கோவா - ஹேப்பி எண்டிங்.

ஹாய் மக்களே! வெல்கம் பேக் டு டோனாபோலா, கோவா....

இப்பதான் இந்தபக்கம் வறீங்களா? அப்ப பாகம் 1, பாகம் 2 இது ரெண்டையும் படிச்சிட்டு வாங்க... எல்லாம் ஒரு கண்ட்னியூட்டிக்குத்தான்.....

நன்றி நண்பர்களே! என்னுடைய சஸ்பென்ஸை காப்பாற்றியதற்கு இன்னைக்கு பதிவு போட்டிடலாம்ன்னு நினைக்கிறேன்ம் சரியா வெண்புரவி அவர்கள் பின்னூட்டத்தில் இப்படி கேட்டிருக்கிறார் “கோவாவிலிருந்து 50 கிமீ பயணத்தில் தூத் சாகர் அருவி உள்ளது...சென்றீர்களா? காட்டுப் பயணம்.... பால் போல அருவி... நீச்சல் குளம்போல அருவிக்குள் குளியல்... அருவியின் மேல புறம் புகை விட்டுச் செல்லும் ரயிலின் காட்சி.... கவிதையாய் இருக்கும்” எப்புடி நம்ம டைமிங்.... ஹா....ஹா...

இதுதாங்க அந்த சஸ்பென்ஸ், உலகின் மிக அழகான ரயில்பாதைகளில் ஒன்றான கொங்கன் ரயில்வே பாதை. குறிப்பாக லோண்டா என்னுமிடத்திலிருந்து மட்கோவா செல்லும் வழியில் குலேயம் ரயில் நிலையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த தூத்சாகர் அருவி. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்த அருவியின் வழியாக செல்லும் ரயில்பாதை. பொதுவாக மலையின் விளிம்புகளில் உள்ள ரயில்பாதை பயணம் என்பது எவருக்கும் த்ரில்லான அனுபவமாகவே இருக்கும், அதுவும் கூடவே ஹோ’வென கொட்டும் அருவியின் சப்தத்தோடும் சாரலோடும் பயணிப்பது என்றால் எப்படியிருக்கும்? எங்களைப் பொருத்தவரையிலும் இந்த கேள்வி கேள்வியாகவே நிற்கிறது. காரணம், நாங்களும் கோவா சுற்றுப்பயணத்தில் தவறவிட்ட இடம் இது. எனவே கோவா செல்லவிருப்பவர்கள் அவசியம் சென்றுவாருங்கள். திருப்பூர், கோவைவாசிகள் கேரளா-மங்களூர் வழியை விடுத்து சென்னை-கடப்பா வழியைத் தேர்வுசெய்தால் கோவா செல்லும் வழியிலேயே இங்கு போக முடியும். எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் இங்கு நிற்பது கிடையாது. பாஸஞ்சர் ரயில்கள் இங்கு இரண்டு நிமிடம் வரை நின்று செல்லும். அருவியின் வெகு அருகிலேயே தூத்சாகர் ரயில் நிலையமும் உள்ளது. மழைக்காலங்களில் இந்த பயணம் ரம்மியமாக இருக்குமாம்... ம்ம்ம அடுத்தமுறை இந்த இடத்தை விடப்போவதில்லை.

ஓகே நம்ம கதைக்கு வருவோம். டோனாபோலாவின் பேவாட்ச் பகுதியில் அனைவரையும் காத்திருக்க சொல்லிவிட்டு ஹோட்டல் தேடி நானும் செல்வாவும் அலைய ஆரம்பித்தோம். ஒருவழியாக அடுத்த ஒரு மணிநேரத்தில் கண்டுபிடித்தோம். ஏன் ஒரு மணிநேரம் என்றால், பட்ஜெட்தான். டோனா போலாவில் கிட்டதட்ட நிறைய ஹோட்டல்கள் மூன்று நட்சத்திர அந்தஸ்துக்கும் மேல்தான். குறைந்தது இரண்டுபேர் தங்கக்கூடிய அறைக்கு நாளொன்றுக்கு 3000வரை வசூலிக்கிறார்கள். அதுவும் செகவுட் டைம் காலி 11 மணி. சீசன் டைமில் இன்னும் அதிகம் இருக்குமாம். நாங்கள் தங்கிய அறை ஏசியுடன் ரூ.1200. நாலு பேர்வரை தங்கிக்கொள்ளலாம், இரண்டு எக்ஸ்ட்ரா பெட்டுடனனே அந்த விலைதான். ஆக வரம்புகளுக்குட்பட்டு செலவு திட்டம் வைத்திருப்பவர்கள், நேரம் போவது பற்றி கவலைப்படாமல் தேடவேண்டும், சகல வசதிகளுடன் குறைந்த விலைக்கே நல்ல அறைகள் கிடைக்கிறது.ஒருவழியாக ஹோட்டலை புக் செய்துகொண்டு, அசோக்கின் பிறந்தநாளை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம். நாங்கள் அறை எடுத்திருந்த ஹோட்டலில் ரெஸ்ட்டாரண்ட் இல்லை. ஆகவே இரவு உணவிற்கு வெளியே செல்வது என்று தீர்மாணித்தோம். வெளியே வரும்போது மணி இரவு 11ஐ நெருங்கியிருந்தது. ஊரே அடங்குவது போல தெரிந்தது. ஆகா, ட்ரீட் போயிடும் போல என்று நொந்தபடி தேடிக்கொண்டிருந்தபோது மெல்லிய இசை வந்த பக்கம் சென்றோம். ஒரு பாழடைந்த கட்டிடம், சரியாக சொன்னால் எதோ புணரமைப்புகள் நடந்துகொண்டிருந்த இடம், அருகே சென்றபொழுது பக்கவாட்டில் படிகட்டுகள் இறங்கி சென்றன. கீழே இறங்கினால் கடலின் கரைகளை ஒட்டி அழகான ஓப்பன் ரெஸ்ட்டாரண்ட். குறைந்தது ஒரு ஐம்பது மேசைகளாவது இருக்கும். நிறைய வெளிநாட்டினர்கள், வட இந்தியர்கள். மெல்லிய இசையுடன் சந்தோசமான பேச்சுகளினூடே உணவருந்திக் கொண்டிருந்தனர். வாவ், அருமையான இடம். நிறைய படங்களில், கதைகளில் படித்திருந்த கேண்டில்லைட் டின்னர் அன்று நிறைவேறியது.


அங்கு ரெஸ்ட்டாரண்டில் பணிபுரிபவரிடம் அசோக்கின் பிறந்தநாளைச் சொல்லி வெட்டுமளவிற்கான பெரிய கேக் கிடைக்குமா? என்றோம். இன்னேரம் கேக் கிடைக்க வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் கேரமல் ஏற்பாடு செய்யட்டுமே என்றார். எனக்கு சுத்தமாக புரியவில்லை. வெட்டமுடியுமா என்றேன். தாராளமாக என்றார். சரியாக பனிரெண்டு மணிக்கு கேரமெல்லையும் ஒரு மெழுகுவர்த்தியும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து அமர்ந்தோம். அவனுக்கு ஒரு சஸ்பென்சாக இருக்குமே என்று. சரியாக பணிரெண்டு மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக அதைக்கொண்டு வந்தார். வாழ்த்துப்பாடலோடு அதை வெட்டும்போது சில எழுந்து கைதட்டினர். எனக்கு அதன் சுவை எப்படியிருக்கும் என்பதே குறியாயிருந்தது. ஒருமாதிரி பாலாடைகட்டிபோல இருந்தது. சாப்பிட அவ்வளவு நன்றாக இல்லை. ஒரு மாதிரியாக வழுவழுவென இருந்தது. ஆனால் முகத்தில் பூச அருமையான வஸ்து. அதற்கும் நானே முதல் பலி.


இனிமையான அந்த தருணங்களுக்கு பிறகு உணவையும் முடித்துக்கொண்டு ஒண்ணரை மணிக்கு அறைக்கு வந்து, தூங்கினோம். அடுத்தநாள் காலை, கோவாவில் கடைசி நாள். என்ன செய்யலாம்? எங்கு போகலாம்? என்ற எந்த யோசனையும் இல்லை. அனைவருமே பாகா போகலாமென்று ஒரு மனதாக சொல்ல பாகா பீச்சிற்கு புறப்பட்டோம். வழி நெடுக பெட்டிகடைகளைபோல மதுக்கடைகள். ஒருடின் பியர் ரூ24/- வண்டியை நிறுத்தி 100 ரூபாயைக்கொடுத்தால் நான்கு கேன்கள் கொண்ட ஒரு பேக் தருகிறார்கள். எங்க தீர்ந்துபோனாலும் இப்படிங்கிறதுக்குள்ள ரெண்டு கடை வந்திடும்.

ஆனால் அதேபோல இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு ஒரு விபரம். தேவையான அளவு பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுங்கள், ஏனென்றால் வண்டிக்கு பெட்ரோல்போடும் இடங்கள் மிக்க்குறைவாகவே தென்படுகிறது. நாம் வேண்டுமானால் எங்கு நிறுத்திவேண்டுமானாலும் (நமக்கு பெட்ரோல்) போட்டுக்கொள்ளலாம். அதேபோல பஞ்சர் கடைகளும் மிகக்குறைவே. கோவாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுவதுதற்கு எந்த தடையுமில்லை. இரவில் மட்டும் தடையுள்ளது என நினைக்கிறேன். ஆனாலும் நாங்களிருந்த நான்கு நாட்களிலுமே ஒரு விபத்தோ, விதிமுறைகளை மீறிய பயணங்களையோ எங்கும் பார்க்கவே முடியவில்லை. காரணம், பெரும்பாலனவர்கள் சுற்றுலாவாசிகளாக இருப்பதாலும் யாரிடத்திலும் எந்த அவசரமும் இல்லை.

பாகாவை நெருங்க நெருங்க திருவிழா நெருங்குவதைப்போல இருந்தது, கூட்டம். பாகா, இதுதான் ரியல் கோவா. தி ரியல் பார்ட்டி டவுன் பாகா. கடற்கரை ஓரமாய் நிறைய ரெஸ்ட்டாரண்ட்கள், எல்லாம் மக்களால் வழிந்துகொண்டுதானிருந்தது. பெரும்பாலும் வெளிநாட்டினர்கள்தான் அதிகம் இருந்தனர். பீச்சில் படுத்துக்கொள்ளும் அந்த சாய்வு நாற்காலிக்கு ஒரு மணிநேரத்திற்கு 25-50 வரை வசூலிக்கின்றனர். கடலில் குளிக்க வேண்டியது, பின் உடம்பின் ஈரம் காயும் வரை மணலில் கிடப்பதும் பின் கடலில் இறங்கி ஆடுவதுமாய்ப் போனது. பாகாவில் அதிக ஆழமில்லை, எனவே பயமின்றி நிறைய தூரம் உள்ளே செல்ல முடிந்தது. அதிக கூட்டமில்லாத இடத்தில் கழுத்தளவு கடல்நீரில் நின்றுகொண்டிருந்தேன் அவ்வப்போது வரும் பெரிய அலைகளில் மூழ்குவதும், தண்ணீரை விழுங்குவதும் பின் சுதாரித்து எழுவதுமாய் நேரம் போனது தெரியவில்லை.

உண்மையில் கடல் பெரியவிஷயம்தான் என்பது கால்கள் கடலில் மூழ்குமளவு செல்லும்பொழுது புலப்பட்டுவிடுகிறது. மேலும் சந்தோஷமான அந்த மனநிலையும், உலகின் மிகப்பெரிய ஒன்றான கடலோடு சங்கமித்து நிற்கையில் மனம் சிறுகுழந்தையாகி விடுகிறது. ஸ்ரீகாந்த் கேட்டான் “ஏண்டா, ஆத்து தண்ணி டேஸ்டா இருக்கு, கடலுக்கு வந்ததும் உப்புகரிக்குது?” என்று அதற்கு அசோக் “எனக்குகூட சின்ன வயசுல உலகம் சுத்தும்போது கடல்தண்ணி கீழ கொட்டிடாதா? என்று கேள்வியெழும் என்றான். பின் சில நொடிகளுக்கு பின் ஆமா ஏன் கொட்டலை? என்றான். இப்படியான கேள்விகளை சந்திக்காத பால்யமே இருக்க முடியாது அல்லவா? தன்னை எப்போதுமே புத்திசாலியாகவே காட்டிக்கொள்ள நினைக்கும் மனிதமனம், இப்படி சூழ்நிலை மறந்து வெள்ளந்தியாக கேள்வி கேட்கும் நிலை, ஒருமாதிரியான சந்தோஷம். சிறிய இடைவெளிக்கு பிறகு அனைவரும் சிரித்துக்கொண்டோம். வேறென்ன செய்ய? அறிவியல் பேசும் நேரமில்லை இது.

பாகா அருமையான பீச் வெகு அருகிலேயே நல்ல பார்ட்டிகளுக்கு பெயர்போன பப்கள் நிறைய இருக்கிறது. மூன்று பெக்குகள் சரக்கோடு நுழைவுக்கட்டணம் ரூ.500முதல், இரவு பதினோரு மணியிலிருந்து காலை மூன்று மணிவரை விடிய விடிய ஆட்டமும் பாட்டமும்தான். “புல்லா தமிழ்பாட்டுதான் சார், பொண்ணுங்க்கூட சரக்கடிக்குதுங்க..” என்று போய்வந்த நிறைய பேர் சொன்னார்கள். எங்களால் இரவு பாகாவில் தங்க முடியாமல் போனது துரதுஸ்டமே. பாராசூட்டில் பறப்பதற்கு இருவருக்கு ரூ.800 கேட்டார்கள். வழக்கம்போல இருவருக்கு ரூ.250ல் முடிந்தது பேரம். மிகக்குறைந்த நேரப்பயணமே ஆனாலும் பறக்கும்போது எப்படி இருந்ததுன்னா அப்படியே பறக்கிற மாதிரியே இருந்தது. இதைவிட ரசனையா சொல்லத்தெரியலை. அதுதான் நிஜம். பாகாவிலிருந்து கிளம்பி கோல்வா வந்தடையும்போது மணி 8.30 ஆகியிருந்தது. இரவு உணவு முடித்துவிட்டு ரயில்நிலையம் வந்தடையும்போது ரயில் மெல்ல நகரத்தொடங்கியிருந்தது. ஓடிப்பிடித்தோம்.

இந்த கோவா பயணம் ஒருமாதிரியான வித்தியாசமான அனுபவமாயிருந்தது. நல்ல ப்ளான் இல்லை, மொழி பிரச்சனை, பணப்பிரச்சனை இப்படி சில கட்டுப்பாடுகளும், தடங்கல்களும் இருந்தாலும் வெகு சுவாரஸ்யமான ஒரு பயணம். நிறைய கற்றுக்கொண்ட பயணம். ஆனாலும் பக்காவான திட்டங்களோடு செல்வதே சாலச்சிறந்தது. இந்த கட்டுரைகள் இனிசெல்லவிருப்பவர்களுக்கு பயனாக இருக்கட்டுமே என்றுதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் என் அனுபவங்களின் குவியலாக மாறிப்போனதில் சிறு வருத்தம்தான். இருப்பினும் கோவா முதல்முறையாக செல்லவிரும்பினால் முன்னமே தகவல் ஏதும் தேவைப்பட்டாலும் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு தெரிந்தது நிச்சயம் மற்றவர்களுக்கு சொல்லத்தான். இன்னும் இரண்டு பதிவுகளாவது எழுதலாமென்றாலும் எனக்கே போரடிப்பதால் இதோடு முடித்துக்கொள்கிறேன். நன்றி.

ஒரு நிதர்சனம். எனக்கு, கடல்சார் பயணங்களின் மீதான என் ஆசையை அதிகரித்துவிட்டது இந்த பயணம், இங்கு படிக்கவேண்டுமென எடுத்து சென்ற புத்தகங்களை திரும்ப வீட்டிற்கு வந்துதான் கவனித்தேன். அங்கேதான் படிக்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றனவே. எப்போதும் கரைகளோடு ஏதாவது பேசிக்கொண்டேயிருக்கும் கடலும், எவ்வளவு சொன்னாலும் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் கரைக்கும் இடையே நின்று கொண்டு கடலைப்பார்த்தபடியே இருங்கள். கடல் சொல்லும் சில விஷயங்கள் உங்கள் காதுகளிலும் விழும்.

12 கருத்துரைகள்:

கோபிநாத் said...

100ரூபாய்க்கு நாலு பீர்....ஆகா..ஆகா...இதுக்கே போகனுமுய்யா ;))

கடைசியில தல பஞ்ச் ;)

ஆதவா said...

கலக்கல்...... முரளி!!!
அழகா கொண்டு வந்து முடிச்சிருக்கீங்க.
ஃபைனல் டச் ரொம்பவும் அருமை!!!

எங்க குழுவுக்கும் க்டல் பயணம் ரொம்ப இஷ்டமாயிடுச்சு... அடுத்து அந்தமான்னு ப்லான் போட்டு வெச்சிருக்கோம். பட்ஜெட்தான் பிரச்சனையே...........
அப்பறம்..................
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

@கோபி
ஹா ஹா.. கண்டிப்பா கோவான்னவுடனே எல்லருக்கு நினைவில் வருவது சரக்குதான்.. ஆனால் அதையும் தாண்டி ரசனைக்குன்னு சில பல விஷ்யங்கள் அங்கே நிறையவே இருக்கு,,,,,

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
நாங்க அடுத்ததாவும் கோவாவேதான் ப்ளான் பண்ணியிருக்கோம்.. ஹிஹி.. தூத்சாகர் போயே ஆகனும்...

ஆனா கவலைப்படாதிங்க அப்ப மூணு பதிவெல்லாம் போட மாட்டேன், இது சத்தியம்....

எஸ்.கே said...

நல்லா இருந்தது உங்கள் பயணம்!

☼ வெயிலான் said...

// கடல்சார் பயணங்களின் மீதான என் ஆசையை அதிகரித்துவிட்டது //

இதெல்லாம் உனக்கே ஓவராத் தெரியலையாய்யா? தண்ணியில கண்டம்னு முழங்கால் தண்ணி இருக்கிற இறங்க மாட்டேன்னு அடம்பிடிச்சியே! ஞாபகமிருக்கா?

ஆதவா said...

அப்போ மூணு நாள் பத்தாது!!! நிறைய நாள் ப்லான் பண்ணுங்க....

பத்மா said...

முரளி நாங்க பார்த்த கோவா வேற மாதிரி ..கடல் புறத்திலேந்து வரதால கடல் ஒரு ஆச்சரியம் இல்ல ..கடலை பாத்துட்டே தான் சமையலே தெனம் . அதனால வேறு பல இடங்கள்ளலாம் சுத்தினோம் ..அதுவும் நல்லா தான் இருந்தது .
கடைசி படம் ரொம்ப நல்லா இருக்கு

பூந்தளிர் said...

முரளி, கடலும் மலைகளும் ஆயிரமாயிரம் கதை பேசும்...கேட்கத்தான் நமக்கு நேரம் கிடப்பதில்லை...

அந்தமான் செல்ல திட்டம் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும் ஆதவா...

அப்பாதுரை said...

அருமையா எழுதியிருக்கீங்க.. குறிப்பெடுத்து வச்சுக்கிட்டேன். எப்ப போறனோ?

கோவா போய் பீர் சாப்டீங்களா.. அந்த ஊர்ல ஒரு சாராயம் மாதிரி கிடைக்குமே.. பேரு மறந்திருச்சு - பெனி?

அப்பாதுரை said...

குத்தியிருக்கிறது அசலா ஸ்டிக்கரா? very nice.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மூன்றையும் படித்தேன் முரளி. பல முறை கோவா பணி நிமித்தம் சென்று வந்திருந்தாலும். மழைக்கால் கோவா என்பது வேறு நிறம். பச்சைப் பசேலென்று கேரளாவின்கார்பன் காப்பிபோல அருவியாய் மழை கொட்டும். சீசனில் பீச் முழுதும் குடை விரித்து வெளி நாட்டவர்கள் கூட்டத்தில் நாமிருப்பது இந்தியா என்பதே மறந்து போகும். மிகவும் தரமான லிக்கர், அழகான கடைகள். 10 மணிக்கு ஆரம்பித்து 8 மணிக்கெல்லாம் முடிவடையும் பரபரப்பு, சுத்தமான பீச், அத்தனை சரக்கு கடைகள் இருந்தாலும் ஒரு இடத்திலும் குடித்துவிட்டு விழுந்து கிடப்பவர்களையோ, சத்தம் போட்டு திரிபவர்களையோ பார்க்கவே இல்லை. கலங்கோட், ஃபோர்ட் அகுவாடா, வெகட்டா, அஞ்சுனா போன்ற பீச்சுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். ஒவ்வொரு முறையும் லோண்டாவிலிருந்தே சென்று வந்திருக்கிறேன். அந்த அருவி ஹும்ம்!! அழகான போட்டோக்களுடன் கூடிய பகிர்வு.

எஞ்சாய் மேடி! :))

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.