கோவா - UP UP

எனக்கு விவரம் தெரிந்து தீபாவளிக்கு எங்கும் வெளியே செல்வதில்லை. கூடுமானவரை வீட்டிலும் பின் நண்பகளோடுமென கழியும் விடுமுறை தினங்கள். எங்காவது சுற்றுவதாயிருந்தாலும் தீபாவளிக்கு பிந்தைய நாட்களிலாகத்தான் இருக்கும். இம்முறை மாறாக தீபாவளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே கிளம்பியாயிற்று. இரண்டு மூன்று முறை திட்டமிட்டும் பல காரணங்களால் தடைபட்டுக்கொண்டேயிருந்த கோவா பயணம் இம்முறையும் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டியே அமைந்தது. பத்துபேராக செல்வதாயிருந்த திட்டத்தில் நாட்கள் செல்ல ஆட்களும் குறைந்துகொண்டே வந்தனர். கடைசியாக ஐந்து பேராகக்கிளம்பினோம். முதலில் திருப்பூரிலிருந்து ஷொரனூர் (கேரளா) பின் அங்கிருந்து மட்கோவா. பொதுவாக ரயில் வழியாக வருவாதாயின் இங்குதான் இறங்கமுடியும். வேறு ஸ்டேசன் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. சீஸன் காலங்களில் வாஸ்கோடகாமாவிற்கு சில சிறப்பு ரயில்கள் இயங்குவதாகவும் கேள்விப்பட்டேன். ஷொரனூரில் இறங்கி அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கையில் கோவையிலிருந்து வந்திருந்த மூன்று நண்பர்களை சந்தித்தோம். அவர்களும் அதே ரயிலில் கோவா செல்லவிருப்பதையும் அடுத்தடுத்த இருக்கையில் பயணப்படப்போவதையும் தெரிந்துகொண்டதும் மெல்ல அவர்களோடு நட்பு தொடங்கியது.

அவர்களுக்கும் இந்த கோவா பயணம் முதல் அனுபவம். முன்பின் சென்ற அனுபவம் கிடையாது. எங்களுக்கும் அப்படியே. இருந்தாலும் நாங்கள் யாரிடமும் இதைப்பற்றி கேட்டும் தெரிந்து கொள்ளவில்லை. தேடிகண்டடைவதின் சுகம் வேறொன்றில் இருக்காதே? கோவாவின் புகழ்பெற்ற கடற்கரைகளையும், சுற்றுலாத்தலங்களையும் மட்டும் கூகிளாண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். கோவை நண்பர்களோடு பேசியதில் எங்களின் திட்டம் அனைவருக்கும் சற்று உசிதமாய்ப் பட அவர்களும் எங்களோடு இணைந்துகொண்டனர். அதன்பின் ரயிலில் இருந்து இறங்கும்போது நாங்கள் என்பது ஐந்து பேரிலிருந்து மொத்தம் எட்டுபேர் என்றாகியது. அதன் பின் திங்க தங்க என எல்லா இடத்திலும் கோவை நண்பர்களோடு சேர்ந்தே கழிந்தது.

மட்கோவாவில் நாங்கள் இறங்கும்போது மணி அதிகாலை மூன்று மணி. அரசு நிர்ணயம் செய்த டாக்சிகள் வெளியே இயங்கிக்கொண்டிருந்தன, மற்றும் சில ஆட்டோக்களும். ஆனால் டாக்க்சியில் நான்கு பேர்மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் ரயிலில் வந்திறங்கிய அனைவரும் முன்பதிவு செய்துகொண்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றபடியிருந்தனர். நாங்கள் எங்கு செல்வது என்பதில் எங்களுக்கு ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. பல்லோலியம் பீச், அதிக தென்னைமரங்களோடும் கடலை ஒட்டிய ஹட் எனப்படும் சிறு குடில்களோடும் இருக்கும் வாடகையும் சுமாராக இருக்குமென படித்ததால் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்தோம். சரியாக மட்கோவாவிலிருந்து 45 கிலோமீட்டர்கள் தெற்கு நோக்கிய பயணம், டாக்சியில்தான் முடியும் என்பதால் சரி என்று நாங்களும் டாக்சி பதிவு செய்ய வந்தோம். ஆனால் நிறைய புக்கிங் இருப்பதாகவும் அங்கே நிற்பவர்களை கொண்டுசேர்த்தபின்னரே உங்களை பதிவு செய்துகொள்ள முடியும் என்றார். அவர் கைகாட்டிய இடத்தில் ஒரு இருபது பேர் நின்றுகொண்டிருந்தனர். நாலு நாலா என்னைக்கு கொண்டுபோய் விடுறது? இது நடக்கிற கதையில்லை என்று முடிவு செய்து அவரிடமே கேட்டு அருகில் வேறு என்ன பீச் இருக்கிறது? தங்க இட வசதியெல்லாம் கிடைக்குமாவென கேட்டறிந்து கொண்டோம். அவர் சொன்னது கோல்வா பீச், அதுவும் அங்கிருந்து வெறும் ஆறு கிலோமீட்டகள்தான்,


மேலும் வெண்நிற மணலோடு கூடிய மிகப்பெரிய பீச் கோல்வா என்று படித்த நியாபகம் வரவே பத்து நிமிட பயணத்தில் இரண்டு ஆட்டோக்களில் நான்கு நான்காக பிரிந்து கோல்வா சென்றடைந்தோம். ஆட்டோ காரர்களின் உதவியோடு இரண்டு மூன்று ஹோட்டல்களுக்கு அடுத்து ஸ்டார் ரெஸார்ட் என்ர ஹோட்டலை அடைந்தோம். அனைவரும் ஒரே ரூமில் தங்குவதுமாதிரியான ஏற்பாடு. காரணம் தனியறைகள் கிடைக்கவில்லை மற்றும் அதீத கட்டணம். 12-12 செக்அவுட் முறைகள் என்பதால் நாங்கள் காலை ஐந்து மணியிலிருந்து மதியம் பனிரெண்டு மணிவரை ஒருநாள் வாடகை தரவேண்டியிருந்தது. இதுதான் கோல்வா பீச்சிலிருந்து ஒரு நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் பீச் ரெஸார்ட்.

ஆக கோவா செல்ல விருப்பமுடையவர்கள், அவசியம் பகல் நேரத்தில் அங்கு சென்றடையுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அது மிக முக்கியம், நாங்கள் சென்றது ஹாஃப் சீஸன் என்றபோதும் ஹோட்டல்களில் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தது. நல்ல சீஸனில் செல்லும்போது இது அவசியம் கவனம்கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் மங்களூரிலிருந்து கோவா வரும் வழிகள் நிறைய பாலங்களும் குகைகளும் அதிகம் காணப்படுகின்றன. சைட் சீயிங்கில் விருப்பமுடையவர்கள் மங்களூரிலிருந்து காலையில் கிளம்பினால் மதியவாக்கில் கோவா செல்லவும் பஸ் அல்லது டூவீலர் வாடகையில் ஹோட்டல்களுக்கு செல்லவும் ஏதுவாக இருக்கும். ஹோட்டல்களில் அறைகள் வாடகைக்கு எடுப்பதிலும் சிரமம் இருக்காது.

இரவு நேரப்பயணம் என்பதால் அதிக களைப்பு இல்லை, (விடிய விடிய ரயிலில் சீட்டுவிளையாடிக்கொண்டிருந்தது வேறு விஷயம்) ஆக காலை ஆறு மணிக்கெல்லாம் நாங்கள் வெளியே கிளம்பிவிட்டோம். கோல்வா உண்மையிலேயே மிகவும் அருமையான ஒரு கடற்கரை. நல்ல நீளமான கரை, வெள்ளைவெளேரென மணல், நீலமாய்க் கடல் அழகு. ஸ்கூபா டைவ், டால்பின் ரைட், ஸ்பீட் போட்டிங், வாட்டர் ஸ்கூட்டர், பாராசூட் என எல்லா நீர்சார் விளையாட்டுகளும் இங்கு கிடைக்கின்றன. அருகிலேயே சாப்பிட ஆங்காங்கே ஹோட்டல்கள், இன்னும் சிலசில கடைகள் என அதிக தூரம் அலைய வேண்டியதில்லாமல் எல்லாமே அருகிலேயே கிடைக்கக்கூடிய ஒரு பீச். இன்னொன்று அதிக வெளிநாட்டினர் வருகைதரக்கூடிய பீச்களில் இதுவும் ஒன்று. மேலும் மெரினாவைப்போல நீளமான நேரான கடற்கரை, அதில் இரண்டு மூன்று கிலோமீட்டர்களுக்கும் ஒவ்வொரு பெயரில் ஒவ்வொரு பீச்சென்று அழைக்கின்றனர். மேப்பில் பார்த்தால் பதினெட்டு கிலோமீட்டருக்கு ஒரே கரை, ஒரே கடல்.

இன்னொரு முக்கியமான விஷயம், கோவா செல்ல வேண்டியவர்களின் கவனத்திற்கு. மொழி. நாங்கள் கேள்விப்பட்டவரை கோவாவில் ஆங்கில பொதுவான மொழி என்பதும், ஹிந்தி அதிகம் புழங்கும் மொழி என்பதும் ஆனால் ஹிந்தி மட்டுமே பொதுவாக இருக்கிறது. எங்கும் ஹிந்திதான். ரூம்பாயிலிருந்து கடற்கரையில் குச்சி ஐஸ் விற்பவன் வரை. கட்டாயம் ஹிந்தி தெரிந்த ஒருவரோடு செல்வது உத்தமம். இல்லையென்றால் நிச்சயம் ஏமாற்றப்படுவீர்கள். வெளி ஆட்கள் மொழிப்பிரச்சனை கொண்டவர்கள் என்பதை தெரிந்துகொண்டதும் ஏமாற்றத்தொடங்குகின்றனர். முன்னமே சொல்லிவைத்து நடிப்பதுபோல அனைவரும் ஒரே மாதிரியாக இயங்குவதுதான் ஸ்பெசல்.

டால்பின் ட்ரைவ் எனப்படும் கடல்பயணம் அதாவது 40 நிமிட கடல் பயணம் என்றும், கடலின் உள்ளே சென்று டால்பின்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு சென்று டால்பின்கள் துள்ளிக்குதிப்பதை காட்டுவோம் என்றும், ஒருவேளை டால்பின்களின் வருகை இல்லையென்றால் கடல் வழியாக இரண்டு மூன்று பீச்களுக்கு சென்று வரலாம் என்றும் சொன்னார்கள். சரி என படகு பயணம் செல்ல முடிவெடுத்து கட்டண விபரம் கேட்டபோது தலை சுற்றியது. ஒருவருக்கு ரூ.850/- நண்பர் செல்வா அரைகுறை ஹிந்தியில் தட்டுத்தடுமாறி பேரம் பேசியதில் எட்டுபேருக்குமாய் சேர்த்து ரூ.1200-ல் பேரம் முடிந்தது. ஒருவழியாக படகில் ஏறினோம், ஒரு பத்து நிமிட பயணத்தில் படகை நிறுத்திவிட்டு வலதுபுறம் பார்க்கச்சொன்னார்கள், சின்னதாய் ஒருமீன் செத்து மிதந்ததே தவிர ஒரு டால்பினும் கண்ணில் படவில்லை என்னையா டால்பினைக்காணோமெ என்றால் இந்த நேரத்தில் அதிகம் வராதுங்க என்றார்கள் கூலாக, சரி இதைக்கரையிலேயே சொல்லியிருக்கலாமில்லையா? என்று புலம்பியபடி சரி ரெண்டு மூணு பீச்சுக்கு போலாமுன்னு சொன்னிங்களே அங்காயாவது போங்க என்றோம். அப்படியே படகைத்திருப்பி வந்தவழியே திரும்ப படகை செலுத்தினார்கள், நாங்கள் படகேறிய இடத்திலிருந்து அரை அரை கிலோமீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களைக்காட்டி வெவ்வேறு பெயர்களில் இது ஒரு பீச் இது ஒரு பீச் என்று கணக்கு காட்டினார்கள் (ஹும்.. என்னா ஒரு வில்லத்தனம்?)


இந்த பித்தலாட்டம் இங்கு மட்டுமல்ல, கோவா முழுவதுமே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. எதை எடுத்தாலும் நாலும் மடங்கு அதிகம் சொல்லிதான் பேரமே ஆரம்பிக்கின்றனர். ஆக தாராளமாய் அவர்கள் சொல்லும் கட்டணத்திலிருந்து கால் பங்கிற்கும் குறைவாகவே பேரத்தைத் தொடங்கலாம். சத்தியம். உடும்புபிடியாக ஒரே விலையில் இருந்தால் யோசிக்காமல் சரி வேண்டாம் என்று சொல்லிவிடலாம் நிச்சயம் அவர்களாகவே திரும்ப நமது பேரத்திற்கு வருவார்கள். சரி சீஸனல் பிஸினஸ் செய்பவர்கள் இந்த ஓரிரு மாதங்களில் சம்பாதித்தால்தான் உண்டு, எவ்வளவோ பண்றோம் இத பண்ண மாட்டமா? இப்படி ஏதாவது சமாளிப்புகளை சொல்லிக்கொண்டு எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட ஏமாந்துதான் போனோம் கோவா முழுவதும். ஏன் கோவா சுற்றுலாத்துறை இவற்றிற்கெல்லாம் ஒரு விலை, கட்டண நிர்ணயம் செய்யக்கூடாது என்று தோன்றியது.

ஆக முன் அனுபவமில்லாமல் எங்களைப்போல முதல்முறையாக கோவா செல்லவிருப்பவர்களுக்கு உதவியாய் இருக்கட்டுமென்றுதான் இந்த பயண கட்டுரையை எழுதுகிறேன். என் அனுபவங்களை இன்னும் ஓரிரு பதிவுகளாக எழுதலாமென இருக்கிறேன், உங்களின் வரவேற்பைப் பொருத்து.  இது என்னுடைய இந்த இரண்டு வருட பதிவுகளில் முதன்முறையாக தொடரும்,

மேலும் ஒரே இடத்திலிருந்து கிளம்பி, கிட்டதட்ட ஒரே மாதிரியான பயணத்திட்டங்களோடு பயணித்த நண்பர் ஆதவாவின் கட்டுரையை படிக்க இங்கே அழுத்துங்கள்.

22 கருத்துரைகள்:

ஆதவா said...

கலக்கல் முரளி!!
நாங்களும் கோவாவில் அதே கோல்வா பீச் அருகே தங்கியிருந்தும் உங்களது முந்தைய பதிவைக் காணாமல் கோவாவில் உங்களைப் பிடிக்க முடியாமல் போனது வருத்தமே! சொல்லி வைத்தமாதிரி, ஷொரனூர், இரவு சீட்டாட்டம், காலை கோல்வா என்று நாங்கள் சென்ற அதே பாதை!! ஹிந்தி பொதுமொழியாக இருந்தாலும் நாங்கள் பலரிடம் ஆங்கிலத்திலேயேதான் பேசினோம். எங்களோடு வந்தவன் ஓரளவு ஹிந்தி புரிந்து கொள்வான்... ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவான்... மொழி ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு முதல் நாளிலேயே தெரிந்துவிட்டது!!
அடுத்தடுத்த பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்!!

இளங்கோ said...

எழுதுங்க.. நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்கிறோம் :)

மோகன் குமார் said...

அருமை முரளி; நிச்சயம் உங்கள் பதிவு கோவா செல்ல இருக்கும் நபர்களுக்கு (எனக்கும் கூட!!) உதவியாக இருக்கும் தொடருங்கள்

கார்த்திக் said...

நானும் போயிட்டு வந்து மூனுவருசம் ஆகபோகுது.இந்த தை நோம்பிக்குத்தான் போலாம்னு இருக்கேன் :-))
ஆனா நாங்க யார்கிட்டையும் பெருசா ஏமாரலை அந்த டால்பின் பீச் மட்டும்தான் அப்பையும் ஏதோமீன் துள்ளிகுதிச்சத பாத்தோம் :-))

கார்த்திக் said...

மங்களூர்மெய்ல் கோவையை தாண்டிபோகும் போது கோவைல நண்பர்கள் கிடச்சாங்க.
இன்றும் தொடர்கிறது.ஒருவாரம் மறக்கமுடியாத பயணம் :-))

தொடர்ந்து எழுது மாப்பி
எங்களுக்கும் பயன்படும் :-))

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எந்த கடைக்கு போனாலும் கோவா தான்..ம்ம் கலக்குங்க

எஸ்.கே said...

அழகான படங்கள், இனிமையான பயணம் தொடரட்டும்!

கோபிநாத் said...

எழுதுங்க தல...படங்களும் போடுங்க...;)

Wilson said...

There is a good Tamil managment hotel ther in Colva. Name Kolmar Residence, next to beach. Tamil breakfast also avilable. Rent is very reasonable.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏதோ ஒரு அழகிய சுற்றுலா அனுபவத்தைத் தரப்போகிறீர்கள் என்று பார்த்தால் காமெடியாக முடித்திருக்கிறீர்கள். 'சிலசில' பிழைகள் தென்படுகின்றன, இடுகையிடும் முன்பு மறுமுறை வாசித்துத் திருத்துங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி ஆதவா, உங்க போட்டோஸ் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். சீக்கிரமா போடுங்க

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி இளங்கோ, :-) கோவா போகனும்ன்னா அவசியம்தெரிஞ்சிகிட்டுதான் போகணும், :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி மோகன்ஜீ, அவசியம் எழுதுகிறேன், தொடர்ந்து படிங்க....

முரளிகுமார் பத்மநாபன் said...

ஒக்கே மாப்பி, கண்டிப்பா எழுதுவேன். கிட்டதட்ட அப்படிதான் இங்கயும் மூணு பேர் நல்ல நண்பர்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி திரு, வேற எந்த கடைக்கு போனிங்க? சொல்லுங்க நானும் படிக்கிறேன். :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றீ எஸ்.கே.
இன்னும் படங்கள் வரும்

முரளிகுமார் பத்மநாபன் said...

நன்றி கோபி, :-)
நல்லா இருக்கிங்களா?

முரளிகுமார் பத்மநாபன் said...

தேங்க்ஸ் வில்சன்,
நாங்க கோல்மார்ல ட்ரை பண்ணோம் ஆனா ரூம்ஸ் எதுவும் காலியா இல்லை, சோ வேற பக்கம் போக வேண்டியதாப்போச்சு. உங்க எக்ஸ்பீரியன்ஸ அப்படியே கமெண்ட்ஸா ஷேர் பண்ணிக்கோங்க, யூஸ்புல்லா இருக்கும்.
நன்றி :-)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதிமூலகிருஷ்ணன்
அருமையான சுற்றுலா அனுபவம்தான் அண்ணா, ஆனா இன்னும் கொஞ்சம் ப்ரீபளானா போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், அதனால் கொஞ்சம் இன்பர்மேட்டிவா எழுதலாம்ன்னு ட்ரை பண்ணேன். அடுத்த பதிவுகளில் சரி பண்ணிக்கிறேன்.
தேங்க்ஸ்ண்ணா, அட்வான்ஸ் வாழ்த்துகள்ம் உங்கள் பிறந்த நாளுக்கு

butterfly Surya said...

நல்லாயிருக்கு முரளி. அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

அப்பாதுரை said...

கோவா போகவேண்டுமென்று எண்ணமுண்டு. அவசியம் எழுதுங்கள். படங்களும் விவரங்களும் அருமை.
சரியான தோலுரிப்பாக இருக்கும் போலிருக்கிறதே?
>>>ஒருவருக்கு ரூ.850லிருந்து எட்டுபேருக்குமாய் சேர்த்து ரூ.1200-ல் பேரம் முடிந்தது.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல கட்டுரை முரளி. நாங்க அடுத்த மாதம் போகத் திட்டமிட்டிருக்கிறோம். உங்கள் கட்டுரை மிக உதவும்.

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.