டப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை


லீப் இயர் - ரொமாண்டிக் காமெடி, இயக்குனர் - ஆனந்த் டர்க்கர்.

அன்னா ஒரு ஸ்டேஜர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீட்டை ஒழுங்குசெய்து கொடுக்கும் பணியை செய்து வருகிறாள். தனது பாய்பிரண்டான ஜெர்மியுடன் சேர்ந்து ஒரு தனி பங்களா வாங்கி அதில் தனியே வசித்து வருகிறாள். இருவருக்குமிடையே வெளிப்படுத்தப்படாத ஒரு காதல் இருக்கிறது. அன்னா, ஜெர்மி தனது காதலை சொல்லும் நாளுக்காக காத்திருக்கிறாள். ஒரு நாள் வேலை விஷயமாக ஊருக்கு செல்லவிருப்பதாக சொல்கிறாள். அதற்கு ஜெர்மி இன்று இரவு ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முடித்துவிட்டு போகலாமே என்கிறான். என்ன திடீர் விருந்து? எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது, சொல்லேன் என்கிறாள். ஆனால் இது நிச்சயமாக உனக்கு பிடிக்கும், இரவு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு செல்கிறான், ஜெர்மி.

மாலை, தன் தந்தையை சந்தித்து தனக்கும் ஜெர்மிக்கும் நிச்சயம் நடக்கப்போவதாக சொல்கிறாள். அவளது தந்தையும் மிகவும் மகிழ்ச்சியோடு ஒருவழியா இருவரும் பிரபோஸ் செய்துவிட்டீர்களா? என்கிறார். மேலும் நீ எப்படி உன் காதலை வெளிப்படுத்தினாய். ஒருவேளை இல்லையென்றால் இது லீப் இயர், இது பிப்ரவரி வேறு, 29 ஆம் நாள் உன் காதலை அவனிடம் சொல். இது ஐரிஸ் சம்பிரதாயமும் கூட, உன்பாட்டி உன் தாத்தாவை நாலு வருடம் சுற்றவைத்து இந்த நாளில்தான் அவர் காதலை ஏற்றுக்கொண்டாளாம். என்கிறார். அவசியம் செய்கிறேன் என்றபடி மகிழ்ச்சியோடு விருந்திற்கு கிளம்புகிறாள். தன்னிடம் காதலை வெளிப்படுத்தவே ஜெர்மி இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருப்பானென நினைக்கிறாள். நல்ல விலையுயர்ந்த ஆடையை தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு கிளம்புகிறாள்.

ஜெர்மி ஒரு கார்டியாலஜிஸ்ட், தொடர்ச்சியான அலுவல் நிமித்தமான சந்திப்புகளில் பிஸியாக இருக்கிறான். இரவு விருந்தில் அன்னாவை அழைத்து என்னுடைய இத்துனை பிஸி செட்யூலிலும் ஏன் உனக்காக நேரம் ஒதுக்கியிருக்கிறேன்றால் இதற்காத்தான் என்று ஒரு சிறு பெட்டியை நீட்டுகிறான். நிச்சய மோதிரமாக இருக்கலாமென எதிர்பார்த்து திறப்பவளுக்கு ஏமாற்றமாய் உள்ளே வைர தோடுகள் காத்திருக்கின்றன. இடையே ஜெர்மியும் ஒரு அவசர வேலையாக கிளம்ப நேரிடுகிறது.

அன்னா, இவ்வளவு அலுவல்களிலும் தனக்காக நேரம் ஒதுக்கி தன்னோடு இருக்கப்பிரியப்படும் அவனது பிரியத்தை உணர்கிறாள், இருந்தும் ஏமாற்றமாகவே இருக்கிறது. இரவு படுத்தபடியே யோசிக்கிறாள். இனி இவன் காதலை சொல்லும் வரை காத்திருக்க முடியாது. அப்பா சொன்னபடி பிப்ரவரி 29ல் அவனிடம் மோதிரமும் கையுமாய் காதலை சொல்வதென முடிவு செய்கிறாள். ஜெர்மியின் பயணதிட்டத்தின்படி அவன் பிப்ரவரி 29ல் எங்கிருப்பானென தெரிந்துகொண்டு அங்கே புறப்படுகிறாள்.

மகிழ்ச்சியோடு கிளம்புகிறாள். ஆனால் அவள் செல்லும் விமானம் மோசமான வானிலை காரணமாக வேல்ஸ் என்கிற ஊரிலேயே தரையிறக்கப்படுகிறது. தொடர்ந்து புயலும் மழையுமாக இருக்க அனைத்து விமானங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. அன்னா மனம் தளராமல் ஒரு போட் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கிளம்புகிறாள். அதிக வாடகைக்கு பேசிய அந்த போட்டும் ஒரு கட்டத்தில் தத்தளித்தபடி அருகிலுள்ள வேறு ஒரு ஊரில் அவளை இறக்கிசெல்கிறது. தட்டுத்தடுமாறி அந்த கிராமத்திலுள்ளா ஒரு சிறிய ஹோட்டலை வந்தடைகிறாள். அங்கு வயதான சிலர் குடித்தபடி இருக்கிறார்கள். அங்கிருந்து டப்லினுக்கு பஸ், ரயில் போன்ற எந்த வசதியுமில்லை என்பதை அறிகிறாள். அதீத பணத்தேவையில் இருக்கும் அந்த ஹோட்டல் முதலாளியான டெக்லான், டப்லின் செல்வது ஒரு ஆபத்தான பயணம், வழியில் நிறைய திருடர்கள் வருவார்கள், ஆகவே 500 யுரோ கொடுத்தால் அவளை தனது காரில் கொண்டு விடுவதாய் உறுயளிக்கிறான். இந்த ஹோட்டல்லுக்கு அன்னா வருவதிலிருந்து படம் காமெடி ட்ராக்கில பயணிக்கிறது. வயிறுகுலுங்க சிரிக்கும் வகை அல்ல, புன்முறுவலோடும், நம்மோடு பொருத்திப்பார்த்தும் போகிற ரொமாண்டிக் காமெடி வகை.

அன்னா ஜெர்மிக்கு போன் செய்கிறாள் நான் டப்லினுக்கு அருகில் இருக்கிறேன் நாளை மாலை உன்னை சந்திக்கிறேன் என்கிறாள். ஜெர்மியும் அன்னாவின் திடீர் வருகையை ஆவலோடு எதிர்நோக்குகிறான். அடுத்தநாள் காலை டப்லின் கிளம்ப பெட்டி படுக்கையோடு தயாரகிறாள் அன்னா, வெளியே வந்தால் ஒரு டப்பா கார் குபுகுபுவென புகையை கக்கியபடி நிற்கிறது. திலான அந்த ஓட்டை காரைப்பற்றி பெருமையாக பேசி, அவளை சமாளித்து ஏற்றிக்கொண்டு கிளம்புகிறான். வழியில் இருவரும் ஏதாவது விஷயங்களுக்காக சண்டையிட்டபடியே வருகின்றனர். அன்னாவின் கவனக்குறைவால் அந்த காரும் ஒரு குளத்தில் இறங்கிவிடுகிறது. டெக்லான் கொஞ்சம் காசு கொடு, நான் கேரேஜுக்கு போன்செய்து காரை வளியே எடுக்கிறேன்பிறகு டப்லின் போகலாமென்கிறான். அன்னா நீ செய்த உதவிக்கு மிக்க நன்றி நான் இப்படியே நடந்தேபோகிறேன் என்கிறாள். டெக்லான் பின் தொடர்கிறான்.

டெக்லான் சொன்னபடியே அன்னாவின் பெட்டியை ஒரு கோஷ்டி லாவகமாய் களவாடிச்செல்கிறது. இப்போது டெக்லான் சிரித்தபடியே முன்னால் செல்ல அன்னா பின் தொடர்கிறாள். அடுத்த கிராமத்தை அடைய அங்கே பெட்டியை திருடியவர்கள், குடித்துக்கொண்டிருக்கிறார்கள். திலான் அவர்களோடு சண்டையிட்டு பெட்டியை திரும்பப்பெற்று தருகிறான். இங்கே இருவரும் ஒருவருக்கொருவர் தேவைப்படுவதை உணர்கின்றனர். அன்னா டெக்லானிடம் நீ என்னை எப்படியாவது டப்லினுக்கு கொண்டுபோய் சேர்த்துவிடு. காரில்லையென்றாலும் பரவாயில்லை, நான் பேசிய பணத்தை தருகிறேன் என்கிறாள். ஒருவழியாக நடந்து அருகிலுள்ள ரயில் நிலையத்தை அடைகிறார்கள். ரயில் வருவதற்கு மூன்று மணிநேரமாகுமென்பதால் அருகிலுள்ள மலைமேலுள்ள கோட்டைக்கு செல்கின்றனர். அந்த மலைகிராமத்தின் அழகை மழையில் ரசித்துக்கொண்டிருப்பதில் ரயிலை தவறவிடுகின்றனர். ஸ்டேசன் மாஸ்டர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் இந்த ரயில் வரும் வேண்டுமானால் இன்றிரவு என் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள் என்கிறார். அவர் இவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்று நம்புகிறார், ஒருநாள் முழுவதும் அவருக்காக கணவன் மனைவியாய் நடிப்பதென முடிவாகிறது. அடுத்த அரைமணி நேரம் அவர்களாக விரும்பாவிட்டாலும் நெருங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம். காலம் காய் நகர்த்துகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள். காட்சிகள் கவிதையாகின்றன.

டெக்லானோடு சேர்ந்து அவர் வீட்டில் தங்கும்போதும், சமையல் செய்கிற நேரங்களிலும், பிரிதொரு நேரத்தில் போதையிலும் அவனின் வறுமையையும், அவனது கடந்த காலத்தையும் அன்னா அறிகிறாள். வெறும் பாதுகாவலனாக, ஒரு ட்ரைவராக நினைத்திருந்த டெக்லானை முதன்முதலாக அன்போடு அணுகத் தொடங்குகிறாள். அங்கிருந்து கிளம்பி டப்லினுக்கு பயணப்படுகிறார்கள். நீண்ட பயணத்தின் களைப்பாலும், அடுத்த பேருந்தின் வருகைக்காகவும் காத்திருக்கின்றனர். அன்னா டெக்லானில் தோளில் சாய்ந்து தூங்குகிறாள். அதனை ரசித்தபடியே இவனும் உறங்கிவிடுகிறான். விழிக்கும்போது அன்னா அங்கு இல்லாததைக்கண்டு ஏமாற்றமடைகிறான். இந்த காட்சியில் இசையும் அவனுடையை இழப்பையும் பரிதவிப்பையும் வெறும் முக அசைவுகளாலும் கண்களாலும் காட்டப்பட்டிருக்கும். அழகான காட்சி இது. (இந்த காட்சியின் வீடியோ)


அவள் இல்லாவிட்டால் ஏன் மனம் ஏமாற்றமடைகிறது என்பதை தெரிகிறான், அன்னா மீது தனது ஈர்ப்பு காதலாய் மாறியதை புரிந்துகொள்கிறான். ஆனால் அன்னா அப்போது அவனை விட்டு சென்றிருக்கவில்லை, அவனுக்குமாய் சேர்த்து உணவு வாங்கிக்கொண்டு வருகிறாள். அந்த நொடியில் இருவரும் மிகவும் பரவசப்படுகின்றனர். இப்படியாக இருவருக்குமிடையே நல்ல புரிதல் வருகிற பொழுது பிப்ரவரி 29ம் நாள் வருகிறது. இருவரும் டப்லினுக்கும் வந்து சேர்கின்றனர். அங்கு அன்னாவிற்காக காத்திருக்கும் ஜெர்மி அனைவரின் முன்பாகவும் அன்னாவிடம் தன் காதலை சொல்கிறான்.

டெக்லான் ஜெர்மியுடன் அன்னாவை விட்டுவிட்டு தனது கிராமத்திற்கு வருகிறான். வழியில் தந்து பழைய பார்ட்னரை சந்திக்கிறான். மீண்டும் இணைந்து ஹோட்டலை நடத்தி வருகிறான். அங்கே அன்னாவிற்கும் ஜெர்மிக்கும் திருமணம் முடிவாகிறது. ஜெர்மியின் எந்திரத்தனமான வாழ்க்கை முறையும் கடமையாய் பிரதிபளிக்கும் அவனது அன்பும் அன்னாவை மீண்டும் டெக்லானோடிருந்த நிமிடங்களை நினைவுபடுத்துகிறது. அவன் ஒருமுறை சொன்னபடியே தனக்காக தன் வாழ்விற்காக என முடிவெடுக்கும் முன் சற்று யோசிக்கிறாள். டெக்லானை சந்திக்க கிராமத்திற்கு கிளம்புகிறாள்.

திரும்ப வந்த அன்னாவை டெக்லான் ஆச்சர்யத்தோடு வரவேற்கிறான். அன்னா சொல்கிறாள், “எனக்கு ஜெர்மிக்கும் நிச்சயம் நடக்கவில்லை. அதற்கு முன்பாகவே நான் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்”

“I had everything I ever wanted, but nothing I really needed”

“And I think that what I need is here… and I come all this way to see if may be you might think so, too….”

ஒரு சின்ன கிளிஷே டிராமாவோடு இருவரும் இணைகின்றனர். சுபம்.


லெட்டர் டு ஜூலியட் படமும் இந்த படமும் ஒரே மாதிரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள்தான். வெகு எதார்த்தமான மனித மனங்களை, அதன் உணர்வுகளை பேசுகிற படம், கருத்து இல்லை, போதனை இல்லை. படம் நெடுக மெல்லிய இசை, கண்ணில் ஒத்திக்கொள்ளும்படியான காட்சியமைப்புகள், அதன் பின்புலன்கள், அழகான ஹீரொயின், ஹேண்ட்சம்மான ஒரு ஹீரோ. நல்ல ரொமாண்டிக் காமெடி. விடுமுறை நாட்களின் மாலையில், பாப்கார்ன் மற்றும் துணையுடன் பார்த்தல் சுகம், பின்ணனியில் மழை, ஆனந்தம்.

12 கருத்துரைகள்:

ஆதவா said...

அது ஏனோ தெரியவில்லை, இந்தமாதிரி படங்கள் மனதில் ஒட்டிக் கொள்கின்றன. பகிர்வுக்கு நன்றிங்க முரளி! நீங்கள் படம் முழுக்கவும் பதிவில் கொண்டுவந்துவிட்ட உணர்வு!!

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அழகான படம் முரளி..படம் முழுக்க கண்ணை உறுத்தாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கும்..நல்ல பகிர்வு

இளங்கோ said...

i have added this film to my list.. :)

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள், நல்ல திரைப்படங்களுக்கென தனிவலைப்பூ ஆரம்பித்திருக்கின்றீர்கள். நல்லது. நிறைய நல்ல படங்களின் புதிய கோணங்களை அறிந்து கொள்ள முடியும், இனி.

127ஹவர்ஸில் என்னை முந்திக்கொண்டீர்கள்.. :-)

என்னுடைய தெரிவுகள் இதுபோன்ற படமாகவே இருக்கின்றன.

முரளிகுமார் பத்மநாபன் said...

@திரு
ஆம் திரு, பிக்சரைசேசன் இந்த படத்தில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம். இவ்வளவு அழகான லேண்ட்ஸ்கேப்புகள்? ஒருமுறையாவாது டப்லினுக்கு போய்வரவேண்டும், கோரஸின் வயலினை கேட்டுக்கொண்டே......

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
அவசியம் பாருங்க, இளங்கோ. ஜாலியான படம். நம்ம ஜோதிகாமாதிரி இந்தபொண்ணு (40வயசு ஆகப்போகுது, அப்படி சொல்லலாமா?) முகசேஸ்ட்டைகள் நொடிக்கு நொடி அழகாக மாறிக்கொண்டே இருக்கும்...

கோபிநாத் said...

எப்போதுமே கலக்குறிங்க..அதுவும் காதல் படங்களுக்குன்னு வந்துட்டா ஒரு தனி கலக்கல் தான் உங்கள் எழுத்துல ;))

\\அடுத்த அரைமணி நேரம் அவர்களாக விரும்பாவிட்டாலும் நெருங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம். காலம் காய் நகர்த்துகிறது. இருவரும் நெருக்கமாகிறார்கள். காட்சிகள் கவிதையாகின்றன.
\\

யோவ்...போய்யா...இந்த வரிகளுக்கே படத்தை பார்த்துடுவேன்ய்யா ;))

கவிநா... said...

அருமையான பதிவு...
உங்கள் வரிகளில் படத்தையே பார்த்துவிட்ட உணர்வு... நல்ல அழகான நடை.... நன்றி....

விக்னேஷ்வரி said...

லிஸ்ட்டில் ஆடட்.

டெனிம் said...

மிக நல்ல பதிவு...... மிக நுணுக்கமாக எழுதி உள்ளீர்கள்.... இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம்...... இந்த படத்திற்கு நானும் விமர்சனம் எழுதி உள்ளேன்,உங்கள் அளவுக்கு விரிவாக இருக்காது.... உங்களை என் ப்ளாக் லிஸ்ட்ல் சேர்த்து உள்ளேன்....இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஆளவந்தான் said...

Amy Adam'n vaseegaram intha padathula konjam kurachalnu thaan sollanum..

ராகவன் said...

அன்பு முரளி,

லீப் இயர் பதிவ இப்போ தான் பார்த்தேன். ஆமி ஆடம்ஸின் மூக்கு இருக்கே... சரி கதைக்கு வருவோம்... இதெல்லாமே பாலிவுட் சினிமால இருக்கே... அங்க இருந்து இங்க கொண்டாந்துட்டோம்ல...

படம் ஏற்கனவே பார்த்த படங்கள் மாதிரி இல்லை??!! இது போல ரொமாண்டிக்... காமெடி நிறைய வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்... ஆனாலும் நீ சொன்னது மாதிரி கதை நகரும் இடங்கள் அபாரம்.

படம் முழுக்க கிளிஷேக்கள் தான் முரளி... இது போல நாய்க்குட்டி நேசிக்கும் குட்டிப் பெண்ணின் குதூகலம் போல ஒரு காதல்... ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் அல்ல அது போல ஒருவிதமான ஈர்ப்பு... எல்லாம் இப்படித்தான் என்கிற யூகிக்கக்கூடிய கதை நகர்வுகள்.

கொஞ்சம் அழுக்கான ஒரு கதாநாயகன். மேல்தட்டு கதாநாயகன் என நாயகி வரிந்து கட்டி நேசிக்கும் ஒரு ஆள் என்று மில்ஸ் அண்ட் பூன் வகைக் கதைகள், கிறிஸ்துமஸ், ஒரு பனிப்பொழிவு மாதிரி ஒரு லீப் இயர்.

இவை எல்லாவற்றையும் மீறி... ஆமு ஆடம்ஸின் அபாரமான சின்ன சின்ன முகபாவங்கள் ரசிக்கத் தகுந்தன.

நல்லாயிருக்கு.

அன்புடன்
ராகவன்

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.