ஒரு மரம் - ஒரு குடும்பம் - சில சம்பவங்கள்

THE TREE : ஆஸ்திரேலிய திரைப்படம்.
பீட்டர் ஆஸ்திரேலியாவின் ஒரு மலைசார்ந்த கிராமத்தில் தன் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறான். மிகவும் மகிழ்ச்சியான ஒரு குடும்பம். மரவீடுகளை செய்து பெரிய ட்ரக்குகளில் கொண்டுசென்று தேவையானவர்களுக்கு டெலிவரி செய்யும் வேலை செய்கிறான். மனைவி டாவ்ன், மூன்று மகன்கள் மற்றும் ஒரு பெண் (சிமோன்). மிகவும் சந்தோஷமான இவர்களின் வாழ்வில் பீட்டரின் எதிர்பாராத மரணம், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

டாவ்ன், கணவன் இல்லாமல் நான்கு குழந்தைகளுடன், அதிலும் இரண்டு வயதாகியும் இன்னும் பேச்சு வராத கடைசி பையனுடனும் இனி வரும் தனது வாழ்வின் அடுத்த நாட்களை எப்படி எதிர்கொள்வது என்பதில்  மிகுந்த கவலை கொள்கிறாள். உறவினர்களும் அண்டைவீட்டினரும் பீட்டரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சிமோன் தனது தோழியிடம் சொல்கிறாள் “பாரு, யாருமே அழவேயில்லைஎன்று அதற்கு தோழி அழவேண்டாம் ஆனால் அனைவரும் சோகமாகவே இருக்கின்றனர், என்பதை உணர்ந்துகொள்என்கிறாள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவளாக, தந்தையின் செல்லப்பெண்ணாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கும் சிமோன், தன் வயதுக்கு மீறீய அறிவோடிருக்கிறாள்.
      
      அவள் தன் அப்பாவோடு வீட்டின் பின்புறமுள்ள மரத்தின் முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோவைப் பார்த்தபடியே இருக்கிறாள். மரமென்றால் சாதாரண மரமல்ல. அகண்டு விரிந்து வளரக்கூடிய ஃபிக் மரம் (கம்போடியாவில் அங்கோர்வாட் கோவிலையே கபளீகரம் செய்திருக்குமே அந்த வகை மரம்). அதன் மிக நீண்ட அதன் ஒவ்வொரு கிளைகளுக்கும் தனது தந்தைவழி உறவுகளின் பெயரை வைத்திருக்கிறாள், ஒரு ஃபேமிலி ட்ரீ போல. துயரில் இருக்கும் அவளுக்கு மரத்தில் ஏறி தந்தை பெயரிட்ட கிளையில் அமர்ந்து கொள்வது ஆசுவாசமாய் இருக்கின்றது. அதைத் தொடர்கிறாள். விரைவிலேயே தன் தந்தையே அந்த மரமென நினைக்கிறாள். மரத்தோடு பேசுகிறாள். இலைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் தன் தந்தை தன்னோடு பேசுவதாய் உணர்கிறாள். மிகுந்த சந்தோசத்துடன் அதை ஏற்றுக்கொள்கிறாள்.
       

       ஓர் இரவு, டாவ்னையும் எழுப்பி அப்பா, அந்த மரத்தில் இருக்கிறார், வா அவர் நம்மோடு பேசுகிறார், என்கிறாள். விரக்த்தியில் இருக்கும் டாவ்னுக்கு எரிச்சலாயிருக்கிறது. இருந்தாலும் மகளுக்காக அந்த இரவிலும் மரத்தின் மீது எறி அவள் சொல்லுமிடத்தில் அமர்கிறாள். தன் கணவன் உபயோகப்படுத்தும் பொருட்கள், போட்டோக்கள், அவர் கொடுத்த பரிசுப்பொருட்கள் என அனைத்தையும் ஆங்காங்கே வைத்திருக்கிறாள். மகளை நினைத்து பெருமிதமடைகிறாள். அவளின் ஏமாற்றைதைத் தவிர்க்க, ஆம் உன் அப்பா பேசுகிறார் என்கிறாள். இது சிமோனின் மனதில் இன்னும் அழுத்தமாக பதிகிறது.
குடும்ப சூழ்நிலை, பெரிய மகன் டிம்,  தன் தந்தையின் பார்ட்னரிடம் பள்ளி முடிந்ததும் பார்ட் டைமாக வேலை செய்கிறான். சிமோன் அவனிடம், நீ இப்படி வேலை செய்தா உன்னால சரியா படிக்க முடியாது என்கிறாள். எனக்கு தெரியும் உன் வேலையைப்பார் என்கிறான், பெரியவன். வீட்டில் நடப்பதை எல்லாவற்றையும் தானே தன் தந்தைக்கு தெரியச்செய்வதாகவும், இலைகளின் அசைவும் அவள் மனதில் ஏற்படுத்தும் அலைகளை தந்தையின் பதிலாகவும் கருதுகிறாள். ஒரு கட்டத்தில் டாவ்னுக்கே சிமோனின் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படுகிறது, கணவனை அந்த மரமாக பாவிக்கிறாள், அவளுக்கு அது தேவையாகவும் இருக்கிறது. விரக்தியான மனநிலையில் அவளும் மரத்தில் ஏறிக்கொண்டு கிளைகளோடும் இலைகளோடும் பேசிக்கொண்டிருக்கிறாள்.

ஒருநாள், விட்டு கழிவறையில் நீர்வரத்தில் தொந்தரவு ஏற்பட, ஒரு கார்ப்பெண்டரை தேடி நகரத்திற்கு செல்கிறாள், டாவ்ன். ஒரு கடைக்கு சென்று விசாரிக்கிறாள். அங்கு ஜார்ஜ் என்பவர், தன் கடைக்கு ஒரு டெலிபோன் ஆப்பரேட்டர் தேவை என்கிற விளம்பரத்தைப் பார்த்து டாவ்ன் வந்திருப்பதாய் நினைத்து இவளிடம் நிறைய கேள்விகள் கேட்கிறார். டாவ்னுக்கும் அவரது பேச்சும், சம்பளமாக சொன்ன பணமும் தேவைப்படுவதாய் தோன்றுகிறது. வேலை செய்தால் என்ன? என நினைக்கிறாள். வேலைக்கும் சேர்கிறாள். அடுத்தநாள் ஜார்ஜே, வீட்டிற்கு வந்து அந்த குழாய்ப்பிரச்சனையை சரி செய்கிறான்.

இந்த பிரச்சனைக்கு காரணம், அந்த மரம்தான், அதன் வேர்கள் உங்கள் தொட்டியை பாழாக்கியிருக்கின்றது, விரைவில் வெட்டி விடுங்கள், என்கிறான். சிமோனுடன் எதோ பேச நினைக்கும் ஜார்ஜ் மீது கோபத்தைக் காட்டுகிறாள், சிமோன். நாட்கள் செல்லச் செல்ல மரத்தின் மூலம் நிறைய பாதிப்புகளை கொண்டுவருகிறது. அண்டை வீட்டினரின் வீடுகளின் சுவர்களில் வெடிப்பு ஏற்படுகிறது அனைவருக்கும் அந்த மரத்தை வெட்டினாலென்ன எனத்தோன்றுகிறது. ஆனால் டாவ்னுக்கும், சிமோனுக்கும் அதில் உடன்பாடில்லை. நாட்கள் நகர்கின்றன, கணவனை இழந்த டாவ்னுக்கும் மனைவியை இழந்த ஜார்ஜுக்கும் இடையே மெல்ல விரிகிற உறவு, காதலாக மாறுகிறது. ஒருநாள், ஜார்ஜுடன் ஹோட்டலுக்கு செல்கிறாள், இருவரும் தங்களது கடந்த காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு இணக்கமான சூழ்நிலையில் இருவரும் முத்தமிட்டும் கொள்கின்றனர். மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வருகிறாள், டாவ்ன்.

வாசலிலேயே வரவேற்கும் சிமோன், இன்னைக்கு நீ ஆபீஸ் போகலை, உன் போன் வேற ஆஃப் பண்ணியிருக்க? எங்க போன? என அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறாள். ஒருவழியாய் அவளை சமாதானம் செய்துவிட்டு, படுக்கைக்கு திரும்புகிறாள். அன்றிரவே ஒரு பலத்த காற்றினால் ஒரு பெரிய கிளை ஒடிந்து சரியாக டாவ்னின் படுக்கை அறையிலேயே விழுகிறது. இது ஏன் நடந்த்துன்னு உனக்கு புரியலையாம்மா? என்கிறாள், சிமோன். டாவ்னுக்கும் தன்  நிலையை குறித்து கவலை கொள்கிறாள். ஒடிந்து விழுந்த கிளையை அணைத்தபடி உறங்கிப்போகிறாள்.

அடுத்தநாள் ஜார்ஜ் வருகிறான், ஒடிந்த கிளைய அப்புறப்படுத்தி, உடைந்த கூறையைத் தற்காலிகமாக சரிசெய்து தருகிறான். ஒரு ஆண் இல்லாத வீட்டிற்கு, பீட்டர் இருந்தால் என்ன செய்திருப்பானோ அதையெல்லாம் செய்கிறான். கிருஸ்த்துமஸ் வருகிறது, டாவ்ன், ஜார்ஜ் வீட்டில் சென்று கொண்டாட நினைக்கிறாள். ஆனால் சீமோன் விடாப்பிடியாக மறுக்கிறாள், முடிவில் மகளின் விருப்பத்திற்கிணங்க கடற்கரையில் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். ஜார்ஜ் அங்கு வருகிறான், டிம்மை அழைத்துகொண்டு நிறைய பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்புகிறான். வீட்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஜார்ஜை, சிமோன் அடியோடு வெறுக்கிறாள். தன் பாசமிக்க தந்தையின் இடத்தில் யாரையும் பொருத்திப்பார்க்க அவள் விரும்பவில்லை. டாவ்னும் அவளுக்கு எடுத்துரைக்க முயல்கிறாள், ஆனால் சிமோனிடம் எந்த மாற்றமுமில்லை.

விடுமுறையின் கடைசி நாட்களில் அனைவரின் விருப்பப்படியே மரத்தை வெட்டிவிட முடிவெடுக்கின்றனர். அந்த இரவில் மரத்தில் ஏறிக்கொண்டு, கிட்டதட்ட போராட்டமே நட்த்துகிறாள், சிமோன். ஒருகட்டத்தில் ஜார்ஜ் அவளை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சிகளில் அவள் அங்கிருந்து குதித்துவிடுவதாக மிரட்டுகிறாள். மகளின் சுபாவம் தெரிந்து, டாவ்ன் ஜார்ஜை திரும்ப அழைக்கிறாள், ஜார்ஜோ “என்ன நீயும் குழந்தை மாதிரி பேசுகிறாய், அவளுக்கு ஒண்ணும் ஆகாது, நான் பேசுகிறேன்என தொடர்ந்து அதற்கான முயற்சியில் இறங்க மகளையும் விடமுடியாமல், ஜார்ஜிற்கும் புரிய வைக்கமுடியாமல் டாவ்ன் திணருகிறாள். ஒருகட்டத்தில் ஜார்ஜை திட்டி தயவு செய்து வெளியே போ, இனி திரும்ப வர வேண்டாமென கதறுகிறாள். அடுத்த காட்சியில் சிமோன் அம்மாவின் ஒரு நடவடிக்கையால் மனமிறங்கி மரத்திலிருந்து இறங்கி வீட்டிற்கு திரும்புகிறாள், அது என்ன? என்பதை காட்சியாய்ப் பாருங்கள்.

அடுத்த சில நாட்களில் வீசும் சூறைக்காற்றில் மரம் வேறோடு சாய்ந்துவிடுகிறது. வீடு முற்றிலுமாக சேதமடைந்து போகிறது. டாவ்ன் குழந்தைகளோடும், சில அத்தியாவசியப் பொருட்களோடும் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அப்போது அவளுக்கு உதவி செய்ய ஜார்ஜ் எதிரில் தனது ஜீப்பில் வருகிறான். இருவர் முகத்திலும் மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. அதையும் மீறிய ஒரு சந்தோசமும். இருவரும் வாழ்த்துகள் பறிமாரியபடி பிரிகின்றனர். காரில் குழந்தைகள் ஒன்றின்மீது ஒன்றாக கையையும் காலையும் போட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பார்த்தபடி, மனதுக்கு பிடித்தமான பாடலை பாடியபடி பயணிக்கிறாள். படம் முடிகிறது.

       இறந்துபோன தன் தந்தை வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் வசிப்பதாக நம்பக்கூடிய ஒரு சிறுமியின் கதை. Our Father Who Art in The Tree என்கிற ஆங்கில நாவல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூடி பாஸ்கோ என்பவரால் எழுதப்பட்ட நாவல். இதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இந்த ட்ரீ. ஒரு நாவலைப் படமாக்கும்போது ஏற்படும் சங்கடங்கல் இல்லாமல், பொறுமையாக ஒரு முழு நாவலையும் வாசித்து முடித்த திருப்தி, கிடைக்கிறது இந்தபடத்தில். சிமோனாக வருகிற அந்த சுட்டிப்பெண், டாவ்ன் இருவரும் தங்களின் முகத்தில் கொண்டு வரும் எக்ஸ்பிரஷனும், நடிப்பும் அருமை. இதை எழுதியவர் ஒரு பெண், இயக்கியவர் ஒரு பெண், தயாரித்தது இரு பெண்கள், ஆக ஒரு பெண்ணின் இருதலைக்கொல்லி நிலைமையை மிகுந்த விவரணைகளோடு கையாள முடிந்திருக்கிறது.
மனித மனம் மிகவும் மெல்லிய அடுக்குகளைக்கொண்டது, மேலும் மிகவும் சிக்கலான  இழைகளால் பின்னப்பட்டது, அதிலும் குழந்தைகளுக்கு முதல் பத்து வயதில்தான் மூளை மிகவும் அதிகமாக வளர்ச்சியடைகிறது. அப்போது அவர்கள் அதிகம் கவனிக்கின்றனர். அதிகம் யோசிக்கின்றனர். அப்படி ஒரு சிறிய விஷயம் ஒரு சின்ன பெண்ணை எப்படி மாற்றுகிறது, அவள் சார்ந்தவர்களை அது எங்கனம் பாதிக்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதை அதிக சலனமற்ற மெல்லிய ஓடையின் போக்கில் சொல்லப்பட்ட கதை. அவசியம் பாருங்கள், ஒரு நல்ல படம்.

16 கருத்துரைகள்:

ஆதவா said...

சிலசமயம் பலருக்கு இந்தமாதிரி, வாழ்வில் நிகழ்வதுண்டு.. மரம் என்பதே மனிதர்களுக்கு முந்தி பிறந்த உயிர்தானே? படத்தை விவரிக்கும் பொழுதே அது நன்றாக இருக்குமென்று புரிகிறது.

//மரத்தோடு பேடுகிறாள்//

???

அகல்விளக்கு said...

நல்ல அறிமுகம் நண்பா...

இராமசாமி said...

Good Review.. Thanks for sharing this good flim...

இளங்கோ said...

எங்க இருந்துதான் இந்த மாதிரி நல்ல படங்களை எல்லாம் கண்டு பிடிக்கிறீங்களோ..?
படத்த பார்த்துர வேண்டியதுதான்.. :)

my few drops said...

nalla varnithu irukeergal. paaraatukkal.

oru vinnapam - ungal valai pathivil padangalai patri maadham athigapacham 4 pathivugal podungal. meethi ugal padaipugalage irukattum.

கவிநா... said...

நன்றாக தேர்வு செய்த படங்கள். அதை அழகாக விவரிக்கும் திறம். அருமை சகோ..

Rajeswari said...

மரம் வேறோடு சாய்ந்துவிடுகிறது-

manatil veer ueenri vittathu

அப்பாதுரை said...

சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறது. secret garden பாணிக்கதை. இந்தப் படம் கேள்விப்பட்டதில்லை - அறிமுகத்துக்கு நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ஆதவா
பாருங்க ஆதவா, உங்களுக்கு பிடிக்கும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
ராஜா, என்னாச்சு ரொம்ப நாளா எதுவும் எழுதலையே? பிஸியா?

முரளிகுமார் பத்மநாபன் said...

@இராமசாமி
நன்றி நண்பரே! படம் பாருங்கள்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@இளங்கோ
எல்லாம் நண்பர்களிடமிருந்துதான், அப்படியே பேசிக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற ப்டங்கள் தானகவே வந்து விழும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@பிரதீப்
நிச்சயமா எழுதனும், ஒய்ப்பீ

முரளிகுமார் பத்மநாபன் said...

@கவிநா
நன்றி கவிநா, முடிந்தால் இந்த படத்தைப்பாருங்கள், உங்க பதிவைப்பார்த்தேன், கவிதை நிறைய எழுதுகிறீர்கள், இதுபோன்ற படங்கள் அதற்கு இன்னும் உதவும்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ராஜேஸ்வரி,
வணக்கம் ராஜேஸ்வரி அவர்களே, முதல்முறை வருகின்றீர்கள், தொடர்ந்து படிங்க, கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
ம்ம்.. சீக்ரட் கார்டன் மாதிரி.... இருக்குமான்னு சொல்லமுடியாது. ஆனால் இயற்கை-மனிதன் உறவு இரண்டிலும் பொது.
:-)

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.