காதலும் பாசமும் கூடவே இசையும் கலந்த கடைசி பாடல்

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ், ஏற்கனவே இவரை பற்றி எழுதியாயிற்று. இது இவரது அடுத்த, கடைசியாய் வெளிவந்த நாவலைத்தழுவிய திரைப்படம். நாவல், படம் இரண்டின் பெயருமே தி லாஸ்ட் சாங். வழக்கம்போல திரைக்கதையை அவரே எழுதியிருக்கிறார். இசையும் காதலும் வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்றுகிறது என்பதைச் சொல்லும் இன்னுமொரு படம். இதுதான் எனக்கு பிடித்தமான வகைப்படங்கள். இவற்றைப் பார்க்கும்போதும் எழுதும்போதும் நான் அமைதியாய் என்னையே திரும்பிப் பார்த்துக்கொள்கிறேன்.


சரி கதைக்குள் போகலாம், ரோனி, பதின்ம வயதிலிருக்கும் ரோனி தன் தம்பி ஜோன்னாவுடன் கொலம்பியாவிலிருந்து ஒரு கடற்கரை கிராமத்திற்கான பயணத்திலிருக்கிறாள். கோடை விடுமுறைக்கு அவளது அப்பா (ஸ்டீவ்) இருக்கும் ஊரான அங்கு அம்மாவின் உந்துதலால் வேண்டாவெறுப்பாக செல்கிறாள். குழந்தைகளை பற்றிய எந்த கவலையும் இல்லாம விவாகரத்து செய்து கொண்ட பெற்றோர்கள் மீது கோபமாய் இருக்கிறாள், இந்த கோபம் அவளை எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையாகவும், மிகக்குறைந்த நம்பகத்தன்மையோடுமே அணுகச் செய்கிறது.

இதனால் அவளது அப்பாவுடன் மூன்று வருடங்களாக பேசாமல், தொடர்பற்று இருக்கிறாள். ஒன்றாக இருந்த நேரங்களில் பியானோ கலைஞரான அவளது அப்பா கற்றுக்கொடுத்த பியானோ வாசிப்பதையும் அவை மீதிருக்கும் வெறுப்பினால் தவிர்த்துவருகிறாள். கடற்கரையை ஒட்டிய ஒரு ரம்மியமான இடத்தில் இருக்கிறது அப்பாவின் வீடு. ஸ்டீவ் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பியானோ இசைக்கலைஞன், அவரது கவனக்குறைவால் நடந்த விபத்து என கருதப்படும் ஒரு தீவிபத்தில் சேதமான சர்ச்சின் கண்ணாடிகளை சரிசெய்வதும், ஓய்வு நேரத்தில் தன் மனதிற்கு நெருக்கமான ஒரு பாடலை கம்போஸ் செய்வதுமாய், தனித்திருக்கிறார். குழந்தைகளின் வருகை அவரை மகிழ்ச்சியடைய செய்கிறது. ஜோன்னாவிற்கும், அந்த இடமும் அப்பாவோடு இருப்பதும் மிகவும் பிடித்திருக்கிறது. அவன் தனது அப்பாவின் அருகாமையை விரும்புகிறான். ஆனால் ரோனி அப்பாவிடமிருந்து விலகியிருக்க முயல்கிறாள். ஆக, அதிக நேரம் வீட்டிற்கு வெளியே செலவிடுகிறாள்.

அப்போது ப்ளேஸ் எனும் நாடோடிபெண்ணோடு பழகுகிறாள். அவள், மார்கஸ் என்ற ஒருவனோடு வசித்து வருகிறாள். ஒரு இரவில் மார்கஸ் ரோனியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கிறான். அதைப் பார்க்கும் ப்ளேஸ் ரோனியை தவறாக நினைக்கிறாள். அந்த கோபத்தில் ஒருநாள் அங்காடியில், திருட்டுப் பொருளை ரோனியின் கைப்பையில் போட்டுவிட்டு அவளை சிக்கலுக்குள்ளாகுகிறாள். ரோனி திருடிவிட்டதாய் அவள் அப்பாவிற்கு செய்திபோகிறது, அவரும் வந்து ரோனியை மீட்டு செல்கிறார். 

ரோனிக்கு இது மிகவும் அவமானமாக இருக்கிறது, அவள் தன்னை நிருபித்துக்கொள்ளவேணும் அவரோடு பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, பேசுகிறாள். அவளை நம்புவதாக சொல்கிறார், ஸ்டீவ். மேலும் நீ அருமையாக பியானோ வாசிக்க்கூடியவள், அதை நிறுத்தாதே, எல்லோராலும் ஆகக்கூடிய விஷயமல்ல அது என்கிறார். அதற்கு ரோனி, இனி எதற்காகவும் நான் பியானோவை தொடுவதாயில்லை என்கிறாள். அப்பா, மெளனமாய் புதிதாக எழுதிக்கொண்டிருக்கும் பாடலுக்கான நோட்ஸை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் ரோனி வில் என்ற இளைஞனை சந்திக்கிறாள். வில் ரோனியிடம் பழக முயற்சிக்கிறான். ரோனியின் முன்னெச்சரிக்கை மனது அவளை வில்-லிடமிருந்து விலகியே இருக்கச்செய்கிறது. ரோனி பெரும்பாலான இரவுகளை கடற்கரையிலேயே செலவிடுகிறாள். அங்கு மற்ற விலங்குகளால் அடிக்கடி வேட்டையாடப்படும் கடல் ஆமைமுட்டைகளை பார்க்கிறாள். அதனால் அதனை சுற்றி வேலிஅமைத்து இரவுமுழுவதும் அங்கேயே காவலும் இருக்கிறாள். இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் வில் அவளைப் பார்க்கிறான். சில இரவுகளை ரோனியோடு பேசிக் கழிக்கிறான். வில்லின் மென்மையான மனதும், உண்மையான மனதும் ரோனிக்கு மெல்ல புரிகிறது. இருவரும் காதல்வசப்படுகின்றனர். மென்மையான இசையோடு காதல் வளர்கிறது.

காதல் ரோனியின் மனதை மாற்றுகிறது. அப்பாவோடும் தம்பியோடும் நெருக்கமாக பழகுகிறாள், அப்பாவின் மென்மையான மனதை உணரத்தொடங்குகிறாள். வில்லின் வீட்டிற்கு செல்லும் ரோனி, வில் ஒரு பணக்காரன் என்பதை அறிகிறாள். அவனுக்காக பியானோ வாசிக்கிறாள். வீடு திரும்பியதும் மிகவும் மகிழ்ச்சியுடன், அப்பாவிடம் “ நான் இன்று வாசித்தேன் என்கிறாள். அதை கேட்டு அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். “காதலும் இசையும் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்று வாழ்த்துகிறார்.

மனதிற்கு இசைவானவனோடு காதலும், அப்பாவின் அன்பும் ரோனிக்கு அந்த கோடை விடுமுறையை அவளது வாழ்வின் மிக அழகான நாட்களாக மாற்றியிருக்கிறது. இச்சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்படுகிறார், ஸ்டீவ். அவருக்கு கேன்சர் இருப்பதும் அறிந்து மனமுடைந்து போகிறாள். அம்மா வலுக்கட்டயமாய் அப்பாவிடம் அனுப்பியதன் பின்புலனை உணர்கிறாள். மருத்துவமனையில் அப்பாவோடே இருக்கிறாள். வீட்டில் அவள் தம்பியும், வில்லும் சேர்ந்து அப்பாவின் சர்ச் கண்ணாடிகளை சரிசெய்யும் வேலைகளை கவனிக்கின்றனர்.

அந்த தீ விபத்துக்கு ஸ்டீவ் காரணமில்லை, தன்னுடைய நண்பனின் அஜாக்கிரதைதான் காரணம் என்று வில்லிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. சாகும்போது ஸ்டீவ் அந்த அவப்பெயரோடு போகவேண்டாமென நினைக்கிறான். நண்பனிடம் கெஞ்சி அவனை ஸ்டீவிடம் அழைத்துவருகிறான். முன்னமே தெரிந்திருந்தும் தன்னிடம் மறைத்ததற்காக வில்லிடம் சண்டை போடுகிறாள், ரோனி. சண்டை அவர்களின் பிரிவில் முடிகிறது. வில்லும் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அவர்களின் பிரிவு சாத்தியப்படுகிறது.

விடுமுறை முடிந்து ரோனியும் ஊருக்கு செல்ல வேண்டிய நேரம், அப்பாவைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் கதறும் ஜோன்னாவிடம் “அப்பா எங்கயும் போக மாட்டேன், எப்போதெல்லாம் உன் ஜன்னலில் வழியாக ஒளி வருகிறதோ, அது நான்தான், எப்போது உன்னோடுதான் இருப்பேன் என்று சொல்லி அனுப்பிவைக்கிறார். ரோனி, தம்பியை மட்டும் அம்மாவோடு அனுப்பிவிட்டு அப்பாவோடே தங்குகிறாள்.அப்பாவுடன் சேர்ந்து LAST SONG  என்ற அந்த பாடலை எழுதுகிறாள். ஒரு மாலை நேரம் ரோனி பியானோ வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்டீவ் இறந்துவிடுகிறார். 
அவரது இறுதி சடங்கு அதே சர்ச்சில் நடக்கிறது, விபத்திற்கு பிறகு புதிதாக பொருத்தப்பட்ட ஜன்னல்களின் வழியாக ஒளி உள்ளே பாய்கிறது, அப்பா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிட்டு, அவர் முடிக்காமல் சென்ற பாடலை வாசிக்கிறாள். நெகிழ்ச்சியான இசை பரவுகிறது. கணத்தமனதுடன் வெளியேறுகிறான் வில். வெளியேவரும் ரோனியிடம் பேச முயல்கிறான், உறவினர்களின் விசாரிப்புகளில் மூழ்கிப்போகிறாள், ரோனி.

அப்பாவின் பொருட்களையெல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு கொலம்பியாவிற்கு புறப்பட ஆயத்தமாகிறாள். எப்போதும் சந்திக்கும் கடற்கரையில் வில் தனியாக நின்றிருக்கிறான். அவனிடம் ரோனி ஏன் இன்னைக்கு உனக்கு காலேஜ் இல்லையா? என்கிறாள். இல்லை நானும் என்னுடைய படிப்பை கொலம்பியாவிற்கே மாற்றிக்கொண்டேன் ஏனென்றால் நான் விரும்பும் பெண் அங்கேதான் போகப்போகிறாள், என்கிறான். மகிழ்ச்சியான தருணம், மீதத்தை இசை நிரப்புகிறது. அப்பாவின் பியானோவை காரில் கட்டிக்கொண்டு கொலம்பியா செல்கிறாள் ரோனி. குலுங்கியபடியே பின்னால் போகிறது பியானோ...... மெல்லிய இசையோடு படம் முடிகிறது.

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸும், இயக்குனர் ஆனி ராபின்ஸனும் படத்தின் பாடல்களை பற்றி சொல்லும் ஒரு வீடியோ கிளிப்பிங்.  டியர் ஜான் படத்தைப்போலவே இந்தப் படத்திலும் எல்லா பாடல்களும் ஹிட். இந்தப்படத்தின்  நாயகி மைலி சைரஸ் பாடிப் பிரபலமான இந்த படத்தின் பேமஸ்  சவுண்ட் டிராக்... மேலும் படத்தின் உயிரான அந்த  தி லாஸ்ட் சாங்

ஓட்டு போடுங்க நண்பர்களே! நல்லா இருந்தா நாலுபேருக்கு போகட்டும்.

16 கருத்துரைகள்:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல பகிர்வு...பாத்துடுவோம்

இளங்கோ said...

கூடிய சீக்கிரம் பார்த்துர்றேன் முரளி.

ஆதவா said...

இந்த மாதிரி படங்கள் தமிழில் குறைவு. படிக்கும் பொழுதே எவ்வளவு அழகாக இருக்கிறது..!!!
படம் கிடைத்தால் நிச்சயம் பார்க்கலாம்!
இதில் விஷேசம் என்னவென்றால் படத்தின் கதாநாயகி சைரஸின் இந்த படம் தவிர மற்ற படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். (சில பாடல்கள் கேட்டுமிருக்கிறேன்.) ஹிலாரி டஃப் மாதிரியான முகவெட்டு...!!

நல்ல விமர்சனம்.

ஆதவா said...

இதைப் போன்றே இன்னொரு ம்யூசிகல் படம்... எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்... Chicago.. பல ஆஸ்கர் விருதுகள் வாங்கியது. பார்த்திருப்பீர்கள் அல்லது பார்க்கவில்லையெனில் பாருங்கள்!! (ஒன்றரை மணி நேரப் படத்தில் ஒருமணிநேரம் பாடல்களாகவே இருக்கும்.)

karthik lekshmi narayanan said...

ஸ்பார்க்ஸ் பற்றி கடைசி பதிவிலே ஒரு தாக்கம் இருந்தது முரளி..!
நோட்புக் வரிசையில் இதுவும் அற்புதமான படம்.. மனது அமைதியான ஒரு இரவில் பார்க்க வேண்டிய படம்... !!
Miley Cyrusன் மயக்கும் பாடல் சுகம்!!
நன்றி முரளி....

karthik lekshmi narayanan said...

http://www.mediafire.com/?sly16tz2olehtc8#1

link for t miley cyrus "When i look at you" video song

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
பாருங்க திரு, ஜாலியான படம்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
அவசியம் பாருங்க, எனக்கு ஆங்கிலம் படிப்பதில் சிரமம் இருக்கிறது அதனால் இவரது நாவல்களை ரொம்பவே மிஸ் பண்றேன்.
உங்களுக்கு ஆங்கிலம் படிப்பதில் சிரமில்லையெனில், ஸ்பார்க்ஸின் நாவலகளையும் படிங்க. மனுஷன் பிச்சி உதறுவார்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
//இதில் விஷேசம் என்னவென்றால் படத்தின் கதாநாயகி சைரஸின் இந்த படம் தவிர மற்ற படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். (சில பாடல்கள் கேட்டுமிருக்கிறேன்.)//

ஹாஹா இது நல்லா இருக்கே

எனக்கு இந்தபொண்ணோட குரல் (பேசும்போது)ரொம்ப பிடிக்கும். செம்ம ஹஸ்கி வாய்ஸ்.

தவிர சிக்காகோ பார்த்துவிட்டேன்..
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@கார்த்திக்
//ஸ்பார்க்ஸ் பற்றி கடைசி பதிவிலே ஒரு தாக்கம் இருந்தது முரளி..!
நோட்புக் வரிசையில் இதுவும் அற்புதமான படம்.. மனது அமைதியான ஒரு இரவில் பார்க்க வேண்டிய படம்... !! Miley Cyrusன் மயக்கும் பாடல் சுகம்!! நன்றி முரளி//

என்ஜாய் கார்த்தி என்ஜாய்....
கரெக்ட்தான், மனதுக்கு அமைதியான ஒரு இரவில் பார்க்க வேண்டியபடம்...
:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

கார்த்திக், தேங்க்ஸ் சோ மச்.
அருமையான குவாலிட்டி அந்த வீடியோ குட்...
:-))

சு.சிவக்குமார். said...

முர்ளீ சொன்னக் கேக்கனும்,துயரம் மட்டுமே எந்த ஒரு மகத்தான விசயத்திற்கும் அடிப்படை ஆதாரமா இருக்கு...நீங்க பகிர்ந்திக்கிற எல்லா சிறந்த விசயங்களுக்குப் பின்னாடியும் ஒரு மெல்லியத் துயரம் அடியோடுகிறது.

அந்த துயரம் எல்லாராலும் கடந்துசெல்லப்படுவதில்லை...கடந்து செல்கிறவர்களுக்கு அந்த துயரம் தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை...

உலகை சலனத்தின் மூலமாகவே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் முதல்
அன்பே வடிவமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வரை
மிகப்பெரும் சாதனையாளர்கள் எல்லோருக்கும் துயரம்தான் அடிப்படை...

ஒரு அரனாகமட்டுமே வாழ்ந்து வரலாற்றில் எங்கேயோ ஒரு ஓரத்தில் வாசிக்கப்படும் பெயராக இருந்திருக்கவேண்டிய சித்தார்த்தன் காலத்தை வென்று இனி வரும் யுகத்தையும் வெல்லக்காத்திருக்கும் புத்தராக மாறியது கூட துயரத்தால்தான்...அவர்தான் சொன்னார்....இசையென்பதே துயரத்தின் ஒலம் தான் என்று...அதனால் தான் துயர் மிகுந்த இசை மற்ற எவற்றைக் காட்டிலும் மிக எளிதாக,விரைவாக நம் மனதில் நிரம்பி விடுகிறது.....

அகல்விளக்கு said...

பியானோ.........

:-)

அகல்விளக்கு said...

அருமையா எழுதியிருக்கீங்க நண்பா...

விரைவில் பார்த்துவிடுகிறேன்...
:-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@சிவா
//முர்ளீ சொன்னக் கேக்கனும்//

முர்ளீ சொன்னா கேக்க வேண்டியதுதானே சிவா?
#டவுட்டு#

//துயரம் மட்டுமே எந்த ஒரு மகத்தான விசயத்திற்கும் அடிப்படை ஆதாரமா இருக்கு...நீங்க பகிர்ந்திக்கிற எல்லா சிறந்த விசயங்களுக்குப் பின்னாடியும் ஒரு மெல்லியத் துயரம் அடியோடுகிறது//

மிகச்சரியான வரிகள். எனக்கு இந்த ஜேனர்தான் பிடித்திருக்கிறது.

//உலகை சலனத்தின் மூலமாகவே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் முதல்
அன்பே வடிவமான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வரை
மிகப்பெரும் சாதனையாளர்கள் எல்லோருக்கும் துயரம்தான் அடிப்படை...//

இதுவும் சரி

//ஒரு அரனாகமட்டுமே வாழ்ந்து வரலாற்றில் எங்கேயோ ஒரு ஓரத்தில் வாசிக்கப்படும் பெயராக இருந்திருக்கவேண்டிய சித்தார்த்தன் காலத்தை வென்று இனி வரும் யுகத்தையும் வெல்லக்காத்திருக்கும் புத்தராக மாறியது கூட துயரத்தால்தான்...அவர்தான் சொன்னார்....இசையென்பதே துயரத்தின் ஒலம் தான் என்று...அதனால் தான் துயர் மிகுந்த இசை மற்ற எவற்றைக் காட்டிலும் மிக எளிதாக,விரைவாக நம் மனதில் நிரம்பி விடுகிறது...//

இதுவும் சரிதான்

சிவா, நல்ல நகைச்சுவை என்பதும் மிகச்சரியான நேரத்தில் சொல்லப்பட்ட யாரோஒருவரின் துயரம்தான் என்பதையும் மகிழ்ச்சியையும், நிறைவான மனநிலையையும் கொண்ட சரித்திரங்களிலும் கூட எதோஒரு மூலையில் யாரோ ஒருவருடைய அழுகுரல் கேட்கத்தான் செய்யும் என்பதையும் தெரிந்தே இருக்கிறேன்.

ஆனாலும் சிறந்தது துக்கத்தை மட்டுமே சுமந்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து.

அப்புறம் சிவா சொன்னா கேக்காமலா போயிடப்போறேன். ஒரு நல்ல லிஸ்ஸனரா இருக்கனும்ங்கிறதுதானே என் ஆசையே..
:-))

கவிநா... said...

இசை, காதல், பாசம், நேர்மை, சோகம் என்று பல விதமான உணர்வுக்கலவைகளில் உருவானதொரு அழகிய படத்தைப் பற்றி தெரிந்துகொண்ட மகிழ்ச்சி மனதில். தெரியச்செய்த உங்களுக்கு நன்றி சகோ..

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.