பாண்டவபுரம்

பாண்டவபுரம்

சேது என்கிற சேதுமாதவன் – மூலம் மலையாளம்
குறிஞ்சி வேலவன் – மொழி பெயர்ப்பு தமிழில்
விலை – ரூ.75/-
***************************************************
இதுவரை 16 சிறுகதை தொகுப்புகள் மற்றும் 12 நாவல்கள் எழுதியுள்ள சேதுமாதவன் அவர்களின் நாவல் பாண்டவபுரம். இந்த நாவல் மற்றும் பேடி ஸ்வப்ணங்கள் என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதினை இருமுறை பெற்றுள்ளார்.

சென்ற வருட புத்தக கண்காட்சியில் திருப்பூரில் வாங்கிய புத்தகம், எஸ்.ராவின் உபபாண்டவம் விலை பார்த்தபின் வாங்காமல் திரும்பிய என் கண்ணில்பட்டது, இந்த புத்தகம். உபபாண்டவம் இல்லாவிட்டால் ஒரு பாண்டவபுரம் என்றுதான் வாங்கினேன். மேலும் முன், பின் அட்டைவாசகங்களும் இந்தபுத்தகத்தை வாங்க ஒரு காரணம்.
     
   “நவீன எழுத்து முயற்சியில் இது ஒரு நம்ப முடியாத சாகசம்“இடம், காலம் என்கிற, படைப்பின் இரு அடிப்படைகளையுமே இல்லாமல் ஆக்கிவிடும் இந்நாவல், மாந்திரீக யதார்த்த எழுத்துவகையில் ஒரு பேய்ப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறது

“சேதுவின் பாண்டவபுரம், சந்தேகமே இல்லாமல் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு பெரும் சாதனை, ஒரு குறிப்பிட்ட கதாப்பத்திரத்துக்கு உருவாகும் ஒரு சூழ்நிலை, ஒரே சமயத்தில் யதார்த்தமாகவும், மாந்த்ரீக யதார்த்தமாகவும் இருவேறு பரிமாணங்கள் எடுக்கும் ஆச்சர்யத்தை விளக்கவே முடியாது. எத்தனை முறை வாசித்தாலும் புதுப்புது அனுபவங்களை அளித்துக்கொண்டே இருக்கும் படைப்பு இது

தேவி-குஞ்ஞுகுட்டன், இவர்களது மகன் சிறுவன் ரகு, குஞ்ஞுகுட்டனின் தங்கை சியாமளா, அவள் அம்மா, பக்கத்துவீட்டு உண்ணிமேனன் .ஒரு விருந்தாளி. இவர்கள்தான் இக்கதையின் பிரதாணம், மேலும் இவர்கலோடு பாண்டவபுரம். திருமணமான ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டுச்சென்று விடுகிறான், குஞ்ஞுகுட்டன். தனக்கு பிறந்த குழந்தையின் முகத்தைக்கூட அவன் பார்த்ததில்லை. குழந்தையுடனும் குஞ்ஞுகுட்டனின் தங்கை மற்றும் அம்மாவுடன் அவனது வீட்டில் தொடர்ந்து போரட்ட வாழ்க்கை நடத்தும் தேவி, ஊர்ப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து குடும்பத்தை ஓட்டுகிறாள். சியாமளா, தன் அண்ணியைப்போல உடுத்திக்கொள்வதிலிருந்து பொட்டு வைத்துக்கொள்வதுவரை அண்ணியை விரும்புகிறாள், அவளுக்கு அண்ணியின்மீது அளவுகடந்த நம்பிக்கையும், மரியாதையும் உண்டு  எனினும் ஓடிப்போன அண்ணன்மீது எந்த கோபமும் அவளுக்கு இல்லை.

தேவி தினமும் ரயில் நிலையத்திற்கு சென்று யாருடைய வருகையையோ எதிர்பார்த்து காத்திருக்கிறாள். ஒவ்வொரு முறையும் கடைசி பயணியின் முகம்வரை பார்த்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்புகிறாள். அந்த ரயில் நிலையத்தின் மாஸ்டர் முதல் போர்ட்டர் வரை அவனைவரும் அதன் ரகசியத்தை அறிந்துகொள்ள முயல்கின்றனர், தேவியிடம் கேள்வி கேட்கின்றனர். அனைவருக்கும் மெல்லிய புன்முறுவலை பரிசளித்து கடந்துவிடுவது, தேவியின் பழக்கம்.

ஆனால் மனதிற்குள் இப்படி நினைக்கிறாள் “அவன் இந்த வண்டியிலும் இல்லை. நாளைக்குத்தானோ? நாளைக்கும் வராமல் இருபானோ? அவன் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். மெல்ல வரட்டும். இங்கே வராமல் எங்கே போய் விடுவான்

இப்படியான இவர்களின் வாழ்க்கையில், ஒருநாள் ஒரு விருந்தாளியாக ஒரு பயணி வருகிறான். தன்னை பாண்டவபுரத்திலிருந்து வருவதாகவும், அங்குதான் குஞ்ஞுகுட்டனுடன் பணிபுரிவதாகவும் ஊரிலும் மற்றவர்களிடமும் அறிமுகம் செய்துகொள்ளும் அவன், உண்ணிமேனன் உதவியுடன் தேவியின் வீட்டை அடைகிறான். ஆண் துணையில்லாத அந்த வீட்டிற்கு இந்த பயணியை அனுப்புவதில் அவருக்கு உடன்பாடில்லை, இருந்தாலும் நாளை அவன் கிளம்பிவிடுவான் என்கிறதால் அதற்கு அனுமதிக்கிறார்.

தேவியின் வீட்டில் தன்னை அதேமாதிரியாக அறிமுகம் செய்து கொள்கிறான். மேலும் தேவியிடம் பாண்டவபுர அனுபவங்களையும் அங்கு தனக்கும் தேவிக்குமான உறவினையும் சொல்கிறான். திருமணமாகி தேவியும் குஞ்ஞுகுட்டனும் பாண்டவபுரத்திற்கு வந்ததாகவும், அங்குள்ள பணியாளர் காலனியில் அவர்களுக்கு விருந்து கொடுக்கப்பட்டதாகவும், தேவிக்கு தான் ஒரு சிவப்பு அங்கியை பரிசளித்ததாகவும் என இன்னும் நிறைய சொல்கிறான். ஏன்?
தேவி அதனை மறுக்கிறாள், தனக்கு திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தன் கணவன் ஓடிவிட்டதாகவும், அதன் பின்னாட்களில் தான் இந்த ஊரைவிட்டு ஒருபோதும் வெளியே சென்றது கிடையாது என்கிறாள். மேலும் எதையோ மனதிற்குள் வைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கும் நீ யார்? என்கிறாள். ஏன்?

அடுத்தநாள் காலை சென்றுவிடுவேன் என்று சொன்ன அந்த பயணி மாலையாகியும் ஊர் திரும்பாததால் கோபமடையும் உண்ணிமேனனுக்கும் அவனுக்கும் பிரச்சனை வழுக்கிறது. ஒரு கட்டத்தில் நான் தேவியின் விருந்தாளி, அவள் சொன்னால் நாளை காலையென்ன இப்போதே இந்தகணமே இந்த ஊரைவிட்டு வெளியேறுகிறேன், மற்றபடி இது விஷ்யத்தில் நான் யாருக்கும் பயப்படப்போவது இல்லை என்கிறான். இதைக்கேட்ட சியாமளா “ அண்ணி, நீங்கள் ஏன் மெளனமாக இருக்கின்றீர்கள்? அந்த ஆள் நமது வீட்டிற்கு வந்ததிலிருந்தே நமது வீட்டின் நிம்மதி போய்விட்டது. உங்கள் மேல் எங்கள் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கின்றது. நீங்கள் இந்த ஊரை விட்டு ஒருபோது வெளியே சென்றது இல்லை, என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும் இருந்தும் இந்த மனிதனின் இறுப்பை நீங்கள் அனுமதிப்பதின் அர்த்தம்தான் என்ன?என்கிறாள். தேவி தன்னால் அது ஒரு போதும் முடியாது, இதற்கு மேல் என்னை தொந்தரவு செய்ய வேண்டாமென்கிறாள். ஏன்?

நாட்கள், வாரங்களாகவும், மாதங்களாகவும் கரைகின்றன. அவன், குஞ்ஞுகுட்டன் வேலைக்கு சென்றபின்னர், பாண்டவபுர காலனியில் தனித்திருக்கும் தேவியிடம் தான் மகிழ்ச்சி பொங்க உரையாடிக்கொண்டிருந்ததையும், பேக்டரி காம்பவுண்டு சுவர்களை ஒட்டி ஓடும் ரயில் தண்டவாளத்தின் அருகில அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது என பாண்டவபுரம் பற்றியும், மஞ்சள் புகை கக்கும் பேக்டரி பற்றியும், பழுப்புநிற மனிதர்களைப் பற்றியும் தேவியுடனான தனது பாண்டவபுர அனுபவங்களை பற்றியும் சதா கதை சொன்னபடி இருக்கிறான். தன் அப்பா அங்கு இருக்கிறார் என்பதால் ரகுவைத்தவிர அனைவரும் அசுவாரஸ்யமாய் கதை கேட்டபடியும், இல்லை அப்படியிருக்க முடியாது என மறுத்தபடியும் இருக்கிறார்கள். ஏன்?
ஒரு நாள், அவனுடைய அறைக்குள் புகுந்து கதவைத் தாழிடும் தேவி, “இனியும் என்னால் நடிக்க முடியாது, நீங்கள் சொல்வது உண்மைதான், குஞ்ஞுகுட்டன் வேலைக்கு சென்றபின்னர், எத்தனையோ நாட்கள் நான் விரகத்தில் தவிக்கும்போது உங்கள் வீட்டின் வெளியில் நின்று என் படுக்கையறையைப் பார்த்தபடி புகைத்துக்கொண்டிருப்பீர்கள், ஏன் உங்களுக்கு உள்ளே வரும் தைரியமில்லாமல் போனதுஎன்கிறாள். இத்துனை நாட்களாக தான் உபயோகித்திருந்த அம்பு இப்போது தன்னை நோக்கி திரும்பியிருப்பதை உணர்கிறான். தேவி அதையே தொடர்கிறாள். அவன் இப்பொது மறுக்கிறான். ஏன்?

மேலும், தானே அவனை வசியம் செய்து பாண்டவபுரத்திலிருந்து இங்கு வர வைத்திருப்பதாகவும், அவனை பழிவாங்கவே இத்தனை நாட்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாகவும் சொல்கிறாள். ஏன்?
அவனுக்கு தானொரு மாய வலையில் பின்னப்பட்டிருப்பது புரிகிறது. சியாமளாவால் இது எதையும் நம்ப முடியவில்லை. ஒருநாள் காலை உறக்கத்திலிருந்து கண் விழிக்கும் தேவி, அவன் அறை திறந்து கிடப்பதை பார்க்கிறாள். சியாமளாவிடம் அவனுக்கு டீ கொடுத்தாயா? என்கிறாள். சியாமளா யாருக்கு அண்ணி? என்கிறாள். இந்த அறையில் ஒரு மாதமாக ஒருவன் இருந்தானே, அவன் எங்கே? என்கிறாள் தேவி. என்ன அண்ணி துர்கனவு ஏதும் கண்டீர்களா? யாரை சொல்கிறீர்கள் என்று சியாமளா கேட்கிறாள். அவன் அறைக்கு வெளியே விட்டெறிந்த சிகரெட் துண்டுகள் ஏதும் காணவில்லை. தேவிக்கு ஒன்று புரிகிறது, அவன் இங்கிருந்து செல்லும் பொழுது தனது அடையாளத்தை அனைவரின் மனதிலிருந்து துடைத்தெடுத்துவிட்டு சென்றிருக்கிறான், என்று. ஏன்?

அன்று மாலை வீடு திரும்பி வரும் தேவியிடம், “ஏன் அண்ணி இவ்வளவு நேரம்? என்கிறாள், சியாமளா. அதற்கு தேவி அவனுக்காக ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக சொல்கிறாள். ஆனால் மனதிற்குள் இப்படி நினைக்கிறாள் “அவன் இந்த வண்டியிலும் இல்லை. நாளைக்குத்தானோ? நாளைக்கும் வராமல் இருபானோ? அவன் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். மெல்ல வரட்டும். இங்கே வராமல் எங்கே போய் விடுவான்
 
ஏன்?
இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரு விடை, ஒரே விடை
பாண்டவபுரம்.பாண்டவபுரம் என்கிற ஊர், ஒரு கற்பனை. அது ஒரு மாயப் புனைவுலகு. சமிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைக் கொண்டது. அங்கு, அந்த ஊருக்கு வரும் ஒரு வெளியூர் பெண்ணால், ஒரு நிரபராதி இளைஞன் காமுகனாக சித்தரிக்கப்பட்டு, தவறான தண்டனையால் உயிரிழக்கிறான். அவனுடைய ரத்தத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைனர்கள் பிறக்கிறார்கள். அவர்கள் அந்த ஊருக்கு வரும் ஒரு வெளியூர் பெண்களை வலைவீசி பிடிக்கின்றனர். அப்படி ஒரு மைனரால் தன் வாழ்வு திசைமாறியதாகவும், கணவனை இழந்ததாகவும் நினைக்கும் தேவியின் மனச்சிக்கல்களே இந்த பாண்டவபுரம்.

என்னுடைய வாசிப்பனுபவத்தில் ஒரு புத்தகத்தை பித்துப்பிடித்தது போல தொடர்ச்சியாக மூன்று முறை வாசித்தது இந்த புத்தகத்தைதான். இரண்டாவது முறை புரியாமலும், மூன்றாவது முறை அனுபவித்தும்.

வித்தியாசமான வாசிப்பனுவம் தேவைப்பட்டால் அவசியம் படிங்க, பாண்டவபுரம் உங்களுக்கு சொந்தமான இடம்.

13 கருத்துரைகள்:

டெனிம் said...

நல்ல அறிமுகம்,அனால் நான் இருக்கும் மும்பையில் நம்ம ஊர் புத்தகங்கள் கிடைப்பது மிக அரிது.

முரளிகுமார் பத்மநாபன் said...

நண்பா, நல்ல புத்தகம் அவசியம் வாசியுங்கள். பதிவில் கிழக்கு பதிப்பகம் என்கிற லிங்கையோ அல்லது பட்த்தையோ கிளிக் செய்யுங்கள், ஆன்லை ஷாப்பிங்கிறகான லின்க் கொடுத்துள்ளேன்.

இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதையை படிப்பது போல இருந்தது.

ஆதவா said...

பாண்டவபுரம் என்றதும் இதிகாசக் கதையோ என்று நினைத்தேன்.. நல்ல அறிமுகம்.
புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தீர்களா? (என்னை திருப்பிக் கேட்டுவிடாதீர்கள்!!!! :) )
///இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதையை படிப்பது போல இருந்தது.///
எனில் கதைப் போக்கைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாமே...

முரளிகுமார் பத்மநாபன் said...

மூன்று நாட்களும் சென்று வந்தேன். ஆதவா உலக திரைப்படங்கள் திரையிடுகின்றார்கள் உங்களுக்கு தெரியும்தானே? முதல் நாள் சாங் ஆஃப் ஸ்பாரோஸ் பற்றி அறிமுக உரையை நான்தான் பேசினேன். :-)

///இன்செப்ஷன் திரைப்படத்தின் திரைக்கதையை படிப்பது போல இருந்தது.///
சோ மச் கன்பூஷன்ஸ் என்பதற்கான உதாரணமாக கொள்ளவும். :-) சினிமா விரும்பிகளுக்கு இந்த உதாரணம் போதும், புத்தகம் எப்படி என்பதை தனியாக சொல்லவேண்டாம். இல்லையா?

Vel Kannan said...

கிழக்கு பதிப்பகம் மேல் அவ்வளவாக மதிப்பில்லை. ஆனால் உங்களின் இந்த பதிவு இந்த புத்தகத்தின் மேல் ஆர்வத்தை துண்டியிருக்கிறது
வாழ்த்துகள்

அகல்விளக்கு said...

நல்ல அறிமுகம் நண்பா...

நிச்சயம் படிக்கிறேன்...

மோகன் குமார் said...

ஆர்வத்தை தூண்டும் விதம்... :))

அப்பாதுரை said...

என்னமா அறிமுகம் பண்றீங்க!
listல சேத்துக்கிட்டேன்.

முரளிகுமார் பத்மநாபன் said...

@ வேல்கண்ணன்
//கிழக்கு பதிப்பகம் மேல் அவ்வளவாக மதிப்பில்லை//
ஓ அப்படியா? விடுங்க. இதை அவசியம் வாசிச்சு பாருங்க எனக்கு இதைப்படிச்சவங்ககிட்ட பேசனும் போல இருக்கு.. சீக்கிரம் மறக்கிறதுக்குல்ல யாராவது.....

முரளிகுமார் பத்மநாபன் said...

@அகல்விளக்கு
அவசியம் படிங்க நண்பா, ஃபாண்டசி நாவல் இது...

முரளிகுமார் பத்மநாபன் said...

@மோகன் குமார்
தேங்க்ஸ் தல, படிச்சிங்க கண்டிப்பா..

முரளிகுமார் பத்மநாபன் said...

@அப்பாதுரை
தேங்க்ஸ் சார், நீங்க படிச்சிடுவிங்கன்னு நினைக்கிறேன். முடிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க. :-)

அன்புடன் அருணா said...

ஆஹா...உடனே படிக்கணும் போலிருக்கே!

Post a Comment

வருகைக்கு நன்றி, அப்படியே உங்க கருத்துக்களையும் பதிவு பண்ணிடுங்க.