழுதும்போதும் நான் அமைதியாய் என்னையே திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்.


சரி கதைக்குள் போகலாம், ரோனி, பதின்ம வயதிலிருக்கும் ரோனி தன் தம்பி ஜோன்னாவுடன் கொலம்பியாவிலிருந்து ஒரு கடற்கரை கிராமத்திற்கான பயணத்திலிருக்கிறாள். கோடை விடுமுறைக்கு அவளது அப்பா (ஸ்டீவ்) இருக்கும் ஊரான அங்கு அம்மாவின் உந்துதலால் வேண்டாவெறுப்பாக செல்கிறாள். குழந்தைகளை பற்றிய எந்த கவலையும் இல்லாம விவாகரத்து செய்து கொண்ட பெற்றோர்கள் மீது கோபமாய் இருக்கிறாள், இந்த கோபம் அவளை எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாகவும், மிகக்குறைந்த நம்பகத்தன்மையோடுமே அணுகச் செய்கிறது.

இதனால் அவளது அப்பாவுடன் மூன்று வருடங்களாக பேசாமல், தொடர்பற்று இருக்கிறாள். ஒன்றாக இருந்த நேரங்களில் பியானோ கலைஞரான அவளது அப்பா கற்றுக்கொடுத்த பியானோ வாசிப்பதையும் அவை மீதிருக்கும் வெறுப்பினால் தவிர்த்துவருகிறாள். கடற்கரையை ஒட்டிய ஒரு ரம்மியமான இடத்தில் இருக்கிறது அப்பாவின் வீடு. ஸ்டீவ் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பியானோ இசைக்கலைஞன், அவரது கவனக்குறைவால் நடந்த விபத்து என கருதப்படும் ஒரு தீவிபத்தில் சேதமான சர்ச்சின் கண்ணாடிகளை சரிசெய்வதும், ஓய்வு நேரத்தில் தன் மனதிற்கு நெருக்கமான ஒரு பாடலை கம்போஸ் செய்வதுமாய், தனித்திருக்கிறார். குழந்தைகளின் வருகை அவரை மகிழ்ச்சியடைய செய்கிறது. ஜோன்னாவிற்கும், அந்த இடமும் அப்பாவோடு இருப்பதும் மிகவும் பிடித்திருக்கிறது. அவன் தனது அப்பாவின் அருகாமையை விரும்புகிறான். ஆனால் ரோனி அப்பாவிடமிருந்து விலகியிருக்க முயல்கிறாள். ஆக, அதிக நேரம் வீட்டிற்கு வெளியே செலவிடுகிறாள்.

அப்போது ப்ளேஸ் எனும் நாடோடிபெண்ணோடு பழகுகிறாள். அவள், மார்கஸ் என்ற ஒருவனோடு வசித்து வருகிறாள். ஒரு இரவில் மார்கஸ் ரோனியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறான். அதைப் பார்க்கும் ப்ளேஸ் ரோனியை தவறாக நினைக்கிறாள். அந்த கோபத்தில் ஒருநாள் அங்காடியில், திருட்டுப் பொருளை ரோனியின் கைப்பையில் போட்டுவிட்டு அவளை சிக்கலுக்குள்ளாகுகிறாள். ரோனி திருடிவிட்டதாய் அவள் அப்பாவிற்கு செய்திபோகிறது, அவரும் வந்து ரோனியை மீட்டு செல்கிறார். 

ரோனிக்கு இது மிகவும் அவமானமாக இருக்கிறது, அவள் தன்னை நிருபித்துக்கொள்ளவேணும் அவரோடு பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, பேசுகிறாள். அவளை நம்புவதாக சொல்கிறார், ஸ்டீவ். மேலும் நீ அருமையாக பியானோ வாசிக்க்கூடியவள், அதை நிறுத்தாதே, எல்லோராலும் ஆகக்கூடிய விஷயமல்ல அது என்கிறார். அதற்கு ரோனி, இனி எதற்காகவும் நான் பியானோவை தொடுவதாயில்லை என்கிறாள். அப்பா, மெளனமாய் புதிதாக எழுதிக்கொண்டிருக்கும் பாடலுக்கான நோட்ஸை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ரோனி வில் என்ற இளைஞனை சந்திக்கிறாள். வில் ரோனியிடம் பழக முயற்சிக்கிறான். ரோனியின் முன்னெச்சரிக்கை மனது அவளை வில்-லிடமிருந்து விலகியே இருக்கச்செய்கிறது. ரோனி பெரும்பாலான இரவுகளை கடற்கரையிலேயே செலவிடுகிறாள். அங்கு மற்ற விலங்குகளால் அடிக்கடி வேட்டையாடப்படும் கடல் ஆமைமுட்டைகளை பார்க்கிறாள். அதனால் அதனை சுற்றி வேலிஅமைத்து இரவுமுழுவதும் அங்கேயே காவலும் இருக்கிறாள். இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் வில் அவளைப் பார்க்கிறான். சில இரவுகளை ரோனியோடு பேசிக் கழிக்கிறான். வில்லின் மென்மையான மனதும், உண்மையான மனதும் ரோனிக்கு மெல்ல புரிகிறது. இருவரும் காதல்வசப்படுகின்றனர். மென்மையான இசையோடு காதல் வளர்கிறது.

காதல் ரோனியின் மனதை மாற்றுகிறது. அப்பாவோடும் தம்பியோடும் நெருக்கமாக பழகுகிறாள், அப்பாவின் மென்மையான மனதை உணரத்தொடங்குகிறாள். வில்லின் வீட்டிற்கு செல்லும் ரோனி, வில் ஒரு பணக்காரன் என்பதை அறிகிறாள். அவனுக்காக பியானோ வாசிக்கிறாள். வீடு திரும்பியதும் மிகவும் மகிழ்ச்சியுடன், அப்பாவிடம் “ நான் இன்று வாசித்தேன் என்கிறாள். அதை கேட்டு அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். “காதலும் இசையும் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று வாழ்த்துகிறார்.

மனதிற்கு இசைவானவனோடு காதலும், அப்பாவின் அன்பும் ரோனிக்கு அந்த கோடை விடுமுறையை அவளது வாழ்வின் மிக அழகான நாட்களாக மாற்றியிருக்கிறது. இச்சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்படுகிறார், ஸ்டீவ். அவருக்கு கேன்சர் இருப்பதும் அறிந்து மனமுடைந்து போகிறாள். அம்மா வலுக்கட்டயமாய் அப்பாவிடம் அனுப்பியதன் பின்புலனை உணர்கிறாள். மருத்துவமனையில் அப்பாவோடே இருக்கிறாள். வீட்டில் அவள் தம்பியும், வில்லும் சேர்ந்து அப்பாவின் சர்ச் கண்ணாடிகளை சரிசெய்யும் வேலைகளை கவனிக்கின்றனர்.

அந்த தீ விபத்துக்கு ஸ்டீவ் காரணமில்லை, தன்னுடைய நண்பனின் அஜாக்கிரதைதான் காரணம் என்று வில்லிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. சாகும்போது ஸ்டீவ் அந்த அவப்பெயரோடு போகவேண்டாமென நினைக்கிறான். நண்பனிடம் கெஞ்சி அவனை ஸ்டீவிடம் அழைத்துவருகிறான். முன்னமே தெரிந்திருந்தும் தன்னிடம் மறைத்ததற்காக வில்லிடம் சண்டை போடுகிறாள், ரோனி. சண்டை அவர்களின் பிரிவில் முடிகிறது. வில்லும் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களின் பிரிவு சாத்தியப்படுகிறது.

விடுமுறை முடிந்து ரோனியும் ஊருக்கு செல்ல வேண்டிய நேரம், அப்பாவைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் கதறும் ஜோன்னாவிடம் “அப்பா எங்கயும் போக மாட்டேன், எப்போதெல்லாம் உன் ஜன்னலில் வழியாக ஒளி வருகிறதோ, அது நான்தான், எப்போது உன்னோடுதான் இருப்பேன் என்று சொல்லி அனுப்பிவைக்கிறார். ரோனி, தம்பியை மட்டும் அம்மாவோடு அனுப்பிவிட்டு அப்பாவோடே தங்குகிறாள்.அப்பாவுடன் சேர்ந்து LAST SONG  என்ற அந்த பாடலை எழுதுகிறாள். ஒரு மாலை நேரம் ரோனி பியானோ வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்டீவ் இறந்துவிடுகிறார். 
அவரது இறுதி சடங்கு அதே சர்ச்சில் நடக்கிறது, விபத்திற்கு பிறகு புதிதாக பொருத்தப்பட்ட ஜன்னல்களின் வழியாக ஒளி உள்ளே பாய்கிறது, அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, அவர் முடிக்காமல் சென்ற பாடலை வாசிக்கிறாள். நெகிழ்ச்சியான இசை பரவுகிறது. கணத்தமனதுடன் வெளியேறுகிறான் வில். வெளியேவரும் ரோனியிடம் பேச முயல்கிறான், உறவினர்களின் விசாரிப்புகளில் மூழ்கிப்போகிறாள், ரோனி.

அப்பாவின் பொருட்களையெல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு கொலம்பியாவிற்கு புறப்பட ஆயத்தமாகிறாள். எப்போதும் சந்திக்கும் கடற்கரையில் வில் தனியாக நின்றிருக்கிறான். அவனிடம் ரோனி ஏன் இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையா? என்கிறாள். இல்லை நானும் என்னுடைய படிப்பை கொலம்பியாவிற்கே மாற்றிக்கொண்டேன் ஏனென்றால் நான் விரும்பும் பெண் அங்கேதான் போகப்போகிறாள், என்கிறான். மகிழ்ச்சியான தருணம், மீதத்தை இசை நிரப்புகிறது. அப்பாவின் பியானோவை காரில் கட்டிக்கொண்டு கொலம்பியா செல்கிறாள் ரோனி. குலுங்கியபடியே பின்னால் போகிறது பியானோ...... மெல்லிய இசையோடு படம் முடிகிறது.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸும், இயக்குனர் ஆனி ராபின்ஸனும் படத்தின் பாடல்களை பற்றி சொல்லும் ஒரு வீடியோ கிளிப்பிங்.  டியர் ஜான் படத்தைப்போலவே இந்தப் படத்திலும் எல்லா பாடல்களும் ஹிட். இந்தப்படத்தின்  நாயகி மைலி சைரஸ் பாடிப் பிரபலமான இந்த படத்தின் பேமஸ்  சவுண்ட் டிராக்... மேலும் படத்தின் உயிரான அந்த  தி லாஸ்ட் சாங்

ஓட்டு போடுங்க நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும்.

அமீத் திரிவேதி

நம்ம சசிக்குமார் & கோ மாதிரி நார்த் சைடின் ஒரு உருப்படியான டீம்தான், அனுராக் காஸ்யப். ராஜ்குமார் குப்தா, விக்ரமாதித்யா மொட்வானி, மற்றும் அமீத் திரிவேதி இவர்களெல்லாம். ஒருவர் படம் இயக்கும்போது ஒருவர் தயாரிப்பார், இன்னொருவர் இசையமைப்பார், இன்னொருவர் அதற்கு திரைக்கதை எழுதுவார், இப்படி ஒரே படத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். அனைவரும் இளைஞர்கள், புதுப்புது டெக்னாலஜியை உபயோகப்படுத்திப் பார்ப்பதிலும், மரபுகளை உடைத்து கதை சொல்வதிலும் கெட்டிக்காரர்கள். அதிகமாக இந்த கூட்டணி வெற்றிப்படங்களையும் , நல்ல படங்களையுமே கொடுத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

போன பதிவில் உடான் திரைப்படம் பற்றி எழுதியிருந்தேன். அதே பதிவிலேயே உடானின் இசையமைப்பாளர் அமீத் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். அனால் கடந்த பதிவில் இசை பற்றி அதிகம் எழுத முடியவில்லை. காரணம் பதிவின் நீளம். கொஞ்சம் நீளமான பதிவென்றாலே படிப்பது சிரமமான ஒன்றாகிவிடுகிறது. சமீபத்தில் காத்திகைப்பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட இதப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். தொடரும் என்று போட்டு இன்னொரு பதிவாக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை, என்னால் அப்படியான பதிவுகளை படிக்கவே முடிவதில்லை. அதனால் கூடுமானவரை சற்று நீளமானாலும் ஒரே பதிவில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

சரி மேட்டருக்கு வருவோம். அமீத் திரிவேதி - திரை இசைக்கலைஞர் - இசையமைப்பாளர்.முதலில் ஜிங்கில்ஸ் எனப்படும் விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தவர், ஆமிர் என்ற ஹிந்திப்படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் நுழைந்தார். இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் குப்தா. இவர் அனுராகிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான்.

இவரது இரண்டாவது படமான தேவ் டியிலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெற்றிருக்கிறார். தேவ்தாஸ் கதை என்றாலே இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். மனுஷன் இந்தப்படத்தில் பூந்து விளையாடியிருப்பார். தேவ் டி-பற்றி நீண்ட நாட்களாகவே எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இயல்பாகவே உடான் முந்திக்கொண்டது. அவசியம் தேவ் டி படம் பாருங்கள் மாடர்ன் ராமாயணமான ராவணாவின் முன்னோடி, மாடர்ன் தேவதாஸ். படத்தோட மேக்கிங்கிற்காக, ஒளிப்பதிவு மற்றும் இசைக்காவாவது அவசியம் பார்க்கவேண்டிய படம்.

ஆமிர், தேவ் டி, வேக் அப் சித், உடான், ஆயிஷா என இதுவரை ஐந்து படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார், இவரது இசை வடிவம் பேண்ட் வகையை சேர்ந்தது. ராஜாவின், ரகுமானின் இசையை மேடையில் செய்ய ஆர்கெஸ்ட்ரா தேவைப்படும். இந்த பேண்ட் வகையில் ஒரு கிடாரிஸ்ட், ஒரு டிரம்மர், ஒரு பேஸ் கிடாரிஸ்ட் இருந்தால் போதும் அட்சரசுத்தமாக கேசட்டில் இருக்கிற இசையை கொடுத்துவிட முடியும். சிம்பிள் பட் காம்ளிகேட்டட், வகை.

மேலும் தேவ் டியில் இவரது இசை மிகவும் புதுமையாக இருக்கும், நிச்சயம் இது ரசிகர்களை சென்று சேருமா? என்கிற கேள்வி இசையமைக்கும்போதே அவருக்கு இருந்திருக்கும், ஆனால் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்ஹ்டு கொண்டாடுகிறார்கள். மாற்றம் மிக அவசியமான ஒன்றுதானே.. வேக் அப் சித் படத்தில் வரும் இக்குதாரா என்கிற பாடல் இந்த வருடத்தில் அதிகம் முனுமுனுக்கப்பட்ட பாடல் என்று சொல்லப்படுகிறது.

தேவ் டியின் இசைபற்றி சமீபத்தில் சாருநிவேதா அவர்கள் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்ட பாடல் ஓ பர்ர்தேசி...... இந்த பாடலும் சரி மற்ற பாடல்களும் சரி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்தான். புதுமையான இசை கேட்க விரும்புபவர்கள் தாராளமாக அமீத்தின் இசையைக் கேளுங்கள்.

எனக்குப் பிடித்த அவரது சில பாடல்கள் இங்கே,
அமீர் படத்திலிருந்து ஹாரகம் ஹாரகம்
தேவ்டியிலிருந்து ஓ பர்தேசி..... ஓ பர்தேசி.....
வேக் அப் சித் படத்திலிருந்து இக்குதரா இக்குதரா 

 உடானிலிருந்து
ஆசாதி       உடான் பாடல்            நாவ் ஹே தேரி             கீத்              மற்றும் உடான் ட்ரெய்லர்

இவரது இசையில் அதிகம் பாடியிருக்கும் டோச்சி ரெய்னா பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும். அப்படியே கைலாஸ்கெரின் குரல் மனுசனுக்கு, எவ்வளவு உச்சஸ்தாயிலும் பிசிரடிக்காமல் சுவரம் பிசகாமல் பின்னியெடுக்கிறார், டோச்சி. பர்தேசி, இக்குதரா இரண்டு பாடலையுமே பாடியிருப்பது இவர்தான்.