மாமரக் கொழுந்துகள் எட்டிப்பார்க்கும்
சாளரங்கள் வைத்த வீடும், தென்னையும்,
குறுத்து கொட்டிக்கிடக்கும்
துளசிமாடமும், கொல்லையும்,
வேப்பமரத்தின் வேர் பிழந்த கேணியும்,
சுற்றியுதிர்ந்த வேப்பம்பூக்களும்,
ரயிலின் ஓசைக்கும், தண்டவாள அதிர்விற்கும்
பறப்பதுவும் பின் அமர்வதுமாயிருக்கும்
குருவிகள் கொண்ட வேலியும்,
தொடுகிற தூரத்தில் தண்டவாளமும்,
கொட்டிக் கிடக்கும் ஜல்லிகளுக்கிடையே
பூத்துக்கிடக்கும் தாத்தாப் பூச்செடிகளும்,
கசடுகள் கழிந்து தெளிவாய்
ஓடிக்கொண்டிருக்கும் புதுப்புது ஓடைகளும்,
முகம் தெரியாத குழந்தையை
அழுகவைத்துவிட்டு
கவிழ்ந்து கிடக்கும் காகிதக்கப்பலும்
மின்சாரக்கம்பிகளில் ஆங்காங்கே
தனித்து அமர்ந்திருக்கும்
சிட்டுக்குருவிகளும்,
ஈரம் காயாத ரயில் நிலையத்தில்
சிமெண்ட் பெஞ்ச்சும்,
குடையோடு காத்திருக்கும்
பட்டாபி தாத்தாவுமாய்
இன்னும் என்னவெல்லாமோவுமாய்
ஒவ்வொரு துளிக்கும்,
ஒவ்வொரு நினைவுகளை
நினைவுகளில் அடுக்களிலிருந்து
கிளர்த்தி எழுப்பி
அடைந்து பெய்கிறது, மழை
எப்பொழுதும்போல
எந்த மழைதான் தனியாக வருகிறது?
கிறுக்கல்கள் 39
போனஸ்
_____________________________________________________________________________
இன்னும் மூணு நாளுக்குள்ள
போனஸ் பணம் கிடைச்சுப்புடும்,
நாலு பேரு முன்னவச்சே
பாக்கி கேக்கும் அண்ணாச்சிக்கு
மளிகைக்கடை பாக்கியெல்லாம்
மிச்சமின்றி கொடுக்கவேணும்
ஸ்கூலுக்குப் போகும் பெரியவனுக்கு
சட்டை ரெண்டு டவுசர் ஒண்ணு,
சின்னதுக்கு காரு பொம்ம - அந்தாளுக்கு
ஒரு துண்டு, ரெண்டு பாட்டில்,
கடனா வாங்குன
காப்பிப்பொடி சீனியெல்லாம்
சரிபார்த்துக் குடுத்திடலாம்,
சீழ்கட்டிப் போயிருக்கு,
மிச்சமேதும் காசிருந்தா
காலைக்கொஞ்சம் காட்டிக்கனும்.
பட்டியல்போட்டு
முடிக்கும் முன்னே,
இருந்த மூணு பாத்திரம்
நிறைஞ்சும்
இன்னும் ஒழுகுது கூரை,
போனஸாக.
Labels:
கிறுக்கல்கள்
லெட்டர்ஸ் டு ஜூலியட் - A Romantic Journey to Verona
what if you have a Second chance ti find true love?
இந்த படத்தின் கேப்ஷன் இதுதான். ஒந்த ஒற்றை வரிதான் என்னை இந்த படத்தைப் பார்க்கத்தூண்டியது.
சோபி- (அமாண்டா (டியர் ஜான் ஹீரோயின்)), ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் FACT CHECKER ஆக பணிபுரிகிறாள். (அனேகமாக நமது பத்திரிக்கை அலுவலகங்களில் இப்படி ஒரு பணியிடம் இருப்பதாகவே தெரியவில்லை) விக்டர் அவள் காதலன், தனியாக ஒரு ரெஸ்ட்டாரண்ட் தொடங்குவதற்கான ஆயத்தவேலைகளில் இருக்கிறான். அது ஒரு இத்தாலிய உணவு விடுதி என்பதால் இத்தாலி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்குச் சென்று தேர்ந்த உணவு பதார்த்தங்களை கற்றுவர இத்தாலி செல்கிறான். அடுத்தவருடம் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் விக்டருடன், அவனுடைய தொழில் சம்பந்தமாக ஒருமாத காலம் வெளியூர் செல்லவேண்டி விடுப்பு கேட்பதில் தொடங்குகிறது, படம். திருமணத்திற்கு முன்பாக ஒரு மாதம் காதலனோடு அழகான, ரம்மியமான இடங்களுக்கு பயணிப்பது என்றதும் உற்சாகம் தொற்றிக்கொள்ள பயணப்படுகிறாள், ஷோபி.
அடுத்தகாட்சியிலேயே காமிரா, வெரோனா-இத்தாலியின் நதிகளை ஒட்டிய உயர்ந்த பழைய கட்டிடங்களுக்கிடையே பயணிக்கிறது. விக்டர், முதல் நாள் ஒரு தரமான ருசியான ஒயின் தயாரிப்பாளனான நண்பனை சந்திக்கச்செல்கிறான். இப்படியே ஒவ்வொரு நாளும் தனது சப்ளையர்களிடம் பேசி ஒவ்வொரு அப்பாயிண்ட்மெண்ட்களாக சரிசெய்தபடியே இருக்கிறான். கூடவே ஷோபியாவும்.
ஒரு நாள், ஒரு அழகிய தெருவின் வழியாக ஷோபி நடந்து செல்கிறாள். அப்போது அழுதபடியே ஒரு பெண் அவளை கடந்து செல்கிறாள். அவள் வந்த திசையில் மேலும் சிலர் அழுதபடியே ஏதோ குறிப்புகள் எழுதுவதுமாய் பின் அதனை அருகிலுள்ள சுவற்றில் அவற்றை ஒட்டிவைத்துச்செல்வதுமாய் இருக்கின்றனர். எதுவும் புரியாமல் ஷோபி அவற்றைப் பார்த்தபடியே இருக்கிறாள். சற்று நேரத்திலெல்லாம் அனைவரும் அவ்விட்த்திலிருந்து நகர்ந்தபின் ஒரு குறிப்பை படிக்க முயற்சிக்கையில் ஒரு பெண் அங்கிருக்கும் அனைத்து குறிப்புகளையும் தனது கூடையில் சேமிக்க தொடங்குகிறாள். பின் அவள் அங்கிருந்து நகரும்போது ஷோபி அவளை பின்தொடர்ந்து செல்கிறாள்.
பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வட்டமாக மேடையிலமர்ந்து குறிப்புகள எழுதிக்கொண்டிருக்கிறார்கள், அந்தக் குறிப்புகளை சேகரித்த பெண் மொத்த குறிப்புகளையும் மேசையில் கொட்டுகிறாள். அவளைத் தொடர்ந்து வரும் ஷோபி இவர்களை ஆச்சர்யமாக பார்க்கிறாள். ஷோபியாவின் தங்களை அதிசயமாக பார்ப்பதை உணர்ந்து அந்த பெண் “நாங்கள் ஜூலியட்டின் காரியதரிசிகள், காதலில் இணைய முடியாதவர்களோ, பிணக்கம் கொண்டர்வர்களோ பிரிவின் துயரம் தாளாமல் ஜூலியட்டிற்கு கடிதம் எழுதுவார்கள், ரோமியோவை பிரிந்திருந்த காலத்தில் ஜூலியட் காத்திருந்த இடத்தில் இருக்கும் அந்த சுவற்றில் கடிதங்களை ஒட்டியும் வைப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு, காயப்பட்ட மனதிற்கு தோதுவாக பதில் எழுதி அனுப்புவோம். நாங்கள் ஜூலியட்டின் காரியதரிசிகள்” என்கிறாள். சிறிது நேரத்திலெல்லாம் ஷோபி அவர்களோடு நட்புகொள்கிறாள். நானும் பதில் எழுதலமா? என்கிறாள். நீ எழுத்தாளரா? என்கிற கேள்விக்கு இல்லை நானொரு FACT CHECKER என்கிறாள். மேலும் தன் காதலனோடு ப்ரி ஹனிமூனுக்கு வந்திருப்பதையும் சொல்கிறாள்.
அடுத்தநாள் விக்டருடன் அங்கு வருகிறாள். அவர்களை வரவேற்கும் விதமாக மிகவும் சுவையான விருந்தளிக்கின்றனர். அந்த உணவின் சுவையில் மயங்கிய விகடர், சில நாட்கள் அங்கேயே அவர்களோடு தங்கி அனைத்து சமையலையும் கற்றுக்கொள்கிறான். இதில் சற்று ஏமாற்றமடையும் ஷோபி கடிதங்களுக்கு பதில் எழுதமென நினைக்கிறாள். ஒருநாள் அந்தசுவற்றில் வைக்கப்பட்ட கடிதங்களை சேகரிக்கும்போது ஒரு கல்லின் இடையே செருகப்பட்ட ஒரு பழைய கடிதத்தை கண்டெடுக்கிறாள். அது 50 வருடங்களுக்கு முன்பு க்ளார் என்கிற பெண்ணால் அவளது காதலன் லொரான்சாவிற்கு எழுதப்பட்டது. “டியர் ஜூலியட், இன்று நான் என் காதலனை நாங்கள் தினமும் சந்திக்கும் மரத்தின் கீழ் நான் வருவேன் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்க வைத்திருக்கிறேன். ஆனால என் பெற்றோரின் சம்மதம் கிடைக்கவில்லை. இன்று என்னை லண்டனுக்கு அனுப்புகிறார்கள். எனக்கு ஏமாற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது, நான் என்ன செய்ய, ஜூலியட்?” என்று எழுதப்பட்டிருக்கிறது. 50 வருடங்களாக அது கவனிக்கப்படாமல் இருந்ததைப்பற்றி அனைவரும் வியப்போடு பேசிக்கொண்டிருக்கின்றனர். ஷோபி நான் இந்த கடிதத்திற்கு பதில் எழுதப்போகிறேன் என்கிறாள். எழுதியும் அனுப்புகிறாள். அன்றிரவு விகடரிடம் இந்த தினம் எனக்கு மிகவும் விஷேசமானது, என்று சொல்லி அந்த கடித அனுபவத்தை சொல்கிறாள். விக்டர் நாளை நடக்கக்கூடிய ஒயின் ஏலத்திற்கு செல்கிறான்.
அடுத்தநாள் ஷோபி கடிதமெழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு இளைஞன் வருகிறான். நான் , என்னுடைய பாட்டி க்ளார் ஸ்மித்திற்கு இந்த கடிதத்தை எழுதியது யார்? என்கிறான். ஷோபியா, நான்தான், இது இவ்வளவு உங்களிடம் கிடைக்குமென எதிர்பார்க்கவேயில்லை என்கிறாள்.
அவன் சிரித்தபடியே, ”என்ன நினைத்து இதை எழுதினீர்கள்?”
”க்ளார் இதற்கான பதிலை எதிர்பார்த்திருப்பார்களே என்று நினைத்து எழுதினேன்”
”அது ஐம்பது வருடங்களுக்கு முன்பு”
“உண்மையான காதலுக்கு வருடங்கள் கணக்கில்லையே”
“இதை எழுதத்தான் அமெரிக்காவிலிருந்து தனியாக வந்தீர்களா?”
“இல்லை என் காதலனுடன்”
“பாவம் அவன்” என்றபடி வெளியேறுகிறான்.
ஷோபி அவனை பின் தொடர்ந்து செல்கிறாள், மேலும் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்கிறாள். அவன் அதற்கு “பின் எப்படி பேச? உங்கள் கடிதத்தால் என் பாட்டி இப்போது இந்த வயதான நிலையிலும் இங்கே வந்திருக்கிறார்கள், என்கிறான்.
ஷோபி மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். நான் அவர்களை பார்க்கவேண்டுமென்கிறாள், அவன் “நீங்க் செயத உதவி போதும் என்கிறான். இருந்தாலும் அவனை தொடர்ந்து சென்று க்ளாரை சந்திக்கிறாள். ஷோபிதான் ஜுலியட்டாக அந்த கடிதத்தை எழுதியதை அறிந்து க்ளாரும் மகிழ்ச்சியடைகிறார். மேலும் அந்த கடிதம் மீண்டும் லொரான்சாவை சந்திக்க தூண்டியது என்றும் சொல்கிறார். ஷோபி க்ளாரை, மற்ற அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறாள். மகிழ்சியான அந்த இரவில் க்ளார் தன்னுடைய காதல்கதையை அனைவருக்கும் சொல்கிறார். ஷோபி ரசித்துக்கேட்டுக்கொண்டிருக்கிறாள்.
அடுத்தநாள் லொரான்சாவைத்தேடி க்ளார் பயணப்படுகிறார், ஷோபி தானும் அவரோடு வர விருப்பப் படுவதை சொல்கிறாள். சார்ளி அதை விரும்பவில்லை என்றாலும் க்ளார் ஷோபி வருவதை விரும்புகிறார். சார்ளி தன் பாட்டியின்மீது அளவுகடந்த அன்பில் இருக்கிறான். அவரது உடல்நிலையை மனதில் கொண்டே இந்த பயணத்தில் கவலைகொள்கிறான். லோரான்சாவைத்தேடிய பயணம் தொடங்குகிறது.
இந்தபயணத்தில் பிணக்குகளோடு தொடங்கும் ஷோபி சார்ளி இருவரும் விரைவில் ஒத்தகருத்துகளோடு லொரான்சாவைத் தேடுவதில் க்ளாருக்கு உதவுகின்றனர். நிறைய தேடல்கள், ரம்மியமான இடங்கள், மகிழ்சியான தருணங்கள் இவற்றைக் கடந்து லோரான்சாவை கண்டுபிடிக்கின்றனர். லோரன்சோ இரண்டு மகன், மகள் மற்றும் பேரன் பேத்திகளோடு சந்தோசமாக வாழ்ந்துவருகிறார். இன்னமும் இருவரின் மனதிலும் முதல் காதல் எஞ்சி நிற்கிறது. க்ளார் லொரான்சாவோடு தங்கிவிட நினைக்கிறார். லொரன்சாவின் குடும்பத்தினர் அவருக்கு க்ளாரை திருமணம் செய்து வைக்க பிரியப்படுகின்றனர். இது ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும் ஷோபி-சார்ளி இருவருக்குமிடையே உள்ள நட்பு மெல்ல காதலாக வளர்கிறது. படிக்கையில் கொச்சையாக இருந்தாலும் படமாக பார்க்கும்போது உணர்வுகளின் சங்கமம் அதை அழகாக புரிந்துகொள்ளச் செய்கிறது.
ஷோபி மற்றும் சார்ளி தாங்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்ட காதலை உணரும் நேரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஷோபி-விகடர் திருமணம் என்ன ஆனது?, ஷோபி-சார்ளி காதல் என்னவானது? என்பதை காதல் ததும்ப சொல்லியிருக்கிறார்கள்
விக்டருக்கு ஷோபியாவிடம் உள்ள காதலைவிட அவனது பணியின்மீதான காதல் அதிகமாக இருக்கிறது. என்பதையும் எந்தெந்த இடங்களில் விக்டரின் அருகாமையை இழக்கிறாள் என்பதையும் தனியாக காட்சியமைக்காமல் சிலசில விஷயங்களின் மூலமாக தெரிவுபடுத்தியிருக்கிறார்கள். மேலும் விக்டருக்கும் சரி, சோபியாவிற்கும் சரி வெவ்வேறான ஆசைகள், எதிர்பார்ப்புகள் என நிகழும் முரண்களும் இந்த கதையை இலகுவாக அனுகச்செய்கிறது.
இதுபோன்ற படங்களுக்கு முக்கியமான இசையும் கேமிராவும் இந்தப் படத்திலும் முழுமையாக இருக்கின்றது. இந்த சமயம் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நல்ல மழையாகவே இருக்கிறது. ஒரு மெல்லிய மழை நேர மாலையில் கதகதப்பான சைட்களோடு பார்க்கத் தோதான படம். என் போன்ற ரொமாண்டிக் மெலோடிராமா விரும்பிகள் அவசியம் பார்க்கவேண்டிய படம்.
இதே படத்தின் சாரத்தோடு கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் வெளியாகிய இன்னொரு படத்தைப்பற்றிதான் அடுத்ததாக எழுத இருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)



