சில சமயங்களில் நான் எழுதியதை திரும்ப வாசிக்கும் போது என் எழுத்துக்களுக்கு பரிசாய் சிரிப்பைத் தவிர வெறொன்றும் கொடுத்துக்கொள்ள முடியாது. அப்படியிருக்கையில் பொறுமையாக இவ்வளவையும் சகித்து வாசித்து,தொடர்ந்து என்னை கைதட்டி, கைகொடுத்துவரும் என் பதிவுலக நண்பர்கள் அனைவரோடும் என் மகிழ்ச்சியை பங்கிட்டுக்கொள்கிறேன்.
இன்னும் பெருகுமென்ற பேராசையுடன்.
சுஜாதா, எஸ்.ரா, மதன், க.சீ.சிவகுமார் இப்படி யாரையெல்லாம் பார்த்து பார்த்து, அவர்களின் கரம் பிடித்து வாசிக்கவும் பின் எழுதவும் அடியெடுத்து வைத்தேனோ, அவர்கள் அனைவரும் எழுதிய புத்தகம், ஆனந்த விகடன். இன்று என்னுடைய இரு கிறுக்கல்கள், சொல்வனத்தில் கவிதையாய் அச்சேறியிருக்கிறது. இதை வெறுமனவே மகிழ்ச்சியாயிருக்கிறது என்று சொல்ல முடியாது. என்னைப் புரிந்து கொண்டவர்களால் என்னுடைய இந்த உணர்வையும் புரிந்துகொள்ள முடியுமெனெ நம்புகிறேன்.
எனக்கும் கவிதைக்குமான இடைவெளி குறைந்து வருகிறதோ அன்றி நான், என்னால் கவிதைகள் எழுத முடியுமென்று ஒருபோது நினைத்ததில்லை. வண்ணதாசனின் கவிதைகளை படித்தது முதலே கவிதைகள் மீது எனக்கிருந்த தூரம் விலகியது. முதன்முதலில் கவிதை என்று ஒன்றை எழுதியபோது அது அந்த அந்தஸ்த்தை அடைய இன்னும் நிறைய பிரயத்தணப்பட வேண்டுமென்பது விளங்கியது. ஆகவே கிறுக்கல்கள் என்ற பெயரிலியே தொடர்ந்து கிறுக்கிக்கொண்டிருந்தேன். சில சமயங்களில் நண்பர்கள் என்னடா இது? எங்களுக்கு கவிதைன்னா என்னன்னு தெரியாதுங்கிறதால நீ எழுதுறதையெல்லாம் கவிதைன்னுக்குவியா? என்று மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். (எவ்ளோ கேவலமா திட்டினாலும் நாங்க அதை பாராட்டாவே நினைச்சிப்போம், ஹி ஹி ஹி...நம்ம பாஸிட்டிவ் ஆட்டிடியூடுக்கு இதெல்லாம் உதாரணம்). இந்த பாராட்டுகள் என் கவிதை ஆசையை இன்னும் ஆழத்திற்கு கொண்டு போய்க்கொண்டேயிருக்கும்.
ஆனாலும், அவ்வப்போது என்னையுமறியாமல் வந்துவிடுகிற சில நல்ல எழுத்துக்கள், அந்த கவிதை ஆசையை தூர் வாறிக்கொண்டே இருக்கிறது. அதுமாதிரியான ஒரு தூர்வாறல்தான், பதிவுலக அண்ணன்கள் நடத்திய உரையாடல் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதும் இப்போது ஆனந்தவிகடனில் வந்திருப்பதும்.
ஆனாலும், அவ்வப்போது என்னையுமறியாமல் வந்துவிடுகிற சில நல்ல எழுத்துக்கள், அந்த கவிதை ஆசையை தூர் வாறிக்கொண்டே இருக்கிறது. அதுமாதிரியான ஒரு தூர்வாறல்தான், பதிவுலக அண்ணன்கள் நடத்திய உரையாடல் கவிதைப்போட்டியில் பரிசு பெற்றதும் இப்போது ஆனந்தவிகடனில் வந்திருப்பதும்.
நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன், உங்களுக்கும் சொந்தமானதுதான் இந்த சந்தோஷம், மகிழ்ச்சியே பங்கிடுவதில்தானே இருக்கிறது. :-)
விகடனில் வெளிவந்த இரு கிறுக்கல்கள்
1.பிரம்மச்சர்யம்
வியாபாரம்,
அலுவல் நிமித்தமான சந்திப்புகள்,
அதன் பிந்தய எரிச்சல்,
ஆலோசனை,
அடுக்கடுக்காய்ப் பொய்கள்,
பணத்திற்காக சீரளியும் தன்மானம்
மானத்திற்காக விலைபோகும் லாபம்,
கழிவறைவரை துரத்தும்
கடன்காரர்களின் கேள்விகள்,
நேரம்கெட்ட சாப்பாடு,
ஆகாரத்திற்கு முன் பின்னென
வேளைக்கு இரண்டு மணிநேர
தொலைபேசி உரையாடல்கள்,
இவை அனைத்துக்குமிடையே
வரும் அம்மாவின் போன்.
“நம்ம ஊர்தாண்டா,
பார்க்கவும் லட்சணமா இருக்கா,
காலேஜ் படிச்சிருக்காளாம்.......”
அம்மா முடிக்கும்முன்
“இப்ப இது ஒண்ணுதான் குறைச்சல்,
போனை வைம்மா”
எனும் கடுமையான வார்த்தைகளில்
தொடர்பற்றுப் போகும்
அம்மாவின் குரல்.
நித்திரையற்ற இரவில்
புரண்டு படுக்கும் தனிமையில்
இறுக பற்றிய தலையணையினூடே
லட்சமாண பெண் என்றால்
எப்படியிருப்பாளென
யோசிக்கத் தொடங்கியிருந்தேன்.
2.அர்த்தமற்றுப் போகும் அன்பு.
"வரும்போது அச்சு முறுக்கு வாங்கியாப்பா"
என்ற மகளின் நினைப்புத்தட்ட,
சட்டைப்பைகளில்
துழாவியெடுத்த சில்லறைகளை
உள்ளங்கையில் கொட்டி
மூணு, மூணரை என்று எண்ணும்
நேரம்பார்த்து வருகிறது
"சாப்ட்டு ரெண்டு நாளாச்சுண்ணா"
என்கிற ரோட்டோர சிறுமியின் குரல்.
காகித பொட்டலத்தைப் பிரித்து
இரண்டு முறுக்குகளையும் எடுத்துக்கொண்டு
நடுவாசலில் அமர்ந்துகொண்டு
நாய்க்கு பலிப்பு காட்டியபடி
தின்கிறது, குழந்தை.
மனசு நிறைந்து
மகிழ்ச்சி உதட்டில் பூக்கும்போது
தற்செயலாய் வந்து போனது,
"இந்த நாளும் கடந்துபோனால்
மூணு நாள் ஆகிப்போகும் அந்தச் சிறுமிக்கு"
என்கிற நினைப்பு
அப்படியே அர்த்தமற்றுப் போகிறது
என் அன்பு.





