கோவா - ஹேப்பி எண்டிங்.

ஹாய் மக்களே! வெல்கம் பேக் டு டோனாபோலா, கோவா....

இப்பதான் இந்தபக்கம் வறீங்களா? அப்ப பாகம் 1, பாகம் 2 இது ரெண்டையும் படிச்சிட்டு வாங்க... எல்லாம் ஒரு கண்ட்னியூட்டிக்குத்தான்.....

நன்றி நண்பர்களே! என்னுடைய சஸ்பென்ஸை காப்பாற்றியதற்கு இன்னைக்கு பதிவு போட்டிடலாம்ன்னு நினைக்கிறேன்ம் சரியா வெண்புரவி அவர்கள் பின்னூட்டத்தில் இப்படி கேட்டிருக்கிறார் “கோவாவிலிருந்து 50 கிமீ பயணத்தில் தூத் சாகர் அருவி உள்ளது...சென்றீர்களா? காட்டுப் பயணம்.... பால் போல அருவி... நீச்சல் குளம்போல அருவிக்குள் குளியல்... அருவியின் மேல புறம் புகை விட்டுச் செல்லும் ரயிலின் காட்சி.... கவிதையாய் இருக்கும்” எப்புடி நம்ம டைமிங்.... ஹா....ஹா...

இதுதாங்க அந்த சஸ்பென்ஸ், உலகின் மிக அழகான ரயில்பாதைகளில் ஒன்றான கொங்கன் ரயில்வே பாதை. குறிப்பாக லோண்டா என்னுமிடத்திலிருந்து மட்கோவா செல்லும் வழியில் குலேயம் ரயில் நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தூத்சாகர் அருவி. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்த அருவியின் வழியாக செல்லும் ரயில்பாதை. பொதுவாக மலையின் விளிம்புகளில் உள்ள ரயில்பாதை பயணம் என்பது எவருக்கும் த்ரில்லான அனுபவமாகவே இருக்கும், அதுவும் கூடவே ஹோ’வென கொட்டும் அருவியின் சப்தத்தோடும் சாரலோடும் பயணிப்பது என்றால் எப்படியிருக்கும்? எங்களைப் பொருத்தவரையிலும் இந்த கேள்வி கேள்வியாகவே நிற்கிறது. காரணம், நாங்களும் கோவா சுற்றுப்பயணத்தில் தவறவிட்ட இடம் இது. எனவே கோவா செல்லவிருப்பவர்கள் அவசியம் சென்றுவாருங்கள். திருப்பூர், கோவைவாசிகள் கேரளா-மங்களூர் வழியை விடுத்து சென்னை-கடப்பா வழியைத் தேர்வுசெய்தால் கோவா செல்லும் வழியிலேயே இங்கு போக முடியும். எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் இங்கு நிற்பது கிடையாது. பாஸஞ்சர் ரயில்கள் இங்கு இரண்டு நிமிடம் வரை நின்று செல்லும். அருவியின் வெகு அருகிலேயே தூத்சாகர் ரயில் நிலையமும் உள்ளது. மழைக்காலங்களில் இந்த பயணம் ரம்மியமாக இருக்குமாம்... ம்ம்ம அடுத்தமுறை இந்த இடத்தை விடப்போவதில்லை.

ஓகே நம்ம கதைக்கு வருவோம். டோனாபோலாவின் பேவாட்ச் பகுதியில் அனைவரையும் காத்திருக்க சொல்லிவிட்டு ஹோட்டல் தேடி நானும் செல்வாவும் அலைய ஆரம்பித்தோம். ஒருவழியாக அடுத்த ஒரு மணிநேரத்தில் கண்டுபிடித்தோம். ஏன் ஒரு மணிநேரம் என்றால், பட்ஜெட்தான். டோனா போலாவில் கிட்டதட்ட நிறைய ஹோட்டல்கள் மூன்று நட்சத்திர அந்தஸ்துக்கும் மேல்தான். குறைந்தது இரண்டுபேர் தங்கக்கூடிய அறைக்கு நாளொன்றுக்கு 3000வரை வசூலிக்கிறார்கள். அதுவும் செகவுட் டைம் காலி 11 மணி. சீசன் டைமில் இன்னும் அதிகம் இருக்குமாம். நாங்கள் தங்கிய அறை ஏசியுடன் ரூ.1200. நாலு பேர்வரை தங்கிக்கொள்ளலாம், இரண்டு எக்ஸ்ட்ரா பெட்டுடனனே அந்த விலைதான். ஆக வரம்புகளுக்குட்பட்டு செலவு திட்டம் வைத்திருப்பவர்கள், நேரம் போவது பற்றி கவலைப்படாமல் தேடவேண்டும், சகல வசதிகளுடன் குறைந்த விலைக்கே நல்ல அறைகள் கிடைக்கிறது.ஒருவழியாக ஹோட்டலை புக் செய்துகொண்டு, அசோக்கின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம். நாங்கள் அறை எடுத்திருந்த ஹோட்டலில் ரெஸ்ட்டாரண்ட் இல்லை. ஆகவே இரவு உணவிற்கு வெளியே செல்வது என்று தீர்மாணித்தோம். வெளியே வரும்போது மணி இரவு 11ஐ நெருங்கியிருந்தது. ஊரே அடங்குவது போல தெரிந்தது. ஆகா, ட்ரீட் போயிடும் போல என்று நொந்தபடி தேடிக்கொண்டிருந்தபோது மெல்லிய இசை வந்த பக்கம் சென்றோம். ஒரு பாழடைந்த கட்டிடம், சரியாக சொன்னால் எதோ புணரமைப்புகள் நடந்துகொண்டிருந்த இடம், அருகே சென்றபொழுது பக்கவாட்டில் படிகட்டுகள் இறங்கி சென்றன. கீழே இறங்கினால் கடலின் கரைகளை ஒட்டி அழகான ஓப்பன் ரெஸ்ட்டாரண்ட். குறைந்தது ஒரு ஐம்பது மேசைகளாவது இருக்கும். நிறைய வெளிநாட்டினர்கள், வட இந்தியர்கள். மெல்லிய இசையுடன் சந்தோசமான பேச்சுகளினூடே உணவருந்திக் கொண்டிருந்தனர். வாவ், அருமையான இடம். நிறைய படங்களில், கதைகளில் படித்திருந்த கேண்டில்லைட் டின்னர் அன்று நிறைவேறியது.


அங்கு ரெஸ்ட்டாரண்டில் பணிபுரிபவரிடம் அசோக்கின் பிறந்தநாளைச் சொல்லி வெட்டுமளவிற்கான பெரிய கேக் கிடைக்குமா? என்றோம். இன்னேரம் கேக் கிடைக்க வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் கேரமல் ஏற்பாடு செய்யட்டுமே என்றார். எனக்கு சுத்தமாக புரியவில்லை. வெட்டமுடியுமா என்றேன். தாராளமாக என்றார். சரியாக பனிரெண்டு மணிக்கு கேரமெல்லையும் ஒரு மெழுகுவர்த்தியும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து அமர்ந்தோம். அவனுக்கு ஒரு சஸ்பென்சாக இருக்குமே என்று. சரியாக பணிரெண்டு மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக அதைக்கொண்டு வந்தார். வாழ்த்துப்பாடலோடு அதை வெட்டும்போது சில எழுந்து கைதட்டினர். எனக்கு அதன் சுவை எப்படியிருக்கும் என்பதே குறியாயிருந்தது. ஒருமாதிரி பாலாடைகட்டிபோல இருந்தது. சாப்பிட அவ்வளவு நன்றாக இல்லை. ஒரு மாதிரியாக வழுவழுவென இருந்தது. ஆனால் முகத்தில் பூச அருமையான வஸ்து. அதற்கும் நானே முதல் பலி.


இனிமையான அந்த தருணங்களுக்கு பிறகு உணவையும் முடித்துக்கொண்டு ஒண்ணரை மணிக்கு அறைக்கு வந்து, தூங்கினோம். அடுத்தநாள் காலை, கோவாவில் கடைசி நாள். என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? என்ற எந்த யோசனையும் இல்லை. அனைவருமே பாகா போகலாமென்று ஒரு மனதாக சொல்ல பாகா பீச்சிற்கு புறப்பட்டோம். வழி நெடுக பெட்டிகடைகளைபோல மதுக்கடைகள். ஒருடின் பியர் ரூ24/- வண்டியை நிறுத்தி 100 ரூபாயைக்கொடுத்தால் நான்கு கேன்கள் கொண்ட ஒரு பேக் தருகிறார்கள். எங்க தீர்ந்துபோனாலும் இப்படிங்கிறதுக்குள்ள ரெண்டு கடை வந்திடும்.

ஆனால் அதேபோல இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு ஒரு விபரம். தேவையான அளவு பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுங்கள், ஏனென்றால் வண்டிக்கு பெட்ரோல்போடும் இடங்கள் மிக்க்குறைவாகவே தென்படுகிறது. நாம் வேண்டுமானால் எங்கு நிறுத்திவேண்டுமானாலும் (நமக்கு பெட்ரோல்) போட்டுக்கொள்ளலாம். அதேபோல பஞ்சர் கடைகளும் மிகக்குறைவே. கோவாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதுதற்கு எந்த தடையுமில்லை. இரவில் மட்டும் தடையுள்ளது என நினைக்கிறேன். ஆனாலும் நாங்களிருந்த நான்கு நாட்களிலுமே ஒரு விபத்தோ, விதிமுறைகளை மீறிய பயணங்களையோ எங்கும் பார்க்கவே முடியவில்லை. காரணம், பெரும்பாலனவர்கள் சுற்றுலாவாசிகளாக இருப்பதாலும் யாரிடத்திலும் எந்த அவசரமும் இல்லை.

பாகாவை நெருங்க நெருங்க திருவிழா நெருங்குவதைப்போல இருந்தது, கூட்டம். பாகா, இதுதான் ரியல் கோவா. தி ரியல் பார்ட்டி டவுன் பாகா. கடற்கரை ஓரமாய் நிறைய ரெஸ்ட்டாரண்ட்கள், எல்லாம் மக்களால் வழிந்துகொண்டுதானிருந்தது. பெரும்பாலும் வெளிநாட்டினர்கள்தான் அதிகம் இருந்தனர். பீச்சில் படுத்துக்கொள்ளும் அந்த சாய்வு நாற்காலிக்கு ஒரு மணிநேரத்திற்கு 25-50 வரை வசூலிக்கின்றனர். கடலில் குளிக்க வேண்டியது, பின் உடம்பின் ஈரம் காயும் வரை மணலில் கிடப்பதும் பின் கடலில் இறங்கி ஆடுவதுமாய்ப் போனது. பாகாவில் அதிக ஆழமில்லை, எனவே பயமின்றி நிறைய தூரம் உள்ளே செல்ல முடிந்தது. அதிக கூட்டமில்லாத இடத்தில் கழுத்தளவு கடல்நீரில் நின்றுகொண்டிருந்தேன் அவ்வப்போது வரும் பெரிய அலைகளில் மூழ்குவதும், தண்ணீரை விழுங்குவதும் பின் சுதாரித்து எழுவதுமாய் நேரம் போனது தெரியவில்லை.

உண்மையில் கடல் பெரியவிஷயம்தான் என்பது கால்கள் கடலில் மூழ்குமளவு செல்லும்பொழுது புலப்பட்டுவிடுகிறது. மேலும் சந்தோஷமான அந்த மனநிலையும், உலகின் மிகப்பெரிய ஒன்றான கடலோடு சங்கமித்து நிற்கையில் மனம் சிறுகுழந்தையாகி விடுகிறது. ஸ்ரீகாந்த் கேட்டான் “ஏண்டா, ஆத்து தண்ணி டேஸ்டா இருக்கு, கடலுக்கு வந்ததும் உப்புகரிக்குது?” என்று அதற்கு அசோக் “எனக்குகூட சின்ன வயசுல உலகம் சுத்தும்போது கடல்தண்ணி கீழ கொட்டிடாதா? என்று கேள்வியெழும் என்றான். பின் சில நொடிகளுக்கு பின் ஆமா ஏன் கொட்டலை? என்றான். இப்படியான கேள்விகளை சந்திக்காத பால்யமே இருக்க முடியாது அல்லவா? தன்னை எப்போதுமே புத்திசாலியாகவே காட்டிக்கொள்ள நினைக்கும் மனிதமனம், இப்படி சூழ்நிலை மறந்து வெள்ளந்தியாக கேள்வி கேட்கும் நிலை, ஒருமாதிரியான சந்தோஷம். சிறிய இடைவெளிக்கு பிறகு அனைவரும் சிரித்துக்கொண்டோம். வேறென்ன செய்ய? அறிவியல் பேசும் நேரமில்லை இது.

பாகா அருமையான பீச் வெகு அருகிலேயே நல்ல பார்ட்டிகளுக்கு பெயர்போன பப்கள் நிறைய இருக்கிறது. மூன்று பெக்குகள் சரக்கோடு நுழைவுக்கட்டணம் ரூ.500முதல், இரவு பதினோரு மணியிலிருந்து காலை மூன்று மணிவரை விடிய விடிய ஆட்டமும் பாட்டமும்தான். “புல்லா தமிழ்பாட்டுதான் சார், பொண்ணுங்க்கூட சரக்கடிக்குதுங்க..” என்று போய்வந்த நிறைய பேர் சொன்னார்கள். எங்களால் இரவு பாகாவில் தங்க முடியாமல் போனது துரதுஸ்டமே. பாராசூட்டில் பறப்பதற்கு இருவருக்கு ரூ.800 கேட்டார்கள். வழக்கம்போல இருவருக்கு ரூ.250ல் முடிந்தது பேரம். மிகக்குறைந்த நேரப்பயணமே ஆனாலும் பறக்கும்போது எப்படி இருந்ததுன்னா அப்படியே பறக்கிற மாதிரியே இருந்தது. இதைவிட ரசனையா சொல்லத்தெரியலை. அதுதான் நிஜம். பாகாவிலிருந்து கிளம்பி கோல்வா வந்தடையும்போது மணி 8.30 ஆகியிருந்தது. இரவு உணவு முடித்துவிட்டு ரயில்நிலையம் வந்தடையும்போது ரயில் மெல்ல நகரத்தொடங்கியிருந்தது. ஓடிப்பிடித்தோம்.

இந்த கோவா பயணம் ஒருமாதிரியான வித்தியாசமான அனுபவமாயிருந்தது. நல்ல ப்ளான் இல்லை, மொழி பிரச்சனை, பணப்பிரச்சனை இப்படி சில கட்டுப்பாடுகளும், தடங்கல்களும் இருந்தாலும் வெகு சுவாரஸ்யமான ஒரு பயணம். நிறைய கற்றுக்கொண்ட பயணம். ஆனாலும் பக்காவான திட்டங்களோடு செல்வதே சாலச்சிறந்தது. இந்த கட்டுரைகள் இனிசெல்லவிருப்பவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் அனுபவங்களின் குவியலாக மாறிப்போனதில் சிறு வருத்தம்தான். இருப்பினும் கோவா முதல்முறையாக செல்லவிரும்பினால் முன்னமே தகவல் ஏதும் தேவைப்பட்டாலும் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தது நிச்சயம் மற்றவர்களுக்கு சொல்லத்தான். இன்னும் இரண்டு பதிவுகளாவது எழுதலாமென்றாலும் எனக்கே போரடிப்பதால் இதோடு முடித்துக்கொள்கிறேன். நன்றி.

ஒரு நிதர்சனம். எனக்கு, கடல்சார் பயணங்களின் மீதான என் ஆசையை அதிகரித்துவிட்டது இந்த பயணம், இங்கு படிக்கவேண்டுமென எடுத்து சென்ற புத்தகங்களை திரும்ப வீட்டிற்கு வந்துதான் கவனித்தேன். அங்கேதான் படிக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றனவே. எப்போதும் கரைகளோடு ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கும் கடலும், எவ்வளவு சொன்னாலும் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் கரைக்கும் இடையே நின்று கொண்டு கடலைப்பார்த்தபடியே இருங்கள். கடல் சொல்லும் சில விஷயங்கள் உங்கள் காதுகளிலும் விழும்.

கோவா பாகம் - 2

வெல்கம் பேக் டு கோல்வா, கோவா.

இப்பதான் இந்த பதிவுக்கு வறிங்கன்னா இங்க போயி இதையும் படிச்சிட்டு வந்திடுங்க அப்பதான் முதல் வரி உங்களுக்கும் பொருத்தமா இருக்கும். ஹி ஹி..

கோவா டூர்-சில உபயோகமான குறிப்புகள்,
1. மிக்குறைவான ஆடைகள் போதுமானது.
2. அவசியம் தேவையான பணம் ரொக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்
3. கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) அனேக இடங்களில் செல்லுபடியாவதில்லை. வெளிநாட்டவர்களின் காலாவதியான கடன் அட்டைகளால் வந்த வினை.
4. மதுப்பிரியர்கள், நிச்சயம் பாட்டில்களாக வாங்கிக் கொள்ளுங்கள். பார்களில் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதிலொன்றும் பெரிய வித்தியாசமில்லை
5. நீச்சல் குளம் கொண்ட ஹோட்டல்களில் தங்குபவர்கள் பருத்தி அல்லாத (நான் காட்டன்) உடைகளோடு செல்லுங்கள்.
6. கண்டிப்பாக ரயில் பயணத்தை தேர்ந்தெடுங்கள். விமானப்பயணம் வேண்டாம். (காரணம் பின்னால் வரும்)
7. இருசக்கர, நாற்சக்கர வாகனங்கள் குறைந்த வாடகைக்கு கிடைக்கும். அசல் ஓட்டுநர் உரிமம் அல்லது பேன் கார்டை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.காலை நேர நடைக்கு மிக அருமையான இடம் கோல்வாவில் பீச். மிக நீளமான கடற்கரை. நிறைய ரெஸ்ட்டாரண்ட்கள் வழி நெடுக இருக்கிறது. குடிக்க, சாப்பிட, ஓய்வெடுக்க எல்லா வசதிகளோடும். நாங்க அதிக நேரம் செலவழித்தது பெஞ்சமின்ஸ் ரெஸ்ட்டாரண்ட். உரிமையாளர் பெஞ்சமின் மற்றும் ஜேக். இருவரும் கோவாக்காரர்கள். மிக அருமையான வரவேற்பு, உபசரிப்பு ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பசங்க. எங்களுக்கும் அவர்களுக்குமான அலைவரிசை நன்றாக ஒத்துபோகவே அங்கேயே இரவு வரை செலவிட்டோம்.

அதிக கூட்டமில்லாத இடம், அவ்வப்போது கடந்துபோகும் சில வெளிநாட்டவர்களைத் தவிர நாங்கள் மட்டுமே என்பதால் ஆட்டம் பாட்டமென நல்லா கொண்டாட்டமாக இருக்க முடிந்தது. கோவா போனால் என்ன குடிக்கலாமென இணையத்தில் தேடி குறித்துக்கொண்டு போனேன் (இப்படி காற்றடிக்கும்போது தூற்றிக்கொள்ள வேண்டியதுதான்). டக்கீலா, ஆகா இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். இதனை ஷாட்ஸ் என்று சொல்கின்றனர். மெக்ஸிகன் ஷாட், டக்கீல சன்ரைஸ், டக்கீலா மார்ட்டினீ (இது காக்டெயில்) இப்படி வகை வகையான் என்னென்னவோ சொன்னார்கள். சரி எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு குடுங்கன்னு எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டேன். டக்கீலா குடிப்பது எனபது ஒரு ரசனையான விஷயம். முதலில் எலுமிச்சை பழசாற்றை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் தடவிக்கொண்டு அதன் மீது உப்பை தடவிக்கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் தரும் ஒரு ஷாட்டை ஒரே மிடறில் குடித்துவிட்டு விரலிடுக்கில் தடவிய உப்பை உறிஞ்சிக்கொள்ள வேண்டும். இதுவே எனக்கு மிகவும் ரசனையாகப்பட்டது. இதற்காகவே இரண்டு மூன்று ஷாட் சாப்பிட்டேன். இதை குடிப்பதால் உடல் உஷ்ணமேறிவிடுமாம், ஆகையால் அதிகம் குடிக்க வேண்டாம் என்று பெஞ்சமின் அட்வைஸ் செய்யவும் அதோடு நிறுத்திக்கொண்டேன். தேன் மாதிரியாக இனித்துக்கொண்டிருந்தது.


 Benjamin's Taquilla Martini  - Brasilian Breeze Cocktail - Chicken sour soup

பிறகு கடலில் விளையாடலாமென முடிவு செய்தோம், காரணம் இந்த கடையின் முன்பாக நல்ல உயர்ந்த அலைகள் அடிக்கடி வந்தவண்ணமிருந்தது. எனக்கு அலைகளில் சறுக்க மிகுந்த ஆசையாய் இருந்தது. வருகிற வழியெங்கும் வேவ் சர்ஃபிங் செய்ய தேவையான சர்ஃபிங் போட்டை தேடிக்கொண்டிருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. சாப்பிடும்போது அதை ஒரு கவலையாக பெஞ்சமினிடம் சொல்ல தனது வீட்டிலிருந்து எடுத்துவந்து கொடுத்தான். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நான் மட்டும் அலைகளோடு விளையாடிக்கொண்டிருந்தேன். மார்பிலும் முழங்கால்களிலும் ஏகப்பட்ட சிராய்ப்பு வாங்கிக்கொண்டும் கடைசி வரை என்னால் முழுமையாக சறுக்கவே முடியவில்லையென்பது வேறு விஷயம். ஆனால் அதன் துணையோடு மிதக்கக் கற்றுக்கொண்டேன். கடைசி ஓரிரு முறைகளில் அதன்மீது லாவகமாய் மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கவும் கற்றுக்கொண்டேன். மனசுக்கு பிடிச்சமாதிரி, நிம்மதியா, அதுவும் கடலில் ரம்மியமான அலைகளின் இடையே வானம்பார்த்தபடி படுத்துக்கிடந்தது, இது ஒன்றிற்காகவே இன்னொரு முறை கோவா போகலாம். நிக்கோல ஸ்பார்க்ஸ் கதைகளில் வருகிற மாதிரி மென் சுபாவம் கொண்ட அழகான பெண்களோ, காதலோ, இசையோ கூட இருந்தால் கடலும் கடல் சார்ந்த இடங்களும் சொர்க்கம்தான்.

கடலில் இருந்து குளித்து வந்ததும் நல்ல தண்ணீரில் குளித்துக்கொள்ள ஷவர் வைத்திருந்தார்கள். குளித்துவிட்டு நிம்மதியாக சாப்பிட்டேன். இரண்டு மணிநேர விளையாட்டு சராசரிக்கும் அதிகமாகவே இறங்கியது. வெளியிலேயே குடையுடன் கூடிய சாய்வு நாற்காலிகள் உண்டு. மூன்று மணிநேரம் மயக்கதிற்கு பிறகுதான் விளிப்பு தட்டியது. அப்போது இருட்டியிருந்தது. ஹோட்ட்லிலும் எங்களைத் தவிர நிறைய வெளிநாட்டவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெஞ்சமினிடம் அடுத்த முறை வரும்போதும் அவசியம் சந்திப்போம் என்று சொல்லி விட்டு ரூமிற்கு திரும்பினோம். கொஞ்ச தூரம் நடந்து வந்தபின் திரும்பி பார்த்தபோது பெஞ்சமின் மற்ற வாடிக்கையாளர்களோடு சிரிக்கசிரிக்க பேசிக்கொண்டிருந்தான். இங்கு மட்டுமல்ல கோவா முழுவதுமே மக்கள் சிரித்தபடியே இருக்கிறார்கள்.

தன்மையாக பழகுகிறார்கள், எளிதில் நம்புகிறார்கள், தங்களையும் எளிதாக நம்பவேண்டுமென நினைக்கின்றனர், இல்லாவிடில் கோபப்படவும் செய்கின்றனர். குறிப்பாக அவர்களிடம் ஒரு அவசரத்தன்மையை பார்க்க முடியவில்லை. மிக நிதானமாய், எந்த வேலையையும் ரசித்து செய்வதை பார்க்க முடிந்தது. இங்கு திருப்பூரில் எப்போதும் அவசரகதியில் மக்களை சந்தித்தவனுக்கு இது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது.


பிறகு அடுத்த நாள் காலை நான்கு ஹோண்டா ஆக்டிவாக்களை (((ஒரு நாளைக்கு ஒரு வண்டிக்கு 850 என்று ஆரம்பித்து, இரண்டு நாட்களுக்கு 400 என்று பேசி))) வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பல்லோலியம் பீச்சிற்கு (இங்குதான் Bourne Supremacy பட்த்தின் சேஸிங் சண்டைக்காட்சி எடுக்கப்பட்ட்தாம்) செல்வதாயிருந்த திட்டம் அதிக தூரம் வண்டியில் செல்ல வேண்டாம் என்ற அனைவரின் எண்ணத்தாலும் அருகிலுள்ள போக்மாலா பீச்சிற்கு செலவதாய் முடிவாகியது. வாஸ்கோடகாமா விமான நிலையத்தை தாண்டி பத்து நிமிட பயணத்தில் வருகிறது போக்மாலா. கோல்வாவோடு ஒப்பிட்டால் இது மிகவும் சின்ன பீச். ஆனால் அவ்வப்போது இறங்கியேறும் விமானங்கள், இரண்டு பக்கமும் மலைகள் இருப்பதால் ரம்மியமாக இருந்தது. இது அதிகமாக கவனம் பெறாத பீச், ஆகையால் வெளிநாட்டவர்களின் வருகை அதிகம் இருக்கிறது.

பிறகு இங்கிருந்து எங்கு போகலாம் என்பதில்தான் ஏகப்பட்ட குழப்பங்கள். அங்கிருந்து 15 கிலோமீட்டரில் பானாஜி, கோவாவின் தலைநகர். நகரம். கேளிக்கை விடுதிகளும், சூதாட்ட விடுதிகளும், ஹோட்டல்களும் பார்களுமாய் நிரம்பி வழிகிறது பனாஜி. ஒரு குட்டி லாஸ் வேகாஸ். பனாஜியிலிருந்து சமதூரத்தில் பாகா பீச் மற்றும் மிராமார் பீச். எட்டு பேரில் நாலு பேர் பாகா, நாலு பேர் மிராமார். நான் மிராமார் பக்கமிருந்த்தால் அங்கே செல்வதென முடிவாகியது. ஹி..ஹி..ஹி.. இரவு தங்குவதற்கு எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. எட்டுமணிக்கு ஆரம்பமானது ஹோட்டல் தேடும் படலம்.

மிராமார் முழுக்க ஒரு காஸ்ட்லி லுக். கடைகளும், வீதிகளும், திரையரங்குகளும் தெருவிளக்குகளும், நடைபாதை பெஞ்சுகளும், அதில் அமர்ந்தபடி புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் வயதான தம்பதிகள், ரோட்டோரங்களில் கட்டியணைத்தபடி நெருக்கமாக இளசுகள் (((அவர்களை பார்க்கும்போது எனக்கு வயசானதென்னவோ உண்மைதான் :- ( ))), அரைகுறை ஆடைகளோடு வெளிநாட்டினர் என மிராமார் முழுக்கவே மேற்கின் ஆதிக்கம்தான். ஏதோவொரு பெயரறியா நாட்டின் தெருக்களில் நடப்பதுபோலவே உணர்ந்தேன். இப்படியே பராக் பார்த்துக்கொண்டு போனதில் நிறைய ஹோட்டல்களை கவனிக்கத்தவறி மிராமாரிற்கு அடுத்தபடியாக உள்ள டோனாபோலா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கண்போன போக்கிலே வண்டி போய்க்கொண்டிருந்தது. கடைசியாய் அந்த பாதை டோனாபோலாவின் ஒரு பேவாட்ச் கார்னரில் போய் நின்றது. அதற்கு மேல் பாதையும் இல்லை.

நண்பன் அசோக்கிற்கு அடுத்த நாள் பிறந்தநாள், இரவு கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தோம், மணி பத்தைத் தாண்டியிருந்தது. இன்னும் இரவு தங்குவதற்கு ரூமும் கிடைக்கவில்லை, வண்டி நிறைய எங்களின் மூட்டைமுடிச்சுகள் என்ன செய்வது என்று தெரியாத நிலை. ஆனால் அதுதான் அனைவருக்கும் பிடித்தமானதாயிருந்தது. ஒரு சர்வைவல் மாதிரியான எக்ஸ்ப்ளோரிங் ட்ராவல். அடுத்து என்ன என்று யாருக்குமே தெரியாத பயணம். ரசனையான பயணம் இன்னும் தொடரும்.....

கோவாபோக திட்டமிருப்பவர்கள் நிச்சயம் ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுங்கள். குறீப்பாக சென்னை - கடப்பா - வாஸ்கோ வழியாக பயணியுங்கள்.ஏன்னா... அடுத்தபதிவுல சொல்றேன் (ஏன் என்று தெரிந்தவர்கள் தயவுசெய்து சஸ்பென்ஸை உடைத்துவிடாதீர்கள்.) 

கோவா - UP UP

எனக்கு விவரம் தெரிந்து தீபாவளிக்கு எங்கும் வெளியே செல்வதில்லை. கூடுமானவரை வீட்டிலும் பின் நண்பகளோடுமென கழியும் விடுமுறை தினங்கள். எங்காவது சுற்றுவதாயிருந்தாலும் தீபாவளிக்கு பிந்தைய நாட்களிலாகத்தான் இருக்கும். இம்முறை மாறாக தீபாவளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே கிளம்பியாயிற்று. இரண்டு மூன்று முறை திட்டமிட்டும் பல காரணங்களால் தடைபட்டுக்கொண்டேயிருந்த கோவா பயணம் இம்முறையும் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டியே அமைந்தது. பத்துபேராக செல்வதாயிருந்த திட்டத்தில் நாட்கள் செல்ல ஆட்களும் குறைந்துகொண்டே வந்தனர். கடைசியாக ஐந்து பேராகக்கிளம்பினோம். முதலில் திருப்பூரிலிருந்து ஷொரனூர் (கேரளா) பின் அங்கிருந்து மட்கோவா. பொதுவாக ரயில் வழியாக வருவாதாயின் இங்குதான் இறங்கமுடியும். வேறு ஸ்டேசன் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. சீஸன் காலங்களில் வாஸ்கோடகாமாவிற்கு சில சிறப்பு ரயில்கள் இயங்குவதாகவும் கேள்விப்பட்டேன். ஷொரனூரில் இறங்கி அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கையில் கோவையிலிருந்து வந்திருந்த மூன்று நண்பர்களை சந்தித்தோம். அவர்களும் அதே ரயிலில் கோவா செல்லவிருப்பதையும் அடுத்தடுத்த இருக்கையில் பயணப்படப்போவதையும் தெரிந்துகொண்டதும் மெல்ல அவர்களோடு நட்பு தொடங்கியது.

அவர்களுக்கும் இந்த கோவா பயணம் முதல் அனுபவம். முன்பின் சென்ற அனுபவம் கிடையாது. எங்களுக்கும் அப்படியே. இருந்தாலும் நாங்கள் யாரிடமும் இதைப்பற்றி கேட்டும் தெரிந்து கொள்ளவில்லை. தேடிகண்டடைவதின் சுகம் வேறொன்றில் இருக்காதே? கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளையும், சுற்றுலாத்தலங்களையும் மட்டும் கூகிளாண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். கோவை நண்பர்களோடு பேசியதில் எங்களின் திட்டம் அனைவருக்கும் சற்று உசிதமாய்ப் பட அவர்களும் எங்களோடு இணைந்துகொண்டனர். அதன்பின் ரயிலில் இருந்து இறங்கும்போது நாங்கள் என்பது ஐந்து பேரிலிருந்து மொத்தம் எட்டுபேர் என்றாகியது. அதன் பின் திங்க தங்க என எல்லா இடத்திலும் கோவை நண்பர்களோடு சேர்ந்தே கழிந்தது.

மட்கோவாவில் நாங்கள் இறங்கும்போது மணி அதிகாலை மூன்று மணி. அரசு நிர்ணயம் செய்த டாக்சிகள் வெளியே இயங்கிக்கொண்டிருந்தன, மற்றும் சில ஆட்டோக்களும். ஆனால் டாக்க்சியில் நான்கு பேர்மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் ரயிலில் வந்திறங்கிய அனைவரும் முன்பதிவு செய்துகொண்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றபடியிருந்தனர். நாங்கள் எங்கு செல்வது என்பதில் எங்களுக்கு ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. பல்லோலியம் பீச், அதிக தென்னைமரங்களோடும் கடலை ஒட்டிய ஹட் எனப்படும் சிறு குடில்களோடும் இருக்கும் வாடகையும் சுமாராக இருக்குமென படித்ததால் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்தோம். சரியாக மட்கோவாவிலிருந்து 45 கிலோமீட்டர்கள் தெற்கு நோக்கிய பயணம், டாக்சியில்தான் முடியும் என்பதால் சரி என்று நாங்களும் டாக்சி பதிவு செய்ய வந்தோம். ஆனால் நிறைய புக்கிங் இருப்பதாகவும் அங்கே நிற்பவர்களை கொண்டுசேர்த்தபின்னரே உங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என்றார். அவர் கைகாட்டிய இடத்தில் ஒரு இருபது பேர் நின்றுகொண்டிருந்தனர். நாலு நாலா என்னைக்கு கொண்டுபோய் விடுறது? இது நடக்கிற கதையில்லை என்று முடிவு செய்து அவரிடமே கேட்டு அருகில் வேறு என்ன பீச் இருக்கிறது? தங்க இட வசதியெல்லாம் கிடைக்குமாவென கேட்டறிந்து கொண்டோம். அவர் சொன்னது கோல்வா பீச், அதுவும் அங்கிருந்து வெறும் ஆறு கிலோமீட்டகள்தான்,


மேலும் வெண்நிற மணலோடு கூடிய மிகப்பெரிய பீச் கோல்வா என்று படித்த நியாபகம் வரவே பத்து நிமிட பயணத்தில் இரண்டு ஆட்டோக்களில் நான்கு நான்காக பிரிந்து கோல்வா சென்றடைந்தோம். ஆட்டோ காரர்களின் உதவியோடு இரண்டு மூன்று ஹோட்டல்களுக்கு அடுத்து ஸ்டார் ரெஸார்ட் என்ர ஹோட்டலை அடைந்தோம். அனைவரும் ஒரே ரூமில் தங்குவதுமாதிரியான ஏற்பாடு. காரணம் தனியறைகள் கிடைக்கவில்லை மற்றும் அதீத கட்டணம். 12-12 செக்அவுட் முறைகள் என்பதால் நாங்கள் காலை ஐந்து மணியிலிருந்து மதியம் பனிரெண்டு மணிவரை ஒருநாள் வாடகை தரவேண்டியிருந்தது. இதுதான் கோல்வா பீச்சிலிருந்து ஒரு நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் பீச் ரெஸார்ட்.

ஆக கோவா செல்ல விருப்பமுடையவர்கள், அவசியம் பகல் நேரத்தில் அங்கு சென்றடையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது மிக முக்கியம், நாங்கள் சென்றது ஹாஃப் சீஸன் என்றபோதும் ஹோட்டல்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தது. நல்ல சீஸனில் செல்லும்போது இது அவசியம் கவனம்கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் மங்களூரிலிருந்து கோவா வரும் வழிகள் நிறைய பாலங்களும் குகைகளும் அதிகம் காணப்படுகின்றன. சைட் சீயிங்கில் விருப்பமுடையவர்கள் மங்களூரிலிருந்து காலையில் கிளம்பினால் மதியவாக்கில் கோவா செல்லவும் பஸ் அல்லது டூவீலர் வாடகையில் ஹோட்டல்களுக்கு செல்லவும் ஏதுவாக இருக்கும். ஹோட்டல்களில் அறைகள் வாடகைக்கு எடுப்பதிலும் சிரமம் இருக்காது.

இரவு நேரப்பயணம் என்பதால் அதிக களைப்பு இல்லை, (விடிய விடிய ரயிலில் சீட்டுவிளையாடிக்கொண்டிருந்தது வேறு விஷயம்) ஆக காலை ஆறு மணிக்கெல்லாம் நாங்கள் வெளியே கிளம்பிவிட்டோம். கோல்வா உண்மையிலேயே மிகவும் அருமையான ஒரு கடற்கரை. நல்ல நீளமான கரை, வெள்ளைவெளேரென மணல், நீலமாய்க் கடல் அழகு. ஸ்கூபா டைவ், டால்பின் ரைட், ஸ்பீட் போட்டிங், வாட்டர் ஸ்கூட்டர், பாராசூட் என எல்லா நீர்சார் விளையாட்டுகளும் இங்கு கிடைக்கின்றன. அருகிலேயே சாப்பிட ஆங்காங்கே ஹோட்டல்கள், இன்னும் சிலசில கடைகள் என அதிக தூரம் அலைய வேண்டியதில்லாமல் எல்லாமே அருகிலேயே கிடைக்கக்கூடிய ஒரு பீச். இன்னொன்று அதிக வெளிநாட்டினர் வருகைதரக்கூடிய பீச்களில் இதுவும் ஒன்று. மேலும் மெரினாவைப்போல நீளமான நேரான கடற்கரை, அதில் இரண்டு மூன்று கிலோமீட்டர்களுக்கும் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு பீச்சென்று அழைக்கின்றனர். மேப்பில் பார்த்தால் பதினெட்டு கிலோமீட்டருக்கு ஒரே கரை, ஒரே கடல்.

இன்னொரு முக்கியமான விஷயம், கோவா செல்ல வேண்டியவர்களின் கவனத்திற்கு. மொழி. நாங்கள் கேள்விப்பட்டவரை கோவாவில் ஆங்கில பொதுவான மொழி என்பதும், ஹிந்தி அதிகம் புழங்கும் மொழி என்பதும் ஆனால் ஹிந்தி மட்டுமே பொதுவாக இருக்கிறது. எங்கும் ஹிந்திதான். ரூம்பாயிலிருந்து கடற்கரையில் குச்சி ஐஸ் விற்பவன் வரை. கட்டாயம் ஹிந்தி தெரிந்த ஒருவரோடு செல்வது உத்தமம். இல்லையென்றால் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள். வெளி ஆட்கள் மொழிப்பிரச்சனை கொண்டவர்கள் என்பதை தெரிந்துகொண்டதும் ஏமாற்றத்தொடங்குகின்றனர். முன்னமே சொல்லிவைத்து நடிப்பதுபோல அனைவரும் ஒரே மாதிரியாக இயங்குவதுதான் ஸ்பெசல்.

டால்பின் ட்ரைவ் எனப்படும் கடல்பயணம் அதாவது 40 நிமிட கடல் பயணம் என்றும், கடலின் உள்ளே சென்று டால்பின்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று டால்பின்கள் துள்ளிக்குதிப்பதை காட்டுவோம் என்றும், ஒருவேளை டால்பின்களின் வருகை இல்லையென்றால் கடல் வழியாக இரண்டு மூன்று பீச்களுக்கு சென்று வரலாம் என்றும் சொன்னார்கள். சரி என படகு பயணம் செல்ல முடிவெடுத்து கட்டண விபரம் கேட்டபோது தலை சுற்றியது. ஒருவருக்கு ரூ.850/- நண்பர் செல்வா அரைகுறை ஹிந்தியில் தட்டுத்தடுமாறி பேரம் பேசியதில் எட்டுபேருக்குமாய் சேர்த்து ரூ.1200-ல் பேரம் முடிந்தது. ஒருவழியாக படகில் ஏறினோம், ஒரு பத்து நிமிட பயணத்தில் படகை நிறுத்திவிட்டு வலதுபுறம் பார்க்கச்சொன்னார்கள், சின்னதாய் ஒருமீன் செத்து மிதந்ததே தவிர ஒரு டால்பினும் கண்ணில் படவில்லை என்னையா டால்பினைக்காணோமெ என்றால் இந்த நேரத்தில் அதிகம் வராதுங்க என்றார்கள் கூலாக, சரி இதைக்கரையிலேயே சொல்லியிருக்கலாமில்லையா? என்று புலம்பியபடி சரி ரெண்டு மூணு பீச்சுக்கு போலாமுன்னு சொன்னிங்களே அங்காயாவது போங்க என்றோம். அப்படியே படகைத்திருப்பி வந்தவழியே திரும்ப படகை செலுத்தினார்கள், நாங்கள் படகேறிய இடத்திலிருந்து அரை அரை கிலோமீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களைக்காட்டி வெவ்வேறு பெயர்களில் இது ஒரு பீச் இது ஒரு பீச் என்று கணக்கு காட்டினார்கள் (ஹும்.. என்னா ஒரு வில்லத்தனம்?)


இந்த பித்தலாட்டம் இங்கு மட்டுமல்ல, கோவா முழுவதுமே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. எதை எடுத்தாலும் நாலும் மடங்கு அதிகம் சொல்லிதான் பேரமே ஆரம்பிக்கின்றனர். ஆக தாராளமாய் அவர்கள் சொல்லும் கட்டணத்திலிருந்து கால் பங்கிற்கும் குறைவாகவே பேரத்தைத் தொடங்கலாம். சத்தியம். உடும்புபிடியாக ஒரே விலையில் இருந்தால் யோசிக்காமல் சரி வேண்டாம் என்று சொல்லிவிடலாம் நிச்சயம் அவர்களாகவே திரும்ப நமது பேரத்திற்கு வருவார்கள். சரி சீஸனல் பிஸினஸ் செய்பவர்கள் இந்த ஓரிரு மாதங்களில் சம்பாதித்தால்தான் உண்டு, எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டமா? இப்படி ஏதாவது சமாளிப்புகளை சொல்லிக்கொண்டு எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஏமாந்துதான் போனோம் கோவா முழுவதும். ஏன் கோவா சுற்றுலாத்துறை இவற்றிற்கெல்லாம் ஒரு விலை, கட்டண நிர்ணயம் செய்யக்கூடாது என்று தோன்றியது.

ஆக முன் அனுபவமில்லாமல் எங்களைப்போல முதல்முறையாக கோவா செல்லவிருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கட்டுமென்றுதான் இந்த பயண கட்டுரையை எழுதுகிறேன். என் அனுபவங்களை இன்னும் ஓரிரு பதிவுகளாக எழுதலாமென இருக்கிறேன், உங்களின் வரவேற்பைப் பொருத்து.  இது என்னுடைய இந்த இரண்டு வருட பதிவுகளில் முதன்முறையாக தொடரும்,

மேலும் ஒரே இடத்திலிருந்து கிளம்பி, கிட்டதட்ட ஒரே மாதிரியான பயணத்திட்டங்களோடு பயணித்த நண்பர் ஆதவாவின் கட்டுரையை படிக்க இங்கே அழுத்துங்கள்.

ஹேப்பீ தீபாவளி........

புது வருட கேலண்டர் வாங்கியதும் எப்போ தீபாவளின்னு பார்க்கிற பழக்கம் உங்களுக்கு உண்டா? உண்டுன்னா மேல படிங்க, J

சென்ற வாரம் கூட ஆடம்பர தீபாவளியை புறக்கணிப்போம் என்று ஒரு மெயில் வந்தது, இன்னமும் விவாதங்களோடு பல குழுமங்களில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. சமீபகாலமாய் தீபாவளி என்றதும் நினைவிற்கு வருவது போனஸ், புதுத்துணி, லீவ். அவ்ளோதான். தீபாவளிக்கு வீட்டில் பலகாரங்கள் செய்வது கிடையாது, அனைவரும் கடையில்தான் வாங்குகின்றனர், அதைப்பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு என்றபடி மைக்கைப் பிடித்தபடி செய்தி சேனலிலேயே இனிப்பு விற்க ஆரம்பித்து விட்டனர். தி.நகரில் மக்கள் வெள்ளம் என்று ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் மக்கள் நுழைவதையே திரும்ப திரும்ப காட்டிக்கொண்டு எல்லா ஊடகங்களும் விளம்பரதாரர்களுக்கு பணம் செய்யவே முனைகின்றனர். இவ்வளவுதானா தீபாவளி.
எனக்கு தெரிந்து யார் ஒருவருடைய இறந்த நாளையும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது கிடையாது. தீபாவளி. கான்செப்ட் தப்பா இருந்தாலும் ரொம்ப கலர்புல் பண்டிகை. அனேகமாக இந்தியாவே ஒன்று சேர கொண்டாடும் பண்டிகை. முன்பு இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி, இன்று சாதி, சமய, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
            தீபாவளி என்ற உடனே என் நினைவிற்கு வருவது கங்கா ஸ்நானம், புதுத்துணிகள், பட்டாசு. அதிலும் வெகு விஷேசம் கங்கா அதிலும் எங்கள் வீட்டில் பாட்டி இருந்தவரை அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருப்பார்கள். எல்லாரும் அழுங்க மழுங்க விழித்தபடி தலையில் பாட்டி வைத்து விட்ட எண்ணெய் வழிய பலகையில் அமர்ந்திருப்பார்கள். எனக்கு தலையில் எண்ணெய் வைத்து ஸ்லோகங்கள் சொல்லி சாமி கும்பிட்டு விட்டு முதல் பட்டாசை பாட்டி எடுத்து கொடுக்கும்வரை, எனது முழு கவனமும் தெருவிலேயே இருக்கும். எங்கள் ஊரில் ஒரு பழக்கம், யார் அந்த தெருவில் முதல் பட்டாசு போடுகிறார்களோ அவர்களே அந்த தெருவிற்கு தீபாவளியையே கொண்டு வந்து விட்டதாக சொல்லுவர். எனவே காலையில் எழுந்தவுடன் அந்த தெருவையே ஒரு சுற்று சுற்றி வந்து யாரும் இதுவரை பாட்டாசு வெடிக்கவில்லை என்று தெரிந்த பின்னரே நான் பூஜையறைக்கு வருவேன்.
            செம்பருத்தியிலை, வெந்தயம், கறிவேப்பிலை, வேப்பிலை மற்றும் இன்னபிற எனக்கு தெரியாத சில பூக்களும் இலைகளும் ஒன்றுசேர்த்து நல்லெண்ணையுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்டு தீபாவளியின் ஒருசில நாட்களுக்கு முன்னராகவே கங்கா ஸ்நானத்திற்கு எண்ணெய் தயாராக இருக்கும். முறுக்கு, சீடை, ரவா லட்டு, முக்கியமாக மைசூர் பாகுபோன்ற இனிப்பு கார வகைகள் தீபாவளிக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக அம்மாவும் பாட்டியும் செய்து கொண்டிருப்பார்கள். தீபாவளியன்று சாமிக்கு படைக்கப் பட்டு பின்னரே சாப்பிடவேண்டும் என்பது பாட்டியின் கட்டளை. அம்மா செய்யும் மைசூர் பாகு, கெட்டியாக விகடன் ஜோக்கில் வரும் சுத்தி வைத்து உடைக்கும் இனிப்புகள் போல இருக்கும். ஆனாலும் அது எனக்கு பிடித்த இனிப்பு. இன்னமும் எது மாறினாலும் மாறாத ஒன்று அம்மா செய்யும் மைசூர் பாகுவின் சுவை. பாகு கிண்டியபின்னர் நெய் தடவப்பட்ட அகண்ட தட்டில் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி வைப்பார். அதிலும் பாட்டிக்கு தெரியாமல் சிறு சிறு துண்டங்களை எனக்கு தரும் அம்மா செய்தது என்பதால் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
     புது துணிமணிகள் சரசரக்க அக்காவும் தங்கையும் அருகிலுள்ள வீடுகளுக்கு சென்று இனிப்புகளை கொடுத்து விட்டு வருவார்கள். பிறகு அவர்கள் வீட்லிருந்து எங்களுக்கு என்று ஒரு பண்டமாற்றமே நடந்து கொண்டு இருக்கும். எங்களை பொறுத்தவரை தீபாவளி, தீபாவளியன்று கொண்டாடப்படுவது கிடையாது. ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடும்,
எங்களுக்கென்று பட்டாசும் புதுத்துணியும் வாங்கப்பட்டு விட்டதோ அன்றிலிருந்தே தீபாவளிதான். பட்டாசு வாங்கியவுடன் அப்பா எனக்கு என் தங்கைக்கு அக்காவுக்கு என்று பங்கிட்டு கொடுத்துவிடுவார். யார் மனதும் கோணாதபடி பங்கிடுவதில், அப்பாவுக்கு நிகர் அப்பாதான். இதில் எது சரியாக இருந்தாலும் பட்டாசுகளை அதிகம் வைத்திருக்கும் எனக்கு நான்தான் அதிகம் வைத்திருப்பதாக நினைத்துக்கொள்வேன்.    ஒவ்வொருநாள் பள்ளி முடிந்து வந்தவுடன் அவரவர்க்கான பட்டாசுக்களை எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று காயவைப்பதும், சிலேட்டு, நோட்டு, பேப்பர் என எங்கு பார்த்தாலும் எதை பார்த்தாலும் அதில் பாட்டாசு, மத்தாப்பு வகைகளை வரைந்து அதற்கு மேலே பட்டாசு கடை என்று எழுதுவதும், கடை என்பதை அடித்து கடல் என்று எழுதுவதும், அதிலும் லட்சுமி வெடி வரையும்போது அதில் லட்சுமி படம் தெரிய வரைய நான் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்,
            பின்னர் நண்பர்கள் ஒவ்வொருவராக சேர பட்டாசு வெடிக்க ஆரம்பித்தால் விதவிதமாக வெடித்துகொண்டிருப்போம். அதிலும் பரமசிவம் என்று ஒரு நண்பன் இருந்தான், அவனுக்கு மட்டும் எங்கு கிடைக்குமோ தெரியாது, கிலோ கணக்கில் வெங்காய வெடி கொண்டு வருவான். சாதாரண வெடியை கூட விதவிதமாக வெடிக்கும் பரமசிவத்திடம் நான் எனது குழந்தைகளுக்கு செய்துகாட்ட நிறைய சாகசங்கள் இருக்கிறது. இப்படி தீபாவளிக்கு முந்தய ஒவ்வொரு நாளும் தீபாவளியாகத்தான் இருந்திருக்கிறது.
            முன்பெலாம் டிவி கிடையாது, சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாது. தீபாவளி தீபாவளியாகவே இருந்தது. இன்று தீபாவளி மற்றுமொரு விடுமுறை நாள். இப்பொழுது பாட்டி இறந்து விட்டார்கள், அக்காவும் தங்கையும் திருமணம் ஆகி சென்று விட்டார்கள், பரமசிவமும் இல்லை, ஆனாலும் தீபாவளி வரத்தான் செய்கிறது. ஒவ்வொரு தீபாவளியும் என்னுள் பலபல நியாபகங்களை விதைத்து சென்றவாறேதான் இருக்கிறது.
புது வருட கேலண்டர் வாங்கியதும் எப்போ தீபாவளின்னு பார்க்கிற பழக்கம் உங்களுக்கு உண்டா? அப்ப நீங்க என் பக்கம். இன்னமும் என் மனம் தீபாவளியை ஒரு குழந்தையைபோல எதிர்பார்க்கிறதே? அந்த பாலய வாசம் மறையும் வரை எதற்காகவும் தீபாவளி கொண்டாடுவதை விடுவதாய் இல்லை. இதோ நாளைக்கு, நம் எல்லோருக்குமாய் வந்துவிட்டது, தீபாவளி.

// பின்குறிப்பு : இது சின்னச்சின்ன மாற்றங்களோடு கூடிய ஒரு இது மீள்பதிவுதான். ஆக தொடர்ந்து படிப்பவர்கள் மன்னிக்கவும்.  //


கோ என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை, என்பது எனக்கு மட்டுமில்லாம உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைய எனது வாழ்த்துகள், ஹேப்பி தீபாவளி...

அகம்-புறம்

சோதனைகள், சோர்ந்து ஓடும் சோகம் ஏனடா?
இன்று சாதனைகள், சேர்ந்து கூடும் வாழும் மானிடா?
வெண்பனி மேகம் இருக்கு, தென்னிளம் காற்றும் இருக்கு
வெண்பனி மேகம் இருக்கு, தென்னிளம் காற்றும் இருக்கு
லட்சியபாதை எழுப்பு...........                 
போராட்டமா? பளிங்கு போல் தோற்றமா?
ஏமாற்றமா?  உன் வாழ்வில் வீண் மாற்றமா?

தடைகள் உனைத்தாக்க, மறைவில் மனம் வேர்க்க, இருள் பாதை எதற்கு?
மனத் திரைகள் தனை நீக்க, கரையில் உனைச் சேர்க்க, அருள், சாமி இருக்கு.......
தடைகள் உனைத்தாக்க, மறைவில் மனம் வேர்க்க, இருள் பாதை எதற்கு?
மனத் திரைகள் தனை நீக்க, கரையில் உனைச் சேர்க்க அருள், சாமி இருக்கு.......
போரைத்தொடு, வாளை எடு, பகையை சுடு, சிறப்போடு
சோகம் விடுத்து, சொர்கம் தொடுத்து, ராகம் கொடு, விழிப்போடு
உன்னை நீ அறிந்து, சிந்தை நீ தெளிந்து, கதவை நீ திறந்து
வாடா.. வாடா... வா... டா.....
மாறிவா, முன்னேறிவா,
புதுப்பாதை கொண்டு, தாழ்வை வென்று வாழ்வை ஆளடா,
வெற்றி மாலை உன்னை வாழ்த்திப்போற்றும், வாழும் மானிடா


மன வலியில் விழி ஏங்க, இமைகள் அதைத்தாங்க, கண்ணில் ஈரம் எதற்கு?
மடியில் உனைத்தாங்க, சுமைகள்தனைத் தாங்க, அன்னை பூமி இருக்கு
படைகள் எடு, சிகரம் தொடு, கொடிகள் நடு, சிறப்போடு
தடைகள் தடு, துயரம் விடு  விடைகள் கொடு, விழிப்போடு
உண்மை நீ அறிந்து, உன்னில் நீயெழுந்து மண்ணில் நீ மலர்ந்து
வாடா... வாடா..... வா...டா....
மீண்டும் வா, இன்று மீண்டு வா
புதுப்பாதை மாறி வாழ்வில் கோடி இன்பம் சேரடா
வெற்றி மாலை உன்னை வாழ்த்திப்போற்றும் வாழும் மானிடா

வெண்பனி மேகம் இருக்கு, தென்னிளம் காற்றும் இருக்கு
லட்சியபாதை எழுப்பு...........                 
பூந்தோட்டமா? பளிங்கு பூந்தோட்டமா?
முன்னேற்றமா? உன் வாழ்வில் விண் ஏற்றமா?
ஆகம், ஒரு சமகால கர்நாடக இசைக்குழு.

அகம் என்பதே ஒரு தொன்மையான தமிழ்பெயர்தான். அகம் என்றால் உள்ளே, அதுபோல உள்ளிருந்து மலர்வதுதானே இசையும், ஒருவேளை அதனால்கூட அகம் என பெயரிட்டிருக்கலாமென நினைக்கிறேன்.


பொதுவாக பேண்ட் இசையில் பாஸ்கிடாரை ஹை டெசிபலில் அலறவைத்துக் கொண்டு உச்சஸ்தாயில் கத்துவதுதைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். அது பிடிக்காமலில்லை. ஆனாலும் தெளிவாக, நல்ல வரிகளோடு, அதுவும் தமிழில், சுத்த கர்நாடகமாகவும் இல்லாமல், தேவைக்கு அளவாய் எங்கும் வரம்புமீறாமல் வெஸ்டர்னையும் நுழைத்திருப்பதே இவர்களின் புத்திசாலித்தனமதான். அதுவும் ஹரீஸ் அவர்களின் குரல், எல்லா நெளிவு சுளிவுகளையும் அசறாமல் எதிர்கொள்கிறது, சங்கதி, கமகம் (நன்றி-விஜய்டிவி, சூப்பர்சிங்கர்) அன்வைத்துமே அட்சர சுத்தமாய் வருகிறது. இன்னும் ஏன் திரைத்துறையில் கால்வைக்காமல் இருக்கிறார் என்று கேள்வி எழுந்தாலும் ஒருபுறம் மகிழ்சியாகவே இருக்கிறது.
          
கடந்த ஒருவாரமாய் திரும்பத்திரும்ப இவர்களின் பாடல்களை பார்த்துகொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். எவ்வளவு முறை முயன்றும் ஒருமுறைகூட சரியான தொணியில் பாடமுடியவில்லை. HATS OFF TO YOU HARISH AND ALL YOU GUYS.
          
ஹரீஸ்,  சுவாமி, ப்ரவீன்சூரஜ், விக்னேஷ்கணேஷ்சிவா இந்த இளைஞர்களின் குழுதான்அகம். இவர்கள் அனைவருமே பெங்களூரில் ஐ.டி துறையில் பணியாற்றியபடியே இந்த குழுவையும் வெற்றிகரமாக நடத்திவருகின்றனர். சென்றமுறை இவர்களது குழுவினரைப்பற்றி அறிமுகம் செய்தபின் அதை படித்துவிட்டு, இந்த குழுவின் பேஸ்கிடாரிஸ்டான விக்னேஷ் பின்னூட்டமும், மெயிலும் செய்திருந்தார். அவருடனான தொடர்பில் பல சுவராஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
          

2007 களில் சன் டிவியில் ஏ.ஆர்.ரகுமான் மேற்ப்பார்வையில் நடந்த ஊலல்ல்லா.. என்ற இசைக்குழுவினருக்கான போட்டியில் வெற்றிபெற்ற ஒரு குழுதான் இந்த அகம். குறிப்பாக பாடகர் ஹரீஸைப் பற்றிய ரகுமானின் பாராட்டை தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கின்றனர். இந்த போட்டியின்போது சொந்தமாக இசையமைத்து பாடும் செல்ஃப் கம்போசிசன் சுற்றில் இசையமைத்த பாடல்தான் A Path of Aspiration – லட்சியபாதை. இன்னமும் இவர்களின் எல்லா நிகழ்ச்சிகளிலும் முதல்பாடலாக இருக்கிறது. நம்பிக்கையை அடிப்படையாக் கொண்ட இந்த பாடலில் ஒவ்வொரு வரிகளுமே நம்பிக்கையும் புத்துணர்ச்சியோடும் எழுப்பட்டிருக்கின்றன. தற்சமயம் என்னுடைய பேவரைட் பாடல் இதுவாகத்தானிருக்கும் . இந்தபாடலை எழுதியிருப்பது கிபோர்ட் ப்ளேயர் ஸ்வாமி. வாழ்த்துகள் நண்பரே!

இப்போது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயின் விழிப்புணர்விற்காக, வாழலாம் மறுபடியும் என்கிற கான்செப்ட்டில் இவர்கள் இசையமைத்த லைவ் அகைன் என்கிற பாடல், மிக அருமை. இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடிக்கொடுத்திருக்கிறார், கூடவே ஹரீஸ். ஸ்ரேயா பற்றி சொல்லவே வேண்டாம். நல்ல பிக்ச்சரைஷேசனோடு வந்திருக்கிற பாடல். அவசியம் பாருங்கள். விரைவில் சிடி வெளியிடும் எண்ணத்தில் இருக்கும் அகம் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
          
விக்னேஷ் அவர்கள் அனுப்பியிருந்த மெயிலில்கூட இந்த பாடலைப்பற்றி எழுதியிருந்தார். ஒரு நல்ல விஷயத்திற்காக இந்த பாடலை இசையமைத்திருக்கிறார்கள். அதை இங்கு பகிர்வதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. மேலும் தீபாவளியன்று இவர்களின் எக்ஸ்க்ளூசிவ் லைவ் ப்ரோகிராம் மளையாள ரோஸ்பவல் சேனலில் ஒளிபரப்பாகிறது. தொடர்ந்து யூட்யூபிலும் காணக்கிடைக்கும். கிடைத்தவுடன் இங்கும் அப்டேட் செய்கிறேன்.


LIVE AGAIN