ஒரு மரம் - ஒரு குடும்பம் - சில சம்பவங்கள்

THE TREE : ஆஸ்திரேலிய திரைப்படம்.
பீட்டர் ஆஸ்திரேலியாவின் ஒரு மலைசார்ந்த கிராமத்தில் தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறான். மிகவும் மகிழ்ச்சியான ஒரு குடும்பம். மரவீடுகளை செய்து பெரிய ட்ரக்குகளில் கொண்டுசென்று தேவையானவர்களுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்கிறான். மனைவி டாவ்ன், மூன்று மகன்கள் மற்றும் ஒரு பெண் (சிமோன்). மிகவும் சந்தோஷமான இவர்களின் வாழ்வில் பீட்டரின் எதிர்பாராத மரணம், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டாவ்ன், கணவன் இல்லாமல் நான்கு குழந்தைகளுடன், அதிலும் இரண்டு வயதாகியும் இன்னும் பேச்சு வராத கடைசி பையனுடனும் இனி வரும் தனது வாழ்வின் அடுத்த நாட்களை எப்படி எதிர்கொள்வது என்பதில்  மிகுந்த கவலை கொள்கிறாள். உறவினர்களும் அண்டைவீட்டினரும் பீட்டரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சிமோன் தனது தோழியிடம் சொல்கிறாள் “பாரு, யாருமே அழவேயில்லைஎன்று அதற்கு தோழி அழவேண்டாம் ஆனால் அனைவரும் சோகமாகவே இருக்கின்றனர், என்பதை உணர்ந்துகொள்என்கிறாள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவளாக, தந்தையின் செல்லப்பெண்ணாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் சிமோன், தன் வயதுக்கு மீறீய அறிவோடிருக்கிறாள்.
      
      அவள் தன் அப்பாவோடு வீட்டின் பின்புறமுள்ள மரத்தின் முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோவைப் பார்த்தபடியே இருக்கிறாள். மரமென்றால் சாதாரண மரமல்ல. அகண்டு விரிந்து வளரக்கூடிய ஃபிக் மரம் (கம்போடியாவில் அங்கோர்வாட் கோவிலையே கபளீகரம் செய்திருக்குமே அந்த வகை மரம்). அதன் மிக நீண்ட அதன் ஒவ்வொரு கிளைகளுக்கும் தனது தந்தைவழி உறவுகளின் பெயரை வைத்திருக்கிறாள், ஒரு ஃபேமிலி ட்ரீ போல. துயரில் இருக்கும் அவளுக்கு மரத்தில் ஏறி தந்தை பெயரிட்ட கிளையில் அமர்ந்து கொள்வது ஆசுவாசமாய் இருக்கின்றது. அதைத் தொடர்கிறாள். விரைவிலேயே தன் தந்தையே அந்த மரமென நினைக்கிறாள். மரத்தோடு பேசுகிறாள். இலைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் தந்தை தன்னோடு பேசுவதாய் உணர்கிறாள். மிகுந்த சந்தோசத்துடன் அதை ஏற்றுக்கொள்கிறாள்.
       

       ஓர் இரவு, டாவ்னையும் எழுப்பி அப்பா, அந்த மரத்தில் இருக்கிறார், வா அவர் நம்மோடு பேசுகிறார், என்கிறாள். விரக்த்தியில் இருக்கும் டாவ்னுக்கு எரிச்சலாயிருக்கிறது. இருந்தாலும் மகளுக்காக அந்த இரவிலும் மரத்தின் மீது எறி அவள் சொல்லுமிடத்தில் அமர்கிறாள். தன் கணவன் உபயோகப்படுத்தும் பொருட்கள், போட்டோக்கள், அவர் கொடுத்த பரிசுப்பொருட்கள் என அனைத்தையும் ஆங்காங்கே வைத்திருக்கிறாள். மகளை நினைத்து பெருமிதமடைகிறாள். அவளின் ஏமாற்றைதைத் தவிர்க்க, ஆம் உன் அப்பா பேசுகிறார் என்கிறாள். இது சிமோனின் மனதில் இன்னும் அழுத்தமாக பதிகிறது.
குடும்ப சூழ்நிலை, பெரிய மகன் டிம்,  தன் தந்தையின் பார்ட்னரிடம் பள்ளி முடிந்ததும் பார்ட் டைமாக வேலை செய்கிறான். சிமோன் அவனிடம், நீ இப்படி வேலை செய்தா உன்னால சரியா படிக்க முடியாது என்கிறாள். எனக்கு தெரியும் உன் வேலையைப்பார் என்கிறான், பெரியவன். வீட்டில் நடப்பதை எல்லாவற்றையும் தானே தன் தந்தைக்கு தெரியச்செய்வதாகவும், இலைகளின் அசைவும் அவள் மனதில் ஏற்படுத்தும் அலைகளை தந்தையின் பதிலாகவும் கருதுகிறாள். ஒரு கட்டத்தில் டாவ்னுக்கே சிமோனின் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படுகிறது, கணவனை அந்த மரமாக பாவிக்கிறாள், அவளுக்கு அது தேவையாகவும் இருக்கிறது. விரக்தியான மனநிலையில் அவளும் மரத்தில் ஏறிக்கொண்டு கிளைகளோடும் இலைகளோடும் பேசிக்கொண்டிருக்கிறாள்.

ஒருநாள், விட்டு கழிவறையில் நீர்வரத்தில் தொந்தரவு ஏற்பட, ஒரு கார்ப்பெண்டரை தேடி நகரத்திற்கு செல்கிறாள், டாவ்ன். ஒரு கடைக்கு சென்று விசாரிக்கிறாள். அங்கு ஜார்ஜ் என்பவர், தன் கடைக்கு ஒரு டெலிபோன் ஆப்பரேட்டர் தேவை என்கிற விளம்பரத்தைப் பார்த்து டாவ்ன் வந்திருப்பதாய் நினைத்து இவளிடம் நிறைய கேள்விகள் கேட்கிறார். டாவ்னுக்கும் அவரது பேச்சும், சம்பளமாக சொன்ன பணமும் தேவைப்படுவதாய் தோன்றுகிறது. வேலை செய்தால் என்ன? என நினைக்கிறாள். வேலைக்கும் சேர்கிறாள். அடுத்தநாள் ஜார்ஜே, வீட்டிற்கு வந்து அந்த குழாய்ப்பிரச்சனையை சரி செய்கிறான்.

இந்த பிரச்சனைக்கு காரணம், அந்த மரம்தான், அதன் வேர்கள் உங்கள் தொட்டியை பாழாக்கியிருக்கின்றது, விரைவில் வெட்டி விடுங்கள், என்கிறான். சிமோனுடன் எதோ பேச நினைக்கும் ஜார்ஜ் மீது கோபத்தைக் காட்டுகிறாள், சிமோன். நாட்கள் செல்லச் செல்ல மரத்தின் மூலம் நிறைய பாதிப்புகளை கொண்டுவருகிறது. அண்டை வீட்டினரின் வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்படுகிறது அனைவருக்கும் அந்த மரத்தை வெட்டினாலென்ன எனத்தோன்றுகிறது. ஆனால் டாவ்னுக்கும், சிமோனுக்கும் அதில் உடன்பாடில்லை. நாட்கள் நகர்கின்றன, கணவனை இழந்த டாவ்னுக்கும் மனைவியை இழந்த ஜார்ஜுக்கும் இடையே மெல்ல விரிகிற உறவு, காதலாக மாறுகிறது. ஒருநாள், ஜார்ஜுடன் ஹோட்டலுக்கு செல்கிறாள், இருவரும் தங்களது கடந்த காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இணக்கமான சூழ்நிலையில் இருவரும் முத்தமிட்டும் கொள்கின்றனர். மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வருகிறாள், டாவ்ன்.

வாசலிலேயே வரவேற்கும் சிமோன், இன்னைக்கு நீ ஆபீஸ் போகலை, உன் போன் வேற ஆஃப் பண்ணியிருக்க? எங்க போன? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறாள். ஒருவழியாய் அவளை சமாதானம் செய்துவிட்டு, படுக்கைக்கு திரும்புகிறாள். அன்றிரவே ஒரு பலத்த காற்றினால் ஒரு பெரிய கிளை ஒடிந்து சரியாக டாவ்னின் படுக்கை அறையிலேயே விழுகிறது. இது ஏன் நடந்த்துன்னு உனக்கு புரியலையாம்மா? என்கிறாள், சிமோன். டாவ்னுக்கும் தன்  நிலையை குறித்து கவலை கொள்கிறாள். ஒடிந்து விழுந்த கிளையை அணைத்தபடி உறங்கிப்போகிறாள்.

அடுத்தநாள் ஜார்ஜ் வருகிறான், ஒடிந்த கிளைய அப்புறப்படுத்தி, உடைந்த கூறையைத் தற்காலிகமாக சரிசெய்து தருகிறான். ஒரு ஆண் இல்லாத வீட்டிற்கு, பீட்டர் இருந்தால் என்ன செய்திருப்பானோ அதையெல்லாம் செய்கிறான். கிருஸ்த்துமஸ் வருகிறது, டாவ்ன், ஜார்ஜ் வீட்டில் சென்று கொண்டாட நினைக்கிறாள். ஆனால் சீமோன் விடாப்பிடியாக மறுக்கிறாள், முடிவில் மகளின் விருப்பத்திற்கிணங்க கடற்கரையில் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். ஜார்ஜ் அங்கு வருகிறான், டிம்மை அழைத்துகொண்டு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்புகிறான். வீட்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஜார்ஜை, சிமோன் அடியோடு வெறுக்கிறாள். தன் பாசமிக்க தந்தையின் இடத்தில் யாரையும் பொருத்திப்பார்க்க அவள் விரும்பவில்லை. டாவ்னும் அவளுக்கு எடுத்துரைக்க முயல்கிறாள், ஆனால் சிமோனிடம் எந்த மாற்றமுமில்லை.

விடுமுறையின் கடைசி நாட்களில் அனைவரின் விருப்பப்படியே மரத்தை வெட்டிவிட முடிவெடுக்கின்றனர். அந்த இரவில் மரத்தில் ஏறிக்கொண்டு, கிட்டதட்ட போராட்டமே நட்த்துகிறாள், சிமோன். ஒருகட்டத்தில் ஜார்ஜ் அவளை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் அவள் அங்கிருந்து குதித்துவிடுவதாக மிரட்டுகிறாள். மகளின் சுபாவம் தெரிந்து, டாவ்ன் ஜார்ஜை திரும்ப அழைக்கிறாள், ஜார்ஜோ “என்ன நீயும் குழந்தை மாதிரி பேசுகிறாய், அவளுக்கு ஒண்ணும் ஆகாது, நான் பேசுகிறேன்என தொடர்ந்து அதற்கான முயற்சியில் இறங்க மகளையும் விடமுடியாமல், ஜார்ஜிற்கும் புரிய வைக்கமுடியாமல் டாவ்ன் திணருகிறாள். ஒருகட்டத்தில் ஜார்ஜை திட்டி தயவு செய்து வெளியே போ, இனி திரும்ப வர வேண்டாமென கதறுகிறாள். அடுத்த காட்சியில் சிமோன் அம்மாவின் ஒரு நடவடிக்கையால் மனமிறங்கி மரத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு திரும்புகிறாள், அது என்ன? என்பதை காட்சியாய்ப் பாருங்கள்.

அடுத்த சில நாட்களில் வீசும் சூறைக்காற்றில் மரம் வேறோடு சாய்ந்துவிடுகிறது. வீடு முற்றிலுமாக சேதமடைந்து போகிறது. டாவ்ன் குழந்தைகளோடும், சில அத்தியாவசியப் பொருட்களோடும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அப்போது அவளுக்கு உதவி செய்ய ஜார்ஜ் எதிரில் தனது ஜீப்பில் வருகிறான். இருவர் முகத்திலும் மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. அதையும் மீறிய ஒரு சந்தோசமும். இருவரும் வாழ்த்துகள் பறிமாரியபடி பிரிகின்றனர். காரில் குழந்தைகள் ஒன்றின்மீது ஒன்றாக கையையும் காலையும் போட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்தபடி, மனதுக்கு பிடித்தமான பாடலை பாடியபடி பயணிக்கிறாள். படம் முடிகிறது.

       இறந்துபோன தன் தந்தை வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் வசிப்பதாக நம்பக்கூடிய ஒரு சிறுமியின் கதை. Our Father Who Art in The Tree என்கிற ஆங்கில நாவல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூடி பாஸ்கோ என்பவரால் எழுதப்பட்ட நாவல். இதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த ட்ரீ. ஒரு நாவலைப் படமாக்கும்போது ஏற்படும் சங்கடங்கல் இல்லாமல், பொறுமையாக ஒரு முழு நாவலையும் வாசித்து முடித்த திருப்தி, கிடைக்கிறது இந்தபடத்தில். சிமோனாக வருகிற அந்த சுட்டிப்பெண், டாவ்ன் இருவரும் தங்களின் முகத்தில் கொண்டு வரும் எக்ஸ்பிரஷனும், நடிப்பும் அருமை. இதை எழுதியவர் ஒரு பெண், இயக்கியவர் ஒரு பெண், தயாரித்தது இரு பெண்கள், ஆக ஒரு பெண்ணின் இருதலைக்கொல்லி நிலைமையை மிகுந்த விவரணைகளோடு கையாள முடிந்திருக்கிறது.
மனித மனம் மிகவும் மெல்லிய அடுக்குகளைக்கொண்டது, மேலும் மிகவும் சிக்கலான  இழைகளால் பின்னப்பட்டது, அதிலும் குழந்தைகளுக்கு முதல் பத்து வயதில்தான் மூளை மிகவும் அதிகமாக வளர்ச்சியடைகிறது. அப்போது அவர்கள் அதிகம் கவனிக்கின்றனர். அதிகம் யோசிக்கின்றனர். அப்படி ஒரு சிறிய விஷயம் ஒரு சின்ன பெண்ணை எப்படி மாற்றுகிறது, அவள் சார்ந்தவர்களை அது எங்கனம் பாதிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதை அதிக சலனமற்ற மெல்லிய ஓடையின் போக்கில் சொல்லப்பட்ட கதை. அவசியம் பாருங்கள், ஒரு நல்ல படம்.

அதகளம்

ஆடுகளம் – எப்போ வரும் இந்த மாதிரி ஒரு தமிழ் சினிமா? என்கிற கேபிள் உட்பட பலருக்கும் மற்றுமொரு உதாரணம். சிம்பிளா சொன்னா ஆடுகளம் – அதகளம்.


படம் முடிந்ததும் பிலிமோகிராபி என்ற டைட்டிலின் கீழ் நிறைய பெயர்களை போடுகிறார்கள். எனக்கு டக்குன்னு கண்ணு பட்டது அமேரோஸ் பெரோஸ். அலைபாயுதே, ஆயுதஎழுத்து போன்ற படங்களுக்கான திரைக்கதையின் மூலமென சொல்லப்படும் படம். இந்த படத்தில் பிலிமோகிராபி என்ற டைட்டிலின் கீழ் அமேரோஸ் பெரோஸ் மற்றும் சில பெயர்களைப் பார்க்கும்போது டக்கென்று எழுந்து கைதட்ட தோன்றியது. அது ஏன்? என்றோ மற்ற விவாதங்களுக்கோ நான் வரவில்லை. ஆடுகளம் திரைக்கதையை எழுதும்போது உதவியாய் இருந்த, பாதித்த சம்பவங்களை, நாவல்களை, சினிமாக்களை ஃபிலிமோகிராபி என்கிற பெயரில் வெற்றிமாறன் நினைவு கூர்வதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் வெற்றிமாறன் மற்றும் பாரட்டுக்கள்

அமேரோஸ் பெரோஸ். வீதிகளில் நடக்கும் நாய் சண்டையை களமாகக் கொண்டபடம், நாய்சண்டையும் அதன் வீரியமும், அதன் விளைவுகளும் அதனையே பிரதானமாகக் கொண்ட மனிதர்களும் அவர்களின் பின்புலன்களுமென பின்னப்பட்ட கதை. ஆடுகளத்தில் சேவல் கட்டு அவ்வளவுதான், என்று எளிதாக சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் இதன் பின்னால் உள்ள உழைப்பு, அவ்வளவு. ஹேட்ஸ் ஆப் ஆடுகளம் டீம்.

ஆடுகளத்தில் சேவல் கட்டும் அதனைப் பிரதானமாக்க் கொண்ட மனிதர்களையும் சுற்றி வருகிறது கதை.

பேட்டைக்காரன் – ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், சேவல் சண்டையையே தன் மூச்சாகக் கொண்டிருக்கும் மூர்க்கமான மனிதன். அவரது அந்த முரட்டு தோற்றமும், அடர்த்தியான மீசைக்குள் புதைந்திருக்கும் முகமும், வெறியேறிய கண்களும், கறையேறிய பற்களுமாய் அசலாய் பரம்பரை பரம்பரையாக சேவல்கட்டு நடத்தும் மனிதரை கண்முன் நிறுத்துகிறார். இது இவருக்கு முதல் படமாம், சத்தியமா நம்ப முடியலை. மனுஷன் வாழ்ந்திருக்கார். கோவமும், நமுட்டு சிரிப்பும், வன்மமும் படரும் கண்களை நொடிக்கொரு முறை திரையில் மாற்றி மாற்றி கொண்டுவரும் இவர் கண்கள்தான் பிரதானம். குறிப்பாக கிளைமாக்ஸில் தனுஷை பார்க்கும்போதும், அதன் பின்னும் இவரது நடிப்பு. அசாத்தியம். வாழ்த்துகள் சார்.

தொரை – கிஷோர், பேட்டைக்காரனின் இருகரங்களில் ஒருவன், மற்றவன் கருப்பு தனுஷ். சேவல் கட்டுக்கு சேவலை பயிற்றுவிக்கும் பேட்டைக்காரனின் பிரத்யேகமான யுக்தியை அறிந்த அவரது இரு மாணவர்கள். தொரை ஒயின்ஷாப்பில் பார் வைத்து நடத்தி வருகிறான். கருப்பு வெட்டிப்பயல், அண்ணே, அண்ணே என பேட்டைக்காரனே உலகமென சுற்றித்திருபவன்.

சேவல்கட்டில் இவர்களின் பரம்பரை எதிரியான ரத்னவேல், ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர். ஒவ்வொரு முறையும் சேவல் சண்டை முடிந்து வீடு திரும்பும் ரத்தினத்தை, என்னப்பா ஜெயிச்சிட்டியா? என்று கேட்கும் வயதான கிழவி. இல்லையென்றதும் தன் குடும்ப மானமே போனதாக ஒப்பாரி வைத்து அழுமளவிற்கு சேவல் சண்டை என்பதை ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாய்க் கொண்ட இவர்கள்தான் பிரதான பாத்திரங்கள்.

கடைசியாய் நடந்த சண்டையில் தோற்றுவிட்டதால் அடுத்து நடக்கப்போகும் சண்டையை எதிர்நோக்கியபடி ரத்தினவேல், எப்படியாவது அடுத்த சேவல்கட்டை நட்த்திவிட வேண்டுமென்ற முனைப்புடன் அதற்காக எதையும் செய்யத்துணிந்தவனாயிருக்கிறான். தன்னுடைய அதிகாரத்தாலும் பணபலத்தாலும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை நடத்த அனுமதி பெறுகிறான். இந்த சண்டையில் தோற்றால் மொட்டையடித்து மீசையை மழித்துக்கொண்டு சேவல் சணடையை விட்டே போய்விட வேண்டுமென்கிற கடினமான முடிவை எடுக்கவேண்டிய ஒரு அவமானமான சந்தர்ப்பத்தை சந்திக்கிறார், பேட்டைக்காரன்.

தனது உயிருக்கும், மரியாதைக்கும் சமமானதொரு பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் பேட்டைக்காரன் தனது சகாக்களான கருப்பையும், தொரையையுடனும் இணைந்து சேவல்களை தயார் செய்கின்றார். ஒருமுறை சண்டையில் தோற்றுவிட்ட சேவலை அறுத்துவிடுவது என்பது இந்த சண்டையில் எழுதாத விதி. அப்படி ஒருமுறை சண்டையில் தோற்ற கருப்புவின் சேவலை அறுத்துப்போட கட்டளையிடுகிறார், பேட்டைக்காரன். தன் சேவலின் மீது அதீத நம்பிக்கைக்கொண்ட கருப்பு அதனை கவனமாக தயார்செய்து வருகிறான். அந்த சேவலை இந்தபோட்டிக்கு கொண்டுவருகிறான்.

கடுமையான சேவல் சண்டை, பின்புலத்தில் தொடரும் பகை, எந்த நேரத்திலும் மனிதர்களுக்குள்ளும் பற்றிகொள்ளுமென்கிற வெறியோடு பரபரப்பாக காட்சிகள் நகரும் நேரத்தில் பேட்டைக்காரனுக்கும் அவரது சிஷ்யன் கருப்புவிற்கும் இடையில் விரிசல் விடுகிறது, அந்த சேவலின் காரணமாக. தன் சொல்லை கேட்க்காமல் அந்த சேவலை இன்னும் வைத்திருக்கும் கருப்பின்மீது வெறுப்பை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் பேட்டைக்காரனின் கட்டளையையும் மீறி தன் சேவலை களத்தில் இறக்குகிறான் கருப்பு. தொடர்ச்சியாக மூன்று வெற்றியையும், மூன்று லட்சம் பரிசுத்தொகையையும் பெறுகிறான்.

அந்த சேவல் ஜெயிக்காது என்று சொன்ன தனது வார்த்தை பொய்யாகிவிட்ட ஏமாற்றம், கொஞ்சம் கொஞ்சமாக கருப்பின் மீது பொறாமையாக மாறுகிறது, பின் பகையாய், பின் கொடூர வன்மமாய், பழிவாங்குதலின் உச்சமாய் தொக்கி நிற்கிறது. தன் சிஷ்யன் வெற்றி பெற்றதில் சந்தோசம்தானே வர வேண்டும், இதில் கோபப்பட என்ன இருக்கிறது? என்கிற சாதாரணமான கேள்விக்கு அசாதாரணமான திரைக்கதையாலும், தனுஷ்-ஜெயபால் இருவரின் செமத்தியான நடிப்பாலும் பதில் சொல்லியிருக்கிறார், வெற்றிமாறன். அவ்வளவுதான் படம்.

ஜென்ம பகையான பேட்டைக்காரனுக்கும் ரத்னவேலுக்கும் இடையே இருக்கும் பகை மறைந்து புதிதாக பற்றி எரியும் கருப்பின் மீதான பேட்டைக்காரன் வன்மம்தான், படத்தின் ஹைலைட். கருப்பை புரிந்துகொள்ள எவ்வளவோ சந்தர்ப்பங்களும், மனிதர்களும் அவருக்கு உதவி செய்கின்றனர். ஆனால் பழிவாங்குதலின் வெறி அவரை பிடித்து ஆட்டுகிறது. கருப்புவின் நியாயங்களை சொல்லும் காட்சியில், அட ஆமால்ல அவன் பாவம்யா என்று ஒரு எண்ணம் மனதில் படம் பார்க்கும் நமக்கு ஓடும், ஆனால் அடுத்த நொடியில் தன்னுடைய பாய்ண்ட் ஆஃப் வியூவில் ஒரு நியாயத்தை எடுத்துவைக்கும் பேட்டைக்காரனின் கேரக்டர். சான்ஸே இல்லை.

தனுஷ், ரொம்ப காரமான கடுகு. ஆடுகளம் இசை வெளியீட்டில் நடிகர் சூர்யா பேசும்போது ஒரு ஹீரோவை இப்படி காதலிக்கும் ஒரு டைரக்டரை நான் பார்த்த்தேயில்லை, இந்த விஷயத்தில் நான் தனுஷைப்பார்த்து மிகவும் பொறாமைப்படுகிறேன் என்று சொன்னார். நிச்சயம் எல்லா நடிகர்களும் பொறாமைப்படும்படியான ஒரு கெமிஸ்ட்ரிதான் வெற்றி-தனுஷ். இந்த கேரக்டரை தனுஷைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கமுடியாது. இது நிச்சயம். மனுஷன் அப்படியே கருப்பாவே வாழ்ந்திருக்கான். தனுஷ் கேரியரில் இது நிச்சயமான மைல்ஸ்டோன். வாழ்த்துகள் தனுஷ்.


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் கிளைமேக்ஸ், படம் பார்த்தவர்களுடன் இது பற்றி பேசலாம் இப்போது வேண்டாமென நிடைக்கிறேன்.


டாப்ஸி, என்ன சொல்ல பட்டர்பிளை, சூரியன் எஃபெம் விளம்பரம் பார்தத்து முதலே இந்த பெண்ணை படத்தில் இம்மி இம்மியாய் ரசிக்கவேண்டுமென நினைத்திருந்தேன். சாரி டாப்ஸி, நீங்க வர காட்சியிலும் நான் தனுஷைத்தான் அதிகம் பார்த்துக்கொண்டிருந்தேன். தனுஷின் காதல் எப்பிஷோட் தேவையில்லையோ என நினைக்கும்படியான அழுத்தமற்ற பல காட்சிகள் இருக்கின்றது. அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் கிளைமேக்ஸில் தனுஷின் ஒற்றை வரி, கதையில் அவரது காதலை, அந்தப்பெண்ணின் இருப்பை நியாப்படுத்துகிறது.

எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், விமர்சனமாய் அல்ல. ரத்னவேலு, கருப்புவின் நண்பன், ரத்னவேலின் அம்மாக்கிழவி, பேட்டைக்காரனின் இளம் மனைவி (வழக்கம்போல அவர் அழும் அந்த ஒரு காட்சி தவிர்த்து), அயூப், கான்ஸ்டபிள் என இன்னும் சொல்ல நிறைய விஷயங்கள உண்டு என்றாலும் பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன். தியேட்டரில் சரியான ஒலியமைப்பு இல்லையென நினைக்கிறேன், நிறைய இடங்களில் வசனங்கள் புரியவேயில்லை. இன்னொருமுறை படம் பார்க்கவேண்டும்.

டப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை


லீப் இயர் - ரொமாண்டிக் காமெடி, இயக்குனர் - ஆனந்த் டர்க்கர்.

அன்னா ஒரு ஸ்டேஜர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டை ஒழுங்குசெய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறாள். தனது பாய்பிரண்டான ஜெர்மியுடன் சேர்ந்து ஒரு தனி பங்களா வாங்கி அதில் தனியே வசித்து வருகிறாள். இருவருக்குமிடையே வெளிப்படுத்தப்படாத ஒரு காதல் இருக்கிறது. அன்னா, ஜெர்மி தனது காதலை சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறாள். ஒரு நாள் வேலை விஷயமாக ஊருக்கு செல்லவிருப்பதாக சொல்கிறாள். அதற்கு ஜெர்மி இன்று இரவு ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முடித்துவிட்டு போகலாமே என்கிறான். என்ன திடீர் விருந்து? எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது, சொல்லேன் என்கிறாள். ஆனால் இது நிச்சயமாக உனக்கு பிடிக்கும், இரவு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு செல்கிறான், ஜெர்மி.

மாலை, தன் தந்தையை சந்தித்து தனக்கும் ஜெர்மிக்கும் நிச்சயம் நடக்கப்போவதாக சொல்கிறாள். அவளது தந்தையும் மிகவும் மகிழ்ச்சியோடு ஒருவழியா இருவரும் பிரபோஸ் செய்துவிட்டீர்களா? என்கிறார். மேலும் நீ எப்படி உன் காதலை வெளிப்படுத்தினாய். ஒருவேளை இல்லையென்றால் இது லீப் இயர், இது பிப்ரவரி வேறு, 29 ஆம் நாள் உன் காதலை அவனிடம் சொல். இது ஐரிஸ் சம்பிரதாயமும் கூட, உன்பாட்டி உன் தாத்தாவை நாலு வருடம் சுற்றவைத்து இந்த நாளில்தான் அவர் காதலை ஏற்றுக்கொண்டாளாம். என்கிறார். அவசியம் செய்கிறேன் என்றபடி மகிழ்ச்சியோடு விருந்திற்கு கிளம்புகிறாள். தன்னிடம் காதலை வெளிப்படுத்தவே ஜெர்மி இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பானென நினைக்கிறாள். நல்ல விலையுயர்ந்த ஆடையை தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு கிளம்புகிறாள்.

ஜெர்மி ஒரு கார்டியாலஜிஸ்ட், தொடர்ச்சியான அலுவல் நிமித்தமான சந்திப்புகளில் பிஸியாக இருக்கிறான். இரவு விருந்தில் அன்னாவை அழைத்து என்னுடைய இத்துனை பிஸி செட்யூலிலும் ஏன் உனக்காக நேரம் ஒதுக்கியிருக்கிறேன்றால் இதற்காத்தான் என்று ஒரு சிறு பெட்டியை நீட்டுகிறான். நிச்சய மோதிரமாக இருக்கலாமென எதிர்பார்த்து திறப்பவளுக்கு ஏமாற்றமாய் உள்ளே வைர தோடுகள் காத்திருக்கின்றன. இடையே ஜெர்மியும் ஒரு அவசர வேலையாக கிளம்ப நேரிடுகிறது.

அன்னா, இவ்வளவு அலுவல்களிலும் தனக்காக நேரம் ஒதுக்கி தன்னோடு இருக்கப்பிரியப்படும் அவனது பிரியத்தை உணர்கிறாள், இருந்தும் ஏமாற்றமாகவே இருக்கிறது. இரவு படுத்தபடியே யோசிக்கிறாள். இனி இவன் காதலை சொல்லும் வரை காத்திருக்க முடியாது. அப்பா சொன்னபடி பிப்ரவரி 29ல் அவனிடம் மோதிரமும் கையுமாய் காதலை சொல்வதென முடிவு செய்கிறாள். ஜெர்மியின் பயணதிட்டத்தின்படி அவன் பிப்ரவரி 29ல் எங்கிருப்பானென தெரிந்துகொண்டு அங்கே புறப்படுகிறாள்.

மகிழ்ச்சியோடு கிளம்புகிறாள். ஆனால் அவள் செல்லும் விமானம் மோசமான வானிலை காரணமாக வேல்ஸ் என்கிற ஊரிலேயே தரையிறக்கப்படுகிறது. தொடர்ந்து புயலும் மழையுமாக இருக்க அனைத்து விமானங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. அன்னா மனம் தளராமல் ஒரு போட் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கிளம்புகிறாள். அதிக வாடகைக்கு பேசிய அந்த போட்டும் ஒரு கட்டத்தில் தத்தளித்தபடி அருகிலுள்ள வேறு ஒரு ஊரில் அவளை இறக்கிசெல்கிறது. தட்டுத்தடுமாறி அந்த கிராமத்திலுள்ளா ஒரு சிறிய ஹோட்டலை வந்தடைகிறாள். அங்கு வயதான சிலர் குடித்தபடி இருக்கிறார்கள். அங்கிருந்து டப்லினுக்கு பஸ், ரயில் போன்ற எந்த வசதியுமில்லை என்பதை அறிகிறாள். அதீத பணத்தேவையில் இருக்கும் அந்த ஹோட்டல் முதலாளியான டெக்லான், டப்லின் செல்வது ஒரு ஆபத்தான பயணம், வழியில் நிறைய திருடர்கள் வருவார்கள், ஆகவே 500 யுரோ கொடுத்தால் அவளை தனது காரில் கொண்டு விடுவதாய் உறுயளிக்கிறான். இந்த ஹோட்டல்லுக்கு அன்னா வருவதிலிருந்து படம் காமெடி ட்ராக்கில பயணிக்கிறது. வயிறுகுலுங்க சிரிக்கும் வகை அல்ல, புன்முறுவலோடும், நம்மோடு பொருத்திப்பார்த்தும் போகிற ரொமாண்டிக் காமெடி வகை.

அன்னா ஜெர்மிக்கு போன் செய்கிறாள் நான் டப்லினுக்கு அருகில் இருக்கிறேன் நாளை மாலை உன்னை சந்திக்கிறேன் என்கிறாள். ஜெர்மியும் அன்னாவின் திடீர் வருகையை ஆவலோடு எதிர்நோக்குகிறான். அடுத்தநாள் காலை டப்லின் கிளம்ப பெட்டி படுக்கையோடு தயாரகிறாள் அன்னா, வெளியே வந்தால் ஒரு டப்பா கார் குபுகுபுவென புகையை கக்கியபடி நிற்கிறது. திலான அந்த ஓட்டை காரைப்பற்றி பெருமையாக பேசி, அவளை சமாளித்து ஏற்றிக்கொண்டு கிளம்புகிறான். வழியில் இருவரும் ஏதாவது விஷயங்களுக்காக சண்டையிட்டபடியே வருகின்றனர். அன்னாவின் கவனக்குறைவால் அந்த காரும் ஒரு குளத்தில் இறங்கிவிடுகிறது. டெக்லான் கொஞ்சம் காசு கொடு, நான் கேரேஜுக்கு போன்செய்து காரை வளியே எடுக்கிறேன்பிறகு டப்லின் போகலாமென்கிறான். அன்னா நீ செய்த உதவிக்கு மிக்க நன்றி நான் இப்படியே நடந்தேபோகிறேன் என்கிறாள். டெக்லான் பின் தொடர்கிறான்.

டெக்லான் சொன்னபடியே அன்னாவின் பெட்டியை ஒரு கோஷ்டி லாவகமாய் களவாடிச்செல்கிறது. இப்போது டெக்லான் சிரித்தபடியே முன்னால் செல்ல அன்னா பின் தொடர்கிறாள். அடுத்த கிராமத்தை அடைய அங்கே பெட்டியை திருடியவர்கள், குடித்துக்கொண்டிருக்கிறார்கள். திலான் அவர்களோடு சண்டையிட்டு பெட்டியை திரும்பப்பெற்று தருகிறான். இங்கே இருவரும் ஒருவருக்கொருவர் தேவைப்படுவதை உணர்கின்றனர். அன்னா டெக்லானிடம் நீ என்னை எப்படியாவது டப்லினுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடு. காரில்லையென்றாலும் பரவாயில்லை, நான் பேசிய பணத்தை தருகிறேன் என்கிறாள். ஒருவழியாக நடந்து அருகிலுள்ள ரயில் நிலையத்தை அடைகிறார்கள். ரயில் வருவதற்கு மூன்று மணிநேரமாகுமென்பதால் அருகிலுள்ள மலைமேலுள்ள கோட்டைக்கு செல்கின்றனர். அந்த மலைகிராமத்தின் அழகை மழையில் ரசித்துக்கொண்டிருப்பதில் ரயிலை தவறவிடுகின்றனர். ஸ்டேசன் மாஸ்டர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இந்த ரயில் வரும் வேண்டுமானால் இன்றிரவு என் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள் என்கிறார். அவர் இவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்று நம்புகிறார், ஒருநாள் முழுவதும் அவருக்காக கணவன் மனைவியாய் நடிப்பதென முடிவாகிறது. அடுத்த அரைமணி நேரம் அவர்களாக விரும்பாவிட்டாலும் நெருங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம். காலம் காய் நகர்த்துகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள். காட்சிகள் கவிதையாகின்றன.

டெக்லானோடு சேர்ந்து அவர் வீட்டில் தங்கும்போதும், சமையல் செய்கிற நேரங்களிலும், பிரிதொரு நேரத்தில் போதையிலும் அவனின் வறுமையையும், அவனது கடந்த காலத்தையும் அன்னா அறிகிறாள். வெறும் பாதுகாவலனாக, ஒரு ட்ரைவராக நினைத்திருந்த டெக்லானை முதன்முதலாக அன்போடு அணுகத் தொடங்குகிறாள். அங்கிருந்து கிளம்பி டப்லினுக்கு பயணப்படுகிறார்கள். நீண்ட பயணத்தின் களைப்பாலும், அடுத்த பேருந்தின் வருகைக்காகவும் காத்திருக்கின்றனர். அன்னா டெக்லானில் தோளில் சாய்ந்து தூங்குகிறாள். அதனை ரசித்தபடியே இவனும் உறங்கிவிடுகிறான். விழிக்கும்போது அன்னா அங்கு இல்லாததைக்கண்டு ஏமாற்றமடைகிறான். இந்த காட்சியில் இசையும் அவனுடையை இழப்பையும் பரிதவிப்பையும் வெறும் முக அசைவுகளாலும் கண்களாலும் காட்டப்பட்டிருக்கும். அழகான காட்சி இது. (இந்த காட்சியின் வீடியோ)






அவள் இல்லாவிட்டால் ஏன் மனம் ஏமாற்றமடைகிறது என்பதை தெரிகிறான், அன்னா மீது தனது ஈர்ப்பு காதலாய் மாறியதை புரிந்துகொள்கிறான். ஆனால் அன்னா அப்போது அவனை விட்டு சென்றிருக்கவில்லை, அவனுக்குமாய் சேர்த்து உணவு வாங்கிக்கொண்டு வருகிறாள். அந்த நொடியில் இருவரும் மிகவும் பரவசப்படுகின்றனர். இப்படியாக இருவருக்குமிடையே நல்ல புரிதல் வருகிற பொழுது பிப்ரவரி 29ம் நாள் வருகிறது. இருவரும் டப்லினுக்கும் வந்து சேர்கின்றனர். அங்கு அன்னாவிற்காக காத்திருக்கும் ஜெர்மி அனைவரின் முன்பாகவும் அன்னாவிடம் தன் காதலை சொல்கிறான்.

டெக்லான் ஜெர்மியுடன் அன்னாவை விட்டுவிட்டு தனது கிராமத்திற்கு வருகிறான். வழியில் தந்து பழைய பார்ட்னரை சந்திக்கிறான். மீண்டும் இணைந்து ஹோட்டலை நடத்தி வருகிறான். அங்கே அன்னாவிற்கும் ஜெர்மிக்கும் திருமணம் முடிவாகிறது. ஜெர்மியின் எந்திரத்தனமான வாழ்க்கை முறையும் கடமையாய் பிரதிபளிக்கும் அவனது அன்பும் அன்னாவை மீண்டும் டெக்லானோடிருந்த நிமிடங்களை நினைவுபடுத்துகிறது. அவன் ஒருமுறை சொன்னபடியே தனக்காக தன் வாழ்விற்காக என முடிவெடுக்கும் முன் சற்று யோசிக்கிறாள். டெக்லானை சந்திக்க கிராமத்திற்கு கிளம்புகிறாள்.

திரும்ப வந்த அன்னாவை டெக்லான் ஆச்சர்யத்தோடு வரவேற்கிறான். அன்னா சொல்கிறாள், “எனக்கு ஜெர்மிக்கும் நிச்சயம் நடக்கவில்லை. அதற்கு முன்பாகவே நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்”

“I had everything I ever wanted, but nothing I really needed”

“And I think that what I need is here… and I come all this way to see if may be you might think so, too….”

ஒரு சின்ன கிளிஷே டிராமாவோடு இருவரும் இணைகின்றனர். சுபம்.


லெட்டர் டு ஜூலியட் படமும் இந்த படமும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்தான். வெகு எதார்த்தமான மனித மனங்களை, அதன் உணர்வுகளை பேசுகிற படம், கருத்து இல்லை, போதனை இல்லை. படம் நெடுக மெல்லிய இசை, கண்ணில் ஒத்திக்கொள்ளும்படியான காட்சியமைப்புகள், அதன் பின்புலன்கள், அழகான ஹீரொயின், ஹேண்ட்சம்மான ஒரு ஹீரோ. நல்ல ரொமாண்டிக் காமெடி. விடுமுறை நாட்களின் மாலையில், பாப்கார்ன் மற்றும் துணையுடன் பார்த்தல் சுகம், பின்ணனியில் மழை, ஆனந்தம்.